HISTORY OF BHARATHIYA JANATA PARTY
FORMED 1980 APRIL 6
வாஜ்பாய் - அத்வானி முதல் மோடி - அமித் ஷா வரை... இது பி.ஜே.பி-யின் கதை! #BJPat40
நமது நிருபர்
பி.ஜே.பி
பி.ஜே.பி
வாஜ்பாய் கண்ட கனவு, 40 ஆண்டுகளில் நனவாகியுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளது அவர் தோற்றுவித்த கட்சி. பி.ஜே.பி உருவாவதற்கும், இன்றுவரை அந்தக் கட்சி தனது நீண்ட கால செயல்திட்டங்களை நிறைவேற்றி வருவதற்கும் பின்னணியில் இருப்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு.
ஏப்ரல் 06, 1980. 40 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் இந்தியாவின் அரசியல் தலையெழுத்து மாற்றி எழுதப்பட்டது. அடல் பிஹாரி வாஜ்பாய், லால் கிஷன் அத்வானி முதலானோர் தலைமையில் இந்நாளில் புதிதாகப் பிறந்தது பாரதிய ஜனதா கட்சி. டெல்லியின் பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தொடங்கப்பட்ட பி.ஜே.பி என்ற புதிய கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் வாஜ்பாய். சிறந்த பேச்சாளர் என்று வர்ணிக்கப்பட்ட வாஜ்பாய், தனது நீண்ட கால செயல்திட்டங்களுள் ஒன்றான தங்களுக்கென்ற கட்சி உருவானது குறித்து உணர்ச்சி ததும்ப தொண்டர்களிடம் பேசினார்.
“கடந்த காலங்களை மறந்துவிட்டு, எதிர்காலத்தைத் தீர்மானிப்போம். நமது சொந்த கருத்தியல்களைக் கொண்டு இந்தப் புதிய கட்சியைக் கட்டமைப்போம். இருள் நீங்கும்; ஒளி தென்படும்; தாமரை மலரும்!” என்றார்.
வாஜ்பாய் கண்ட கனவு, 40 ஆண்டுகளில் நனவாகியுள்ளது. இந்தியாவின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளது அவர் தோற்றுவித்த கட்சி. பி.ஜே.பி என்ற கட்சி உருவாவதற்கும், கொள்கைகள் வகுக்கப்படுவதற்கும், இன்றுவரை அந்தக் கட்சி தனது நீண்ட கால செயல்திட்டங்களை நிறைவேற்றி வருவதற்கும் பின்னணியில் இருப்பது அதன் தாய் அமைப்பு, ஆர்.எஸ்.எஸ். ஏறத்தாழ 100 ஆண்டுகளாக, இந்தியாவின் பெரும் நிலப்பரப்பின் மீது, ஆர்.எஸ்.எஸ் நிகழ்த்திய உழைப்பின் பயனாக, இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறது பி.ஜே.பி.
வாஜ்பாய்
வாஜ்பாய்
பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டு 40 ஆண்டுகளே ஆன போதும், 19-ம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து தொடங்குகிறது இதன் வரலாறு. சுல்தான்களின் ஆட்சியிலும், முகலாயர் ஆட்சியிலும் இந்து மதத்தில் இருந்து வெளியேறியவர்களைத் தாய் மதத்திற்குத் திரும்ப அழைப்பதற்காகத் தொடங்கப்பட்டது சுத்தி இயக்கம். `கர் வாபஸி’ என்ற பெயரில் 2014-ம் ஆண்டு தேர்தலில் பி.ஜே.பி வென்ற பிறகு, மீண்டும் இந்த இயக்கம் புத்துயிர்ப்பு செய்யப்பட்டது. சுத்தி இயக்கத்தைத் தோற்றுவித்த ஆரிய சமாஜம், பசுப் பாதுகாப்பை வலியுறுத்தியது. ஆர்ய சமாஜம் போல, இந்து மகா சபா என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, இந்துக்களின் பாதுகாப்பு என்பதே குறிக்கோள் என்று செயல்படத் தொடங்கியது. இந்த அமைப்புகளின் நீட்சியில் உருவாக்கப்பட்டது ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் என்று அழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ். இந்த அமைப்புகள் காலப்போக்கில் உருவாக்கிய கொள்கைகளைப் பின்பற்றி நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் தோன்றின.
`சங்’ என்று அழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் குடும்பமாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதால், தங்களை `சங் பரிவார்’ என்று வெளிப்படுத்திக்கொண்டன இந்த அமைப்புகள். சங் பரிவார் அமைப்புகளுள், உச்சபட்ச வளர்ச்சியை அடைந்த பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெறும் வாக்குறுதிகள் இந்த நீண்ட கால கருத்தியல் பின்னணியில் பிறந்தவை.
நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி இந்தியாவை மதச்சார்பற்ற நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தபோது, இந்துக்களுக்கான கட்சி என்று தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்த இந்து மகா சபைக்கும், காந்தி படுகொலையில் தொடர்புடையதாகக் கூறப்பட்டு தடைசெய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் நெருக்கடி ஏற்பட்டது. இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த சர்தார் வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத் முதலான வலதுசாரிகள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரைக் காங்கிரஸ் கட்சியில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவராக இருந்த கோல்வால்கர், தங்கள் செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, அரசியல் கட்சி ஒன்றைத் தோற்றுவித்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊழியர்கள் சிலரை அந்தக் கட்சிக்காகப் பணியாற்றுவதற்காக ஒப்படைத்தார். சியாமா பிரசாத் முகர்ஜி தலைமையில், பாரதிய ஜன சங்கம் என்ற கட்சி உருவானது. 1951-ம் ஆண்டு, சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் 3 இடங்களை வென்றது பாரதிய ஜன சங்கம்.
`இந்து’ அடையாளத்தைக் காப்பது, சிறுபான்மையினருக்கு சலுகைகளை அளிக்கும் காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பது, பசுக்களைப் பாதுகாப்பது, காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு சட்டத்தை நீக்கம் செய்வது, இந்தி மொழியை வளர்ப்பது, மதமாற்றத்தை எதிர்ப்பது முதலானவற்றைத் தமது அரசியல் நிரலாகக் கொண்டு செயல்பட்டது பாரதிய ஜன சங்கம். இன்றுவரை, இந்தக் கருத்துகளில் இருந்து சங் பரிவார் பின்வாங்கவில்லை.
இந்திரா காந்தி
இந்திரா காந்தி
vikatan
எமர்ஜென்சி நிலையை அமல்படுத்திய இந்திரா காந்திக்கு எதிராக, 1977-ம் ஆண்டு பலமான எதிர்க்கட்சி ஒன்றைக் கட்டும் முயற்சியில் இறங்கினார் ஜெயபிரகாஷ் நாராயண். `ஜனதா கட்சி’ என்று அழைக்கப்பட்ட இந்தக் கட்சியில் சோசியலிச கட்சி, இந்திரா காந்திக்கு எதிரான முன்னாள் காங்கிரஸ் பிரமுகர்கள் ஆகியோரோடு, ஜன சங்கமும் இணைந்து கொண்டது. இந்திரா காந்தியை வீழ்த்துவது என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் தேர்தலில் போட்டியிட்ட ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தது. மொரார்ஜி தேசாய் பிரதமராகப் பதவியேற்றார். ஜனதா கட்சியின் வெற்றியில் மிகப்பெரிய பங்கு, ஜன சங்க உறுப்பினர்களுடையதாக இருந்தது.
.
ஆட்சியை அடைந்த பிறகு, பல்வேறு கட்சிகளின் கலவையாக இருந்த ஜனதா கட்சிக்குள் மோதல்கள் வெடித்தன. ஆட்சி கவிழ்ந்து, 1980-ம் ஆண்டு, மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்றார். ஜனதா கட்சிக்குள் இருந்த உட்கட்சிப் பூசல்கள் பூதாகரமாகின. ஜனதா கட்சி உறுப்பினர்கள் யாரும் ஆர்.எஸ்.எஸ் முதலான அமைப்புகளிலும் உறுப்பினராக இருக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியது கட்சியின் தேசிய உயர்மட்டக் குழு. முன்னாள் ஜன சங்க உறுப்பினர்கள் இதனை எதிர்த்து, ஜனதா கட்சியில் இருந்து வெளியேறினர். பாரதிய ஜனதா கட்சி தோற்றுவிக்கப்பட்டது.
அத்வானி, வாஜ்பாய்
அத்வானி, வாஜ்பாய்
பி.ஜே.பி தோற்றுவிக்கப்பட்டபோது, அதன் தலைவராக இருந்த வாஜ்பாய் மிதவாத இந்துத்துவக் கொள்கையைக் கையில் எடுத்ததோடு, கட்சியை நாடு முழுவதும் பிரபலமாக்கும் பணிகளில் ஈடுபட்டார். 1984-ம் ஆண்டு, இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பிறகு நடைபெற்ற தேர்தலில் பி.ஜே.பி 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது. 2 நாடாளுமன்றத் தொகுதிகளை மட்டுமே வென்றதால், பி.ஜே.பி-யின் மிதவாத செயல்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன. இந்தியா முழுவதும் தன்னை வளர்த்துக் கொள்வதற்காகத் தயாரானது பி.ஜே.பி.
வலதுசாரி இந்து தேசியத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது பி.ஜே.பி. அதற்கு பி.ஜே.பி கையில் எடுத்த `ராமர் அரசியல்’ வெற்றிகரமாகச் செயல்பட்டது. சங் பரிவார் அமைப்புகளுள் ஒன்றான விஷ்வ ஹிந்து பரிஷத் 1980-களில், தொடக்கத்தில் அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டிருக்கும் நிலத்தில் ராமர் பிறந்தார் என்றும், அங்கு ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்றும் இந்துப் பெரும்பான்மை மக்களிடையே பிரசாரத்தில் ஈடுபட்டது. ராமர் கோயிலுக்கு ஆதரவான அமைப்புகள் ஒன்றிணைந்து, பி.ஜே.பி தலைவர் அத்வானி தலைமையில் ராமஜென்மபூமி இயக்கத்தைத் தோற்றுவித்தன. மதவாத அரசியலாக உருவெடுத்த ராமஜென்மபூமி இயக்கம், பி.ஜே.பி-க்கு விரைவாக முடிவுகளைக் காட்டியது. 1984 தேர்தலில் வெறும் 2 இடங்களைப் பெற்றிருந்த பி.ஜே.பி, 1989-ம் ஆண்டுத் தேர்தலில் 86 இடங்களை வென்றது. வி.பி.சிங் தலைமையில் உருவாக்கப்பட்ட தேசிய முன்னணி அரசின் அங்கமாக, ஆட்சியில் இடம்பெற்றது பி.ஜே.பி.
அத்வானி ரத யாத்திரை
அத்வானி ரத யாத்திரை
Indian express
தேர்தலுக்குப் பிறகு, மீண்டும் ராமர் கோயில் விவகாரத்தைக் கையிலெடுத்தது பி.ஜே.பி. அத்வானி தலைமையில் நாடு முழுவதும் பி.ஜே.பி-யின் ரத யாத்திரை நடத்தப்பட்டது. மக்களை மத அடிப்படையில் இரு துருவங்களாக்குவதும், அதன் வழியாக வாக்குகளை அறுவடை செய்வதற்கும் இந்த ரத யாத்திரையை பி.ஜே.பி பயன்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும், அத்வானி ரத யாத்திரை மேற்கொண்ட பகுதிகளில் பெரும்பாலானவற்றுள், இந்துக்களும் முஸ்லிம்களுக்கும் இடையிலான மத மோதல்கள் அதிகரித்திருந்தன. பீகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் அத்வானியைக் கைதுசெய்து உத்தரவிட்டார். அத்வானியின் கைதைக் கண்டித்த பி.ஜே.பி, வி.பி.சிங் அரசுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்றது. மீண்டும் நடைபெற்ற தேர்தலில் பி.ஜே.பி வென்ற இடங்களின் எண்ணிக்கை 120.
1992-ம் ஆண்டு, டிசம்பர் 6 அன்று, அயோத்தியில் பாபர் மசூதி கர சேவகர்களால் இடிக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த நிகழ்வு, பல்வேறு அப்பாவி மக்களின் மரணங்களுக்குக் காரணமாக அமைந்தது. பின்னாள்களில், பாபர் மசூதி இடிப்பு மீதான விசாரணையை நடத்திய லிபரஹான் கமிஷன், 68 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. அவர்களுள் பெரும்பாலானோர் பி.ஜே.பி-யின் முன்னணி தலைவர்கள்.
அத்வானி, முரளி மனோகர் ஜோஷி முதலான பி.ஜே.பி தலைவர்களின் மேடை பேச்சுகளே, பாபர் மசூதி இடிப்பைத் தூண்டியதாக லிபரஹான் கமிஷன் அறிக்கை கூறியது.
வாஜ்பாய், மோடி
வாஜ்பாய், மோடி
90-களின் பிற்பகுதியில், உலகம் முழுவதும் இடதுசாரி அரசியலின் வீழ்ச்சி, வலதுசாரி அரசியலின் புத்துயிர்ப்பு ஆகியன தென்படத் தொடங்கின. தொடக்கத்தில் சுதேசி பொருளாதாரத்தை முன்வைத்த பி.ஜே.பி, தாராளமயத்தை வரவேற்றது. இந்தியாவின் பெரும்பான்மை மத அடிப்படையில் மக்களைத் திரட்டிக் கொண்டே, மறுபக்கம் இந்தியாவை உலகமயத்திற்குத் திறந்து விடுவதற்கு ஆயத்தமான பி.ஜே.பி-க்கு பெரு முதலாளிகளின் ஆதரவு அதிகளவில் கிடைக்கத் தொடங்கியது. 1998 முதல் 2004 வரை, மத்திய அரசு பி.ஜே.பி-யின் கட்டுப்பாட்டில் இருந்தது. தனிப்பெரும்பான்மை இல்லாததால், நீண்ட காலத் திட்டங்களை நிறைவேற்றாத போதும், கல்வி, நீதித்துறை, ராணுவம் முதலான துறைகளில் பி.ஜே.பி-யின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் தோல்வியடைந்தாலும், 2014-ம் ஆண்டு அசுர வேகத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையை வென்றது பி.ஜே.பி. ஏறத்தாழ 10 ஆண்டுகள், இதற்கான பணிகள் நடைபெற்றன. வாஜ்பாய், அத்வானி போல இல்லாமல், `இந்துக்களின் மகா புருஷர்’ என்று பி.ஜே.பி-யினரால் வர்ணிக்கப்பட்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை முன்னிறுத்தத் தொடங்கியது பி.ஜே.பி. 2014 நாடாளுமன்றத் தேர்தலை `வளர்ச்சி’ என்ற முழக்கத்தோடு எதிர்கொண்டாலும், பின்னணியில் பெரும்பாலான மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த இந்துக்களுக்கு மோடி, மீட்பராக முன்னிறுத்தப்பட்டார். மேலும், காங்கிரஸ் கட்சியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும், மக்களை பி.ஜே.பி நோக்கித் தள்ளின. 2014-ம் ஆண்டுத் தேர்தலில் 282 இடங்களை வென்ற பி.ஜே.பி, 2019-ம் ஆண்டுத் தேர்தலில் ஒருபடி மேலே சென்று, 303 இடங்களை வென்று, மிகப்பெரிய சக்தியாக உருவானது.
மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா
ஆர்.எஸ்.எஸ் கடந்த 100 ஆண்டுகளில் உருவாக்கிய பிரசாரங்களின் அறுவடையை பி.ஜே.பி லாபமாக்கிக் கொண்டது. இந்தப் பிரசாரங்களின் வழியாக, மக்களிடையே இந்து - இந்து அல்லாதோர் என்ற பிரிவு ஏற்பட்டது. சாதிகளால் பிளவுண்டு கிடந்த இந்து சமூகத்தைக் கடந்த காலங்களில் வாக்கு வங்கியாகவும் மாற்றியது பி.ஜே.பி. இந்து மத அடையாளங்கள், பழக்க வழக்கங்கள் அனைத்திலும், `இந்து அரசியல்’ வெளிப்படத் தொடங்கியது. மக்களிடையே இருக்கும் இந்து அரசியல் பெரும்பான்மைவாதத்தை லாவகமாகத் தற்போது பயன்படுத்தி வருகிறது பி.ஜே.பி. பணமதிப்பு நீக்கம், பாகிஸ்தான் மீதான துல்லியத் தாக்குதல், கொரோனா உட்பட சாதாரண நிகழ்வுகளிலும், பிரதமர் மோடி மக்களிடையே பேசும் அனைத்திலும், இந்துத் தேசிய அடையாளப் பெருமை பொதிந்து வெளிப்படுவது, நாட்டின் பெரும்பான்மை வாதத்தோடு ஒப்பிட்டு அணுக வேண்டிய ஒன்று.
இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத கருத்தியலாக இந்துப் பெரும்பான்மைவாதம் உருவாகியுள்ளது. ஆம் ஆத்மி, தி.மு.க, காங்கிரஸ், சி.பி.எம் முதலான பெரும்பாலான தேர்தல் கட்சிகளும், இந்தப் பெரும்பான்மைவாத அரசியலைத் தாண்டி, கொள்கைகள் வகுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆரிய சமாஜம், இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜன சங்கம், ஜனதா கட்சி, பாரதிய ஜனதா கட்சி எனப் பல்வேறு பரிணாமங்களைக் கடந்து, இந்தியாவின் ஆட்சிப் பீடத்தில் உச்சபட்ச சக்தியாக இடம் கொண்டுள்ளது பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிமுக்கியமான திட்டங்களான காஷ்மீருக்குத் தனிச்சட்டத்தை நீக்குதல், பொது சிவில் சட்டத்தை நீக்குதல், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுதல் ஆகியவற்றுள் இரண்டு திட்டங்களை மிகச் சமீபத்தில் வெற்றிகரமாக முடித்துக் காட்டியது பி.ஜே.பி அரசு. கொரோனா தொற்று ஏற்படாமல் இருந்திருந்தால், நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பொது சிவில் சட்டம் குறித்த மசோதா பேசுபொருளாகியிருக்கும்.
மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா
``நான் ஒரு சுயம்சேவக் (ஆர்.எஸ்.எஸ் ஊழியர்) என்பதில் பெருமிதம் கொள்கிறேன். நாளை நான் பிரதமராக இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். ஆனால், ஒரு சுயம் சேவக்காக இருக்கும் உரிமையை என்னிடம் இருந்து யாரும் பறித்துவிட முடியாது” என்று பிரதமராக இருந்தபோது அமெரிக்காவில் உணர்ச்சி பொங்கப் பேசினார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். அவர் வெளிப்படுத்திய அதே பெருமிதத்தைக் கடந்த காலங்களில் பி.ஜே.பி-யின் தலைவர்கள் பலரும் வெளிப்படுத்தினர். இந்தப் பெருமிதத்தின் கீழ், காந்தி - நேரு ஆகியோர் முன்மொழிந்த மதச்சார்பற்ற கொள்கை, சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு ஆகியவைக் கிடப்பில் போடப்பட்டன. தொடங்கப்பட்டபோது, பி.ஜே.பி தலைவராக இருந்த வாஜ்பாய், மக்களின் ஆதரவைப் பெறுவதற்கேற்ப கொள்கைகளில் மாற்றம் செய்துகொண்டார்; 40 ஆண்டுகளுக்குப் பிறகு, எந்த வித சமரசமும் இல்லாமல், ஆர்.எஸ்.எஸ் கனவுத் திட்டங்கள் ஒவ்வொன்றும் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன; அவை வெகு மக்களின் ஆதரவையும் பெற்று வருகின்றன. உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாகத் தன்னை அறிவித்துக் கொண்டிருக்கிறது பி.ஜே.பி..
.
No comments:
Post a Comment