THE PASSION OF JOAN OF ARC
SILENT MOVIE REVIEW
பிம்பங்களாகச் சில முகங்களே நினைவில் தங்கியிருக்கின்றன, அப்படியான ஒரு முகம் மரியா பல்கெனடியுடையது,(Maria Falconetti) அவள் நடித்த The Passion of Joan of Arc சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம், அதை இயக்கியவர் டேனிஷ் இயக்குனர் கார்ல் டிரையர்,(Carl Th. Dreyer) மௌனப்படமான ஜோன் ஆப் ஆர்க்கில் ஜோனாக பல்கெனடி நடித்திருக்கிறார், சினிமா எவ்வளவு வலிமையான காட்சி ஊடகம் என்பதை அறிந்து கொள்ள இந்த ஒரு படமே சாட்சி, உரையாடலின்றி காட்சிகளின் வழியே கதாபாத்திரத்தின் பயமும் அவலமும் உயிரோட்டமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிற்து 1928ம் ஆண்டு வெளியான The Passion of Joan of Arc இன்று வரை உலகெங்கும் உள்ள பல்வேறு திரைப்படப்பள்ளிகளில் பாடமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது என்பதே இதன் சிறப்பம்சம்,
பாரீஸில் உள்ள அரிய நூல்களுக்கான ஆவணக்காப்பகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஜோனின் நீதிவிசாரணை பற்றி மூலப்பதிவுகளில் இருந்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது, வரலாற்றில் போராளியாக சித்தரிக்கப்பட்ட ஜோனின் பிம்பத்தை உருமாற்றி மதவிரோதி எனக்குற்றம் சாட்டப்பட்ட ஒரு இளம்பெண்ணின் துயர வாழ்வை முன்வைக்கிறது இப்படம், க்ளோசப் காட்சிகளைப் பயன்படுத்துவதில் தான் இயக்குனரின் தனித்துவம் இருக்கிறது என்று நம்பும் ஒரு பிரிவு இயக்குனர்கள் உலகசினிமாவில் இருக்கிறார்கள், அவர்களது படங்களில் அண்மைக்காட்சிகளின் வழியே உணர்ச்சிப்பூர்வமான நாடகம் நடந்தேறும்,வாழ்வில் நாம் அரிதாக தருணங்களில்
அண்மைக்கோணத்தில் மனிதர்களைக் காண்கிறோம், சினிமாவில் அண்மைக்காட்சி என்பது ஒரு முக்கியமான வரியை சிவப்பு மையால் அடிக்கோடிட்டு காட்டுவது போன்றது,அண்மைக்காட்சிகளைக் கையாளுவது பெரிதும் உளவியல் அம்சங்களுடன் தொடர்பு கொண்டது, கதாபாத்திரத்தின் மனத்துயரை. தடுமாற்றத்தை. நெகிழ்வை. சந்தோஷத்தை, பயத்தைக் காட்டவே பெரிதும் அண்மைக்காட்சிகள் பயன்படுத்தப்படுகின்றன, அண்மைக்காட்சியில் நடிகரது முகம் ஒரு திரைபோலாகி அதில் உணர்ச்சிகள் துல்லியமாக வெளிப்படுகின்றன.க்ளோசப் காட்சிகள் எடுப்பதில் இரண்டு இயக்குனர்களைச் சாதனையாளர்கள் என்று சொல்வேன், ஒன்று கார்ல் டிரையர் மற்றவர் செர்ஜியோ லியோனி, இவர்களது படங்களில் வெளிப்படும் அண்மைக்காட்சிகளைப் போல வலிமையான க்ளோசப் காட்சிகளை இன்று வரை எவரும் பயன்படுத்தவேயில்லை க்ளோசப் மற்றும் மிட் ஷாட்டுகளின் வழியாகவே ஜோன் ஆப் ஆர்க் நிகழ்த்திக்காட்டும் உன்னதம் அளப்பறியது, இன்று சினிமா தொழில்நுட்பத்தில் எல்லையில்லாத சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது, ஆனால் டிரையர் இது போன்ற எந்தத் தொழில்நுட்பவசதிகளும் இன்றி நடிகர்களை கொண்டே கதையின் கொந்தளிப்பைக் காட்சிப்படுத்தியிருக்கிறார், நடிப்பைக் கற்றுக் கொள்ள விரும்புகின்றவர்கள் இப்படத்தை ஒரு பாடம் போலக் கையோடு கூடவே வைத்துக் கொள்ள வேண்டும்.
I never said all actors are cattle. What I said was all actors should be treated like cattle. என ஹிட்ச்காக் ஒரு நேர்காணலில் சொன்னது மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது, ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் இது போன்ற குற்றசாட்டுகளை எதிர்கொண்டவர் கார்ல் டிரையர், நடிகர்களை சவுக்கு வைத்து விரட்டுபவர் என்று அவரைத்திட்டி ஒரு விமர்சகர்
எழுதியிருக்கிறார், இன்னொருவர் அவர் ஒரு சேடிஸ்ட். நடிப்பு என்ற பெயரில் மோசமான சித்ரவதைகளைச் செய்பவர் என்று குறிப்பிடுகிறார், இந்தக் குற்றசாட்டுகளுக்கு டிரையரின் பதில் நான் நடிகர்களை ஒரு இசைக்கருவியைப் போல பயன்படுத்துகிறேன், எனக்குத் தேவையான இசையை உருவாக்க கருவியை அழுத்துவதில் தவறு ஒன்றுமில்லை என்கிறார், அதனால் தான் அவரது திரைப்படங்களில் நடிகர்களின் ஆகச்சிறந்த நடிப்பை காணமுடிகிறது,
‘Mr Perfectionist என்று அடையாளம் காட்டப்படும் கார்ல் டிரையர் உலக சினிமாவில் தனிப்பெரும் ஆளுமை, இவரது படங்களில் Gertrud, Day of Wrath, The Passion of Joan of Arc ஆகிய மூன்றும் மிக முக்கியமானவை,ஜோன் ஆப் ஆர்க் எண்பது நிமிசங்கள் ஒடக்கூடியது, ஜோன் ஆப் ஆர்க்கை போராளியாக சித்தரித்த படங்களில் இருந்து விலகி மதம் ஒரு அப்பாவி இளம் பெண்ணை நீதிவிசாரணை என்ற பெயரில் என்னவிதமான துன்பங்களுக்குச் சித்ரவதைகளுக்கு உட்படுத்துகிறது என்பதையே இப்படம் விரிவாகச் சொல்கிறது 15 ஆம் நூற்றாண்டில். இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே கடுமையான போர் நடந்தது. பிரான்ஸின் பல பகுதிகளை இங்கிலாந்து கைப்பற்றியது. இதனால் பிரான்ஸ் அரசனான ஏழாவது சார்லஸ், அதிகாரமற்ற பொம்மையாகியானான்.
பிரான்ஸ் நாட்டின் ‘தோம்ரிமி’ என்ற கிராமத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தாள் ஜோன். தனது தாய்நாடான பிரான்ஸ், இங்கிலாந்திடம் அடிமைப் பட்டுக் கிடப்பதை அறிந்து அதிகக் கவலை கொண்டாள் .‘தாயகத்தைக் காக்கவே நீ பிறவி எடுத்திருக்கிறாய். அதற்கான முயற்சியில் உடனே ஈடுபடு!’ என அவளது மனதிற்குள்ளாக ஒரு குரல் ஒலித்துக் கொண்டேயிருந்தது, கடவுள் தன்னை வழிகாட்டும்படியாகச் சொல்வதாக நம்பிய ஜோன் தான் ஒருமுறை கடவுளின் தரிசனத்தை கண்டதாகச் சொல்லத் துவங்கினாள் இதைப் பெற்றோர்கள் கூட நம்ப மறுத்தனர், ஊர்காரர்களோ கேலி செய்தனர் ஆனால் ‘இது கடவுளின் கட்டளை என்று உறுதியாக நின்றாள் ஜோன், இதற்காக அவள் பிரான்ஸ் அரசன் ஏழாவது சார்லஸைச் சந்தித்தாள், இங்கிலாந்தின் ஆதிக்கத்தில் இருந்து பிரான்ஸை மீட்பது தன்னுடைய வேலை என்றும், அதற்கு வழிகாட்டியாகவே தான் வந்திருப்பதாக மன்னரிடம் தெரிவித்தாள்.
தென் பிரான்ஸில் இருந்த ‘ஆர்லேன்ஸ்’ என்ற முக்கிய நகரை மீட்க, பிரெஞ்சுப் படையைத் தன் தலைமையில் அனுப்புமாறு வேண்டினாள் ஜோன். மன்னர் தயக்கத்தோடு அவளது கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்,. போர்வீரனைப்போல கவசம் அணிந்து, கையில் உருவிய கத்தியுடன், குதிரையின் மீதேறி, ஐந்தாயிரம் போர்வீரர்களுடன் புறப்பட்டாள் ஜோன். . அப்போது அவளது வயது பதினெட்டு,
கடும் போருக்குப் பின் ஜோன் ஆர்லேன்ஸ் நகரைக் கைப்பற்றினாள். அவளின் இந்த வீரச் செயலைப் பார்த்து, இவள் தெய்வீக சக்தி கொண்டவள் என்று மக்கள் கொண்டாடினார்கள்
வீரமங்கையாகத் திகழ்ந்த ஜோன் வஞ்சகத்தால் பிடிக்கபட்டு மதசபையின் நீதிவிசாரணைக்கு உள்ளானாள், உயிரோடு தீ வைத்து எரிக்கும்படியாக அவளுக்குத் தண்டனை விதிக்கப்பட்டது, மக்களை அடிமைத் தளையில் இருந்து மீட்கவந்த ஜோன் மதகுருமார்களின் சதிச் செயலுக்குப் பலியானாள்,
கார்ல் டிரையர் போராளியான ஜோனைப் படத்தில் காட்டவில்லை, சதிவலையில் சிக்கிக் கொண்டு துன்புறுத்தப்பட்ட ஜோனின் இறுதி நாட்களையே தனது களமாக்க் கொண்டிருக்கிறார், இதில் வரும் ஜோன் தெய்வாம்சத்திற்கும் மானுட வதைக்கும் நடுவில் ஊசாலடுகிறாள்
எல்லா வீரச்செயல்களும் தியாகங்களும் அதன் மதிப்பை உணராமல் ஒருநாள் பரிகசிக்கவும் அவமதிக்கவும்படும், அது தான் அதிகாரத்தின் விளையாட்டு என்பதற்கு ஜோனின் கதை ஒரு உதாரணம்
ஜோனின் விசாரணைக் காட்சிகளும் தண்டனையுமே படத்தின் மையப்பகுதி, டிரையர் கேமிரா கோணங்களின் வழியே உரையாடலின், அவசியமே இன்றி விசாரணையை பார்வையாளனின் மனதில் முழுமையாகப் பதிவு செய்து விடுகிறார், ஜோனாக நடித்துள்ள பல்கெனடியின் முகத்தில் தான் எத்தனைவிதமான பாவங்கள், இன்று ஆஸகார் விருது வாங்கிய நடிகர்களை நடிப்பின் உச்சம் என்று சொல்கிறவர்கள், ஒருமுறை மரியா பல்கெனடியின் நடிப்பைப் பார்க்க வேண்டும், அந்த முகத்தில் மேகங்கள் வானில் கடந்து போவது போல அத்தனை துல்லியமாக உணர்ச்சிகள் வெளிப்படுகின்றன, அவளது உடலே நடிக்கிறது, பெரும்பான்மை நடிகர்கள் முகத்தை மட்டுமே நடிக்கப் பயன்படுத்துவார்கள், டிரையர் நடிகரின் உடலை முழுமையாக உருமாற்றம் கொள்ளச் செய்கிறார், அந்த நடிப்பில் ஒரு துளி மிகையில்லை
ஜோனாக யாரை நடிக்க வைப்பது என்று ஆறுமாதங்களுக்கு மேலாகத் தேடி அலைந்து மரியா பல்கெனடியை கண்டுபிடித்திருக்கிறார் டிரையர், மரியா ஒரு நாடக நடிகை, மேடை நாடகம் ஒன்றில் அவளைக் கண்ட டிரையர் மறுநாள் நேரில் அணுகி ஒப்பனையில்லாத அவள் முகம் தனது கதாபாத்திரத்தோடு மிகவும் பொருந்தக்கூடியது என்று சொல்லி படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்
படத்தில் பல்கெனடிக்கு ஒப்பனைகள் கிடையாது, அவளது தலை படத்தில் மொட்டையடிக்கபடுகிறது, அடிவாங்கி கல்லில் முழஙகால் உடைய அவளே மண்டியிடுகிறாள், இந்தக் காட்சிக்காக பல்கெனடியை பலமணி நேரம் வெயிலில் மண்டியிட்டு இருக்கும்படியாக டிரையர் வற்புறுத்தினார் என்றும் ஒரு சர்சையிருக்கிறது,
படத்தில் மரியா பல்கெனடி என்ற நடிகையை நாம் காணமுடியாது, அவள் ஜோன் ஆப் ஆர்க்காகவே தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கிறார், படத்தில் விசாரணை செய்யும் முகங்களும் அதன் விசித்திர உணர்ச்சிவெளிப்பாடுகளும் தீவினையின் நிழல்களைப் போலவே இருக்கின்றன, படத்தின் ஆரம்பக் காட்சியில் ஒரு நீதிவிசாரணை செய்பவர் காதுகுடைந்து கொண்டே சத்யப் பிரமாணம் எடுத்துக் கொள்ளச் சொல்கிறார், ஜோனை நீதியின் காவலர்கள் தொடர்ந்து பரிகாசம் செய்கிறார்கள், விசாரணை என்ற பெயரில் அவளைக் கொஞ்சம் கொஞசமாக சித்ரவதை செய்யும் நீதிமான்களின் விசித்திரச் செயல்பாடுகள்.கேலி மற்றும் அருவருப்பு தரும் அவர்களின் உடல்மொழி பார்வையாளர்களை நிம்மதியற்று போகச் செய்கிறது,
படம் முழுவதும் கேமிரா சம்பிரதாயமான கோணங்களில் நிலை கொள்வதில்லை, அது உயர்ந்தும் பூமி மட்டத்திற்குக் கிழே சென்றும். விதானங்களில் அலைந்தும் மிதந்தும் படமாக்கியுள்ளது, காண்வெளியை விநோதமாக்கியதே இப்படத்தின் முதற்சிறப்பு. Rudolph Mate படத்தின் ஒளிப்பதிவாளர்,
விசாரணை செய்யும் நீதிபதிகள் சில காட்சிகளில் உறைந்து போன சிலைகளைப் போலவே காணப்படுகிறார்கள், அவர்களது அசைவுகள் உருப்பெருக்கியின் அடியில் காண்பது போல மிக துல்லியமாக மிகுந்த அண்மையில் தோன்றுகின்றன,ஜோனின் முகம் விசாரணையின் போது எல்லாக்கோணங்களில் இருந்தும் காட்டப்படுகிறது, பெரும்பான்மைக் காட்சிகளில் நாம் காண்பது ஒன்றுக்குமேற்பட்ட கோணங்களையும் அதன்வழியே காட்டப்படும் பொருள்களின் அண்மைத்தோற்றமுமே. இருளும் ஒளியுமாக அந்த முகங்கள் மாயம் போல திரையில் தோன்றி மறைகின்றன . கேமிராவிற்குச் சிறகுகள் முளைத்து தன்விருப்பம் போல பறந்து சென்று படமாக்கினால் எப்படியிருக்கும் என்பதற்கு இப்படமே சாட்சி, ஒவ்வொரு காட்சியையும் பலமுறை டிரையர் படமாக்கியிருக்கிறார்,படப்பிடிப்பில் எல்லா நடிகர்களும் அவர்களுக்கான உடை அணிந்து எப்போதும் தயாராக இருக்க வேண்டும், ஒரு சிறிய முக அசைவிற்காக கூட டிரையர் நாள்கணக்கில் செலவிட்டிருக்கிறார், ஒரு நடிகர் முகத்தை மேலும் கீழுமாக ஆட்டுவதை மட்டுமே இரண்டு நாட்கள் படமாக்கியிருக்கிறார், நடிகர்களின் மனதிற்குள் கதாபாத்திரம் வேர் ஊன்றி அதிலிருந்து நடிப்பு வெளிப்பட வேண்டும் என்பதையே டிரையர் வலியுறுத்துகிறார், சில நடிகர்கள் அவரது இந்தக் கெடுபிடி தாங்க முடியாமல் ஒடிப்போயிருக்கிறார்கள், தான் விரும்பியபடி செட் அமையாவிட்டால் படப்பிடிப்பை நிறுத்திவிடுவார், அவரது படத்தில் நிழல்கள்கூட நடிக்கின்றன என்று ஒரு விமர்சகர் எழுதியிருந்த்து உண்மையே
படத்தில் தலைகீழாக நெருப்பில் தொங்கவிடப்படும் காட்சியில் நடிகர்களே அதை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார், காரணம் உணர்ச்சிகள் நிஜமாக இருக்க வேண்டும் என்பதே, துல்லியம். நூறு சதவீத முழுமை என்று ஒவ்வொரு காட்சியையும் உருவாக்க முனைந்த காரணத்தால் அவர் புகழ் பெற்ற இயக்குனராக இருந்த போதும் பல ஆண்டுகாலம் அவருக்குப் படமே கிடைக்கவில்லை,சினிமா பத்திரிக்கையாளராக வாழ்வைத் துவக்கி, சப்டைட்டில் எழுதுபவர் . சினிமா நிர்வாகி. சினிமா உதவி இயக்குனர், எடிட்டர் என்று பல ஆண்டுகாலம் ஸ்டுடியோவில் பணியாற்றி இயக்குனர் ஆனதால் அவருக்கு சினிமாவின் மீதான ஈடுபாடு என்பது அதீதமானது,அவரது படங்களில் நடித்தவர்களில் பெரும்பான்மையினர் தொழில்முறை சாராத நடிகர்கள், ஆகவே அவர்களைப் பயிற்றுவித்து நடிகர்களாக்க வேண்டும் , படப்பிடிப்புக்குச் சென்ற பிறகே இந்தப் பயிற்சிகள் தொடரும், அதனால் நிறையப் பொருட்செலவும் நாட்களும் அதனால் பொருளாதாரப் பிரச்சனைகள் உருவாகியிருக்கின்றன, டிரையர் அதை ஒரு போதும் கண்டுகொள்ளவேயில்லை, தான் விரும்பியதைத் திரையில் கொண்டுவர அவர் ஒரு ரிங் மாஸ்டரைப் போல கடுமையாகவே நடந்து கொண்டார் என்கிறார்கள் ,
மரியா பல்கெனடி ஜோன் ஆப் ஆர்க் படத்திற்குப் பிறகு வேறு எந்தப்படத்திலும் நடிக்கவேயில்லை, அதன் தேவை இனி என்ன இருக்கிறது என்று நினைத்திருக்க கூடும், ஆனால் இந்த ஒரு படத்தின் மூலம் அவளுக்காகச் சினிமாவில் நிரந்தரமான இடமொன்றை டிரையர் உருவாக்கித் தந்துவிட்டார்.இப்படம் போலவே தான் சூன்யக்காரிகளை மதவிசாரணை என்ற பெயரில் பிடித்து நீதிவிசாரணை செய்து உயிரோடு எரித்த வரலாற்றை Day of Wrath என்ற படமாக டிரையர் இயக்கியிருக்கிறார், அதுவும் மிகுந்த சர்சைக்கு உள்ளானது
டிரையர் படங்களின் மையக்கதை எப்போதுமே நிர்கதியை எதிர்கொள்ளும் கதாபாத்திரத்தின் துயரநாடகமே, கருணையும் இரக்கமும் இல்லாத உலகில் மனிதர்கள் சித்ரவதையின் மூலம் தங்களது மனதில் உள்ள குரூரங்களை வெளியே நடமாட விட்டு சந்தோஷம் அடைகிறார்கள் என்கிறார், இப்படங்களை கடவுளின் இருப்பு குறித்த கேள்விகளை எழுப்பும் அறிவுவாத சினிமாவாகவே இன்று எடுத்துக் கொள்கிறார்கள்,ஜோன் ஆப் ஆர்கில் கடவுளின் முன்னால் தான் இத்தனை தண்டனைகளும் சித்ரவதைகளும் நடைபெறுகின்றன என்பது போலக் காட்சி மிக உயரமான இடத்தில் இருந்து பார்வையாளனுக்குக் காட்டப்படுகிறது ,இதனால் மதவாதிகள் இப்படத்தினை கடுமையாக விமர்சனம் செய்தார்கள், பல இடங்களில் படம் திரையிட அனுமதிக்கபடவேயில்லை
குறிப்பாக பெண்களின் மீதான வன்முறை பற்றியே டிரையர் அதிகம் கவனம் கொள்கிறார், தண்டனை தருவதன் வழியே பெண் உடல் காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வருகிறது, பாவம், புனிதம் என்ற பெயரில் கலாச்சாரக் கெடுபிடிகள் அவளை ஒரு குற்றவாளியாக்கி அவளது பாலின அடையாளத்தை அழித்து முடக்குகிறார்கள், என்பதையே இரண்டு படங்களும் சுட்டிக்காட்டுகின்றன,The Passion of Joan of Arc இந்தப் படத்தின் பாதிப்பில் தான் சில வருசங்களுக்கு முன்பு மெல்கிப்சன் பேஷன் ஆப் கிரைஸ்ட் திரைப்படத்தை உருவாக்கினார், அதை அவரே தனது நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார், Joan of Arc படத்தின் இன்னொரு வடிவத்தை பிரஸான் இயக்கியிருக்கிறார்டிரையரின் The Passion of Joan of Arc படத்தின் மூலப்பிரதி முறையாக காப்பாற்றப்படாமல் போகவே காலவோட்டத்தில் நெருப்பால் அழிந்து போய்விட்டது, ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு டென்மார்க்கில் உள்ள ஒரு மனநலக்காப்பகம் ஒன்றின் காப்பறையை காலி செய்த போது அதில் இப்படத்தின் ஒரு பிரதி இருப்பதைக் கண்டுபிடித்தார்கள்,
மனநலக் காப்பகத்தில் வேலை செய்த மனநலமருத்துவர் ஒருவருக்கு இப்படம் அனுப்பபட்டிருக்கிறது, எதற்காக அவருக்குப் படத்தின் பிரதி அனுப்பட்டது என்ற விபரங்கள் தெளிவாகயில்லை, ஆனால் திறக்கப்படாத அந்தப் பெட்டியினுள் டிரையரின் படத்தின் ஒரு பிரதி கண்டுபிடிக்கப்பட்டு, அதிலிருந்து இன்று டிஜிட்டில் மூலம் மறுபிரதிகள் உருவாக்கபட்டிருக்கின்றது.டிரையர் நாற்பத்தைந்து வருசங்கள் சினிமாவில் பணியாற்றி 14 படங்களே இயக்கியிருக்கிறார், ஒவ்வொரு படத்திற்கும் அவர் சந்தித்த பிரச்சனைகளும் நெருக்கடிகளும் அவரை சினிமாவை விட்டு வெளியே துரத்தவே முயற்சித்தன, ஆனால் டிரையர் எல்லா நெருக்கடிகளையும் தாண்டி சினிமாவை தன் வாழ்நாள் முழுவதும் நேசித்தபடியே இருந்தார்.பெரும்பான்மை மௌனப்படங்கள் இன்று பார்வையாளர் இன்றி ஆவணக்காப்பகங்களில் முடங்கியிருக்கின்றன, சார்லிசாப்ளின் ஒருவரது மௌனப்படங்களே இன்றும் அதற்கான பார்வையாளர்களை கொண்டிருக்கிறது, மற்றவை வெறும் காட்சிப்பொருட்களே,மௌன சினிமாவின் மகத்தான சாதனையான The Passion of Joan of Arc திரையில் எழுதப்பட்ட ஒரு காவியம், அதன் இருப்பு தூரத்து நட்சத்திரம் போல ப்ரகாசமாக ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறது, அந்த வெளிச்சத்தில் மனித துயரின் மீதான அக்கறையும் அன்பும் கசிந்தபடியே இருக்கிறது
.
No comments:
Post a Comment