Saturday 11 April 2020

SRI KUMARA GURUPARAR HISTORY



SRI KUMARA GURUPARAR HISTORY


ஸ்ரீகுமரகுருபரர் சரித்திரச் சுருக்கம்: உ.வே.சா
September 1, 2008
By ஆசிரியர் குழு
ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் சரித்திரச் சுருக்கம்

மகாமகோபாத்தியாய டாக்டர். உ.வே. சாமிநாதையரவர்கள் எழுதியது

ஒன்பது கைலாசங்களும் ஒன்பது திருப்பதிகளும் தன் கரையில் அமையப்பெற்ற தாமிரபர்ணி நதியின் வடகரையில் ஸ்ரீ வைகுண்டமென்று வழங்கும் திருப்பதியின் வடபாலில் ஸ்ரீ கைலாசமென ஒருபகுதி உண்டு. அங்கே பரம்பரையாகத் தமிழ்ப் புலமையும் முருகக்கடவுளது பக்தியும் வாய்ந்த சைவவேளாள குலத்தில் சண்முக சிகாமணிக் கவிராயரென்ற ஒருவர் தம் மனைவியரான சிவகாமசுந்தரியம்மையாரோடு வாழ்ந்து வந்தார். அவ்விருவருக்கும் ஓர் ஆண் குழந்தை உதித்தது. அதற்குக் குமரகுருபரன் என்னும் பெயர் சூட்டி அவர்கள் வளர்த்து வருவாராயினர்.

குமரகுருபரர் ஐந்தாண்டு வரையிற் பேச்சின்றி ஊமைபோல இருந்து வந்தனர். அதுகண்டு நடுங்கிய பெற்றோர்கள் அவரைத் திருச்செந்தூருக்கு எடுத்துச் சென்று செந்திலாண்டவர் சந்நிதியிலே வளர்த்திவிட்டுத் தாமும் பாடுகிடந்தனர். முருகவேள் திருவருளால் குமரகுருபரர் பேசும் ஆற்றல்பெற்றுக் கல்வியிலும் சிறப்புற்றனர். செந்திற்பெருமான் திருவருளால் வாக்குப் பெற்ற இவர், அப்பெருமான் விஷயமாகக் கந்தர் கலிவெண்பா என்ற பிரபந்தத்தைப் பாடினார். அப்பால் தம் ஊரிலெழுந்தருளியுள்ள ஸ்ரீ கைலாசநாதர்மீது கைலைக் கலம்பகம் என ஒரு பிரபந்தம் இயற்றினார். இவருக்குக் குமாரசுவாமிக் கவிராயரென ஒரு தம்பியார் இருந்தனர்.

குமரகுருபரர் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் ஞானசாத்திரங்களையும் திருவருளால் விரைவில் கற்றுத் தேர்ந்தார்; மருவுக்கு வாசனை வாய்த்தாற்போன்று பக்தி ஞான வைராக்கியங்கள் இவரிடத்தே உண்டாகி வளரத் தொடங்கின. அப்பால் பல சிவ தலங்களுக்கும் சென்று சிவதரிசனம் செய்யத்தொடங்கினர். மதுரையிலே சில காலம் தங்கியிருந்தார். அப்போது ஸ்ரீ மீனாட்சியம்மையின் திறத்து ஒரு பிள்ளைத்தமிழ் பாடி அக்காலத்தில் மதுரையில் அரசாண்டிருந்த திருமலை நாயக்கர் முன்னிலையில் அரங்கேற்றினார்.

அதனை அரங்கேற்றுகையில் ஸ்ரீ மீனாட்சியம்மையே குழந்தையுருவாக எழுந்தருளி வந்து கேட்டு மகிழ்ந்தனரென்றும், குமரகுருபரர் முத்தப் பருவத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கையில் தம் திருக்கழுத்திலிருந்த முத்துமாலை யொன்றை எடுத்து இவருக்கு அணிந்துவிட்டு மறைந்தனரென்றும் கூறுவர். அந்தப் பிள்ளைத்தமிழைக் கேட்டு மனமுவந்த திருமலை நாயக்கர் குமரகுருபரருக்கு பலவகையான ஸம்மானங்களை அளித்து வழிபட்டனர். குமரகுருபரர் பின்னும் சிலகாலம் மதுரையிலே தங்கி மதுரைக்கலம்பக மென்னும் பிரபந்தத்தை இயற்றினார். பிறகு சோழநாட்டு ஸ்தலங்களைத் தரிசிக்கத் தொடங்கித் திருவாரூருக்குச் சென்றார். அங்கே ஸ்ரீ தியாகப்பெருமானைத் தரிசித்துக்கொண்டு சிலகாலம் இருந்தனர். அக்காலத்தில் திருவாருர் நான்மணிமாலை யென்னும் பிரபந்தத்தை இவர் இயற்றினார்.

சிவஞான வுபதேசம் பெறவேண்டுமென்ற கருத்து இவருக்கு வரவர அதிகமாயிற்று. தமக்குரிய ஞானாசிரியரைத் தேடித் தேர்ந்து சரண்புகவேண்டுமென்று இவர் மனம் ஆவலுற்று நின்றது. அக்காலத்தில் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனத்தில் 4-ஆம் பட்டத்தில் குருமூர்த்தியாக விளங்கிய ஸ்ரீ மாசிலாமணி தேசிகர் சிவஞானச் செல்வராக இருப்பதை யறிந்து அவரிடம் சென்றார். அங்கே உண்டான சில குறிப்புக்களால் அப்பெரியாரே தமக்குரிய ஆசிரியரென்பதை இவர் தேர்ந்தனர். அப்பால் தமக்குத் துறவுநிலை யருள வேண்டுமென்று அத்தேசிகர்பால் குமரகுருபரர் வேண்டினர். அங்ஙனம் செய்வதற்குமுன் ஸ்தல யாத்திரை செய்துவரும்படி பணித்தல் அவ்வாதீன மரபாதலின் அப்பெரியார் காசியாத்திரை செய்துவரும்படி கட்டளையிட்டனர். காசிக்குச் சென்று வருவதில் நெடுங்காலம் செல்லுமேயென்று கவன்ற குமரகுருபரரை நோக்கிச் சில காலம் சிதம்பரவாசமேனும் செய்யும்படி பணித்தனர்.

ஞானாசிரியர் கட்டளைப்படி சிதம்பரத்துக்கு இவர் பிரயாணமாகி இடையே ஸ்ரீ வைத்தீசுவரன் கோயிலில் தங்கித் தரிசனம் செய்துகொண்டு அங்கே கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ முத்துக்குமார சுவாமி விஷயமாக ஒரு பிள்ளைத்தமிழ் இயற்றினார். பிறகு சிதம்பரம் சென்று ஸ்ரீ நடராஜப் பெருமானைத் தரிசனம் செய்துகொண்டு சிலகாலம் தங்கினர். அக்காலத்தில் சிதம்பர மும்மணிக் கோவையென்னும் பிரபந்தம் இவரால் இயற்றப்பெற்றது. அதில் முதற் செய்யுளில் காசிக்குச் செல்வதில் உளவாகும் துன்பங்களையும் சிதம்பரத்திற்குச் சென்று தரிசனம் செய்யும் எளிமையையும் ”காசியினிறத்த னோக்கி” (452) என்பது முதலிய அடிகளில் உணர்த்தியிருக்கின்றார். அவ்வடிகள், தம்மை ஆசிரியர் காசிக்குச் செல்லப்பணித்ததும் அதன் அருமையைத்தாம் விண்ணப்பித்துக் கொண்டபோது சிதம்பரவாசம் செய்யும்படி கட்டளையிட்டதுமாகிய நிகழ்ச்சிகளின் நினைவிலிருந்து எழுந்தனவென்றே தோன்றுகிறது.

சிவநேசச் செல்வர்களும் தமிழறிவுடையவர்களுமாகிய சில அன்பர்கள், ”யாப்பருங்கலக் காரிகையில் காணப்படும் உதாரணச் செய்யுட்கள் பெரும்பாலும் ஜைன சமயச் சார்புடையனவாக விருத்தலின், அந்நூலின் இலக்கணங்களுக்கு உதாரணமாக ஸ்ரீ நடராஜப் பெருமான் விஷயமாக செய்யுட்களை இயற்றித்தர வேண்டும்” என்று பிரார்த்திக்க இவர் அங்ஙனமே சிதம்பர செய்யுட் கோவை யென்னும் பிரபந்தத்தை இயற்றி அளித்தார்.

இவர் சிதம்பரத்தில் இருந்த காலத்திலேயே நீதிநெறி விளக்க மென்னும் நீதிநூலும் இயற்றப்பட்டிருத்தல் வேண்டுமென்றுதோற்றுகின்றது. அந்நூலுக்குச் சிதம்பரம் நடராஜப் பெருமானது துதியை முதலிற் காப்பாக அமைத்திருத்தல் இதற்கு ஓர் ஆதாரமாகும். திருமலைநாயக்கரது வேண்டுகோளின்படி மதுரையில் இருந்தபொழுதே இது பாடப்பெற்றதென்றும் கூறுவதுண்டு.

சிதம்பரத்தில் இங்ஙனம் வாழ்ந்துவந்த குமரகுருபரர் பின்பு தம் ஞானதேசிகர்பாற் சென்று தம்முடைய வேட்கையை மீண்டும் விண்ணப்பித்துக் கொண்டனர். இவருடைய பரிபக்குவத்தை யறிந்து ஞானதேசிகர் இவருக்குக் காஷாயம் உதவினர். அதுமுதல் இவர் குமரகுருபர முனிவரென வழங்கப் பெறுவாராயினர். அப்பொழுது தம் ஞான தேசிகர் விஷயமாகப் பண்டார மும்மணிக் கோவை யென்ற பிரபந்தம் ஒன்றை இயற்றினர்.

அப்பால் ஞான தேசிகரிடம் விடைபெற்றுக் காசிக்குச் சென்று தம்முடைய கல்வியறிவினாலும் தவப்பண்பினாலும் டில்லி பாதுஷாவின் உள்ளத்தைக் கவர்ந்தார். அப் பாதுஷாவின் தாய் மொழியாகிய ஹிந்துஸ்தானியை விரைவில் அறிந்துகொள்ள வேண்டுமென்றெண்ணிச் சகலகலாவல்லி மாலை யென்னும் பிரபந்தத்தை இயற்றிக் கலைமகளை வேண்டினார். கலைமகள் திருவருளால் அம்மொழியிலே சிறந்த அறிவு பெற்றுப் பாதுஷாவினிடம் பேசிப் பழகினார்.

அவர் இவர்பால் ஈடுபட்டு இவருடைய விருப்பத்தின்படியே இவர் காசியில் இருத்தற்குரிய மடம் அமைப்பதற்குக் கேதார கட்டத்தில் இடம் உதவினார்.

(இங்கே “பாதுஷா” என்று குறிக்கப் படுபவர் இஸ்லாமிய கொடுங்கோலன் ஔரங்கசீப்பின் மூத்த சகோதரரான தாரா ஷுகோ. பலமொழிகளில் வித்தகராகவும், நாட்டு மக்களால் மிகவும் நேசிக்கப் பட்டவராகவும் விளங்கிய பட்டத்து இளவரசர் தாரா ஷுகோ இந்துமதத்தின் பால் ஆர்வமும், மதிபும் கொண்டிருந்தார். காசியின் பண்டிதர்களிடம் உபநிஷதங்கள் உள்ளிட்ட பல நூல்களை சம்ஸ்கிருதத்திலேயே கற்றுத் தேர்ந்து, அவற்றை பாரசீக மொழியில் மொழிபெயர்க்கவும் செய்தார். பிற்காலத்தில் மேற்குலகில் இந்து ஞானத்தின் பரவலுக்கு இந்த மொழியாக்கங்களே பெரிதும் உதவின. அடிப்படைவாதத்திற்கு எதிரான பிரகடனமாக “உலகம் முல்லாக்களின் சத்தங்களில் இருந்து விடுதலை பெறட்டும்” என்ற வாசகத்தை உரைத்த தாரா ஷுகோ “இஸ்லாமுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக” குற்றம் சாட்டப்பட்டு, அன்றைய முகலாய அரசின் காஜிகள், மவுல்விகளால் ஷரியத் சட்டப் படி மரண தண்டனை விதிக்கப் பட்டு, ஔரங்கசீபின் அரசாணையால் கொல்லப் பட்டார்)

குமரகுருபரர் அதுகாறும் மறைபட்டிருந்த ஸ்ரீ விசுவலிங்கப் பெருமனை வெளிப்படுத்தி அங்கே கோயில் முதலியன நிருமிக்கச் செய்து நைமித்திகங்களும் குறைவற நடக்கும்படி செய்தார். கேதார கட்டத்திலுள்ள கேதாரலிங்கத்தை முகம்மதியர் மறைந்திருந்தன ரென்றும் குமரகுருபர முனிவர் அம்மூர்த்தியை வெளிப்படுத்தி ஆலய முதலியன கட்டுவித்து நித்திய டைமித்தியங்கள் நடத்தச் செய்தனரென்றும் இன்றும் ஆகம விதிப்படி தமிழ்நாட்டு முறையில் சில திருவிழாக்கள் அங்கே நிகழ்கின்றன வென்றும் சிலர் கூறுவர்.




குமரகுருபர முனிவரர் காசியில் தங்கியிருந்த மடத்திற்குக் குமாரசாமி மடமென்று பெயர். அங்கே இவர் சிவயோகம் செய்து கொண்டு வாழ்ந்துவந்தார். அக்காலத்தில் காசித்துண்டி விநாயகர் பதிகமும், காசிக் கலம்பகமும் இவரால் இயற்றப்பெற்றன. இவர் தாம் வாழ்ந்திருந்த மடாலயத்தில் புராணசாலை ஒன்று ஏற்படுத்தி அங்கே ஹிந்துஸ்தானி பாஷையிலும் தமிழிலும் புராணப் பிரசங்கமும் செய்ததுண்டு. சிறந்த இராம பக்தராகிய துளஸீதாசர் அந்தப் பிரசங்கங்களைக் கேட்டு உவந்தனரென்றும், கம்பராமாயணத்திலுள்ள கருத்துக்களைத் தாம் ஹிந்துஸ்தானியில் இயற்றிய இராமாயணத்தில் அமைத்துக் கொண்டன ரென்றும் கூறுவர்.

குமரகுருபரர் பின்னும் ஒருமுறை தருமபுரம் வந்து ஞானாசிரியரைத் தரிசித்து மீட்டும் காசிக்கே சென்று வாழ்ந்து விளங்கியிருந்து ஒரு வைகாசி மாதத்தில் கிருஷ்ண பக்ஷ திருதியையிலே சிவபெருமான் திருவடி நீழலிற் கலந்தனர்.

தட்டச்சு உதவி: ஜயக்குமார்





காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் இஸ்லாமியர்களின் வசமிருந்தது. பூஜை எதுவும் நடைபெறாது பூட்டிக் கிடந்தது. காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் போய் கோயிலை தம்மிடம் தரவேண்டுமென்று குமர குருபரர்  வேண்டுகோள் விடுத்தார்.

சிம்மாசனத்தில் இருந்த நவாப் அவருக்கு ஆசனம் தராமல் நிற்க வைத்துப் பேசினார். மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டார். புரிந்த பின்னும் அகம்பாவத்துடன் சிரித்தார்.
"கிழவரே... நீர் என்ன சொல்கிறீர் என்று எனக்கு விளங்கவில்லை. ஏதோ தானம் கேட்கிறீர் என்பது தெரிகிறது. ஆனால், என்ன தானம் என்பது தெரியவில்லை.
எனது மொழியில் கேட்டால் அல்லவா எனக்குப் புரியும். என் மொழியில் கேளுங்கள்... தருகிறேன்" சொல்லிவிட்டு எழுந்து போனார். 

அந்த நவாபின் சபை குமரகுருபரரைப் பார்த்துச் சிரித்தது. குமரகுருபரரும் சிரித்தார்.

ஞானிகள் என்போர் எளிமையானவர்கள். எல்லாவித அவமதிப்பையும் இன்முகத்துடன் ஏற்பவர்கள். கோபமில்லாதவர்கள். எதிரே இருப்பவன் அரசனோ, அசுரனோ, அறிவிலியோ, ஆராய்ந்து அறிந்த பண்டிதனோ யாராயினும் தரக்குறைவாகப் பேசமாட்டார்கள்.
எந்த ஞானியும் தனக்கென்று தானம் கேட்டதேயில்லை. ஞானியின் கைகள் எப்போதும் பிறருக்காகத்தான் தானம் கேட்கும். ஊருக்காகத்தான் அவர் மனம் யோசனை செய்யும். ஞானி எளிமையானவர். அந்த எளிமையைக் கண்டு அவரை இகழ்ச்சியாய் எடை போடக்கூடாது. பல செல்வந்தர்களுக்கு இந்த எளிமை புரியாத விஷயமாக இருக்கிறது.

சற்று உயரமாக மேடை போட்டு... உலகமே தன் கீழ் என்கிற மமதை வந்துவிடுகிறது. ஆட்சியாளர் பலருக்கு இதுவே வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது.

ஆட்சியில் அமர்வது என்பது இடையறாது தந்திரம், கணக்கில்லாத துரோகங்கள், கலவரம் ஊட்டும் வன்முறைகளால் நிகழ்வது. இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு இருந்தால்கூட அவனுக்கு நல்ல தூக்கம் என்பதில்லை. மூன்றையும் கொண்டவனுக்கு எவ்விதம் தூக்கம் வரும். ஆழ்ந்து தூங்காதவனிடம் அமைதி எப்படி குடிகொண்டு இருக்கும். அமைதியில்லாத எவனும் பிறரை எளிதில் அவமதிப்பான். ஆட்சியாளர்கள் சகலரையும் அவமானப்படுத்த இந்த அமைதியின்மையே காரணம்.

மறுநாள் விடிந்தது. காசி தேசத்துச் சான்றோர்கள் அவையில் கூடினார்கள். பாட்டுப் பாடுகிற வித்வான்களும், ஆடல் மகளிரும், அரபியில் கவிதை சொல்கிறவர்களும், அந்த மொழியில் இறைவன் பெருமை படிப்பவர்களும் ஒன்றுகூடினார்கள்.

"எங்கே அந்த மதுரைக் கிழவர்...?" நவாப் விசாரித்தார்.
"அவர் அரபி படிக்க போயிருக்கிறார்." யாரோ சொல்ல, சபை சிரித்தது.
"அப்படியா... ஆயுஸுக்கும் இந்த பக்கம் திரும்ப மாட்டார் என்று சொல்லுங்கள்..." மறுபடி சபை சிரித்தது.
"அவருக்கு வயது வேறு ஆகிவிட்டது. அரபி மொழியை இறைவனிடம் போய் படிக்க வேண்டும்." யாரோ சொல்ல, மீண்டும் சபை சிரித்தது.
"அடடா.. இது தெரிந்திருந்தால் வெறும் கையுடன் அனுப்பியிருக்க மாட்டேனே... வழிப்பயணத்திற்கு ஏதேனும் கொடுத்து அனுப்பியிருப்பேனே..."
"இறைவனை பார்க்கப்போகும் வழிப்பயணத்தில் நவாப் அவர்கள் என்ன கொடுத்துவிட முடியும்.." ஒரு பெரிய அரபிப் புலவர் சந்தேகம் எழுப்பினார்.
"சில சவுக்கடிகள்..." ஒரு உபதளபதி துள்ளிக்கொண்டு சொன்னான். மறுபடியும் அந்த நவாபின் சபை கைகொட்டிச் சிரித்தது.
"ஆக… அவர் வரவே மாட்டார் என்று சொல்கிறீர்களா..."
"வரலாம் மன்னா.. இந்துக்களுக்கு மறுபிறப்பில் நம்பிக்கை உண்டு. அந்த மதுரைக் கிழவர் இறந்து மறுபடி பிறந்து இதே காசியில் எருதாக வருவார். உம்முடைய அழுக்குத் துணிகளைச் சுமப்பார். அதுவரை பொறுத்திருங்கள்.
நவாபால் சிரிப்பை அடக்க முடியவில்லை. "மதுரைக் கிழவர் மிருகமாக வருவார் என்கிறீர்களா..."
"ஆமாம்... ஆமாம்..." என்று அந்த துதிபாடும் சபை சொல்லியது.

அப்போது வாசலில் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். பிடரியும், கோரைப் பற்களும்.. சிவந்த கண்களுமாய் ஒரு முதிர்ந்த ஆண்சிங்கம் சபைக்குள் நுழைந்தது. குமரகுருபரர் அந்த சிங்கத்தின் மீது இரண்டு கால்களையும் தொங்கவிட்டு அதன் பிடரியைப் பிடித்து அமர்ந்திருந்தார். ஆண் சிங்கத்தின் மேல் அமர்ந்த ஆண் சிங்கம் போல் காட்சியளித்தார்.

அவர் நரைத்த தலைமுடியும், தலைப்பாகையும், வெள்ளை வெளேர் என்று வயிறு வரை நீண்ட தாடியும், இறையை உணர்ந்த உறுதியான முகமும், போகமே அறியாது கடுமையான பிரும்மச்சரியத்தில் இருக்கும் கட்டுக்குலையாத உடலும் அவரை சிங்கம்போல் காட்டின.

அந்த ஆண்சிங்கத்தை தொடர்ந்து மூன்று பெண் சிங்கங்களும் அதன் குட்டிகளும் வந்தன. நவாபின் சபை கலைந்து, காலைத் தூக்கிக் கொண்டது. நவாப் வாளை உருவிக் கொண்டு பதட்டத்துடன் நின்றான். "என்ன இது..." கத்தினான்.
"நேற்று நீர் அமர ஆசனம் தரவில்லை. எனவே ஆசனத்தை கையோடு எடுத்து வந்தோம்."
"இதுவா ஆசனம்... இது சிங்கமல்லவா..."
"இது சிங்கம்தான். இதன் மீது நான் அமர்ந்திருப்பதால் இது என் ஆசனம். என் சிம்மாச சிம்மம் இருக்கிறது. ஆனால், நீ அமர்ந்து  இருப்பது பொம்மைச் சிம்மம். பொம்மையில் அமர்ந்திருக்கிற பொம்மை நீ. உயிர் மீது அமர்ந்திருக்கிற உயிர் நான். உனக்கு நான் சொல்வது புரிகிறதா..."

காலியான ஒரு ஆசனத்தில் உட்காரும் பொருட்டு அந்தச் சிங்கம் பாய்ந்து நவாபுக்கு அருகே நின்றது. நவாப் கத்தியைக் கீழே போட்டுவிட்டு பயத்தில் அலறினான். ஒரு பெண்சிங்கம் அவன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டது. சிறுநீர் விட்டது. மற்ற சிங்கங்கள் சபையை சுற்றிவந்தன. சபை வெறிச்சோடிப் போயிற்று. துதிபாடுகிற கூட்டம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிற்று. உலகத்தில் எந்த துதிபாடியும் ஆபத்து காலத்தில் அருகே இருப்பதில்லை.

குமரகுருபரர், "இங்கே வா.." என்று சிங்கங்களைக் கூப்பிட்டார். சிங்கங்கள் அவர் காலடியில் அமர்ந்து கொண்டன. நவாப் சிம்மாசனத்தின் காலடியில் பொத்தென்று உட்கார்ந்தான்.
குமரகுருபரர் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் கண்கள் சிரித்தன. முகச் சுருக்கங்கள் சிரித்தன. இதழ்க் கடைகள் சிரித்தன. காது வளையங்கள் சிரித்தன. அவர் மாலையாய் அணிந்திருந்த உருத்திராட்சைகள் சிரித்தன.

நவாப் சலாம் செய்தான். உங்களை யாரென்று தெரியாமல் பேசியதற்கு என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். என் பொறுமையும், என் சபையின் திறமையின்மையும் உங்களைத் தவறாக எடை போட வைத்துவிட்டன. மறுபடி நான் மன்னிப்புக் கேட்கிறேன்..." மீண்டும் சலாம் செய்தான்.
"தயவு செய்து சொல்லுங்கள், உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?"
"காசி விசுவநாதர் ஆலயம் திறக்கப்பட வேண்டும். கங்கை நதிக்கரையில் மடம் கட்டிக் கொள்ள எனக்கு அனுமதி தரவேண்டும்."
"நீங்கள் என் மொழியில் பேசினால் தருவதாகச் சொன்னேனே."
"நான் இப்போது உன் மொழியில்தானே பேசுகிறேன். எவர் துணையுமின்றி புரிந்துகொண்டு எனக்குப் பதில் சொல்கிறாயே..."
"ஆமாம். பாரசீகத்தில் பேசுகிறீர்கள். இலக்கண சுத்தமாக பேசுகிறீர்கள். எப்படி... எப்படி இது சாத்தியமாயிற்று?"
"இறையருள்."
"எந்த இறைவன்... உங்கள் இறைவனா..."
"உன்னுடையது, என்னுடையது என்று பொருட்கள் இருக்கலாம். இறை எல்லோருக்கும் பொது. எல்லா மொழியும் இறைவன் காலடியில் இருக்கும் தூசு."
"ஒரே இரவில் இறைவன் பயிற்சி கொடுத்தானா?"
"ஒரு நொடியில் கொடுத்தான்."
"நீங்கள் மண்டியிட்டு வேண்டினீர்களா..."
'சகலகலாவல்லி மாலை' என்றொரு கவிதை நூல் இயற்றினேன். அந்தக் கவிதை நூலில் இறைவனை வேண்டினேன்.

"மறுபடியும் உங்களுக்கு சலாம். காட்டுச் சிங்கங்களையே காலடியில் போட்டு வைத்திருக்கும் உங்களுக்கு இந்த நவாப் எம்மாத்திரம்? காசி விசுவநாதர் கோயில் உங்களுடையது. அது திறக்கப்பட்டு சாவி உங்களிடம் தரப்படும். நீங்கள் பூஜை செய்து கொள்ளலாம்.


கோவிலுக்குள்ளே ஒரு பள்ளிவாசல் கட்டியிருக்கிறோம், அந்தப் பள்ளிவாசல் எங்களுடையதாகவே இருக்க அனுமதி கேட்கிறோம்..." நவாப் பணிவாகப் பேசினார்...



இளமைப்பருவம்
இவர் தமிழ்நாட்டுத் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் என்னும் ஊரில் சைவ வெள்ளாளர் குலத்திலே சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாகப் பிறந்தார். ஐந்து வயது வரை பேசும் திறன் அற்று இருந்தார் பின்பு இவரின் பெற்றோர் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்று வழிபட பேசும் திறன் வாய்க்கப் பெற்றார். அந்த வயதிலேயே கந்தர் கலி வெண்பா என்னும் பாடலை திருச்செந்தூர் முருகக் கடவுளைப் போற்றி பாடியுள்ளார்.[3] சில வருடங்களுக்குப் பிறகு . பின்னர் தருமபுரம் ஆதீனத்தில், மாசிலாமணி தேசிகர் என்பவரிடம் சீடராக இருந்தார். அங்கு சைவ சித்தாந்தம் பயின்றார்.

குமரகுருபரர் தனது இளம் வயதிலேயே கடவுளை அறியும் பொருட்டு தன் குருவைத் தேடி வீட்டை விட்டு வெளியேறினார். திருச்செந்தூரில் அவர் இருந்தபோது, தன் குருவைக் காணும்போது தன்னால் சரியாக பேச இயலாத நிலை ஏற்படும் என்கிற அசரீரி ஒலியினைக் கேட்டார். அதனால் தன் குருவைக் காணும் நோக்கத்தில் மதுரை நகருக்கு வந்தார். அச்சமயத்தில் மதுரையை திருமலை நாயக்கர் ஆண்டு வந்தார். அவர் குமரகுருபரரை நன்கு கௌரவித்தார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க மதுரை மீனாட்சி அம்மனைப் போற்றி மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலை இயற்றினார். ஒரு சமயம், இந்த நூலில் உள்ள "வருகைப்பருவம்" என்னும் பகுதியை கோவில் மேடையில் அமர்ந்தவாறு பாடிய போது மதுரை மீனாட்சி அம்மனே சிறு பெண் வடிவத்தில் வந்து குமரகுருபரருக்கு முத்து மாலை பரிசளித்ததாக வரலாறு உள்ளது. மேலும் மீனாட்சி அம்மனைப் போற்றி மதுரைக் கலம்பகம், மீனாட்சி அம்மை குரம்,நீதி நெறி விளக்கம் போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். பின்னர் திருவாரூர் சென்று அங்குள்ள தியாகராச பெருமானைப் போற்றி "திருவாரூர் நான்மணி மாலை" என்னும் நூலை இயற்றினார்.

குருவைக் காணுதல்
குமரகுருபரர் திருவாரூரிலிருந்து தருமபுரத்திற்கு பயணப்பட்டார். அவ்வாறு செல்லும்போது ஏதோ ஒரு பெரிய விளைவு தனக்கு ஏற்படப்போவதை உணர்ந்தார். தருமபுரத்தில் பாரம்பரிய சைவ மடம் ஒன்று இருந்தது. அதன் பெயர் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் என்பதாகும். அம்மடத்தை துறவி மாசிலாமணி தேசிகர் நிர்வகித்து வந்தார். குமரகுருபரர் அங்கு சென்று அவரை வணங்கினார். அப்போது மாசிலாமணி தேசிகர், குமரகுருபரரிடம் பெரிய புராணத்தில் வரும் "ஐந்து பேரறிவும் கண்களே கொல்லா" எனத் தொடங்கும் பாடலின் சிறப்பம்சத்தை விளக்குமாறு கூறினார். அப் பாடலானது தில்லையில் உறையும் கடவுள் சிவபெருமானின் நாட்டியத்தை கண்டு மெய்யுருகி நின்ற "சுந்தரமூர்த்தி நாயனாரின் நிலையைச் சொல்வதாகும். சேக்கிழார் அந்த நிகழ்ச்சியை அழகாக பெரிய புராணத்தில் விவரித்திருப்பார். யாரால் அதை விளக்க முடியும்?

குமரகுருபரர் இதைக் கேட்டதும் வாயடைத்து நின்றார். அவருக்கு தான் தேடி வந்த குரு மாசிலாமணி தேசிகர் தான் எனப் புரிந்து கொண்டு அவரைச் சரணடைந்தார். தேசிகர் ஒரு ஆன்மீக நோக்குடைய நபர் மட்டுமல்ல. சமுதாயத்தின் மீதும் அவருக்கு அக்கறை இருந்தது. ஆன்மீக ரீதியில் உயரும்போது, சுற்றியுள்ள எல்லா உயிர்களிடமும் ஒருவர் அன்பு நிறைந்தவராக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். முகலாய சாம்ராஜ்யத்தின் கீழ் இந்து மதம் நசுக்கப்படுவதை தேசிகர் உணர்ந்திருந்தார். குமாரகுருபாரரைப் போன்ற ஆன்மீக ரீதியில் உயர்ந்த, திறமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள ஒருவரின் தேவையை அவர் உணர்ந்தார். எனவே அவர் காசி (வாரணாசி) யாத்திரை சென்று திரும்பி வரவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் குமாரகுருபாரின் குருவாக இருக்க ஒப்புக் கொண்டார். பின்னர் அவர் குமரகுருபரரை துறவறம் மேற்கொள்ளச் செய்தார்.

சந்நியாசி வாழ்க்கை
குமரகுருபரர், தருமபுரம் மடத்திற்கு வந்த பிறகு, சைவ சித்தாந்த அமைப்பைப் பற்றி விரிவான ஆய்வு செய்து, தமிழ் குறித்த தனது அறிவை மேம்படுத்துவதில் பணியாற்றினார். ஒரு சந்நியாசி வாழ்க்கை முறையை வழிநடத்துவதில் அவரது ஆழ்ந்த கற்றல் மற்றும் நேர்மையை உணர்ந்து, மடத்தின் தலைவர்கள் அவருக்கு "தம்பிரான்" என்ற பட்டத்தை வழங்கினர். குருவின் ஆணைப்படி, காசிக்குச் சென்று சைவ சமயத்தைப் பரப்பினார். அங்குள்ள கேதாரேஸ்வர் கோவிலை புதுப்பித்தார். மேலும், காசியில் மடத்தை நிறுவி இறக்கும்வரை அங்கு தங்கியிருந்தார்.[4] இதன் கிளையொன்றைத் திருப்பனந்தாளிலும் நிறுவினார்.

2010வது ஆண்டு சூன் மாதம் 27ம் தேதி அவர் மீது ஒரு நினைவு தபால்தலை இந்திய தபால் துறையால் வெளியிடப்பட்டது.[5] கயிலாசபுரத்தில் அடிகள் பிறந்த வீட்டுப் பகுதி அடிகளின் மடமாக 31.8.1952 இல் அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகளால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

குமரகுருபரர் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்து, தவழ்ந்து, வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்து காவிரியாற்றங் கரையிலும் கங்கை ஆற்றங்கரையிலும் மடமமைத்து தமிழையும் சைவத்தையும் வளர்த்து கங்கை ஆற்றங்கரையில் இறைவனடி சேர்ந்தார்.

மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமார சாமி பிள்ளைத்தமிழ், காசிக் கலம்பகம், சிதம்பர மும்மணிக்கோவை, சகலகலாவல்லி மாலை என்பன இவர் இயற்றிய பிற நூல்களாகும்.

மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டுவதில் நீதிநெறி விளக்கம் என்ற நூல் பெயர் பெற்றது.

எழுதிய நூல்கள்
கந்தர் கலிவெண்பா
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
மதுரைக் கலம்பகம்
நீதிநெறி விளக்கம்
திருவாரூர் நான்மணிமாலை
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
சிதம்பர மும்மணிக்கோவை
சிதம்பரச் செய்யுட்கோவை
பண்டார மும்மணிக் கோவை
காசிக் கலம்பகம்
சகலகலாவல்லி மாலை
மதுரை மீனாட்சியம்மை குறம்|மதுரை மீனாட்சி அம்மை குறம்
மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை
தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
கயிலைக் கலம்பகம்
காசித் துண்டி விநாயகர் பதிகம்
குமரகுருபரரைப் பாடியோர்
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை 338 பாடல்களில் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளின் சரித்திரம் என்ற நூலை எழுதியுள்ளார்.
சேற்றூர் இரா. சுப்பிரமணியக் கவிராயர் 1001 பாடல்கள் கொண்ட ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளின் புராணம் என்ற நூல் எழுதியுள்ளார்.
பாரதிதாசன் குமரகுருபரர் மீது கொண்ட பற்றினால் தமது எதிர்பாராத முத்தம் என்ற நூலில் அவரைப் பற்றி குறிப்பிடுகிறார்.

தேனூர் வே. செ. சொக்கலிங்கனார் சுவாமிகளைப் பற்றி செய்த தொண்டர் புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment