INTERNATIONAL MISSING CHILDREN`S DAY
சர்வதேச காணாமல் போன குழந்தைகள் நாள் (International Missing Children's Day) எனும் இந்நாள், காணாமற்போன குழந்தைகளுக்கான சர்வதேச நாளென ஒவ்வொரு ஆண்டும் மே 25-ம் நாள் கொண்டாடப்படுகிறது. காணாமல் போகும் எதிர்காலத் தலைமுறையினரான குழந்தைகளுக்கு அரசு மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு அவசியம் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.[1]
ஐக்கிய அமெரிக்காவில்[தொகு]
1979-ம் ஆண்டு மே 25-ம் நாள் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த இட்டன் பாட்ஷ் என்ற 6 வயது குழந்தை பள்ளிக்குச் செல்லும் வழியில் காணாமல் போய்விட, ஒரு ஒளிப்படக் கலைஞராக இருந்த அவனது தந்தை, தன்னுடைய குழந்தையின் (இட்டன் பாட்ஷ்) ஒளிப்படத்தை வெளியிட்டுக் குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது தீவிர தேடுதல் வேட்டையை அங்கிருந்த ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. ஊடக நிறுவனங்களின் இந்த நடவடிக்கையால் 1979-ம் ஆண்டில் இருந்து 1981-ம் ஆண்டு வரையில் குளம், ஆறு போன்ற இடங்களில் சுவடு தெரியாமல் காணாமல் போன 29 குழந்தைகளின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இதனையொட்டி 1983-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ரானல்ட் ரேகன் மே 25-ம் திகதியை காணாமல் போகும் குழந்தைகளுக்கான தேசிய நாளாக அறிவித்தார். அன்றிலிருந்து மே 25-ம் நாள் காணாமல் போகும் குழந்தைகள் நாளாக ஐக்கிய அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.[2]
இந்தியாவில் காணாமல் போகும் குழந்தைகள்[தொகு]
சர்வதேச அளவில், ஆண்டுக்கு சராசரியாக ஒரு இலட்சம் குழந்தைகள் காணாமல் போவதாகவும் அதில் பெண்பாலர்கள் 55 சதவிதமும், ஆண்பாலர்கள் 45 சதவிதமும் காணாமல்போவதாக ஆய்வறிக்கைகள் உள்ளது. மேலும், இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 45 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போகின்றனர் என்றும் இதில் தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாகவும் தேசியக் குற்றப் பதிவு ஆணையச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் மேற்கு வங்கமும், அடுத்த இடத்தில் தமிழகம் இருப்பதாக அறியப்படுகிறது.[3]
காரணிகள்[தொகு]
குழந்தைகள் காணாமல் போவதற்குப் பல காரணங்கள் உள்ளன. தற்போது வீட்டில் பெற்றோர்கள் கண்டிப்பதால் சினங்கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், உடல் உறுப்புகளைத் களவாடி விற்கும் சமூகவிரோதிகள் குழந்தைகளைக் கடத்துவதாகவும் சென்னை குழந்தைகள் நலகுழுமத்தின் உறுப்பினர் ஷிலா சார்லஸ் மோகன் கூறுகின்றார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட வைக்க 10 வயது முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், மற்றும் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்துவதற்கும் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். குறிப்பாக 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தான் அதிக அளவில் கடத்தப்படுவதாக ஆய்வறிக்கை உள்ளது.[4]
மீட்பு[தொகு]
காணாமல் போன குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்களை மீண்டும் பெற்றோர்களிடம் ஒப்படைப்பதில் பெரும் சிரமம் உள்ளதாகவும், பல குழந்தைகள் தாங்கள் எங்கு இருந்தோம் என்பதுகூடத் தெரியாமல் இருப்பதாகவும், செவித்திறன், பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகள் மீட்கப்பட்டாலும் அவர்களை மீண்டும் சொந்த இடங்களுக்கு சேர்ப்பதில் சிரமம் உள்ளதாகவும் சமூக நலக்கல்வி குழுமத் தலைவரான மனோரமா தெரிவித்துள்ளார்.[4]
குழந்தைகள் தொலைந்தாலோ அல்லது பொது இடங்களில் தனியாக இருப்பதைக் கண்டாலோ காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். இதுபோன்ற புகாரின் அடிப்படையில் சைல்டு ஹெல்ப்லைன் அறக்கட்டளையை (CHILDLINE India Foundation (CIF)) 1098 என்ற கட்டணமில்லா தொலைத்தொடர்பு மூலம் தொடர்பு கொண்டு குழந்தைகளைக் கண்டுபிடிக்கவும் தனியாகவுள்ள குழந்தைகளை உரியவர்களிடம் சேர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். காணாமற்போன குழந்தைகள் பற்றி அரசின் இணையதளத்திலும் (www.trackthemissingchild.gov.in)பதிவு செய்யலாம். [5]
No comments:
Post a Comment