Friday 10 April 2020

BEST MALAYALAM MOVIE EE.MA.YAU


BEST MALAYALAM MOVIE  EE.MA.YAU



iyer the great-
என்றும் தமிழ் பேசுகிற பார்ப்பனர்களைத் தவிர மற்ற தமிழர்கள் திருடர்கள், வட்டிக்காரர்கள், சுத்தமற்றவர்கள், ரவுடிகள் எனச் சித்தரித்த மலையாள சினிமாவை தலைகீழாக மாற்றி; தமிழர்கள் அன்பானவர்கள், தியாகிகள் எனச் சிறப்புச் செய்திருக்கிறார்கள் இன்றைய இனிய மலையாள சினிமா இளைஞர்கள்.

அது மட்டுமல்ல 2000 ஆண்டின் துவக்கத்திலிருந்து punch dialogue பேசி தறிகெட்டு திரிந்த மலையாள கதாநாயக கிழவர்களைக் கடிவாளம் போட்டு அடக்கி இருக்கிறார்கள்.

ஊரடங்கில் நேற்றுவரை 15 படங்கள் பார்த்தேன். அதில் 11 மலையாள படங்கள். 1 தெலுங்கு. 2 தமிழ். 1. ஆங்கிலம்.
1.Ee.Ma.Yau, 2.CIA, 3.njan prakashan, 4.Trance, 5.V1, 6.Unda,7.Driving license, 8.kettiyolaanu ente malakha, 9.Sudani from Nigeria, 10. kumbalangi nights 12.பேட்ட, 13.கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், 14.கடக்குட்டி சிங்கம், 14.Syreaa narashimma reddy, 15.Dumba

நேற்று பார்த்தது ஒரு மீனவ கிராமத்தில் நடக்கும், Ee.Ma.Yau என்ற நேர்த்தியான, அழகியலான, யதார்த்தமான இவை எல்லாவற்றையும் விட மிக உண்மையான மலையாள சினிமாவை போல் ஒரு இந்திய சினிமாவை பார்க்கவில்லை.


படம் பார்க்கிற எண்ணத்தை மாற்றி, சம்ப இடத்தில் நாமும் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திய உன்னதம்; இன்னும் அந்த இழவு வீட்டின் சோகம், பேரன்பு, கோபம், இயலாமை, காழ்ப்புணர்ச்சி, அறியாமை, வறுமை சுற்றி, சுற்றி வருகிறது.
ஷாட் கம்போஸ் செய்திருக்கிற விதம் அழகியலோடு திறமையைக் காட்ட வேண்டும் என்ற தனமுனைப்பைத் தாண்டி ஷாட்டில் இருக்கிற உண்மை, பார்வையாளரை காட்சிகளினுள் இழுத்துக் கொள்கிறது.

ஒரு அறையின் காட்சி முடிந்து அடுத்த அறைக்குக் காட்சி மாறியபிறகும் முதல் அறையில் கேட்ட அந்தக் குரல், சப்தம் மெல்லிய பின்னணியில் இந்தக் காட்சியிலும் ஒலிக்கும்போது, ‘நானும் இருக்கிறேன் இந்த வீட்டிற்குள்’ என்றுதான் அதைச் சொல்லமுடியும்.

குறிப்பாக, வயதான வவாச்சன் சாவதற்குமுன் சாராயம் குடித்துப் பாடுவது; காட்சி பக்கத்து அறைக்கு மாறிய பிறகும் அங்கு பேசும் பாத்திரங்களின் பின்னணியில் மெல்ல ஒலிப்பது, படத்தின் நேர்த்தியில் கேமரா மேனின் அலைகளுக்குச் சவால் விட்டு சவுண்ட் எடிட்டர் post production ல் இழைத்திருக்கும் ஓசை, நேர்த்தியின் அலை-ஓசை.

நடிகர்களின் நம்பகத் தன்மை உலுக்கி எடுக்கிறது. எங்கிருந்து கற்றார்கள் இந்த நேர்த்தியை? 5 பேருக்கு மேல் பிரபல நடிகர்கள் இல்லை. மற்றவர் நடிகர்களாக இருக்கவும் வாய்ப்பில்லை.

கடைசிக் காட்சியில், பிணமான வாவச்சனை தனியாக மகன் தூக்குவதைப் போன்று நேரடியாகக் காட்டினால் மிகச் செயற்கையாக இருக்கும் என்பதை உணர்ந்து, பூட்டிய கதவுகளுக்குள் தாயின் தங்கையின் மனைவியின் கதறல்களுக்குப் பின்னாளிலிருந்து ஜன்னலின் இடுக்குகளில் தெளிவற்று காட்டுவது உலக நேர்த்தி.

மகா கலைஞன் இயக்குநர் Lijo Jose Pellissery யின் இயக்கத்தில் கடைசியாக வந்தது ஜல்லிக்கட்டு. 5 மாதங்களுக்கு முன் தியேட்டரில் பார்த்தேன். இன்று இரவும் இவரின் இன்னொரு படத்தைதான் பார்க்க போகிறேன் அது Angamaly Diaries அல்ல.

.Ee.Ma.Yau வை மீண்டும் பார்ப்பேன். சிலாகித்து எழுதியிருக்கிற இந்தப் பரிந்துரை, நீங்களும் அதைப் பார்க்க வேண்டும் என்பதற்காக.

அடூர் கோபால கிருஷ்ணன், அரவிந்தன் போன்ற இயக்குநர்களின் படம் போல், பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையைச் சிறுபான்மை மக்களுக்குக் காட்டுவதற்காகப் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் இயல்பான அழகியலான வேகத்தை, திட்டமிட்டு புறக்கணித்து எடுக்கப்பட்ட படமல்ல இது.
வெகுஜனங்களும் ஒன்றி பார்க்கக் கூடிய மிக யதார்த்தமான படம். அதுமட்டுமல்ல பார்ப்பன குடும்பங்களின் பின்னணியையே அழகியலாக காட்டி இதுதான் கலையின் உன்னதம் என்று சர்வதேச அளவில் காதில் பூ சுற்றல்களுக்கு எதிரான படம்.

விரிவான விமர்சனம் நேரம் கிடைக்கும்போது எழுதுவேன். அதற்குள் நீங்களும் பார்த்து விடுங்கள்-வே.மதிமாறன்.

No comments:

Post a Comment