KAMBAR JEYARAMAN ,
SENIOR DRAMA ARTIST
BORN 1936 APRIL 27
”கம்பர்” ஜெயராமன் – தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர, வில்லன் பாத்திரங்களில் பிரபலமானவர். பல திரைப்படங்களுக்குக் கதைகளும் எழுதியுள்ளார்.பல தொலைக்காட்சித் தொடர்களை இயக்கியுள்ளார். நீதிபதி, திலகம், தசாவதாரம், கைதி கண்ணாயிரம், பொண்ணு மாப்பிள்ளை, சோப்பு சீப்பு கண்ணாடி, குறத்தி மகன், காவல் தெய்வம், உயர்ந்த மனிதன், போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்கள் பலவற்றிலும் நடித்துள்ளார்.
தமிழ் மேடை நாடகம் மற்றும் திரைப்படம் இரண்டிலும் வெற்றிகரமாக இருந்த பழம்பெரும் நடிகர்களில் முக்கியமானவர் கம்பர் ஜெயராமன். இதுவரைக்குமான தன் வாழ்நாளில் அறுபத்தாறு வருடங்களை அவர் இத்துறைகளில் செலவழித்திருக்கிறார். ஆனால், அவரது இருப்பு பிற நடிகர்களைப் போல உரத்து தக்கவைத்துக்கொண்டது அல்ல. அதன் காரணமாகவே அவரது நட்சத்திர பிம்பம் சற்று மங்கியதாகவே இருந்து வந்திருக்கிறது. கம்பர் ஜெயராமனின் சற்று அடக்கி வாசிக்கப்பட்ட நடிப்பாற்றல் மற்ற நடிகர்களிடமிருந்து அவரை முற்றிலுமாக வேறுபடுத்திக் காட்டுவது, அவரது இருப்பின் மீதான குறைவான வெளிச்சத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும். அறுபதுகளில் நடைபெற்ற இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்களில், முன்னாள் மெட்ராஸ் போலிஸ் கமிஷ் னர் பார்த்தசாரதி அய்யங்கார், முன்னாள் முதல்வர் பக்தசவச்சலம் ஆகியோர் உத்தரவில் இந்தி திணிப்புக்கு ஆதரவாக அரசு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் கம்பர் ஜெயராமன் அசந்தர்ப்பமாக நுழைக்கப்பட்டு கடுமையான வன்முறைக்கு உள்ளானார். அந்த அளவில் இந்த நேர்காணல் வரலாற்று சிறப்புமிக்க ஒன்றும்கூட.
உங்களது பூர்விகம் பற்றியும், நடிப்புக்கு வந்தபிறகான உங்கள் ஆரம்பகால அனுபவங்கள் பற்றியும் சுருக்கமாகச் சொல்லுங்கள்.
தஞ்சாவூர் ஜில்லாவில், திருவாரூரில் இருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அம்மையப்பன் நான் பிறந்த ஊர். அது கிராமம் கிடையாது. ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம் எல்லாம் இருந்த பெரிய ஊர். என் பெற்றோருக்கு நான் நாலாவது பிள்ளை. எனக்கு சிறு வயதிலேயே சங்கீதத்தில் ஈடுபாடு இருந்தது. டி.ஆர். மகாலிங்கத்தின் பாடல்களை அப்போது நான் சர்வ சாதாரணமாகப் பாடுவேன். நான் பாடுவதைப் பள்ளிக்கூடத்தில் எல்லோரும் ‘ஆ…’ என்று வாயைப் பிளந்து கேட்டது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. கச்சேரியில்கூட பாடியிருக்கிறேன். சி.எஸ். ஜெயராமன் என் குரலைக் கேட்டு பாராட்டியிருக்கிறார். உடனே எங்கப்பா என்னை அழைத்துக்கொண்டு போய் நாதஸ்வர வித்துவானிடம் சங்கீதம் படிக்க சேர்த்துவிட்டார். அஞ்சுவர்ணம் கற்றுக்கொண்டேன். அதற்குள் என்னை நாடக கம்பெனியில் சேர்த்து விட்டுவிட்டார்கள். நவாப் ராஜமாணிக்கம் கம்பெனியில்தான் முதலில் எங்க அண்ணன் அப்ளிகேஷன் போட்டார். ஆனால், அங்கு எனக்கு இடம் கிடைக்கவில்லை. அடுத்து, சிவப்பிரகாசம் என்ற எங்க குடும்பம் நண்பர் ஒருவர் தேவி நாடக சபாவில் என்னை சேர்த்துவிட்டார். அது 1946. அப்போது எனக்கு பத்து வயது.
தேவி நாடக சபாவில் கிட்டத்தட்ட முந்நூறு பேர் இருந்தார்கள். அந்த கம்பெனியில் எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். சீன் செட்டுகளை தூக்குவது, கவுண்டரில் டிக்கட் கொடுப் பது, விளம்பரம் செய்வது… இப்படி எல்லாவற்றுக்கும் ஆட்கள் இருந்தார்கள். பயணம் செய்யும்போது, ஒரு முழு ரயிலில் எங்கள் கூட்டம்தான் அதிகமாக இருக்கும்.
REPORT THIS AD
நான் நாடகத்தில் அதன் இறுதிக்காலம் வரை இருந்தேன். சினிமா காரணமாக நாடகத்தில் இருந்து ஒவ்வொருவராக விலகிக்கொண்டே இருந்தார்கள். ஒருகட்டத்தில் நாடகத்துக்கு ஆள் இல்லை என்னும் அளவுக்கு நிறைய பேர் சென்றுவிட்டார்கள். இதனால், எனக்கு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாடகத்தில் எல்லோரும் எல்லா கதாபாத்திரத்தையும் பாடம் செய்து வைத்திருக்க வேண்டும். அப்படி நான் எல்லா பாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன். ஆனால், இன்று நான் முக்கியமாக நினைப்பது ஸ்தீரி பார்ட் (கதாநாயகி வேடம்) பாத்திரங்களில் நடித்ததைத்தான். ஏ. வீராச்சாமி ‘மெயின் ஸ்த்ரிபார்ட்’ (தண்ணீர் தண்ணீர், முதல் மரியாதை). அவரைப் போல் ஸ்திரிபார்ட் பிரமாதமாக நடித்த இன்னொரு நடிகரை நான்
பார்த்ததில்லை. அவ்வளவு அருமையாக நடிப்பார். அவருடைய பாத்திரங்கள் அனைத்தையும்கூட நான் நடித்திருக்கிறேன். அதன்பிறகு, அக்ரிமெண்ட் போடும்போதே, நான் ஸ்த்ரிபார்ட்டில் நடிப்பதை உறுதி செய்துகொள்வேன். ஒரு கட்டத்தில் மொட்டை அடித்துக்கொண்டு ஸ்த்ரிபார்ட் செய்யக் கூடாது என்று முடிவெடுத்தேன். ஆனால், அந்த வைராக்கியத்தை தொடர முடியவில்லை.
‘கே.எஸ். கோபாலகிருஷ்ணனோட தம்பி’ என்று ஒரு நாடகம். இதில் நான் ஸ்த்ரி பார்ட் செய்தேன். இந்நாடகத்தில் எனக்கு தங்கையாக ராஜாத்தி அம்மாள் நடித்திருந்தாங்க. காரணம், அந்த அளவுக்கு எனது ஸ்த்ரிபார்ட் வேடம் புகழ்பெற்று இருந்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றவர்களும் ஸ்திரீபார்ட்டாக நடித்தவர்கள்தான். சினிமா இயக்குநர் ஏ.பி. நாகராஜனும், ‘பாலமுருகன் பாய்ஸ்’ கம்பெனியில் இருந்தபோது பெரிய ஸ்திரீ பார்ட்டாக இருந்தவர். ஸ்த்ரீ பார்ட்டாக நடிப்பவர்களுக்கு எல்லா வேடங்களிலும் நடிக்கத் தெரிந்திருக்கும்.
அப்பொழுது நாடகத்தில் இருந்து கிடைத்த
வருமானம் உங்களுக்குப் போதுமானதாக இருந்ததா?
மாதம் ஐந்து ரூபாய் கொடுப்பார்கள். அப்பொழுது அதை வருமானம் என்று பெரிதாகச் சொல்லமுடியாது. மாதச் செலவுக்குப் போதாது. எனவே, ஊரில் இருந்து யாராவது வரும்பொழுது நூற்றைம்பது ரூபாய் பணம் கொடுத்து அனுப்புவார்கள். அப்பாவும் அண்ணனும்தான் என்னைப் பார்க்க வருவார்கள். நாடக சபாவிலும் என்னைக் குழந்தையைப் பார்த்துக்கொள்வது மாதிரி பார்த்துக்கொள்வார்கள். ஆனால், ஊருக்குப் போகமுடியாது. நான் ஊரிலிருந்து புறப்பட்டு சில வருடங்களிலே எங்கப்பா இறந்துவிட்டார். பிறகு, அம்மாவும் இறந்துவிட்டார்கள். அதன்பிறகு, என்னுடைய அண்ணன்களோ என்னைத் தேடவில்லை. எங்க பெரியப்பா இறந்ததுக்குக்கூட நான் ஊருக்குச் செல்லவில்லை. என்னை அனுப்பமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். அப்போது எனக்கு இருபத்தைந்து வயசு. நான் 19 வருஷம் கழித்துதான் மீண்டும் ஊருக்குச் சென்றேன்.
நீங்கள் அதிகமாக நடித்தது புராண நாடகங்களா அல்லது சமூக நாடகங்களா?
இரண்டுமே நடித்திருக்கிறேன். அக்காலத்தில் சக்தி நாடக சபாக்காரர்கள் புராண நாடகங்களைப் போடுவார்கள்; டி.கே.எஸ். பெரும்பாலும் சமூக நாடகங்களை அரங்கேற்றுவார்.
நான் வேலை பார்த்த தேவி நாடக சபாவின் முதலாளி கே.என். ரத்தினம். இவர் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். இவருடன் வைத்தியநாதன், சுந்தரம், கே.என். காளை, சேட்டு ஒருவர் ஆகியோர் சேர்ந்து தேவி நாடக சபாவை நடத்தினார்கள். சுந்தரமும் காளையும் இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் சகோதரர்கள்; சேட்டு, மிலிட்டரியில் இருந்தவர். கே.என். ரத்தினம், பாய்ஸ் கம்பெனியில் உடையலங்காரம் செய்தவர்.
தேவி நாடக சபாவில் நான் கதாநாயகன் தவிர எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்தேன். முக்கியமாக, ஏற்கெனவே சொன்னதுபோல் ஸ்த்ரீ பார்ட் அதிகம் செய்தேன். சண்முக சுந்தரியும் ராஜமணியும் என்னுடன் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். ராஜமணி, சிறு வயதிலிருந்தே தேவி நாடக சபாவில் இருந்தார்கள். அவர்கள் குமாரி ஆனது நாடக கம்பெனியில்தான்.
பதினைந்து வருடங்கள் தேவி நாடக சபாவில் இருந்தேன். அதன்பிறகு, மனோகர் பார்ட்டிக்கு வந்துவிட்டேன். அங்கே ஆறு வருடங்கள் இருந்தேன். மனோகருடன் ‘இலங்கேஸ்வரன்’ நாடகத்தின் நான் லட்சுமணனாக நடித்தேல். அதில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதன் காரணமாக மனோகரன், என்னைத் தம்பி தம்பி என்றுதான் கூப்பிடுவார். அவர் வீட்டிலும் எனக்கு அதிகப்படியான சுதந்திரம் கொடுத்திருந்தார். மனோகர் நாடகக் குழுவில் கட்டுப்பாடுகள் அதிகம். அவர் யாரையும் சுலபத்தில் வீட்டுக்குள் அழைக்கமாட்டார். ஆனால், என்னை மட்டும் கடைசிவரை வீட்டுக்குள் நுழைய அனுமதித்தார். அவருக்கு என்மேல் அவ்வளவு நம்பிக்கை.
உங்களுக்கு கம்பர் ஜெயராமன் என்ற பெயர் எப்படி வந்தது?
எஸ்.வி. சகரஸ்நாமம் ‘சேவா ஸ்டேஜ்’ என்று ஒரு நாடகக் குழு வைத்திருந்தார். அக்காலத்தில் சேவா ஸ்டேஜ் ஒரு முக்கியமான நாடகக்குழு. அதில் நான் ரொம்ப காலம் வேலை செய்தேன். இந்த சேவா ஸ்டேஜில் இருந்துதான் பண்டரிபாய், மைனாவதி, எம்.என். ராஜம், தேவிகா, முத்துராமன் போன்றவர்கள் எல்லாம் வந்தார்கள். இன்னும் பல நடிகர்கள் இருந்தார்கள். சேவா ஸ்டேஜ், சென்னை ராயப்பேட்டையில் எஸ்.வி. சகரஸ்நாமம் வீட்டிலேயே இருந்தது.
எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் ‘கவிச்சக்கரவர்த்தி’ என்னும் நாடகத்தை சேவா ஸ்டேஜ் போட முடிவு செய்தது. கு. அழகிரிசாமி, அந்நாடகத்தில் கம்பர் பற்றி பெரிய ஆராய்ச்சியே செய்திருப்பார். அதில் யார் கம்பராக நடிப்பது என்ற பேச்சு வந்தபொழுது, முதலில் எஸ்.வி. சகரஸ்நாமம், ‘நான் நடிக்கலை’ என்று ஒதுங்கிக்கொண்டார். நடிகர் கோபாலகிருஷ்ணன், தான்தான் நடிப்பேன் என்றார். வேறு சிலரும் நடிக்க முன்வந்தார்கள். சரி பிரச்சினை வேண்டாம் என்று எல்லோரும் சேர்ந்து ஒரு ஒட்டெடுப்பு நடத்தினார்கள். அந்த ஒட்டெடுப்பில் நான் வெற்றிபெற்றேன். அப்போது நான், ஆர்.ஆர். நாடக சபாவில் இருக்கிறேன். ஓட்டெடுப்பில் நான் வெற்றிபெற்ற தகவலை என்னிடம் வந்து சொன்னவர்கள் கே. வீரப்பனும் கே. விஜயனும். கே. விஜயன், பின்னாடி சினிமாவில் இயக்குநராக ஆனார்.
டி.கே.எஸ். எல்லாவற்றையும் விளக்குவதுடன் நடித்தும் காண்பிப்பார். எப்படி உட்கார வேண்டும், எப்படி நடக்க வேண்டும் என்பது உட்பட எல்லாவற்றையும் துல்லியமாக நடித்துக் காண்பிப்பார். இப்படி சொல்லிக்கொடுப்பதில் என்ன நிகழ்ந்தது என்றால், வெவ்வேறு நடிகர்கள் என்றாலும் எல்லாருமே டி.கே.எஸ். மாதிரியே இருப்பார்கள். சகஸ்ரநாமம் அப்படியல்ல. நடிப்பு சொல்லிக்கொடுக்க மாட்டார். அவர்தான் டைரக்டர் என்றாலும், இப்படி வேண்டும் அப்படி வேண்டும் என்றும் கேட்கமாட்டர். ஆனால், கதாபாத்திரத்தை நன்றாக விளக்குவார். அதனைச் சரியாகப் புரிந்துகொண்டால், நடிகர்கள் திறமையில் அப்பாத்திரத்தை சிறப்பாக நடிப்பார்கள் என்று கருதுவார். ‘இது சார்ந்து உனது சொந்த அனுபவங்கள் என்னன்ன வைத்திருக்கிறாயோ அதை நடிப்பில் போடு’ என்பார். நடிகர்களுக்கு பூரண சுதந்திரம் கொடுத்தார். இதனால், நடிகர்களின் தனித்துவத்தைக் காண் பிக்க வாய்ப்பு கிடைக்கும். ஒட்டுமொத்த நாடகத்திலும் நடிப்பில் ‘வெரைட்டி’ இருக்கும். இதனால், வெவ்வெறு விதமான திறமைகளை வெளிக்கொணர்ந்தார் எஸ்.வி. சகரஸ்நாமம். அவர் பெரிய கலைஞன். அவரைப் பற்றி மட்டும் ஒரு நாள் முழுக்க பேசிக்கொண்டிருக் கலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது.
சேவா ஸ்டேஜ், சென்னை ராயப்பேட்டையில் எஸ்.வி. சகரஸ்நாமம் வீட்டிலேயே இருந்தது என்று சொன்னேன். நாடகக்காரர்கள் எப்பொழுதும் உள்ளே போகலாம். அவர் வீட்டில் எந்நேரமும் கேரம் போர்டு ஆடிக்கொண்டு இருப்பார்கள். அவரும் விளையாடுவார். நாம் அதில் கலந்துகொள்ளலாம். இதனால், நடிகர்களுக்குள் நல்ல நட்பும் புரிதலும் இருந்தது.
சேவா ஸ்டேஜ் மட்டுமில்லாமல் நாடகக் கழகம், நாடகப்பள்ளி என்று இரண்டு அமைப்புகளையும் சகஸ்ரநாமம் வைத்திருந்தார். ஆனால், போதிய பொருளாதார வசதி இல்லை. எனவே கடுமையாக நஷ்டப்பட்டார். அரசாங்கத்தின் உதவியை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று நிறைய முயற்சிகள் செய்தார். நாடக உலகத்துக்கு அரசு என்னென்ன திட்டங்கள் செய்ய வேண்டும் என்று கோரிக்கையாக ஒரு கோப்பு தயார் செய்தார். அது காமராஜரிடம் இருந்தது; அதன்பிறகு கலைஞரிடம், அதற்கப்புறம் எம்.ஜி.ஆரிடம் இருந்தது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. அவர் மிகவும் விரும்பியது முழுக்க முழுக்க நாடகத்துக்காக மட்டும் ஒரு பெரிய நாடக அரங்கம். அக்கனவு கடைசிவரை நிகழவேயில்லை.
