DANCE ..SEX...CELEBRATION -RUN TO LONDON
KING MALLAIYA SLASHED STORY
ஆட்டம்... பாட்டம்... கொண்டாட்டம்... ....ஓட்டம்
சரிந்த மல்லையாவின் சாம்ராஜ்யம்
இன்றைக்கு இந்தியாவே தேடும் ஒரு நபர் என்றால் அது விஜய் மல்லையாதான். ஏறக்குறைய ரூ.7,000 கோடி கடனை வாங்கி விட்டு, அதை திருப்பித் தராமலே பிரிட்டனுக்கு ஓடிவிட்டார் மல்லையா. மீண்டும் அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து, கடன் தொகையை வசூலிக்க வேண்டும் என்று கதறுகின்றனர் அவருக்கு கடன் தந்த வங்கி அதிகாரிகள். யார் இந்த விஜய் மல்லையா?
இவருக்கு அறிமுகம் தேவையில்லை. கிங்ஃபிஷர் என்கிற ஒற்றை வார்த்தை போதும், இவரைப் பற்றி எடுத்துச் சொல்ல. ஒரு உத்தம தந்தை தனது தொழிலை ஆலமரமாக வளர்த்தெடுத்து தன் மகனுக்குத் தர, அதை தன்னுடைய பல இமாலயத் தவறுகளால் வெட்டி வீழ்த்திய ஊதாரியின் கதைதான் விஜய் மல்லையாவினுடையது. இந்த உத்தம வில்லனின் கதையைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
டிசம்பர் 18, 1955 அன்று கொல்கத்தாவில் விட்டல் மல்லையா, லலிதா ராமையாவுக்கு மகனாகப் பிறந்தார். சில்வர் ஸ்பூன் குழந்தையாகப் பிறந்த விஜய் மல்லையாவின் தந்தை விட்டல் மல்லையா, கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பட்டம் படித்தவர்.
வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் அனுபவம் பெற்றவர். 1947-ல் யுனைடெட் ப்ரூவரீஸ் நிறுவனத்தின் முதல் இந்திய இயக்குநராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்கு வயது 22. அடுத்த ஒரே வருடத்தில் அந்த நிறுவனத்தின் தலைவராகவும் ஆனார்.
திருமணமானபின் கொல்கத்தாவிலிருந்து பெங்களூருவுக்கு வந்து குடியேறினார். உடல்நலக் குறைவு இருந்தபோதிலும் யுனைடெட் ப்ரூவரீஸ் நிறுவனத்தை பிரமாண்ட நிறுவனமாக வளர்த்தெடுத்தார்.
1983-ல் அவர் இறந்ததும் யுனைடெட் ப்ருவரீஸ் நிறுவனத்தின் தலைவராக அவரது ஒரே மகனான விஜய் மல்லையா பொறுப்பேற்க வேண்டியிருந்தது. அப்போது அவருக்கு வயது 28.
உலகின் இரண்டாவது பெரிய மதுபான நிறுவனம்!
யுனைடெட் ப்ரூவரீஸ் தன் கைக்கு வருவதற்குமுன்பே, தனது 18 வயதில் ஹோக்ஸ்ட் லைஃப் சயின்ஸ் நிறுவனத்தின் இயக்குனரானார் விஜய் மல்லையா. காமர்ஸ் பட்டப் படிப்பு முடித்த இவர், தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் பிசினஸ் மேலாண்மையில் டாக்டர் பட்டம் வாங்கியவர். அவர் பொறுப்பேற்றபிறகு யுனைடெட் ப்ரூவரீஸ் பெயரை உலக அளவில் பிரபலமாக்க அயராது உழைத்தார். அப்போது இருந்த மல்லையாவுக்கும் இப்போது நாம் பார்க்கும் மல்லையாவுக்கும் மலையளவு வித்தியாசம் இருந்தது. அவருடைய கடின உழைப்பு அசாத்தியமானதாக இருந்தது. எதற்கும் தயங்கியதில்லை, பயம் என்றால் என்னவென்று அவருக்குத் தெரியாது. இவைதான் அந்த நிறுவனம் உலகளவில் இரண்டாவது பெரிய மதுபான நிறுவனமாக வளரக் காரணம்.
