Ильяс : இல்யாஸ்
ஒரு காலத்தில் இல்யாஸ் என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனது தந்தை அவனுக்கு ஒரு நல்ல பெண்ணை மணமுடித்துக் கொடுத்த ஓர் ஆண்டுக்குப் பின்னர் மறைந்து போனார், சொல்லிக்கொள்ளும்படி எந்த ஒரு சொத்தினையும் விட்டுச் செல்லவில்லை.
இல்யாஸ் அப்போது ஏழு குதிரைகளையும், இரண்டு மாடுகளையும், சில ஆடுகளையும் வைத்திருந்தான். அவன் நல்ல நிர்வாகி விரைவில் தனது சொத்து பத்தினை அதிகரித்துக் கொண்டான். அவனும் அவனது மனைவியும் விடியலிலிருந்து இரவுவரை கடுமையாக உழைத்தார்கள்; மற்றெல்லாரும் விழிப்பதற்கும் முன்னர் எழுந்து மற்றவர்கள் எல்லாம் தூங்கிய பின்னர் தூங்கினர்; அவனது சொத்து ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து கொண்டே இருந்தது. இவ்வாறு வாழ்ந்ததால், இல்யாஸ் கொஞ்சம் கொஞ்சமாக சொத்தினைப் பெருக்கிக் கொண்டான். அவனது முப்பத்தி ஐந்தாவது வயதில் அவனிடம் 200 குதிரைகளும், 150 கால் நடைகளும் 1200 ஆடுகளும் இருந்தன. ஆண் வேலைக்காரர்கள் கால் நடை மந்தைகளை மேய்த்தனர், பெண் வேலைக்காரர்கள் பால் கறந்து தயிறும் மோரும் வெண்ணெயும் நெய்யும் செய்தனர். இப்போது இல்யாஸ் அபரிமிதமான செல்வத்தைக் கொண்டிருந்தான், அவனது மாகாணத்தில் உள்ள அனைவரும் அவனைப் பார்த்துப் பொறாமை கொண்டனர். அவனைப்ப்ற்றி அவர்கள் சொன்னார்கள், "இல்யாஸ் ஓர் அதிர்ஷ்டக்காரன், தேவைக்கும் அதிகமாக அவன் எல்லாம் வைத்துள்ளான், இந்த உலகமே அவனுக்கு சொர்கமாக இருக்கிறது."
இல்யாசைக் கேள்விப்பட்ட செல்வந்தர்களெல்லாம் அவனிடம் நட்புக்கொள்ள முற்பட்டனர். தூரம் தொலைவிலிருந்து எல்லாம் அவனைக்காண பலர் வந்தனர், அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றான், அனைவருக்கும் அருந்தவும் உண்ணவும் கொடுத்து மகிழ்ந்தான். யார் வந்தாலும் அங்கே அவர்களை வரவேற்க தேனீர் சர்பத் மற்றும் ஊணுடன் உணவு காத்திருந்தது. எப்போது விருந்தினர் வந்தாலும் ஒரு கிடா வெட்டப்பட்டது, சில நேரங்களில் இரண்டு, விருந்தினர் எண்ணிக்கை அதிகமானால் குதிரை வெட்டப்பட்டது.
இல்யாசுக்கு மூன்று குழந்தைகள்: இரண்டு மகன்கள் ஒரு மகள்; அவர்களுக்கு எல்லாம் திருமணம் செய்து வைத்தான். அவன் ஏழ்மையாக இருந்த போது அவன் மகன் அவனுடன் பாடுபட்டான். கால் நடை மந்தைகளை அவன் மகன் மேய்த்தான்; இல்யாசிடம் செல்வம் பெருகிய போது அவனது மகன்கள் கெட்டுப்போனார்கள். ஒரு மகன் குடிகாரன் ஆனான்.
மூத்த மகன் தெருச் சண்டையில் பலியானான், இளையவன் தற்பெருமை கொண்ட பெண்ணை மணந்ததால் தந்தை சொல்லை மதிக்காமற்போனான், அதன் பிறகு தந்தையும் மகனும் சேர்ந்து வாழவே முடியாமல் போனது.
