Monday, 11 May 2020

MRINALINI SARABHAI ,CLASSICAL DANCER BORN 1918 MAY 11 - 2016,JANUARY 21



MRINALINI SARABHAI ,CLASSICAL DANCER 
BORN 1918 MAY 11 - 2016,JANUARY 21



.மிருணாளினி சாராபாய் (Mrinalini Sarabhai, 11 மே 1918 - 21 சனவரி 2016 )[1] இந்தியாவின் பிரபலமான ஒரு நடனக் கலைஞர், பயிற்றுனர் மற்றும் நடன இயக்குனர் என்ற பன்முகங்கள் கொண்டவர் ஆவார். அகமதாபாத் நகரில் இவர் நடனம், நாடகம், இசை மற்றும் பொம்மலாட்டம் ஆகியவற்றுக்கான "தர்பனா நிகழ்த்துக் கலைக் கழகம்" என்ற இசைக் கல்லூரி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார்.[2]. பரத நாட்டியம், கதகளி ஆகிய நாட்டியக் கலைகளில் மிருணாளினி 18,000 நபர்களுக்கும் அதிகமானோரைப் பயிற்றுவித்தார்.[3]. கலைக்கு இவர் செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக பத்மசிறீ, பத்மபூசண் உட்படப் பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன [4].
வாழ்க்கைச் சுருக்கம்
இளமையும் கல்வியும்
மிருணாளினி 1918 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் நாள் கேரளத்தில்,[1] முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான சுப்பராம சுவாமிநாதன் மற்றும் அம்மு சுவாமிநாதன் தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது தந்தை சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினர். தாய் ஒரு சமூகநலத் தொண்டர் மற்றும் சுதந்திரத் செயற்பாட்டாளர் ஆவார். இளம் வயதில் மிருணாளின் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தார். அங்குள்ள டால்குரோசு நடனப் பள்ளியில் மேற்கத்திய நடனம் பயின்றார்.[5]. இந்தியாவில் இரவீந்திரநாத் தாகூரின் வழிகாட்டலில் சாந்திநிகேதனில் மிருணாளினி கல்வி பயின்றார். பின்னர் மிருணாளினி சிறிது காலம் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள அமெரிக்கன் நாடகக் கல்விக் கழகத்தில் இணைந்து பயிற்சி பெற்று இந்தியா திரும்பினார். இங்கு மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பரதநாட்டியமும் தகழி குஞ்சு குருப்பு என்பவரிடம் கதகளி நடனமும் பயின்றார்.

திருமணம் மற்றும் அடுத்த ஆண்டுகள்

கணவர் விக்கிரம் சாராபாயுடன் மிருணாளினி, 1948
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையாகக் கருதப்படும் இந்திய இயற்பியலாளர் விக்கிரம் சாராபாயை 1942 ஆம் ஆண்டு மிருணாளினி மணந்தார். இவருக்கு கார்த்திகேயன் என்ற ஒரு மகனும் மல்லிகா என்ற ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களும் பிற்காலத்தில் நடனம் மற்றும் நாடகங்களில் புகழ் பெற்றனர். 1948 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் மிருணாளினி 'தர்பானா' என்ற நடன நிறுவனத்தை நிறுவினார். நிறுவனம் தொடங்கிய பின்னர் ஒரு வருடம் கழித்து, இவர் பாரிசு நகரிலுள்ள தெட்ரே நேசனல் டி சாய்லோட்டு அரங்கத்தில் தனது நடன நிகழ்ச்சியை நிகழ்த்தினார். அதற்காக இவர் பல விமர்சனங்களைப் பெற்றார். மிருணாளினியும் விக்ரமும் தங்களது திருமண வாழ்வில் சில பிரச்சனைகளை எதிர் கொண்டனர். வாழ்க்கை வரலாற்றாசிரியர் அமிர்தா சாவின் கூற்றுப்படி, விக்ரம் சாரபாய் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு வெற்றிடத்தை கொண்டிருந்தார். சமூக நலனுக்காக அறிவியலைப் பயன்படுத்துவதில் தன்னை அர்ப்பணிப்பதன் மூலம் அவ்வெற்றிடத்தை நிரப்ப அவர் முயன்றார். [6].