மஹாராஷ்டிரா அரசு ஸ்ட்ராங் பீருக்கான கலால் வரியை உயர்த்திய போது ஷா வாலஸ் உட்பட அனைத்து மதுபான நிறுவனங்களும் செய்வதறியாது தடுமாறின. ஆனால், அந்தச் சூழ்நிலையைச் சாமர்த்தியமாக சமாளித்ததோடு, தன் நிறுவனத்தை விரிவுப்படுத்திய அதே நேரத்தில் தடுமாற்றத்தில் இருந்த பல நிறுவனங்களைக் கைப்பற்றவும் செய்தார். இதனால் அவருடன் நட்புடன் இருந்த மனு மற்றும் கிஷோர் சாப்ரியா சகோதரர்களுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது. சாப்ரியா சகோதரர்கள், மல்லையாவின் தொழிலுக்கு பக்கபலமாக இருந்தார்கள். அவர்களின் பிரிவு மல்லையாவுக்கு முதல் இழப்பு.
உறவு முறிந்ததுடன், கிஷோர் சாப்்ரியா மல்லையாவுக்கு போட்டியாக அலைட் ப்ரூவரீஸ் அண்ட் டிஸ்டில்லர்ஸ் என்ற மற்றொரு மதுபான நிறுவனத்தைத் தொடங்கி மிகப் பெரிய அளவில் வளர்ந்தார். ஆனால், விஜய் மல்லையாவும் சளைக்காமல் உழைத்து, இந்தியாவின் முதன்மை மது உற்பத்தி நிறுவனமாக தனது நிறுவனத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
ஷா வாலஸ், ஹெர்பர்ட் சன்ஸ் ஆகிய நிறுவனங்களைக் கையகப்படுத்தியபிறகு உலக அளவில் டியாஜியோ நிறுவனத்துக்கு அடுத்த பெரிய மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு சொந்தக்காரராக ஜொலித்தார் மல்லையா. இந்தியச் சந்தையில் கிங்ஃபிஷர் பீரின் மார்க்கெட் ஷேர் 50%. ஏறக்குறைய இந்தியா தவிர்த்து, 52 நாடுகளில் இதன் விற்பனை செமஜோர். மதுபானத்துக்கு பெயர் போன நகரமாக பெங்களூரு மாறியதற்கு இவரது தொழில் விரிவாக்கத் திட்டங்கள் மிக முக்கியமானவை. இந்த நிறுவனத்தின் அமெரிக்க கிளை மென்டோசினோ புரூவிங் கோ என்ற பெயரில் இயங்குகிறது.
இவருடைய யுனைடெட் ப்ரூவரீஸ் குழுமம், மதுபானங்கள் உற்பத்தி, விமானச் சேவை, ரியல் எஸ்டேட், பொறியியல் துறை, உர உற்பத்தி, உயிரியல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் என பல்வேறு துறைகளில் தனது தொழிலை ஆலமரமாக விஸ்தரித்தது. சனோஃபி இண்டியா மற்றும் பேயர் கிராப் சயின்ஸ் இண்டியா, மங்களூர் கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் ஆகியவை இவருடைய பிற நிறுவனங்கள்.
இதுபோன்ற அறுபது நிறுவனங்களை உள்ளடக்கிய பன்னாட்டு குழுமமாக யுனைடெட் ப்ரூவரீஸ் வளர்ந்தது. இதன் வருவாய் அவர் பொறுப்பேற்ற 15 ஆண்டுகளில் 64% உயர்ந்து, 1998 - 1999-களில் ரூ.74 ஆயிரம் கோடியாக இருந்தது.
சரிவுக்கான மூன்று காரணங்கள்!
“இந்த கணத்துக்காகத்தான் காத்திருந்தோம். நம் ஒட்டுமொத்த கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் குழுவும் ஏர்லைன்ஸ் கனவை சாத்தியப் படுத்த பாடுபட்டிருக்கிறது. இறுதியாக இந்த விண்ணை ஆள நாம் தயாராகி இருக்கிறோம். வாருங்கள் பறக்கலாம். இதுவே உங்கள் வாழ்க்கையின் பொன்னான தருணங்களாக அமையட்டும்” என்று கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அறிமுகப்படுத்தப் பட்ட அன்று மல்லையா செய்த இந்த முழக்கத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மாநிலங்களவை உறுப்பினராக அரசியல் களத்திலும் இருந்ததால், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என அங்கிருந்த அனைவரும் அந்த முழக்கத்தை கேட்டு ஆர்ப்பரித்தனர். குலுக்கப்பட்ட பீர் பாட்டில்கள் பொங்கி வழிந்தன. ஆனால், அந்த கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸே தன் பிசினஸ் வாழ்வுக்கு சாவுமணி அடிக்கப் போவதை அப்போது அவர் உணரவே இல்லை.
கிங்ஃபிஷரைத் தொடங்கிய போது, ‘விமானங்களைவிட வாடிக்கையாளர் சேவைதான் நம் நோக்கம் என்ற மல்லையா, விமானப் பணியாளர்கள் 5,500 பேரை அவரே நேர்காணல் செய்து தேர்வு செய்தார்.
