Monday 12 February 2018

மோசக்காரப் பையன் -










Злой мальчик : மோசக்காரப் பையன்


மூலம் ; அன்டன் செக்ஹோவ்
தமிழில் : மா. புகழேந்தி.

வான் லாப்கின், அழகிய தோற்றம் கொண்ட இளைஞன், அனா சாம்ப்ளிட்ச்காயா, நுனி மூக்கு வளைந்த பெண், செங்குத்தான மலைப்பாதையில் ஆற்றங்கரையில் இறங்கி அடிவாரத்தில் இருந்த பலகையில் அமர்ந்தார்கள். பலகை ஆற்றங்கரையின் மிக அருகில் வில்லோ மரக்கூட்டங்களின் நடுவில் அமைந்திருந்தது. மிக அழகிய இடமாக இருந்தது. எந்தவித வெளியுலகத் தொடர்பும் இன்றி அங்கே அமர்ந்திருக்கலாம், நீருக்குள் நீந்தும் மீன்களும் நீர்ப்பரப்பில் ஓடும் நீண்ட கால் கொண்ட நீர்ப்பூச்சிகளையும் தவிர யாரும் கவனிக்க மாட்டார்கள். அந்த இளம் நண்பர்கள் மீன்பிடிக்கத் தேவையான தூண்டில், வலைகள், புழுக்கள் மற்றும் இன்ன பிற மீன்பிடி சாதனங்களுடன் இருந்தனர். அந்தப் பலகையில் அமர்ந்ததும் மீன்பிடிக்கத் தூண்டிலிட்டனர்.

"ஒரு வழியா நாம தனிமையில் இருக்கிறது எனக்குச் சந்தோசம்," லாப்கின் தன் பின்னால் பார்த்துக் கொண்டு பேசினான். "நான் உனக்கு ஒன்றைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன், அனா. உன்னைப் பார்த்த முதல் பார்வையிலேயே நான் விழுந்துவிட்டேன். நான் பிறந்ததுக்கான அர்த்தம் விளங்கி விட்டது. நீ தான் என் காதல் தெய்வம் என்னுடைய முழு வாழ்க்கையையும் உன் காலடியில் சமர்ப்பிக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உன்னைப் பார்த்த நொடியே காதலில் விழுந்து விட்டேன், என் வாழ்வில் முதல் முறையாகக் காதல் கொண்டேன். நான் பைத்தியக்காரத்தனமாக உன்னைக் காதலிக்கிறேன். --- உடனே இழுக்காதே, கொஞ்சம் கடிக்க விடு-- சொல்லு என் அன்பே, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன், என்னுடைய காதலை நீ திரும்பச் செலுத்த வேண்டும் என்பதில்லை- நான் அதற்குத் தகுதியானவனா என்று எனக்குத் தெரியாது.--ஆனால் நான் அப்படி ஒன்றை விரும்புகிறேன். "
அனா சிறிய கூச்சலுடன் தூண்டிலை வைத்திருந்த கையை காற்றில் சுண்டி இழுத்தாள். ஒரு சிறிய வெள்ளி நிற மீன் சூரிய ஒளியில் மின்னியவாறு நீரின் மேல்தளத்தில் தூண்டிலில் இருந்து தொங்கிக்கொண்டிருந்தது.

"ஆகா அற்புதம், இது பெர்ச் வகை மீன்! ஓ ஓ சீக்கிரம் , அது வந்திட்டு இருக்கு!"


மீன் தூண்டிலில் இருந்து தப்பி புற்களை எல்லாம் தாண்டி அதன் வசிப்பிடமான நீரில் விழுந்தது.

எப்படியோ, அதைப் பிடித்து இழுக்கும் போது மீனைப் பிடிப்பதற்குப் பதிலாக அனாவின் கையைப் பற்றினான், எதேச்சையாக அவளது இதழ்களில் தன் உதடுகளைப் பதித்தான். அனா விடுவித்துக் கொண்டாள், இருந்தாலும் காலம் கடந்துவிட்டது, அவர்களது உதடுகள் முத்தமிட்டுக் கொண்டன. அதெல்லாம் ஒரு விபத்தினப் போல நடந்து முடிந்து விட்டது. இரண்டாவது முத்தமும் தொடர்ந்தது.

அதற்குப் பிறகு தப்பு நடக்கக் கூடாது என்ற உறுதிமொழிகள் இருவரும் கூறிக்கொண்டனர். மகிழ்ச்சியான தருணங்கள்! ஆனால் பாருங்கள் இதைப்போன்ற மகிழ்சிகள் இந்தப் பூமியில் நிலைப்பதில்லை! அதில் எதோ ஒரு நஞ்சு சேர்ந்து விடுகிறது, தானாகவோ அல்லது வேறு ஏதாவது வெளிச் சக்தியாலோ. இந்த இடத்திலும் அப்படித்தான். அந்த இளம் காதலர்கள் முத்தமிட்டுக் கொண்டபோது திடீரென யாரோ சத்தமிட்டுச் சிரிப்பது கேட்டது. மகிழ்ச்சியைக் கைவிட்டவாறு ஆற்றினைப் பார்த்தனர்; அவர்கள் முன்னே இடுப்பளவுத் தண்ணீரில் ஒரு சிறுவன் துணியில்லாமல் நின்றுகொண்டு இருந்தான்: அவன் தான் கோலியா, அனாவின் தம்பி! இருவரையும் வைத்த கண் வைத்தவாறு பார்த்துக் கொண்டு குறும்பாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

"ஆகா, நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் முத்தம் கொடுத்திட்டு இருக்கீங்களா? சரி சரி அம்மா கிட்டச் சொல்றேன்!"

"நீ நல்ல பையனல்லவா-" லாப்கின் வெட்கப் பட்டுக் கொண்டே அவனை சமாளிக்கப் பார்த்தான். "எங்களைப் பின்தொடர்வது, என்ன பேசுறோம்கிறதை ஒளிஞ்சிருந்து கேட்கிறது எல்லாம் நல்ல பசங்க செய்ய மாட்டாங்க. நீ ரொம்ப நல்ல பையன்..."


"எனக்கு ஒரு ரூபிள் கொடுங்க அப்புறம் இதை பத்தி ஒன்னும் பேச மாட்டேன்!", நல்ல பையன் சொன்னான். "கொடுக்கலைன்னா நான் சொல்லிவிடுவேன்"

லாப்கின் தன்னுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு ரூபிளை எடுத்து கோலியாவிடம் கொடுத்தான். சிறுவன் வெடுக்கென்று தன்னுடைய ஈரக்கையால் பிடுங்கினான் , சீட்டியடித்தபடி நீந்திச் சென்றான். அதற்குப் பிறகு இருவரும் அங்கு முத்தமிட்டுக் கொள்ளவில்லை.

அடுத்த நாள் லாப்கின் கோயிலாவிற்கு நகரத்திலிருந்து வண்ணம் தீட்ட பெட்டியும் ஒரு பந்தையும் வாங்கி வந்தான்; அவனது அக்கா தனது பழைய சிறு பெட்டிகளை எல்லாம் எடுத்துக் கொடுத்திருந்தாள். கோயிலாவிற்கு நிறையப் பரிசுப்பொருட்கள் கிடைத்தது. சிறுவன் விளையாடுவதை எல்லாம் விட்டு விட்டு காதலர்களை வேவு பார்ப்பதிலேயே கவனமாக இருந்தான், இன்னும் நிறையப் பரிசுப்பொருள் கிடைக்குமென்று எண்ணினான். எங்கு அனாவும் லாப்கினும் செல்கிறார்களோ அங்கெல்லாம் பின் தொடர்ந்தான். அவர்களை அவன் ஒரு நொடி கூடப் பிரிந்திருக்கவில்லை.

"குட்டிச் சாத்தான்!" பற்களை நெரித்துக் கொண்டே லாப்கின் பொருமினான். "இத்துனூண்டு இருக்கிற போதே இப்படியெல்லாம் செய்யிறானே, என்னை மாதிரி வளர்ந்தா என்னவெல்லாம் செய்வானோ?"

ஜூன் மாதம் முழுக்க கோயிலா இன்பமில்லாக் காதலர்களுக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருந்தான். காட்டிக் கொடுத்து விடுவதாக அவர்களை மிரட்டினான், வேவு பார்த்தான், பரிசுகள் வேண்டுமென்று கேட்டான், போதுமானது கிடைக்கவில்லை என்ற போது கடிகாரம் வேண்டுமென்று கோரிக்கை வைத்தான். கடிகாரமும் அவனுக்குக் கொடுக்கப் பட்டது.

ஒரு நாள் எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது , கண்ணடித்தபடி அவன் சிரித்தான், லாப்கினைப் பார்த்துக் கேட்டான்: "அவங்க கிட்ட அதைச் சொல்லட்டுமா?"

லாப்கின் வெட்கப்பட்டுப் போனான் உணவைத் திணிப்பதற்குப் பதிலாக சிறுவனின் வாயில் துணியைத் திணித்தான். அனா துள்ளிக் குதித்து வேறு ஓர் அறைக்கு ஓடினாள்.

ஆகஸ்ட் மாத இறுதி வரை இளம் காதலர்கள் அந்தத் தவிப்பிலேயே இருந்தார்கள், இறுதியாக லாப்கினுக்கு அணாவை மனம் முடிக்க பேச்சு வார்த்தை தொடங்கியது. என்ன மகிழ்ச்சியான நாள்!

தனது கனவுக்கன்னியின் பெற்றோர்களிடம் பேசி சம்மதம் வாங்கிய உடனேயே லாப்கின் கோலியாவைத் தேடி தோட்டத்துக்குள் ஓடினான். தேடிக்களைத்து வேர்த்து நனைந்துவிட்ட கடைசியில், இடைஞ்சல் தரும் கோலியாவைக் கண்டுபிடித்து விட்டான். காதைப் பற்றித் திருகினான். அனாவும் அவனைத் தேடிவந்தாள், இன்னொரு காதை அவளும் பற்றிக்கொண்டாள். காதலர்கள் முகத்தில் மகிழ்ச்சி களைகட்டி இருந்தது, கோலியா அழுது கொண்டே கருணை காட்டுமாறு கெஞ்சினான் அப்போது பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

"அன்பானவர்களே, நல்லது, நான் இது மாதிரி இனிமேல் செய்யமாட்டேன், மன்னிச்சுக்கங்க!" கோலியா விண்ணப்பித்தான்.

கோலியாவின் காதைத் திருகியபோது தங்களுக்குக் கிடைத்த ஆனந்தத்தைப் போன்ற ஒன்று அதற்குப் பிறகு கிடைக்கவில்லை என்று காதலர்கள் தங்களுக்குள் பேசும் போதெல்லாம் ஒத்துக் கொண்டார்கள்.

No comments:

Post a Comment