நான் உங்கள் கேள்வியில் இருந்து ரொம்ப தூரம் சென்றுவிட்டேன் என நினைக்கிறேன். இப்படி சகஸ்ரநாமம் இயக்கத்தில் ‘கவிச்சக்கரவர்த்தி’ நாடகத்தில் கம்பராக நான் நடித்தேன். அதற்கு எல்லாப் பக்கங்களில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. தமிழ்நாட்டுக்கு வெளியேயும் பத்திரிகைகள் பாராட்டி விமரிசனம் எழுதினார்கள். அதன் விளைவு, பம்பாயில் தமிழ்ச்சங்கம் ‘கவிச்சக்கரவர்த்தி’ நாடகம் நடத்தினபோது, அதற்குத் தலைமை தாங்கின இராணுவ மந்திரி கே.கே. மேனன், தன் தலைமையுரையில், “இவர் வெறும் ஜெயராமன் இல்லை, கம்பர் ஜெயராமன்’ என்று புகழ்ந்து சொன்னார். அதிலிருந்து என்னை கம்பர் ஜெயராமன் என அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.
சேவா ஸ்டேஜில் யார் கதை வசனம் எழுதினார்கள்?
எழுத்தாளர்கள் பி.எஸ். ராமையா, கோமல் சுவாமிநாதன், தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி போன்ற பெரிய எழுத்தாளர்கள் எல்லோரும் எழுதியிருக்கிறார்கள். தி. ஜானகிராமனை சேவா ஸ்டேஜின் ஒரு முக்கிய அங்கம் என்றுகூட சொல்லலாம். எங்கள் கூடவே இருப் பார்; நாடகக் குழுக்கள் வெளியூர் போகும்போது அவரும் வருவார். பம்பாய், கல்கத்தா போன்ற பிற மாநிலங்களுக்கு போனாலும் கூடவே வருவார். இதனால், சேவா ஸ்டேஜில் எங்கள் எல்லோருக்கும் இலக்கிய பரிச்சயமும் இருந்தது. இந்த இலக்கியப் பரிச்சயத்தினால் நான் நிறைய நன்மைகள் அடைந்திருக்கிறேன். சகஸ்ரநாமம் வீட்டிலேயே ஒரு பெரிய லைப்ரரி வைத்திருந்தார். யார் வேண்டுமானாலும் புத்தகங்கள் எடுத்துப் படிக்கலாம். எல்லோரும் அங்கே படித்துக்கொண்டு இருப்பார்கள். நடிகர்களுக்கு அடிப்படை இலக்கிய அறிவு வேண்டும் என்று அவர் நம்பினார்.
கு. அழகிரிசாமி எங்களுக்கு கதை வசனம் எழுதிக் கொடுத்துக்கொண்டு இருந்த காலம் அது. அந்த சமயத்தில், சிவாஜி, தன் நாடகங்களில் வரலாற்று நாடகங்களுக்கு என்று தனியாக ஒரு வசன உச்சரிப்பு பாணியை வைத்திருந்தார். ‘களம் கண்ட கவிஞன்’ என்கிற நாடகத்தில் சிவாஜி பேசின ‘ஹிஸ்டரி பாணி’ ரொம்ப புகழ்பெற்றது. நடிப்பிலும் பேச்சிலும் நான் அதிலிருந்து வேறுபட்டு ஒரு மாற்றம் செய்ய வேண்டும் என நினைத்தேன். அதற்கு கு. அழகிரிசாமியின் பேச்சுவழக்கைப் பயன்படுத்தினேன். அவர் தூத்துக்குடி, நெல்லை வழக்கில் பேசுவார். கொஞ்சம் கொஞ்சு கிற தன்மையில இருக்கும் அவர் பேசுவது. “என்ன சொல்லுதிய… என்ன பண்ணுவிய…’’ என்பதுபோல். சத்தமும் வேறு மாதிரி இருக்கும். அதை நான் மாற்றிப் பேச முயற்சி செய்தேன். “அசோகவனத்தில்… அனுமன்…. சிதாபிராட்டியை… தேடிக்கொண்டிருந்த காலத்தில்…’’ என்று கொஞ்சம் இழுத்து, ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவில் ரசிகர்களுக்கு கொஞ்சம் கற்பனை செய்ய நேரம் கொடுத்தேன். அதனால் ஒவ்வொரு வார்த்தைக்கும் ராகம் போட்டு இழுத்து சொன்னேன். அதில் சங்கீதமும் சுதியும் சேர்ந்திருக்கும். தம்பூரா சுதி மாதிரியே இருக்கும். அதிலேயே பாட்டுப் பாடிடுவேன். இதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது.
தேவி நாடகக் குழு, சேவா ஸ்டேஜ் தவிர
வேறு எந்தெந்த நாடகக் குழுக் களில் இருந்திருக்கிறீர்கள்?
ஒரு காலகட்டத்தில் நாடகங்களுக்கு வரவேற்பு குறைய ஆரம்பித்தது. அப்போது சகஸ்ரநாமத்தால் எங்கு சென்றும் நாடகம் போடமுடியவில்லை. அதனால், சகஸ்ர நாமம் தம்முடைய நாடகக் கம்பெனியை கோமல் சுவாமிநாதனிடம் ஒப்படைத்தார். அதற்குப் பிறகு ‘நவாப் நாற்காலி’, ‘ஜீஸஸ் வருவார்’ போன்ற நாடகங்களில் அவரும் நடித்தார். அதே காலகட்டத்திலே மனோகரின் நாடகத்திற்கு நல்ல வசூல் இருந்தது. எனவே, மனோகர் நாடகங்களில் நடித்தேன்.
எம்.ஆர். ராதா. நடத்திய ‘ஒத்தைவாடை தியேட்டர்’ பங்கெடுத்திருக்கிறேன். அவரின் ‘ராமாயணம்’, ‘ரத்தக் கண்ணீர்’ நாடகங்களிலும் நடித்திருக்கிறேன். தேவி நாடக சபாவிலிருந்த போது ஒரு நாள் நாங்கள் எல்லோரும் இரவோடு இரவாக புறப்பட்டு விழுப்புரம் வந்தோம். அங்கே எஸ்.வி. சுப்பையா அண்ணன் தலைமையில் ஒரு நாடகக்குழு இயங்கிக் கொண்டிருந்தது. அந்த நாடகக் குழுவிற்கு முதலாளி கிடையாது. அது முழுக்க முழுக்க நாடகத்தில் நடித்த தொழிலாளர்களால் நடத்தப்பட்டது. அந்தக் குழுவில் நாங்கள் இணைந்துகொண்டோம். அந்தக் குழு ஒரு நாடகம் போட்டபோது எம்.ஆர். ராதா தலைமை தாங்கினார். அப்போது அவர், “நீங்கள் இங்கே இருந்து கஷ்டப்பட வேண்டாம். நான் ‘ராமாயணம்’ நாடகம் போடப் போகிறேன். ஆகவே, நீங்கள் அந்த நாடகத்திற்காக வந்துவிடுங்கள்’’ என்றார். நாங்களும் சென்றோம். ‘ராமாயணம்’ நாடகத்தில் நான் விபூஷ்ணனாக நடித்தேன். இந்திரஜித்தாக குமரப்பா என்று ஒருவர் நடித்தார்.
கோலார் தங்கவயலில் ‘ரத்தக் கண்ணீர்’ நாடகம் போட்டுவிட்டு திரும்பிய நிலையில், திடீரென்று ஒருநாள் குமரப்பாவுக்கு பி.பி. அதிகமாகிவிட்டது. பக்கம் பக்கமாய் வசனம் பேசிய அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. எனவே. அதற்குப் பின்னால் அந்த வேடத்தில் நான் நடித்தேன். அவர் வைரம் செட்டியார் கம்பெனியின் வசனங்களையும் சேர்த்துப் பேசுவார். அதே போலவே நானும் பேசினேன்.
இப்படி நான் எல்லாப் பார்ட்டியிலேயும் இருந்திருக்கிறேன். யாரோடும் முரண்பட்டுக்கொள்ள மாட்டேன். அதுபோல் எல்லோரும் என்னை மரியாதையாகவும் நடத்தினார்கள்.
எம்.ஆர். ராதாவுடன் பணியாற்றிய அனுபவங்கள் எப்படியிருந்தது?
எம்.ஆர். ராதா, இந்த சமூகத்தை அரசை எதிர்த்தால் நாடகம் பார்க்க மக்கள் அதிகமாக வருவார்கள் என்று எதிர்பார்த்தார். அது நடந்தது. நாடகம் நடந்து கொண்டிருக்கும்போது கற்களை தூக்கி எறிவார்கள். அசரமாட்டார். ஜனங்கள் எழுந்திருக்கும்போது, “உட்காருங்கள், பொம்பளைங்களே உட்கார்ந்து பார்க்கிறாங்க. நீங்க ஏன் எழுந்து போறீங்க’’என்று மக்களை வைத்து மக்களையே மடக்குவார். பெரிய வக்கீல்களுக்குத் தெரியாத சட்ட நுணுக்கங்கள் எல்லாம்கூட அவருக்குத் தெரியும்.
உதாரணத்திற்கு, ‘ராமாயணம்’நடத்துறோம். ‘ராமாயணம்’நாடகத்தில் முதல் காட்சியில் ராமர், சீதை, ரிஷிகள் இருப்பார்கள். அவர்கள் எல்லோரும் சோமபாணம் அருந்திக்கொண்டே, குதிரையின் காலை நெருப்பில் வாட்டி சாப்பிடுவார்கள். இது ராஜாஜி எழுதிய ராமாயணத்திலேயே இருக்கிறது. அந்த காலத்தில் பிராமணர்கள் அசைவம் சாப்பிட்டிருக்கிறார்கள். அப்போது தமிழர்கள், அதாவது திராவிடர்கள் சாப்பிட மாட்டார்கள். இதனால் அந்த நாடகத்தை தடை செய்துவிட்டார்கள்.
பிறகு, ‘ரத்தக் கண்ணீர்’ நாடகம் இன்று புதுமையான காட்சிகளோடு நடைபெறும் என்று அறிவிப்பு செய்தார். அப்போது எங்கு பார்த்தாலும் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. அதற்கு ராதா, “போலீஸ் என்பது நமது பாதுகாப்புக்காக வந்திருக்கிறது. ஆகவே, தமிழர்களே நாடகத்திற்கு வாருங்கள்’’என்றார். ‘ரத்தக் கண்ணீர்’நாடகத்தில் ராமாயணத்தின் காட்சிகளை இணைத்துவிட்டார். நான் அந்த நாடகத்தில் வால்மீகியாக நடித்தேன். ‘ஒற்றை வாடை’தியேட்டரில் நடந்தது. ஜனங்கள் மிக அதிகமாக இருந்தார்கள். கலாட்டா வந்துவிடும் போல் தெரிந்ததால் உடனே ‘ரத்தக் கண்ணீர்’நாடகத்தை நடத்திவிட்டார். ஐ.ஜி. பார்த்தசாரதி ஐயங்கார், நாடகம் முடிந்தவுடன் பெரிய போலீஸ் பட்டாளத்தோடு
உள்ளே வந்து ராதாவிடம், “உங்களை கைது செய்கிறோம்’’என்றார். அதற்கு ராதா, “நான் ராமாயணம் நடத்தவில்லை’’என்றார். மேலும், “நீங்க என்னை கைது செய்யுங்க. ஆனால், நல்லா யோசனை பண்ணி செய்யுங்க. ஏனெனில், ராமாயணத்தில் 18 வகையான ராமாயணம் இருக்கிறது. எந்த ராமாயணத்திற்காக கைது செய்றீங்கன்னு சொல்லிவிட்டு செய்யுங்க’’என்றார். போலீஸ்காரர்கள் குழம்பிவிட்டார்கள். திரும்பிப் போனார்கள். இதே வாதத்தை கோர்ட்டிலும் வாதாடி வழக்கை உடைத்து திரும்பவும் ‘ராமாயணம்’நாடகம் நடத்தினார்.
உள்ளே இவ்வளவும் நடந்துகொண்டு இருந்தபோது, வெளியே ஜனங்கள் கலைந்துபோகாமல் அப்படியே இருந்தனர். இதைக் கேள்விப்பட்ட ராதா உடனே மேடைக்கு வந்து, “அவர்கள் என்னைக் கைது செய்யவில்லை; அதனால் கலைந்து செல்லுங்கள்’’என்றார். ஆனால், அதை போலீஸ்காரர்கள் சொல்கிற வரையில் ஜனங்கள் கலைந்து செல்லவில்லை.
அக்காலம் திராவிட அரசியல் இயக்கப்
போராட்டங்கள் உச்சத்தில் இருந்த காலம்.
நீங்கள் அரசியல் போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறீர்களா?
இல்லை. ஆனால், இந்தித் திணிப்பின்போது, வலுக்கட்டாயமாக நான் ஒரு அரசியல் கைதியாக சித்தரிக் கப்பட்டு துன்பப்படுத்தப்பட்டேன். அதனை இங்கே சொல்லியாக வேண்டும். 1962ஆம் வருடம் என்று நினைக்கிறேன். ஏ. வீரப்பன், நான் உட்பட மொத்தம் இருபத்தேழு பேர் ராயப்பேட்டை ஜம்மி பில்டிங்கில் குடியிருந்தோம். அதற்கு எதிர்த்தார்போல் தபால் அலுவலகம். அங்கே ஒரு நாள் ஐந்தாறு சின்னப் பசங்க வந்தார்கள். அவர்கள் கையில் ஒரு தார் டப்பா இருந்தது. அதை வைத்து இந்தியில் இருந்த எழுத்துக்களை அழித்தார்கள். அதன்பிறகு, அங்கு தரையில் இருந்த எல்லாப் பொருள்களையும் காலால் நெம்பித் தள்ளி உடைத்தார்கள். சில பொருட்களை வெளியே கொண்டுவந்து போட்டு எரித்தார்கள். அதன்பிறகு சென்றுவிட்டார்கள். அவர்கள் சென்றபிறகு எங்கள் பில்டிங்கில் இருந்த யாரோ போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்திருக்கிறார்கள்; வாணி ஆர்ட்ஸில் இருந்தவர்களாக இருக்கலாம் என நினைக்கிறேன்.
போராட்டக்காரர்கள் சாமான் களை உடைத்துவிட்டு செல்லும்போது, நாங்கள் மாடியில் உட்கார்ந்திருந்தோம். சாப்பாட்டுக் கடை ஒன்றுகூட இல்லை. எங்களுக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மெடிக்கல் எக்யுப்மெண்ட் எல்லாம் வைத்துக்கொண்டு சாலையில் நின்றுகொண்டு இருந்தார். கலவரமாக இருந்ததால், அவர், நாங்கள் தங்கியிருந்த கட்டிடத்திற்கு வந்துகொண்டிருந்தார். போராட்டக்காரர்கள் பக்கமிருந்து அவர் வருவதை அஜந்தா ஹோட்டல் பக்கமிருந்து வந்த போலீஸ் பார்த்திருக்கிறது. இதனை வைத்து எங்கள் பில்டிங்கில் தங்கியிருந்தவர்கள்தான் செய்திருப்பார்கள் என்று முடிவுசெய்து, மூன்று மாடியிலும் இருந்தவர்களை அடித்து துவசம் செய்தனர். நான் அந்தக் கூட்டத்திலிருந்து தப்பி போலீஸ் வேனுக்குள் உட்கார்ந்துகொண்டேன். அதன்பிறகு பார்த்தால் மற்ற எல்லோரையும் கூட அடித்து போலீஸ் வேனில் ஏற்றினார்கள். எங்களைக் கொண்டு போய் இரவு 12 மணிக்குதான் சிறை யில் அடைத்தார்கள். அங்கு ஏற் கெனவே 6000 பேர் இரத்தக் காயத்துடன் இருந்தார்கள்.
அப்போது ஜெயில் சுப்பிரண்டண்ட் வந்து, “எஸ்.எஸ்.எல்.சி. படிச்சவங்க எல்லாம் வரிசையாக வாங்க’’என்றார். அப்படியானால், படிக்காதவங்களை வரிசையில் நிறுத்தி அடிக்கப் போகிறார்கள் என்று அர்த்தம். அந்த சமயத்தில் என் ‘பர்சில்’ ஒரு நோட்டீஸ் இருந்த ஞாபகம் வந்தது. அந்த நோட்டீஸில் நானும் சகஸ்ரநாமமும் ஒரு நாடகத்தில் நடிப்பதாக அச்சிடப்பட்டிருந்தது. அந்த நோட்டிஸை சுப்பிரண்டண்டிடம் காண்பித்து, “நாங்க வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம். எங்களையும் பிடித்துக் கொண்டுவந்து விட்டார்கள்’’என்று சொன்னேன். உடனே அவர், “இவுங்களை இனிமேல் அடிக்காதீங்க’’ என்று சொல்லிவிட்டு எங்களை தனியே உட்கார வைத்தார். அதற்குப் பிறகு அங்கிருந்த 6000 பேரையும் அடி அடியென்று அடித்தார்கள். மிகக் கொடுமையான காட்சி அது. ஜெயில் சுப்பிரெண்ட் எங்களிடம், “உங்களுக்கு என்ன வசதி வேண்டுமோ சொல்லுங்கள், செய்து தருவார்கள்’’என்றார். அதே மாதிரி செய்தும் தந்தார்கள். நான்கு நாட்களுக்குப் பிறகு எங்களை மட்டும் வெளியேவிட்டார்கள். ‘என்ன எங்களை மட்டும் வெளியே விட்டுவிட்டார்கள்’ என்ற ஆச்சரியத்துடன் வெளியே வந்து பார்த்தால், அங்கு மரத்தடியில் சகஸ்ரநாமமும் நடிகர் முத்துராமனும் எஸ்.ஆர். கோபாலும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் தான் எங்களை வெளியில் கொண்டு வந்தார்கள் என்று தெரிந்துகொண் டோம்.