அழகான, அருமையான வசதியான விமானம், நல்ல உணவு, நல்ல, அழகான பணிப்பெண்கள் மற்றும் பொழுதுபோக்கு எனப் பெயர் பெற்றது. முதல் வகுப்பு பயணிகளுக்கு இலவச மதுவும் தரப்பட்டது.
இந்தியாவில் கிங்ஃபிஷருக்கு மவுசு கூடியது. ஆனால், இது மட்டும் போதாது; உலகின் அத்தனை மூலைக்கும் தன் விமானம் செல்ல வேண்டும் என்று விரும்பினார். ஆனால், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் கழிந்தபிறகே ஒரு விமான நிறுவனம், சர்வதேச சேவையைத் தொடங்க முடியும் என்ற சட்டம் அப்போது இருந்ததால், நொடிந்து கிடந்த ஏர் டெக்கான் நிறுவனத்தை வாங்கினார். அங்குதான் அவருடைய வீழ்ச்சி ஆரம்பம் ஆனது.
பறக்க நினைத்தார்; பாதாளத்தில் விழுந்தார்!
இந்தியாவில் மிகப் பெரிய நெட்வொர்க்காக இருந்த, கேப்டன் ஜிஆர் கோபிநாத்துக்குச் சொந்தமான ஏர் டெக்கானை 2007-ல் வாங்கி, அதனை பின்னர் கிங்ஃபிஷர் ரெட் என்று பெயர் மாற்றம் செய்தார். செப்டம்பர் 2008-ல் கிங்ஃபிஷர் தனது முதல் சர்வதேச விமான சேவையை பெங்களூருவிலிருந்து லண்டனுக்கு தொடங்கியது.
சரியாக 2008, உலகப் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகி பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்தது. அதன்பிறகு சில ஆண்டுகள்தான் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் தாக்குப் பிடித்தது. ஆனால், போகப் போக நஷ்ட மடைந்து நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திணறியது.
பின்னர் அதன் வீழ்ச்சி தீவிரமானது. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அதன் மொத்த 66 விமான சேவைகளில் 28 விமான சேவைகளை நிறுத்தியது. மேலும், பண நெருக்கடி அதிகமாகி, வாடிக்கையாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் தரவேண்டிய பாக்கி அதிகமானது. வங்கிகளில் தொடர்ந்து கடன் வாங்கி வந்தார் மல்லையா. அவர் ஒரு வங்கியையும் விட்டு வைக்கவில்லை. அவர் வாங்கிய மொத்தக் கடன் ரூ.7,000 கோடி.
வாங்கிய கடனில் பெரும்பாலானவை யுனைடெட் ப்ரூவரீஸ் பெயரில் வாங்கப்பட்டிருந்தன. அதில் வந்த லாபத்தையும், வாங்கிய கடனையும் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸில் முதலீடு செய்தார். அதில் லாபம் பெயருக்குக்கூட இல்லை. போகப் போக மதுபான நிறுவனத்திலும் நஷ்டம் ஏற்பட தொடங்கியது.
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்!
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் இனி இல்லை. விரைவில் தன்னுடைய யுனைடெட் ஸ்பிரிட்ஸ் மீதான உரிமையும் கைவிட்டு போக இருக்கிறது என்ற நிலையிலும் விஜய் மல்லையாவின் கொண்டாட்டம் ஒருபோதும் குறையவில்லை. அவரது அழகு மாடல் பெண்களைக் கொண்ட காலண்டர்களோ, ஐபிஎல் கிரிக்கெட் ஏலங்களோ நிற்கவில்லை. 2003-லிருந்து கிங்ஃபிஷர் காலண்டரை வெளியிட்டு வருகிறார். ஒவ்வொரு வருடமும் ஒரு நாடு, பல நூறு அழகிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட அழகி களுடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஒரே திருவிழாதான் மல்லையாவுக்கு.
ஏர்லைன்ஸின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. பணியாளர்கள் அனைவரும் 15 மாதங்கள் ஊதியம் தராததால், போராட்டம் செய்யும் முடிவுக்கு வந்தனர். பணியாளர் ஒருவரின் மனைவி பணப் பிரச்னையால் தற்கொலையும் செய்து கொண்டார். இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய விஜய் மல்லையா, ஏதோ ஒரு குட்டித் தீவில் உல்லாசமாக இருந்தார்.
அவரது மகன் அந்த வருட கிங்ஃபிஷர் காலண்டருக்காக அழகான பெண்களை நேர்காணல் செய்துகொண்டும், அவர்களோடு கடற்கரையில் வாலிபால் ஆடிக்கொண்டும் அதனை அவ்வப்போது ட்விட்டரில் பதிவு செய்துகொண்டும் இருந்தார்.
