CHANDRASHEKHAR AZAD ,FREEDOM FIGHTER
DIED 1931 FEBRUARY 27
சந்திரசேகர ஆசாத் (Chandra Shekhar Azad, உருது: چندر شیکھر آزاد; இந்தி: चंद्र शेखर आज़ाद; 23 சூலை 1906 – 27 பெப்ரவரி 1931) என அழைக்கப்படும் சந்திரசேகர சீதாராம் திவாரி இந்திய விடுதலை போராட்ட வீரர்களில் ஒருவர். இந்துசுத்தான் குடியரசு அமைப்பு மீளுருவாக்கம், ககோரி ரயில் கொள்ளை, பகத் சிங் போன்றவர்களை வழிநடத்துதல், இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு உருவாக்கம், பிரித்தானிய அதிகாரி சான்டர்சு கொலை போன்றவற்றைச் செய்தவர்.
வாழ்க்கை வரலாறு[மூலத்தைத் தொகு]
சிறுவயது[மூலத்தைத் தொகு]
ஆசாத் 23 சூலை 1906ல் பண்டிட் சீதாராம் திவாரி மற்றும் ஜக்ரானி தேவி என்ற தம்பதியருக்கு உத்தரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள பதர்க்கா என்னும் ஊரில் பிறந்தார்.[1] இவரது தந்தை அலிஜார்பூரில் பணியாற்றிய போது இவர் தன் இளமைப்பருவத்தை மத்திய பிரதேச சபூவா மாவட்டத்தில் கழித்தார். அப்போது அவர் அம்மாவட்ட பில் பழங்குடிகளிடம் முறையாக வில்வித்தை கற்றார். அது அவருக்கு போராட்டக் காலத்தில் உதவியது.
இவரது தாயான தேவி இவரை காசியிலுள்ள வித்யா பீடத்தில் சமசுகிருதம் கற்க அனுப்புமாறு அவருடைய தந்தையிடம் கூறி ஏற்கச் செயதார். இவரது 15ஆவது வயதில் இவர் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்ததற்காகக் கைது செய்யப்பட்டு குற்றவியல் நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டார். நடுவர் அவரிடம் அவரது பெயர், தந்தைப்பெயர் மற்றும் அவரது முகவரியை அடுத்தடுத்து கேட்க அதற்கு அவர் முறையே விடுதலை (இந்தி - ஆசாத்), சுதந்திரம் மற்றும் சிறை என்று பதிலளித்தார். உடனே நடுவர் அவருக்கு மிகுந்த தண்டனையுடன் கூடிய சிறை செல்லுமாறு உத்தரவிடவே நான் அப்படிக்கூறினால் தான் நீங்கள் என்னைச் சிறைக்கு அனுப்புவீர்கள் என்றுதான் கூறினேன் என்று கூற அந்நடுவரகத்தில் உள்ளவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர். அதற்கு நடுவர் மிகவும் கோபமடைந்து அவருக்கு 15 பிரம்படி கொடுக்கக் கட்டளையிட ஒவ்வொரு அடிக்கும் அவர் பாரத் மாதா கி ஜெ எனக்கூறினார். அதுவரை சந்திரசேகர சீதாராம் திவாரி என்ற பெயருடன் அறியப்பட்டவர் அதற்குப் பிறகு சந்திரசேகர ஆசாத் என்று அழைக்கப்பட்டார்.
இளமைப்பருவம்[மூலத்தைத் தொகு]
காந்தி, 1922ல் ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்ட பின்னரும் ஆசாத் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். முழுச் சுதந்திரத்தை எந்த வழியினும் அடைய வேண்டும் என்பதற்காக தன்னைத்தானே அர்பணித்துக் கொண்டார். இவரது இளம்வயதில் இவரை பிரன்வேசு சாட்டர்ச்சி என்பவர் இந்துசுத்தான் குடியரசு அமைப்பை ஆரம்பித்த ராம் பிரசாத் பிசுமில் என்றவரிடம் அறிமுகப்படுத்தினார். விளக்குத்தீயில் தன் கையை எரித்துத் தனது தேசபக்தியை வெளிப்படுத்திய பின் பிசுமில் அவரைத் தன் அமைப்பில் சேர்த்துக் கொண்டார். சாதி, மத பணப் பேதமில்லாத அனைவருக்கும் சுதந்திரம் என்ற இந்துசுத்தான் குடியரசு அமைப்பின் கொள்கை ஆசாத்தை மிகவும் ஈர்த்தது. அதன்பின் அந்த அமைப்பை வளர்ப்பதற்காக பிரித்தானிய அரசாங்க பொருட்களை அவர் கூட்டாளிகளுடம் சேர்ந்து பிசுமிலின் சொந்த ஊரான சாசகான்பூர் வட்டாரத்திலேயேக் கொள்ளை அடிக்க ஆரம்பித்தார். அதில் 1925ல் நடந்த ககோரி ரயில் கொள்ளையும் ஒன்று. மேலும் சோசியலிச வழியிலேயே நாளைய இந்தியாவும் இந்திய சுதந்திரமும் இருக்க வேண்டுமென எண்ணினார்.
ஜான்சி[மூலத்தைத் தொகு]
ஆசாத் ஜான்சியையே தன் அமைப்பின் தலைமைச் செயலகமாக சிறிது காலம் வைத்திருந்தார். ஜான்சியை அடுத்து 15 கிலோமீட்டர் தூரமுள்ள ஆர்ச்சா காடுகளையே தன் அமைப்பின் சண்டைப் பயிற்சிக் கூடமாகப் பயன்படுத்தினார். மேலும் அவரே தன் அமைப்பினருக்குப் போர்பயிற்சிகளைக் கற்றும் கொடுத்தார். ஆர்ச்சா காடுகளுக்குப் பக்கம் சதார் ஆற்றங்கரையிலுள்ள அனுமன் கோயிலில் கூடாரம் அமைத்து அதையே வசிப்பிடமாகப் பயன்படுத்தினார். அப்போது தர்மபுரம் கிராமத்தின் குழந்தைகளுக்குப் போர்ப்பயிற்சி அளிப்பதன் மூலம் அம்மக்களின் நன்மதிப்பை பெற்றார். அக்கிராமத்தின் பெயரான தர்மபுரம் பின் மத்திய பிரதேச அரசாங்கத்தால் ஆசாத்புரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
அவர் ஜான்சியில் வசித்தபோது சதார் சந்தையிலுள்ள பண்டல்கண்ட் மோட்டார் கேரேஜில் வாகனம் ஓட்டும் பயிற்சி பெற்றார். சதாசிவ மல்கபுர்கார், விசுவநாத வைசம்பாயன், பகவன் தாசு மகவுர், ஜான்சி பண்டிட் ரகுநாத் விநாயக் துளேகர், பண்டிட் சீதாராம் பாசுகர் பகவத் போன்றோர் இவரின் அமைப்பில் இணைந்தனர். மேலும் நய் பசுத்தியிலுள்ள ருத்ர நாராயண சிங் மற்றும் நாக்ராவிலுள்ள சீதாராம் பாசுகர் பகவத் வீடுகளிலும் சிறிது காலம் தங்கியிருந்தார்.
பகத்சிங்கும் ஆசாத்தும்[மூலத்தைத் தொகு]
இந்துசுத்தான் குடியரசு அமைப்பு 1924ல் ராம் பிரசாத் பிசுமில், யோகேசு சந்தர் சேட்டர்ஜி, சசிந்திரநாத் சன்யால், சசிந்திரநாத் பக்ச்சி போன்றவர்களால் ஒத்துழையாமை இயக்கத்தை அடுத்த 2 ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டது. 1925ல் இவ்வமைப்பால் நடத்தப்பட்ட ககோரி ரயில் கொள்ளையை அடுத்து பிரித்தானிய அரசாங்கம் புரட்சியாளர்களை அழிக்கத் தீவிரப்படுத்தப்பட்டது. பிரசாத், அசஃபகுலா கான், தகூர் ரோசன் சிங், ராசேந்திர நாத் லகரி போன்றவர்கள் இக்கொள்ளையில் சம்பந்தப்பட்டதால் அவர்கள் கொல்லப்பட்டனர். ஆசாத், சக்ரவர்த்தி, மற்றும் முராரி சர்மா போன்றவர்கள் பிடிக்கப்பட்டனர். ஆசாத் மீண்டும் இந்துசுத்தான் குடியரசு அமைப்பை மீளுருவாக்கினார். மேலும் ஆசாத்திற்கு பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பகவதி சரன் அரோரா என்றவருடன் பழக்கம் இருந்தது. அவர்கள் அனைவரும் இணைந்து இந்துசுத்தான் குடியரசு அமைப்பை இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு என்ற பெயருடன் மறு உருவாக்கம் செய்தனர். அதன்படி சோசியலிச முறையில் இந்தியா விடுதலை அடைவதை அவர்கள் கொள்கையாகக் கொண்டனர்.
மறைவு[மூலத்தைத் தொகு]
பெப்ரவரி 27, 1931 அன்று அலகாபாத் அல்ஃப்ரட் பூங்காவில் தன் இயக்கத்தவரான் சுக்தேவுடன் பேசிக்கொண்டிருந்த போது பிரித்தானிய காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். சுக்தேவைத் தப்பிக்க விட்டுவிட்டு நீண்ட நேரம் காவல்துறையினரிடம் போராடினார். காலில் குண்டடிபட்டதால் ஆசாத்தால் அங்கிருந்து தப்பிக்க இயலாமல் போனது. தன் துப்பாக்கியில் ஒரு தோட்டா மட்டும் மட்டுமிருக்க காவல்துறையினரிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். ஆனால் பிரித்தானிய காவல்துறையினர் அவரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவே கூறினர். அவர் பயன்படுத்திய துப்பாக்கி அலகாபாத் அருங்காட்சியகத்திலும் அதன் ஆவணங்கள் லக்னோ சி.ஐ.டி. தலைமையகத்திலும் உள்ளது.
பிரபலம்[மூலத்தைத் தொகு]
ஆசாத் கொல்லப்பட்ட இடமான அல்ஃப்ரெட் பூங்கா அதன் பிறகு சந்திரசேகர ஆசாத் பூங்கா என்றே அழைக்கப்பட்டது. மேலும் அவரது பெயரில் பள்ளிகள், கல்லூரிகள், வீதிகள் மற்றும் பொதுக்கழகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment