தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 1 AND 3– T.சௌந்தர்
காலையில் பாடசாலைக்கு தயாராகிக் கொண்டிருந்த ஆசிரியரான தந்தை , தனது மூன்று வயது மகன் விளையாடிக்கொண்டே தன் எண்ணத்திற்கு ஏதோ ஒரு பாடலையும் பாடிக்கொண்டிருப்பதை உற்றுக் கவனித்தார்.
பாடலின் வரியையும் அதன் மெட்டையும் அட்ஷரம் பிசகாமல் மகன் பாடிக்கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்த தந்தை , மனைவியை அழைத்து அந்த ஆச்சரியத்தைக் காண்பித்து மகிழ்ந்தார். மகனோ தன் போக்கில் பாடலை முழுமையாகப் பாடி முடித்தான்.தனது பேரபிமானத்திற்குரிய மகாகவி பாரதியின் பாடலை மகன் பாடியதால் தந்தையார் பேருவகையடைந்தார்.தனது அண்ணனைப் போல ஒரு இசைக்கலைஞனாக வருவான் என்று மனதில் நினைத்துக் கொண்டார்.
” சிந்துநதியின்மிசை நிலவினிலே ” என்ற அந்த.பாரதிபாடலைப் பாடிய அந்த குழந்தை வேறுயாருமல்ல, இந்தக்கட்டுரையாளர் தான்! இந்தப்பாடலின் வரிகளை இன்று கேட்டாலும் சொல்ல முடியும் என்று சொல்லுமளவுக்கு மனதில் பதிந்துவிட்ட பாடல் அது.
இந்த சம்பவம் சாதாரணமானது என்றாலும் தமிழ் சினிமாஇசையின் மெல்லிசை மலர்ந்து கொண்டிருந்த காலமொன்றைச் சேர்ந்த இனிய பாடல் என்பதை நினைவுறுத்தும் பொருட்டு சொல்கிறேன்.மூன்று வயது பையன் ஒருவன் பாடலின் பொருள் தெரிந்தா பாடியிருப்பான்? பாடலின் இசைதான்அதை சாத்தியமாக்கியிருக்கும் என்பதைச் சொல்லித்தெரிய வேண்டிய அவசியம் இங்கில்லை!
நமது வாழ்க்கையோட்டத்தில் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தியினரின் பாடல்கள் விதையாகி ,செழித்து வளர்ந்தது இவ்விதமே.
கடந்து போன காலங்களை நினைக்கையில் இதயத்துடன் பிணைந்த பாடல்களின் வாசம் நம் நெஞ்சங்களை நிறைக்கும். பிஞ்சுமனங்களில் வேரூன்றி, பற்றிப்படர்ந்து , நெஞ்சின் அடியாழத்தின் உள்ளுறைகளில் புதைந்த பாடல்களை நம்மால் இலகுவாக மறக்கமுடிவதில்லை.
Music and Rythm find their way in to the secret places of the Soul – என்பார் பிளேட்டோ.
கடந்து கால நினைவுகளை மீட்டிப்பார்ப்பதற்கு இசை ஒரு இலகுவான சாதனம். பழையபாடல்களைக் கேட்கும் போது எந்தெந்தப்பாடல்களைக் எங்கெல்லாம் கேட்டோம், எந்தச் சூழ்நிலையில் அவற்றைக்கேட்டோம் என்பதெல்லாம் விரல் சொடுக்கில் வந்து விழுந்துவிடுகின்றன. வாழ்வின் மகிழ்ச்சிகரமான சம்பவங்களிலும் , துக்ககரமான சம்பவங்களிலும் இசை கலந்தே இருக்கிறது.!
நினைவுகளின் ஓடையாக இசை விளங்குகிறது.இசையுடன் தான் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம்.ஒவ்வொரு பாடலும் நம்முடன் உரையாடல்களை நிகழ்த்தியே வந்துள்ளது.இசையின் முருகு இளம்வயது பருவத்தில் நம்மை ஆட்கொள்கிறது.இனிய வாத்திய இசையுடன் அதை பருகும் போது மனம் எழிலடைகிறது.உணர்ச்சி நிறைந்த இசை உள்ளத்தில் சிறு பொறியைத் தோற்றுவித்து நுண்ணறிவில் சுவாலையை ஏற்படுத்துகிறது இதனால் எழும் அறிவார்வத்திற்கு உயிர் கொடுக்கிறது.
வானலைகளில் நீந்தி ,காற்றுவெளியில் மிதக்கும் இசையலைகள் மனிதனின் காதுகளில் புகுந்து அவனோடு ரகசியம் பேசவும் , பலவித கற்பனைகளையும் ,உணர்வுகளையும் கிளர்த்துகின்றன.
காரண காரியங்கள் தெரியாமல் , காலகாலமாய் நாம் இசையைக் கேட்டு ரசித்து மகிழ்ந்திருக்கின்றோம்.பிறந்து வளர்ந்த காலம் தொட்டு இசையில் லயித்து வந்த நாம் எங்களுக்குப் பழக்கமான பாடல்களைக் கொண்டாடியும் வந்திருக்கின்றோம்.இன்பம் தரும் பல இசைவகைகளின் சுமைதாங்கியாகவும் நாம் இருக்கின்றோம்.
தமிழ் மக்கள் வாழ்வில் இரண்டறக்கலந்த பாடல்கள் என்றால் அது திரையிசைப்பாடல்களே ! ஒலிப்பதிவு செய்யப்பட்ட இப்பாடல்கள் மீண்டும், மீண்டும் கேட்க வழிவகுத்தன.
வாழையடி வாழையாய் வந்த ராகங்களில் அமைந்த பலவிதமான பாடல் வகைகள் ,அவற்றில் மெல்லியதாய் நுழைந்து , நமக்கு அறிமுகமில்லாத இசைவகைகளையும் ,வாத்தியங்களையும் இசையமைப்பாளர்கள் கலாபூர்வமாக இணைத்து தந்த பாடல்களால் நம் உணர்வுகள் கிளரப்பட்டிருக்கின்றன.
இவ்விதம் தமிழ் திரையிசைக்கு ஜீவசத்துமிக்க பாடல்களைத்தந்த முன்னோடிகளில் முதன்மையானவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள்!
மரபு வழியின் தடம்பற்றி திரையிசையின் மெல்லிசையில் பரவசமும் , புதுமையும் ,உணர்ச்சி வெளிப்பாட்டில் மிகச் சிறந்த பாடல்களையும் தந்து மிக உயர்ந்த இடத்திற்கு உயர்த்தியவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி.
பழமைக்கும் புதுமைக்கும் நிகழ்ந்த போராட்டத்தில் புதுமையின் கை ஒங்க வைத்த பெருமை இவர்களையே சேரும். படத்திற்குப் படம் இனிமையான பாடல்களைப் பொழிந்தார்கள்.
அவர்கள் தந்த பாடல்களில் தான் எத்தனை உணர்வுகள் , எத்தனை பாவங்கள்..!
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே- வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே….
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழிவண்ணமே – வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
இந்தப்பாடல் வரிகளை வாசிக்கும் போதே எத்தனை பரவசம் ஏற்படுகிறது.பாடலின் ஒலிநயம் உள்ளக்கிளர்ச்சியை ஏற்படுத்த அதனுடன் இணைந்த இசையோ நம்மை நெகிழ வைக்கிறது.
அழகுணர்ச்சியையும் ,மன எழுச்சியையும் தூண்ட நுட்பமும் ,செறிவும் ஒன்றிணைந்து கலாப்பூர்வமாக வெளிப்படும் கவிதை அதை இனிதே எடுத்துச் செல்லும் தன்னிகரில்லாத இசை.இனிமையான குரல்களில் வரும் இனிமையும் , சோகமும் கலந்த அற்புதமான தாலாட்டு.
தங்களது குடும்பநிலை , உறவுகளின் பெருமை,மற்றும் பலவிதமான நிலை என தாலாட்டு மரபின் அத்தனை அம்சங்களையும் உயர்வளித்து சொன்ன பாடல் அது!
இது போன்று கதையின் சூழலை கவிதையின் உயர்வான நடையில் பல பாடல்களில் கேட்டிருக்கின்றோம்.
வானாடும் நிலவோடு கொஞ்சும்
விண்மீன்கள் உனைக்கண்டு அஞ்சும் – எழில்
வளமூட்டும் வினை மின்னல்
உனைக்கண்டு அஞ்சும்
என்று கவிஞர் வில்லிபுத்தன் எழுதிய ” மாலாஒரு மங்கல் விளக்கு ” பாடலை நாம் உதாரணமாக இங்கே தந்தாலும் ,அந்தப்பாடல் மிக அருமையான மெட்டமைப்பைக் கொண்ட பாடல் தானெனினும் , “மலர்ந்தும் மலராத” பாடல் அளவுக்கு வெகுமக்களிடம் சென்று வெற்றியடையவில்லை என்பதே உண்மை.மிகப்பெரிய வெற்றிப்படமான பாசமலர் படத்தின் வெற்றியும் இந்தப்பாடல் அதிக புகழ்பெற்றமைக்கான காரணமாகும்.
எனினும் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையர்கள் இசையமைத்த இனிய மெட்டல்லவா அதை மக்களிடம் கொண்டு சேர்த்தது ! இது போன்ற பல இசைவார்ப்புகள் நம்மைக் கொள்ளை கொண்டு சென்றன.நெஞ்சை ஆட்சி செய்யும் வளமிக்க பாடல்கள் அவை !
Viswanathanஇனிய இசையின் வெற்றி என்பதே இது தான்! அந்த இனிய இசைக்கு என்ன வரிகளை வைத்தாலும் இசை வென்று விடும் என்பதே உண்மை.ஆனால் உயிர்த்துடிப்புமிக்க வரிகள் இணையும் போது நெஞ்சைப் பறி கொடுக்கும் ரசவாதம் பிறந்து விடுகிறது.
தமது அமரத்துவக் கானங்களால் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கூறிலும் அழகுலகைக் காட்டியதில் பெரும் பங்கு தமிழ் திரையிசையமைப்பாளர்களுக்கு உண்டு.அதில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லதகுந்த தனித்தன்மைமிக்கவர்கள் தான் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி.
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத எத்தனை வகை , வகையான, எண்ணற்ற இனிய பாடல்களால் தமிழ் இசை ரசிகர்களை இன்பத்தில் திணறடிக்க வைத்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர்.
பின்னாளில் எத்தனையோ புகழாரங்களை மெல்லிசைமன்னர்கள் பெற்றாலும் , அதில் அதியுயர் பாராட்டாக, அதே துறையில் யாரும் எட்டாத சிகரங்களைத் தொட்ட இசைஞானி இளையராஜா ,மெல்லிசைமன்னர்களின் இசை எவ்விதம் தன்னை பாதித்தது என்பதை விளக்க முனைந்தமை சிறந்த பாராட்டாக அமைந்தது
” நான் ஒரு இசைக்கலைஞனாக இந்த உலகத்தில் நடமாடிக்கொண்டிருப்பதன் முக்கியமான காரணம் அண்ணன் விஸ்வநாதன் அவர்களும் , மெல்லிசைமன்னர் ராமமூர்த்தி அவர்களுமே ! ஏனென்றால் நான் பிறந்த கிராமத்திலே இசை கற்றுக் கொள்ள விரும்பினாலும் அங்கே சொல்லிக் கொடுக்க யாருமில்லை.அந்தக் கிராமத்திலே அவர்களுடைய பாடல்கள் ஒலிக்காத நாளெல்லாம் விடியாத நாள் என்று தான் எங்கள் பொழுதுகள் கழிந்தன……உணர்வுமயமான அவர்களது நாதம் என்னுடைய நாடி , நரம்பில், இரத்தத்தில் உடம்பில் எல்லாம் ஊறிப்போனதால் தான் !
இது தான் மெல்லிசைமன்னர்கள் பெற்ற அதியுயர் பாராட்டு என்பேன்.அவர்களின் இசைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பது அவர்களது இசை, ஒரு மாபெரும் கலைஞனை உருவாக்குவதில் எவ்விதம் பங்காற்றியிருக்கிறது என்பதே!
பழைய பாடல்கள் என்றதுமே கருப்பு வெள்ளைப் படங்களும் , வானொலிப்பெட்டியும் நம் நினைவுகளிலிருந்து பிரிக்க முடியாதவையாகும்.வானொலி நம்மை தன்னுடன் இறுக அணைத்துக் கொண்ட சாதனமாகும்.இதயத்தோடு இணைந்த எத்தனையோ பாடல்களைத் தந்து உணர்வு மிகுதியில் நம்மைத் திளைக்க வைத்ததிருக்கிறது.இசையில்நம்மை தாலாட்டி வளர்த்த தாய்வீடு வானொலியே என்று சொல்லி கொள்வதற்குக் காரணமாயிருந்தவர்களில் முதன்மையானவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி
விருது பெறுவதால் மட்டும் ஒருவரின் திறமை அளவிடப்படும் இன்றைய விசித்திர சூழ்நிலையில் ,தனது திறமைக்கு கிடைக்க வேண்டிய குறிப்பிடத் தகுந்த விருதுகளும் பெறாமல் மறைந்தவர் மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
அவர் இசையமைத்த பாடல்கள் சில தேசிய அளவில் விருதுகள் பெற்றாலும் அவருக்கு அது கிடைக்கவில்லை. ஆனால் உண்மை என்னவென்றால் விருதுகளுக்கு அப்பால் நல்லிசை ரகிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டிருப்பவர் தான் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் !
தனது படைப்புக்கள் பேசப்பட வேண்டும் என்றோ , விருகள் பெற வேண்டுமென்றோ முனைப்புக்காட்டாத அவர்,மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்ற சினிமா இசை மூலம் பெரும் பணம் சம்பாதிக்க முடியும் என்று நினைத்துப்பார்க்க முடியாத காலத்து மனிதராக வாழ்ந்து மறைந்தார். ஆயினும் அந்த ஆதங்கம் அவரிடம் வெளிப்பட்டுமிருக்கிறது.”உழைக்கத் தெரிந்தது ,பிழைக்கத் தெரியவில்லை” என்பார்!
கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் இசைப்பாரம்பரியமற்ற ஒரு குடும்பத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் புதியதொரு பரிமாணத்தை நிகழ்த்திய மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதன்.
தமிழின் சகோதர மொழியான மலயாளம் தந்த ஈடு இணையற்ற இசையமைப்பாளனை தமிழ்த்திரையுலகம் தத்தெடுத்துக் கொண்டது.
அதற்கு கைமாறாக அவர் தந்த இசை,தமிழ்ப்பாடல்களை பிற மொழியினர் வியந்து பார்க்க வைத்தன.1940 களிலேயே கொடிகட்டி பறந்த ஹிந்தியின் மெல்லிசை , அதன் ஈர்ப்பால் 1950 களில் வீசிய தெலுங்கு மெல்லிசை அலை போல 1960 களில் தமிழில் வீசியடித்த மெல்லிசை வீச்சின் சொந்தக்காரர் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர்.
1952 இலிருந்து 1965 வரை ஒன்றிணைந்து இயங்கிய அவர்கள் மனது மறக்காத பல பாடல்களைத் தமிழ்மக்களுக்கு விட்டுச் சென்றார்கள்.அழகியல் நோக்கில் பல இனிமையான பாடல்களைத் தந்தவர்களின் பிரிவு பற்றிய துல்லியமான காரணிகள் யாராலும் பேசப்படவில்லை.அவர்களும் அது குறித்து பேசியதில்லை.இசை வேட்கை மிகுந்த இரு மேதைகளின் பிரிவு தமிழ் திரை இசைக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு என்பதை விட நல்லிசை ரசிகர்களுக்கு பேரிழப்பு என்பதே பொருத்தமானதாகும்.
மெல்லிசைக்கு புதுக்கட்டியங் கூறிய இரட்டையர்களின் கூட்டு குறிப்பாக இறுதி 5 ஆண்டுகளில் [1960 – 1965 ] உச்சம் பெற்றது.ஒளிவீசிக் கொண்டிருந்த நட்சத்திரம் உதிரும் போது ஒளியைப் பாய்ச்சி மறைவது போல , நல்ல பல பாடல்களை அள்ளிக் கொட்டியவர்கள் பிரிந்து சென்றனர்.
நம் வாழ்வின் நீண்ட பாதையில் அவர்களது பாடல்களுடன் நாம் பயணித்திருக்கின்றோம்.
வானொலியில் பிறந்து காற்றலைகளில் மிதந்த அவர்களது பாடல்கள் நம் நெஞ்சங்களில் கலந்து நீங்கா இடம் பிடித்திருக்கின்றன.
ஆரம்பநாளில் மெல்லிசைமன்னர் இசையமைத்த “வான் மீதிலே இன்பத் தேன்மாரி பெய்யுதே ” , “கூவாமல் கூவும் கோகிலம் ” , “தென்றலடிக்குது என்னை மயக்குது , “கண்ணில் தோன்றும் காடசி யாவும்” ,”கசக்குமா இல்லை ருசிக்குமா” போன்ற பாடல்களை நினைக்கும் போதே மனம் ஒருவித போதையில் ஆழ்கிறது.நினைவு திரையில் மறைந்த உறவுகளும் , நினைவுகளும் , கழிந்து போன நாட்களும் நம்மை வருத்தம் தந்து வருடிச் செல்லும்.மெல்லிசையில் ஒரு துலக்கத்தை அந்தக் காலத்திலேயே காண்பித்திருப்பதையும் அவரது திறமமையையும் எண்ணி வியக்கவும் வைக்கிறது .
மெல்லிசைமன்னர்கள் திரைப்படத்தில் நுழைந்து முன்னுக்கு வந்த காலத்தைக் கவனத்தில் எடுத்தல் தேவையாகிறது. கர்னாடக செவ்வியலிசையின் கட்டுக்கள் தளர்ந்து மெல்லிசையின் துளிர்கள் அரும்பிக்கொண்டிருந்த காலம் என்பதை திரையிசையை நோக்குபவர்கள் உணர்வார்கள்.மெல்லிசைக்கான முகிழ்ப்புக்கு , நாடக மரபில் வந்த மூத்த இசையமைப்பாளர்களைப்போல மரபையொட்டிய மெல்லிசையையும் ஹிந்தி திரை இசையையும் ஆதர்சமாகக் கொண்டு பாடல்களைக் கொடுக்க முனைந்தனர்.
1952 ஆம் வருடம் பணம் படத்தின் மூலம் ஒன்றிணைந்த மெல்லிசைமன்னர்களுக்கு
முன்னிருந்த சவால் என்பது , அவர்களுக்கு முன்பிருந்த இசையமைப்பாளர்களையும் , அவர்களது சமகால இசையமைப்பாளர்களையும் தாண்டிப் புதுமை செய்வதென்பதே!
மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலமும் படைப்புலகமும் : 03- T .சௌந்தர்
11/11/2016 இனியொரு... 2 COMMENTS
இளவயது சகபாடிகளும் , உத்வேகமும் ,இடர்களும் :
msvசெவ்வியல் இசை சார்ந்த பாடல்களை சிறப்பாகக் கொடுத்துக்கொண்டிருந்த தமது முன்னோடிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அல்லது அவர்களுக்கு தாங்கள் சளைத்தவர்களல்ல என்று முனைப்பு காட்டும் வகையில் செவ்வியலிசை ராகங்களில் நேர்த்தியான பாடல்கள் தந்தமை முக்கிய கவனம் பெறுகின்றன
அம்பிகாபதி படத்தில் ஜி.ராமநாதன் இசையமைத்த ” வாடா மலரே தமிழ் தேனே ” என்ற புகழபெற்ற முகாரி ராகப்பாடலுக்கு இணையாக தம்மாலும் சோகம் ததும்பும் முகாரி ராகத்தில் ” கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் ” [ சிவகங்கைச் சீமை 1959] என்ற பாடலை அமைத்துக் காண்பித்தார்கள்.
“வாடா மலரே தமிழ் தேனே “பாடல் சோக ரசம் பொழியும் ராகத்தில் காதல் மகிழ்ச்சியை வெளிப்புத்தியது புதுமையாகப் பேசப்படட காலம் என்பதை நாம் மறந்துவிடலாகாது.
இவைமட்டுமல்ல ராகங்களின் அடிப்படையில் பாடல்கள் அமைப்பதிலும் ராகங்களின் பிரயோகங்களிலும் ஆழமும் , நுண்மையும் காட்டும் வல்லமை தங்ளுக்கு உண்டு என்று காட்டித் தம்மை நிலைநிறுத்திக் காண்பித்தார்கள்.அக்காலத்தில் பெருகியிருந்த செவ்வியலிசை சார்ந்த பாடல்களைக் கொண்டு நாம்நோக்குதல் பொருத்தமாக இருக்கும்.
மெல்லிசைமன்னர்களின் முன்னோடிகளினதும் அவர்களது சமகாலத்தவர்களினதும் பாடல்களுடன் ஒப்பிடுப்பார்த்தால் புரியும்.சில எடுத்துக்காட்டுக்கள் :
எல்லாம் இன்ப மாயம் – படம்:மணமகள் [1951] – பாடியவர்கள் :பி.லீலா + எம்.எல்.வசந்தகுமாரி – இசை: சி.ஆர்.சுப்பராமன்
நீயே கதி ஈஸ்வரி – அன்னையின் ஆணை 1958 – பாடியவர் : பி.லீலா – இசை : எஸ்.எம் சுப்பைய்யாநாயுடு
வேலன் வருவாரோடி வடிவேலன் – படம்: திருமணம் [1957] – பாடியவர்கள் : எம்.எல்.வசந்தகுமாரி – இசை: எஸ்.எம் சுப்பைய்யாநாயுடு
ஸ்ரீ சரஸ்வதி மாதா ஜெயம் அருள் – படம்: ராணி லலிதாங்கி [1958] – பாடியவர்கள் :பி.லீலா + டி.பி.ராமசந்திரன் – இசை: ஜி.ராமநாதன்
தாயே உன் செயல் அல்லவோ – படம்: இரு சகோதரிகள் [1957] – பாடியவர்கள் :பி.லீலா + ML வசந்தகுமாரி – இசை: எஸ்.ராஜேஸ்வரராவ்
நெஞ்சிருக்கும்வரைக்கும் நினைவிருக்கும் – படம்: ராணிசம்யுக்தா 1962 – பாடியர்: பி.சுசீலா – இசை : கே.வீ.மகாதேவன்- ராகம் சாருகேசி
ஆடும் அழகே அழகு – படம்:ராஜ ராஜன் [1956] – பாடியவர்கள் :சூலமங்கலம் சகோதரிகள் + பி .லீலா – இசை: கே.வீ.மகாதேவன்.
இது போன்ற செவ்வியல் இசைசார்ந்த பாடல்களுக்கு மெல்லிசைமன்னர்களும் ஈடு கொடுத்து இசைத்தார்கள் என்பது முக்கியமான அம்சமாகும்.
மெல்லிசைமன்னர்களின் இசையில் வெளியான செவ்வியலிசை சார்ந்த பாடல்களுக்கு சில எடுத்துக்காட்டுகள்:
01 ஆடும் கலை எல்லாம் பருவ மங்கையர் அழகு கூறும் கலையாகுமே- படம் : தென்னாலிராமன்[ 1956 ] – பாடியவர் : பி.லீலா ] காம்போதி ராகம் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
02 கலைமங்கை உருவம் கண்டு காதல் கொண்டு – படம் :மகனே கேள் [1957] – பாடியவர்கள் : சீர்காகாழி கோவிந்தராஜன் + எம்.எல்.வசந்தகுமாரி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி -ராகம் :கல்யாணி
இரு பெரும் பாடகர்கள் “சவால்” என்று சொல்லத்தக்க வகையில் இணையில்லாமல் பாடிய பாடல்.பாலும் , தேனும் கலந்த இனிமை என்று சொல்வார்களே, அது தான் இந்தப்பாடல் என்று துணிந்து சொல்லிவிடலாம்.
பட்டுக்கோட்டையாரின் கவிநயம் மிக்க பாடல் வரிகளும் கல்யாணி ராகமும் இணைந்த அசாத்திய பாடல் !
03 ஆடாத மனம் உண்டோ நடையாலங்காரமும் – மன்னாதிமன்னன் 1960 – பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + எம்.எல்.வசந்தகுமாரி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி – ராகம் : லலிதா
03 முகத்தில் முகம் பார்க்கலாம் – தங்கப்பதுமாய் 1959 – பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + பி.லீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி ராகம் :கல்யாணி
04 அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை – பாசவலை 1956- பாடியவர் : சி.எஸ்.ஜெயராமன் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி ராகம் :கரகரப்ரியா
05 மோகனைப் புன்னகை ஏனோ – பத்தினித் தெய்வம் 1956- பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் ++ பி.சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி ராகம் :மோகனம்
06 வருகிறார் உனைத்தேடி மணவாளன் நானே என்று – பத்தினித் தெய்வம் 1956- பாடியவர்கள் : எம்.எல்.வசந்தகுமாரி + சூலமங்கலம் ராஜலட்சுமி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி ராகம் :அடானா
கற்பனையான அரசகதைகளும் சரித்திர மற்றும் புராண கதைகளும் வெள்ளப்பெருக்கென ஓடிய காலம் மாறி சமூகக்கதைகள் சார்ந்த திரைப்படங்கள் ஊக்கம் பெறத தொடங்கியது 1950 களின் இறுதியிலேயேயாயினும் அவற்றின் தொடர்ச்சி 1960 களிலும் சில இடைச் செருகலாக ஆங்காங்கே வெளிவரவும் செய்தன என்பதையும் மறுப்பதற்கில்லை.
உணர்ச்சி பாவங்களை தங்களது இசையின் உயிர் ஒட்டமாகக் கருதிய இசையமைப்பாளர்களில் மெல்லிசைமன்னர்களும் முக்கியமானவர்களாக விளங்கினர்.உணர்வின் பாவங்களை இனிய மெட்டுக்களில் சலிப்பில்லாத வகையில் உயிரோட்டமாகப் படைப்பதில் முனைந்து செயல்பட்டார்கள்.பொருத்தப்பாடான சூழ்நிலைகளில் கதாபாத்திரங்களின் மன உணர்வை இசையில் காட்டிட மரபுவழியையும், புதுமையான அணுகுமுறைகளையும் பயன்படுத்தி வெற்றியும் கண்டனர்.
தங்கப்பதுமை படத்தில் , ” வாய் திறந்து சொல்லம்மா ” என்ற பாடலில் ஒரு மாறுதலாக ,மன எழுச்சி தரும் வகையில் உணர்ச்சிக்கு கொந்தளிப்பை ,மனதை கசக்கிப்பிழியும் அவஸ்தையை வெளிப்படுத்துகிறார்கள்,
வாய் திறந்து சொல்லம்மா உன் மக்களின் கதை கேளம்மா – படம் :தங்கப்பதுமை [1959] – பாடியவர்: பி.லீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.
செம்பும் கல்லும் தெய்வமென்று
நம்புவோர்கள் பித்தரென்று
சித்தர்கள் உரைத்தமொழி மெய்தானோ?
சிற்பிகள் செதுக்கி வைத்த
சித்திரச் சிலைகளுக்குள்
தேவி வந்திருப்பதுவும் பொய்தானோ? ,,,,
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கடவுளை சீண்டும் சிந்தனை வரிகள் கொண்ட உணர்ச்சிமிக்க பாடல். தான் பாடிய பாடல்களிலேயே தனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்தப்பாடல் தான் என்று , மகத்தான பால பாடல்களைப் பாடிய பி.லீலா குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உணர்ச்சி பாவங்களை தங்களது இசையின் உயிர் ஒட்டமாகக் கருதிய இசையமைப்பாளர்களில் மெல்லிசைமன்னர்களும் முக்கியமானவர்களாக விளங்கினர்.உணர்வின் பாவங்களை இனிய மெட்டுக்களில் சலிப்பில்லாத வகையில் உயிரோட்டமாகப் படைப்பதில் முனைந்து செயல்பட்டார்கள்.பொருத்தப்பாடான சூழ்நிலைகளில் கதாபாத்திரங்களின் மன உணர்வை இசையில் காட்டிட மரபுவழியையும், புதுமையான அணுகுமுறைகளையும் பயன்படுத்தி வெற்றியும் கண்டனர்.
1950 களின் ஒரு போக்காக ” ட டா , ட டா, ட டா .டாடடா ” என்ற ஓசை பிரயோகம் பரவலாக பாடல்களில் பயன்படுத்தப்பட்டது.சில பாடல்களில் இசை கரடு முரடாகவும் இருந்தது என்பதும் ,குறிப்பாக 1950 களில் வந்த ஹிந்திப்பாடல்களின் மெட்டுக்களை நேரடியாகக் கொண்டமைந்த பாடல்களில் இத்தன்மையை நாம் காண்கிறோம்.
1950 களின் திரையின் மெல்லிசைப்போக்கை அவதானிப்பவர்கள் புதிய போக்கு ஒன்று அங்கொன்றும் , இங்கொன்றுமாகச் சில பாடல்கள் மூலம் மெதுவாக வளர்ச்சி அடைந்து வந்ததை அவதானிக்க முடியும்.
ஒருபக்கம் பழமையை உயர்த்திப்பிடித்த அதே நேரம் மறுபக்கம் புதுமையையும் ஆங்காங்கே உயர்த்திப்பிடித்து அற்புதமான பாடல்களைத் தந்து இசைரசிகர்களைக் கிறங்க வைத்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி !
அதன் சாட்சியாக சில பாடல்களை இங்கே உதாரணம் காட்டலாம்.
01 விண்ணோடும் முகிலொடும் விளையாடும் வெண்ணிலவே- படம்: புதையல் [1957] – பாடியவர்கள் :சி.எஸ்.ஜெயராமன் + பி.சுசீலா – இசை : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
02 தென்றல் உறங்கிய போதும் – படம்: பெற்ற மகனை விற்ற அன்னை [1957] – பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா + பி.சுசீலா – இசை : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
03 துள்ளி துள்ளி அலைகள் எல்லாம் – படம்: தலை கொடுத்தான் தம்பி [1957] – பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா + பி.சுசீலா – இசை : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
04 கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே – படம்: மகாதேவி [1957] – பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா + பி.சுசீலா – இசை : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
05 தங்க மோகன தாமரையே – படம்: புதையல் [1957] – பாடியவர்கள் :பி.சுசீலா – இசை : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
06 என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன் – படம்: தங்கப்பதுமை [1957] – பாடியவர்கள் :பி.சுசீலா – இசை : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
07 சின்னஞ் சிறு கண்மலர் – படம்: பதி பக்தி [1958] – பாடியவர்கள் :பி.சுசீலா – இசை : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
08 வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே – படம்: பதி பக்தி [1958 – பாடியவர்கள் :டி.எம்.சௌந்தரராஜன் – இசை : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
08 ராக் அண்ட் ரோல் – படம்: பதி பக்தி [1958 – பாடியவர்கள் :ஜெ.பி.சந்திரபாபு + வி.என்.சுந்தரம் – இசை : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
09 மழை கூட ஒருநாளில் – படம்: மாலையிடட மங்கை [1959] – பாடியவர்கள் :எம்.எஸ்.ராஜேஸ்வரி – இசை : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
09 இல்லறம் ஒன்றே நல்லறம் என்றே – படம்: மாலையிடட மங்கை [1959] – பாடியவர்கள் :பி.சுசீலா – இசை : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
10 செந்ததமிழ் தென் மொழியாள் – படம்: மாலையிடட மங்கை [1959] – பாடியவர்கள் :டி.ஆர். மகாலிங்கம் – இசை : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
11 நானன்றி யார் வருவார் படம்: மாலையிடட மங்கை [1959] – பாடியவர்கள் :டி.ஆர். மகாலிங்கம் + ஏ.பி.கோமளா – இசை : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
செவ்வியல் இசையின் இறுக்கம் தளர்ந்து ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த மெல்லிசைப் போக்கின் வேகத்தைச் சற்று அழுத்தம் கொடுத்து நகர்த்தியதுவே மெல்லிசைமன்னர்களின் பாரிய பங்களிப்பாக இருந்தமை இக்காலகடடத்தின் பங்களிப்பாக இருந்தது.
இயக்குனர் ஸ்ரீதர்
இயக்குனர் ஸ்ரீதர்
வெற்றிக்கனிகளைதட்டிப்பறிக்க விந்தைதரும் மாயாஜாலக் காடசிகளுடன் அமைந்த புராணக்கதைகள் மட்டுமல்ல சமகால சமூக வாழ்வை அழகுடன் சொன்னாலும் வெற்றியளிக்கும் என்பதை இயக்குனர் ஸ்ரீதர் கல்யாணப்பரிசு [1959] படத்தின் மூலம் எடுத்துக்காட்டியமை தமிழ் திரை வரலாற்றில் புதிய உடைப்பை உண்டாக்கியது.அப்பாடத்தின் அபார வெற்றியும் , பாடல்களின் மெல்லிசை ஓங்கிய தன்மையும் மெல்லிசைக்கான புதிய பாதையை அகலத்திறந்து விட்டது எனலாம்.
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜா புகழின் உச்சிக்கு சென்றார்கள்.ஏ.எம்.ராஜா சிறந்த பாடகர் மட்டுமல்ல சிறந்த இசையமைப்பாளர் என்ற அடையாளமும் பெற்றார்.
கல்யாணப்பரிசு படத்தில்
” வாடிக்கை மறந்ததும் ஏனோ ”
” ஆசையினாலே மனம்”
” உன்னைக்கண்டு நான் ஆட”
” துள்ளாத மனமும் துள்ளும்
” காதலிலே தோல்வியுற்றான்”
போன்ற பாடல்கள் மெல்லிசையின் உயிர்த்துடிப்புகள் மேலோங்கி நிற்கும் சாகாவரம் பெற்ற பாடல்களாக இன்றும் விளங்குகின்றன.
“வாடிக்கை மறந்ததும்” ஏனோ பாடலில் சைக்கிள் மணி ஒலியும் ,”ஆசையினாலே மனம்” பாடலில் I see ,Really ,Sorry ஆங்கில வார்த்தைகளை கல்லூரியில் படிக்கும் காதலர்கள் பாடுவதாக சமயோசிதமாக புதுமையாக ஆங்காங்கே பயன்படுத்திதுடன் ஹம்மிங்கையும் இணையாகப் பயன்படுத்திய பாடல்.
இயக்குனர் ஸ்ரீதர் , இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜா கூட்டணியில் தொடர்ந்து வெளிவந்த தேன் நிலவு [1960] ,விடிவெள்ளி [1960] மற்றும் அன்புக்கோர் அண்ணி [1960] போன்ற படங்களில் மெல்லிசைப்பாடல்கள் விட்டுவிடுதலையாகிப் பறந்து கொண்டிருந்தன.
தேன்நிலவு படத்தில்
” சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் ”
” நிலவும் மலரும் பாடுது ”
” காலையும் நீயே மாலையும் நீயே ”
” மலரே மலரே தெரியாதா ”
” ஊர் எங்கு தேடினேன் ”
” பாட்டுப் பாடவா”
விடிவெள்ளி படத்தில்
” எந்நாளும் வாழ்விலே ”
” பண்ணோடு பிறந்தது தாளம் ”
” இடை கையிரண்டில் ஆட ”
” நினைத்தால் இனிக்கும் சுப தினம் ”
” கொடுத்துப்பார் பார் பார் ”
” காரு சவாரி ஜோரு ”
” நான் வாழ்ந்ததும் உன்னாலே “
அன்புக்கோர் அண்ணி படத்தில்
” ஒருநாள் இது ஒரு நாள் உனக்கும் எனக்கும்”
ஆடிப்பெருக்கு படத்தில்
” கண்ணாலே பேசும் காதல் நிலையாகுமா ”
” பெண்களில்லாத உலகத்திலே ”
” காவேரி ஓரம் கவி சொன்ன காதல் ”
” கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தான் ”
” அன்னையின் அருளே வா வா வா ”
” புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது ”
” தனிமையிலே இனிமைக்கான முடியுமா “
உற்று நோக்கினால் எளிமையும் , இனிமையும் , குதூகலமும் ஒன்று கலந்த மெட்டுக்களில் , எளிய நடையிலமைந்த பாடல் வரியும் , மேலைத்தேய இசையைத் தொட்டு செல்லும் இயல்பு குன்றாத காதல் உணர்வும், துயரத்தில் மூழ்கடிக்கும் சோகரச இலக்கணமுமிக்க பாடல்களை மெல்லிசையின் போக்கிலமைந்திருப்பதையும் அவதானிக்கலாம்.
” ஏ.எம் ராஜா , திரையிசையில் ஒரு முன்னோடி.அவருக்கு முன்னிருந்த இசையை மாற்றி , வடநாட்டுப்பாணியை ஆரம்பித்து வெற்றியும் கண்டார்.ராஜாவின் சங்கீதம் மேன்மை , இனிமை , மென்மை ஆகிய மூன்றின் சங்கமம் ” என்பார் அவரது சமகாலப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ்.[ திரை இசை அலைகள் -1 , வாமனன் ]
இக்காலங்களில் மெல்லிசைப்பாங்கை முன்னிறுத்திய முக்கிய இசையமைப்பாளராக முன்னணிக்கு வந்துகொண்டிருந்தவர் மெல்லிசைமன்னர்களின் சமகாலத்தவரான டி.ஜி.லிங்கப்பா. 1950 களிலிருந்தே சிறந்த பல பாடல்களைத் தந்தவர் .அவர் இசையமைத்த சில பாடல்களை உற்று நோக்குவது பொருத்தமாகும்.
ஓ ,,ஜெகமத்தில் இன்பம் தான் வருவதும் எதனாலே – [மோகனசுந்தரம் 1950]
பாட்டு வேணுமா உனக்கொரு பாட்டு வேணுமா – [ மோகன சுந்தரம் 1950]
மதுமலரெல்லாம் புதுமணம் வீசும் – [கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி 1954]
தென்றலே வாராயோ இன்ப சுகம் தாராயோ – ஒரு நாள் 1956]
அமுதை பொழியும் நிலவே – [ தங்கமலை ரகசியம் 1957]
இக லோகமே இனிதாகும்- [ தங்கமலை ரகசியம் 1957]
கானா இன்பம் கனிந்ததேனோ – சபாஷ் மீனா 1958]
சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்கித்தாடி – [சபாஷ் மீனா 1958]
தென்றல் உறங்கிடக் கூடுமடி எங்கள் சிந்தை உறங்காது – [ சங்கிலித் தேவன் 1960]
படிப்புத் தேவை முன்னேற படிப்புத் தேவை – [சங்கிலித் தேவன் 1960 ]
தாமரைப் பூ குளத்திலே சாயங்கால பொழுதிலே [ முரடன் முத்து 1965]
ஏ.எம்.ராஜா ,டி.ஜி.லிங்கப்பா போன்றவர்கள் மெல்லிசைமுன்னோடிகள் என்பதையாரும் மறுத்துவிட முடியாது.துரதிஷ்டாவசமாக ஏ.எம்.ராஜா ஒதுக்கப்படடமையும் , அல்லது ஓதுங்கியமையும் , டி.லிங்கப்பா , இயக்குனர் பி.ஆர் .பந்துலுவால் கன்னடப்படங்களில் சிறப்பாகப் பயன்படுத்தப்படடமையாலும் தமிழ் சினிமா இரு மாபெரும் இசையமைப்பாளர்களின் இசையை இழந்தது.
இசையமைப்பாளர்களின் திறமை ஒரு பக்கம் இருந்தாலும் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்திய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் அளவுக்கதிகமான தலையீடும் இனிய இசை தரமுனைந்தவர்களுக்கு கொடுக்கப்படட இடையூறுகள் கசப்பாகவே இருந்தததை பலரும் பதிவு செய்திருக்கிறார்கள்.இது பற்றி இசை ஆய்வாளர் திரு.வாமனன் “திரை இசை அலைகள் ” நூலில் பின்வருமாறு எழுதுகிறார்.
ஏ.எம்.ராஜா
amr” படித்து படம் பெற்ற ராஜா , கண்டிப்பும் கட்டுப்பாடும் மிக்கவர்.தன் பணியைக் குறித்து படு சீரியஸான கண்ணோட்டம் உடையவர்.தன்னுடன் பணியாற்றுபவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைப்பார்.சினிமா உலகின் நெளிவு சுழிவுகளும் , சினிமா நபர்களிடம் பழகும் போது காட்ட வேண்டிய நீக்கு போக்குகளும் ராஜாவுக்கு கைவராத விஷயங்கள்…..தான் எதிர்பார்க்கிற சூழ்நிலை ஒரு இடத்தில் இல்லை என்றால் ஒலிப்பதிவுக் கூடத்தை விட்டு விட்டு பேசாமல் வீட்டுக்கு சென்று விடக்கூடியவர் ராஜா.”
டி.ஜி.லிங்கப்பா
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்திற்கு இசையமைப்பதில் லிங்கப்பாவுக்கு ஒரு சங்கடம் இருந்தது.பந்துலுவுக்கு மெட்டுப் போட்டுக் காட்டுவார்.ஓகே ஆகும்.நீலகண்டன் அவற்றை நிராகரிப்பார்.வேறு மெட்டுக்கள் போடச் சொல்வார். ” நீலகண்டன் சொல்ற மாதிரிச் செய்திடு ” என்று இயக்குனருக்கு வீட்டுக் கொடுத்தார் தயாரிப்பாளர் பந்துலு. ” கர்நாடக பாணியில் லைட்டா கொடுத்தா பந்துலுவுக்குப் பிடிக்கும், ஆனா நீலகண்டன் பாமரமான இசையைத் தான் கேப்பார்.
நீலகண்டனுக்கு இருந்த இன்னொரு பழக்கமும் லிங்கப்பாவிற்கு நெருடலாக இருந்திருக்கிறது.
லிங்கப்பா மெடட்டமைத்தவவுடன் திரைப்படக் கம்பனியில் வேலை பார்க்கும் டிரைவர் ,ஆபீஸ் பையன் எல்லோரையும் கூப்பிட்டு ” எப்படி இருக்கு ” என்று இசையமைப்பாளரின் முகத்திற்கு நேரேயே கேட்பாராம் நீலகண்டன்.
” நான் சங்கீத பரம்பரையியிலிருந்து வந்தவன்யா …என் ரத்தத்திலே இசை ஓடுது …….நீ யார் யாரையோ கேட்டுக்கிட்டிருக்கே .!?
இது போன்ற ஒரு சம்பவத்தை மெல்லிசைமன்னர் விஸ்வநாதன்,” நான் ஒரு ரசிகன் ” என்ற விகடன் தொடரில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை மிகுந்த மரியாதையுடன் பின்வருமாறு எழுதுகிறார்.
“…கொஞ்ச நாட்கள் கழித்து வாசன் ஸாரிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது.நானும் ராமமூர்த்தி அண்ணாவும் அவரைப் பார்க்கச் சென்றோம்.” வாருங்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களே !” என்னு வெளியில் வந்து எங்களை அவரே வரவேற்றார். உள்ளே அழைத்து உட்க்காரச் சொன்னார் பெரியவர் என்ற மரியாதையுடன் நாங்கள் நின்றுகொண்டே இருந்தோம். ” நான் உட்காரச் சொல்றேன் .. உட்காருங்க ..” என்றார் அன்போடு.நாங்கள் உட்கார்ந்தோம்.
” நீங்கள் பல படங்களுக்கு இசையமைச்சு நல்ல புகழோடு இருக்கீங்க ..என்னோட அடுத்த தயாரிப்பு ” வாழ்க்கைப்படகு “! இந்தப் படத்துக்கு உங்களைத்தான் மியூசிக் டைரக்டரா போடணும்னு எனக்கு வேண்டியவங்க, டிஸ்ரிபியூட்டர்கள் , நடிகர்கள் ,, ஏன் என் வீட்டில்கூட சொல்லிட்டாங்க… நான் உங்களை ரொம்ப இம்சை பண்ணுவேன். நான் நிறைய ஆட்களை வைச்சிருக்கேன் . இது நொள்ளை அது நொள்ளை குற்றம் சொல்லிக்கிட்டிருப்பாங்க ..” என்று வாசன் சார் சொன்னார்.எனக்கு ஒன்றுமே புரியலே.ராமமூர்த்தி அண்ணனோ தொடய்யக் கிள்ளி ” என்ன …விசு .. போயிடலாமா ?”னு கிசுகிசுத்தார்.முழுசாத்தான் கேட்டு தெரிஞ்சுக்குவோம்னு ” ஏன் சார் அப்பாடிச் சொல்றீங்க?”னு நான் கேட்ட்டேன்.
” இங்கே நிறைய ஆட்களுக்கு சம்பளம் கொடுத்து வெச்சிருக்கேன் அபிப்பிராயம் சொல்றதுக்கு .. இவங்கள்லாம் ஏதாவது சொல்லணுமென்கிறத்துக்காக சொல்வாங்க…. உங்களை ரொம்ப ” பன்ச் ” பண்ணுவாங்க ..” பன்ச் ” பண்ணுவாங்க ..இதையெல்லாம் நீங்க சகிச்சுப்பீங்களா ?னு வாசன் சார் கேடடார் .
யோசிக்கிறதுக்கு இரண்டு நிமிட டயம் கேட்டேன். ” நான் வேணும்னா வெளியே போய் இருக்கட்டுமா ?” ன்னார் அவர் ரொம்ப பெருந்தன்மையோட. நாங்க போறதா சொல்லிட்டு வெளியே வந்தோம்.
மெல்லிசைமன்னருடன் இறுதிக்காலம் வரை பணியாற்றிய கவிஞர் காமகோடியான் எம்.எஸ்.வி பற்றிய ஒருசம்பவத்தை பின்வருமாறு நினைவு கூறுவதை பாருங்கள்
காமகோடியன் : பார் மகளே பார் படத்திலே , கவ்ஞர் கண்ணதாசன் வந்தாச்சு ,ஒரு பாட்டு எழுதி முடிச்சாச்சு.எம்.எஸ்.வீ நல்லா விசில் பண்ணுவாரு,நீரோடும் வைகையிலே பாடலை விசிலிலேயே பண்ணிட்டிருக்கிராரு ..நால்லாயிருக்கேடா பல்லவி போட்டிடுவோம் என்கிறார் கண்ணதாசன் ! கவிஞரே உங்க வேலை இன்னகைக்கு முடிஞ்சுது.நாளைக்கு உட்காருவோம்.இது வந்து full song விசிலிலேயே பண்ணப்போறேன்.டேய் ,டேய் நல்லாயிருக்கிடா டுயூன் ,வார்த்தை போட்டா நல்லாயிருக்கும்.இதை புதிசா பண்ணுவோமே, நாளைக்கு சந்திப்போம்! கண்ணதாசன் எழுந்திரிச்சு போயி நேரா சிவாஜி வாகினியில் இருப்பதை அறிந்து அங்கே வாகினியிக்கு கார் எடுத்திட்டு போயி [ரெக்கார்டிங் நடப்பது ஏ.வீ. எம்மில் ] சிவாஜி சாரை கூட்டிக்கிட்டு நேரே இங்கே வந்திட்டாரு! சிவாஜி எம் எஸ் வீயை பார்த்து ” என்னமோ ஒரு டியூன் போட்டியாமே , எங்கே ஒருக்கா வாசிச்சுக் காட்டு !இவ்வளவு அருமையான டுயூனுக்கு 4 நிமிஷம் விசிலே அடிச்சா சனங்களுக்கு போய் சேருமா பாட்டு !? கவிஞர் எழுதட்டும்ன்னு சொல்லிட்டு போயிட்டாரு !
[Endrum Nammudan MSV – 16/08/2015 | SEG 01 ]
1950 களில் மெல்லிசைப்பாங்கில் தங்கள் தனித்துவத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படுத்த மெல்லிசைமன்னர்கள் பாகப்பிரிவினை பாடல்களால் தனிக்கவன பெற்றார்கள் என்று சொல்லலாம்.பதிபக்தி , தங்கப்பதுமை போன்ற படங்களில் தெறித்த மெல்லிசை உருவ அமைப்பு முழுமையாக ஹிந்தி திரை இசைக்கு நெருக்கமாக மாறி தமிழ் திரையிசையை நகர்த்தியது.
கதைகளின் நாயகர்களாக நடிப்பது மாறி தாங்கள் அடைந்த புகழால் மட்டுமல்ல, தங்கள் அரசியல் இயக்கத்தின் பின்புலத்தோடும் தமிழ் திரையின் மிகப்பெரிய நாயகர்களாக எம்.ஜி.ஆரும், சிவாஜியும் முன்னணிக்கு வந்தார்கள்.
கதைகளில் நடிப்பது என்பது மாறி இந்த நடிகர்களுக்காக செயற்கையாகக் கதைகள் தயாரிக்கப்படும் புதிய கலாச்சாரம் தமிழ் திரையில் உதயமாக இருநடிகர்களும் மூல காரணமாயினர்.
வீரதீர சாகசம் புரிபவராகவும் , தாயன்புமிக்கவராகவும் ,நேர்மை, வாய்மையாளனாகவும் ,ஏழைகளின் நண்பனாகவும் , காதலிகளால் மட்டும் காதலிக்கப்படும் கதாநாயகனாகவும் எம்.ஜி.ஆரும் , துன்பத்துயரில் தவிக்கும் கதாநாயகனாகவும் , சோகத்தை வாரிச்சுமக்கும், நாயகனாகச் சிவாஜியும் தங்களுக்கெனத் தனிப்பாதையில் வலம்வரத் தொடங்கிய காலம்.இந்நிலையில் படித்த சாதாரண மனிதர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாயகராக ஜெமினி கணேசனும் முன்னணிக்கு வந்தார் .
1950 களில் மெல்லிசைப்பாங்கில் தங்கள் தனித்துவத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படுத்த மெல்லிசைமன்னர்கள் பாகப்பிரிவினை பாடல்களால் தனிக்கவனம் பெற்றார்கள் என்று சொல்லலாம்.புதையல் , பதிபக்தி , தங்கப்பதுமை போன்ற படங்களில் தெறித்த மெல்லிசை உருவ அமைப்பு முழுமையாக ஹிந்தி திரை இசைக்கு நெருக்கமாக மாறி தமிழ் திரையிசையை நகர்த்தியது.
பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து , கவிஞர் கண்ணதாசனால் தயாரிக்கப்படட “மாலையிடட மங்கை ” பட இசையால் மெல்லிசைமன்னர்கள் பெரும் புகழ் அடைந்தார்கள்
1950 களில் வீச ஆரமபித்த மெல்லிசைகாற்றில் ஆங்காங்கே புது புது நறுமணங்களை தூவி ரசிகர்களைக் கவர்ந்து புதிய பாய்ச்சலை நிகழ்த்தியவர்கள் மெல்லிசைமன்னர்கள் என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும்.
1950 களிலேயே தலைதூக்கிய தெலுங்கு திரையின் மெல்லிசை, பத்து வருடங்கள் முன்னோக்கியதாவே இருந்தமை மெல்லிசைமன்னர்களுக்கு உத்வேகம் கொடுத்திருக்கும் என நம்பலாம். தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் தெலுங்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்து சிறந்த பாடல்களையும் தந்து கொண்டிருந்தார்கள்.தென்னிந்திய இசையுலகில் எழுந்த இசையலையின் போக்குகளையும் மெல்லிசைமன்னனர்கள் பற்றுக்கோடாகக் கொண்டிருப்பர் என்றும் கருதலாம். எனினும் தெலுங்கு திரையிசை மெல்லிசைக்கு மடைமாற்றம் பெற்ற வேகத்தில் நிகழாமல் , தமிழில் அதற்கான காலம் 1960 களில் கனியும் வரை பொறுத்திருக்க நேர்ந்தது.
தமிழ் திரையிசையின் முன்னோடிகளின் வழியில் சற்று விலகிவர முனைந்ததும் ஹிந்தித் திரைப்பட இசையின் அதிர்வலையிலிருந்து மீள முயற்சி செய்ததுடன் அதற்கு நிகராக பாடல்களை உருவாக்குவதிலும் முனைப்புக் காட்டினார்கள்.
[தொடரும்]
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 13 ] : T.சௌந்தர்
11/01/2013 இனியொரு... 6 COMMENTS
உள்ளியல்பில் மிக இனிமையைக் கொண்டதும் வட இந்திய நாட்டுப்புற இசையின் வடிவங்களிலிருந்து கிளைத்து வளர்ந்த ராகங்களில் ஒன்று தேஷ்.
ravishankarவட இந்திய ராகம் என்று அறியப்படுகின்ற இந்த ராகம் தமிழ் செவ்வியல் அரங்குகளை அலங்கரிக்கின்ற ராகங்களில் ஒன்றாகும்.தமிழ் செவ்வியல் இசை அரங்குகளில் கச்சேரி முடிவில் சிறிய பாடல்கள் இந்த ராகத்தில் பாடப்படுகின்றன. எழில் நிறைந்த மலர்கள் போன்று மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்த ஏதுவான ராகம் இந்த தேஷ்.
ஹிந்துஸ்தானி இசையில் மிக விரிவாக இந்த ராகத்தை இசைப்பார்கள்.ரவிஷங்கர் , ஹரிபிரசாத் சௌராசையா போன்ற இசை மேதைகளின் விரிவான வாசிப்பு நம்மைப் பரவசத்தில் மிதக்க வைக்கும்.
இயற்கையோடிணைந்த வாழ்வில் தாம் அனுபவித்த ஒலிகளை மூங்கிலில் பிரதி செய்து பார்த்து மகிழ்ந்தவன் ஆதி மனிதன்.குழல் என்பது ஆதி மனிதன் முதலில் கண்டுபிடித்த இசைக்கருவி என்பர்.மூங்கிலை பழங்காலத் தமிழர்கள் காட்டுப்புல் என அழைத்தனர்.அதிலிருந்து உருவான குழலை புல்லாங்குழல் என அழைத்தனர்.
” புல் என்பது அக்காலத்தில் பனை மூங்கில் முதலியவற்றை குறிப்பதாக இருந்தது.புல்லுதல் என்றால் புணர்த்தல் ,சேர்த்தல் என்று பொருள்படும்.பனம்பேழ் எனப்படும் பனைமட்டையின் நாரைக் கொண்டும், மூங்கில் ,பிரம்பு ,நாணல் முதலியன் கொண்டும் பல்வேறு வகையான பயனுள்ள பொருட்களை இவர்கள் பிணைத்து உருவாக்க வல்லவர்கலாயிருந்தனர்.மண்பாண்டங்கள் செய்வதிலும் இவர்கள் தேர்ச்சி
பெற்றிருந்தனர்.
பாண் என்ற சொல்லுக்கும் பாண்டம் என்பதற்கும் நெருங்கிய நேரடித் தொடர்பு உண்டு.” – என்பார் பேராசிரியர் மருதமுத்து
முல்லை நில மக்கள் கண்டுபிடித்த ஆதி இசைக் கருவி புல்லாங்குழல்.புலையர் என்பதும் புல் என்பதிலிருந்து வந்ததென்பர்.அவர்கள் தான் ஆதிகால அந்தணர்கள் அதுமட்டுமல்ல புலையர் பண்பாட்டின் உயர் பிரதிநிதிகளே பாணர், பறையர் என்கிறார் பேராசிரியர் மருதமுத்து
சிலப்பதிகாரத்தில் பிரதேசவாரியாக தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளையும் ,அவர்கள் பின்பற்றி வந்த கலைகளையும் , வழிபாட்டு முறைகளையும் கதையின் போக்கில் விவரித்துச் செல்கிறார் இளங்கோவடிகள்.வெவ்வேறு நிலங்களுக்குரிய கலைவடிவங்க்ளாக அமைந்த கூத்து வகைகளை வேட்டுவரி , ஆச்சியர் குரவை , குன்றக்குரவை போன்ற பாடல்களில் விரிவாகப் பாடுகிறார்.
வேட்டுவரி என்பது பாலை நில மக்களது வழி பாட்டையும் ,ஆச்சியர்குரவை என்பது முல்லை நில மக்களது கலைகளையும் , வழிபாட்டையும் குறிக்கிறது.
bansuriமுல்லை நில மக்களான இடையர்கள் ஆடிய கூத்தை ஆச்சியர்குரவையில் பாடுகிறார். இடையர்கள் குறிஞ்சி நில மக்களை விட சற்று நாகரீகமானவர்கள் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.இடையர்களின் குலதெய்வம் கண்ணன், திருமால்.தமிழில் கண்ணன் பற்றிய பாடல்கள் இனிமைமிக்க இந்த தேஷ் ராகத்திலேயே பெரும்பாலும் பாடபட்டுவருகின்றன.
” மாடுகள் மேயத்திடும் கண்ணா ” – என்ற அருமையான பாடலை இந்த ராகத்தில் தனது இசை மேடைகளில் பாடிப் பிரபலப்படுத்தியவர் பெரும் கலைஞர் மதுரை சோமு அவர்கள்.
மக்களின் இதயங்களைக் கவரும் இந்த ராகம் மொழி எல்லைகளை எல்லாம் கடந்து இந்தியா எங்கிலும் ஒலிக்கும் ராகமாக விளங்குகின்றது.தேஷ் ராகம் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும் குறிப்பிடத் தகுந்த பங்கை ஆற்றியிருக்கிறது.
இனம், மதம் ,மொழி, சாதி ரீதியாகப் பிளவுண்டு கிடந்த இந்தியாவை அன்னியரிடமிருந்து மீட்கப் புறப்பட்ட தேசிய இயக்கத்த்தினர் தேசிய எழுச்சியை இந்து மத சார்பான எழுச்சியாக மாற்ற முனைந்து கொண்டிருந்தனர்.காங்கிரசு இயக்கத்தினர் பாரத தேசத்தை பாரதமாதவாக மாற்றினார்கள்.
சுதந்திர உணர்வு தளைத்த இந்தக் காலகட்டத்தில் பிறந்தவன் புதுமைக்கவி பாரதி.அதன் எதிரொலி பாரதியின் குரலாக ” வந்தேமாதரம் என்போம் ” என்று தமிழகத்தில் ஒலித்தது.அதுமட்டுமா ?
“வந்தே மாதரம் என்று வணங்கியபின்
மாயத்தை வணங்கு வாரோ?
வந்தே மாதரம் ஒன்றே தாரகம்”…
“வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்றும் கொள்வாரோ ..”
என்றும் பாரதி பாடினான்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய “ஆனந்தம் மடம்” [ 1882 ] நாவலில் ” வந்தே மாதரம் ” என்ற பாடல் தேடி எடுக்கப்பட்டு , புதிய இந்திய தேசிய கீதமாக இசையைக்கப்பட்டு இந்தியா எங்கணும் பரப்பபட்டது. “ஆனந்தம் மடம்” என்ற நாவல் முஸ்லீம் மக்களுக்கு எதிரான கருத்தைக் கொண்ட கதை என்பது குறிப்பிடத்தக்கது.வந்தே மாதரம் என்றால் தாய்க்கு
வணக்கம் என்பதாகும்.தாயை இந்துத்துவவாதிகள் ” காளி , துர்க்கை ” என அர்த்தம் கொண்டனர்.அதைக் கவர்ச்சிகரமாக பிரச்சாரமும் செய்தனர்.
இந்துத்துவவாதிகள் இந்தப் பாடலை தேசீய கீதம்மாக்க முயன்று தோற்றுப்போயினர்.ஆயினும் அப்படியான ஒரு சிந்தனையை தொடர்ந்தும் திட்டமிட்டுப் பரப்பினார்கள்.
இன்றும் நவீன வடிவங்களில் அது தொடர்கின்றது.”வண்டே மாதரம் ” ரகுமானின் டிஸ்கோ தேசிய கீதமாகவும் வந்ததை நினைவு கொள்ளலாம்.
இந்த தேஷ் ராகத்தை மக்கள் ஒரு தேசிய ராகமாக உணர வைத்தார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது தேஷ் ராகத்தின் இனிமை , இப்படியான ஒரு பொதுமைப்பண்பைத் தரக்கூடியது என்பதும் உண்மையாகும்.
இந்தியாவில் 1902 ம ஆண்டு முதல் இசைத் தட்டு வெளியானது.அது அடைந்த புகழைத் தொடர்ந்து பல இசைத்தட்டுக்கள் வெளியாகி புகழ் பெற்றன.1908 இல் வெளியான “Dancing Girl of the Calcutta ” என்கிற இசைத்தட்டில் இடம் பெற்ற , மிகவும் புகழ் பெற்ற பாடல் ஒன்று தேஷ் ராகத்தில் அமைந்தது.அந்த இசைத்தட்டில் பாடியிருந்தவர் Achchan Bai என்ற இளம் பாடகி.விற்ப்பனையிலும் சாதனை படைத்தது.தேஷ் ராகம் அன்றே மக்கள் மத்தியில்
செல்வாக்கு பெற்றிருந்ததை இதன் மூலம் நாம் அறியலாம்.
ravindranath-tagoreதாகூர் எழுதிய ஷ்யாமா [ Shayama ] என்ற நாடகத்தில் இந்த ராகத்தைப் பிரதானமான ராகமாகப் பயன்படுத்தியிருப்பார்.சித்தார் இசைமேதை ரவி ஷங்கருக்கு மிகவும் பிடித்தமான ராகங்களில் இதுவும் ஒன்று.
வட இந்திய ராகமான சோரத் [ Sorath ] என்ற ராகத்திலிருந்து பிறந்து இந்த தேஷ் என்பர்.
ரவிசங்கர் இசையமைத்த ஆங்கிலத் திரைப்படமான காந்தி [1982 ] படத்தில் ஒரு முக்கியமான காட்சிக்கு இந்த அழகான ராகத்தைப் பயன்படுத்தினார்.அந்தப் படத்தில் ஒரு காட்சி:
1915 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவிலிருந்து இந்திய வரும் காந்தி காங்கிரசில் இணைகிறார்.இந்தியாவின் பிற பிரதேசங்களை அறியாத காந்தி இந்தியாவின் பல பாகங்களுக்கும் பயணம் மேற்கொள்ள “அறிவுரை “வழங்கப்படுகிறது.
” இந்தியா எனக்கு ஒரு அந்நிய நாடு ” என்கிறார் காந்தி
” இனிமேல் நான் அமைதியாக சாவேன்.இந்தியாவின் பெருமையைக் காப்பாற்று ” என்று திலகர் அறிவுரை கூறுகின்றார்.
அந்தக் காட்சியிலிருந்து ,காந்தி ரயிலில் பயணமாகும் காட்சி தொடங்குகிறது.இந்தியாவின் பல்வேறு மாநிலங் களூடாக , கிராமங்கள் ,நகரங்கள், மற்றும் இந்தியாவின் பல்வேறு நிலக் காட்சிகளை ஊடறுத்து ரயில் ஒடுகிறது.
ரயில் ஓடம் அந்த நான்கு நிமிடக் காட்சியில் தேஷ் ராகத்தில் எளிமையும் , இனிமையும் , உருக்கமும் நிறைந்த அருமையான் பின்னணி இசையை ரவிசங்கர் அமைத்திருந்தார்.அதனூடே காந்தியின் கவலை தோய்ந்த மற்றும் பல்வேறு உணர்வுகளையும் துல்லியம்காகக் காண்பிக்கப்படுகிறது. அந்தக் காட்சிக்கு இந்திய வாத்தியங்களான சாரங்கி , சித்தார் , தபேலா போன்றவற்றை வைத்தே உள்ளக் கிளர்ச்சி
ஊட்டக் கூடிய இசையை அமைத்தது வியக்கத் தக்கது.
அந்த இசை மூலம் தேஷ் ராகம் தேசிய ஒருமைப்பாட்டிற்க்குரிய ராகம் என நம் இதயங்களில் ஓட்ட வைக்கின்றார்.
சத்யஜிரேயின் புகழ் பெற்ற ” பாதர் பாஞ்சாலி ” திரைப்படத்தில் சிறுமி துர்க்காவும் , அவள் தம்பி அப்புவும் கன மழையில் நனையும் அழகான காட்சியிலும் தேஷ் ராகம் பின்னணி இசையாக ரவிசங்கரால் அமைக்கப்பட்டது.காலங் காலமாக நமது உணர்வுகளின் வழியே வந்த இசைச் சிறப்புக்களை பயன் படுத்திக்கொண்டார் ரவிசங்கர் என்று சொல்லத் தோன்றுகிறது.
satyajit-rayதமிழ் செவ்வியல் இசையில் மிகப்பெரிய அளவில் இந்த ராகம் பயன்படுத்தப்படாவிட்டாலும் தமிழ் திரை இசையில் இந்த ராகம் பரவலாகப் பெரும்பான்மையான இசையமைப்பாளர்களாலும் பயன்படுத்தப்பட்டே வந்துளமை இந்த ராகத்தின் சிறப்பை உணர்த்தும்.தமிழ் படங்கள் மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மொழிப்படங்களிலும் இந்த ராகம் அதிகளவில் பயன்பட்டே வைத்துள்ளது.
தமிழ் திரையில் வெளிவந்த தேஷ் ராகப் பாடல்களை பார்ப்போம்.
01 பிரேமையில் யாவம் மறந்தோமே – படம்: சாவித்திரி 1940 – G .N . பாலசுப்ரமணியம் + M.S. சுப்புலட்சுமி – இசை:
கர்னாடக இசை உலகில் புகழ் பெற்ற இரு பெரும் கலைஞர்களான ஜி.என்.பாலசுப்பிரமணியம் , எம்.எஸ்.சுப்புலட்சுமி இணைந்து பாடிய காதல் பாடல்.ராகத்தின் உயிர் துடிப்பான மென்மையை அழகாக வெளிப்படுத்தும் பாடலானாலும் ,ஆங்காங்கே ரீங்காரமிடும் சங்கதிகளை வைத்து மென்மையாக அழகு படுத்திய விதம் இன்று ரசிக்கத் தகுந்த பாடலாகவே இருக்கின்றது.
02 நறுமண மிகு மலரே – படம்: கச்சதேவயானி 1941 – பாடியவர்:டி.ஆர்.ராஜகுமாரி
தேஷ் ராகத்தில் கிடைக்கின்ற மிகப் பழைய பாடல்களில் ஒன்று இந்தப் பாடல்.பாடி நடிக்கும் பரம்பரையில் வந்த நடிகை ராஜகுமாரி பாடிய பாடல். குறிப்பிட்ட காலப்பகுதியை பிரதிபலிக்கும் இசை.காலங்கள் பல கடந்தாலும் தேஷ் ராகத்தின் இனிமையை நுகரலாம்.
03 ஓம் நமச்சிவாய என – படம்:பூம்பாவை 1944 – பாடியவர்: கே.ஆர்.ராமசாமி – இசை: எஸ்.ராஜேஸ்வரராவ்
” நடிப்பிசைப்புலவர் ” என்று அழைக்கப்பட்ட , புகழ் பெற்ற பாடகரும் ,நடிகருமான கே.ஆர்.ராமசாமி தனித்தன்மையுட பாடிய பாடல்.தேஷ் ராகம் கன கச்சித மாகப் பாடப்படுள்ளது
04 லீலைகள் புரிவான் – படம்: மீரா 1945 – M.S. சுப்புலட்சுமி – இசை:
05 இந்த உலகில் இருக்கும் மனிதரில் எழில் உடையோன் தமிழன் – படம்: கஞ்சன் 1947 – M .M .மாரியப்பா – இசை :
தமிழரின் பெருமை சொல்லும் பாடல்.தேஷ் ராகத்தில் அருமையாக ஆரம்பிக்கும் பாடல் ராக மாலிகையாக முடிவடையும். அந்தக் காலத்த்தில் புகழ் பெற்ற பாடகராக விளங்கியவர எம்.எம்.மாரியப்பா. தமிழ் சினிமாவின் முதல் பின்னணி பாடகர் என்று பெயர் பெற்றவர்.இவரின் ஒன்றுவிட்ட சகோதரரே திருச்சி லோகநாதன்.எம்.ஜி.ஆர் நடித்த மருதநாட்டு இளவரசி படத்தில் இவரது பாடல்களை கேட்கலாம்.
06 திருவடி மலராலே – படம்:பிரபாவதி 1950 – பி.ஏ .பெரியநாயகி – இசை :
கிருஷ்ணனைப் பற்றிய பாடல்.1940, 50, களில் புகழ் பெற்று விளங்கிய P .A .பெரியநாயகி பாடிய மிகச் சிறிய பாடல்.உச்சஸ்தாயியிலும் பாடும் வல்லமமை பெற்றவர் அவர்.இந்த பாடலில் தேஷ் ராகத்தின் இனிமையை ரசிக்கலாம்.சங்கதிகளை அனாயாசமாகப் பாடக் கூடிய பாடகி பெரியநாயகி.
07 துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ – படம்: ஓர் இரவு 1951 – v . J .வர்மா + M .S . ராஜேஸ்வரி – இசை: R .சுதர்சனம் – எழுதியவர் பாரதிதாசன்
பாரதிதாசன் எழுதிய இந்தப் பாடலுக்கு அற்ப்புதமான இந்த மெட்டை அமைத்தவர் இசையறிஞர் எம்.எம்.தண்டபாணி தேசிகர்.அவர் தனது இசையரங்குகளில் பாடி புகழ் பெற வைத்த பாடல்.இந்தப்பாடலின் இனிமை மிக்க மெட்டமைப்பு திரையிலும் ஒலித்தது.
இந்த பாடலுக்குப் பொருத்தமான மெட்டை இரண்டு வருடங்களாக சிந்தித்து தெரிவு செய்ததாக தேசிகர் கூறியிருக்கின்றார்.இந்தப் பாடலின் உணர்வுக்கு தேஷ் ராகமே சிறப்பு என்பது அவரது கருத்தாகும்.பாரதிதாசன் பாடல்களில் மிகவும் புகழ் பெற்ற பாடல் இது என்ற கருத்து மிகையானதல்ல.ஆயினும் திரைப்படத்தில் பயன் படுத்தப்பட்டதால் R .சுதர்சனம் இசையமைத்த பாடல் என்றே பலரும்
எண்ணிக்கொண்டிருக்கின்றோம்.எது எப்படியோ நல்ல பாடல் ஒன்று மக்கள் மத்தியில் சென்றடைந்திருக்கின்றது.
08 மாயச் சிரிப்பினில் இனி மயங்குவேனோ – படம்: பாரிஜாதம் 1950 – T .V .ரத்தினம் – இசை: C .R . சுப்பராமன்
மெல்லிசையின் முன்னோடி என்று சொல்லப்படுகின்ற C.R.சுப்பராமன் , செவ்வியல் இசையின் அடிப்படையில் இசையமைப்பதிலும் கை தேர்ந்தவர் என பல பாடல்களில் நிரூபித்திருக்கின்றார்.தேஷ் ராகத்தில் சங்கதிகளை சுத்தமாக தந்தாலும் மெல்லிசையின் தன்மையையும் காட்டும் பாடல்.1950 களில் புகழ் பெற்ற T.V.ரத்தினம் அதனக்கே உரித்தான கம்பீரத்துடன் பாடிய பாடல்.
09 சுட்டும் விழி சுடர் தான் கண்ணம்மா – படம்:சௌதாமினி 1951 – பாடியவர்: M .L .வசந்தகுமாரி – இசை: S .V . வெங்கட்ராமன்
இசைக்குயில் எம்.எல் வசந்தகுமாரி பாடிய ஆரம்பகால பாடல்களில் ஒன்று.பாரதியின் புகழ் பெற்ற பாடலை மிக மென்மையாக தனக்கே உரிய முறையில் பாடிய பாடல்.இந்த பாடலை பல்வேறு ராகங்களிலும் பல பாடகர்கள் பாடினாலும் தேஷ் ராகத்திலும் இன்மையாக ஒலிக்கின்ற பாடல்.
10 என் மனம் கவர்ந்த – படம்:லாவண்யா 1951- பாடியவர்: பி.ஏ .பெரியநாயகி – இசை: S .V . வெங்கட்ராமன்
11 கொஞ்சு மொழி சொல்லும் பைங்கிளியே – படம்: பராசக்தி 1952 – A .P .கோமளா – இசை: R .சுதர்சனம்
R .சுதர்சனம் அவர்களின் இனிய இசையில் உருவான பராசக்தி திரைப்படத்தில் வெளிவந்த தேஷ் ராகத்தில் அமைந்த தாலாட்டுப்பாடல்.தங்கள் உறவுகளை போற்றுவதும் , குறிப்பாக தங்கள் சகோதரர்களை ,அவர்களின் பெருமைகளை தாலாட்டில் பாடுவது தமிழர்மரபு.சமூக நிலை சார்ந்தும் பாடல்கள் அமையும்.தாலாட்டு மரபில் நின்று சகோதரர்களின் பெருமையை தனது குழந்தைக்கு கூறும் பாடல் இது. உறவின்
நெகிழ்ச்சியை கிளர்ச்சி தரும் வகையில் தந்த பாடல்.
மாணிக்கப்பாலாடை – பச்சை
மாமணி தொட்டிலுடன்
வெள்ளை யானையும் வாகனமாய் – சின்ன
மாமன தருவார் சீதனமாய்
என்றும்
வெள்ளியிணினால் செய்த ஏட்டில் – நல்ல
வைர எழுத்தாணி கொண்டு
தெள்ளு தமிழ் பாடம் எழுத – உன்னை
பள்ளியில் சேர்த்திட வருவார் – மாமன்
அள்ளி அணைத்திட வருவார்.
கண்ணே கண் மணியே
கண் உறங்காயோ ..
தமிழ் செவ்வியல் இசையில் தாலாட்டுகென்று வகைப்படுத்தப்பட்ட ராகங்களிலிருந்து விலகி புதுமையாக் தேஷ் ராகத்தில் தந்து களிப்புற வைத்த பாடல்.
12 நிலவே நிலவே ஆட வா – படம்: சொர்க்கவாசல் 1954 – பாடியவர்: கே.ஆர்.ராமசாமி – இசை: C .R . சுப்பராமன் + விஸ்வநாதன் ராமமூர்த்தி
பொங்கிப் பெருகி வரும் இனிய மெட்டுக்களில் பாடல்களைத் தந்த சுப்பராமன் இசையமைத்து முடிக்காமல் விட்ட இந்த படத்தினை நிறைவு செய்தவர்கள் மெல்லிசைமன்னர்கள்.பாடல் அமைக்கப்பட்ட இயல்பான இனிமையில் நெஞ்சை பறிகொடுக்க வைக்கின்ற பாடல்.பாடகர்களும் மிக இனிமையாக தேஷ் ராகத்தின் இனிமையில் இரண்டறக் கலந்து பாடி உயிர் தந்திருகின்றனர்.நிலவு பற்றிய அழகான பாடல்.
13 அன்பே நம் தெய்வம் – நீதிபதி 1955 – பாடியவர்: டி வீ .ரத்தினம் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
மெல்லிசைமன்னர்களின் ஆரம்பகாலப் பாடல் இது.தனித் தன்மையும் , ஆற்றலும் சிறப்பான குரல் வளமும் மிக்க பாடகி டி.வீ. ரத்தினம் பாடிய பாடல்.தடிப்பான பெண் குரல்களில் இனிமையும் தரவல்ல தனித் தன்மை காட்டக் கூடிய பல குரல்கள் 1950 களில் ஒலித்தன.சங்கதிகளைப் பாடுவதில் அசாத்திய திறமை கொண்ட பாடகிகளில் டி.வீ. ரத்தினம் முதன்மையானவர்.அழகான அதிர்வுகளை வழங்கும் குரலில்
இந்தப்பாடல் சிறப்பு பெற்று விளங்குகிறது.பாடல் தேஷ் ராகத்தில் ஆரம்பித்தாலும் சாரங்கா ராகத்தின் கலப்பாலும் இனிமை பெறுகிறது.
14 எந்தன் காதல் கனவு – படம்:கல்யாணம் செய்துக்கோ 1955 – ஜிக்கி – இசை:ரமணிகரன்
சோகப்பாடலாக அமைக்கப்பட்ட இந்தப் பாடலிலும் தேஷ் ராகத்தின் இனிமையை நாம் அனுபவிக்கலாம்.தேஷ் ராகத்தை உச்சாடனம் செய்வது போன்று இசைக்குப் பொருத்தமாக பாடல் வரிகளை அமைத்திருப்பதுவே இப்பாடலின் சிறப்பு.இந்த இசையமைப்பாளர் வேறு படங்களுக்கு இசையமைக்கவில்லை.
15 பொன்னே புது மலரே பொங்கி வரும் காவிரியே – படம்: நல்லதங்காள் – பாடியவர் :T.M. சௌந்தரராஜன் – இசை ஜி.ராமநாதன்.
காலச் சக்கரம் சுழன்று பின்னோக்கிய நினைவுகளை , வாழ்வின் வசந்தமாம் இளமை நினைவுகளை மீட்டும் பாடல்.காலச் சக்கரத்தில் உருண்டோடிப் போன உறவின் பிணைப்பை , பாசத்தின் பண்பை எழுச்சியாகவும் , அதே நேரம் உருக்கமாகவும் பின்னிப் பிணைத்து இசைமேதை ஜி.ராமநாதன் கட்டி எழுப்பிய இசைக் கோபுரத்தில் கொடி நாட்டப்பட்டது போல உச்சியில் பட்டொளி வீசி நிற்கின்ற
பாடல்.இளம்சௌந்தரராஜனின் குரலில் ரீங்காரமிடும் பாடல்.
என்னுடைய வயதிற்கு முந்தைய காலத்து ஜி.ராமனாதனின் பாடல்களில் “பைத்தியம்” பிடித்து திரிந்த காலங்களில் ரசித்த எத்தனையோ பாடல்களில் ஒன்று.
அந்த நாள் போனதம்மா
ஆனந்தம் போனதம்மா
என்று பாடல் உச்சிக்கு போகும் போது ஜி.ராம்னாதானா சௌந்தரராஜனா கேட்க வைக்கின்ற பாடல்.இந்த வரிகளைக் கேட்கும் போது உடலில் நீரின் அலை காவேரி வெள்ளம் போல் பொங்கி நிலை குலைய வைத்து விடும்.இசையமைத்த முறை அப்படி என்று தான் சொல்ல முடியும்.பாடல் என்றால் இப்படி இருக்க வேண்டும்.தேஷ் ராகத்தில் நம்மை நிலை குலைய வைக்கின்ற பாடல்.
16 ஆவி ததும்பும் – படம்:மறுமலர்ச்சி 1956 – பாடியவர்: பி.லீலா – இசை:
17 பொன் மேனி காட்டி என்னை – நானே ராஜா 1956 – பாடியவர்: ஜிக்கி – இசை: T.R .ராமநாதன்
துடிப்பான குரல் கொண்ட ஜிக்கி பாடிய துள்ளிசைப் பாடல் வகையைச் சேர்ந்தது இந்தப்பாடல்.தேஷ் ராகத்தின் ஆளுமையை இதமான தாளக் கட்டில் புது புனைவுக் கோலத்தில் வெளிப்படுத்தும் பாடல். ஒரு சில் படங்களுக்கு இசையமைத்தாலும் சிற்ப்பான பாடல்களை தந்த மற்றும் ஒரு ராமநாதன் தந்த இனிமையான பாடல்.
18 அவர்க்கும் எனக்கும் உறவு காட்டி – மதுரை வீரன் 1956 – பாடியவர்:P .பானுமதி – இசை:ஜி.ராமநாதன்
1950 களின் மத்தியில் வெளிவந்த சிறந்த பாடல்களில் ஒன்று இந்தப்பாடல்.உருக்கமான காட்சியில் ஒலிக்கும் இந்த பாடல் எல்லோரையும் ஈர்க்கும் சக்தி கொண்டது.ஜி.ராமநாதனின் இனிய இசை தேஷ் ராகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது என்று சொல்லலாம்.பானுமதி அருமையாகப் பாடிய பாடல்.
19 உனக்கும் எனக்கும் உறவு காட்டி உலகம் சொன்னது கதையா – படம்: – பாடியவர்:ஜிக்கி – இசை:ஜி.ராமநாதன்.
ஜி.ராமநாதன் தனது இசையில் வெற்றி பெற்ற சில இனிய பாடல்களை வேறு சில படத்திலும் பயன் படுத்தியிருக்கின்றார். அந்த வகையில் சொல்லக்கூடிய பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று.அதே மெட்டில் ஜி.ராமனாதனின் அபிமானப் பாடகியாக விளங்கிய ஜிக்கியும் மிக உருக்கமாகப் பாடிய பாடல்.
20 நிலை தன்னை அறியவே – படம்: வெற்றி வீரன் 1956 – பாடியவர்:S .C .கிருஷ்ணன் + P .சுசீலா இசை:
நகைச்சுவைப் பாடல்களையும் , கிராமியப் பாடல்களையும் அற்ப்புதமாகப் பாடக் கூடிய மேதகு ஞானம் கொண்ட எஸ்.சி. கிருஷ்ணன் பி.சுசீலாவுடன் இணைந்து பாடிய தேஷ் ராகப் பாடல்.இந்தப்பாடலும் அந்த வகைப் பாடலே.
எடுத்த எடுப்பிலேயே கிராமிய வாசத்தை தனது குரலில் காண்பிக்கும் ஆற்றல் பெற்ற பாடகர் கிருஷ்ணன் , பெரும்பாலும் நடிகர் தங்கவேலுக்கு ” அத்தானும் நான் தானே ” போன்ற சிறந்த நகைச்சுவைப் பாடல்களைப் பாடியவர் எஸ்.சி. கிருஷ்ணன்.இவரை அதிகம் பயன்படுத்தி வெற்றி கண்டவர் இசை மேதை ஜி.ராமநாதன்.
21 முரளி தர ஹரே மோகனம் கிருஷ்ணா – படம்: பிரேம பாசம் 1956 – பாடியவர்: பி.லீலா – இசை: S.ராஜேஸ்வரராவ்
பொதுவாக கண்ணன் , கிருஷ்ணன் பற்றிய பாடல்களுக்குப் பொருத்தமான ராகம் இந்த தேஷ் என்பது போல ஏராளமான பாடல்கள் இந்த ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன.எப்படிப்பட்ட பாடல்கள் என்றாலும் சிறப்பாகப்பாடக் கூடிய பி.லீலா பாடிய கனிவான பாடல்.
22 வரவேணும் வரவேணும் – படம்:தங்கமலை ரகசியம் 1957 – பாடியவர்: ஏ.பி.கோமளா + ஜிக்கி குழுவினர் – இசை: T G .லிங்கப்பா
பொதுவாக மன்னனை வாழ்த்த மோகனராகத்தை பயன் படுத்துவது வழமையாக இருந்த சினிமாவில் , சற்று மாறுதலாக இனிமை நிறைந்த தேஷ் ராகத்தில் அமைத்து மன்னனை மகிழ்விக்கும் பொலிவு தரும் பாடல்.
23 இதயவானிலே உதயமானது – படம்: கற்ப்புக்கரசி 1957 – பாடியவர்கள்: சௌந்தர்ராஜன் + ஜிக்கி – இசை:ஜி.ராமநாதன்
மீண்டும் ஜி.ராமநாதன் தேஷ் ராகத்தில் அசத்திய பாடல்.சௌந்தர்ராஜன் , ஜிக்கி என்ற நிகரில்லாத ஜோடிக் குரலில் ஒலித்த இனிமையான பாடல்களில் ஒன்று.இருவரையும் வைத்து பல பாடல்களைப் பாட வைத்தவர்களில் ஜி.ராமநாதன் முதன்மையானவர்.
மீண்டும் “உச்சஸ்தாயியில் இனிமை படைத்தல் “என்ற தாரக மந்திரம் கொண்ட ராமநாதன் பாடல்.ராக பிரயோகங்களில் மயக்கும் மெட்டுக்களை போடுவதும் , ராகத்தின் இனிமை கெடாமல் துள்ளும் தாளத்தில் அவற்றை அமர்த்துவதும் ராமனாதனின் சிறப்பாகும்.குறிப்பாக அவருடைய பாடல்களில் தபேலா சிறப்பான இனிமை தரும்.
24 இல்லை இல்லை என்று சொல்லுவார் – படம்:காத்தவராயன் 1958 – பாடியவர்:பி.லீலா – இசை:ஜி.ராமநாதன்.
நாட்டுப்புற தாள அமைப்பில் இனிய ராகங்களை அள்ளி வீசிய ராமநாதனின் இனிய பாடல்.
25 ஆளப்பிறந்த என் கண்மணியே – படம் :உத்தமபுத்திரன் 1958 – பாடியவர்கள்:ஆர்.பாலசரஸ்வதி தேவி + ஏ.பி.கோமளா – இசை :ஜி.ராமநாதன்
தமிழ் ராகங்களின் உயிர்ப்பை கார்முகில் பொழியும் மழையாய் கொட்டி இசைக்கடலை தன ஞானத்தால் நிறைத்தவர் இசைமேதை ஜி.ராமநாதன்.அவர் தந்த ஈடு இணையற்ற பாடல் இந்தப் பாடல் என்று சொல்லுவேன்.
தாலாட்டில் தாய் தனது பிள்ளையின் பெருமையையும் , தனது குடும்பத்தின் பெருமையையும் பாடலாகப் பாடி மகிழ்வாள்.தங்கள் குடும்பத்தை, தங்கள் தொழிலை சிறப்பு செய்தும் பாடுவர்.
இந்தப்பாடலில் நாட்டின் அரசியும் , ஏழைப்பெண் ஒருவரும் ஒரே ராகத்தில் பாடுவதாக அமைக்கப்பட்ட பாடல்.தேஷ் ராகத்தின் இனிமையை முழுமையாக அனுபவிக்கும் விதத்தில் இசையமைப்பும், பாடிய விதமும் அமைந்திருக்கிறது.பாடிய ஆர்.பாலசரஸ்வதி தேவியின் தாய்மை நிறைந்த குரலும் , கோமளாவின் கம்பீரமான குரலும் பாடலுக்கு பொருத்தமாய் அமைந்துவிட்டது.தேஷ் ராகத்தின் இனிமையை இந்தப்
பாடலில் கேட்டு மகிழலாம்.ஒவ்வொரு இசை ரசிகனும் கேட்க வேண்டிய பாடல்.
25 சேவை செய்வதே ஆனந்தம் – படம்:மகாதேவி 1957 – பாடியவர்:T .M .சௌந்தரர்ராஜன் + T .M .ராஜேஸ்வரி – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி
மெல்லிசைமன்னர்களின் மிக இனிமையான காதல் பாடல்.பாடலின் ஆரம்பமே இந்த ராகத்தின் எல்லையற்ற இனிமையை தருவதாய் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.கனிவும் இனிமையும் நிரம்பிய பாடல்.தேஷ் ராகத்தின் இனிய ஒலியலைகளில் ஆரம்பிக்கும் பாடல் , கானடா ராகத்தில் இன்பம் தந்து நிறைவுறுகிறது.T.M.சௌந்தரராஜன் + M.S.ராஜேஸ்வரி குரலில் வந்த அழகான பாடல்.தேஷ் ராகத்துடன் கானடா
ராகத்தை இணைத்த விதம் நெஞ்சை அள்ளும் விதமாய் அமைந்திருக்கும்.
26 தாரா அவர் வருவாரா – படம்:அரசிளங்குமரி 1960 – பாடியவர்:S .ஜானகி – இசை:ஜி.ராமநாதன்
ஜி.ராமநாதன் இசையில் அரிதாகப் பாடிய ஜானகி பாடிய பாடல்களில் ஒன்று.” கண்ணன் மன நிலையை தங்கமே தங்கம் ” என்ற பாடலைப் போல செவ்வியல் இசை சார்ந்ததாக் இல்லாமல் மெல்லிசைப் பாணியில் ராமநாதன் இசையமைத்த துள்ளிசைப் பாடல். குறிப்பாக பாடலில் பயன்படுத்தப்படுகின்ற தாளம் அவரது சிறப்பான ஸ்டைல். பாடலின் சங்கதிகளில் உயிர் நிலையங்களில் மின்னலை பாய்ச்சும் அதிர்வுகளை தந்து
மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்.”ரா ” என்ற எழுத்தை வைத்து அந்தக் காலத்து பாடலாசிரியர் விளையாடிய பாடல்.
27 மனித வாழ்விலே இனிமை சேர்க்கும் புனிதமான தெய்வம் – படம்: – பாடியவர்:ராஜா – இசை:
பெண்மையின் பெருமை பேசும் பாடலை இனிய வளம் படைத்த ராஜாவின் குரலில் கேட்க்கும் போது மென்மை தழுவி நிற்கும் தேஷ் ராகத்தின் சுகத்தை உணரலாம்.
28 நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ – படம்: பாவை விளக்கு 1960 – பாடியவர்: பி.சுசீலா – இசை: கே.வீ மகாதேவன்
விரகதாபத்தை வெளியிடும் அழகான பாடல்.Semi – Classical வகை என்று சொல்லக்கூடிய பாடல்.காதலை கவிநயத்துடன் இசைச் சிறப்பும் சேர்த்துத் தரும் பாடல்.கதாபாத்திரத்தின் உணர்வு நிலையை தேஷ் ராகத்தின் ஆளுமையை சுவையுடன் பயன்படுத்திய பாடல்.
29 குறும்பினிலும் ஒரு எழில் தோன்றும் – படம்: மனிதன் மாறவில்லை 1962 – பாடியவர்: பி.சுசீலா – இசை: கண்டசாலா
சிறந்த பாடகர் மட்டுமல்ல சிறந்த இசையமைப்பாளர் என்று தன்னை நிரூபித்தவர் கண்டசாலா.அவரது இசையில் தேஷ் ராகத்தின் இனிமையைஅனுபவிக்கலாம்.பெரும்பாலும் சோகமாக ஒலிக்கும் செனாய் என்ற வாத்தியத்தை மிக நுட்பமாக பயன்படுத்தி மண்டிக் கிடக்கும் இனிமையை எழுப்பி காட்டியிருகின்றார்.சுசீலா பற்றி சொல்ல தேவையில்லை.
30 சிந்து நதியின்மிசை நிலவினிலே – படம்: கை கொடுத்த தெய்வம் 1964 – T .M .சௌந்தரராஜன் – L.R. ஈஸ்வரி இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
இந்திய ஒற்றுமையையும் ,சுதந்திரத்தையும் கனவு கண்டவன் பாரதி.தேசிய உணர்வை இந்து மத உணர்வுடன் கலந்த காலத்தில் வாழ்ந்தவன் பாரதி. இந்திய விடுதலை பற்றிப் பாடிய பாரதி அந்த விடுதலைக்கு அடிப்படை இந்திய மக்களின் ஒற்றுமை எனக் கருதியவன்.இந்தியர்களின் நற்ப்பண்புகளையும் , மாநிலங்களின் சிறப்புக்களையும் உயர்த்தி பாரதி எழுதிய பாடல்களில் முக்கியமான பாடல் இது.
இந்திய தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி பாடப்பட்டு வந்த , மக்களிடம் பிரபலமான தேஷ் ராகத்தில் இந்தப்பாடலை மெல்லிசைமன்னர்கள் அமைத்தது தற்ச்செயலானதல்ல.
பாரதி பாடல் என்று தெரியாமலேயே மிக இளம் வயதில் எனக்கு மனப்பாடமான பாடல். எனது மூன்று வயதில் இந்தப் பாடலை ராகத்துடன் பாடியதாக எனது பெற்றோர்கள் கூறுவர். இன்றும் இந்த ராகத்தில் சொல்லமுடியாத ஈர்ப்பு உண்டு.
31 ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல – படம்: செல்வம் 1966- பாடியவர்கள்: T .M .சௌந்தரராஜன் – P. சுசீலா – இசை:K .V .மகாதேவன்
தேஷ் ராகத்தின் உன்னதத்தை , விரகதாபத்தை வெளியிடும் அழகான பாடல்.செனாய் வாத்திய இசை அலையில் தேஷ் அழகாக மிதந்து வரும் பாடல்.”நின்றால் நடந்தால் உன் நினைவு ” என்று tms உச்சஸ்தாயியில் பாடும் போது அருமையான தேஷ் இனிக்கும்.
32 அன்றொரு நாள் இதே நிலவில் – படம்: நாடோடி 1966 – பாடியவர்கள்: T .M .சௌந்தரராஜன் + P .சுசீலா இசை:M.S.விஸ்வநாதன்
தேஷ் ராகத்தில் மெல்லிசை வடிவமாக மாருதம் வீசும் தரும் அர்ப்புதங்களை செய்தவர் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன்.இந்தப் பாடலுக்கான சூழ்நிலை இரவு.
பழைய நினைவுகள் திரும்பிய கதாநாயகி சொல்கிறாள்
” மூளையில் புது தெளிவு ஏற்ப்பட்டது போல் இருக்கு எதனாலே..?
கதாநாயகன்:என்ன காரணம்? அமைதியான இரவு, குளிர்ச்சியான தென்றல், சங்கீதம் பாடும் நீரோடையின் சல சலப்பு இந்த அழகுக்கு எல்லாம் அடைக்கலம் தரும் முழு நிலவு.
இந்த அழகான சூழ்நிலைக்கு இந்த ராகத்தை விட வேறு ஒரு ராகத்தை நினைத்துப் பார்க்க முடியுமா என்று எண்ணும் வகையில் “என்னை விட வேறு யாராவது இப்படி ஒரு பாடல் தர முடியுமா ” என்று சொல்லும் வகையில் மெல்லிசைமன்னர் தந்த பாடலமுதம். இரண்டு விதமான பாடலாக மிக நேர்த்தியாக இசையமைக்கப்பட்ட பாடல்.
33 கோபியர் கொஞ்சும் ரமணா – படம்: திருமால் பெருமை 1968 – T .M .சௌந்தரராஜன் – இசை:K .V .மகாதேவன்
ராக இசையின் இயல்பான் ஓட்டத்தில் இனிமையான பாடல்களைத் தந்து சிறப்பித்தவர் கே.வீ.மகாதேவன். அவர் மிகப்பெரிய நாதஸ்வரப்பிரியர்.அவருடைய பாடல்களில் நாதஸ்வர இசையின் தன்மையை அவதானிக்கலாம் சம்பிரதாயம் தவறாத இசைப்பாங்கு அவருடையது.ராகங்கள் வெளிப்படையாகவே வீரியம் கொண்டு நிற்கும்.அப்படிப்பட்ட பாடலே இந்தப்பாடல்.தேஷ் ராகத்தின் வரம்பற்ற இனிமையை காட்டும் பாடல் இது.
34 மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன் – படம்: திருமணம் 1958 – பாடியவர்: சௌந்தரராஜன் – இசை: சுப்பைய்யாநாயுடு
பலவிதமான மெட்டுக்களில் பாரதியின் ” அழகுதெய்வம் ” என்ற இந்தப் பாடல் , பல படங்களில் வெளிவந்துள்ளன.சுபபைய்யாநாயுடுவின் இசையில் வெளிவந்த இந்தப்பாடல் தேஷ் ராகத்தில் கனகச்சிதமாகப் பொருந்தி நிற்கிறது.
” அங்கதனில் கண் விழித்தேன்
அடடா ஒ அடடா
அழகென்னும் தெய்வம் தான்
அது என்றே அறிந்தேன் “
என்ற வரிகளில் தேஷ் ராகம் உயிர் பெற்று நம் இதயங்களுக்கு உள்ளொளி தந்து நெஞ்சங்களைப் பிணிக்கிறது.பாடல் முழுவதும் தேஷ் ராகத்தில் அமையாவிட்டாலும் ” காலத்தின் விதி மதியை ” என்று ஆரம்பிக்கும் பகுதி சாருகேசி ராகத்தில் அமைக்கப்பட்டது.ராக இணைப்புக்கள் அருமை.
35 கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் – படம்: சுப்ரபாதம் 1978 – பாடியவர்கள்: ஜேசுதாஸ் + வாணி ஜெயராம் – இசை: விஸ்வநாதன்
ராகங்களின் இனிமையை திரட்டித் தருவதில் மெல்லிசைமன்னர் சிறப்பு வாய்ந்தவர்.தனது படைப்புத் திறத்திற்கு வேண்டிய ஆற்றலை ராகங்களிலிருந்து எடுத்தாண்டாலும் அதிலும் மெல்லிசையின் வன்மைகளை அகம் மகிழத் தந்தவர்.விரிந்து பரந்த அவரது இசையாற்றல் எல்லையற்றது என்பதை கஞ்சத்தனமில்லாத அவரது இசை நமக்கு உணர்த்தும்.
36 இது தான் முதல் ராத்திரி – படம்: ஊருக்கு உழைப்பவன் 1976 – ஜேசுதாஸ் + வாணி ஜெயராம் – இசை: விஸ்வநாதன்
நம்மை இசைக்கு அடிமையாகியத்தில் மெல்லிசைமன்னரின் பங்கு அதிகம்.செவ்வியல் இசையின் நறுமணம் மெல்லிசை என்ற தென்றலில் மிதந்து வரும் சுகம் தருபவை அவருடைய பாடல்கள்.இந்தப்பாடலும் அந்த வகையைச் சார்ந்தது.
37 முத் தமிழில் பாட வந்தேன் – படம்: மேல்நாட்டு மருமகள் 1976 – பாடியவர்: வாணி ஜெயராம் – இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
குன்னக்குடியின் விறுவிறுப்பான தேஷ் ராகப்பாடலில் இனிமையும் அதிகம் உண்டு.
38 கடலில் அலைகள பொங்கும் – படம்: மகரந்தம் 1981 – பாடியவர்:பாலசுப்பிரமணியம் – இசை: சங்கர் -கணேஷ்
ஹஸல் பாணியில் அமைக்கப்பட்ட அழகான பாடல். ஆங்காங்கே சில சிறந்த பாடல்களைத் தந்தவர்கள் இந்த இரட்டையர்கள்.
ilyaசினிமா இசைக்கு புது அர்த்தம் தந்தவர் என்ற ரீதியில் ,ராகங்களை மரபுடனும் ,நவீனத்துடனும் கையாண்டு வெற்றிகண்டவர் இளையராஜா.தமிழ் நாட்டுப்புற இசையும் , செவ்வியல் இசையும் , மேலைத்தேய செவ்வியல் இசையும் ஒட்டும் பாடல்களை எழுந்தமானமாகவும், அந்தரங்கசுத்தியுடனும் இணைத்துக் காட்டியது அவரது ஈடுஇணையற்ற சாதனை.
தேஷ் ராகத்தில் ஒரு சில பாடல்களையே தந்தாலும் அதிலும் தன் வீச்சைக் காட்டி வெவ்வேறுவிதமான பாடல்களைத் தந்திருக்கின்றார்.எளிதில் அடையாளம் கண்டு விடக் கூடிய தேஷ் ராகத்தில் நவீனமாக தரும் இளையராஜாவின் ஆற்றல் சொல்லி மாளாது.ஏற்க்கனவே மேலே நான் தந்துள்ள பாடல்களில் பெரும்பாலானவற்றின் இசையமைப்பாளர்களின் பெயர்களை மாற்றி விட்டால் யார் எந்தப் பாடலை
இசையமைத்தார்கள் என்று சொல்லி விட முடியாது.எளிதில் கண்டுபிடித்து விடக்கூடிய ராகமான தேஷ் ராகத்திலும் புதுமைக்குப் புதுமையாக அதே நேரம் இனிமைக்கு இனிமையாக ராஜாவின் இசையாற்றல் வெளிப்படுகிறது.
01 விழியில் புது கவிதை படித்தேன் – படம் : தீர்த்தக் கரையினிலே – பாடியவர்கள் : மனோ + சித்ரா – இளையராஜா
பொதுவாக பின்னணி இசையில் தனது அசாத்திய திறமையை காட்டிய இசைஞானி இந்தப்பாடலிலும் மனக்கடலில் பதுங்கியிருக்கும் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பும் செனாய் வாத்திய இசையின் வீச்சுடன் பாடலைத் தொடங்குகிறார்.பாடல் தொடங்கி 20 நொடிகளில் எத்தனை ,எத்தனை லாவண்யங்களை காட்டுகிறது.வாத்தியங்களிலும், பெண்கள் கோரஸ் இசையிலும் தேஷ் ராகத்தின் அழகுகளை அநாயாசமாகத்
திரட்டித்த்ருகின்றார்.தேஷ் ராகத்தின் மேன்மைக்கு சேவகம் செய்திருக்கின்றார்.
“அங்கிங்கெனாது என்றும் உன் எண்ணங்கள் என்னை விடாது ..” என்ற வரிகளைத் தொடரும் இசை தேஷ் ராகத்தின் உச்சங்களைத் தொட்டுச் செல்கிறது.
கண்ணே உன் கனவு வர
பெண்ணே உன் நினைவு வர என்ற வரிகளைப் பாடும் போதும் இனிமை நம்மைப் பரவசப்படுத்துகிறது.
02 தெய்வங்கள் கண் பார்த்தது – படம்: புதியராகம் – பாடியவர்கள் : மனோ + எஸ்.ஜானகி – இசை: இளையராஜா
தாலாட்டு பாடல்களாக முன்னோடி இசையமைப்பாளர்களான ஜி.ராமநாதன் , ஆர்.சுதர்சனம் போன்றோர் பயன்படுத்திய ராகத்தில் தாயாகப் போகும் பெண்மையை வாழ்த்தும் பாடல்.இடையிசையில் படக்காட்சியின் மனநிலையையும் இசை பிரதிபலிக்கிறது
03 உனக்கெனத் தானே இந்நேரமா – படம்: பொண்ணு ஊருக்கு புதிசு – பாடியவர்கள் : இளையராஜா + சரளா – இசை: இளையராஜா
எப்படி இசையமைத்தாலும் தன்னை துல்லியமாக வெளிக்காட்டி நிற்கும் தேஷ் ராகத்தில் ஒரு புதுமையாக அதன் சங்கதிகளை அதிகம் வைக்காமல் படத்தின் சூழ்நிலைக்கு கன கச்சிதமாக பொருந்தக் கூடிய வகையில் ஒரு கிராமியப் பாடலாகத் தந்து ஆச்சர்யமூட்டியுள்ளார் இசைஞானி.இது அவரது ஆர்மபகாலப் பாடல்களில் ஒன்று.
தேஷ் ராகத்திலும் ஒரு கிராமிய மணம் பொங்கும் பாடலா என வியக்க வைக்கும் பாடல்.
ராகத்தின் நளினங்களை பல்வேறு கோணங்களில் பார்க்கும் மேதமை எல்லை கடந்த அவரது இசை ஞானத்தை பறைசாற்றும்.
04 ஓரன்ஜாசாறு உசார் ஐயா உசாரு – படம்: காக்கைச் சிறகினிலே – பாடியவர் : S .P .பாலசுப்பிரமணியம் – இசை: இளையராஜா
இனிமை மிக்க புல்லாங்குழல் இசையுடன் ஆரம்பிக்கும் தேஷ் ராகத்தில் ஆச்சரியம் தரும் நகைச்சுவைப் பாடல்.ஆயினும் ஆங்காங்கே தேஷ் ராகம் தனது கைவரிசையைக் காட்டும் வண்ணம் இனிய பின்னணி இசையுடன் இசையமைக்கப்பட்ட பாடல்.
கனவே கலையாதே காதல் – படம்:கண் எதிரே தோன்றினாள் – பாடியவர்கள்; உன்னிகிருஷ்ணன் + சித்ரா – இசை: தேவா
ஒரு பூ எழுதும் கவிதை -படம்:பூவேலி – பாடியவர்கள்; உன்னிகிருஷ்ணன் + சித்ரா – இசை: பரத்வாஜ்
போன்ற இனிமையான பாடல்களையும் குறிப்பிடலாம்.
பக்திப்பாடல் வரிசையில் அநேகரும் அறிந்த பாடலான ” உன்னையும் மறப்பதுண்டோ ” என்ற சௌந்தரராஜன் பாடிய பாடலும் தேஷ் ராகத்தில் அமைந்ததே!
என் பால்ய வயதில் நான் பாடித்திரிந்த எனக்குப் பிடித்த, என்னால் மறக்க முடியாத
வாராயோ கண்ணா என்னை
பாராயோ மணிவண்ணா
என்ற பாடலும் என் நினைவில் வந்து போகின்றது.
இன்னுமொரு முக்கியமான மலையாலப் பாடலை ஒவ்வொரு இசை ரசிகனும் கேட்டு ரசிக்கவேண்டும் அந்தப் பாடல் இதோ:
பாடல்: சங்குப் புஷ்பம் கண் எழுதும் போல் – படம் :சகுந்தலா 1965 – பாடியவர்:கே.ஜே.யேசுதாஸ் – இசை:ஜி.தேவராஜன் – கவிஞர்:வயலார் ராமவர்மா
[ தொடரும் ]
No comments:
Post a Comment