Saturday, 10 March 2018

M.V.RAJAMMA ,KANNADA ACTRESS BORN MARCH 10,1921- - 1999 APRIL 23




M.V.RAJAMMA ,KANNADA ACTRESS 
BORN  MARCH 10,1921- 1999 APRIL 23





எம். வி. ராஜம்மா (M. V. Rajamma, கன்னடம்: ಎಂ. ವಿ. ರಾಜಮ್ಮ; 10 மார்ச் 1921 – 23 ஏப்ரல் 1999)[1] பழம்பெரும் தமிழ், கன்னடத் திரைப்பட நடிகையாவார். கன்னட நாடகம், திரைத்துறையில் பங்காற்றிய ராஜம்மாவுக்கு யயாதி முதல் தமிழ்த் திரைப்படமாகும். இரண்டாவது தமிழ்த் திரைப்படமாக உத்தம புத்திரனில் பி. யு. சின்னப்பாவுடன் கதை நாயகியாக நடித்தார். பின்னாளில் அன்னை வேடங்களில் நடித்த இவர், ஏறத்தாழ 50 ஆண்டுகள் காலத்திற்கு திரையுலகில் பங்காற்றினார்.[2]

வாழ்க்கைக் குறிப்பு

கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் ராஜம்மா. பெற்றோருக்கு ஒரே பிள்ளை. மூன்று மாதக் குழந்தையாக இருக்கும் போதே பங்களூரில் இவரது பெற்றோர்கள் குடியேறினர். பங்களூர் ஆரிய பாலகி வித்தியாலயத்தில் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்றார். வாய்ப்பாட்டும், ஆர்மோனியமும் இசைக்க முறைப்படி கற்றுக் கொண்டார்.[3] எட்டாம் வகுப்பு படிக்கும் போதே இவருக்குத் திருமணம் முடிந்தது. கணவர் நாடக நடிகர். திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் சம்சார நௌகா திரைப்படம் கன்னடத்தில் 1935 ஆம் ஆண்டில் தயாரான போது அதில் நடிக்க ராஜம்மாவின் கணவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது ராஜம்மாவைக் கண்ட தயாரிப்பாளர் ராஜம்மாவையும் அப்படத்தில் விதவைப் பெண் கிரிஜாவாக நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டார். சென்னையில் ஒத்திகைகள் நடந்த போது, ராஜம்மாவின் நடிப்பைப் பார்த்த இயக்குநர் எச். எல். என். சிம்ஹா அப்படத்தின் கதாநாயகியாக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு கதாநாயகி சரளாவாக நடிக்க ராஜம்மா புதிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டார். படமும் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. இதன் பின்னர் தெலுங்கு கிருஷ்ண ஜரசந்தா, தமிழில் யயாதி ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.[3]

யயாதிக்குப் பின்னர் உத்தம புத்திரன் (1940) திரைப்படத்தில் பி. யு. சின்னப்பாவுடன் கதாநாயகியாக நடித்தார். இப்படமும் இவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது.[3] தொடர்ந்து குமாஸ்தாவின் பெண் (1941) படத்தில் நடித்தார். ஜெமினியின் மதனகாமராஜன் (1941) திரைப்படத்தில் அமைச்சரின் மனைவியாக நடித்தார். இப்படத்தில் இவர் பாடிய கை கொடுப்பேன் அம்மா என்ற பாடல் அக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கே. சுப்பிரமணியம் இயக்கிய அனந்த சயனம், மற்றும் கன்னட பிரகலாதா, தெலுங்கு மாயாலோகம், தெலுங்கு பக்த வேமனா, விஜயலட்சுமி (1946), ஞானசௌந்தரி (1948) ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.[3]


நேற்றைய தமிழ் ரசிகர்கள் கொண்டாடிய நடிப்பு காவிரி எம்.வி.ராஜம்மா. கர்நாடகம் வழங்கிய கணக்கற்ற நாயகிகளில், வெற்றிகரமான பிள்ளையார் சுழி! தமிழகத்தில் மதுரை பாய்ஸ் கம்பெனி, டி.கே.எஸ், தேவி, சக்தி, வைரம் நாடக சபாக்களைப் போன்று, மைசூரில் ‘குப்பி வீரண்ணாவின்’ குழு. அங்கே பட்டை தீட்டப்பட்ட நடிப்பு ரத்னம் எம்.வி. ராஜம்மா.

ஹெச். எல். என். சின்ஹாவின் சம்சார நவுகா நாடகம் சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் மாதக் கணக்கில் நடந்தது. சம்சார நவுகா படமானபோது மிகச் சுலபமாகத் திரையுலகில் நுழைந்தார்கள் பந்துலுவும் - எம்.வி. ராஜம்மாவும்.1936ல் சம்சார நவுகா கன்னடத்தில் வெளியானது. சென்னை தேவி சினி காம்ப்ளெக்ஸ் உரிமையாளர் ராஜகோபால் தயாரித்தது. எம்.வி. ராஜம்மாவுக்குக் கிடைத்த முதல் ஊதியம் 900 ரூபாய்!

சம்சார நவுகாவின் வெற்றியால் எம்.வி. ராஜம்மா மதராஸப்பட்டினத்துக்குக் குடி பெயர்ந்தார். 1938ல் கல்கத்தாவில் உருவான ’யயாதி’ மூலம் எம்.வி. ராஜம்மா தமிழில் அறிமுகமானார். நாயகன் பி.யூ. சின்னப்பா.


ஆரம்பம் முதலே அநேக ‘முதல்’களில் முத்திரை பதித்தவர் எம்.வி. ராஜம்மா.

1.தமிழின் முதல் இரட்டை வேட டாக்கி உத்தம புத்திரன் - 1940ல் மாடர்ன் தியேட்டர்ஸ் படைப்பு. வாய்ப்பின்றித் தவித்த பி.யூ. சின்னப்பாவுக்கு மட்டுமல்ல. ஒட்டு மொத்தத் தென்னக சினிமாவுக்கும் வெற்றி மகுடம் சூட்டியது.

பி.யூ. சின்னப்பாவின் ஜோடியாக வந்த எம்.வி. ராஜம்மா தமிழ்த் திரையின் ராசியான ஹீரோயின் ஆனார்.

உத்தம புத்திரனில் சிருங்காரமாகத் தோன்றிய எம்.வி. ராஜம்மாவின் வண்ணப்படங்களை மாடர்ன் தியேட்டர்ஸ் வெளியிட்டது. அஞ்சல் அட்டை வடிவில் ஜப்பானில் அச்சிடப்பட்ட படங்கள் அவை. இலட்சக்கணக்கான வாலிபர்கள் போட்டி போட்டுக்கொண்டு அந்தப் படங்களை வாங்கினார்களாம்!

2. 1941-ல் எஸ்.எஸ். வாசன் நிதி உதவி செய்ய, டி. கே. எஸ். சகோதரர்களின் சமூக விழிப்புணர்ச்சி நாடகம் ‘குமாஸ்தாவின் பெண்’ படமானது. எஸ்.எஸ். வாசனை நிரந்தரமாக சினிமா தொழிலுக்கு அழைத்து வந்தது ‘குமாஸ்தாவின் பெண்’ணுக்குக் கிடைத்த அமோக வசூல்! தமிழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முதல் சமூகச் சித்திரம் இது என வரலாறு கூறுகிறது.


டைட்டில் ரோலில் நடித்த எம்.வி. ராஜம்மாவின் உருக்கமான நடிப்புக்குப் பட்டி தொட்டிகள் எங்கும் பிரமாதமான வரவேற்பு. அதே 1941ல் ஜெமினி ஸ்தாபனத்தின் முதல் தயாரிப்பு மதன காமராஜன் - எம்.வி. ராஜம்மா நடித்தது. திரையிட்ட இடமெல்லாம் நூறு நாள்கள் ஓடி, சென்னையில் வெள்ளி விழா கொண்டாடியது.

3. 1943ல் வெளி வந்த ‘ராதா ரமணா’ மூலம் கன்னடத் திரை வரலாற்றில், சொந்தப் படம் தயாரித்த முதல் பெண்மணி என்கிற பெருமையைப் பெற்றார் எம்.வி. ராஜம்மா.

4. கிறிஸ்தவ மதக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு

தமிழில் வந்த சினிமாக்கள் சொற்பம். அவற்றில் வரலாறு காணாத மாபெரும் வெற்றி பெற்ற ஒரே படம் ஞான சவுந்தரி.

இது 1948-ல் எம்.வி. ராஜம்மாவின் மிக உருக்கமான நடிப்பில் உருவானது. சிட்டாடல் தயாரிப்பு. அதே நேரத்தில் எஸ்.எஸ். வாசனும் போட்டி போட்டுக்கொண்டு தன்னுடைய ஞான சவுந்தரியை வெளியிட்டார். எம்.வி. ராஜம்மா நடித்த ஞான சவுந்தரியே ஓஹோவென்று ஓடியது. ராஜம்மாவின் நடிப்பைப் பார்த்து அசந்த ஜெமினி ஸ்டுடியோவின் முதலாளி வாசன், தான் தயாரித்த படத்தைத் தீயிட்டுக் கொளுத்தும்படி உத்தரவிட்டார். ராஜம்மாவின் ஒப்பற்ற நடிப்புக்கு வாசன் கொடுத்த விலை பயங்கரமானது. உலகில் வேறு எந்தப் படைப்பாளியாவது தன் சினிமாவைத் தானே கொளுத்தியதாக வரலாறு உண்டா?

5. 1949-ல் எம்.வி. ராஜம்மா நடித்த வேலைக்காரி மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. பேரறிஞர் அண்ணாவின் திரையுலகப் பயணத்தில் முதல் மைல் கல் இது.

6. தமிழின் முதல் இதிகாச புராண வண்ணச் சித்திரம் கர்ணன். கர்ணனின் அன்னை குந்திதேவியாகிப் பெண்களைக் குமுறி அழ வைத்தார் எம்.வி.ராஜம்மா.

ராஜம்மாவின் இதர சாதனைகள்:

தமிழைத் தொடர்ந்து எம்.வி. ராஜம்மாவுக்குத் தெலுங்குப் பட வாய்ப்புகளும் குவிந்தன. 1947ல் அவர் சித்தூர் வி. நாகையாவுடன் நாட்டியத் தாரகையாகச் சேர்ந்து நடித்த படம் ‘யோகி வேமனா’. ஏறக்குறைய ஹரிதாஸில், டி.ஆர். ராஜகுமாரி ஏற்ற ரம்பா மாதிரியான வேடம். ராஜம்மாவுக்குப் புகழ்க் கிரீடம் சூட்டியது.

1950ல் டி.ஆர். மகாலிங்கத்துடன் இணைந்த பாரிஜாதம் வெற்றிகரமாக ஓடியது. அதே ஜோடி நடித்த லைலா மஜ்னு தோல்வி அடைந்தது.

1952 ல் கே.ராம்நாத் இயக்கிய ‘தாய் உள்ளம்’ மதுரையில் வெற்றி விழா கொண்டாடியது. ஹீரோ ஆர்.எஸ். மனோகர். அறிமுக வில்லன் ஜெமினி கணேசன். அதில் நாயகி எம்.வி. ராஜம்மாவின் அபார நடிப்பு, தாய்க்குலங்களைத் திகைக்கச் செய்தது.

எம்.எல். வசந்தகுமாரியின் குரலில் ஒலித்த ‘கொஞ்சும் புறாவே’, ‘கதையைக் கேளடா’ ஆகிய பாடல்கள் காலத்தால் அழியாத கோமள கீதங்கள்.1961- எம்.வி. ராஜம்மாவின் நடிப்பில் உச்சக்கட்டம் கலைஞரின் படைப்பான தாயில்லாப் பிள்ளை. தயாரிப்பு இயக்கம் - இந்தியத் திரைச் சிற்பி எல்.வி. பிரசாத்.

டி.எஸ். பாலையாவின் மனைவியாகத் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பாசத்தீயில் வெந்து மடியும் பிராமணத் தாயாக மாறுபட்ட வேடத்தில் எம்.வி.ராஜம்மா வாழ்ந்து காட்டினார்.

ஏ. பீம்சிங் - சிவாஜி கூட்டணியின் அத்தனை ‘பா’ வரிசைப் படங்களுக்கும் சவால் விட்ட ‘தாயில்லாப் பிள்ளை’

நூறு நாள்கள் ஓடியது. அந்த ஆண்டின் மிகச் சிறந்த படமாகத் ‘தாயில்லாப் பிள்ளை’யை கவுரவித்தது குமுதம் வார இதழ். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்.டி. ராமாராவ், வி.என். ஜானகி, ஜெயலலிதா எனக் கலையுலகின் ஆறு முதல்வர்களுடன் இணைந்து பணியாற்றிய ஒரே நட்சத்திரம் எம்.வி. ராஜம்மா மட்டுமே!