இவருக்கு கடன் தந்த வங்கிகளும், வேலை இழந்த ஊழியர்களும் இவரை கண்டபடி ஏசிக் கொண்டிருக்க, அதை எல்லாம் கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல், இரு மாதங்களுக்கு முன்பு இந்த வருடத்துக்கான காலண்டரை வெளியிட்டார் மல்லையா. அதன் முதல் காப்பியை உலக பிரபல பாப் பாடகர் என்ரிக் எலியாஸ்க்கு வழங்கி அதனை ட்விட்டரில் பதிவிட்டார். இந்த காலண்டரை வெளியிடும் நிகழ்ச்சியில் உலக அழகிகள் முதல் பாலிவுட், ஹாலிவுட் நடிகைகள் வரை அனைவரும் பல கோடி கொடுத்து அழைத்து வரப்பட்டார்கள்.
இந்திய வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத ஜாம்பவான்கள் பலர் இருந்தாலும், விஜய் மல்லையாவின் இந்த ஆடம்பரக் கொண்டாட்டங்களே அவருக்கு எதிரான நடவடிக்கைகளை வங்கிகள் தீவிரப்படுத்த காரணமாகின. இதுதான் அவரது வீழ்ச்சிக்கான மூன்றாவது காரணம்.
அடுத்து என்ன?
மல்லையாவின் யுனைடெட் ப்ரூவரீஸின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் தற்போது 5 சதவிகிதத்துக்கும் குறைவாக வருவாய் ஈட்டி வருகிறது. மல்லையா யுனைடெட் ஸ்பிரீட்ஸ் நிறுவனத்தில் தனக்கிருந்த பங்குகளில் 25% டியாஜியோவிடம் விற்றுவிட்டார். இப்போது 10 சதவிகிதத்துக்கும் குறைவாகவே பங்கு வைத்திருக்கிறார்.
வங்கிகளுக்குத் தரவேண்டிய ரூ.7,000 கோடி கடன் இப்போது அவரது கழுத்தை நெறிக்கிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கடன் வசூலிப்பு முகமையிடம் மல்லையா மீது புகார் பதிவு செய்து அவரது அனைத்து சொத்துக்களையும் முடக்கிவிட்டது. டியாஜியோ தருவதாக இருந்த ரூ.515 கோடி பணத்தையும் தற்காலிகமாக முடக்கியது. இதனை அடுத்து எப்போது வேண்டுமானாலும் மல்லையா கைது செய்யப் படலாம். அவரது பாஸ்போர்ட் முடக்கப்படலாம் என்கிற பேச்சு பலமாக எழுந்தது. ஆனால் மல்லையாவோ, ‘நான் ஒரே செட்டில்மென்டில் கடனை அடைப்பேன். நான் மோசடிக்காரன் அல்ல, ஓடி ஒளியமாட்டேன்’ என்று உதார் விட்டார்.
அவரது வழக்கின் அடுத்த வாய்தா மார்ச் 28-ம் தேதி அன்று நடக்கிறது. அதே சமயம், மல்லையா மீது அமலாக்கப் பிரிவு கறுப்புப் பண மோசடி வழக்கும் பதிவு செய்துள்ளது. இனிமேல் இங்கிருந்தால் ஆபத்து என்றுணர்ந்த மல்லையா, ரகசியமாக பிரிட்டனுக்கு சென்றுவிட்டார்.
இனி அவர் மீண்டும் இந்தியாவுக்கு திரும்ப வருவாரா, வாங்கிய கடனை திரும்பத் தருவாரா என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
பங்குச் சந்தையில் மல்லையாவின் நிறுவனங்கள்!
யுனைடெட் ப்ரூவரீஸ் - 2002-ல் ரூ.11-க்கு தொடங்கிய இதன் பங்குகள், தற்போது ரூ.800-க்கு வர்த்தகமானது. இது அதிகபட்சமாக ரூ.1,100 வரை விலை உயர்ந்திருக்கிறது.
யுனைடெட் ஸ்பிரிட்ஸ் ஜனவரி 2000-ல் ரூ.295க்கு வர்த்தகமாகத் தொடங்கிய இதன் பங்கு வர்த்தகம் இன்று ரூ.2,400-ல் வர்த்தகமாகிறது. இது அதிகபட்சமாக ரூ.4,000 வரை விலை உயர்ந்திருக்கிறது.
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் 2006-ல் ரூ.86-க்கு வர்த்தகமாகத் தொடங்கியது. இன்று இந்தப் பங்கு வர்த்தகமாகவில்லை. இது அதிகபட்சமாக ரூ.316 வரை விலை உயர்ந்திருக்கிறது.
No comments:
Post a Comment