பிற பங்களிப்புகள்

முந்நூறுக்கும் மேற்பட்ட நடன நாடகங்களை நடனம் அமைத்து இயக்கியதை தவிர, மிருணாளினி குழந்தைகளுக்கான பல புதினங்கள், கவிதை, நாடகங்கள் மற்றும் கதைகளை எழுதியுள்ளார். குசராத்து மாநில கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். காந்திய கொள்கைகளை மேம்படுத்துவதற்காக செயல்படும் ஒரு அமைப்பான சர்வோதயா சர்வதேச அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவராகவும் மிருணாளினி செயல்பட்டார். மேம்பாட்டுக்கான நேரு அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்தார் [7]. மிருணாளினியின் சுயசரிதையானது மிருணாளினி சாரபாய்: இதயத்தின் குரல் என்ற பொருள் கொண்ட "மிருணாளினி சாரபாய்: தி வாய்சு ஆஃப் தி ஆர்ட்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது[8] Her autobiography is titled Mrinalini Sarabhai: The Voice of the Heart.[9].

குடும்பம்

இவரது தந்தை சுப்புராம சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு சட்டத்தரணி மற்றும் சென்னை சட்டக் கல்லூரியின் முதல்வராக இருந்தார். சமூக நலத் தொண்டர் அம்மு சுவாமிநாதன் இவரது தாயாராவார். மூத்த சகோதரி இலட்சுமி சாகல் இந்திய தேசிய இராணுவத்தின் சுபாசு சந்திரபோசின் 'ஜான்சி படைப் பிரிவின் ராணியாகவும்' தளபதியாகவும் இருந்தார். மூத்த சகோதரர் கோவிந்த் சுவாமிநாதன் ஒரு சட்டத்தரணி ஆவார். இவர் உரிமையியல் சட்டம் மற்றும் நிறுவனச் சட்டத்தைத் தவிர அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் சட்டத்தில் நிபுணராக சென்னையில் பயிற்சி பெற்றார். இவர் சென்னை மாநிலத்தின் (இப்போது தமிழ்நாடு) அரசாங்கத் தலைமை சட்ட அதிகாரியாக இருந்தார்.

விருதுகள்
1992 ல் இந்திய குடிமக்களின் உயரிய விருதுகளான பத்மபூசண் மற்றும் 1965 இல் பத்மசிறீ ஆகிய விருதுகளை மிருணாளினி சாராபாய் இந்திய அரசிடமிருந்து பெற்றுள்ளார். [10] 1997 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் நார்விச், கிழக்கு ஆங்லியா ஆகிய பல்கலைக்கழகத்த்தின் மூலம் "கடிதங்களின் முனைவர்" என்ற பட்டம் பெற்றார். பிரெஞ்சு சர்வதேச காப்பங்களின் சங்கத்தின் "டி லா டான்ஸ்" என்ற பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர் ஆவார். 1990 ஆம் ஆண்டில் பாரிசின் சர்வதேச நடனக் குழுவின் நிர்வாகக் குழுவிற்கு இவர் பரிந்துரைக்கப்பட்டார். [11] 1994 இல் புதுதில்லியில் உள்ள சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் கௌரவம் வழங்கப்பட்டது. மெக்சிகோவின் பாலே நாட்டுப்புற நடனத்திற்காக மெக்ஸிகன் அரசாங்கத்தால் இவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. தர்பானா நிகழ்த்துக் கலைக் கழகம் அதன் தங்க விழாவை 1998 திசம்பர் 28 அன்று கொண்டாடியது. அதில் பாரம்பரிய நடன்த் துறையில் ஆண்டுதோறும் "பாரம்பைய சிறப்பிற்கான மிருணாளினி சாரபாய் விருது" அறிவிக்கப்பட்டது. கேரள அரசின் வருடாந்திர விருதான "நிசாகந்தி புரஸ்காரம்" என்ற விருதைப் பெற்ற முதல் கலைஞர் ஆவார். இந்த விருது 2013 இல் இவருக்கு வழங்கப்பட்டது. [12] 11 மே 2018 அன்று கூகிள் டூடுல் இவரது 100 வது பிறந்த நாளை நினைவுகூர்ந்தது. [13]




மக்களுக்கான கலையைப் படைத்துக் 

கொண்டே இருந்த நாட்டிய மேதை 



எஸ் வி வேணுகோபாலன் 





தேசத்தின் அற்புத நடனக் கலைஞர் பத்ம பூஷண் விருது பெற்ற மிருணாளினி சாராபாய் மறைந்துவிட்டார். அவரது அன்பு மகள், அவரும் ஒரு தலைசிறந்த நாட்டிய மேதை, மல்லிகா சாராபாய் தமது அன்னை, "நிரந்தர நாட்டியமாடச் சற்றுமுன் தான் விடைபெற்றார்" என்று உடனடியாக முக நூலில் பதிவு போட்டிருந்தார். உங்களால் எப்போதாவது நாட்டியத்தைத் தவிர்த்து இருக்க முடியுமா, ஏன் அதை விட முடியவில்லை என்று அவரிடம் கேட்கப் பட்டபோது, மிருணாளினி பதிலுக்குக் கேள்வியாளரிடம்  இப்படி கேட்டார்: "உங்களால் மூச்சு விடாது இருப்பதை யோசிக்க முடியுமா, எனக்கு நாட்டியம் அப்படித் தான்!".  

முற்பிறப்பு, மறு பிறப்பு போன்றவற்றில் நம்பிக்கை கொண்டிருந்த குடும்ப மரபில் வந்த மிருணாளினி, எங்கிருந்தோ தமக்குக் கையளிக்கப்பட்ட பெரும்பேறு தான் நடனம் என்று சொல்வதுண்டு. பிறந்த குடும்பத்திலோ, புகுந்த வீட்டிலோ அவருக்குமுன் நாட்டியத்தைப் பயின்றவர்கள் ஒருவரும் கிடையாது. எந்த சுவாமிநாதனும் (அவரது தந்தை), சாராபாயும் (கணவரது குடும்பப் பெயர்) அதற்குமுன் நடனம் ஆடி இருக்கவில்லை என்று புன்னகை ததும்ப ஓர் உரையாடலில் அவர் அளித்த பதிலை யூ டியூபில் இப்போதும் பார்த்து ரசிக்க முடியும். 
சுதந்திரப் போராட்ட வீராங்கனை அம்மு சுவாமிநாதன் தான் அவரது தாய். இந்தப் பெயரை வாசகர்கள் உடனே அடையாளம் காணக் கூடும். நேதாஜி அவர்களது இந்திய தேசிய இராணுவத்தில் பங்கெடுத்த போராளி  கேப்டன் லட்சுமியின் சகோதரிதான் மிருணாளினி! இவர்களது சகோதரர் கோவிந்த் புகழ்பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்தவர். தேச விடுதலைப் போரில் இடையறாத பங்களிப்பில் அக்கறை கொண்டிருந்த தாய் அம்மு, குழந்தைகள்  சுதந்திர சிந்தனையோடு வளர்வதை உறுதி செய்தார். இள வயதிலேயே நடனம் தான் தமது வாழ்க்கை என்று முடிவெடுத்துக் கொண்டார் மிருணாளினி.  நடனமே வாழ்க்கை என்று சொல்லிக் கொள்வதை விட, அது ஓர் அர்ப்பணிப்பு என்று குறிப்பிடவே விரும்புகிறேன் என்பார் மிருணாளினி.  

தென்றலை வருணிக்கும் "பொங்கரில் நுழைந்து வாவி புகுந்து...." என்னும் அழகான திருவிளையாடற் புராண செய்யுள், "அங்கங்கே கலைகள் தேறும் அறிவன் போல்" என்று  காற்றுக்கு அறிவைத் தேடிச் செல்லும் மாணவரை உவமை ஆக்கியிருக்கும். வாசம் மிகுந்த மலர்கள், குளிர்ச்சியான நீர் நிலை பரப்புகள் எங்கணும் புகுந்து நுழைந்து அந்த மணத்தையும், மென்மையையும், குளிர்ச்சியையும் தாம் பெற்றுக் கொள்கிற தென்றல் காற்றைப் போலவே மிருணாளினி, பல்வேறு இடங்கள், நாட்டியத்தின் வெவ்வேறு துறை வல்லுநர்கள், சமூகத்தின் பலதரப்பு மனிதர்கள், இயற்கையின் வசீகர தலங்கள் எல்லாம் கண்டடைந்து மகத்தான கலையை வளர்த்தெடுக்கும் சிறப்பான இடத்தை எட்டியவர். பரதம், கதகளி என அந்தந்தநாட்டிய மரபுக்கேற்ற ஆசான்களிடம் மிகுந்த தேர்ச்சியுரக் கற்றதோடு, அவற்றைச் செவ்வனே வெளிப்படுத்தும் மேதைமையும் பெற்றார். பரத நாட்டியத்தை, பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, முத்துக்குமார பிள்ளை இவர்களிடம் பயின்றவர், புகழ்வாய்ந்த கல்யாணிக்குட்டி அவர்களிடம்   மோகினி ஆட்டத்தையும், குரு ஆசான் குஞ்சு குரூப் அவர்களிடம் கதகளியையும் கற்றார். ஆனால் தமது குரு என்று அவர் எல்லாக் காலங்களிலும் சொல்லிக் கொண்டிருந்தது, ரவீந்திர நாத் தாகூரைத் தான்! சாந்திநிகேதனில் படித்த காலத்தில், அவரது தீர்க்கமான பார்வை, ஆளுமை தம்மை மிகவும் ஈர்த்ததாக மிருணாளினி குறிப்பிடுவதுண்டு.  

பெங்களூரில் சென்று படிக்கையில்தான் எதிர்காலத்தில் இந்தியாவின் விண்வெளி அறிவியலுக்கு அடித்தளமிட இருந்தவரான  விக்ரம் சாராபாய் அவர்களைச் சந்தித்தார். விடுதலை போராட்டத்தில் சக பங்கேற்பாளராக இருந்தவர்கள் இந்த இருவரது அன்னையரும்! அன்பின் நட்பு மணவாழ்க்கையில் இணைய வைத்தது. விக்ரம் சாராபாய் அவர்களது குடும்பம் வாழ்ந்துவந்த குஜராத் பகுதிக்குப் பெயர்ந்தது மிருணாளினியின் வாழ்க்கை. நடனம் என்பதைப் பெண்கள், அதுவும் சாராபாய் போன்ற பெரிதும் அறியப்பட்ட குடும்பத்துப் பெண்கள் நாட்டிய மேடையில் தோன்றுவது யோசிக்க முடியாதிருந்த காலத்தில் அந்தக் கற்பிதத்தை உடைத்துப் போட்டார் மிருணாளினி. ஏளனம் செய்யவும், இழிவு செய்யவுமாகக் குழுமிய சுற்றமும் நட்பும் இவரது நாட்டியத்தைப் பார்த்து அசந்து போயிருக்கிறது. அதுதான் கலையின் ஆற்றல் என்பார் மிருணாளினி. பின்னாளில், வெளிநாட்டுப்  பயணம் ஒன்றின்போது, "ஓ, சாராபாய் குடும்பமா, அது நடனக் கலைக் குடும்பமாயிற்றே" என்று யாரோ கேட்டதை சுவாரசியமாகச் சொல்லிக் கொள்வதுண்டு. மிருணாளினியைத் தொடந்து மல்லிகா, அப்புறம் அடுத்த தலைமுறை என்று நாட்டிய பாரம்பரியம் தொடர்கிறது.  

வழி வழியாக எடுத்துக் கொள்ளப்பட்ட கருப்பொருள்களை மிகக் கவனத்தோடு கடந்து போகத் தொடங்கியதுதான் மிருணாளினி அவர்களது பரவசமிக்க பண்பாக்கம். சமூகக் கருத்துக்களை எனது கலை வெளிப்படுத்தும் என்றார். சமூக உணர்வுகளை பிரதிபலிப்பதுதானே கலை, நான் ஒரு கண்ணாடிதான் என்றார் அவர். நடனம் என்பது மக்களுக்காக -  மேல்தட்டு ரசனைக்கு மட்டுமல்ல என்பதில் அவரது குரல் தெளிவாக இருந்து வந்தது..சமூக விஷயங்கள் மீது மனசாட்சியைத் தூண்டும் நோக்கில், வரதட்சணைக் கொடுமையை சாடும் அவரது நாட்டிய நாடகம் மிகவும் பரந்த அளவில் கொண்டாடப் பட்டது.  மூன்று பெண்கள் உற்சாகமாகத் தமது நாட்டிய அடவுகளைத் தொடங்குகின்றனர். அடுத்துச் சில நிமிடங்களில் ஒருத்தி தனித்து நிற்கிறாள். மற்றவர்கள் இருவரும் விஷ அம்புகள் எய்வதைப் போன்ற உடல் மொழியில் அவதூறுகளை அவள் மேல் பொழிகின்றனர். நிர்க்கதியாகத் தள்ளப்படும் நிலையில் அந்தப் பெண் தற்கொலை நோக்கித் தள்ளப்படுவதைப் படிப்படியாக நாட்டிய நாடக பாவங்களில் அதிர்ச்சி அடியாக அரங்கேற்றிக் காண்பித்தார் மிருனாளினி.  மனிதர்களது தவிப்புகளை, வாழ்க்கைப் போராட்டங்களை, சமூகத்தின் பல பிரச்சனைகளை அவரது நாட்டியங்கள் மேடையில் விவாதிக்கத்  தொடங்கின. 



தர்ப்பண் அகாதமி என்னும் நாட்டியப் பயிற்சி மையத்தை 1948ல் நிறுவியது, மிருணாளினி அவர்களது மகத்தான பங்களிப்பு. எண்ணற்ற நடன விருப்பம் கொண்டோரை  ஆட்கொண்டு அவர்களுக்குப் பயிற்சி அளித்ததோடு குழு நாட்டிய நாடங்களில் அவர்களை மிகச் சிறந்த முறையில் பிரகாசிக்க வைத்தார் மிருணாளினி. உலக நாடுகளுக்கு இங்கிருந்து சென்று நமது பாரம்பரியக் கலையை அறிமுகப் படுத்தி நிகழ்ச்சிகளை நடத்திய முதல் நடனக் கலைஞர் என்ற பெருமைக்குரியவர் அவர்.



"எனது நாட்டியத்தில் மொழி தேவைப்படவில்லை.....சொல்லுக்கட்டு (தா..தை...தித் தை...தத் தித் தா...) மட்டுமே உண்டு. ஆனால்  உடல் மொழியும், நடன பாவங்களும், அடவுகளும் எந்த விஷயத்தையும் மேடையில் எடுத்து வைக்கப் போதுமானதாக இருந்தது" என்றார் மிருணாளினி. "என் இயற்கை மகன் கார்த்திகேயன் பிறந்த பிறகு அவனது வளர்ச்சியின் ஒவ்வொரு சிறிய அம்சங்களையும் கூர்ந்து நோக்கத் தொடங்கினேன்....அதன் அழகிய அனுபவத்திலிருந்து மனித வாழ்க்கையை நாட்டிய நடனமாக்கும் எனது "மனுஷ்யா" தோன்றியது....இப்படி பலவற்றை நடன அரங்கிற்குக் கொண்டு செல்ல முடிந்தது.." என்று ஒருமுறை குறிப்பிட்டார் அவர். 



இதிகாசங்கள், புராணங்கள் இவற்றில் ஆழ்ந்த பற்றுதலும், நம்பிக்கையும் அவருக்கிருந்தது. ஆனால் அவற்றை மரபார்ந்த முறையில் காட்சிப் படுத்துவதற்கு அப்பால் அவரது படைப்பு மனம் இயங்கிக் கொண்டிருந்தது. அதனால்தான், மகாபாரதக் கதையை, அவர் வன்முறை குறித்த விசாரணையாக சித்தரிக்க முற்பட்டார். பறவைகள், விலங்குகள், காடுகள், மலைகள் என இயற்கையைக் கொண்டாடியபடி மனிதகுலம் அமைதியுற வாழும் ஓர் உலகைக் கனாக் கண்ட அவரது கலைக் கண்ணோட்டம் அவரைச் சுற்றுச் சூழலியலாளராகவும்  உருப்பெற வைத்தது. வண்ணங்களும், இனிய ஓசைகளும் அவரது நாட்டியக் குழுவினரின் அசாத்திய மேடை நடனத்தில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். 



அவரது பாதங்கள் ஆடியபடி இருக்கும்போதே, அவரது சிந்தனையின் கரங்கள் கவிதை தீட்டத் தொடங்கும். அந்தக் கவிதையின் வரிகள் அமர்க்களமான ஒரு நடன நாடகமாக பொதுவெளியில் பார்வையாளரை அசர வைக்கும். கலையே வாழ்க்கை, வாழ்க்கையே கலைக்கு அர்ப்பணிப்பு எனத் தொடர்ந்த பயணத்தில் தமது கள அனுபவங்களை, சிந்தனைகளை நூலாகவும் கொண்டு வந்தார் மிருணாளினி. 2004ல் வெளிவந்த "இதயத்தின் குரல்" என்ற அவரது புத்தகம் அதைப் போல் இன்னொன்று இல்லை என்று பெரிதும் போற்றப்பட்டது. 



மறு பிறவி என்று உண்மையில் ஒன்று இருக்குமானால், நீங்கள் என்னவாக விரும்புவீர்கள் என்று ராஜீவ் மெஹ்ரோத்ரா தமது நீண்ட உரையாடலில் அவரைக் கேட்கையில், "ஓர் ஓவியராக, எழுத்தாளராக, முடியுமானால் ஒரு பாடகராக!" என்று புன்னகை சிந்தியபடி பதில் அளித்தார் மிருணாளினி. தமது மகள் மல்லிகா சாராபாய் சிறந்த நாட்டிய மேதை, மகன் கார்த்திகேயன் சுற்றுச் சூழல் செயல்பாட்டாளர் செயல்பாட்டாளர் என்பதில் அவருக்கு நிரம்ப பெருமிதம் இருந்தது.  சிறந்த கலை ரசிகரான தமது கணவர் விக்ரம் சாராபாய் குறித்த பெருமை சூழ்ந்திருக்கும் எப்போதும் அவர் முகத்தில். தமது வளர்ச்சி குறித்த பெரிய அக்கறை எதுவும் காட்ட முடியாதபடிக்கு சுதந்திரப் போரில் ஈடுபட்டிருந்தார் தனது தாய் என்ற குறையை அவரது நேர்காணல் ஒன்று வெளிப்படுத்தியது. ஆனால் தமது கடைசி நாட்களில் தாயைத் தான், அம்மு சுவாமிநாதனின் மலையாள மொழியைத்தான் அவர் உதடுகள் பேசிக் கொண்டிருந்தது. செம்மாந்த கலை வாழ்க்கையை, மக்களுக்கான கலையை வாழ்ந்தும், வாழ்வித்தும் தமது 97ம் வயதில் இயற்கையோடு நிரந்தரமாகக்  கலந்துவிட்டார் மிருணாளினி.  அன்னையின் அரசியல் வாழ்க்கையில் இருந்துதான் மக்களுக்கான கலையை அவரது படைப்புமனம் உருவாக்கிக் கொண்டே இருந்தது. இனியும் உலகம் அதைக் கொண்டாடிக் கொண்டேதான் இருக்கும்......



******************************

மறைவு

உடல்நலக் குறைவின் காரணமாக 21 சனவரி 2016 அன்று அகமதாபாத்தில் காலமானார்.[14

தாயின் உடலுக்கு நடனம் ஆடி அஞ்சலி செலுத்திய மகள்; மிருணாளினி சாராபாய் இறப்பில் உருக்கம்!
 பிரபல நடனக் கலைஞர் மிருணாளினி சாராபாய் உடலுக்கு அவரது மகள் மல்லிகா சாராபாய் நடனம் ஆடி அஞ்சலி செலுத்தினார்.






`அப்பாவிடம் எனக்கு பிடிக்காத ஒரு குணம் அவர் என்னுடைய வீட்டுப் பாடங்களில் என்றுமே எனக்கு உதவியதில்லை.'' - மல்லிகா சாராபாய்

ஒலியின் இரைச்சல்களுக்கிடையே இசையைக் கேட்க முடிந்தவர்களால் பெரும் உயரங்களை எட்ட முடியும்! - டாக்டர் விக்ரம் சாராபாய், இஸ்ரோ நிறுவனர்.

டாக்டர் விக்ரம் சாராபாயின் நூறாவது பிறந்ததினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்திய விண்வெளிக் கனவுகளின் தந்தையான அவர், மல்லிகா, கார்த்திகேய என இரண்டு பிள்ளைகளின் அப்பாவாக ஆனந்தப் பெருமை சுமந்தவர். கார்த்திகேய சாராபாய், சூழலியல் கல்விச் செயற்பாட்டாளர்; மல்லிகா புகழ்பெற்ற நடனக்கலைஞர், பத்மபூஷன் விருது பெற்றவர். தந்தையின் நூறாவது பிறந்த தினத்தில் விக்ரம் என்ற குடும்பஸ்தரை பற்றிய உருக்கமான சில நினைவுகளை க்வின்ட் வலைதளத்துக்குப் பகிர்ந்திருக்கிறார் மல்லிகா.

''குடும்பத்துக்காக அப்பா குறைந்த நேரமே செலவிட்டாலும் அந்த நேரத்தில் நிறைந்த அன்பும் கொண்டாட்டமும் தளும்பியிருக்கும். அவரது இரண்டு கைகளின் ஆட்காட்டி விரல்களையும் இறுகப் பிடித்துக்கொள்வேன். அவர் மெதுவாக 'Bridge on the river kwai' என்னும் ஆங்கிலப் படத்தின் பாடலை விசிலடிக்கத் தொடங்குவார். நான் அவர் விசிலடிப்பதற்கு ஏற்ப மார்ச் ஃபாஸ்ட் செய்தபடி வீட்டைச் சுற்றிச் சுற்றி வருவேன். இரவு உணவு நேரத்தில் எனக்குப் பிடித்தமான உணவின் சிறு பகுதியை அவருக்காக எனது தட்டில் எடுத்துவைப்பேன். தனது உணவைச் சாப்பிட்டுவிட்டு நான் அவருக்காக ஆசையாக எடுத்துவைத்ததைச் சாப்பிடுவார். அம்மா மிருணாளினி ஒரு நடனக் கலைஞர். அவர் அதிகம் பயணம் செய்யவேண்டியிருக்கும் என்பதால் அப்பாதான் என்னை பள்ளியில் விடுவார். நான் வகுப்பில் ஏதேனும் சேட்டை செய்தால் அப்பாதான் ஆஜராக வேண்டும். தன் மகள் செய்யும் சேட்டைகளில் அவருக்குக் கொஞ்சம் பெருமிதமும் இருந்தது உண்டு.

மல்லி! உன்னால் முடியும். உனக்கு முடியாததை உனது ஆசிரியர் எப்போதும் செய்யச் சொல்ல மாட்டார்.
மல்லிகா சாராபாய்

அப்பாவிடம் எனக்குப் பிடிக்காத ஒரு குணம், அவர் என்னுடைய வீட்டுப் பாடங்களில் என்றுமே எனக்கு உதவியதில்லை. ஏதாவது உதவி கேட்டால் அவர் சிரித்தபடியே, 'மல்லி... உன்னால் முடியும். உனக்கு முடியாததை உன் ஆசிரியர் எப்போதும் செய்யச் சொல்ல மாட்டார்' என்பார்.
அப்பாவும் எங்கள் உறவினர்களும்தான் எனக்குள் சமூக அரசியல் பொறுப்புணர்வை விதைத்தார்கள் என்பேன். எனக்கு 12 வயது இருக்கும். அப்போது பள்ளியில் இரண்டு மாணவர்கள் என்னை காரணமாக வைத்து சண்டை போட்டுக்கொண்டனர். பள்ளிக்கூட நிர்வாகம் இதில் சம்பந்தமே இல்லாத என் அப்பாவை பள்ளியில் ஆஜராகச் சொன்னது. அப்பாவை அவர்கள் அழைத்தது எனக்குக் கவலை என்றால், தன் 12 வயது மகளைக் காரணம் காட்டி இரண்டு பையன்கள் சண்டைபோட்டுக் கொள்கிறார்கள் என்பது அப்பாவுக்கு விநோதமாக இருந்தது. அப்பா என்னை அழைத்துப் பேசினார். 'மல்லி! இந்த உலகில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். முதல் வகை, சொன்னதைக் கேட்டு நடப்பவர்கள். இரண்டாம் வகை, சொன்னதை ஏன் என்று கேள்வி கேட்பவர்கள், தங்களுக்கான விதிகளைத் தாங்களே நிர்ணயித்துக்கொள்பவர்கள்.நானும் உன் அம்மாவும் இரண்டாவது ரகம். நீ யார் என்பதை நீ தெரிவு செய்துகொள்ள வேண்டியிருக்கிறது' என்றார். நானும் இரண்டாவது பாதையைத் தேர்ந்தெடுத்தேன்.

அவரது இந்த உறவு அம்மாவுக்கு மிகுந்த மனவேதனையைத் தரக்கூடியதாக இருந்தது. அம்மா வேதனைப் படுவது எனக்கு வேதனை அளித்தது.
மல்லிகா சாராபாய்
அப்பாவுக்கு கமலா சவுத்ரியுடன் காதல் தொடர்பு ஏற்பட்டபோது, எந்த மகளையும்போல நானும் முதலில் வெறுத்தேன். எனது 13 வயது வரை அவர் மீதான எனது வெறுப்பு அப்படியே இருந்தது. அவரது இந்த உறவு அம்மாவுக்கு மிகுந்த மனவேதனையைத் தரக்கூடியதாக இருந்தது. அம்மா வேதனைப்படுவது எனக்கு வேதனை அளித்தது. ஆனால் அதன் பிறகு அவருடனான எனது உரையாடல்கள் அதிகரிக்கத் தொடங்கிய காலத்தில், என்னால் அவரது மனநிலையைப் புரிந்துகொள்ள முடிந்தது. உண்மையில் அவரும் மனவேதனையில் இருந்தார்.

தான் செய்யும் செயல் தன் மனைவிக்கு வேதனையளிக்கிறதே என்கிற வேதனை அவருக்கு இருந்தது. தன்னை நேசித்த இரண்டு பெண்களை அவரால் நேசிக்காமல் இருக்க முடியவில்லை. நேசம் ஒருவரிடமே மட்டும் வருவதில்லை, தான் செய்தது சரி என்று அவருக்குத் தோன்றியது. ஆனால் இன்றளவும் அவர் செய்தது என்னைப் பொறுத்தவரையில் தவறுதான். அம்மாவின் இடத்தில் நான் இருந்திருந்தால் சுயமரியாதையைக் கருத்தில் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறி இருப்பேன்.
52 வயதில், முடிவுபெறாத வாழ்க்கையாக மரணம் அப்பாவின் ஆயுளை முடித்துவிட்டது. அவர் இறந்த நேரம், புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக என்னையும் அம்மாவையும் மும்பைக்கு வந்து அப்பா ஊருக்குச் அழைத்துச் செல்வார் என நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். அப்பாவின் இறப்புச் செய்திதான் வந்தது.

அப்பா உயிருடன் இருந்திருந்தால் இன்றைய சமூகச் சூழலைப் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார். கல்வி கற்பதற்கும் கொள்கை நிலைப்பாடு எடுப்பதற்குமான வசதி இருக்கும் இடத்தில் அதை தவறுகளைச் சரி செய்வதற்குப் பயன்படுத்தவேண்டும் என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தது அப்பாவும் அம்மாவும்தான். அதனால்தான் மக்கள் பேசத் தயங்கும் பலவற்றை எனது நடனங்களின் வழியாகப் பேசிக்கொண்டிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் ஜனநாயக ஆட்சி என்பது எதிர் விமர்சனங்களையும் சிந்தனைகளையும் வரவேற்பது, அதற்கான இடமளிப்பது. அதற்கான குரலாகத்தான் நான் தற்போது இருக்கிறேன். ஒருவேளை அப்பா உயிருடன் இருந்திருந்தால் என்னைப் பார்த்து நிச்சயம் பெருமிதம் கொண்டிருப்பார்.








No comments:

Post a Comment