KOVAIKKAI CONTROL ON DIABETES





KOVAIKKAI CONTROL ON DIABETES



நீரிழிவை கட்டுப்படுத்தும் கோவைக்காய்

புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளரும் கோவைக்கொடியின் முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை.

நீரிழிவை கட்டுப்படுத்தும்

கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை.

கோவைக்காய் நீரிழிவு வியாதியை குறைக்கும் குணமுடையது என்பது சொல்லப்பட்டது. நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

வாய்ப்புண் குணமாகும்

கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுப்பொடி, சீரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவுதான் கோவைக்காய் பச்சடி தயார். இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும்.

வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.

தோல்நோய்களை குணமாக்கும்

இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்

கோவைக்காய் முழுத் தாவரமும் இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. கோவைக்காய் கோழையகற்றும்; முறைக் காய்ச்சலைக் கட்டுப் படுத்தும்; சிறு நீர் மற்றும் வியர்வையை பெருக்கும்; வாந்தி உண்டாக்கும்.

கோவைக்காய் இலை இருமல், ஆறாத புண்கள், சிரங்கு, உடல் சூடு, நீர்ச் சுருக்கு ஆகியவற்றைப் போக்கும். கோவைக்காய், கரப்பான், ஜலதோஷம், நீரழிவு போன்ற நோய்களுக்கு மருந்தாகும். கோவைக்காய் வேர், குஷ்டம், பிரமேகம், வாத நோய்கள் ஆகியவற்றுக்கு மருந்தாகும்.

கோவைக்காய் பற்றுக் கம்பிகள் கொண்ட, படர் கொடி வகையான தாவரம். கோவைக்காய் இலைகள் ஐந்து கோணங்களுடைய மடலானவை. மலர்கள் வெள்ளை நிறமானவை. ஆண் பெண் மலர்கள் தனித் தனியாகக் காணப்படும்.

கோவைக்காய்கள் சதைப் பற்றானவை. நீண்ட முட்டை வடிவமானவை. நீள் வாக்கில் வெள்ளை நிறமான வரிகள் கொண்டவை. பழங்கள் இரத்தச் சிவப்பு நிறமானவை.
முதிர்ந்த கோவைக்காய் தாவரத்தில் காணப்படும் வேர் தடித்து, கிழங்கு போல காணப்படும்.

தமிழ்நாடு முழுவதும், சமவெளிப் பகுதியில் வேலியோரங்களிலும் புதர்களிலும், பாழ் நிலங்களிலும் பரவலாக வளர்கின்றன. முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது.

கோவைக்காயில், சாம்பார், கூட்டு போன்றவை செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண், வாய்ப்புண், உதடு வெடிப்பு ஆகியன குணமாகும்.

கோவைக்காய் இலைச் சாறு 20மிலி உடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து ஒரு டம்ளர் நீராகாரத்துடன் கலக்கி காலையில் மட்டும் குடித்து வர வேண்டும். 7 நாட்கள் வரை சாப்பிட வெட்டை நோய் குணமாகும்.

கோவைக்காய் இலைச் சாற்றை சம அளவு தேங்காய் எண்ணெயுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து, வடிகட்டி வைத்துக் கொண்டு, மேல் பூச்சாகப் பூச வேண்டும். மேலும் ஒரு பிடி இலையை ஒன்றிரண்டாக நசுக்கி இரண்டு டம்ளர் நீரில் இட்டு பாதியாக காய்ச்சி, வடிகட்டி குடிக்க வேண்டும். 7 நாட்களுக்கு காலை, மாலை வேளைகளில் இவ்வாறு செய்து வர படை, சொரி, சிரங்கு போன்றவை குணமாகும்.

கோவைக்காய் இலைச் சாறு, காலை, மாலை 50 மிலி அளவு 4 நாள்கள் குடித்து வர சீத பேதி குணமாகும்.

கோவைக்காய் வேர்க்கிழங்கு சாறு 10 மிலி காலையில் மட்டும் குடித்து வர ஆஸ்துமா குணமாகும்.

சுவையின்மை தீர கோவைக்காயை நறுக்கி காய வைத்து, வற்றலாக்கி வைத்துக் கொண்டு நெய்யில் வறுத்து சாப்பிட வேண்டும். அல்லது கோவைக்காயை ஊறுகாய் செய்தும் சாப்பிட்டு வரலாம்..

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER