BABUR ,THE FOUNDER OF MOGHUL DYNASTY
BORN 1483 FEBRUARY 14
பாபர் (Babur) எனப்படும் சாகிருதீன் பாபர், அல்லது சாகிருதீன் முகம்மத் பாபர் (பெப்ரவரி 14, 1483 – டிசம்பர் 26, 1530) மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஒரு முஸ்லிம் பேரரசர். இந்தியாவில் முகலாய வம்சத்தை உருவாக்கியவர் இவரே. இவர் 14ஆம் நூற்றாண்டில் மத்திய ஆசியாவில் இருந்த தைமூரியப் பேரரசை உருவாக்கிய தைமூர் பின் தராகே பர்லாஸ் (Tīmūr bin Taraghay Barlas) என்பவருடைய நேரடியான பரம்பரையில் வந்தவராவார். 13ஆம் நூற்றாண்டில், உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய தொடர்ச்சியான பேரரசான மங்கோலியப் பேரரசை உருவாக்கிய கெங்கிஸ் கான் (Genghis Khan), பாபரின் தாய்வழி முன்னோராகக் கருதப்படுகின்றார். பல பின்னடைவுகளை எதிர்கொண்ட போதும், இந்திய வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகின்ற முகலாயப் பேரரசை உருவாக்குவதில் இவர் வெற்றி பெற்றார்.
பின்னணி[மூலத்தைத் தொகு]
தற்கால உஸ்பெகிஸ்தானில் உள்ள, பெர்கானாப் பள்ளத்தாக்கில் (Fergana Valley) உள்ள அண்டிஜான் (Andijan) என்னும் நகரத்தில் 1483 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பாபர் பிறந்தார். பெர்கானாப் பள்ளத்தாக்கை ஆண்டுவந்த ஓமர் ஷேக் மீர்சா (தைமூர் இனம்) என்பவருக்கும், அவரது மனைவியான குத்லுக் நிகர் கானும் (மங்கோலிய செங்கிசுக்கான் வழி) என்பவருக்கும் பாபர் மூத்த மகனாவார். இவர் மங்கோலிய மூலத்தைக் கொண்ட பார்லாஸ் என்னும் இனக்குழுவைச் சேந்தவர். எனினும், இந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள், துருக்கிய மற்றும் பாரசீகப் பண்பாட்டைத் தழுவிக்கொண்டு, இசுலாம் மார்க்கத்தைச் சார்ந்து, துருக்கிஸ்தான் என்னும் பகுதியில் வாழ்ந்து வந்தனர். பாபரின் தாய் மொழி சகாட்டை (Chaghatai) என்பதாகும், ஆனாலும் அவர் பாரசீக மொழியையும் சரளமாகப் பயன்படுத்த வல்லவராக இருந்தார். இவர் தன்னை துருக்கியர் என்றே சொல்லிக் கொண்டார்.
கன்னிப்போரும் அதன் பிண்ணனியும்[மூலத்தைத் தொகு]
இவர் முதலில் பெர்கானா என்னும் சமவெளியில் உள்ள நாட்டையே ஆண்டு வந்தார். இவரது முன்னோர்கள் ஆண்டு வந்த சமர்கந்து பகுதியை மீண்டும் பிடிக்க வேண்டும் என எண்ணினார். ஆனால் தன்னுடைய பெர்கானாப் பள்ளத்தாக்கையும் இழந்ததால் இந்துகுஷ் மலையை தாண்டி வந்து காபூலைப் பிடித்து ஒரு சிற்றச ஆட்சியை நிறுவினார். பிற்பாடு கஜினியும், காந்தகாரும் இவருக்கு கீழே வந்தன. இவரது முன்னோர் காலத்தில் தைமூர்களின் கீழ் பஞ்சாப் பகுதி இருந்தது. அதனால் அதை திருப்பிக் கொடுக்கும் படி தில்லி சுல்தானான இப்ராகிம் லோடியை பாபர் வேண்டினார். அதற்கு தில்லி சுல்தான் மறுத்தார். சுல்தானின் உறவினரான அல்லாவுதீன், தில்லி சுல்தானை எதிர்க்க பாபர் உதவினால் அவரை அந்நாட்டுக்கே அரசர் ஆக்க உதவுகிறேன் என்றார்.
பஞ்சாப் ஆளுநர் தௌலத்கானும் தில்லி சுல்தானை எதிர்க்க பாபரின் உதவியை நாடினார். அதனால் இருவரையும் சேர்த்துக் கொண்டு 1526ல் பானிப்பட்டில் ஒரு இலட்சம் வீரர்களைக் கொண்ட தில்லி சுல்தானின் சேனையை வென்றார். இந்த வெற்றிக்கு இரண்டு முக்கியக் காரணங்களாக பாபரின் பீரங்கிப்படையின் பலமும், தில்லி சுல்தானின் அரசியல் அனுபவமின்மையும் போர் பயிற்சியின்மையுமே ஆகும்.
பிற வெற்றிகள்[மூலத்தைத் தொகு]
பானிப்பட் போரில் பாபர் வென்றாலும் மற்ற இந்தியப் பகுதிகளான பீகாரும் வங்கமும் ஆப்கானியர் கீழ் இருந்தன. குஜராத்தும், மாளவமும் சுதந்திர அரசுகளாக இராசபுத்திரர்களின் கீழ் இருந்தன. இராசபுத்திரர்களும் முகலாய அரசரான பாபரை எதிர்க்க தருணம் பார்த்திருந்தனர். இராசபுத்திரர்களின் தலைவரான இராணா என்ற சங்கருக்கும் பாபருக்கும் காண்வா என்னும் இடத்தில் 1527ல் பெரும்போர் நடந்தது. அதில் இராசபுத்திரர் தோற்றோடினர். மாளவத்தில் உள்ள சந்தெரி என்ற வழுவான கோட்டை 1528ல் பாபரின் கீழ் வந்தது.
பழைய பகை[மூலத்தைத் தொகு]
தில்லு சுல்தானான இப்ராகிம் லோடியின் இளைய சகோதரர் முகமது லோடி ஆப்கானியரோடு சேர்ந்து கொண்டு பீகார் பகுதிகளில் கலகம் செய்தார். இவர்களை கோக்காரா என்னும் நதிக்கரையில் 1529ல் பாபர் தோற்கடித்தார். பின்னர் வங்காள அரசருடன் நட்புறவு கொண்டதால் பீகார் பகுதி பாபருக்கு வங்காள அரசரால் தரப்பட்டது.
ஆட்சிக்காலங்கள்[மூலத்தைத் தொகு]
இவர் ஐந்து ஆண்டுகள் மட்டுமே இந்தியாவில் ஆட்சி செய்ததால் மக்கள் நலத்திட்டங்களை பெரியளவில் செய்யவில்லை. இவர் கல்வியிலும் இசையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தன்னுடைய வரலாற்றை துருக்கி மொழியிலேயே எழுதி நூலாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் ஆட்சிக் காலத்திலேயே நீதித்துறை செயல்பட்டு குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் ஆரம்பித்தன. இவர் கோக்காரா போருக்குப் பின் எந்த போரிலும் ஈடுபடவில்லை.
மறைவு[மூலத்தைத் தொகு]
இவர் தன் இறுதிக்காலங்களில் நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார். இதை பயன்படுத்திக் கொண்ட பாபரின் தங்கையின் கணவரான மாது காஜ்வா தன்னை அரசராக்கி கொள்ளலாம் என நினைத்திருந்தார். ஆனால் பாபரின் மகனான ஹூமாயூனால் இது தடைப்பட்டது. இவரின் ஆட்சிக்குப்பின் இவரது மகனான ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தார். இவருடைய ஆட்சியில் இந்தியாவை இழந்து மீண்டும் போரிட்டுப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாபர் மசூதி[மூலத்தைத் தொகு]
பாபர் தான் கட்டிய பாபர் மசூதியின் மூலம் அதிகம் அறியப்படுகிறார். இம்மசூதியை இராமர் கோயிலை இடித்து அதற்கு மேல் கட்டியதாக கூறப்படுகிறது. இம்மசூதியில் உள்ள மூன்று கல்வெட்டுகள் பாபரின் தளபதியான மிர் பாகியால் கட்டப்பட்டதாக கூறுகின்றன. இப்பகுதியில் அகழாய்வு மேற்கொண்ட இந்திய தொல்லியல் அறிக்கைக் குழு இங்கு கோயில் ஏதும் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் இல்லை என்றும் ஆனால் சைவ சமயத்தை சேர்ந்த கட்டிட எச்சங்கள் காணப்படுகிறன என்றும் தன் ஆய்வறிக்கையில் தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment