Wednesday 15 April 2020

CALIGULA ,SEXUAL NYMPOMANIAC BORN AUGUST 31,12- 24 JANUARY,41


CALIGULA ,SEXUAL NYMPOMANIAC BORN AUGUST 31,12- 24 JANUARY,41




..ரோம் பேரரசர் காலிகுலா அன்றையதினம் காலையிலேயே நாடகம் பார்க்கச் சென்றிருந்தார். தலைமை தளபதியான காசியஸ் கயீரியா மன்னரைப் பார்க்க மண்டபத்திற்கு வெளியே காத்துக்கொண்டிருந்தார். நாடகம் மதிய உணவு இடைவெளிக்காக நிறுத்தப்பட்டது. கூட்டம் கலைந்தது. மன்னர் அரங்கை விட்டு வெளியே வந்ததும் அவரை வரவேற்றது தளபதியின் வாள். அடிவயிற்றில் ஆழமாக இறங்கி வெளியே வந்தது. வலியால் துடித்து வீழ்ந்த மன்னர் தன் சொந்த சேவகர்களின் குருவாட்களின் கோபத்திற்கு இரையானார். புகழ்பெற்ற அகஸ்டஸ் சீசரின் பேரனான காலிகுலாவை ஏன் அவருடைய வீரர்களே கொல்லவேண்டும்? நான்கே ஆண்டுகள் ஆட்சியிலிருந்த காலிகுலாவின் இந்த கொடூர மரணத்திற்கு காரணம் காலிகுல்லாவேதான்.

காலிகுல்லா அரசரானபோது ஒட்டுமொத்த ரோமும் அவர் மண்டையில் பூக்களைக் கொட்டியது. செனட் சபையின் அத்தனை உறுப்பினர்களும் சேர்ந்துதான் காலிகுல்லாவை அரசாக்கினார்கள். ஆனால் இதுவெல்லாம் ஆறுமாதம் கூட நினைக்கவில்லை. பெயரைக் கேட்ட உடனையே வரலாற்று ஆய்வாளர்கள் பலரையும் முகம் சுழிக்கும் காலிகுல்லாவின் வாழ்க்கை ஒருமிகச்சிறந்த போர்வீரரின் மகனகாகத் துவங்கியது.

குட்டிச்செருப்பு
டைபீரியஸ் ரோம் மன்னராக இருந்தபோது தலைமை ராணுவ தளபதியாக இருந்தவர் ஜெர்மானிக்கஸ். அரச குடும்பத்தைச் சேர்ந்தவரான ஜெர்மானிக்கசிற்கு புகழ்பெற்ற முன்னாள் பேரரசர் அகஸ்டஸ் சீசரின் பேத்தியான அக்ரோபீனாவை மணமுடித்து வைத்தார்கள் பெரும்தலைகள். அரசவாரிசு என்பதால் மட்டுமல்லாது ஜெர்மானிக்கஸ் உண்மையாகவே போர் தந்திரத்தில் ஜித்தனாக அறியப்பட்டவர். எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் போரைத் திறம்பட வழிநடத்துவதில் அசாத்திய திறமை படைத்தவர். வாழ்வின் பெரும்பான்மையான பொழுதுகளை யுத்த களத்திலும், தந்திரங்களை வகுக்கும் மந்திராலோசனை மண்டபங்களில் மட்டுமே ஜெர்மானிக்கஸ் இருந்தார். ரோம் நகரத்து சீதையான அக்ரோபீனாவும் அவர்கூடவே இருந்தார்.


டைபீரியசின் நிம்மதியான அரசாட்சிக்கு ஒரு வகையில் காரணம் ஜெர்மானிக்கஸ் தான். ஆனால் மன்னருக்கு ஜெர்மானிக்கசை ஏனோ பிடிக்காமல் போனது. மக்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கு இதற்கு மிக முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. இருவருக்கும் இடையில் இருந்த இந்த பனிப்போர் ஒருகட்டத்தில் உச்சத்தை அடைந்தது. தகுந்த நேரம் பார்த்து காத்திருந்தார் மன்னர். ஏனெனில் நேரடியாக ஜெர்மானிக்கஸ் மீது கைவைப்பதெல்லாம் ஆபத்து என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. இறுதியில் அதற்கான நேரமும் வந்தது. சிரியா மீது போர்தொடுத்தது ரோம். இதில் ஜெர்மானிக்கஸ் கொல்லப்பட்டார்.

ரோம் கலங்கிப்போனது. தேசமெங்கும் ஜெர்மானிக்கசின் பேச்சாக இருந்தது. அவை எல்லாம் அடங்கிய பிறகு பொறுமையாக அவரது குடும்பத்தை சிறைபிடித்தார் டைபீரியஸ். குழந்தைகளை தாயிடமிருந்து பிரித்த அரசர், அக்ரோபீனாவை தனித்தீவு ஒன்றில் சிறை விதித்தார். வாழ்நாள் முழுவதும் தனிமையில் விடப்பட்ட அக்ரோபீனாவின் கல்லறையை மட்டுமே ரோமிற்கு கொண்டுவர முடிந்தது. கொண்டுவந்தவர் காலிகுலா.

ஜெர்மானிக்கஸ் – அக்ரோபீனாவிற்கு மூன்றாவதாக பிறந்தவன் காயஸ் ஜூலியஸ் சீசர் ஜெர்மானிக்கஸ். சிறுவயதிலேயே தந்தை மற்றும் தாயுடன் போர் பயிற்சி நடைபெறும் இடங்களுக்குச் செல்வது இவனது வழக்கம். தலைவரின் மகனுக்கு வீரர்களிடையே மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. குட்டி வாள், போர் ஆடைகள் மற்றும் குட்டி காலணிகளை அணிந்து வலம் வந்த சிறுவனை அனைவருக்கும் பிடித்துப்போனது. அவனுடைய குட்டிக்காலணிகளை விரும்பாத ஆட்களே இல்லை. அதனாலேயே அவனை அனைவரும் காலிகோ என்றழைத்தனர். காலிகோ என்றால் லத்தீன் மொழியில் குட்டிச்செருப்புகள் என்று அர்த்தம். இதுவே பின்னாளில் காலிகுலா என்று மாறிப்போனது. பார்க்கப்போனால் தன்னை அப்படி விளிப்பது காலிகுலாவிற்கு எரிச்சலாக இருந்திருக்க வேண்டும். அவர் இருக்கும் வரை இப்பெயரை யாரும் உச்சரித்தது கூட இல்லை. அவருக்குப்பின்னால் வந்த ஆய்வாளர்கள் அவர்மீதுள்ள காண்டில் “காலிகுலா”  வை நிலைபெறச் செய்துவிட்டார்கள்.

தன் சகோதரிகளிடம் மிகுந்த நெருக்கமாயிருந்த காலிகுலாவை சிறுவயதிலேயே பிரித்து “காப்ரி” என்ற தீவில் இருந்த அரண்மனைக்குச் சொந்தமான இடத்தில்  அடைத்தார் டைபீரியஸ். சகோதரர்கள் இருவரால் சிக்கல் வரும் என நினைத்த மன்னர் அவர்களை பாதாள சிறையில் அடைத்தார். உணவும் நீரும் கிடைக்காத அந்த சிறையின் கதவுகள் அதன்பின்னர் திறக்கப்படவே இல்லை. குடும்பத்தினர் அனைவரையும் இழந்த சிறுவன் காலிகுலா காப்ரியைச் சுற்றி சுற்றி வந்தான். அங்கிருந்து சுமார் இருபது மைல்களுக்கு அப்பால் உள்ள தீவில் அவனுடைய அம்மா இருந்தாள். இத்தகைய கொடும் தனிமையில் தான் கழிந்தது காலிகுலாவின் குழந்தைப்பருவம்.

கைக்கு வந்த கிரீடம்

யார் பழிவாங்கப்படுகிரார்களோ? யார் சிறுவயதிலேயே சிலுவையைத் தாங்குகிறார்களோ? அவர்களது கைகளுக்கே அதிகாரம் திரும்புவது வரலாற்றில் பலமுறை நடைபெற்றிருக்கிறது. காலிகுலாவிற்கும் இந்தப்பட்டியலில் இடம் கிடைத்தது. டைபீரியஸ் கிபி 37 ல் மர்மமான முறையில் இறந்துபோகவே அடுத்த மன்னரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு செனட் சபையிடம் போனது. முடிக்குரிய வாரிசுகளாக டைபீரியசின் பேரன் கமேல்லஸ் இருந்த போதிலும் செனட்டர்கள் வாய்ப்பை காலிகுலாவிற்கு வழங்கினார்கள். காப்ரியில் இருந்து ராஜ மரியாதையுடன் வரவழைக்கப்பட்ட காலிகுலாவின் தலையில் கிரீடம் ஏறியது.

முதல் ஆறு மாதங்கள்

ஜெர்மானிக்கசின் வாரிசு என்பது காலிகுலாவிற்கு மிகப்பெரிய செல்வாக்கை மக்களிடத்தில் காலிகுலாவிற்கு பெற்றுத்தந்தது. முதல் நடவடிக்கையாக தனித்தீவில் அடக்கம் செய்யப்பட்ட தன் தாயார் அக்ரோபீனாவின் கல்லறையை தோண்டி எடுத்து கொண்டுவந்து நகரத்திற்குள் மிகப்பெரிய மண்டபம் ஒன்றைக்கட்டி அதை நிறுவினார். விவசாய வரிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. காவலாளிகளுக்கு வரித்தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. விவசாயத்திற்காக புதிய தடுப்பணைகள் கட்டப்பட்டன. மத்திய ரோமிலிருந்து நகரம் முழுவதும் குடிநீர் வாய்க்கால்கள் வெட்டப்பட்டன. இன்று வாட்டிகனில் இருக்கும் வாடிகன் ஒபெலிஸ்க் எனப்படும் பிரம்மாண்ட தூண் இவரது காலத்தில் கட்டப்பட்டதாகும். மன்னரின் இந்த அதிரடித் திட்டங்களால் மக்கள் குளிர்ந்து போயினர். செனட் சபை உறுப்பினர்கள் அனைவரும் காலிகுலாவின் பேச்சைக்கேட்க ஆரம்பித்தார்கள்.

வேலைநிறுத்தம் செய்த உடல்
அடுத்தடுத்து பல திட்டங்களை செயல்படுத்த தொடங்கியவுடனே மன்னருக்கு உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டது. துவக்கத்தில் வெறும் ஜுரமாக இருந்தது சில நாட்களில் அரசரை படுக்க வைத்துவிட்டது. தீராத உடல்வலியும், தூக்கமின்மையும் அவரை வாட்டின. பொதுமக்கள் பிரார்த்திக்கும் அளவிற்கு காலிகுலாவிற்கு தங்கள் உள்ளத்தில் இடம் கொடுத்திருந்தனர். பொதுமக்கள் எதிர்பார்த்தபடியே சில தினங்களில் மன்னர் உடல்நிலை சீரானது. கையைப்பிடித்துப் பார்த்த தலைமை மருத்துவர் அரசர் முழுவதும் குணமடைந்துவிட்டதாக அறிவித்தார். ஆனால் அரசரின் மனதிற்குள் வெடித்துச்சிதறும் வன்மங்கள் பற்றி பாவம் அவர் அறிந்திருக்கவில்லை.


காலிகுலாவின் வரலாற்றைத் தொகுத்தவர்கள் அனைவரும் ஒத்திசையும் இடம் இதுதான். பதவியேற்ற முதல் ஆறுமாதத்தில் பொறுப்பான மன்னராக இருந்த காலிகுலா வெறிபிடித்த மிருகமாக மாறியது இந்த ஒரு வாரத்தில் தான். காலிகுலாவின் இந்த திடீர் மாற்றம் அவருடைய தனிமையின் கோர எதிர்வினை என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். அதற்குப்பிறகுதான் ரோம் மக்கள் காலிகுலாவை நினைத்து பயப்படத் தொடங்கினர்.

விபரீதங்கள்
காலிகுலா காய்ச்சலில் இருந்து எழுந்தவுடன் தன்னையே தனிமைப்படுத்திக்கொள்ளத் தொடங்கினார். மிக அந்தரமான காரியதரிசிகளுக்கு மட்டுமே அரசரைப் பார்க்க அனுமதி கிடைத்தது. கிட்டத்தட்ட ஒருமாத காலம் இப்படி மர்மமாகவே அரசாங்கம் நடைபெற்றது. பிறகுதான் அந்த அறிவிப்பு வந்தது. நாடு முழுவதும் புதிய விபச்சார விடுதிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. கணிசமான வரியும் இதற்கு விதிக்கப்பட்டதோடு, சுகாதாரமான முறையில் விடுதிகள் செயல்படுவதைக் கண்காணிக்க மாதம் ஒருமுறை மன்னர் வருகை தருவார் என்று அறிவிக்கப்பட்டது.

ரோமில் பெரிய பிரச்சனை என்னவெனில் கலாச்சாரமும், குடிமக்களும் தான். யூதர்கள் கணிசமான அளவில் வாழ்ந்தார்கள். கிரேக்க நாகரீகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரோம் நகர சட்டங்கள் பலவற்றில் கசப்பு இருந்தது. காலிகுலாவின் துவக்கம் இந்த கசப்பை அகற்றும் என்றுதான் அனைவரும் நினைத்தார்கள். ஆனால் கிழக்கில் இருந்து புதிய பிரச்சினை வந்தது. எகிப்தை ஆண்ட அலூஸ் அவிலியஸ் ஃபால்காஸ் என்னும் மன்னன் காலிகுலாவிற்கு எதிராக சதி செய்வதாக தகவல்கள் கிடைத்தன. ஃபால்காசிற்கு எதிராக தனது நண்பனான ஹெரோட் அக்ரிப்பாவை படையெடுக்க வைத்து வெற்றியும் பெற்றார். ஆனால் இது கிழக்கில் காலிகுலாவிற்கு எதிரான அதிருப்தியலையை உருவாக்கியது. அடுத்தடுத்து கிழக்கு நாடுகள் காலிகுலாவிற்கு எதிராக கோதாவில் இறங்கின.

நான் கடவுள்

யூதர்களின் மீதான அரசரின் வெறுப்பு எல்லை தாண்டியது. யூதர்களின் புனித பூமியான ஜெருசலேமில் தனக்கு கோவில் கட்டவேண்டும் என்று காலிகுலா அறிவித்தது யூதர்களை கொந்தளிக்கச் செய்தது. முதல் முறையாக செனட் சபை மன்னரின் திட்டத்திற்கு எதிராக நின்றது. அரசியல் ரீதியாக பெரும் நஷ்டம் ஏற்படும் எனத்தெரிந்த பின்னர் அத்திட்டத்தைக் கைவிட்டார் காலிகுலா. ஆனால் அதற்குப்பதிலாக ரோம் நகரத்திற்கு உள்ளே அரசருக்கு கோவில் கட்டப்பட்டது. கூடவே தாத்தா அகஸ்டசிற்கும் தனியாக ஒரு கோவில் கட்ட உத்தரவிட்டார். தன்னைக் கடவுளாக சித்தரிக்கும் ஆசை காலிகுலாவிற்கு நிறையவே இருந்தது. அதற்காகத்தான் இத்தனை திட்டமும்.

எல்லை மீறிய உல்லாசம்
அந்தப்புரத்தின் மீதான மன்னரின் ஆசை வெறியாகிவிட்டிருந்தது. நிர்வாண விருந்துகள் வாடிக்கையாகிவிட்டன. மன்னருக்காக புதிய பெண்களை பல்வேறு தேசங்களிலிருந்து கொண்டுவரும் நபர்களுக்கு தங்கம் தாராளமாக வழங்கப்பட்டது. இவையெல்லாம் வரலாற்றில் பல மன்னர்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் மன்னர் இத்தோடு நிற்கவில்லை.

தனக்குப்பிடித்த பெண்களை எல்லாம் பலவந்தமாக அடையத் தொடங்கினான் காலிகுலா. இந்த வரிசையில் அதிகாரிகளின் மனைவிகளும் வரும்போதுதான் பிரச்சினையின் வீரியம் அனைவருக்கும் புரிந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக தனது சகோதரிகளையும் திருமணம் செய்துகொள்ளும் அளவிற்கு பைத்தியம் பிடித்தது காலிகுலாவிற்கு.

எதிராகத் திரும்பிய செனட் 
டைபீரியஸ் இறந்த பின்னர் காலிகுலாவை அரசராக்கிய அதே சபை தற்போது மன்னரின் கிறுக்குத்தனங்களைக் கண்டு வெலவேலத்துப்போனது. உடனடியாக மேல்மட்ட அதிகாரிகள் கூடி காலிகுலாவின் அதிகாரத்தைக் குறைக்க முடிவெடுத்தார்கள். இது எப்படியோ மன்னரின் காதுகளை எட்டியது. செனட் சபையைச் சேர்ந்த அனைவரையும் அவமானப்படுத்த எண்ணினான் காலிகுலா. குதிரை லாயத்திலிருந்த தனக்குப் பிடித்த குதிரையான இன்சிடேடசை தயார் செய்யும்படி உத்தரவிட்டான்.

அடுத்தநாள் காலை. செனட் சபைக்கு அனைவரும் வரும்படி மன்னரிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. அடித்துபிடித்துக்கொண்டு ஓடிவந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். “இன்று முதல் என் குதிரை இன்சிடேடஸ் தலைமை அமைச்சர் பொறுப்பை கவனித்துக்கொள்ளும்” என்று சொன்னால் யாருக்குத்தான் அதிர்ச்சியாக இருக்காது. அரண்மனைக்குள் மன்னருக்கு எதிரான எதிர்ப்புகள் அதிகமாகின.

இறுதி மரியாதை
The-assassination-of-Caligula
Credit: Ancient origins

காலிகுலாவின் அமைச்சரவையில் தலைமை படைத்தளபதியாக இருந்தவர் காசீசியஸ் கயீரியா. காலிகுலாவிற்கு இவரைக்கண்டாலே ஆகாது. பொது இடங்களில் அவரை அவமானப்படுத்துவதே காலிகுலாவிற்கு வேலை. தரம் தாழ்ந்த சொற்களும் சில நேரங்களில் மன்னரிடமிருந்து வெளிப்பட்டது. பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்குமல்லவா? அந்த எல்லையை மீறிய போதுதான் கயீரியா காலிகுலாவின் வயிற்றில் வாளைச் சொருகினார். ரத்தத்தோடு வீழ்ந்த மன்னரை தாங்கிப்பிடிக்க யாரும் வரவில்லை. வந்த சிலரும் தங்களது பங்கிற்கு ஈட்டியால் மன்னரைக் குத்தினார்கள். மொத்தம் முப்பது இடங்களில் கத்திக்குத்து விழுந்திருந்தது. யாரும் துளி கண்ணீர் சிந்தவில்லை. நான்கு ஆண்டுகளில் தனக்கு எதிராக அனைவரையும் திருப்பியிருந்தான் காலிகுலா. காயிரியாவிற்கு அனைவரும் நன்றி சொன்னார்கள். ரோம் வெகுகாலம் கழித்து நிம்மதியாக உறங்கச் சென்றது.





கலிக்யூலா ஆட்சியில் அமர்ந்தவுடன் மக்கள் அத்தனை பேரும் 'டைபீரியஸ் எவ்வளவு நல்ல மன்னன்' என்று என்னைப் பாராட்டுவார்கள்!'
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பண்டைய காலத்திலிருந்து இந்த நூற்றாண்டு வரை மிக மோசமான, அயோக்கியத்தனமான ஆட்சியாளர்களை மக்கள் அவ்வப்போது அரியணையில் அமர்த்திவிடுவது வரலாற்றின் சாபக்கேடு.


சில சமயங்களில் வக்கிரமான, கொடூரமான மிருகங்கள் 'அரசன்' என்ற பெயரில் விரசம் புரிந்திருப்பதை வரலாறு நெடுக நம்மால் காண முடியும்!


'அதிகாரம் மனிதனைக் கெடுத்துவிடும். அளவுக்கு மிஞ்சிய அதிகாரம் அடியோடு கெடுத்துவிடும்!' என்று ஆக்டன் பிரபு கூறிய பொன்மொழி உலகப் பிரசித்திப்பெற்றது.


ஆனால், சர்வாதிகாரிகள் 'அளவுக்கு மிஞ்சிய அதிகாரம் மிகமிகப் பரவசமானது' என்று அனுபவப்பூர்வமாக நம்பினார்கள். ரோம் சாம்ராஜ்யம் அழியக் காரணமாக இருந்தது இந்த அதிகார போதைதான்! இருப்பினும், இன்றுவரை பல நாடுகள் அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை!


'இவன் எப்போது செத்து ஒழிவான்?' என்று நாட்டு மக்கள் ரகசியமாகப் பிரார்த்தனை செய்யும் அளவுக்கு வெறியாட்டம் போட்ட மன்னர்களும் நிறையப் பேர் உண்டு. அவர்களில் முன்னணியில் நிற்பவன், ரோம் நாட்டை ஆண்ட கலிக்யூலா!


எந்தவொரு சர்வாதிகாரி இறக்கும்போதும், 'அப்பாடா' என்று நிம்மதிப் பெருமூச்சு விடும் மக்கள், அடுத்த கட்டத்தைப் பற்றி எச்சரிக்கையோடு செயல்படாமல் ;தேமே'யென்று இருந்து விடுவது வரலாற்றின் விசித்திரமான சோகங்களில் ஒன்று.


ரோம் நாட்டை ஆண்டு வந்த மோசமான சர்வாதிகாரியான டைபீரியஸ் கி.பி. 37 -ல் செத்துப் போனவுடன், அடுத்தபடி யார் ஆட்சிக்கு வரப்போகிறார்கள் என்பது பற்றி மக்கள் கவலைப்படவில்லை! கலிக்யூலா என்ற பெயரில் மிகப்பெரிய ஆபத்து காத்திருப்பதை அவர்கள் சற்றும் உணராமல், டைபீரியஸ் மரணத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதிலேயே குறியாக இருந்தார்கள்!


கடைசிக் காலத்தில் டைபீரியஸ் வெறி பிடித்த கிழ அரசனாக ஆகிப்போயிருந்தான். கொலைப்பயம் காரணமாகத் தனக்கென்று சிறு அரண்மனையைக் கட்டிக்கொண்டு வெளியே தலைகாட்டாமல், உள்ளே சகலவிதமான செக்ஸ் வக்கிரங்களிலும் ஈடுபட்ட அவன், குறிப்பாகப் பச்சிளம் சிறுவர், சிறுமிகளையும் தன் காமப் பசிக்காக விதவிதமாகப் பயன்படுத்த ஆரம்பித்தான். இதுகண்டு அவனுக்கு நெருக்கமாக இருந்தவர்களே கூடக் கடுப்பாகிப் போனார்கள்.


டைபீரியசுக்கு செக்ஸ் வக்கிரங்களில் அதீதக் கற்பனாசக்தி வேறு இருந்தது! 'ஸ்விம்மிங் பூல்' ஒன்றை உருவாக்கி, சிறுவர்களை மீன்வேடம் தரிக்கவைத்து, அதில் நீச்சலடிக்க வைப்பான் டைபீரியஸ். பிறகு தண்ணீருக்குள் இறங்கி, அங்கே சிறுவர்களுடன் விதவிதமான காம விளையாட்டுக்களில் ஈடுபடுவான்.


ஓரிரவு, டைபீரியஸ் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவனுடைய 'விசுவாசமான' நண்பன் ஒருவனே தலையணையால் மன்னன் முகத்தை மூடி, அதன்மீது ஏறி அமர்ந்துகொள்ள, மூச்சுத் திணறிச் செத்துப்போனான் அந்த சர்வாதிகாரி!


இறப்பதற்கு முன்பு, முத்தாய்ப்பான ஒரு கொடிய காரியத்தைச் செய்யத் தவறவில்லை டைபீரியஸ். அது, தன் மருமகன் கலிக்யூலாவை அடுத்த வாரிசாக நியமித்தது!










''எனக்குப் பிறகு கலிக்யூலா ஆட்சியில் அமர்ந்தவுடன் மக்கள் அத்தனை பேரும் 'டைபீரியஸ் எவ்வளவு நல்ல மன்னன்' என்று என்னைப் பாராட்டுவார்கள்!'' என்று வஞ்சகச் சிரிப்புடன் டைபீரியஸ் நெருக்கமான சிலரிடம் சொன்னதாக ஒரு தகவல் உண்டு! டைபீரியஸ் சொன்னது உண்மையாகப் போனது ரோம் நாட்டு மக்களின் துரதிர்ஷ்டம்!


இத்தனைக்கும் ஜூலியஸ் சீசர் பரம்பரையில் வந்தவன் கலிக்யூலா. அகஸ்டஸ் சீசரின் கொள்ளுப் பேரன். 'கலிக்யூலா' என்பதுகூடப் புனைப்பெயர்தான். நிஜ முழுப்பெயர் கேயெஸ் சீசர் ஜெர்மானிக்ஸ்!


யுத்தங்கள் நடந்தபோதெல்லாம் ரோம் நாட்டு ராணுவ வீரர்களுடன் தானும் போவான் சிறுவன் ஜெர்மானிக்ஸ். ரத்தமும், கொலையும், சிதறிய உடல்களும் அவனுக்கு ரொம்பப் பிடித்திருந்தது.


அப்போது ரோம் வீரர்கள் இந்தக் கிறுக்குப் பிடித்த குட்டி இளவரசனுக்கு, போர்வீரர்கள் அணிவது போலவே தனி 'பூட்ஸ்' தயாரித்துக் கொடுத்தார்கள். 'கரிகே' என்றால் இலத்தீனில் 'சிறிய பூட்ஸ்' என்று அர்த்தம். 'கலிக்யூலா' என்று பெயர் வந்தது இப்படித்தான்!


செக்ஸ் விஷயத்தில் பிஞ்சிலே பழுத்தவன் கலிக்யூலா. முதன்முதலில் கலிக்யூலா 'காதல் வயப்பட்டது' அவனுடைய சொந்த சகோதரியிடம்! வக்கிரம் பிடித்த கலிக்யூலா, தன் மற்ற சகோதரிகளையும் விட்டுவைக்கவில்லை!


மக்களைப் பொறுத்தவரை, கலிக்யூலா ஆட்சிக்கு வந்ததும் தங்களுக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டதாகத் தப்புக்கணக்குப் போட்டு, அவன் பட்டம் கட்டிக்கொண்டதை அட்டகாசமாகக் கொண்டாடினார்கள்.


நகரத்தின் மையத்திலேயே ஒரு லட்சத்து அறுபதாயிரம் மாடுகள் வெட்டப்பட்டு, சாமானிய ரோமானியர்களுக்காக இலவச விருந்து தயாரிக்கப்பட்டது. கலிக்யூலா, ராணுவத் தளபதிகளை மறக்காமல் கூப்பிட்டனுப்பி, பொன்னும் பொருளும் வாரி வழங்கினான்.


மாமன் டைபீரியசின் இறுதி ஊர்வலத்தைப் பிரம்மாண்டமாக நடத்திய கலிக்யூலா, மக்கள் தந்த பதவியை வகிக்கத் தனக்குத் தகுதி உண்டா என்கிற ரீதியில் சொற்பொழிவாற்றி, பாதி உரையில் கலங்கிக் கண்ணீர்விட்டு, மக்களையும் உணர்ச்சிப் பெருக்குடன் அழவைத்தான்!


கொடூரமான ஓநாய் விடுகிற முதலைக் கண்ணீர் அது என்பது புரியாத மக்கள், அரண்மனைப் படிக்கட்டுகளில் இருந்து கிழே இறங்கிவந்த கலிக்யூலா மீது பூமாரி பொழிந்து கரகோஷம் செய்தார்கள்.


'என்னுடைய பிரஜைகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். நகரத்தில் மக்கள் பொழுகுபோக்க, கலகலப்பான விஷயங்கள் குறைவாக இருக்கிறது. முதலில் இந்தக் குறையை நான் போக்க வேண்டும்' என்று அலுத்துக் கொண்ட கலிக்யூலா, ராணுவத்தில் ஒரு பிரிவை உண்டாக்கினான். அந்த பிரிவின் வேலை - காடுகளுக்குச் சென்று சிங்கம், புலி, யானைகள், கரடிகளைச் சிறைப்படுத்திக் கொண்டு வருவது! அந்த மிருகங்களைப் பயன்படுத்தி, மக்களுக்காக சர்க்கஸ்களைத் துவக்கிய முதல் மன்னன் கலிக்யூலா தான். ஆனால், அது கொடூரமான சர்க்கஸ்!


'ரியாலிடி டிவி'யைப் போல ஸ்டேடியத்துக்குள் கரடிகளையும் சிங்கங்களையும் விட்டு, வீரர்கள் ஈட்டிகளுடன் அவற்றை வேட்டையாடுவார்கள். சர்க்கஸ் முடிந்த பிறகு, மைதானத்துக்குள் மக்கள் இறங்கி ஓடிக் கும்மாளம் போடலாம்! அங்கே மது ஆறாக ஓடியது. விலைமாதுக்கள் ஆபாசமாக டான்ஸ் ஆடி, மக்களைக் குதூகலிக்க வைத்தார்கள்.


இந்தக் கலாட்டாவுக்கு நடுவே, திருமணமாகிப் போயிருந்த களிக்யூலாவின் மூன்று சகோதரிகளின் கணவன்களும் அடியாட்களால் அடித்துத் துரத்தப்பட்டு, சகோதரிகள் கலிக்யூலாவின் படுக்கை அறைக்குக் கொண்டு வரப்பட்டதை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!கலிக்யூலா அவ்வப்போது மந்திரிப் பிரதானிகளைப் பார்த்து, 'நான் ஒருமுறை தலையசைத்தால் போதும். உடனே உங்கள் அத்தனை பேர் தலையும் கீழே உருளும். இது எப்படியிருக்கு?' என்று இகழ்ச்சியாகச் சொல்வது வழக்கம்!


ஒரு நாள் தர்பாரில் 'உங்கள் யாரிடமும் நான் அன்பை எதிர்பார்க்கவில்லை. என்னிடம் பயந்து நடுங்கினால், அதுவே எனக்குப் போதும்!' என்று கர்ஜித்தான் கலிக்யூலா. அதற்க்கேற்ப, அவன் எதைச் சொன்னாலும், செய்தாலும் மெளனமாக நிற்பதற்கு எல்லோருமே பழகிக்கொண்டார்கள்!


'சில சமயங்களில் சாமானியர்களைப் பார்த்தால், எனக்குப் பொறாமையாக இருக்கிறது. அவர்கள் எங்கு வேண்டுமானாலும் போகிறார்கள். வாழ்கையை ஜாலியாக அனுபவிக்கிறார்கள். நான் அரண்மனைக்கு உள்ளேயே இருந்துகொண்டு, உங்கள் முகங்களைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது!' என்று ஒருமுறை அலுத்துக்கொண்ட கலிக்யூலா, தானும் இரவு நேரங்களில் 'நண்பர்களுடன்' சிவப்பு விளக்குப் பகுதிகளுக்கு விஜயம் செய்து, அட்டகாசம் போட ஆரம்பித்தான்.


அதுபோதாதென்று கலிக்யூலா புதிதாக, ஏராளமான கேளிக்கை விடுதிகளைத் திறந்து வைத்தான். எல்லா கேளிக்கை விடுதிகளிலும் 'மன்னர் வருகிறாராமா?' என்று ஆவலோடு விசாரிக்க ஆரம்பித்தார்கள். பெண்களை நிர்வாணப்படுத்தி, எல்லோர் முன்னிலையிலும் உடலுறவு கொள்வது கலிக்யூலாவுக்குப் பிடித்தமான ஒன்று!


அவன் செயல்படும்போது மற்றவர்கள் சூழ்ந்து நின்று கரகோஷம் செய்வது, அந்த வெறி பிடித்தவனின் உற்சாகத்தை அதிகப்படுத்தியது. திடீரென்று, 'இந்தக் கேளிக்கைக் கூடத்தில் வசதிகள் சரியாக இல்லை. விலைமாதுக்களின் ஒத்துழைப்பும் போதாது' என்று குற்றம் சாட்டி, இரவோடு இரவாக அந்தக் கட்டடங்களுக்கே தீ வைக்கச் சொல்வான் கலிக்யூலா!


'எல்லோரோடும் கலந்து பழகுகிறேன் என்பதால், என்னைச் சாதாரணமாக எடுத்துக்கொண்டு விடக்கூடாது இல்லையா? எப்போதும் ஒரு பயம் இருக்க வேண்டும் என்பதற்க்காகத்தான் இப்படி!' என்று இதற்க்கு விஷமச் சிரிப்போடு காரணம் சொல்வான் அவன். இதனால், கலிக்யூலா வருகிறான் என்றாலே, விசேஷமான வரவேற்பு ஏற்பாடுகள் அவசரமாக, நடுக்கத்துடன் நடக்கும்!


கி.பி. 38. அரியணையில் அமர்ந்து ஒரு வருடம் ஆனபோது, திடீரென்று கலிக்யூலாவுக்குக் காய்ச்சல் வந்து படுக்கையில் வீழ்ந்தான். 'மன்னர் பிழைப்பது சந்தேகம்' என்று நாட்டில் வதந்திகள் பரவின. பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணியாகச் சென்று, அரண்மனை வெளியே நின்று கலிக்யூலாவுக்காகப் பிரார்த்தனை செய்தனர்.


யாரும் வேலைக்குச் செல்லாததால், தொடர்ந்து விடுமுறை! சர்ச்சுகள், கேளிக்கைகள் எல்லாம் நின்று போனது. ஒரு வாரம் கழித்துச் சரேலென்று படுக்கையில் எழுந்து உட்கார்ந்த கலிக்யூலா, 'எனக்கு ஜுரமெல்லாம் வரவில்லை. மறுபிறவி எடுப்பதற்காகப் படுத்திருந்தேன். இப்போது மறுபிறவி எடுத்து விட்டேன் - கடவுளாக!' என்று இரு கரங்களையும் உயர்த்தி கம்பீரமாக அறிவித்தான்.


'சாத்தானாக!' என்று அவன் சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும்! ஏனெனில், அதற்குப் பிறகு பிறகு கலிக்யூலாவின் கொடூரம் பலமடங்கு அதிகமாகிவிட்டது!


தன்னைக் 'கடவுள்' என்று பிரகடனப்படுத்திக் கொண்ட பிறகு, கலிக்யூலாவின் கிறுக்குத்தனம் உச்சத்துக்குப் போய் விட்டது. 'மீண்டும் சர்க்கஸ் கேளிக்கைகளை இன்னும் கோலாகலமாக நடத்துங்கள்' என்று ஆணையிட்டான் அவன். எத்தனை நாள்தான் ஒரே மாதிரி சிங்கச் சண்டையையும் வீரர்களின் வாட்போரையும் பார்த்துக் கொண்டிருப்பது? போகப் போக மக்களுக்குப் போரடிக்க ஆரம்பித்தது!


கோலாகல வீண்செலவுகள் காரணமாக, கஜானாவில் பணம் கரைய ஆரம்பித்தது. சிங்கம், புலியோடு சண்டை போடும் வீரர்களுக்குச் சம்பளம் குறைக்கப்பட்டதால், பல வீர இளைஞர்கள் விலகிக்கொண்டார்கள். கடைசியில் சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் இறைச்சி வாங்கக்கூடப் பணமில்லை!


நாற்பதாயிரம் பேர் உட்காரக்கூடிய ஸ்டேடியத்தில், பட்டினி காரணமாக வத்தலாக மாறிய சிங்கங்களும் தொந்தியோடு கிழ வீரர்களும் அலுப்போடு மோதிக் கொள்வதைப் பார்த்த மக்கள் கிண்டலாக 'ஒழிக... ஒழிக!' என்று குரல் கொடுத்தார்கள்.இதைப் பார்த்து கலிக்யூலாவின் கண்கள் சிவந்தன.

உடனே மக்களைக் கலாட்டா பண்ணத் தூண்டிவிட்டதாக நூற்றுக்கணக்கானவர்கள் கைது செயப்பட்டார்கள். 'கூச்சல் போட்ட இவர்களுடைய நாக்குகளைத் துண்டியுங்கள். பிறகு, இவர்களைச் சிங்கங்களுக்கு இரையாக ஸ்டேடியத்துக்குள் தூக்கிப் போடுங்கள்!' என்று ஆணையிட்டான் மன்னன்.

நாக்குகள் அறுக்கப்பட்டு, ரத்த வாசனையுடன் மைதானத்தில் விடப்பட்டவர்களைப் பார்த்துச் சப்புக் கொட்டிய சிங்கங்கள், பசியோடு அவர்கள்மீது பாய்ந்து குதறிக்கொன்று தின்றன. முதன்முறையாக மக்கள் திகைத்தது அப்போதுதான்!


'மிருகங்களுக்கு இறைச்சி வாங்கக்கூடப் பணமில்லை' என்றதற்கு, 'அதனாலென்ன... இறைச்சிதானே வேண்டும்? சிறையிலிருக்கும் கைதிகளைத் தினமும் மிருகங்களுக்குத் தீனியாகப் போடுங்கள்!' என்று ஐடியா தந்தான் கலிக்யூலா.


அரசியல் தலைவர்கள் பெயரைச் சொல்லிக்கொண்டு அடியாட்கள் கடைவீதிகளில் இப்போது வசூல் செய்வதைப் போல, கலிக்யூலாவின் பிரத்தியேகக் குண்டர் படை, வியாபாரிகளையும் செல்வந்தர்களை யும் மிரட்டி வசூல் செய்ய ஆரம்பித்தது. அவர்களை அனுப்பியதே கலிக்யூலாதான்!


ஒரு நாள் தளபதி ஒருவன், 'சிவப்பு விளக்குப் பகுதிகளில்கூட வசூல் செய்து வருகிறோமாக்கும்!' என்று மன்னனிடம் சொல்லித் தொலைக்க... திடீரென்று கலிக்யூலாவின் முகம் குரூரமாக மலர்ந்தது. அன்றிரவு, தன் சகோதரிகளைக் கூப்பிட்டு அனுப்பினான் அவன்.


'நிதி நிலைமை மோசமாக இருப்பது உங்களுக்குத் தெரியும். எனக்காக எல்லோரும் அலைந்து உழைத்துப் பணம் வசூலித்து வர, நீங்கள் சும்மா சாப்பிட்டுவிட்டு, ஒரு வேலையும் செய்யாமல் அந்தபுரத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஆகவே, இனி உங்களுக்கும் வேலை தரப்போகிறேன்!' என்று குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறு உறுமிய அவன், 'இனி நீங்களும் பணக்கார விருந்தாளிகளுடன் ஜாலியாக இருக்க வேண்டும். அதற்குப் பணம் வசூலிக்கப் போகிறேன்...' என்றான்!


மறுநாள் அவசரமாக அவையைக் கூட்டி, இந்த வக்கிரமான திட்டத்தை அவன் அறிவிக்க... எல்லோரும் திடுக்கிட்டுப் போனார்கள்.


ஆனால் கலிக்யூலாவோ 'என் சகோதரிகளை நீங்கள் அனுபவிக்க வேண்டுமானால், ஓரிரவுக்கு ஆயிரம் பொன் நாணயங்களை எனக்குத் தரவேண்டும். என் சகோதரிகள் ராஜவம்சத்தினர் அல்லவா!' என்று கூச்சமில்லாமல் கட்டளை பிறப்பித்தான். 'ஒவ்வொரு இரவும் யாரெல்லாம் அந்தப்புரத்துக்கு வரவேண்டும்' என்ற பட்டியலையும் அவன் போட்டுக் கொடுத்து விட்டதால், அவன் அறிவிப்பு ஒரு கட்டாய ஆணையாகி விட்டது!


சில நாட்கள் கழித்து எல்லா வி.ஐ.பி-க்களையும் மீண்டும் அழைத்த கலிக்யூலா, 'இனி உங்கள் மனைவி, சகோதரிகள், மகள்களையும் அரண்மனைக்கு அழைத்து வரவேண்டும். இதை நீங்களாக சொல்வீர்கள் என்று பார்த்தால், 'கம்'மென்று இருக்கிறீர்கள்! யார் - யாருடன் இன்பமாக இருக்கலாம், அதற்கான தொகை எவ்வளவு எனக்குத் தரவேண்டும் என்பதெல்லாம் நாளை அறிவிக்கப்படும்' என்றான் வெறிச் சிரிப்புடன்!


வயதான ஒரு அமைச்சர் மட்டும் மன்னனின் அருகில் வந்து நின்று, மிகுந்த நடுக்கத்துடனும் தயக்கத்துடனும் 'தங்களை நாட்டு மக்கள் எல்லோருமே ரொம்பத் தப்பாக எடுத்துக்கொண்டு விடுவார்களோ என்று எனக்குக் கவலையாக இருக்கிறது. ஏனெனில், மன்னரை யாராவது மனதுக்குள் தவறாக நினைத்தால்கூட என்னால் தாங்க முடியாது' என்று குரலைத் தாழ்த்திச் சொன்னார்.


அவரைப் பரிதாபமாகப் பார்த்துப் புன்னகைத்த கலிக்யூலா, 'நான் கடவுள் என்பதை மறந்துவிட்டீர்கள். கடவுள் செய்வது எதுவும் பாவகாரியம் இல்லை என்கிற அடிப்படை விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையே!' என்று எடுத்துச் சொன்னான்.


தான் 'கடவுளாக' மறுபிறவி எடுத்ததை அவையில் இருக்கும் முக்கியமான ஒருவரே மறந்துவிட்டாரே என்பதால், நாடெங்கும் அதற்காக விழா எடுக்கச் சொன்ன கலிக்யூலா, கூடவே தலைநகரில் இருந்த எல்லா (முந்தைய) மன்னர்கள் சிலைகளின் தலைகளையும் உடைத்து, கழுத்துக்குமேல் தன் தலையைச் சிலையாகத் தயாரித்து வைக்கச் சொல்லி ஆணையிட்டான்.

ரோம் நகரில் தலைவர்களுக்குச் சிலைகள் வைப்பது ரொம்ப கால பழக்கம் என்பதால், ஏராளமாக நின்றிருந்த சிலைகளை மாற்றியமைக்க, நிறைய சிற்பிகள் களத்தில் குதிக்கவேண்டி வந்தது! தலைநகரம் முழுவதும் உளி, சுத்தியல் சத்தங்கள் மயம்!

மறுநாள் அவை கூடியபோது கலிக்யூலா, 'எல்லா ஐடியாக்களையும் நானே தரவேண்டியிருக்கிறது. எதற்கும் பிரயோஜனம் இல்லாமல் பதவிகளில் மட்டும் கம்பீரமாக உட்கார உங்களுக்கு எல்லாம் வெட்கமாக இல்லையா?' என்று எகத்தாளமாகச் சீறிவிட்டு, உச்சக்கட்டமாகத் தான் மிகவும் செல்லமாக வளர்த்த 'இன்சிடேட்டஸ்' என்னும் குதிரையை அலங்காரம் செய்து, தர்பாருக்குக் கொண்டுவரச் சொன்னான்.


மீண்டும் அங்கே ஓர் அறிவிப்பு... 'உங்கள் எல்லோரையும்விட என் குதிரை புத்திசாலி! ஆகவே, என் அருமை குதிரையை இன்றிலிருந்து கான்சல் பதவியில் அமர்த்துகிறேன்!'('கான்சல்' பதவி என்பது, நம்ம மத்திய காபினெட் அமைச்சருக்கு இணையானது!) என்று சொன்னான்.


இப்படிப்பட்ட கிறுக்குத்தனமான ஆட்சியாளனின் வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை.


கலிக்யூலாவுக்கு காஷியஸ் செயிரீயா என்பவன் பிரதான மெய்காவலனாக இருந்தான். விசுவாசமாகப் பணிபுரிந்த அவனுடைய மனதில் வெறுப்பு துளிர்விட ஆரம்பித்தது. ஒரு நாள், செய்யாத குற்றத்துக்காக இளம் பணிப்பெண் ஒருத்தியை கலிக்யூலா இழுத்துவரச் செய்து சித்ரவதை செய்யச் சொன்னான்.


அரண்மனையில், சில வீரர்கள் மாறி மாறி அந்தப் பெண்ணைப் பாலியல் பலாத்காரப்படுத்தி, விதவிதமாகச் சித்ரவதை செய்தனர். அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையையும் அவளுடைய கதறலையும் கெட்ட செயிரீயா, திடீரென்று மனமுடைந்து அழுதுவிட்டான்.


அன்றிலிருந்து கலிக்யூலா அவனைப் பார்க்கும்போதெல்லாம் 'அழுகிற பாப்பா' என்கிற ரீதியில் எல்லோர் முன்னிலையிலும் தொடர்ந்து கிண்டல் பண்ணிக் கொண்டிருந்தான். 'ஒவ்வொரு நாளும் உனக்கு இதுமாதிரி ஒரு பெயர் சூட்டப்போகிறேன்!' என்றும் கிண்டலடித்தான்.


கி.பி. 41 -ஆம் ஆண்டு,ஜனவரி மாதத்தின் ஓர் இரவு... சிறுவர்கள் நாடகம் ஒன்று அரண்மனையில் ஏற்பாடு செய்யப்பட்டது ( இதுபோன்ற நாடகங்களிலிருந்துதான் சிறுவர்களைத் தன் காம விளையாட்டுகளுக்குத் தேர்ந்தெடுப்பான் கலிக்யூலா!).எல்லோரும் தயாரானவுடன் கலிக்யூலாவின் பிரத்தியேக அறைக்குள் நுழைந்த செயிரீயா, 'சிறுவர்கள் வந்துவிட்டனர்' என்று பணிவோடு அறிவிக்க...


கலிக்யூலா ஆர்வமாக வெளியே வராண்டாவுக்கு வர, 'மன்னா! இன்று எனக்குத் தாங்கள் ஏதும் பெயர் வைக்கவில்லையே?' என்றான் செயிரீயா. பலமாகச் சிரித்த கலிக்யூலா, 'ஆமாம்! மறந்துவிட்டேன்... சரி, இன்று உன் பெயர் மிஸ்டர். உள்பாவாடை (Petticoat)!' என்று சொல்லிவிட்டு நகர... இப்போது செயிரீயாவிடம் இருந்து சிரிப்பு வெளிப்பட்டது.


தன் உடைவாளைச் சரேலென்று உருவினான் அவன். திகைத்துப்போன கலிக்யூலாவின் முகம் வினாடியில் வெளிறிப் போக, தொடர்ந்து மன்னனின் உடலில் வாளைப் திரும்பத் திரும்பப் பாய்ச்ச... கலிக்யூலாவின் உடல் முழுதும் ரத்தத்தால் நனைய, ஒரு வழியாகக் கிழே விழுந்து இறந்தான் அந்த கொடுங்கோலன்.


அங்கிருந்து நேராக நாடக அரங்குக்குச் சென்று, மேடையில் ஏறி நின்று சாவதானமாகச் சொன்னான் செயிரீயா - 'மன்னர் சில நிமிடங்களுக்கு முன் செத்துப் போய்விட்டார்!' அங்கே சற்று பயங்கரமான மௌனம் நிலவியது. பிறகு கரகோஷம் ஆரம்பித்தது. நிற்காத, நீண்ட, மகிழ்ச்சி நிரம்பிய கரகோஷம்...

.








No comments:

Post a Comment