KASTURIBA GANDHI BORN
1869 APRIL 11 - FEBRUARY 22,1944
கஸ்தூரிபாய் (Kasturba Gandhi, ஏப்ரல் 11 1869 – பெப்ரவரி 22 1944) மோகன்தாசு கரம்சந்த் காந்தியின் வாழ்க்கைத் துணைவியார். கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர். காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர். இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு பல சிறை சென்றவர்.
இளமை
இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பெரும்வணிகர் குடும்பத்தில் கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக 11.04.1869 ல் பிறந்தார் கஸ்தூரிபா. இவரது தாய் மொழி குஜராத்தி. 1883-ல் இவர் தனது 13ஆம் வயதில் தம் வயதேயான, குடும்ப உறவினரான மோகன்தாஸ் காந்தியை மணந்தார். திருமணத்தின் போது எழுதப்படிக்கத் தெரியாத இவருக்கு இவருடைய கணவர் கல்வி கற்பித்தார்[1] கணவர் மேல்படிப்பிற்காக 1888ல் இலண்டன் சென்றபோது இந்தியாவிலேயே தங்கியிருந்தார். காந்தி பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டதால் குடும்பப் பொறுப்பு முழுவதும் கஸ்தூரிபா கவனித்துக் கொண்டார். இத் தம்பதியினருக்கு, ஹரிலால் (1888), மணிலால் (1892), ராமதாஸ் (1897), தேவதாஸ் (1900) ஆகிய நான்கு புதல்வர்கள் பிறந்தனர்.
அரசியல்
கணவரின் சத்தியம், அகிம்சை, இந்திய விடுதலை இயக்கம் ஆகிய கொள்கைகளுக்கு தன் வாழ்நாள் முழுவதும் முழு ஒத்துழைப்பையும் அளித்தார். 1897 ல் தொழில்நிமித்தமாக, வழக்கறிஞர் பணிக்காக தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்குச் சென்ற கணவருடன் கஸ்தூரிபாவும் சென்றார். அங்கு அவர் போராட்டமயமான வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது. 1904 முதல் 1914 வரை டர்பன் நகரில் காந்தி குடும்பம் வசித்தது. தென் ஆப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக் கொடுமைக்கு எதிரான கணவரின் போராட்டத்தில் துணை நின்றார் கஸ்தூரிபா.
இந்தியா வம்சாவழித் தொழிலாளர்கள் மீதான கொடிய சட்டங்களைக் கண்டித்து காந்திஜி நடத்திய அறப்போராட்டங்களில் கஸ்தூரிபா காந்தியும் பங்கேற்றார். 1913 ல் நடந்த அறப் போராட்டத்தில் கலந்துகொண்ட கஸ்தூரிபா, கைது செய்யப்பட்டு, மூன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். காந்திஜி கைதான நேரங்களில் அறப் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு.
விடுதலைப் போரில் ஈடுபாடு
1915ல் இந்தியாவிற்கு திரும்பியபின்இந்திய விடுதலைப் போரில் களமிறங்கினார் காந்தி. அவருக்கு உற்ற துணையாக கஸ்தூரிபா காந்தி விளங்கினார். சபர்மதி ஆசிரமத்தில் தங்கி இந்திய விடுதலை இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடுகொண்டார்.
சிறு வயதிலேயே ஏற்பட்ட நுரையீரல் நோயால் பதிக்கப்பட்ட அவர் வாழ்நாள் முழுவதும் அதனால் சிரமப்பட்டார். ஆயினும், கணவருடன் எளிய வாழ்வு வாழ்ந்தார். சபர்மதி ஆசிரமத்தின் சூழல் அவருக்கு ஒத்துக்கொள்ளாத போதும், கணவரின் பாதையே தனது பாதை என, ஒரு இந்திய குடும்பத் தலைவியாகவே அவர் வாழ்ந்தார். அங்கு ராட்டை நூற்றல் உள்ளிட்ட காந்தியப் பணிகளில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கினார்.
இறுதிகாலம்
ஆகா கான் அரண்மனையில் கஸ்தூரிபாய் காந்தி மற்றும் மகாதேவ தேசாயின் சமாதிகள், புனே
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது (1942) கைது செய்யப்பட காந்தியுடன் கஸ்தூரிபாய் காந்தியும் கைதானார். இருவரும் பூனாவிலுள்ள ஆகா கான் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டனர். அங்கு, நாட்பட்ட நுரையீரல் அழற்சி, மூச்சுக்குழல் அழற்சி நோயினால் மிகுந்த வேதனையுற்றார். சிறையில் இருக்கும்போது சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் (22.02.1944) கஸ்தூரிபாய் காந்தி.[2]
அது, ஓர் ஏழு வயது சிறுமியின் வீடு. அந்த வீட்டில் உறவினர்களும், நண்பர்களும் கூடியிருந்தனர். அவர்களுடன், ஜோசியரும் புரோகிதரும்கூட. முக்கியமாய் பக்கத்துவீட்டு மோகன்தாஸின் அப்பா. இதனால் அங்கு, மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ''எப்போதும், நம் தந்தையைக் காண வியாபார நண்பர்கள்தானே வருவார்கள்; ஆனால், இந்த முறை இவர்கள் வந்திருப்பது எதற்கென்று தெரியவில்லையே? அது என்னவோ, நமக்கேன் வம்பு... பெரியவர்கள் விஷயம்'' என்று நினைத்தபடியே தோட்டத்துக்குள் ஓடினாள், அந்தச் சிறுமி. அவர், வேறு யாருமல்ல... மகாத்மா காந்தியின் (மோகன்தாஸ்) மனைவி கஸ்தூரிபாய். அவருடைய பிறந்த தினம் இன்று.
'டூ' விட்டுவிடுகிறார்''!
கஸ்தூரியின் வீட்டுக்கு அவர்கள் வந்திருந்த அன்றைய நாள்தான், காந்திக்கும் கஸ்தூரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள். இருவருக்கும் ஏழு வயதானபோது நிச்சயிக்கப்பட்ட திருமணம், பின்பு ஆறாண்டுகள் கழித்து... அவர்களுடைய பதின்மூன்றாவது வயதில் திருமணம் நடந்தேறியது. இல்லற வாழ்க்கையே என்னவென்று தெரியாத ஓர் இனம்புரியாத வயதில், அவர்களுக்குள் இருந்த விட்டுக்கொடுக்காத பிரச்னைகளால் ஆரம்பத்தில் சிறுசிறு சலப்புகள் ஏற்பட்டன. ஆனாலும், தன் மனைவி மீது மாறாத அன்புகொண்டு அவரை லட்சியமிக்கவராக மாற்றியவர் மகாத்மா. ஆரம்பத்தில், ''நான் உன் கணவன், ஞாபகமிருக்கட்டும்'' என்று காந்தி கட்டளையிட்டபோதுகூட, அதற்கு கஸ்தூரிபாய், ''ஒப்புக்கொள்கிறேன். ஆனால், என்னை உருட்டி, மிரட்டி அடிமைப்படுத்திவிட முடியாது'' என்றா
அன்பு நிறைந்த வாழ்க்கை யாருக்குக் கிடைக்கிறதோ... அதை அகிலமே கிடைத்துவிட்டதாகத்தான் அவர்கள் நினைப்பார்கள். அப்படியான வாழ்க்கைதான் இவர்களுக்கும் கிடைத்தது. அவர்கள் இருவரும், ஒருவர் மீது ஒருவர் விட்டுக்கொடுக்காமல்வைத்த அன்புதான், அவர்களை உலகம் அறியும் அளவுக்கு உயர்த்தியது. ''மாமனார் தங்கமானவர்; மாமியார் அன்புத் தெய்வமாக இருக்கிறார்; மைத்துனர்களும், அவருடைய மனைவிமார்களும் நேசம் பாராட்டுகின்றனர்; ஆனால், அவர் மட்டும் ஏன் என்னை இப்படிக் கொடுமைப்படுத்த வேண்டும்? என் வயதுதானே அவருக்கும்! சரி, கணவர்தான். இருக்கட்டுமே... அதற்காக என்னை அடிமைபோல் நடத்த வேண்டுமா; அவர் வழிக்கு நான் போகிறேனா; அவர் மட்டும் ஏன், என் இஷ்டத்தில் குறுக்கிட வேண்டும்? என்மீது அவருக்கு என்ன கோபமோ... அடிக்கடி என்னிடம் 'டூ' விட்டுவிடுகிறார்'' என்று ஆரம்ப நாள்களில் கவலைப்பட்ட கஸ்தூரிபாய், பின்னர் பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் புகழும் அளவுக்கு மிகவும் பக்குவம் பெற்ற பெண்ணாகப் பயணிக்கலாயினார்.
வாழ்க்கைச் சம்பவங்கள்!
கஸ்தூரியின் மீது காந்திக்கிருந்த அளவற்ற அன்பால், ''இனி, தினமும் அவளுக்கு நாலு எழுத்து சொல்லித் தரவேண்டும். அறியாமை நீங்கிவிட்டால், கணவனிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அவள் தெரிந்துகொண்டுவிடுவாள்'' என்று காந்தி சிந்தித்தார். காந்தியின் மீது கஸ்தூரிக்கிருந்த கண்ணியமான காதலால், ''ஐயோ... இந்தப் பாழாய்ப்போனவன், என் கணவரைப் படுகுழியில் தள்ளிவிடுவானே? இதை எப்படியாவது அவரிடம் பக்குவமாகச் சொல்ல வேண்டும்'' என்று தீய நண்பரிடம் சிக்கிக்கொண்ட காந்திக்காக, கஸ்தூரிபாய் ஏங்கினார். அதற்காக அவர், ''இதோ பாருங்கள்... நான் சொல்கிறேன் என்று கோபித்துக்கொள்ளக் கூடாது. அந்த அயோக்கியனுடன் சேராதீர்கள். அவன், பெரிய போக்கிரி. அவன், சகவாசமே வேண்டாம்'' என்று வேண்டுகோள்வைத்தார். அவருடைய கோரிக்கையைக் காந்தி, அப்போது ஏற்காதபோதும் நாளடைவில் உண்மையிலேயே மாறித்தான் போனார். அந்த மாற்றம், பின்னாளில் அவர்களுக்குள் அன்பை விதைத்தது. அதை உணர்த்தும் நிகழ்வாக அவர்களுடைய வாழ்வில் எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
கஸ்தூரியைச் சிரிக்கவைத்த காந்தி!
ஒருமுறை தன் கணவரிடம்... கஸ்தூரிபாய், ''படிப்பு முடிந்துவிட்டதா'' என்றார். அதற்குக் காந்தி, ''படிப்புக்கு முடிவே கிடையாது. நான் அடுத்தபடி கல்லூரியில் சேரப்போகிறேன்'' என்று பதிலளித்தார். ''எத்தனை வருஷம்'' என்று அவர் கேட்க, ''நாலு வருஷம். பி.ஏ. படிக்கப்போகிறேன். நீயும் வருகிறாயா'' என்று மகிழ்ச்சிப்பொங்க கேட்டார் காந்தி. அதற்கு கஸ்தூரிபாய், ''பி.ஏ. படிக்கவா'' என்று சிரித்தபடியே கேட்டுக்கொண்டு ஓடினார். இதேபோன்று, வழக்கு ஒன்றில் வாதாடுவதற்காகத் தென்னாப்பிரிக்கா வரும்படி காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்குச் செல்வதற்கு முன் காந்தி... தன் மனைவியிடம், ''தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும்போது உனக்கு என்ன வேண்டும், சொல்'' என்று கேட்டார். அதற்கு அவர், ''ஒரு நல்ல புடவையாகக் கிடைத்தால் வாங்கிக்கொண்டு வாருங்கள்'' என்றார். ''பைத்தியம்... இங்கே இல்லாத புடவையா அங்கே? புது ஃபேஷனா ஒரு 'கவுன்' வாங்கிக்கொண்டு வரட்டுமா? உனக்கு ரொம்ப அழகாக இருக்கும்'' என்றார். அதைக் கேட்டதும் கஸ்தூரி பாய்க்கு சிரிப்பு வந்துவிட்டது. ''எப்படியோ, நீ சிரித்துவிட்டாய்; அதுபோதும்'' என்றபடியே அங்கிருந்து நடையைக் கட்டினார் காந்தி.
கஸ்தூரியிடம் பயந்த காந்தி!
இப்படியாகக் கடந்துகொண்டிருந்த அவர்களது வாழ்க்கைப் பயணத்தில் ஒருநாள், பகல்வேளை உணவை முடித்து... சமையல் அறையைச் சுத்தமாகவைத்துவிட்டுப் படுக்கச் சென்றுவிட்டார், கஸ்தூரிபாய். உழைப்பின் அசதியால் அவர், உறங்கிவிட்டார். அந்த நேரத்தில், மோதிலால் நேருவும், அவருடன் சிலரும் அங்கு வந்துவிட்டனர். அவர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டும். அதற்காகக் கஸ்தூரிபாய் இருந்த அறையை எட்டிப்பார்த்தார், காந்தி. அவர், உறங்கிக்கொண்டிருந்ததால், அவரை எழுப்பாமல் பணியாட்களைக்கொண்டு உணவு தயார் செய்யச் சொன்னார், காந்தி. பின்னர், முன்பு இருந்த மாதிரியே அறையையும் சுத்தமாக வைக்கச் சொன்னார். அப்போது, ஒரு பாத்திரம் கீழே விழுந்ததில் 'தடால்' எனச் சத்தம் எழுந்தது. இதில், விழித்துக்கொண்ட கஸ்தூரிபாய், ''ச்சீ... வரவர இந்தப் பூனை தொந்தரவு பொறுக்க முடியவில்லை. சிறிதுநேரம்கூடப் படுக்கவிட மாட்டேன் என்கிறது, சனியன்'' என்றபடியே எழுந்துவந்து எட்டிப்பார்த்தார். ''இது என்ன கலாட்டா'' என்று அவர் கேட்க, அதற்கு அங்கிருந்த பணியாட்கள், ''பாபுஜிதான் செய்யச் சொன்னார்; யாரோ விருந்தாளிகள் வந்திருக்கிறார்களாம்'' என்றனர். ''ஓஹோ, இதெல்லாம் அவருடைய வேலையா'' என்றவர், அடுத்துக் களத்தில் இறங்கி... அருமையான உணவைச் சமைத்து அவர்களை அசத்தினார்.
பின்னர், அன்று மாலை தனியாக இருந்த காந்தியிடம், ''இதெல்லாம் என்ன விளையாட்டு? அந்தக் கத்துக்குட்டிகளை எதற்காகச் சமையல் செய்யச் சொன்னீர்கள்? நான்தான் ஒருத்தி கல்லுக்குண்டு மாதிரி இருக்கிறேனே, என்னிடம் சொல்லக்கூடாதா'' என்றார், கஸ்தூரிபாய். அதற்கு காந்தி, ''உள்ளே வந்து பார்த்தேன். நீ தூங்கிக்கொண்டிருந்தாய்...'' என்றார். ''தூங்கிக்கொண்டிருந்தால் என்ன, எழுப்பினால் எழுந்திருக்க மாட்டேனா? அத்தனை சோம்பேறி என்று என்னை நினைத்துக்கொண்டிருக்கீறீர்களா'' என்று கேட்டார், கஸ்தூரி. ''அது, இல்லை கஸ்தூரி. உன்னை எழுப்புவதற்கு எனக்குப் பயமாக இருந்தது. நீ, திடீரென்று கோபப்பட்டுவிட்டால்...'' என்றார், காந்தி. அதைக் கேட்டதும் கஸ்தூரிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ''என்னது, என்னிடம் உங்களுக்குப் பயமா? வேடிக்கையாகத்தான் இருக்கிறது'' எனக் கஸ்தூரி சொல்ல, ''உண்மையைச் சொல்கிறேன் கஸ்தூரி. இந்த உலகத்திலேயே உன் ஒருத்தியிடம்தான் எனக்குப் பயம், தெரியுமா'' என்றார் காந்தி.
'ஒரு கணவனின் உரிமைதானே?''
எங்கேயும் விட்டுக்கொடுத்துச் சென்றால் வெற்றிபெற்றுவிடலாம் என்பதற்கு உதாரணமாக, காந்தி - கஸ்தூரிபாய் வாழ்க்கை அமைந்திருக்கிறது என்பதை இதன்மூலம் நன்கு உணரமுடிகிறது. தன் கணவரை எந்த விஷயத்திலும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தவர் கஸ்தூரிபாய் என்பதற்கு மேலும் ஓர் உதாரணம் இதோ... ஒருமுறை, கஸ்தூரிபாய்க்கு பணக்காரப் பெண் ஒருவர் மடல் எழுதியிருந்தார். அதைப் பிரித்து அவரிடம் படித்துக் காட்டினார் ஒரு பெண்மணி. அதில், ''தாங்கள் மகாத்மாவை மணம் புரிந்துகொண்டதால் வாழ்க்கையில் பல இன்னல்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது'' என்று எழுதப்பட்டிருந்தது. இதற்கான பதிலை அந்தப் பெண்மணியிடம் இப்படி எழுதச் சொன்னார், கஸ்தூரிபாய். அவர் சொன்ன பதிலில் சில இதோ... ''காந்திஜி என் வாழ்க்கையைத் துன்பம் நிறைந்ததாக ஆக்கிவிட்டார் என்று நீ எப்படிக் கண்டுபிடித்தாயோ தெரியவில்லை. நான் சோகமாக இருந்ததையும் சோறு இல்லாமல் பட்டினி கிடந்ததையும் நீ இங்குவந்து நேரில் பார்த்தவள்போல் அல்லவா பேசுகிறாய்? எனக்கு வாய்த்ததுபோல் ஒரு கணவர் உலகத்தில் வேறு ஒரு பெண்ணுக்கும் கிடைத்திருக்க முடியாது. சத்தியநெறியைக் கடைப்பிடிக்கும் அவரை, உலகமே போற்றிப் புகழ்கிறது. அவர் உதவியை நாடி ஆயிரமாயிரம் பேர் தினமும் வந்துகொண்டே இருக்கிறார்கள். இன்றுவரை தக்க காரணமின்றி அவர் என்னைக் கடிந்துகொண்டதே இல்லை. நான் தவறுசெயதபோது அதைச் சுட்டிக்காட்டித் திருத்தியிருக்கிறார். அவ்வளவுதான். அது, ஒரு கணவனின் உரிமைதானே?
''காந்திதான் காரணம்!''
என்னிடம் என் கணவர் அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார். மனைவிக்குரிய மதிப்பும், மரியாதையும் கொடுத்து என்னுடன் பழகுகிறார். எனக்குக் கிடைத்திருக்கும் புகழுக்கெல்லாம் அவர்தான் காரணம். அப்படியிருக்கையில், நான் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை நடத்தவில்லை என்று எப்படி நீ துணிந்துகூறுகிறாய்? ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். தற்காலத்துப் பெண்களைப்போல் எனக்கு நடந்துகொள்ளத் தெரியாது. கணவரைக் கிள்ளுக்கீரையா நினைத்து அதிகாரம் செய்து அவரைத் தம் கைக்குள் போட்டுக்கொள்ள நினைக்கும் நாகரிக மனைவிகள், கணவர் தங்கள் வழிக்கு வராவிட்டால், தங்கள் இஷ்டப்படி வாழ்க்கை நடத்துவதற்குத் துணிந்துவிடுகிறார்கள். அப்படிச் செய்வது இந்து தர்மத்தைப் பின்பற்றும் ஒரு பெண்ணுக்கு அழகல்ல. எத்தனை பிறவிகள் எடுத்தாலும் சிவபெருமானையே மீண்டும் மீண்டும் கணவனாக அடைய வேண்டும் என்று பார்வதி தேவி வேண்டிக்கொண்டதை உனக்கு நினைவுபடுத்த வேண்டுகிறேன்'' என்று தன் கணவரின் உணர்வையும், வாழ்க்கையின் உண்மையையும் அவருக்கு உணர்த்தியிருந்தார்.
அண்ணலுடனும், அவர் குடும்பத்தினருடனும் அன்பாகவும், அழகாகவும் வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்ட கஸ்தூரிபாய், தன்னுடைய இறுதிக்காலத்தில் காந்தியின் மடியில் தலைவைத்துப் படுத்தப்படியே, ''எனக்குத் தூக்கம் வருகிறது... தூங்கட்டுமா'' என்று சிறு குழந்தையைப்போல் காந்தியிடம் கேட்ட அவர், அதற்குப் பிறகு கண்திறக்கவே இல்லை.
- ஜெ.பிரகாஷ்
காந்திமகான் பொறுமையின் சிகரமாக விளங்குபவர். வாழ்க்கையில் ஏற்படும் துன்ப துயரங்களை யெல்லாம் சகித்துக்கொள்ளும் ஆற்றலுடையவர். இத்தகைய மகாத்மாவே கண்ணீர் விடும்படியான சம்பவம் நேர்ந்துவிட்டதென்றால், சாதாரண மக்களின் துக்கத்துக்கு ஓர் எல்லைதான் ஏது? பூனா நகரின் அருகாமையிலுள்ள ஆகாகான் மாளிகைச் சிறையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, தேசத்தின் அன்னையாக விளங்கிய கஸ்தூரிபாய் அம்மையார் காலமான செய்தியை நினைக்கும்போதெல்லாம் மயிர்க்கூச்செறிகிறது.
அன்று, வனவாசத்திற்குப் புறப்பட்ட ராமனை பின்பற்றிச் சென்ற சீதையைப் போல், சிறை வாசத்திற்குப் புறப்பட்ட காந்தி மகானைப் பின்தொடர்ந்து கஸ்தூரிபாயும் 1942-ல் சிறைவாசம் ஏற்றார். முதுமைப் பருவத்தில் இந்தத் தியாகத்தை மேற்கொண்டதற்குப் பலனையும் அடைந்தார்!
ஏற்கெனவே, மகாதேவ தேசாயைப் பிரிந்து மனம் வாடிய காந்திமகானுக்கு, கஸ்தூரிபாய் அருகிலிருந்தது ஆறுதலாயிருந்திருக்கும். இன்று அந்த ஆறுதலும் அவருக்கு இல்லாமற் போய் விட்டது. இதைக் குறித்து, ஞானியான மகாத்மாவே மனம் கலங்குகிறாரென்றால் அவரைத் தேற்றுவதற்கு வேண்டிய தகுதி யாருக்கு இருக்கிறது? எனவே, இந்தச் சம்பவத்தின் பலனாக மகாத்மா மனத்தளர்ச்சி பெறாமல் அவரைப் பாதுகாக்கக் கடவுள்தான் அருள் புரிய வேண்டும்!
No comments:
Post a Comment