ANUTHAMAA ,WRITER BORN
1922 APRIL 16- DECEMBER 3,2010
அநுத்தமா அல்லது அனுத்தமா (ஏப்ரல் 16, 1922 - டிசம்பர் 3, 2010) ஒரு தமிழ்ப் பெண் எழுத்தாளர். ராஜேஸ்வரி பத்பநாபன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், சுமார் 300 சிறுகதைகள், 22 புதினங்கள், 15க்கும் மேற்பட்ட வானொலி நாடங்களை எழுதியுள்ளார். 1950களில் 60களிலும் நடுத்தர வர்க்கப் பெண்களின் வாழ்க்கையினை சித்தரிக்கும் படைப்புகளை எழுதியவர். தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டென் என்று புகழப்படுகிறார். இவரது குறிப்பிடத்தக்க புதினங்கள் மணல்வீடு, ஒரே வார்த்தை, கேட்டவரம் போன்றவை
மெட்ரிகுலேசன் வரை படித்த அநுத்தமா தன் சொந்த முயற்சியில் இந்தி, பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்றார். தனது 25வது வயதில் எழுதத் தொடங்கினார். இவரது முதல் படைப்பான ”அங்கயற்கண்ணி” (1947) கல்கி இதழ் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. அடுத்து கலைமகள் இதழ் நடத்திய போட்டியில் இவரது “மணல்வீடு” புதினம் முதல் பரிசு பெற்றது. இதற்குப்பின் பல்வேறு இதழ்களில் அநுத்தமா எழுதத்தொடங்கினார். 1956ல் இவருடைய பிரேமகீதம் என்ற புதினம் தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் விருதினைப் பெற்றது. ஒரே ஒரு வார்த்தை, வேப்ப மரத்து பங்களா போன்ற அநுத்தமாவின் புதினங்கள் கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. வேறு சில சிறுகதைகள் இந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. புனைவுப் படைப்புகளைத் தவிர சில குழந்தைகளுக்கான புத்தகங்களையும் அநுத்தமா எழுதியுள்ளார். மோனிகா ஃபெல்டன் எழுதிய ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
எழுத்தாளர் அநுத்தமா சென்ற டிசம்பர் மூன்றாம் தேதி மறைந்தார்; எண்பது வயதில். தமிழ் இலக்கிய உலகில் கலைமகள் பெண் எழுத்தாளர்களின் ஒரு வரிசை உண்டு. சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், எம்.ஆர்.ராஜம்மா போன்றவர்களின் வரிசையில் வரக்கூடியவர். அதிகமும் பிராமணப் பெண்களின் சமையற்கட்டு மூலை சார்ந்த கதைகள். உறவுச் சிக்கல்களை அலசுபவை. எளிய அன்பையும், தியாகத்தையும் தீர்வாக முன்வைப்பவை.
அநுத்தமாவின் கேட்டவரம் என்ற நாவலை க.நா.சு தன் பட்டியலில் சிபாரிசு செய்திருக்கிறார். அதை சுந்தர ராமசாமி மறுத்திருக்கிறார். அந்நாவலை மட்டும் நான் வாசித்திருக்கிறேன். கேட்டவரம் பாளையம் என்ற சிற்றூருக்கு வரும் ஒருவன் அங்கே ஒரு காதலில் சிக்குவதைப் பற்றிய கதை. வாசித்த காலகட்டத்தில் அந்த காதல் மென்மையாகச் சொல்லப் பட்ட விதமும், பெண்மன உணர்வுகள் நுனிவிரலால் தொட்டுக் கொள்வதைப்போல குறைவாக அளிக்கப் பட்டமையும் மனதைக் கவர்ந்தன. ஆனால் ஆழமான ஆக்கமாக தோன்றவில்லை.
அதேசமயம் வழக்கமான கலைமகள் நாவல்களை விட நுட்பமான யதார்த்த சித்திரம் கொண்ட நாவல் இது. இதில் ஒரு பள்ளிக்கூடம் வரும். பையன்கள் பெரும்பாலான நேரம் புளியங்காய் நறுக்கிக் கொண்டிருப்பார்கள். அதுதான் பள்ளியின் மூலதனம். ‘இப்படி புளியங்காய் நறுக்கி ரொம்பபேர் பீஏ பாஸாகியிருக்கிறார்கள்’ என்பார் ஆசிரியர். சற்றே நகைச்சுவை கலந்து சொல்லப் பட்ட ஒரு டம்பாச்சாரி கதாபாத்திரமும் ஆசிரியையின் திறனைக் காட்டும். ‘நெய்யில் பொரித்த அரிசி அப்பளம் ஒண்ணே ஒண்ணு தான் சாப்பிடுவேன்’ என்கிறார். அவரது பாவனைகளை வாசிக்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இத்தகைய டம்பாச்சாரிகள் வழியாக கிராமத்தில் புதியகால கட்டம் நுழைகிறது என்ற எண்ணம் ஏற்பட்டது.
க.நா.சு இந்நாவலை ஏன் சிபாரிசு செய்தார் என அவரிடம் சுந்தர ராமசாமி கேட்டபோது ’பெண்களுக்கு ஓர் அந்தரங்க உலகம் உள்ளது, அது இலக்கியத்துக்கு வரவேண்டும்’ என்றாராம் க.நா.சு. ’இப்போதைக்கு வந்திருப்பதில் இது நம்பகத் தன்மையுடன் அதிக மிகையுணர்ச்சிகள் இல்லாமல், உபதேசங்கள் இல்லாமல் இருக்கிறது ஆகவே சொன்னேன்’ என்றாராம்.
அது சரியான பார்வைதான் என நினைக்கிறேன். இன்றும் பெண்களின் எழுத்து இந்த எல்லையைத் தாண்டி ஒன்றும் போகவில்லை. பிராமணச் சமையலறை வேறு சாதிகளின் சமையலறையாக மாறிவிட்டிருக்கிறது, கொஞ்சம் அரசியல் சேர்ந்து கொண்டிருக்கிறது, அவ்வளவே!
பத்மநாபனை 12 வயதிலேயே கைப்பிடித்து புகுந்த வீடு வந்துவிட்டவர் ராஜேஸ்வரி. மாமனாருக்கு அவர் மகள் மாதிரி. மாமனாரிடம் முதல் சிறுகதையைப் படிக்கத் கொடுத்தார். தலைப்பு: "ஓரே ஒரு வார்த்தை'. கதையைப் படித்த மாமனார் சொன்ன ஒரே வார்த்தை: "பலே!' லலிதா சஹஸ்ரநாமத்திலிருந்து அநுத்தமா என்ற பெயரைச் செல்ல மருமகளுக்குப் புனைபெயராகச் சூட்டினார். அதன்பின் அநுத்தமா எழுதிக் குவிக்கலானார்.
அநுத்தமாவின் ஆங்கிலப் புலமை அபாரமானது. கற்பித்தவர் கணவர் பத்மநாபன். தி.ஜானகிராமன் காலமானபின் சென்னையில் நடந்த தமிழ் எழுத்தாளர் சங்க இரங்கல் கூட்டத்தில், பல வெளிநாட்டினர் வந்திருந்தார்கள். அப்போது சி.சு.செல்லப்பா, க.நா.சு., நா.பா.முன்னிலையில் தி.ஜா.பற்றி அரைமணி நேரம் ஆங்கிலத்தில் உரையாற்றினார் அநுத்தமா.
தன் எழுத்தை வளர்த்த கி.வா.ஜ. மேல் அநுத்தமாவுக்கு, அளவற்ற பக்தி. கி.வா.ஜ.அநுத்தமாவைத் தங்கை என்றே அறிமுகப்படுத்துவார். ஒருமுறை, கலைமகளுக்கு ஒரு நாவல் தரமுடியுமா என்று கேட்டார் கி.வா.ஜ. கேட்டதற்கு, "பத்து நாட்களில்!' என்று வாய்தவறிச்சொல்லிவிட்டார்! பத்மநாபன் "அது என்னமாக ஒரு முழு நாவலைப் பத்துநாளில் உன்னால் எழுதமுடியும்? பெரியவரிடம் வாக்குக் கொடுத்துவிட்டாயே?' என்று அங்கலாய்த்தார்.
அன்றிரவே எழுத ஆரம்பித்தார் அநுத்தமா. எழுத அந்தக் காகிதங்களிலேயே திருத்தி, கணவரிடம் கொடுப்பார். மனைவி புதிய பக்கங்களை எழுதிக்கொண்டிருக்கும்போதே, ஏற்கெனவே எழுதித் திருத்திய பக்கங்களைக் கணவர் பிரதியெடுப்பார். சொன்னசொல் தவறாமல் பத்தே நாளில் நாவலைக் கொடுத்த போது கி.வா.ஜ. அசந்துபோனாராம். கி.வா.ஜ. பற்றிப் பேசும்போது அநுத்தமாவின் விழிகள் பாசத்தால் மின்னும். "மணல்வீடு, நைந்த உள்ளம், தவம், நல்லதோர் வீணை, வேப்பமரத்து பங்களா, அங்கயற்கண்ணி' என அநுத்தமா எழுதிய எல்லாம் குடும்பக்கதைகளே. "சமையலுக்கும் நாவல்களுக்கும் அடுக்களையிலிருந்தே பாத்திரங்களை எடுக்கிறீர்களே?' என்று பாராட்டுவாராம் அகிலன்.
பரமாச்சாரியார் பாராட்டிய நாவல் அவரது "கேட்டவரம்'. கேட்டவரம் பாளையம் என்ற ஊரில் நடைபெறும் பஜனை சம்பிரதாய நெறி பற்றிப் பேசும் நாவல்.
சோர்வு வரும்போதெல்லாம் தம்மை உற்சாகப்படுத்திய ஆர்.சூடாமணி அண்மையில் காலமானபேது, அநுத்தமா மனம் தளர்ந்தார். அநாயாச மரணம் கிட்ட வேண்டும் என்பது அவர் பிரார்த்தனை. டிசம்பர் 3 இரவு 8.44 வரை நன்றாகப் பேசிக்கொண்டிருந்தவர், 8.45க்குக் காலமாகிவிட்டார். கேட்டவரம் எழுதியவருக்குக் கேட்டவரம் கிடைத்துவிட்டது.
எழுதிய நூல்கள்
லக்சுமி
கௌரி
நைந்த உள்ளம்
சுருதி பேதம்
முத்துச் சிப்பி
பூமா
ஆல மண்டபம்
ஒன்றுபட்டால்
தவம்
ஒரே ஒரு வார்த்தை
வேப்பமரத்து பங்களா
கேட்ட வரம்
மணல் வீடு
ஜயந்திபுரத் திருவிழா
துரத்தும் நிழல்கள்
சேவைக்கு ஒரு சகோதரி சுப்புலட்சுமி (வாழ்க்கை வரலாறு)
ருசியான கதைகள்
அற்புதமான கதைகள்
பிரமாதமான கதைகள்
படு பேஷான கதைகள்
அழகான கதைகள்
விருதுகள்
அங்கயற்கண்ணி – கல்கி சிறுகதைப் போட்டியில் 2 ஆவது பரிசு
மணல்வீடு, புதினம் , கலைமகள் நாராயணசாமி ஐயர் விருது – 1949.
மாற்றாந்தாய், ஜகன் மோகினி இதழின் சிறந்த சிறுகதைப் போட்டிக்கான தங்கப் பரிசு
தமிழக அரசின் சிறந்த நாவல் பரிசு
தமிழ் வளர்ச்சிக் கழகப் பாராட்டுப் பத்திரம்
No comments:
Post a Comment