அப்போது பக்தவத்சலம் முதலமைச்சராகவும் சிங்காரவேலு போலிஸ் கமிஷனராகவும் இருந்தனர். இந்த இரண்டு பேரின் தலையைக் கொண்டுவந்தால் 100 ரூபாய் பரிசு என்று மாணவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார்கள். அத னால் அவர்கள் இருவரும் தங்கியிருக்கும் இடங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இத்தனைக் கெடுபிடிகளுக்கும் நடுவே அவர்களை எப்படியோ சந்தித்து, எங்களை வெளியே கொண்டு வருவதற்கு அனுமதி வாங்கியிருந்தார் சகஸ்ரநாமம். நாங்கள் ஜெயிலில் சரியாக சாப்பிட்டிருக்க மாட்டோம் என்று நினைத்து நிறைய பட்சணங்களையும் வாங்கிக்கொண்டு வந்திருந்தார். நடிகர்கள் மேல் அவருக்கு அப்படியொரு அன்பு. என்னுடைய வாழ்க்கை அடிச்சுவட்டில் அப்படியொரு மனிதரை நான் சந்தித்தது எனது பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்தச் சம்பவத்துக்குப் பிறகு போலீஸைக் கண்டாலே எனக்கு நடுக்கம் வந்துவிடும். அதனால், சகஸ்ரநாமம் வீட்டின் மாடியிலேயே என்னைத் தங்கவைத்தார்.
சினிமாவுக்கு எப்போது வந்தீர்கள்?
இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன், ஏ.வி.எம்.இன் ‘அன்னை’படத்தின் ஹரிநாத் என்ற கதாநாயக வேடத்திற்காக, என்னைக் கூட்டிச் சென்று செட்டியாரிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது செட்டியார், “ஏதாவது நடிங்க’’ என்றார். அங்கேயே, கோபாலகிருஷ்ணன் பெண்ணாகவும் நான் ஆணாகவும் ஒரு காதல் காட்சியில் நடித்துக் காண்பித்தோம். உடனே செட்டியார், “நல்லா இருக்கு. கிருஷ்ணன் பஞ்சுவை காண்டக்ட் பண்ணுங்க’’என்றார். பிறகு, அவரைப் போய் பார்த்தோம். இரண்டு நாள் கழித்து எனக்கு உயரம் போதவில்லை என்று சொல்லிவிட்டார்கள். என்னுடைய முதல் கதாநாயக வாய்ப்பு இப்படி கைநழுவிப் போனது. அடுத்ததாக சீனிவாசன் என்ற டைரக்டரிடம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்னை கூட்டிக்கொண்டு போனார். அப்போது ராமநாதன் என்பவரை ஜூபிடர் பிக்சர்சில் புக் செய்திருந்தார்கள். அங்கே, சோலமலை என்பவர் கதாசிரியராக இருந்தார். அவர் மிகவும் வற்புறுத்தியதால் ராமநாதனை கதாநாயகனாக போட்டார்கள். இதனால், என்னுடைய இரண்டாவது கதாநாயகன் வாய்ப்பும் பறிபோய்விட்டது.
ஏ.எஸ்.ஏ. சாமி, என்மீது பிரியம் கொண்டவர். அவர் பிரசாத் என்பவரை பார்க்கச் சொன்னார். அவரைப் போய் பார்த்தேன். ‘தாயுள் ளம்’என்ற படம். என்னை உயரம் குறைவு என்று போகச்சொல்லிவிட்டார்கள். அந்தப் படத்தில் வளையாபதி நடித்தார். ஆனால், உண்மையிலேயே அவர் என்னைவிட உயரம் குறைவு. அதே நேரம் அவர் ஏற்கெனவே சினிமாவில் நடித்திருந்தார் என்பது அவரது கூடுதல் தகுதியாக இருந்தது.
அதன்பிறகு, ஏ.எஸ்.ஏ. சாமி அவரது டைரக்ஷனிலேயே உருவாகிய ‘கைதி கண்ணாயிரம்’படத்தில் ஒரு வேடம் தந்தார். அந்த வேடம் படத்தில் முக்கியமானதாக இருந்தது. அப்போது அதன் தயாரிப்பாளர் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் அவர்களுக்கும் ஏ.எஸ்.ஏ. சாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், ஏ.எஸ்.ஏ.சாமி விலகிவிட்டார். ‘கைதி கண்ணாயிரம்’படத்தை டி.ஆர். சுந்தரமே தொடர்ந்து டைரக்ட் செய்தார். என்னுடைய வேடம் மிகக் குறைவாகவும், தங்கவேலுவின் வேடம் மிக முக்கியமானதாகவும் மாற்றப்பட்டது. அது சின்ன வேடம் என்றாலும் முக்கியமான வேடம்; ‘கைதி கண்ணாயிரம்’தான் எனது முதல் படம்.
எனக்கு திருமணம் ஆகி முதல் குழந்தை பிறந்தது. நடிப்பினால் வரும் சம்பாத்தியத்தை வைத்து இனிமேல் குடும்பத்தை நடத்த முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, ‘உதவி இயக்குநராக ஆவது’என்று முடிவு செய்தேன். அதற்கான வாய்ப்பும் அப்போது இருந்தது. 1962ஆம் வருடம் ஏ.வி.எம்.இல் ‘உயர்ந்த மனிதன்’படம் எடுத்தார்கள். அப்போது ஏ.வி.எம்.இல் ஸ்டிரைக் வந்தது. ‘உயர்ந்த மனிதன்’அப்படியே நின்று போனது. பிறகு, இரண்டு வரும் கழித்து அதே படத்தை மீண்டும் எடுத்தார்கள். அதன் இயக்குனர்களில் ஒருவரான பஞ்சு, உதவி இயக்குனராக என்னை அழைத்தார். ஜாவர் சீதாராமன்தான் அந்தப் படத்திற்கு வசனம் எழுதி இருந்தார். உதவி இயக்குநர் வாய்ப்பு என்னைத் தேடி வந்ததற்கு அவரும் ஒரு காரணம். மாதம் 300 ரூபாய் சம்பளத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தேன்.
உதவி இயக்குநராக சேர்ந்த பிறகு நாடகத்திற்கெல்லாம் போகக்கூடாது என்று சொல்லிவிட்டனர். சகஸ்ரநாமத்திடம் நான் இந்த விஷயத்தை சொல்ல, அவர், “நீ வேலையெல்லாம் விடவேண்டாம். நாடகத்திற்கு மட்டும் போகிறேன் என்று நான் சொன்னதாக பஞ்சு சாரிடம் சொல்’’என்றார். நான் பஞ்சு சாரிடம் சொல்ல, அவரும் சரி என்றார்.
நான் காலை ஒன்பது மணிக்கே ஸ்டூடியோவிற்கு சென்றுவிடுவேன். அங்கே சிவக்குமார், வாணிஸ்ரீ, சோஜாரமணி, பாரதி ஆகியோர்களுக்கு வசனம், தமிழ் உச்சரிப்பு, நடிப்பு ஆகியவற்றை எல்லாம் சொல்லிக் கொடுப்பேன். கிருஷ்ணண் பஞ்சுவிடம் இருபது வருடங்கள் வேலை பார்த்தேன்.
உங்கள் அனுபவத்தில் நாடகத்துக்கும் சினிமாவுக்கும்
என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?
இரண்டும் வெவ்வேறு ஊடகங்கள். ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கேயுரிய பலங்களும் பலவீனங்களும் உள்ளன. சினிமாவில் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நாடகத்தில் அப்படி செய்ய முடியாது. கல்கத்தாவில் ‘சேது’ என்று ஒரு நாடகம். அந்தக் கதையில் மனைவிக்கு தான் மலடு என்று தெரிந்ததும் தற்கொலை செய்துகொள்வதற்காக அவள் ரயிலை நோக்கி ஓடுகிறாள். நாடகத்தில் இதைக் காண்பிக்க, முழுக்க முழுக்க லைட் எபெக்ட்ஸைப் பயன்படுத்தினார்கள். தவப்சென் என்ற டெக்னிஷியன்தான் செய்தார். மிகவும் சிரமப்பட்டு செய்தார். சினிமாவில் சுலபமாகச் செய்துவிடலாம்.
சினிமாவில் நடிப்பு மிகவும் எளிமையாகிவிட்டது. பேச்சு மட்டும் இருந்தால் இன்றைக்கு நடித்துவிடலாம். நாடகத்தில் அது முடியாது.
வீட்டில் குழந்தைகளை எப்படி பாதுகாப்பார்களோ அப்படித்தான் நாடக கம்பெனிகளில் எங்களைப் பாதுகாத்தார்கள் தீபாவளி, பொங்கலுக்கு துணி எடுத்து தையல்காரரை வரவழைத்து தைப்பார்கள். அதெல்லாம் அருமையான அனுபவங்கள். இந்த கவனிப்பு சினிமா வில் கிடையாது. ஆனால், சினிமா நடிகர் எல்லோரும் செழுமையுடன் இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது. சினிமாவில் எம்.ஜி.ஆர். நடிப்பதற்கு ஆறு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குவார். ஆனால் 25,000 ரூபாய்க்குதான் கையெழுத்து போடுவார். அவருக்கு அடுத்ததாக இதே முறையை சிவாஜி பின்பற்றினார். அதன்பிறகு எல்லா நடிகர்களும் பின்பற்றினர். சினிமா விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் என்று எல்லோருமே இதே நடைமுறையை பின்பற்றத் தொடங்கினர். இதனால்தான் கருப்பு பணம் சினிமாவில் புழங்கத் தொடங்கியது. இந்த கருப்பு பணத்தால் பெரிய நடிகர்கள் தவிர மற்ற நடிகர்கள் எல்லோரும் பாதிக்கப்பட்டனர். எங்களைப் போன்ற நடிகர்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு, லட்சம் ரூபாய்க்கு கையெழுத்து வாங்குவார்கள்.
இன்று நினைத்துப் பார்க்கும்போது நாடக அனுபவம்தான் பிரமாதமாகப் படுகிறது. நாடகத்தில் பாத்திரமாக நடிப்பவர்களை உண்மையான பாத்திரங்களாக மக்கள் நினைத்தனர்.
நாடகம், சினிமாவுக்குப் பிறகு தொலைக்காட்சி
சீரியல்களிலும் நடித்திருக்கிறீர்கள்?
சினிமாவால்தான் நாடக கம்பெனிகள் சீரழிந்து போயின. நாடக நடிகர்கள் சிரமப்பட்டார்கள். ஆனால், சினிமாவிற்குப் பிறகு வந்த சீரியல்கள் நாடக நடிகர்களுக்கு ஓரளவுக்கு வாய்ப்புகளைத் தந்தன. பணமும் வசதியும் கிடைத்தது. ஆனால், இன்னொரு ஆபத்து நிகழ்ந்தது. சீரியல்களை மக்கள் நாடகமாக நினைத்துக்கொண்டார்கள். அது நாடகத்தை முழுமையாக சாகடித்தது. 180 நாடக சபாக்கள் இருந்த ஊரில் இன்று எல்லாமே காணமல் போய்விட்டன. இப்போது நாடகங்களுக்கு ஸ்பான்சர் வாங்கித்தான் நடத்துகிறார்கள். அப்போதும் எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் மாதிரி கூத்தடிக்கிற நாடகம்தான் இருக்கிறது.
நடிகர்களில் உங்களை அதிகம் பாதித்தவர் யார்?
இருவரைச் சொல்லவேண்டும். ஒருவர் எம்.கே. ராதா. அவர் கண்ணாலே நடிப்பார். என்னுடைய நடிப்புக்கு அவர்தான் ஆதர்சம். இன்னொருவர், என்னோடு நாடகக் கம்பெனியில் இருந்த செல்லப்பா என்பவர். அவர்தான் மந்திரிகுமாரியில் நடிப்பதாக இருந்தது. பின்னாளில் அவர் மறைக்கப்பட்டுவிட்டார். நடிப்பு என்பதை நான் இவரிடமும் கற்றுக்கொண்டேன்.
திலகம் படத்தில் கம்பர் ஜெயராமன்
No comments:
Post a Comment