தூரத்து சொந்தங்கள் [சிறுகதை]
DISTANCE RELATIVES
.By ரெங்கசுப்ரமணி
”வர்ற மாசி மாசம், எட்டாந்தேதி நம்ம அருள்மிகு கதலி சீனிவாச பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கமிட்டி கூட்டம் நடக்குதுங்க, எல்லாரும் வந்து கலந்துக்கங்க” டமடமடமடம…
கதலி ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில், வைகை நதிக்கரை ஓரமாக இருக்கும் சின்ன ஜம்புலிபுத்தூரில் இருக்கும் கோவில். ஜம்புலிபுத்தூரில் இருப்பது கதலி நரசிம்மர், இவர் கதலி ஸ்ரீநிவாசர். விஸ்வநாத நாயக்கன் காலத்தில் பிரிக்கப்பட்ட ஜமீன் என்பார்கள் இல்லை இது சொக்கநாதன் காலத்தில் பிரிக்கப்பட்டது என்பார்கள். ஆனால் இன்று பெயருக்கு ஜமீன்தார் மட்டுமே இருக்கின்றார்.
“வழக்கம் போல ஜமீன்தார் லோகன்துரைதான் திருவிழா கமிட்டி தலைவர், பெருமாள் கணக்குவழக்கு பாத்துப்பாரு, மந்தைய கவுண்டர், குருணை வெள்ளை, ஆண்டவர் மூணு பேரும் நிதி வசூல்”
“எல்லா ஜாதிக்கட்டு வரியும் வந்திருச்சி”
“அம்பி ஐயங்கார் கிட்ட மறுபடியும் நினைவு படுத்துங்க, அவர் பாட்டுக்கு கொடியேத்தம் அன்னிக்கி கடைய திறந்து வச்சிட்டு உக்காந்துரப் போறாரு”
“கொடிக்கயிறு வாங்க வேண்டாமா”
“அதுக்குதான் நாளைக்கு மந்திரி வீட்டுக்கு போகனும்”
ஹாஜி கமால் ராவுத்தரின் வீடு. ஊருக்குள் மந்திரி வீடு என்ற பெயரே பரிச்சியம். நாயக்கர்கள் காலத்தில் ஜமீன்தார்கள் ஆட்சியிலிருந்த போது, இவர்கள் குடும்பத்தினர்தான் மந்திரியாக பணிபுரிந்து வந்தனர். அந்த மதிப்பு இன்றும் உண்டு.
லோகன்துரை, பெருமாள், மந்தைய கவுண்டர் அனைவரும் உள்ளே சென்றனர். “வாங்க வாங்க” என்று வரவேற்றார் கமால் ராவுத்தர். மூட்டிய வெள்ளை வேட்டி, கை வைத்த பனியனுடன் ஒரு சாய்வு நாற்காலியில் படுத்திருந்தார்.
“எழுந்து வந்து வரவேற்க முடியல, மன்னிக்கனும்”
“எப்படி இருக்கீங்க ராவுத்தரே” என்று கேட்டார் லோகன்துரை.
“இருக்கேன், அல்லா கருணையால நல்லா இருக்கேன். நடக்கத்தான் முடியல. பள்ளிக்கு கூட போக முடியல”
“வயசாச்சு இல்ல, எங்க அப்பாவ விட நீங்க ரெண்டு வயசு கம்மி, எனக்கே இப்ப அம்பதாகி போச்சு” என்றார் லோகன்துரை.
“நம்ம கோவில் திருவிழான்னு கேள்விப் பட்டேன்” என்றார் ராவுத்தர்
உள்ளேயிருந்து அவரது மகள் ஐரீன் கையில் மோர் குவளைகளுடன் வந்தார். அவர்கள் வழக்கப்படி தலையை சேலையால் மறைத்து கொண்டிருந்தார்.
“ஆமாங்க, அடுத்த வாரம் கோடியேத்தம், கொடிக்கயிறு வழக்கமா நம்ம வீட்லதான் வாங்கி தர்றது வழக்கம், அதோடு நீங்கதான வந்து குடில் கட்டைய தொட்டு தரணும், அதான் முறையா சொல்லிட்டு போலாம்னு வந்தோம்”
“ஆமா, கயிறு ஏற்கனவே தயாரா இருக்கு, அத எடுத்துட்டு வாம்மா”
“ஐரின் இங்கதான் இருக்கா” என்றார் லோகன்துரை
“மாப்பிள்ள மெளத்தானதுக்கு பின்னா இவ இங்கதான் இருக்கா”
ஐரின் உள்ளேயிருந்து ஒரு பெரிய தட்டில், புதுக்கயிறு, பெரிய துணி கொடி மரத்தில் சுற்ற, ஒரு நூறு ரூபாய் கட்டு என்று அனைத்தையும் கொண்டு வந்தார்.
“நீயே உன் கையால கொடம்மா” என்றார் ராவுத்தர்.
லோகன்துரை எழுந்து நின்று வாங்கிக் கொண்டு அதை பெருமாளிடம் தந்தார்.
“அப்ப வர்றோம், தேரோட்டம் அன்னிக்கி வழக்கம போல மேள தாளத்தோட வந்து அழைச்சிட்டு போறோம். இப்ப கிளம்பறோம்” என்றார் மந்தைய கவுண்டர்.
“என்னால எங்க நடக்க முடியும். ஜமால் ஜமாலத்தான் அனுப்பனும், ஆனா” என்று நிறுத்தினார்.
“அதுவும் சரிதான், அடுத்த தலைமுறைக்கு பட்டம் கட்ட வேண்டியதுதான” என்று கூறினார் பெருமாள்
வெளியே வந்த போது ஜமால் உள்ளே நுழைந்தான். முப்பது வயதிருக்கலாம். பைஜாமா ஜிப்பா தலையில் கருப்பு துருக்கி குல்லா, அவன் பின்னால் அவரது பர்தா அணிந்த மனைவி. எங்கோ வெளியில் சென்றுவிட்டு வருகின்றார்கள். அந்நியர்களை கண்டதும் அவன் மனைவி வேகமாக உள்ளே சென்று மறைந்தாள். அவனும் அவன் பையனும் வராண்டாவில் நின்று கொண்டிருந்தனர்.
“நல்ல வேளை தம்பியே வந்துட்டாரு” என்றார் குருணை வெள்ளை. குருணை வெள்ளை தன் ஜிப்பா பையிலிருந்த பொட்டணத்தை பிரித்து ஒரு கற்கண்டை எடுத்து அந்த குட்டி பையனிடம் தந்தார். அவன் தயக்கத்துடன் வாங்கி கொண்டு உள்ளே சென்றான்.
வராண்டாவில் நின்றபடியே அனைத்தையும் சொன்னார்கள்
“அத்தா ஏற்கனவே சொன்னாரு, ஆனா பாருங்க நான் எப்படி இந்து கோவிலுக்கு எல்லாம் வர முடியும் சொல்லுங்க. கட்சியில் வேற இருக்கேன். கட்சியில கேள்வி கேட்டா ஒன்னும் சொல்ல முடியாது”
“இல்ல தம்பி, நியாயமா உங்க தாத்தா தான் இத பண்ணனும், அவரால வர முடியல, உங்க அத்தாவும் இல்ல” என்றார் மந்தையக்கவுண்டர்.
“அதுக்கு நா என்ன பண்ண முடியும், என்னால வர முடியாது. ஊர் ஊரா போய் மத்தவங்கள பண்ணக்கூடாதுன்னு சொல்றத நானே செஞ்சா எப்படி ”
“தம்பி, நீங்க மந்திரி பரம்பரை, நான் ஜமீன் பரம்பரை, இப்ப அதுக்கு எந்த மதிப்பும் இல்ல. ஏதோ ஒரு காலத்துல நீங்க இஸ்லாம் பக்கம் போய்ட்டீங்க. இருந்தும் மந்திரிங்கற முறைல கோவில்ல உங்களுக்கான மரியாதை எப்பவும் உண்டு. ராஜா ஆட்சியை நடத்துறவர்ன்னு தேர் வடத்தையும், ஆட்சி அலைபாயாம பாத்துக்குற மந்திரிக்கு தேரை வழிநடத்துர குடில் கட்டையையும் எடுத்து தர அனுமதி தந்தாங்க மக்கள், அந்த பாக்கியம் இன்னமும் நமக்கு இருக்குன்னு பெருமை பட்டுக்கனும். இது கூட இன்னும் எத்தன வருஷமோ?” என்றார் லோகன்துரை.
“பத்து வருஷம் முன்னாடி நடந்த திருவிழாவுல கூட உங்க தாத்தா தான் குடில் கட்டைய தொட்டு கொடுத்தாரு. அப்ப உங்க அப்பா இருந்தாரு. அவருக்கு பட்டமும் கட்டினோம்.” என்றார் பெருமாள்.
“அது அப்பங்க, இப்ப காலமெல்லாம் மாறிப் போச்சு, இப்ப எங்களுக்கு எது தப்பு சரின்னு தெரிஞ்சி போச்சு. நீங்க போய்ட்டு வாங்க” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்,
ஏதும் பதில் பேசாமல் நடந்தார்கள்.
அன்றிரவு கோவிலில் கமிட்டி கூட்டம். லோகன்துரையின் மகன் ஷ்யாமும் வந்திருந்தான்.
“என்னப்பா அந்தாள போய் ஏன் கூப்பிட்டீங்க. அவர கூப்பட வேண்டாம்னு நான் சொன்னேல்ல, நம்ம கோவில் திருவிழாவுக்கு அவங்க ஆளுங்க எதுக்கு. வெறும் மாலைய மட்டும் வாங்கிட்டு போகவா? பிராசாதம் வாங்கிப்பாங்களா, குங்குமம் வச்சுப்பாங்களா? துளசி வாங்கிப்பாங்களா?
“டேய், ராவுத்தர் அப்பா எல்லாம் வாங்கிட்டிருந்தவர்தான், நானே சின்ன பிள்ளைல பாத்திருக்கேன். ராவுத்தரும் அப்படி இருந்தவர்தான், பின்னாடி அவங்க ஆளுங்க கொஞ்சம் சங்கடப்படறாங்கன்னு ஜாடையா சொன்னாப்ல, அதனால நாமளும் அத மதிச்சி ஒன்னும் தர்றதில்ல ”
“பேசாம தேனி கலெக்ட்ர கூப்டு அவரை வைச்சு நடத்துவோம்”
பங்குனி மாசம் பத்தாம் தேதி. தேர் நன்றாக இலுப்பெண்ணை பூசப்பட்டு பளபளப்பாக இருந்தது. சக்கரங்களுக்கு அருகில் கட்டை போடுபவர்கள் தயாராக இருந்தனர். அவர்கள் இடுப்பில் கயிற்றை கட்டி அதை பிடித்தபடி அவர்கள் பின்னால் ஆட்கள் தயாராக இருந்தனர். கட்டை போடும் போது கொஞ்சம் கவனம் தவறினாலும் சக்கரம் மேலே ஏறிவிடும், அதனால் பின்னால் இருப்பவர்கள் படு உஷாராக இருக்க வேண்டும், பெரும்பாலும் மாமன் மச்சானாக இருப்பார்கள். குடில் கட்டையை மாவட்ட ஆட்சியர் எடுத்து தர கட்டை போடுபவர்களில் மூத்தவர் பெற்று கொண்டார்.
கோவில் நிர்வாக அதிகாரி கொடியசைக்க, லோகன்துரை முதலில் தேர் வடத்தை தொட்டு எடுத்தார். கொடியசைவு கண்டதும், தேர் தட்டிலிருந்த மேளக்காரர்கள் கெட்டி மேளம் கொட்ட, கொம்பு, சங்கு, சேகண்டி எல்லாம் முழங்க, மக்கள் அனைவரும் கோவிந்தா கோஷத்துடன் தேரை இழுக்க ஆரம்பித்தனர்.
தேரின் பின் சக்கரத்தின் அடியில் நெம்புகட்டையை போட்டு அதற்கான ஆட்கள் அதன் மீது ஏறி நின்று கையிலிருந்த மூங்கிலை தரையில் ஊன்றி கொண்டு மிதித்தனர்.
தேர் அசைந்தது. கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் எழும்பியது. தேர் குடங்குகள் க்ரீச் க்ரீச் சத்தம் எழுப்பியபடி பெரிதாக ஆடின. சின்ன சின்ன மரத்துணுக்குகள் சிதறியது.
இடத்தை விட்டு ஒரு அடி முன்னேறியிருக்கும். ஏதோ மரம் முறிவது போன்ற பெரிய சத்தம் கேட்டது, தேர் பயங்கரமாக குலுங்கியது. கட்டை போடுபவர்கள் அடுத்தடுத்து மின்னல் வேகத்தில் கட்டைகளை போட்டு தேரை நிறுத்தினார்கள். மேள சத்தம் மாறி முழங்க, வடமிழுப்பது நின்றது
உள் அச்சு முறிந்திருந்தது.
“இப்படி ஆகிப் போச்சேப்பா”
“இறங்கு பொழுதுல கொடியேத்துனா இப்படித்தான் நடக்கும்”
“அய்யருங்க சரியில்லப்பா”
உடனடியாக கோவிலில் இருந்த உபரி அச்சை எடுத்து வர ஆளனுப்பினார்கள். தச்சர்கள் அச்சை சரி செய்ய ஆரம்பித்தார்கள்.
“க்ரேனை வச்சி தேரை உசத்துறதுதான் ஒரே வழி”
“இல்ல பெரிய ஜாக்கி வச்சி தூக்கிடுவோம். ”
“அத்தாம் பெரிய கிரேனுக்கு ஜாக்கிக்கு எங்கிட்டு போக”
“திருச்சி பெல்லுல இருக்கும், அங்க என் மச்சான் இருக்கான் நான் பேசுறேன்”
இரவு ஒன்றும் நடக்கவில்லை.
அதிகாலை ஐந்து மணி, ஒரு கார் தேரடிக்கு வந்தது, தேருக்கு எவ்வளவு அருகில் வர முடியுமோ அந்தளவிற்கு வந்து நின்றது
ராவுத்தர், சுத்தமான வெள்ளை வேட்டி சட்டை, தலையில் சல்லடை குல்லா
காரில் எப்படி ஏறினாரோ தெரியவில்லை. பின் சீட்டில் மகள். அவரது வண்டிக்கு பின்னால் ஒரு ட்ராக்டர், கற்கள், மரக்கட்டைகள், மணல் மூட்டைகள், வேலையாட்கள்.
காரிலிருந்து கஷ்டப்பட்டு இறங்கி டிராக்டரிலிருந்து இறக்கப்பட்ட ஒரு மர நாற்காலியில் அமர்ந்து கொண்டார். அவர் வந்த விபரம் அறிந்த லோகன்துரை, பெருமாள், கவுண்டர் என்று அனைவரும் கூடிவிட்டனர்.
“நேத்தே விஷயம் தெரியும், நீங்க ஏதாவது ஏற்பாடு பண்ணியிருப்பீங்கன்னு நினச்சேன், சரி ஒன்னும் முடியலன்னதும்தான் வந்தேன்.” என்றார் ராவுத்தர்
“ஏற்பாடு நடந்துட்டு இருக்கு, ஆனா நேரம்தான் அதிகமாகுது என்ன செய்ய” என்றார் லோகன்துரை.
“நான் சரி பண்ணி தர்றேன், பண்ணலாமா?”
“என்ன அனுமதி கேட்டுட்டு, நம்ம ஊர் தேரு, தாராளமா செய்யுங்க” என்றார் லோகன்துரை.
“வேற யாரும் வந்து என்ன தொந்தரவு செய்யக்கூடாது, யோசன சொல்லக் கூடாது. எல்லாரையும் வெளிய அனுப்புங்க” என்றார்.
“இவருக்கு என்ன தெரியும், நான் கட்சியில பேசி எம்.பி மூலமா ஜாக்கி, இஞ்ஞினியர் எல்லாரையும் வரவழைக்க ஏற்பாடு பண்ணிட்டு இருக்கேன், இவரு என்ன” என்று குதிதான் ஷ்யாம். லோகன்துரை அவனை அடக்கிவிட்டு, “நீங்க பண்ணுங்க ராவுத்தரே, நான் ஏற்பாடு பண்றேன், ஈஓ கிட்டயும் நான் பேசிக்கிறேன்” என்றார்.
கூட்டம் விரட்டப்பட்டு, சுற்றி கயிறு கட்டி போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தேரின் மீது ஒரே ஒரு குட்டி அர்ச்சகர் தவிர்த்து அனைவரும் இறக்கப்பட்டனர்.
முதலில் தேரின் இரண்டு அச்சுகளுக்கு அடியில் கற்கள் வேகமாக அடுக்கப்பட்டன, மணல் மூட்டைகளை பக்கவாட்டில் அடுக்கினர். அச்சிற்கும் கற்களுக்கும் இருந்த சின்ன சின்ன இடைவெளியில் பெரிய மர ஆப்புகளை அடித்து இறுக்கினார்கள். தேர் இப்போது கற்களின் மேல் நின்று கொண்டிருந்தது.
