THAVAKKALAI ,COMEDY ACTOR,DANCER
DIED 2017 FEBRUARY 25
தவக்களை (இறப்பு: 25 பெப்ரவரி 2017) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார். இவரது இயற்பெயர் சிட்டிபாபு ஆகும். முந்தானை முடிச்சு படத்தில் நடிக்கும்போது இயக்குநர் பாக்கியராஜால் தவக்களை என பெயர் சூட்டப்பட்டார். இவருடைய சொந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர். 3 அடி உயரம் கொண்டவர் இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்கள் நடித்திருக்கிறார். தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பது மட்டுமன்றி பல படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். தெலுங்கில் மோகன்பாபு நடித்த ஒரு படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். தமிழில் இறுதியாக வினயன் இயக்கிய 'அற்புதத் தீவு' படத்தில் நடித்திருந்தார். கலைக்குழு மூலமாக தமிழகமெங்கும் மேடை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். சொந்தமாக 'மண்ணில் இந்த காதல்' என்ற படத்தை தயாரித்துள்ளார். அப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இவர் தன் 42 வது வயதில் மாரடைப்பால் காலமானார்.
வளர்ச்சி குன்றிய ஒருவர், தன் உடல்மொழியால் தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட கால இடைவேளையில் கொடிகட்டிப் பறந்திருக்கிறார் என்றால், அது நடிகர் தவக்களை தான். ஒய்யாரமாய் வளர்ந்து நின்று, சினிமா வெளிச்சத்தில் தன் திறமைகள் அனைத்தையும் காட்டும் கலைத்துறையில், மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, 3 அடி உயரம் கூட வளராமல், கதாப்பாத்திரங்களின் உடல் மொழியை மட்டும் பேசி, தன் குறைகளையெல்லாம் நிறைகளாக்கி நம்மையெல்லாம் சிரிக்க வைத்த ஒரு நிறை மனிதர்.
உயரம் குறைவாக இருந்தாலும், இவரது வசன உச்சரிப்பும், குழந்தைத் தனமான குரலும் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. நடிப்பைத் தாண்டி, முதன் முதலாக 'பயணங்கள் முடிவதில்லை' படத்தில் 'ஏ ஆத்தா.. ஆத்தோரமா வாரியா' பாடலில் நடனத்தாலும் தன்னை நிரூபித்த தவக்களை, ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் நவாபேட்டையில் 1975, ஜூலை 29-ம் தேதி பிறந்தார்.
"தவக்களையின் இயற்பெயர் சிட்டிபாபு. தாய் சுப்புலட்சுமி, தந்தை விஜயகுமார். தந்தை ஒரு நடிகராக இருந்ததால், தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னரே, 20-க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் குரூப் டான்சில் நடனமாடியுள்ளார் . முக்கியமாக 1981-ல், ‘நேனு மா அவிடே’ என்ற தெலுங்குப் படத்தில், தன் அசாத்திய நடிப்பை வெளிக்காட்டினார். தமிழ் சினிமாவில், ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் சிட்டிபாபுவாகவே அறிமுகம் ஆனார். முதல் படமே தனக்கான அடையாளத்தைத் தந்ததால், குறைகளை நிறைகளாக மாற்றத் தொடங்கினார். தந்தை விஜயகுமார், பொய் சாட்சி படத்தின் துணை நடிகர் முகவராக இருந்ததால், தந்தையைக் காண அருணாசலம் ஸ்டுடியோவுக்குச் சென்ற சிட்டிபாபு, நடிகர் குள்ளமணி மூலம் இயக்குநரும் நடிகருமான கே.பாக்கியராஜிடம் அறிமுகம் ஆகியிருக்கிறார். அப்போது தன் மனதில் சிட்டிபாபுவை பதிவு செய்துகொண்ட கே.பாக்கியராஜ், ‘முந்தானை முடிச்சு படத்துக்குத் தேர்வு செய்து, ஏ.வி.எம்.மிற்கு அறிமுகம் செய்தார்.
கே.பாக்கியராஜின் இயக்கத்தில், 1983-ம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு படத்தில், நடிகை ஊர்வசியுடன் ரகளை செய்யும் சிறுவனாக அசத்தியிருப்பார். முந்தானை முடிச்சு படத்தைப் பார்த்த ரசிகர்கள் யாரும், நடிகை ஊர்வசியையும் அவருடன் நடித்த அந்த மூன்று பொடியன்களையும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். அந்தப் படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் தவக்களை என்பதால், பின்னாளில் அதுவே அவரின் பெயராக நிலைத்துவிட்டது. இதனைத்தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில், அமிதாப் பச்சன், மோகன்லால், பாலகிருஷ்ணா, போன்ற நடிகர்களுடன் நடித்தார். தமிழில் காக்கிச் சட்டை, ஆண் பாவம், நல்ல பாம்பு, மதுரை சூரன், ஓசை, என் இரத்தத்தின் இரத்தமே, நீங்கள் கேட்டவை, தங்கமடி தங்கம், ‘நாலு பேருக்கு நன்றி,
பொண்ணு பிடிச்சிருக்கு, நேரம் நல்ல நேரம், மணந்தால் மகாதேவன் ஆகியவை இவர் நடித்ததில் சில படங்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம், இந்தி என ஆறு மொழி படங்களில் சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் தவக்களை. தமிழில் கடைசியாக மலையாள இயக்குநர் வினயன் இயக்கிய ‘அற்புதத் தீவு’ படத்தில் நடித்திருந்தார். சன் டி.வி.யின் பைரவி உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததோடு, நூற்றுக்கணக்கான படங்களுக்கு டப்பிங்கும் பேசியுள்ளார்.
நடிகை அனுராதாவின் தந்தை கிருஷ்ணகுமாரிடம் ஏற்கெனவே நடனம் கற்றிருந்ததால், சினிமாவைத் தாண்டி 1990-ம் ஆண்டு முதல், நடனம் மற்றும் கலை ஆர்வம் உள்ளவர்களுக்காக 'சினி மின்மினி நடனக்குழு' மற்றும் 'பல்சுவை கலைப் பள்ளி' ஆகியவற்றையும் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்ட திறமையாளர்களை உருவாக்கி உள்ளார்.
சினிமா வாய்ப்புகள் இல்லாத நாட்களில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கோயில் திருவிழாக்களில்,கலைக்குழு மூலமாக மேடை நிகழ்ச்சிகள் நடத்தி தன்னை தக்கவைத்துக்கொண்டே இருந்தார். இதற்கிடையில் சொந்தமாக 'மண்ணில் இந்தக் காதல்' என்ற படத்தை தயாரித்து வந்தார். அந்தப்படம் தற்போது வரை வெளியாகவே இல்லை. தற்போது இவரது நடனப் பள்ளியில் 37 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
கலை ஆர்வத்தைத் தாண்டி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான இவர், அதிமுக-வின் நட்சத்திர பேச்சாளராகவும் தமிழகம் முழுவதும் வலம் வந்தார். குடும்பத்தில், தன் சகோதரர்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த தவக்களைக்கு, போதுமணி என்ற மனைவி இருக்கிறார். ‘வாரிசு இல்லை என்ற ஏக்கம் மட்டும் கடைசி வரை அவருக்கு இருந்தது” என்று நினைவு கூறுகிறார் அரவது சகோதரர் பாலகிருஷ்ணன்.
கேரளாவில் மலையாளப் படப்பிடிப்பு ஒன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பியவர், அதிகாலை எழவே இல்லை. 42 வயதான தவக்களைக்கு, தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்திருக்கிறது. வடபழனியில் உள்ள அவருடைய இல்லத்தில்,நடிகர் தவக்களையின் உடல் வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு ஏ.வி.எம் மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
- ரா.அருள் வளன் அரசு
No comments:
Post a Comment