Sunday 12 April 2020

KERALA MAGICIAN






செய்வினைக்கு ஒரு செய்வினை 

பணக்காரர்களுக்கென பிரத்யேகமாக இரண்டு குணங்கள் உண்டு. 5 லட்ச ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டிய காரியத்தை, சாமர்த்தியமாக வெறும், 500 ரூபாயில் முடிப்பவர்கள், ஒரு வகை.

வெறும், 500 ரூபாயில் முடிக்கக் கூடிய காரியத்தை, வறட்டுப் பிடிவாதமாக, 5 லட்சம் வரை செலவு செய்தும், முடிக்க முடியாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருப்பவர்கள், இரண்டாவது வகை.
என் மச்சான் மகாலிங்கம், இரண்டாவது வகையை சேர்ந்தவர்.
சென்னை, சோழிங்கநல்லுார் பகுதியில் அவர், வளைத்துப் போட்டிருந்த, 2 கிரவுண்டு பொறம்போக்கு நிலம் தொடர்பாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு பிரச்னை இருந்தது. அவர், வளைத்துப் போட்டிருந்த, 80க்கு 60 அடி பொறம்போக்கு நிலத்தில், 80 சதுர அடி, பிரச்னை கொடுத்தது.
அந்த வில்லங்கத்துக்கு நீர் பாய்ச்சி, உரம் போட்டு, விருட்சமாக வளர விட்டிருந்தார், மகாலிங்கத்தின் பக்கத்து நிலத்தை ஆக்கிரமித்திருந்த, வீராசாமி.
வீராசாமி ஆக்கிரமித்து வைத்திருந்த, 2 கிரவுண்டு நிலத்திற்கு, இடது புறம், 80 சதுர அடியை, பெரு நகர சென்னை மாநகராட்சி ரோடு போடுவதற்காக, 'லவட்டி' விட்டதால் உஷாரானார்.

உடனடியாக, மாநகராட்சி லவட்டியதை, வலது பக்கமாக, மகாலிங்கம் ஆக்கிரமித்திருந்த நிலத்திலிருந்து கைப்பற்றி, ஈடு செய்து விட்டார்.
நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த போதே மகாலிங்கம், சுற்றுச்சுவர் எழுப்பி இருந்தால், பிரச்னை வந்திருக்காது. 5,000 ரூபாய் செலவில் விஷயம் முடிந்திருக்கும். வீராசாமியாலும் எதுவும் செய்திருக்க முடியாது.
எதிர்காலத்தில், நல்ல விலை கிடைத்தால், எவர் தலையிலாவது கட்டி, காசு பார்க்கும் எண்ணத்தில் இருந்தார், மகாலிங்கம். அதனால் தான், கட்டடமும் கட்டாமல், சுற்றுச்சுவரும் எழுப்பாமல் அமைதியாக இருந்தார்.
'ஏன்யா... உன் மச்சான் கோடீஸ்வரங்கற. அவர் ஏன், கோவணாண்டி வீராசாமி நிலத்துக்கு பக்கத்து நிலத்தை வாங்கித் தொலைக்கணும்... கொஞ்சம் தள்ளி, வேற பக்கத்துல, மடக்கிப் போட்டிருக்கலாம்ல...' என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?
இன்றைக்கு, ஓ.எம்.ஆரின் அடையாளமாக ஓங்கி உயர்ந்து நிற்கும், 'ஹாலிடே இன்' ஓட்டலுக்கும், 'ஐஸ்வர்யா பெர்டிலிட்டி' ஆஸ்பத்திரிக்கும் நடுவில் தான், மச்சானின், ஷாலிமார் 'டிவி' கம்பெனி இருந்தது.
அரசியல் கட்சியின் பிரபலம் ஒருவர், ஷாலிமார், 'டிவி' தயாரிப்புகள் அனைத்தையும், மச்சானிடம் கடனுக்கு வாங்கினார். அதை விற்று, வாங்கிய கடனை கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்.
நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருந்த மச்சானின், 'டிவி' கம்பெனி ஊத்தி மூடிக்கொண்டது. அந்த கம்பெனியில் தான், காவலாளியாக இருந்தான், வீராசாமி.
சோழிங்கநல்லுாரில் பொறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடும் திட்டம் துவங்கியதுமே, மச்சானிடம், '2 கிரவுண்டை மடக்கிப் போடுங்க, மொதலாளி... அப்பால கொள்ளை வெல போகும்; ஒண்ணும் பிரச்னை வராது. வந்தா, நான் பாத்துக்கறேன். அரசியல்வாதிகள்லாம் நம் ஆளுங்க தான்...' என்று வார்த்தையில் தேனைக் கலந்து குழைத்து சொன்னான், வீராசாமி.

மச்சானை மயக்கி, 4 கிரவுண்டு பொறம்போக்கு நிலத்தில், 2 கிரவுண்டை, தனக்கும், 2 கிரவுண்டை அவருக்குமாய் சுவாதீனப்படுத்தி கொண்டான். அதில், 80 சதுர அடி நிலத்தில், 'ரிங்' ரோடு அமைக்க, அரசு எடுத்துக் கொண்டதில் தான், பிரச்னை ஆரம்பித்தது.
இன்றைய தேதியில், சோழிங்கநல்லுார் பகுதியில், 1 கிரவுண்டு நிலம், ஒரு கோடிக்கு விலை போகிறது.
ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்குபவர்கள், வில்லங்கம் எதுவுமில்லாத, பட்டா நிலத்தை வாங்க முன் வருவரே தவிர, பொறம்போக்கு நிலத்தை அல்ல.
மச்சான் மகாலிங்கத்தின் சோழிங்கநல்லுார் நிலத்துக்கு பட்டா வாங்க, ஒரு லட்ச ரூபாய்க்கு நிலத்தை விற்ற வட்டச் செயலரை அணுகினர். அவரிடம் மேலும், 50 ஆயிரம் ரூபாயும், நிலத்தை அளக்கும் சர்வேயருக்கு, 50 ஆயிரம் ரூபாயும் கொடுத்து, அளந்தபோது தான், ஆக்கிரமித்த நிலத்தில், 80 சதுர அடி பறிபோனது தெரிந்தது.
வீராசாமி சார்ந்திருந்த கட்சி, ஜாதி ரீதியானது. அவனது மனைவி சேர்ந்திருந்த கட்சி மற்றும் வீராசாமியின் மகனும் ஒரு கட்சியில் இளைஞர் அணி பொறுப்பாளனாக இருந்தான். பிரச்னையை கோர்ட்டுக்கு கொண்டு போகவும் வழி இல்லை. காரணம், பட்டா இல்லை.

மனைவி மூலம், இந்த பிரச்னை, என் கவனத்திற்கு வந்த போது, 'ஏண்டி... ரெண்டு கோடி ரூபா மதிப்புள்ள நிலம்ங்கறே. அதனால, ரெண்டு லட்சமோ, நாலு லட்சமோ அந்த வீராசாமிட்ட துாக்கி எறிஞ்சா, 80 சதுர அடி என்ன, அவன் ஆக்கிரமிச்சு வெச்சிருக்குற, 2 கிரவுண்டையும் சேர்த்து கொடுத்துடுவானேடி...' என்றேன்.
'என்னங்க பேசுறீங்க, இது எங்கண்ணனோட கவுரவப் பிரச்னை. 50 லட்ச ரூபாய் செலவு பண்ணி, அந்த வீராசாமியை அங்கேர்ந்து துண்டைக் காணும், துணியைக் காணும்ன்னு தொரத்தி விட்டாலும் விடுவாரே தவிர, அவரோட நிலத்துல, 80 சதுர அடியை, 'லவட்டின' அவனுக்கு, அஞ்சு ரூபா கூட கொடுத்து ராசியாக மாட்டாருங்க...' என்றாள்.
'அதுக்கு மேல உங்கண்ணனாச்சு, அந்த வீராசாமியாச்சு. என்னை ஆளை விடும்மா...' என்று, 'ஜகா' வாங்கினேன்.
ஆனால், விஷயம் அதோடு முற்று பெறவில்லை.
மூன்றாம் நாள், என் வீடு தேடி வந்தார், மைத்துனர் மகாலிங்கம்.
''என்ன மச்சான், வீடு தேடி வந்திருக்கீங்க. ஒரு போன் பண்ணியிருந்தா நானே வந்திருப்பேனே,'' என்றேன்.
சோபாவில் அமர்ந்த மகாலிங்கம், பாக்கெட்டிலிருந்து எடுத்த ஒரு காகிதத்தை நீட்டி, ''இதை படிச்சு பாரு,'' என்றார்.
அதில், விளம்பரம் ஒன்று இருந்தது.
விளம்பரத்தை படித்து, 'திருதிரு'வென விழித்தேன்...
''என்ன மச்சான் இது?'' என்றேன்.
''உங்களை அலட்டிக் கொண்டிருக்கும் பிரச்னைகளுக்கும், சத்ரு தோஷம் நீங்குவதற்கும், பரிகார பூஜைகள் செய்து, குட்டிச் சாத்தான் கருசக்தி வாங்கினால், சகல சவுபாக்கியங்களும் ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்ன்னு போட்டிருக்கில்ல.''
''ஆமாம், போட்டிருக்கு. அதுக்கென்ன இப்போ?''
''அதான். பரிகார பூஜை செய்யுறதுக்கு, டி.டி., எடுத்து அனுப்பிட்டேன். நீ போய் பிரசாதமும், அந்த குட்டிச் சாத்தான் கருசக்தியும் வாங்கிட்டு வந்துடு,'' என்றார், மகாலிங்கம்.

''பணம் அனுப்பிட்டீங்களா... எவ்வளவு அனுப்பினீங்க?''
''நாராயணன் குட்டி பேருக்கு, ஸ்டேட் பாங்க்ல, 50 ஆயிரம் ரூபாய்க்கு, டி.டி., எடுத்து அனுப்பி வைச்சிட்டேன்.''
''வீராசாமிட்ட, ஒரு அஞ்சோ, பத்தோ கொடுத்து பிரச்னையை, சுலபமா முடிக்கறதை விட்டுட்டு, இது என்ன வேண்டாத வேலை. இதெல்லாம் சுத்த பிராடு. இதனால, பிரச்னை தீந்துடும்ன்னு நம்புறீங்களா?'' என்றேன்.
ஆவேசமாக, ''இத பாரு மச்சான், 50 ஆயிரம் ரூபாய் இல்லே, 5 கோடி செலவானாலும் பரவாயில்லை. அந்த எடுபட்ட பய, வீராசாமிக்கு, சல்லிக் காசு கொடுத்து, சமரசம் ஆக மாட்டேன். என்னாண்ட கை கட்டி நின்னு சம்பளம் வாங்கிட்டிருந்தவன், என் இடத்தை ஆக்கிரமிச்சு கொட்டாய் போட்டுகின்னு, எனக்கே வேடிக்கை காட்டுறானா... விடமாட்டேன், விடவே மாட்டேன்,'' என்றார், மகாலிங்கம்.
''சரி, ஈசியா போயிட்டு வந்துடுன்னு சொல்றீங்களே... எனக்கு, கோர்ட்டுல முக்கியமா ரெண்டு வழக்கு இருக்கே,'' என்று தட்டிக் கழிக்க முயன்றேன்.
''எனக்காக ஒரு நடை நீ நேர்ல போயிட்டு வந்துடு. கார், 'புக்' பண்ணி இருக்கேன். திரிசூர்ல அறை போட்டு தங்கிட்டு, நீயும் தங்கச்சியுடன் காலையில புறப்பட்டு போயிருங்க,'' என்று சொல்லி, அந்த நாராயணன் குட்டியின் விலாசத்தையும், டி.டி., அனுப்பி இருந்த, 'கவுன்டர்பாயிலை'யும் என்னிடம் கொடுத்தார்.
நானும், என் மனைவியும் மாராணியில் தடம் சேர்ந்த போது, அந்த பீடாதிபதி நாராயணன் குட்டியே வாசலில் நின்று, எங்களை வரவேற்றார். சும்மாவா, 50 ஆயிரம் ரூபாய் ஆயிற்றே!
பரந்து விரிந்து இருந்தது, நாராயணன் குட்டியின் குடில். குடிலைத் தொட்டபடி, குட்டிச் சாத்தானின் கோவில். கர்ப்ப கிரகத்தைச் சுற்றி ஏராளமான விளக்குகள் எரிந்து கொண்டிருந்தாலும், சன்னிதி இருட்டாகவே இருந்தது.
சுற்றிலும் தென்னந்தோப்புக்கள், வாழை மரங்கள் மற்றும் பூச்செடிகள். வலது புறத்தில் இருந்த சிறிய கட்டடத்தில், உணவு தயாராகிக் கொண்டிருந்தது.
குடில் முழுவதும், சுவர்களில், நாராயணன் குட்டி, நல திட்ட உதவிகள் செய்தது புகைப்படங்களாக பிரகாசித்துக் கொண்டிருந்தன.
''ஏதாவது புரிஞ்சுதா?'' என்றேன், மனைவியை பார்த்து.
''ஊர் மக்களுக்கு நிறைய நல்லது செஞ்சிருக்காருன்னு தெரியுது.''
''மண்டு. இந்தாளு பண்ணிட்டிருக்குற பிராடும், பித்தலாட்டமும் வெளியே தெரியாம இருக்க, ஊர் ஜனங்களுக்கு, உதவிங்கற பேர்ல கொஞ்சம் துாக்கி போட்டு, வாயை அடைச்சு வெச்சிருக்கான்,'' என்றேன்.
''அப்படியா சொல்றீங்க?''
''பாரேன். எல்லாரோட பிரச்னைகளுக்கும் பரிகார பூஜை பண்ணி, குட்டிச் சாத்தான் மூலமா தீர்த்து வெக்கிறவரு, தன்னையும், தன்னோட குடும்பத்தையும் பாதுகாக்க, அந்த குட்டிச் சாத்தானை நம்பலை. நாலு அல்சேஷனை வெச்சிருக்காரு, பார்த்தே இல்லே.''
''அதானே,'' என்று கண்களில் ஆச்சரியம் காட்டினாள்.
''அங்க பாரு... பரிகார பூஜை பண்றதுக்கு வந்திருக்குற கூட்டத்துல உள்ளூர்க்காரன் எவனாவது இருக்கானா... எல்லாம் வெளியூர்லேர்ந்து வந்து இருக்குறவங்க,'' என்றேன்.
''அட... ஆமாம்ங்க.''
நாராயணன் குட்டியை நெருங்கி, ''நிங்கள் இ பரிகார பூஜை எப்போள் துவக்கும்?'' என வினவினேன்.
''சரியாய், 12:00 மணிக் கூர்க்கு. இப்போள் நிங்கள் போய் அவிட ஊணு கழிச்சிட்டு வரின்... ஒண்ணும் பேடிக்கண்டா... போய் ஊணு கழிச்சிட்டு வரின்,'' என்று மீண்டும் வலியுறுத்தினான், நாராயணன் குட்டி.
கார் டிரைவருடன், நாங்கள் மூவரும் மடப்பள்ளியில் நுழைந்த போது, அங்கு வெளியூர்களிலிருந்து வந்திருந்தவர்கள் வரிசையாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். நாங்களும் சாப்பிட்டோம்.
சரியாக, 12:00 மணிக்கு, குளித்து, ஈரம் சொட்டச் சொட்ட, குதித்துக் கொண்டே வந்தான், நாராயணன் குட்டி. அனைவரும் ஒதுங்கி நின்று வழி விட்டோம். சன்னிதிக்கு முன் நின்று கொண்டிருந்த, நாராயணன் குட்டியின் உதவியாளன், அவன் கைகளிலும், கால்களிலும் மார்பிலும் சலங்கைகளை கட்டி விட்டான்.
கருவறைக்குள் நுழைந்து, கதவை சாத்திக் கொண்டான்.
பதினைந்து நிமிட இடவெளியில், கருவறைக் கதவு படீரென்று திறந்தது. உள்ளே இருந்து, சலங்கை மணி ஒலிக்க, வெளியே வந்தான், நாராயணன் குட்டி.
இப்போது அவன் கையில், மணிகள் பொருத்தப்பட்ட ஒரு இரும்புச் சட்டம் காணப்பட்டது.
நாராயணன் குட்டியின் கண்கள் மேல் நோக்கி, நிலை குத்தி நின்றிருந்தன. காற்றுப் புகாத கருவறைக்குள் கால் மணி நேரம் இருந்ததன் விளைவாக, அவன் உடம்பு முழுவதும், முத்து முத்தாக வியர்வை.
குட்டியின் மீது, குட்டிச் சாத்தான் ஆவாஹணம் ஆகி இருப்பதாக அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டனர்.
எனக்குள் பொங்கி எழுந்த சிரிப்பை அடக்க, மிகுந்த பிரயாசைப்பட வேண்டியிருந்தது.
ஐம்பதாயிரம் ரூபாய் அம்போ என்பதை, அங்கு நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சி ஊர்ஜிதமாக்கியது.
குட்டி, 'லுலுலுலுலு ஊஊஊஊஊ' வென குலவையிட, உதவியாளன், ''பெருங்குடி மகாலிங்கம்,'' என்று அழைக்க, நான், அவன் முன் போய் நின்றால் சிரித்து விடுவேன் என்பதால், மனைவியை அனுப்பி வைத்தேன்.
மறுபடியும் ஒரு குலவை. ''இந்த பிரசாதத்தை எடுத்து போய் அந்த நிலத்துல துாவுங்க. பிரச்னை தீரும். பட்டா கிடைக்கும்,'' என்றான், உதவியாளன்.
குறி சொல்வது நிறைவடைந்தது. குட்டிச் சாத்தான் மலையேறியது.
உதவியாளனிடம், ''யாகம் எப்போ ஆரம்பமாகும்?'' என்று கேட்டேன்.
அவன், 'திருதிரு'வென்று முழித்தான்.
''யாக மொக்க நங்கள் நடத்தியோளும். நிங்கள் போய்க்கட்டே,'' என்றான், நாராயணன் குட்டி.
சென்னைக்கு காரில் வரும் வழியில், ''அந்த குலவைக்கு உதவியாளன் எப்படிங்க விளக்கம் சொல்றாரு. ஒண்ணும் புரியலையே,'' என்றாள், மனைவி.
''என்ன பிரச்னைன்னு விளக்கமா கடிதம் எழுதுங்கன்னு, விளம்பரத்திலேயே போட்டிருக்கான்ல. அதை வெச்சித்தான் அங்க அவனுக குறி சொல்லி வேடிக்கை காட்டிட்டிருக்காங்க,'' என்றேன்.
மச்சானின் திருப்திக்காக, குட்டிச்சாத்தான் பிரசாதம் என்று கையளித்த விபூதி, நிலத்தில் துாவப்பட்டது. ஒன்றும் வேலைக்காகவில்லை. பணம் பணால் ஆனது தான் மிச்சம்; பட்டா கிடைத்தபாடில்லை.
ஆறு மாதங்களுக்கு பின், ஒரு நாள்!
அலுவலகத்தில், கோர்ட்டில் வாதாட வேண்டிய ஒரு வழக்கு குறித்து, சட்ட புத்தகங்களிலிருந்து குறிப்பு எடுத்துக் கொண்டிருந்த போது, எதிரே நிழலாட, நிமிர்ந்து அதிர்ந்தேன்.
நின்றிருந்தது, மாராணியில் தடம், நாராயணன் குட்டி.
''வரின். வரின். எந்தா விசேஷம்... மாராணியில் மடம், நாராயணன் குட்டி, ஈ அட்வகேட் அருணாசலத்தை காண மெட்ராஸ் வரை வந்திருக்குன்னு,'' என்றபடி, இருக்கையை காட்டினேன்.
''சாரே... ஞான் இவிடே மெட்ராஸ்ல ஒரு பிராஞ்ச் துவக்கலாம்ன்னு, சோழிங்கநல்லுார்ல, 2 கிரவுண்டு நெலம் மேடிச்சு சாரே. அது புறம்போக்குன்னு இப்பளே நான் அறிஞ்ஞு. அதினே ஒரு பட்டா வேணும். அது கொண்டானு ஞான் சாரைக் காண மெட்ராஸ் வஞ்ஞிருக்குன்னு,'' என்றான், நாராயணன் குட்டி.
''எனக்கும், பட்டாவுக்கும் என்னய்யா சம்பந்தம்... நான், 'சிவில்' வழக்கு கையாளும் வக்கீல்யா. அப்புறம் ஒரு விஷயம், நீ ஏமாந்ததுக்கெல்லாம் அரசாங்கத்து மேல வழக்கு போட முடியாதுய்யா,'' என்றேன்.
''நான் அதெ அறியும் சாரே. நான் வழக்கு போடணும்ன்னு பறஞ்ஞது, ஆ புறம்போக்கு நெலத்தை எனிக்கு பட்டா லேண்டென்னு கள்ளம் பறைஞ்ஞு வித்த பார்ட்டி மேலயாணே,'' என்றான், நாராயணன் குட்டி.
''அது சரி. எல்லா பிரச்னைகளுக்கும் பரிகாரம் பண்ற, குட்டிச் சாத்தான கூட வெச்சிருக்குற நீ, உன் பிரச்னைக்கு என்னைத் தேடி வந்திருக்கே... ஏன், அந்த குட்டிச் சாத்தான் உன் பிரச்னையை தீர்த்து வெக்காதா?'' என்றேன்.
அவ்வளவு தான்.
மாராணியில் நாராயணன் குட்டி, என்னை எரித்து விடுவதைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தான்.

No comments:

Post a Comment