அதனால் அவர்கள் பிறிந்து வாழ ஆரம்பித்தனர், இல்யாஸ் தன் மகனுக்கு ஒரு வீடும் சில கால் நடைகளையும் கொடுத்தான்; இதனால் அவனது செல்வம் குறைந்து போனது. இதன் பிறகு கால் நடைகளுக்குத் திடீரென நோய் கண்டது அதனால் பல கால் நடைகள் பலியாயின. அதன் பின்னர் வந்த வெள்ளாமை பொய்த்துப் போனது; அடுத்து வந்த கடுங்குளிர் காலத்துக் குளிரில் பல கால் நடைகள் இறந்து போயின. அதன் பிறகு கிர்கிஸ் கொள்ளையர்கள் அவனது நல்ல குதிரைகளை ஓட்டிச் சென்றனர்; இவ்வாறாக இல்யாசின் சொத்துக்கள் சேதமுற்றன. அவனது வலிமையைப் போலவே அவனது செல்வமும் மெலிய ஆரம்பித்தது. அவன் எழுபது வயதினை அடைந்த போது அவன் செலவுகளுக்காக துணிமணிகளை எல்லாம் விற்க ஆரம்பித்தான். அவன் முடிவாக அனைத்து உடைமைகளையும் இழந்து தனது அனைத்துக் கால் நடைகளையும் விற்று வறுமையை நேருக்கு நேராக எதிர்கொண்டான். எப்படி இதெல்லாம் நடந்தது என்று அவன் அறியும் முன், அவன் அனைத்தையும் இழந்திருந்தான், தள்ளாத வயதில் அவனும் அவன் மனைவியும் கூலிக்குச் செல்ல நேர்ந்தது. அணிந்து கொண்டிருந்த உடை, ஒரு கம்பளி மேலாடை, ஒரு கோப்பை, இரு சோடிக் காலணிகள், வயதாகிப் போன அவனது மனைவி ஷாம்-ஷெமாகி ஆகிவற்றைத் தவிர இல்யாசிடம் இப்போது ஒன்றுமில்லை. அவனை விட்டுப் பிறிந்து போன மகன் தூர தேசம் ஒன்றிற்குச் சென்று விட்டான், அவனது மகளும் இறந்து விட்டாள், அதனால் கிழட்டுத் தம்பதியினரைப் பார்த்துக் கொள்ள ஒருவரும் இல்லாமல் போனது.
பக்கத்து வீட்டுக் காரன் முகம்மது-ஷா இவர்களைப் பார்த்து இரக்கம் கொண்டான். முகம்மது-ஷா பெரிய பணக்காரனோ ஏழையோ அல்ல, ஆனால் வசதியாக வாழ்ந்துவந்தான், அதோடல்லாமல் அவன் நல்ல மனிதனும் கூட. இல்யாசின் விருந்தோம்பலை நன்கு அறிந்தவன், இல்யாசின் மீது அன்பு கொண்டு சொன்னான்: " இல்யாஸ், வா! வந்து எங்களுடன் தங்கிக்கொள், உன்னையும் உன் மனைவியையும் வரவேற்கிறோம்
கோடையில் எனது பூசணித்தோட்டத்தில் உன்னால் முடிந்த மட்டும் வேலை செய், குளிர் காலத்தில் எனது கால் நடைகளுக்குத் தீவனம் போட்டுப் பார்த்துக்கொள். அதே நேரம் உன் மனைவி பால் கறந்து கடைந்து வெண்ணெயெடுக்கட்டும். நான் உங்களிருவருக்கும் உண்ண உணவும் உடுத்த உடையும் இருக்க இடமும் தருகிறேன்."
இல்யாஸ் தனது பக்கத்து வீட்டுக்காரனுக்கு நன்றி சொன்னான். முகம்மது-ஷாவின் தோட்டத்தில் கூலிக்கு இல்யாசும் அவன் மனைவியும் சேர்ந்தார்கள். முதலில் அவர்களுக்கு அது கடினமாக இருந்தது. ஆனால் அதற்குப் பழகிப் போனார்கள், தங்களது அனைத்து வலிமையையும் கொடுத்து உழைத்தார்கள்.
இந்த மாதிரியான மக்களை வேலைக்காரர்களாக கொண்டிருப்பது முகம்மது-ஷாவுக்கு வசதியாக இருந்தது, அவர்கள் முன்னாள் முதலாளிகள், அவர்கள் சோம்பேறிகள் அல்லர், பிறரைத் திறமையாக வேலை வாங்கியும் இருந்தனர், ஆனாலும் எல்லா வேலைகளையும் இப்போது தாங்களாகவே செய்தார்கள்.
இருந்தாலும், எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தவர்கள், இப்போது இவ்வளவு கீழ் நிலைக்கு வந்து வேலை செய்கிறார்களே என்று முகம்மது-ஷா வருத்தப் படவே செய்தான்.
ஒருமுறை நீண்ட தொலைவிலிருந்து முகம்மது-ஷாவைப் பார்க்க அவனது உறவினர்கள் வந்திருந்தனர், அவர்களில் ஒரு முல்லாவும் இருந்தார். முகம்மது-ஷா தனது வேலையாளான இல்யாசை அழைத்து ஒரு கிடாவைக் கொன்று விருந்து வைக்கச் சொன்னான்.
இல்யாஸ் ஆட்டினைக் கொன்று தோலை உறித்து, சுத்தம் செய்து, சமைத்து விருந்தினர்களுக்குப் படைத்தான். விருந்தினர்கள் விருந்துண்டு பின்னர் தேனீர் அருந்தினர்.
அவர்கள் அவ்வாறு கம்பள விரிப்புகளில் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்த போது, தனது வேலைகளை எல்லாம் முடித்து விட்டு இல்யாஸ் அவ்வழியே போனான். இல்யாஸ் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த முகம்மது-ஷா தனது உறவினர்களிடம் அவனைக் காட்டிச் சொன்னான்:
"இப்போது போன வயசானவரைக் கவனித்தீர்களா?"
"ஆமாம். அப்படி என்ன அவரிடத்தில் சொல்லிக் கொள்கிற மாதிரி இருக்கு?" ஒரு விருந்தினன் கேட்டான்.
"அது என்னன்னா--அவர்தான் ஒரு காலத்தில் நம்மில் மிகப் பெரிய பணக்காரராக இருந்தவர். அவர் பெயர் தான் இல்யாஸ். நீங்க கூடக் கேள்விப் பட்டிருப்பீங்களே!" முகம்மது-ஷா சொன்னான்.
" நான் கூடக் கேள்விப் பட்டிருக்கிறேன்," ஒரு விருந்தினன் சொன்னான் "ஆனால் நான் அவரை இதற்கு முன் பார்த்ததில்லை, இருந்தாலும் அவரது புகழ் எட்டுத்திக்கும் பரவி இருக்குதே."
"ஆமாம், ஆனால் இப்பொழுது அவர் கிட்ட ஒன்னும் மிச்சமில்லை," முகம்மது-ஷா சொன்னான், "இப்போ அவர் என்னிடம் கூலிக்கு இருக்கிறார், அவர் மனைவியும் கூட இங்கே தான் வேலைக்கு இருக்கிறார்--அவர் கறவை வேலைகளைப்பார்த்துக் கொள்கிறார்."
விருந்தினன் ஆச்சரியப் பட்டான்: உச்சுக் கொட்டினான், தலையைச் சிலிப்பிக் கொண்டான், பிறகு சொன்னான்:
"விதி சக்கரம் போல சுழலுது பாருங்க. ஒருத்தனை அது உயர்த்துது இன்னொருத்தனை அது தாழ்த்துது! அந்தப் பெரியவர் இழந்ததற்கெல்லாம் வருத்தப் படுகிறாரா?"
"யாரால் சொல்ல முடியும். அமைதியாக வாழ்கிறார், நல்லாவும் வேலை செய்கிறார்"
" நான் அவர்கிட்ட பேசிப் பார்க்கட்டுமா?" விருந்தினன் கேட்டான், "அவரது வாழ்க்கையைப் பற்றி அவரிடம் கேட்க வேண்டும்."
"தாராளமா" முதலாளி சொன்னான், பிறகு இல்யாசைக் கூப்பிட்டான் "தாத்தா வாங்க! எங்களோடு சேர்ந்து கொஞ்சம் சர்பத் சாப்பிடுங்க, உங்க மனைவியையும் இங்கே கூப்பிடுங்க!"
இல்யாஸ் மனைவியுடன் அங்கே வந்தான்; விருந்தினர்களுக்கும் முதலாளிக்கும் வணக்கம் செய்தான், பிறகு கதவருகே அமர்ந்தான், அவனது மனைவி அவனிற்கும் பின்னே சென்று திரைக்குப் பின்னிருந்த முதலாளியம்மாவின் அருகில் அமர்ந்தாள்.
இல்யாசுக்கு அருந்துவதற்குக் கொடுத்தார்கள்; அவன் பதிலுக்கு அனைவரையும் வாழ்த்திவிட்டு, சிறிது அருந்திவிட்டு, கோப்பையை கீழே வைத்தான்.
" நல்லது அய்யா," இல்யாசிடம் பேச விரும்பிய விருந்தினன் அவனிடத்தில் சொன்னான், "உங்களை இந்த மாதிரி நிலைமையில பார்க்கிறதுக்கு வருத்தமாக இருக்கு. இப்போதைய வறுமையில உங்க பழைய செல்வத்த நினைச்சுப் பர்க்கும் போது வறுத்தமா இல்லையா?"
இல்யாஸ் புன்னகைத்தவாறு சொன்னான்: " நான் உங்க கிட்டே மகிழ்ச்சி எது துன்பம் எதுன்னு சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க. என்னை விட என் மனைவி கிட்டேயே கேளுங்க. அவள் பெண், அவளது மனதில் என்ன படுகிறதோ அது தான் வார்த்தையில வரும். அவளே அத்தனை உண்மைகளையும் சொல்லுவாள்."
விருந்தினர்கள் திரையை நோக்கித் திரும்பினர்.
"சொல்லுங்கம்மா," அவன் ஆர்வமாகக் கேட்டான், " எப்படி நீங்க உங்க பழைய மகிழ்ச்சியையும் இப்போதைய துன்பத்தையும் ஏற்றுக் கொள்கிறீர்கள்?"
திரைக்குப் பின்னிருந்து ஷாம்-ஷெமாகி பதிலளித்தாள்:
" நான் என்ன இதைப்பற்றி நினைக்கிறேன்னு சொன்னால்; நானும் என்னுடைய கணவரும் ஐம்பது ஆண்டுகாலமா மகிழ்ச்சியைத் தேடிகிட்டு இருந்தோம் ஆனால் கண்டு பிடிக்கமுடியவில்லை, அது இப்போத்தான் இந்த இரண்டு ஆண்டுகளாத்தான் பார்க்கிறோம், எங்களுக்குன்னு எதுவும் இல்லாத போது, வறுமையில கூலியா வேலை செய்யுற போது, மகிழ்ச்சியைக் கண்டோம். அப்புறம் நாங்க இப்போ இருக்கிற நிலைமையை விட வேறு ஒன்னை விரும்பலை."
விருந்தினர்களும் முதலாளியும் ஆச்சரியப்பட்டார்கள்; கிழவியின் முகத்தைப் பார்க்கவேண்டி முதலாளி எழுந்து திரையைக் கூட விலக்கிப் பார்த்தான். அங்கே அவள் அமைதியாக இருந்தாள், கைகளைக் கட்டிக்கொண்டு புன்னகை புரிந்தவாறே தன் கணவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனும் அவளைப் பார்த்து புன்னகைத்தான். கிழவி தொடர்ந்தாள்:
"நான் சொல்வதெல்லாம் உண்மை சமாளிப்பதற்காகச் சொல்லவில்லை. அரை நூற்றாண்டுகளாக நாங்கள் மகிழ்ச்சியைத் தேடினோம், நாங்கள் செல்வந்தர்களாக இருந்த போது அதைக் காண முடியவில்லை. எங்களுக்குன்னு இப்போ ஒன்னுமில்லை. கூலிவேலை தான் செய்யுறோம். இப்போதான் நாங்க மகிழ்சியா இருக்கிறதா உணர்கிறோம். இதை விட பெரிசா வேற என்ன வேணும்?"
"ஆனால் எதை வச்சு நீங்க அப்படிச் சொல்றீங்க?" விருந்தினன் கேட்டான்.
"ஏன்னா, " அவள் தொடர்ந்து பேசினாள், " நாங்க செல்வந்தர்களா இருந்த போது எங்களுக்குன்னு நிறையப் பொறுப்புக்கள் இருந்துச்சு, நாங்க ஒருத்தருக்கொருத்தர் பேசுறதுக்குக்கூட நேரமில்லாமல் இருந்துச்சு, கடவுளைத் தொழக்கூட நேரமில்லை.
"அப்போ நிறைய விருந்தினர்கள் வருவார்கள், என்ன மாதிரி உணவை அவர்களுக்குச் சமைத்துப் போடுவதுன்னு கவலையா இருக்கும், என்ன பரிசு அவங்களுக்குக் கொடுக்கிறதுன்னு சிந்திப்போம், நம்மைத் தரக்குறைவா அவங்க பேசவோ நினைக்கவோ கூடாதுங்கிறதுக்காக நிறையக் கவலைப் படுவோம்.
"அவர்கள் சென்ற பின், எங்களது வேலைக்காரர்களை நாங்கள் பார்க்க வேண்டும், அவர்கள் எப்போதுமே வேலை செய்ய சங்கடப்படுவாங்க ஆனால் தங்களுக்குன்னு நல்லா இருக்கிற உணவை எடுத்துக்குவாங்க, நாங்க அதையும் கவனிச்சு அவங்க கிட்டே வேலை வாங்கணும்.அதனால நாங்க பாவம் செஞ்சவங்களானோம். அப்புறம் நாங்க எப்போதுமே அச்சத்தின் பிடியிலேயே இருப்போம், எதாவது கன்றுக்குட்டியை ஓநாய் பிடிச்சிடுமோ, குதிரைகளைத் திருடர்கள் ஓட்டீட்டுப் போயிருவாங்களோன்னு பயந்துகிட்டே இருப்போம். நாங்க இரவு முழுக்கத் தூங்காமல் கவலையோடே கிடப்போம். ஏதாவது தாய் ஆடு தன்னோட குட்டியின் மேல விழுந்திருச்சோன்னு அடிக்கடி போய் பார்த்துட்டு வருவோம். ஒரு பிரச்சினை முடிஞ்சிதுன்னா இன்னொன்னு முளைச்சிக்கும். எப்படீன்னா பனிக்காலத்துக்கு தீவனம் சேகரிச்சு வச்சுக்கணும், இதைப்போல. அதைவிட நானும் என் வீட்டுக்காரரும் அடிக்கடி சண்டைப்போட்டுக்குவோம். அவர் தான் சொன்னதைத் தான் செய்யனும்பாரு, நான் ஒத்துக்க மாட்டேன், அப்புறம் சண்டைதான்--பாவம் செஞ்சுகிட்ட மாதிரித்தானே. ஒரு பிரச்சினையிலிருந்து இன்னொன்னு, ஒரு பாவத்திலிருந்து இன்னொன்னு, அப்புறம் எங்கே இருக்கு மகிழ்ச்சி?"
"சரி இப்ப எப்படி?"
"இப்போ நாங்க நிம்மதியாத் தூங்குறோம், விடிஞ்ச பிற்பாடுதான் எழுந்திருக்கிறோம், இரண்டு பேருமே அன்பாப் பேசிக்கிறோம், எங்களுக்குள்ளே சண்டை போட்டுக்க ஒன்னுமே இப்ப இல்லை.
எங்க முதலாளிக்கு நல்லா வேலை செய்யனும்கிறதைத் தவிர நாங்க கவலைப்பட ஒன்னுமே இல்லை. எங்க வலிமை உள்ள மட்டும் உண்மையா உழைக்கிறோம், அதனால எங்க முதலாளி எங்களால நன்மை தான் அடைகிறார், நஷ்டம் அடைகிறதில்லை.
"நாங்க வேலை முடிச்சிட்டு வந்தா சாப்பிடறதுக்கும் அருந்துகிறதுக்கும் ஏதாவது தயாரா இருக்கும். குளிர் அதிகமானா கணப்புக்கு விறகும் போர்த்திக்க கம்பளியும் இருக்கு. அப்புறம் நாங்க எங்களுக்குள் பேசிக்கொள்ள நிறைய நேரம் இருக்கு, கடவுளைத் தொழ நிறைய நேரம் இருக்கு. ஐம்பது ஆண்டுகளாத் தேடிய மகிழ்ச்சி இப்போதான் கிடைச்சிருக்கு."
விருந்தினர்கள் சிரித்தார்கள்.
ஆனால் இல்யாஸ் சொன்னான் :
"சிரிக்காதீர்கள் நன்பர்களே. இதை நாங்க சமாளிக்கிறதுக்காகச் சொல்லலை- இது தான் வாழ்க்கையில் ஒளிந்துள்ள உண்மை. ஆரம்பத்துல நாங்ககூட முட்டாள் தனமாத் தான் இருந்தோம், செல்வம் தொலைஞ்சதை நினைச்சு அழுதோம்; ஆனால் கடவுள் எங்க கண்ணைத் திறக்க வைச்சு உண்மையைக் காட்டினார், அதனால தான் சொல்றோம் இந்த வார்த்தைகளெல்லாம் சத்தியமானவை ஆறுதலுக்காகச் சொல்லலை, உங்க நன்மைக்காகவும் தான் சொல்றோம்."
முல்லா சொன்னார்:
"இது தான் அறிவுபூர்வமான பேச்சு. இல்யாஸ் சரியான உண்மையைத்தான் சொன்னார். இதையே தான் புனித நூலும் சொல்கிறது."
பிறகு விருந்தினர் அனைவரும் சிரிப்பதை நிறுத்தி விட்டுச் சிந்திக்க ஆரம்பித்தனர்.
மூலம் : லியோ டால்ஸ்டாய்
தமிழில் : மா. புகழேந்தி
No comments:
Post a Comment