SPUTNIK 1 -SPACE TRAVEL BY RUSSIA

 


SPUTNIK  1 -SPACE TRAVEL 

BY RUSSIA

விண்ணை தொட்ட லைக்கா!

விண்வெளியில் சஞ்சரித்த லைக்கா எனும் நாய் பற்றி எழுதியுள்ளேன். ரஷ்யாவைப் பற்றி  எதிர்மறை  விமர்சனம் வரும் இந்நாட்களில் இக் கட்டுரை இந்திய – ரஷ்ய உறவில் ஒரு புதுத்தென்றலை  வீசிச்செல்லும் என்பது என் எண்ணம். பக்கச் சார்பற்று இக்கட்டுரையைப் புனைந் துள்ளேன். விண்வெளி ஆதிக்கத்திற்கு ரஷ்யா செய்த சேவை உலகு மறக்க முடியாதது. கட்டுரையை மேலே படியுங்கள்.


1957ம் ஆண்டு…..


அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் விண்ணாதிக்கத்தில் போட்டிப் போட்ட காலம் அது. இரு வல்லரசுகளும் விண்ணை ஆள விஞ்ஞான வளர்ச்சியின் துணைகொண்டு பல மில்லியன் பணத்தைக் கொட்டித் தீர்த்த நாட்கள் அவை.


சோவியத் ஒன்றியம் எனும் கட்டமைப்பின் கீழ் ருஷ்ய நாடுகள் கூட்டுக் குடும்பம் நடத்திய ஐம்பதுகள்.


விண்வெளியில் முதல் மானுடனை யார் அனுப்புவது எனும் பனிப்போர் உக்கிரமடைந்திருந்தது. 83 கிலோ எடையுள்ள ஸ்புட்னிக் 1 எனும் விண் கோளை அக்டோபர் 1957ல் சோவியத் ஒன்றியம் விண்ணுக்கு அனுப்பி யிருந்தது. அது உலகை மூன்று வாரங்களுக்கு வெற்றிகரமாக வலம் வந்து மின்கலங்கள் சக்தியிழந்ததனால் ‘சும்மா’ பூமியைச் சுற்றித் திரிந்து ஜனவரி மாதம் 4ம் தேதி 1958ல் பூமியின் வான்வெளி எல்லைக்குள் நுழைந்து எரிந்து மறைந்தது.




ஸ்புட்னிக் 1ன் இந்த வெற்றி அமெரிக்காவின் விஞ்ஞான சமூகத்தில் ஒரு பீதியைக் கிளப்பிற்று. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.


நவம்பர் 3, 1957ல் சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் 2 எனும் 508 கிலோ எடை யுள்ள செயற்கை விண்கோளை அனுப்ப இருப்பதாய் அறிவித்தது. ஆனால் இதில் ஒரு விசேஷம்!


மனித சரித்திரத்தில் முதல் தடவையாக ஒரு உயிரினத்தை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமே அது!


அச்சாதனையைப் படைத்த உயிரினம் லைக்கா எனும் நாய். 6 கிலோ எடையுள்ள ஹஸ்கி இனத்தைச் சேர்ந்த லைக்காவை மாஸ்கோ தெருவில் இருந்தே கண்டெடுத்தனர். இதற்கு ஒரு காரணம் இல்லாமல் இல்லை. தெரு நாய்கள் வாழ்வில் பல இன்னல்களில் சிக்குண்டு பல நாட்கள் போதிய உணவின்றித் தப்பிப் பிழைத்துப் போராடி வாழ்வன. விண்வெளிப் பயணம் சொகுசுப் பயணம் அல்லவே. எனவே இந்த Rambo வாழ்க்கையே இந்நாய்களுக்கு எதற்கும் துணிந்த மனப்பான்மை வளர்த்து விடுகின்றன. மேலும் எந்தச் சோதனைகளையும் பயிற்சிகளையும் வெற்றிகரமாக முகம் கெடுக்கும் திறமை பெண் விலங்கினத்திற்கு இருந்ததால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட எல்லா நாய்களும் பெண் நாய்களே.




இதற்கு முன்னரும் சோவியத் ஒன்றியம்  57 நாய்களை விண்ணுக்கு அனுப் பியிருந்தது. ஆனால் அவை பூமியை விட்டு தொலைதூரம் போகாத (100 கி.மீட்டருக்கு உட்பட்ட) குறும் பயணங்களே.

பூமியிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள கர்மன்கோடு (Karman line)  எனும் மாய எல்லையே புவியின் வளிமண்டலத்தையும் விண்வெளியை யும் கூறுபோடுகின்றது. சுமார் 120 கி.மீ. உயரத்தில் ஒரு விண்கலம் விண்வெளியில் இருந்து வளிமண்டலத்தினுள் மீண்டும் நுழையும்போதே வளிமண்டல உரசலால் அபரிமித வெப்பத்தை வெளிக்கொணரும். விஞ் ஞானிகள் வளிமண்டலத்தை நான்கு அடுக்குகளாக வகைப்படுத்திப் பெயரிட்டுள்ளனர். உதாரணமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலை யம் புவியிலிருந்து 330- 410 கி.மீ. தொலைவில் மிதந்தபடி உள்ளது.



சரி, மீண்டும் இந்த விண் நாய்களைப் பற்றிப் பார்ப்போமா?



1951ல் அனுப்பப்பட்ட Dezik, Tsygan எனும் இரு நாய்களும் வெற்றிகரமாக பூமியை வலம் வந்து ஊர் திரும்பின. ஆனால் அதே ஆண்டு Dezik மீண்டும் Lisa எனும் நாயுடன் பூமியை வலம் வந்து தரையிறங்கும்போது பாராசூட் விரியாததால் விபத்தில் மாட்டி மரித்தன.


பூமியிலிருந்து, ஆகக் கூடியது, 1,659 கி.மீட்டர் தூரத்திற்கு லைக்கா பயணிக்க வேண்டுமானதால் அதற்கு மற்ற நாய்களைவிட கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டியதாயிற்று. தொடர்ந்து 15 – 20 நாட்கள் வரை சிறு பெட்டியில் வாழ்தல், ஓடாமல் ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்றல், குழாய்களில் இருந்து திரவ உணவை சிந்தாமல் உண்ணுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவை அனைத்தையும் வெற்றிகர மாகப் பயின்று தேர்ச்சியடைந்தது லைக்கா.



லைக்காவுடன் பத்து நாய்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றில் லைக்காவே எல்லா பயிற்சிகளையும் வெற்றிகரமாக முடித்து முன்னணியில் நின்றது.


1957 நவம்பர் 03 நெருங்கிக்கொண்டிருந்தது. 30 மீட்டர் உயரமுள்ள ஸ்புட் னிக் ராக்கெட் தன் கூர்முனையில் 4 மீட்டர் கலசத்தை தாங்கி விறைத்து நின்றது. இக்கலசத்திற்குள்தான் எமது கதாநாயகி லைக்கா விண்வெளியில் பறந்து சரித்திரம் படைக்கப்போகிறாள்.


தன்னுடன் 12 உபகரணங்களையும் தனது இதயத்துடிப்பு, கதிரியக்கச் செறிவு காட்டி, பூமிக்கு சமிக்கைகள் அனுப்பும் உபகரணங்கள், லைக்கா வைப் படமாக்க ஒரு தொலைக்காட்சி கேமரா போன்றவற்றை எடுத்துச் சென்றது.


மணி மதியம் 2.30. ஸ்புட்னிக் 2ன் ராக்கெட்டுகள் சீறிக்கொண்டு வானை நோக்கி உந்திப் பாய்ந்தன. எங்கும் ஒரே வெப்பம்,


90 நிமிடங்களுக்கு ஒருமுறை விண்கலம் பூமிக்கு சமிக்கைகளை அனுப்பிக் கொண்டிருந்தது.



திட்டமிட்டபடியே விண்கலம் பூமியை மூன்று முறை வலம் வந்தது. எல் லோருக்கும் மகிழ்ச்சி!  நான்காவது சுற்றில் வந்தது வினை. விண்கலத் தினுள் வெப்பநிலை 43C பாகையாக உயர்ந்தது. லைக்காவின் இதயத் துடிப்பு மூன்று மடங்காகவும் சுவாசம் நான்கு மடங்காகவும் அதிகரிக்கத் தொடங்கின.  காதைப் பிளக்கும் ராக்கெட் ஒலி வேறு.  இவ்வேளையில் கரியமில வாயுவும் லைக்கா இருந்த கலத்தினுள் கசியத் தொடங்கியது.


எங்கும் அமைதி….. துடித்த இதயம் அமைதியானது!


சோவியத் ஒன்றியம் இந்த அனர்த்தம் பற்றி உலகுக்கு அறிவிக்காமல் நான்கு வாரங்களுக்கு லைக்கா சுகமாகப் பயணிப்பதாக உலகின் காதில் பூச்சொருகினர்.


நான்கு வாரத்தின் பின் லைக்கா மரித்த செய்தி வெளியிடப்பட்டது. இதற் கான பல காரணங்கள் முன்வைக்கப்பட்டன.


45 ஆண்டுகளின் பின், 2002ல் ஸ்புட்னிக் திட்டத்தில் முன்னின்று உழைத்த விஞ்ஞானி டிமிட்ரிமலாஷென்கோவ் லைக்கா ஸ்புட்னிக் தன் நான்காவது சுழற்சியை மேற்கொள்ளும்போது, நான்கு மணி நேரத்திலேயே, வெப்பம் தாங்காமல் மரித்தது என்ற துயரச் செய்தியை வெளியிட்டார்.


முழு உலகமே சோகத்தில் ஆழ்ந்தது. பல நாடுகள் லைக்காவை கௌரவிக் கும் வண்ணம் தபால்தலைகளை வெளியிட்டன.




மனித உடல் ஒரு விண்வெளிப் பயணத்தை எப்படித் தாக்குப்பிடிக்கும் எனும் அறிவுத்தேடலில் பல உயிரினங்கள் தம் உயிரைத் தியாகம் செய் தன. இப்பயணங்களில் கற்றுக்கொண்ட பாடங்களில் இருந்தே உலகின் முதல் விண்வெளி வீரனான யூரிககாரின் 1961ல் விண்ணைத் தொட்டார்.


இன்றைய காலங்களைப் போல் விண்வெளிப் பயணங்களில் மனிதனுக்கு ஏற்படும் ராசாயன, பெளதீக, உடல் மாற்றங்களைத் துல்லியமாய் கணக் கிடும் கணினிகள் அன்று இருந்திருந்தால் இது போன்ற உயிர் பலிகளைத் தவிர்த்திருக்கலாம் என்பது உண்மை.



விண்வெளி ஆராய்ச்சிக்காய் தம் உயிரை அர்ப்பணித்த பல உயிரினங் களின் நினைவுச்சின்னமாகவே  1997ம் ஆண்டு மாஸ்கோவின் ‘ஸ்டார்சிட்டி யில்’  நம் நாயகி லைக்கவுகாய் ஒரு சிலை எழுப்பப்பட்டது!


கம்பீரமாய் எழுந்து நின்று எம் கண்களை உற்று நோக்கி லைக்கா எமக்குச் சொல்லும் செய்தி “உங்கள் மேன்மைக்காய் உயிர் துறந்தேன்.  சமாதானத் துடன் வாழுங்கள்!”


கிறிஸ்டி நல்லரெத்தினம், ஆஸ்திரேலியா

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER