Thursday 23 April 2020

KUTHTHOOSI GURUSAMY , EDITOR OF KUTHOOSI BORN1906 APRIL 23-1965 OCTOBER 11



KUTHTHOOSI GURUSAMY , EDITOR OF 
KUTHOOSI BORN1906 APRIL 23-1965 OCTOBER 11





குத்தூசி குருசாமி என அழைக்கப்படும் சா. குருசாமி (23 ஏப்பிரல் 1906 - 11அக்டோபர் 1965) விடுதலை இதழில் குத்தூசி என்ற புனைபெயரில் பல அறிவார்ந்த கூர்மையான கட்டுரைகளை எழுதி வந்தவர். 1927 முதல் 1965 வரை பெரியார் ஈ. வே. ராவின் சுயமரியாதை இயக்கத்தில் முன்னணியில் இருந்து செயல்பட்டார்.
இளமையும் கல்வியும்
தஞ்சாவூர் மாவட்டம் குருவிக்கரம்பையில் சைவக் குடும்பத்தில் சாமிநாதன், குப்பு அம்மையார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். 1923 இல் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் இடைநிலைப்படிப்பில் சேர்ந்தார். தேசியக்கல்லூரி சூழ்நிலை குருசாமிக்கு அறிவுப் பசியைத் தூண்டியது. 1925 இல் காந்தி அடிகளைக் கல்லூரிக்கு அழைத்து பணமுடிப்பு அளித்து சிறப்புச் செய்தார். இளங்கலை வரை தேசியக் கல்லூரியில் பயின்றார். சைமன் குழு புறக்கணிப்புக்குத் தலைமைத் தாங்கி கல்லூரி மாணவர்களைத் திரட்டி ஊர்வலம் நடத்தினார்.

பொது வாழ்க்கை
பெரியார் ஈ.வெ.ரா தொடங்கிய சுயமரியாதை சங்கத்தின் பத்திரிகையான குடியரசு இதழைப் படித்து சமயம், சாதி முதலிய பாகுபாடுகளையும் மூடப் பழக்க வழக்கங்களையும் எதிர்த்தார். 1927 இல் ஈரோட்டில் பெரியாரைச் சந்தித்து சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். குடியரசு ஏட்டில் கட்டுரைகளும் அவ்வப்போது தலையங்கங்களும் எழுதினார். பகுத்தறிவுப் பரப்புரையும் செய்தார். அவருடைய எழுத்திலும் பேச்சிலும் கிண்டல் கேலி இருக்கும். அவருடைய கருத்துகள் தெளிவாகவும் தக்கச் சான்றுகளுடன் விளங்கும். அவர் ஒரு பகுத்தறிவாளர் மட்டும் அல்லாமல் பொதுவுடைமைவாதியாகவும் இருந்தார்.

படைப்புகள், சாதனைகள்
"நான் ஏன் கிறித்தவன் அல்லன்" என்னும் பெர்ட்ரண்டு ரசல் எழுதிய நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஜீன் மெஸ்லியர் என்பவர் எழுதிய மரண சாசனம் என்னும் தலைப்பில் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் எழுதினார். விடுதலை ஏட்டில் 'பலசரக்கு மூட்டை' என்னும் தலைப்பில் குத்தூசி என்னும் புனைபெயரில் 16 ஆண்டுகள் சுமார் 5000 கேலிக் கட்டுரைகள் எழுதினார்.

தமிழகத்தில் முதன் முதலில் சுயமரியாதைத் திருமணம் செய்து சாதி மறுப்புத் திருமணத்திற்கும் வழிகாட்டியவர். வேறு எவ்வித சடங்கும் இல்லாமல் தாலி மட்டும் கட்டி திருமணம் நடைபெற்றது. அவருடைய மனைவி குஞ்சிதம் குருசாமி கொள்கை வழியிலும் இல்லறத்திலும் சிறந்தவராக விளங்கினார்.தாலி பெண்களை அடிமைப் படுத்துவதன் அடையாளம் என்ற தன்மான இயக்கக் கருத்தினைக் கேட்டு திருமணமாகி சில ஆண்டுகளுக்குள் தாலியைக் கழற்றிவிட்டார்.[1]

1935 இல் எழுத்துச் சீர்திருத்தத்தைச் செயல்படுத்தினார். அறிஞர்கள் சாக்ரடீசு, காரல் மார்க்சு, காந்தியடிகள், டால்சுடாய், லெனின், அன்னி பெசண்டு, செல்லி பிராட்லா, ஸ்டாலின் ஆகியோரின் வரலாற்றை எழுதினார். குடியரசு, விடுதலை, புதுவை முரசு, ரிவோல்ட்டு, குத்தூசி , அறிவுப்பாதை (வார இதழ்), திராவிடன், பகுத்தறிவு ஆகிய இதழ்களில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

புனை பெயர்கள்
குத்தூசி , சி.ஐ டி, காலி மணிபர்ஸ், தெப்பக்குளம், பாட்மிண்டன், குகு, சம்மட்டி, சிவப்பழம், தமிழ்மகன், தராசு, கிறுக்கன், மதுரைவீரன், குமி, பென்சில், விடாக்கண்டன், தொண்டைமண்டலம், ஸ்பெக்டேட்டர், பிளைன் ஸ்பீக்கர், எஸ் ஜி; ஆகியன குருசாமியின் புனை பெயர்கள் ஆகும்.

மரணக் குறிப்பு
மேதை பெட்ராண்ட் ரசலைப் பின்பற்றி குருசாமியும் தன்மரணக் குறிப்பை 1959இல் எழுதினார். ஆனால் அவர் 11-10-1965 அன்று இறந்தார்.

தாலி கட்டித்தான் திருமணம் நடக்க வேண்டும் என வற்புறுத்திய பெரியார்

நெ.து. சுந்தரவடிவேலு நினைவிருக்கிறதா? கல்வித்துறையில் உயர் பதவிகள் வகித்தவர். சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும் இருந்தவர்.. பெரியார் தொண்டர். மாணவப் பருவம் முதல் மறையும் வரை சுயமரியாதைக்காரர். வட தமிழக தொண்டை மண்டல வேளாள வகுப்பினர். இறுக்கமான சாதீயச் சமூகப் பின்னணி இருந்தும் பிடிவாதமாகக் கலப்புத் திருமணம், சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர். குத்தூசி குருசாமி அவர்களின் கொழுந்தியாள், அதாவது மனைவி குஞ்சிதம் அம்மையார் அவர்களின் சகோதரி காந்தம் அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டவர்.

அவரது “தன் வரலாறு” நூல் கண்ணில் பட்டது. (‘நினைவு அலைகள்’, வானதி பதிப்பகம், பக்.890, 1983).

நூல் முழுக்க இழையோடும் ஒரு செயற்கைத் தன்மை நூலுடன் ஒன்ற விடாமல் தடுத்த போதிலும் நிகழ்ச்சிகள் மிக்க சென்ற நூற்றாண்டின் மத்தியக் காலத் தமிழக அரசியல் சமூகப் பின்னணி குறித்து ஏதேனும் புதிய தெளிவுகள் கிடைக்குமா என்பதற்காகப் புரட்டிக் கொண்டிருக்கிறேன்.

சென்ற நூற்றாண்டில் சுயமரியாதை இயக்கம் என்பது எவ்வாறு ஒரு பார்ப்பனரல்லாத மேற்சாதியினரது இயக்கமாகவே இருந்தது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. பார்ப்பன எதிர்ப்பு என்பது ஒரு பக்கம் தீவிரமாக இருந்த போதிலும் சாதி ஒழிப்பு என்கிற கருத்தை இயக்கத்திற்குள் கொண்டு செல்வதற்கு பெரியார் போன்றோர் எத்தனை சிரமப் பட்டிருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. இயக்க மாநாடுகளின்போது சுந்தரவடிவேலு (நெதுசு) ஒரு படித்த முதலியார் பையன் என அறிந்து அவரை மாப்பிள்ளையாக வளைத்துப் போட அவரது சாதிக்காரர்கள் அலைகின்றனர்.

இயக்க அடிப்படையில் நடந்த முதல் சுயமரியாதைக் கலப்புத் திருமணம் என்பது குருசாமிக்கும் குஞ்சிதத்துக்கும் நடந்த திருமணம்தான். குருசாமியும் பார்ப்பனரல்லாத உயர் வகுப்பினர்தான். குஞ்சிதம், காந்தம் ஆகியோரின் தந்தை திருவாரூர் சுப்பிரமணியம் அவர்கள் இசை வேளாளர் வகுப்பினர். பிடில் வித்வான். சுயமரியாதைக்காரர். மகள்களை நல்ல முறையில் உயர்கல்வி பயிற்றுவித்தவர்.
இயக்க நடவடிக்கைகள் ஊடாக குருசாமிக்கும் நெதுசு வுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. அக்காள் கணவரின் நண்பர் நெதுசு கலப்புத் திருமணம், சுயமரியாதைத் திருமணம் ஆகியவற்றில் நாட்டமுடைய கொள்கைவாதி என்பதை அறிந்த காந்தம் தன் தோழி ஒருவர் வழியாகத் தன் மனத்தை நெதுசுவுக்கு ஒரு கடிதம் மூலம் வெளிப்படுத்துகிறார். பல்கலைக் கழக வளாகத்தில் இருவரும் சந்திக்கின்றனர். தான் அவரிடம் நெருங்காமலேயே எல்லாவற்றையும் பேசி ஒப்புதல் அளித்து வந்ததை இரு முறை குறிப்பிட்டுச் சொல்கிறார் நெதுசு.

பிறகு நெதுசு அவர்கள் குருசாமிக்குத் தெரிவிக்க, குருசாமி பெண் வீட்டாருடன் பேசி அவர்களின் ஒப்புதல் பெறுகிறார். அதில் பிரச்சினையில்லை. எனினும் தந்தை பெரியார்தான் இறுதி ஒப்புதல் தர வேண்டும்.

இதுதான் இங்கு முக்கியமான விடயம். இதை உங்களுடன் பகிர்வதுதான் இந்தப் பதிவின் நோக்கம். பெரியார் எப்படிஉண்மையிலேயே அந்த இயக்கத்தின் தந்தையாக விளங்கினார் என்பதும், அத்தனை பொறுப்புடனும், வீண் வரட்டுக் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டும், எல்லோரையும் அனுசரித்தும், எல்லோருடைய சம்மதத்துடனும் சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் பொறுப்புடனும் செயல்பட்டார் என்பதும்தான் இதில் மிகவும் நுணுக்கமான அழகிய அம்சம். சுந்தரவடிவேலுவின் உப்புச் சப்பற்ற உரைநடையைப் பொறுத்துக்கொண்டு வாசிப்பது மட்டுமே சவால்.
பெரியார் சென்னைக்கு வரும்போது பேசிக் கொள்ளலாம் என்கிறார். அவ்வாறே அடுத்த சில வாரங்களில் வருகிறார். அவரது நிகழ்ச்சி நிரலில் இந்தத் திருமணப் பேச்சு ஒரு முக்கியமான அம்சம்.

ஆனால் அன்று நாள் முழுதும் பேச வாய்ப்பில்லை.மாலை அவர் புறப்பட வேண்டும் நெதுசுவை அழைத்து, “தம்பி ! தனியாகப் பேசவேண்டுமென்று இவ்வளவு தொலைவு வரவழைத்தேன். என்னமோ, தாட்சணியம் வந்தவர்களுக்குப் பதில் சொல்லி அனுப்புவதிலேயே பொழுது போய்விட்டது. உங்களுக்கு இடைஞ்சல் இல்லையென்றால் என்னோடு அதே ரயிலில் அரக்கோணம் வரை வரலாமா? நான் தனியாகத்தான் திரும்புகிறேன். வண்டியில் பேசி முடிவு செய்யலாமா?” எனப் பெரியார் கேட்கிறார்.

இரயிலில் வழக்கம்போல மூன்றாம் வகுப்பில் பெரியாரும் நெதுசுவும்.
பேச்சைத் தொடங்குகிறார் பெரியார்.

“எஸ்.ஜி (குருசாமி) எழுதியிருந்தார். படித்ததும் மெத்த மகிழ்ச்சி. உங்ளைப் பற்றி காந்தம்மா வீட்டில் எல்லோருக்கும் நல்ல மதிப்பு”

எனப் பெண் வீட்டார் சம்மதததைச் சொல்லி பெண் வீட்டர் சார்பில் பேச்சை ஆரம்பிக்கிறார் பெரியார். முதலில் அவர் கேட்கும் கேள்வி நெதுசுவின் பெற்றோர்கள் சம்மதிப்பார்களா என்பதுதான். சுயமரியாதை முறையில் பார்ப்பனர் இல்லாமல் நடத்தும் அந்தக் கலப்புத் திருமணத்தை இரு தரப்புப் பேற்றோர்களின் சம்மதத்துடனும் மட்டுமல்ல, இப்படியான திருமணம் எல்லோரும் அறியும்படியாகவும் நடக்க வேண்டும் என்பது பெரியாரின் முக்கிய கரிசனமாக இருப்பது உரையாடலில் விளங்குகிறது.

இசையமாட்டார்கள் என்றால் அப்புறம் எப்படி? சுற்றத்தார்களாவது வருவார்களா? ஏன் இசையமாட்டார்கள்? வேறு யாராவது பெண் பார்த்து வைத்திருக்கிறார்களா? எனக் கேள்விகளை அடுக்கி மணமகன் வீட்டு மனநிலையைச் சரியாக உள்வாங்கிக் கொள்கிறார் பெரியார்.

அவர்கள் சம்மதம் சாத்தியமே இல்லை என நெதுசு விளக்கிய பின்னும் கூட, “நான் எவர் வழியாகவாகிலும் அவருக்குத் தூது அனுப்பிப் பார்க்கட்டுமா? பெற்றோர் இசைவு பெற்று கலப்புத் திருமணம் செய்து கொண்டால் மேலும் சிறப்பாக இருக்குமே” என்கிறார்.

அதற்கும் நெதுசு ஒப்பவில்லை. அடுத்து திருமணத்தை எப்படிச் செய்வது?. திருமணத்தைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பது பெரியார் விருப்பம். நிறையப் படித்த ஒரு முதலியார் பையன், ஒரு இசைவேளாளப் பெண்ணை புரோகிதம் இல்லாமல் சுயமரியாதைத் திருமணம் அந்தக் காலத்தில், ஆம் 1940 ல், செய்வதென்றால் சும்மாவா? சிறப்பாகச் செய்தால்தானே கொள்கை பரவும்.
ஆனால் “காதும் காதும் வைத்தாற்போல” ஒரு பதிவுத் திருமணமாக அதிகம் பிரச்சினை இல்லாமல் முடிக்க வேண்டும் என்கிறார் நெதுசு. பெரியார் விடவில்லை,
“அக்காவின் (குஞ்சிதத்தின்) திருமணத்திற்குச் செலவு செய்ததுபோல தங்கையின் திருமணத்திற்கும் குறைந்தது ஈராயிரம் ரூபாய்களாவது நானே செலவு செய்து திருமணத்தைச் சிறப்பாகச் செய்து வைக்கிறேன். அதற்கு ஒப்புக் கொள்ளலாம் அல்லவா?” எனக் கேட்கிறார். அந்தக் காலத்தில் இரண்டாயிரம் செலவு செய்யும் திருமணம் என்றால் பெரிய நிகழ்ச்சிதான்.

11 ஆண்டுகளுக்கு முன் நடந்த குஞ்சிதத்தின் திருமணம் இயக்கத்தின் சார்பாக நடத்தி வைக்கப்பட்ட முதல் சுயமரியாதைக் கலப்புத் திருமணம். அதற்குப் பின் எத்தனையோ திருமணங்கள் அப்படி நடந்துவிட்டன. முதலியார் வகுப்பிலேயே 12 பேர் அப்படித் திருமணம் செய்துள்ளனர் என்றெல்லாம் சொல்லி, இந்தத் திருமணம் அப்படிக் காதும் காதும் வைத்தாற்போல நடத்தப்பட்டால் ஒன்றும் பாதிப்பில்லை என்கிற பொருளில் பேசி பெரியாரின் ஆசைக்கு முற்றுப் புள்ளி வைக்கிறார் மாப்பிள்ளை.

சரி எத்தனை பேருக்கு அழைப்புக் கொடுக்கலாம் என ஒரு குடும்பத் தலைவனின் கரிசனத்தோடு ஒரு திருமணத்தின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து முடிவெடுக்க முனைகிறார் பெரியார். ஆனால் மாப்பிள்ளையோ அழைப்பிதழும் வேண்டாம் ஒரு ஐந்தாறு நண்பர்களுக்கு நேரில் முதல்நாள் சொன்னால் போதும் என்கிறார். முன் கூட்டித் தெரிவித்தால் உறவினர்கள் பிரச்சினை செய்வர் என்கிற அச்சம் ஒரு புறம். பெற்றோர் வருந்துவார்களே , அவர்கள் மனம் குளிர ஒரு மகன் என்கிற முறையில் இதுவரை தான் எதுவும் செய்யவில்லையே என்கிற கவலை இன்னொருபுறம்.

பெரியார் புரிந்து கொள்கிறார். “சங்கடந்தான். பெற்றோரிடம் பாசம் மிகுந்திருக்கும்போது இது தவிர்க்க முடியாத பெரிய சங்கடந்தான்” எனச் சொல்லி விட்டு அவர் கேட்ட அடுத்த கேள்வியும் அதற்கு அவரே அளித்த விளக்கமும் என்னை ஒரு கணம் திகைக்கவும் என் கண்களில் நீரை வரவழைக்கவும் காரணமாகிவிட்டன.
“சரி, உங்கள் விருப்பப்படியே அழைப்புக்கூட இல்லாமல், பதிவுத் திருமணமாகவே ஏற்பாடு செய்து விடுவோம். ஒரு சிறிய யோசனை. தாலி மட்டும் கட்ட ஒப்புக் கொள்ளூங்கள்….”

இதென்ன, தாலி என்பது ஒரு அடிமைச் சின்னம் எனத் தத்துவம் பேசிய பெரியார் தாலி கட்டித் திருமணம் செய்ய ஒரு சுயமரியாதை மிக்க இளைஞனிடம் கெஞ்சுகிறார். அந்த இளைஞர் பெரியாரிடமே பெரியாரியம் பேசுகிறார்.

“அந்த அடிமை அடையாளம் எதுக்குங்க? அய்யா வழியை முழுமையாகப் பின்பற்ற நினைப்பவனுக்கு வேறு பக்கம் கைகாட்டுகிறீர்களே..” என மடக்குகிறார்.

“அந்தச் சமுதாயம் பெரிதும் ஏமாற்றப்பட்ட சமுதாயம். தாலி கட்டும் அளவு இசைந்தால் சிறிது நிறைவு இருக்கும்” – பெரியார் பணிந்து விளக்குகிறார்.

ஆம். அது இசை வேளாளச் சமூகம். பொட்டுக் கட்டும் சமூகம். தாலி மறுக்கப்பட்ட சமூகம். இங்கே நிகழ்த்தப்பட வேண்டிய மாற்றம் தாலியை அணிவிப்பதுதான்.
“குருசாமி திருமணத்தில் நான் சொன்னேனென்று குஞ்சிதத்துக்குத் தாலி கட்டினார். இரண்டொரு ஆண்டுக்குப் பிறகு குருசாமி கருத்துப்படி குஞ்சிதம் குருசாமி அதைக் கழற்றி வைத்துவிடவில்லையா? அதைப் போல காந்தமும் செய்துவிடலாம். திருமணத்தின்போது தாலி கட்ட இசையுங்கள்” – இறைஞ்சுகிறார் பெரியார்.

இந்த உரையாடல் நெதுசு தன் நினைவிலிருந்து எழுதியது. சில வார்த்தைகள் மறந்திருக்கலாம் அல்லது மாறியிருக்கலாம். ஆனாலும் இது போன்ற வரலாற்று நிகழ்வுகளை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிடவும் இயலாது.

முந்தைய உரையாடல் வரிகளைக் கவனியுங்கள். “திருமணத்தில் நான் சொன்னேனென்று குஞ்சிதத்துக்கு தாலி கட்டினார். இரண்டொரு ஆண்டுகளுக்குப் பின் குருசாமி கருத்துப்படி குஞ்சிதம் குருசாமி அதைக் கழற்றி வைத்துவிடவில்லயா…” திருமணத்திற்கு முன் ‘குஞ்சிதம்’ எனக் குறிப்பிடும் பெரியார் திருமணத்திற்குப் பின் ‘குஞ்சிதம் குருசாமி’ எனச் சொன்னதாக நெதுசு சொல்கிறார்.
பெரியார் அப்படிச் சொல்லியும் இருக்கலாம். கணவர் பெயர் அற்றவர்கள் அவர்கள். பெற்ற குழந்தைகளுக்கும் தாய்ப் பெயர்தான் தலைப்புப் பெயர். புட்டலக்‌ஷ்மி நாகரத்தினம்மாள் என்பது போல. இங்கே பெயருக்குப் பின்னே கணவர் பெயர் கூடாது எனச் சொல்வது எப்படி ஏற்புடையதாக இருக்கும் என நினைத்தாரோ பெரியார்?

நெதுசு வுக்குத் திரும்புவோம். அவர் பிடிவாதமாகப் பெரியாரின் வேண்டுகோளை மறுத்துவிடுகிறார். தனித் திருமணச் சட்டத்தின்படி திருமணம் நடந்தால் போதும். பெரியார் அதை நடத்தி வைக்க வேண்டும் என்பவைதான் நெதுசுவின் வேண்டுகோள்கள்.

பெரியார் அத்தோடு முடிக்கவில்லை. அந்தக் கடைசிக் கேள்வியையும் கேட்கிறார். இப்போது அவர் பெண்ணுக்கு மட்டுமல்ல மாப்பிள்ளைக்கும் தந்தை நிலையிலிருந்து திருமணத்தை நடத்தி வைப்பவர் அல்லவா?

சட்டப்படி பதிவுத் திருமணத்திற்கு ஒரு மாதம் முன்னதாக அறிவிப்புச் செய்ய வேண்டும் என்பதை எல்லாம் சொல்லிவிட்டு, தான் இன்னின்ன நாட்களில் சென்னைக்கு வருவேன் என குறிப்பு நோட்டைப் பார்த்துச் சொல்லி அவற்றில் ஒரு நாளைப் பதிவுக்குத் தேர்வு செய்யுமாறு சொன்ன பின்.

“கடைசியாக ஒன்று. பெண்ணுக்கு என்ன நகை போடலாம் என எண்ணுகிறீர்கள்?” என்கிறார் பெரியார்.

நியாயந்தானே. ஒரு பொறுப்புள்ள தந்தை கேட்கக் கூடிய கேள்விதானே. ஆனால் அந்த இளைஞனோ கொள்கை வாதி. பெரியார் என்பதைக்கூடப் பார்க்காமல் சற்றேஏ சீறுகிறான்.

“அய்யா, நான் என்னைக் கொடுப்பது போதாதா? எந்தவிதச் சிறிய நகையும் போட ஒப்பமாட்டேன். பெண் வீட்டாரிடமிருந்தும் நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. புதுவேட்டி, புதுச் சேலை எதுவும் தேவையில்லை”

பெரியார் பொறுத்தருளினார் என எழுதுகிறார் நெதுசு.

“சரி. உங்கள் விருப்பம்,பெண் வீட்டாரோடு கலந்து கொண்டு, நான் குறிப்பிட்ட நாட்கள் ஒன்றில் திருமணத்தைப் பதிவிட ஏற்பாடு செய்து விடுங்கள். அதற்கு உரிய முன்னறிவிப்பை பதிவாளருக்குக் கொடுத்துவிடுங்கள்” எனப் பெரியார் முடிக்கவும் ரயில் அரக்கோணத்தை அடையவும் சரியாக இருந்ததாம்.

“தோழர்க:ள் நெ.து.சுந்தரவடிவேல் M.A., L.T அவர்களுக்கும் டி.எஸ்.காந்தம் B.Sc (Hons), M.Sc அவர்களுக்கும்” 15.10.1940 அன்று நடந்த பதிவுத் திருமணம் பற்றிய செய்தியும் 27.10. 1940 அன்று “நீதிக்கட்சித் தலைவர் தமிழ்நாட்டுப் பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்கள் தலைமையில் நடந்த பாராட்டுக் கூட்டம்” பற்றிய செய்தியும் படத்துடன் 30.10.1940 ‘குடி அரசு’ இதழில் வெளிவந்தன.

பாராட்டுக் கூட்டம் நடத்துவது என்பதில் மட்டும் பெரியார் உறுதியாக இருந்துள்ளார். ஏனெனில் அது ஒரு இயக்க நடவடிக்கையும் அல்லவா. அவர் இவர்களுக்கு மட்டுமா தந்தை? தமிழர்கள் எல்லோரின் தந்தையும் அல்லவா? இந்தச் சுயமரியாதைத் திருமணம் விளம்பரமாக வேண்டிய ஒன்றல்லவா.

No comments:

Post a Comment