காலியாக இருந்த தேரடியில் கூட்டம் கூட ஆரம்பித்தது. வெயில் ஏறிக்கொண்டிருந்தது. அறநிலையத்துறை ஆட்கள் ஒரு காரில் வந்து இறங்கினார்கள். பெருமாள் சென்று காருக்கு பணம் கொடுத்து அனுப்பினார்.
”ராவுத்தரே ஏதாவது குடிக்கிறீங்களா?”
”வேண்டாம்யா, நோம்பு வச்சிருக்கேன். ”
”சரி, சரி, வருஷா வருஷா நாளுங்க மாறி மாறி வருதா, தெரியாம போச்சு.”
”அய்யா, சக்கரத்த கழட்ட வேண்டியதுதான் பாக்கி.”
உள் சக்கரங்களுக்கு அடியிலும், பக்கவாட்டில் ஒரு அரையடிக்கு பள்ளம் தோண்ட ஆணையிட்டார், தோண்ட தோண்ட மெதுவாக சக்கரம் விடுபட்டது. மெதுவாக கழட்டி பக்கவாட்டில் தோண்டிய பள்ளத்தில் இறக்கினார்கள். அங்கிருந்து நீளமாக ஓரு ஓடை போல பள்ளம் வெட்டி, சக்கரங்களை உருட்டி வெளியேற்றினார்கள். அச்சை மாட்டி, மீண்டும் அதே வழியில் சக்கரங்களை மாட்டினார்கள்.
தோண்டிய பள்ளத்தில் கற்களை கொட்டி இறுக்கினார்கள். சிமிண்ட் பாலையும் கரைத்து ஊற்றி, உள் சக்கரத்திற்கு அடியில் பெரிய பெரிய இரும்பு கம்பிகளை போட்டு, மேலே தட்டையான கட்டைகளை வைத்து இறுக்கி மண்ணின் நெகிழ்வில் சக்கரம் சிக்காமல், அதே சமயம் உருண்டு வெளியே வரவும் தோதாகச் செய்தார்கள்.
அங்கேயே இருந்து அனைத்தையும் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.
மூன்று மணிக்கு தேர் தயாரானது,
கவுண்டரை அழைத்த ராவுத்தர், “வடக்கயிறு நீளத்த கொஞ்சம் கொறச்சிடுங்க, ரொம்ப பேரு இழுத்தா வேகம் அதிகமாகும், புது அச்சு வேற”
சற்று யோசித்த கவுண்டர், “வேண்டாம்யா, ஒவ்வொரு ஜாதிக்கும் வடக்கயிறுல பங்கிருக்கு, எங்க ஜாதிப் பங்க வெட்டிடாங்கன்னு கலாட்டா வரும், எதுக்கு. பாத்து சமாளிச்சிக்கலாம், கட்ட போடறவங்கள கொஞ்சம் பாத்துக்க சொல்றேன்”
“சரி, புது அச்சு. பாத்து சூதானமா நடத்துங்க”
“வந்தது வந்துட்டீங்க, நீங்களே இருந்து கட்டையை எடுத்து கொடுத்துடுங்க உங்க பையன் முடியாதுன்னு சொல்லிட்டாரு”
“தெரியும், என்னையும் போகக்கூடாதுன்னுதான் சொன்னான், அவனுங்களுக்கு இது புரியாது, விடுங்க”
அனைத்தும் மீண்டும் தயாரானது, அர்ச்சகர், மந்திரி ராவுத்தருக்கு பரிவட்டம் கட்டி மாலையிட்டார்.
கட்டையை ஒரு தட்டில் வைத்து எடுத்து வந்தனர், ராவுத்தர் தன் மகளிடம் “அம்மா அத தொட்டு எடுத்து அவங்க கிட்ட கொடு” என்றார்.
ஐரீன், அருகிலிருந்த பூக்களை எடுத்து அதன் மீது தூவிவிட்டு கட்டையை எடுத்து அருகிலிருந்த கட்டை போடுபவரிடம் தந்தார்.
கோவிந்தா கோஷத்துடன் தேர் புறப்பட்டது.
No comments:
Post a Comment