JEGAN MOHAN REDDY FORMED
SEPARATE PARTY -DIVIDED
CONGRESS IN ANDHRA
அன்றைக்கு சோனியா அவமதிக்காமல் இருந்திருந்தால்..!' - ஆந்திர மக்களின் மனதை வென்ற ஜெகன்
2010-ம் ஆண்டின் மத்திய பகுதி அது. அப்போது ஆந்திராவின் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இறந்த பிறகு, அவரின் மனைவி விஜயலஷ்மியும் மகள் சர்மிளாவும் ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றனர். சரியாகக் காலை 10 மணிக்கெல்லாம் டெல்லியின் ஜன்பத் சென்றடைந்துவிட்டனர். அதாவது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீடு.
சோனியா காந்தியின் வீட்டில் காலடி எடுத்துவைத்ததுமே இருவருக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டது. ஒய்.எஸ்.ஆர் இறந்த பிறகு தாங்கள் முதல்முறையாகச் சோனியாவை சந்திக்கவுள்ளதால் அவர் நம்மை உற்சாகத்துடன் வரவேற்பார் என எண்ணியபடியே இருவரும் அமர்ந்திருந்தனர். ஆனால், அவர்களின் எண்ணம் சில நிமிடங்கள்கூட நீடிக்கவில்லை. இருவரும் வீட்டுக்குள் அழைக்கப்படாமல் அருகில் இருந்த காங்கிரஸ் அலுவலகத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு வரவேற்பு அறையிலேயே இருவரும் அமரவைக்கப்பட்டனர். பத்து - பதினைந்து நிமிட காத்திருப்புக்குப் பிறகு இறுக்கமும் வெறுப்பும் கலந்த முகத்துடன் சோனியா காந்தி அறையினுள் நுழைந்தார். இருவருக்கும் இடையேயான நலம் விசாரிப்புக்குப் பிறகு, நேரடியாக விஷயத்துக்கு வந்தார் சோனியா. “ஆந்திரா முழுவதும் உங்கள் மகன் நடத்தும் ஒடர்பு (Odarpu - தமிழில் ஆறுதல்) பேரணியை உடனடியாக நிறுத்த வேண்டும்” எனக் கூறினார். எதற்காகப் பேரணி நடைபெறுகிறது என்ற விஷயத்தை சோனியாவுக்கு விளக்க முற்பட்டார் விஜயம்மா அதைக் கேட்க விரும்பாதா சோனியா, விஜயம்மா பேசிக்கொண்டிருக்கும்போதே இருக்கையில் இருந்து எழுந்து, “பேரணியை நிறுத்துங்கள்” என ஒரே வார்த்தையில் கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
சோனியா காந்தி
சோனியாவின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த அம்மாவும் மகளும் வேறு எதுவும் செய்ய முடியாமல் காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றனர். இந்தச் செய்தி ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டிக்குத் தெரியவந்தது. அவர் தன் தாய் அவமதிக்கப்பட்டதைக் கேட்டு கொதித்தெழுந்தார். சோனியா சொல்லிவிட்டார் என்பதற்காகத் தன் பேரணியை நிறுத்தவில்லை. தொடர்ந்து விஜயம்மாவும் ஜெகனும் சேர்ந்து ஆந்திரா முழுவதும் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
ஜெகன் மோகன் ரெட்டி எதற்காகப் பேரணி நடத்தினார் என்பதைப் பார்ப்போம்
ஆந்திராவின் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராகசேகர ரெட்டி 2009-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி நல்லமலா காட்டுப் பகுதி வழியாக ஹெலிகாப்டரில் பயணித்தார். அந்த ஹெலிகாப்டர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. தீவிர தேடுதலுக்குப் பிறகு, ருத்திரகொண்டா மலை உச்சியில் அந்த ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த ராஜசேகர ரெட்டி உட்பட 5 பேரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் திடீர் மரணத்தை ஆந்திர மக்கள் எதிர்பார்க்கவில்லை. ஆந்திர மக்களின் பெரும் நாயகனாக இருந்த ராஜசேகர ரெட்டியின் இறப்பை சில மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதைத் தாங்க முடியாமல் அவரின் விசுவாசிகளும் சில தீவிர தொண்டர்களும் தற்கொலை செய்துகொண்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகவே தன் பேரணியைத் தொடங்கினார் ஜெகன்மோகன் ரெட்டி.
ஜெகன் மோகன் ரெட்டி
தற்போது மீண்டும் பழைய கதைக்கு வருவோம், சோனியாவின் பேச்சை ஜெகன் கேட்கவில்லை. இதுதான் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உருவாவதற்கு பெரும் காரணமாக இருந்தது. 2010-ம் ஆண்டு, தான் காங்கிரஸைவிட்டு விலகப்போவதாகவும் புதிய கட்சி ஒன்றை தொடங்க இருப்பதாகவும் அறிவித்தார் ஜெகன். இது ஆந்திர காங்கிரஸ் நிர்வாகிகளுக்கிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இருந்தாலும் ராஜசேகர ரெட்டியின் ஆதரவாளர்கள் ஜெகனின் பக்கம் நின்றனர். 2011 மார்ச் 12-ம் தேதி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை நிறுவினார் ஜெகன் மோகன் ரெட்டி. பின்னர், அதே ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் ஜெகனுக்கு கிடைத்த வரவேற்பு அவரது கட்சிக்குக் கிடைக்கவில்லை.
பிரசாரம்
புதிய கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே உட்கட்சி பூசல்களில் சிக்கிக்கொண்டார் ஜெகன். அதைத் தொடர்ந்து பல வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டன. இறுதியில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதியான நிலையில் 16 மாதங்கள் சிறையில் இருந்தார். ஜெகன் சிறையில் இருந்த காலத்தில் ஆந்திராவை இரண்டாகப் பிரிக்க அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு பேச்சு வார்த்தை நடத்தியது. இதற்கு ஜெகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சிறையில் இருந்துகொண்டே 125 மணி நேரம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் ஜெகனின் உடலில் சர்க்கரை குறைந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வெளியில் விஜயம்மாவும் ஆந்திராவை இரண்டாகப் பிரிக்கக் கூடாது என்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
ஜெகன் ரெட்டி
இறுதியில் 2013-ம் ஆண்டு ஜெகன் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு அவர் சிறையிலிருந்து வெளியில் வந்தார். வந்த உடனேயே ஆந்திராவை இரண்டாகப் பிரிப்பதற்கு எதிராக முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து அதை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். அதன் பிறகான பேரணி, பிரசாரம், சந்திரபாபு மீதான ஆந்திர மக்களின் அதிருப்தி ஆகியவை சேர்ந்து தற்போது ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வர் பதவியில் அமரவைத்துள்ளது. ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை பகடைக் காயாக வைத்துதான் வாக்கு சேகரித்தார் ஜெகன். ஆந்திராவை இரண்டாகப் பிரிப்பது அங்குள்ள மக்களுக்குப் பிடிக்கவில்லை அப்படி மாநிலத்தைப் பிரித்த அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார் சந்திரபாபு நாயுடு என ஜெகன் கூறிய வார்த்தைகள் அவ்வளவும் அவருக்கு வாக்கை அள்ளித் தந்தன.
பிரசாரம்
ஜெகன் மோகன் ரெட்டி என்ற பெயருக்குப் பின்னால் பல அவமானங்கள், கஷ்டங்கள், இழப்புகள் என நிறைய உள்ளன. இருந்தாலும் இவை அனைத்தையும் எதிர்த்து நிற்கும் தலைமை பண்பும் அவரிடம் உள்ளது. அதேபோல் தொண்டர்களை அரவணைப்பு அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது போன்ற தனித் தன்மையும் கொண்டுள்ளார். அதேபோல பிற கட்சியில் பதவியில் இருக்கும் ஒருவர் தன் கட்சியில் இணைய வேண்டும் என விரும்பினால் அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இங்கு வரலாம் எனக் கட்டுப்பாடு விதித்துள்ளார். 46 வயதில் கடினமாக உழைத்து முதல்வர் பதவியை அடைந்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி இன்னும் தன் வாழ்வில் பல அரசியல் மாற்றங்களை நிகழ்த்துவார் எனக் கூறப்படுகிறது. முதல்முறையாக அரியணை ஏறியுள்ளதால் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி திறனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment