HARD LABOUR NEEDED ,NOT EDUCATION
மதிப்பெண்கள் குறைந்ததற்காக தங்கள் குழந்தைகளை கோபித்துக் கொள்ளாத பெற்றோர்கள் தங்கள் மாணவ மாணவிகளை கோபித்துக் கொள்ளாத ஆசிரியர்கள் எவரேனும் உண்டா ? முன்பெல்லாம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வு மதிப்பெண்களுக்காக என்றிருந்த நிலை மாறி இப்போதெல்லாம் இப்படி மதிப்பெண்களுக்காக குழந்தைகளை பெற்றவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோபித்துக் கொள்ளும் பழக்கம் எல்.கே.ஜி முதற்கொண்டே ஆரம்பமாகி விடுகிறது.
பலன் இப்படியான கோபங்களுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு இயல்பான கற்றல் தன்மை தடைபட்டு கடமைக்காக பாடங்களை கற்கும் நிலைக்கு தள்ளப் படுகிறார்கள். பெற்றோர்கள் மிக அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இது. இப்படியான நிலைக்கு தங்கள் குழந்தைகளை தள்ளுவது ஆரோக்கியமான காரியம் இல்லை. தானாக விரும்பிச் செய்யும் காரியங்களில் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையும் அனைவருக்கும் மன திருப்தியும் ஈடுபாடும் கிடைக்கும், மாறாக ஒரு காரியத்தை வற்புறுத்தல் மூலம் செய்யத் தொடங்கும் போது கவனச்சிதறலினால் சோர்வே மிஞ்சும். முதற்கட்டமாக இந்த மனச் சோர்வு தான் மற்ற எல்லா குறைபாடுகளுக்கும் ஆரம்பம் என்பதை பெற்றோர்கள் ஏனோ அத்தனை சிரத்தை எடுத்து கவனிப்பதில்லை .
பள்ளி கல்லூரிப் படிப்பில் இருந்து இடையில் வெளியேற்றப்பட்ட பின்பும் சாதித்த உலகமகா சாதனையாளர்கள்...
சில ஆண்டுகளுக்கு முன்பாக யாகூ இணைய தளம் சர்வ தேச அளவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து "நீ படிக்க லாயக்கில்லை" என்று முத்திரை குத்தப் பட்டு வெளியேற்றப் பட்ட பின்பும் உலக அளவில் வெற்றி கண்ட 14 சாதனையாளர்களை பட்டியலிட்டிருந்தது, அவர்களில் நமது சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிலையன்ஸ் அதிபர் லேட் திருபாய் அம்பானியும் உண்டு. அந்தப் பதினான்கு பேரில் இந்தியர்கள் இருவர் இருக்கிறார்கள் என்பது நமக்குப் பெருமைக்குரிய விஷயம் தான். சும்மா பெருமைப்பட்டுக் கொண்டு அடுத்த ஐந்து நிமிடத்தில் அப்படியே இந்த விஷயத்தை மறந்து போய் விடுவோம். அதில் சந்தேகமில்லை. இந்த அவசர யுகத்தில் மனைவி குழந்தைகள் தவிர்த்து நெருங்கிய பிற உறவினர்களின் முகங்களே கூட நாளடைவில் பலருக்கு மறந்து போய்ஞாபகப்படுத்தலின் அவசியம் ஏற்பட்டு விடுகிறது. இது எதோ இணையதளச் செய்தி, இதை எத்தனை பேர் பார்த்திருக்கப் போகிறார்கள், பார்த்தாலும் கவனத்தில் வைத்துக் கொள்ள அத்தனை கவர்ச்சியான செய்தியா இது!
கவர்ச்சியான செய்தியாக இல்லாவிட்டாலும் கூட பெற்றோர்களை மற்றும் ஆசிரியர்களை சிந்திக்க வைக்கும் செய்தியாக இதை நாம் எடுத்துக் கொள்ளலாம் .
இந்த பட்டியலில் குறிப்பிடப் பட்டிருக்கும் நபர்களைப் பாருங்கள். அனைவருமே பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை இடையில் கை விட்டவர்கள், அல்லது மதிப்பெண்கள் இவர்களைக் கைவிட்டன என்றும் சொல்லலாம். பள்ளிகளும் கல்லூரிகளும் வெற்றிக்கு என நிர்ணயித்து வைத்திருக்கும் மதிப்பெண்களை பெற முடியாது போனதால் அவர்களுக்கு வாழ்வு ஸ்தம்பித்து விட்டதா என்ன? இல்லை முன்னைக் காட்டிலும் அதிக உத்வேகத்துடன் அவரவர் விரும்பிய துறையில் உற்சாகத்தோடு விடாமுயற்சியோடு இயங்கி வெற்றி கண்டு சாதனையாளர்கள் என இந்த உலகத்தை ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிறார்கள் .
சச்சின் டெண்டுல்கர் கல்லூரியில் கால் வைத்ததில்லை.
ஆப்பிள் கம்பியூட்டர் ஸ்டீவ் ஜாப்ஸ் கல்லூரியில் சேர்ந்து அதிகமில்லை ஒரே ஒரு செமஸ்டரில் தன் கல்லூரிப் படிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டு அங்கிருந்து வெளியேறியவர்,
தன் பெரிய குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை முன்னிட்டு 16 வயதிலேயே ஏடனுக்கு க்ளெர்க் வேலை செய்யப் போய் விட்டவர் இன்று உலகம் வியக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மறைந்த அதிபர் திருபாய் அம்பானி,
கை வசம் ஒரு டிகிரி கூட இல்லாமலே தான் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தாராம் பில் கேட்ஸ்,
தன் வளர்ப்புத் தாயின் மரணத்திற்காக யுனிவர்சிட்டி பரீட்சைகள் எழுத முடியாமல் கல்லூரி இரண்டாம்வருடத்தின் முடிவில் தன் படிப்புக்கு முழுக்குப் போட்டவர் தான் இன்று உலகம் நிமிர்ந்து பார்க்கும் ஆரக்கிள் கார்பரேசன் நிறுவனத்தின் இணை - நிறுவனர் லோரி எல்லிசன் .
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியனின் கதை தெரியுமா ? கணிதமும், இயற்பியலும் படிக்கப் போனவர் கணிதத்தில் குறைந்தபட்ச மதிப்பெண்களோடு தேர்வில் வெற்றி பெறுவதே பெரிய அதிர்ஷ்டம் என்ற வகையில் படிப்பை முடித்து விட்டு தனது சொந்த தொழிலை தொடங்கியவராம் இவர்.
தனது அறிமுகமான Face book இன் அபார வெற்றிக்குப் பின் ஹார்வர்ட் யுனிவர்சிட்டியில் இருந்து தனது கனவுகளை சிலிக்கான் வேலிக்கு திருப்பிக் கொண்டவர் தான் மார்க் ஜூகர்பெர்க்.
திரைப்படக்கல்லூரியில் நுழைவதற்கே தகுதி இல்லை என நிராகரிக்கப் பட்ட பின் தான் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் உலகப்புகழ் பெற்ற "ஜுராசிக் பார்க் ' படத்தை இயக்கினார்.
2007 ஆம் வருடம் இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற டோரிஸ் லெசிங் தனது 31 வயதில் எழுத்தாளராக ஆவதற்கு முன்பு வரை டெலிபோன் ஆப்பரேட்டர், ஸ்டெனோ கிராபர், ஜர்னலிஸ்ட் என்று பல வேலைகளைச் செய்துள்ளார்.
- இப்படியாக நீள்கிறது இந்தச் சாதனையாளர்களின் கல்விப்பட்டியல் .
இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன?
பள்ளிப்படிப்புக்கும் சாதனைக்கும் பெரிதாக எந்தத் தொடர்பும் தேவை இல்லை .
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வழங்கப் படும் மதிப்பெண்கள் அங்கே கற்ற கல்வியின் அளவுகோல்களே தவிர பெற்றுக் கொண்ட மாணவனின் தன்னம்பிக்கையின் உரைகற்கள் அல்ல. தேர்வில் தோற்றுப் போன மாணவர்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள் என்ற பொதுவான ஏளன மனப்போக்கு தேவை அற்றது.
உலக அளவில் சாதித்தவர்களைத் தான் இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை, நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூடத்தான் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை, அதற்காக அவரது நிர்வாகத் திறனை குறைவாக மதித்துவிட முடியாது.
No comments:
Post a Comment