எம்.வி. ராஜம்மா, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். ஆகிய தமிழ் சினிமாவின் நான்கு தூண்களுக்கும் தாயாக எண்ணற்ற படங்களில் நடித்தவர். (எம்.ஜி.ஆரோடு வேட்டைக்காரன், தேடி வந்த மாப்பிள்ளை, சிவாஜியோடு


தங்கமலை ரகசியம், பாவமன்னிப்பு, அன்னை இல்லம், குங்குமம், முரடன் முத்து, செல்வம், ஜெமினியுடன் கைராசி, ஆடிப்பெருக்கு, எஸ்.எஸ்.ஆருடன் ஆலயமணி, சாரதா).


எஸ். பி. பாலசுப்ரமணியத்தின் குற்றாலக் குரலில்

’வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்

அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் உன்னைச் சேரும்’என்ற பாடல் எம்.வி. ராஜம்மாவை உங்கள் கண்களில் நிழலாட வைக்கும்.






பேரறிஞர் அண்ணா கதை-வசனம் எழுதிய ‘வேலைக்காரி’ படத்தில் வேலைக்காரியாக நடித்துப் புகழ்பெற்றவர், எம்.வி.ராஜம்மா. சிட்டாடல் ‘ஞானசவுந்தரி’யில் புகழின் சிகரத்தை அடைந்தவர்.

பிற்காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் ஆகியோருக்கு அம்மாவாக நடித்தார். எம்.வி.ராஜம்மாவின் சொந்த ஊர், சேலம் அருகில் உள்ள அகண்டபள்ளி ஆகும். தாய் மொழி கன்னடம். இனிய குரல் வளம் படைத்த ராஜம்மா, சின்ன வயதிலேயே நன்றாகப் பாடுவார்.

நடிக்க வருவதற்கு முன்பே ராஜம்மாவுக்குத் திருமணம் ஆகிவிட்டது. கணவரின் நண்பரான `டிக்கி’ மாதவராவ் என்பவர், ஒருநாள் நண்பரைப் பார்க்க வந்தபோது, எம்.வி.ராஜம்மா ஆர்மோனியத்தை வாசித்தபடி பாடிக்கொண்டிருந்தார். அதைக்கேட்டு அசந்துபோன டிக்கி மாதவராவ், “இவ்வளவு இனிமையாக பாடுகிறாரே! ஏன் சினிமாவில் நடிக்கக்கூடாது?” என்று கேட்டார். ராஜம்மாவின் கணவர் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.

டிக்கி மாதவராவ் எடுத்துக்கொண்ட முயற்சியால், ‘சம்சார நவுகா’ (வாழ்க்கைப்படகு) என்ற கன்னடப் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்க ராஜம்மாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ராஜம்மாவின் தோற்றம், நடிப்புத் திறமை, இனிய குரல் ஆகியவற்றைக் கண்ட பட அதிபர்கள், கதாநாயகி வேடத்தையே ராஜம்மாவுக்கு கொடுத்தார்கள்.

‘சம்சார நவுகா’ மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. ராஜம்மா பெரும் புகழ் பெற்றார். நிறைய கன்னடப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

1940-ல் மாடர்ன் தியேட்டர் சார், ‘உத்தமபுத்திரன்’ படத்தைத் தயாரித்தார்கள். தமிழின் முதல் இரட்டை வேடப்படமான ‘உத்தமபுத்திர’னில், பி.யூ.சின்னப்பா கதாநாயகனாக நடித்தார். கதாநாயகியாக, சின்னப்பாவுக்கு ஈடுகொடுத்து நடித்தார், எம்.வி.ராஜம்மா. ‘உத்தமபுத்திரன்’ பெரிய வெற்றி பெற்றது. எம்.வி.ராஜம்மா, தமிழ்ப்பட உலகிலும் புகழ் பெற்றார்.

1941-ல், டி.கே.எஸ்.சகோதரர்கள் தங்களுடைய வெற்றி நாடகமான ‘குமாஸ்தாவின் பெண்’ணை திரைப்படமாகத் தயாரித்தனர். டி.கே.சண்முகம், டி.கே.பகவதி, கே.ஆர்.ராமசாமி ஆகியோர் நடித்த இந்தப்படத்தின் கதாநாயகியாக எம்.வி.ராஜம்மா நடித்தார்.

1948-ல் சிட்டாடல் தயாரித்த ‘ஞானசவுந்தரி’யில் கதாநாயகியாக ராஜம்மா நடித்தார். அவருக்கு ஜோடியாக டி.ஆர்.மகாலிங்கம் நடித்தார். ‘ஞானசவுந்தரி’, மகத்தான வெற்றிப்படமாக அமைந்தது. அந்த வெற்றியில் பெரும் பங்கு ராஜம்மாவுக்கு உண்டு. அவருடைய தோற்றம், நடிப்பு, வசனம் பேசிய விதம் எல்லாமே அற்புதமாக அமைந்திருந்தன. ஞானசவுந்தரியாகவே வாழ்ந்து காட்டினார் என்று சொல்லலாம்.

பேரறிஞர் அண்ணா கதை-வசனம் எழுதிய ‘வேலைக்காரி’, 1949-ல் ஜுபிடர் தயாரிப்பில் வெளிவந்தது. டைரக்ஷன் ஏ.எஸ்.ஏ.சாமி. இப்படத்தில் கே.ஆர்.ராமசாமி – வி.என்.ஜானகி ஒரு ஜோடியாகவும், எம்.வி.ராஜம்மா – எம்.என்.நம்பியார் ஒரு ஜோடியாகவும் நடித்தனர்.

எம்.வி.ராஜம்மாவுக்கு புகழ் தேடித்தந்த படங்களில் ‘வேலைக்காரி’யும் ஒன்று. 1950-ம் ஆண்டில், ‘பாரிஜாதம்’, ‘லைலா மஜ்னு’ ஆகிய படங்களில் நடித்தார். இரண்டிலும் மகாலிங்கம்தான் கதாநாயகன்.

இதே காலகட்டத்தில், பானுமதி – நாகேஸ்வரராவ் நடித்த இன்னொரு ‘லைலா மஜ்னு’வும் வெளிவந்தது. பானுமதியின் ‘லைலாமஜ்னு’ பெரிய வெற்றி பெற, மகாலிங்கம் – ராஜம்மா நடித்த ‘லைலா மஜ்னு’ தோல்வி அடைந்தது.

தொடர்ந்து பல படங்களில் ராஜம்மா கதாநாயகியாக நடித்தார். அவற்றில் `கேமரா மேதை’ கே.ராம்நாத் இயக்கத்தில் நாராயணன் கம்பெனி தயாரித்த ‘தாய் உள்ளம்’ மிகச்சிறந்த படம். இதில் ராஜம்மாவுடன் கதாநாயகனாக நடித்தவர் ஆர்.எஸ்.மனோகர். வில்லனாக ஜெமினிகணேசன் நடித்தார்.
எம்.ஜி.ஆரும், சிவாஜிகணேசனும் சூப்பர் ஸ்டார்களாக உருவானபோது, எம்.வி.ராஜம்மா, அவர்களுக்கு அம்மாவாக நடித்தார். ‘”குடும்பத் தலைவன்’, ‘தேடிவந்த மாப்பிள்ளை’ ஆகிய படங்களில் எம்.ஜி.ஆருக்கு அம்மாவாகவும், ‘தங்கமலை ரகசியம்’, ‘பாவமன்னிப்பு’, ‘ஆலயமணி’, ‘அன்னை இல்லம்’, ‘முரடன்முத்து’ ஆகிய படங்களில் சிவாஜிக்கு தாயாகவும் நடித்தார்.
குறிப்பாக, ‘கர்ணன்’ படத்தில் கர்ணனின் தாய் குந்தி தேவியாக நடித்து, ரசிகர்களின் நெஞ்சத்தை நெகிழ வைத்தார். ‘ராதா ரமணா’ உள்பட சில கன்னடப் படங்களை சொந்தமாகத் தயாரித்தார். ‘ஸ்கூல் மாஸ்டர்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்.
தமிழுக்குக் கிடைத்த சிறந்த நடிகைகளில் ஒருவர் எம்.வி.ராஜம்மா.


No comments:

Post a Comment