TRICHY LOGANATHAN -
SINGER BEGINING WITH.....
நகைத்தொழில் செய்துவந்த திருச்சி சுப்பிரமணிய ஆசாரி, மலைக்கோட்டை அருகில் நிர்வகித்து வந்த விநாயகர் ஆலயத்தில் ஆண்டுதோறும் கச்சேரி நடத்துவார். அதைக் கேட்டு ரசித்த மகன் லோகநாதனுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்து, பாட்டில் மோகம் பிறந்தது. நடராஜ பிள்ளையிடம் சேர்த்து, மகனை சங்கீதம் கற்கவைத்தார் சுப்பிரமணியம். பின்னர் தனது அண்ணன் மகன் எம்.எம்.மாரியப்பா மூலம் நாடகத்தில் சேர்த்துவிட்டார். ராஜபார்ட் நடிகராக உயர்ந்தார் லோகநாதன்.
கலைஞர் கைவண்ணத்தில் வந்த 'ராஜகுமாரி'யில்தான் லோகநாதனின் முதல் குரல்வண்ணம் பளிச்சிட்டது. எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில், எம்.எம்.மாரியப்பா எம்.ஜி.ஆருக்கு குரல் கொடுக்க, நம்பியாருக்காக பாடினார் இவர். 'காசினி மேல் நாங்கள் வாழ்வதே சுக வாழ்வுதான்...' என்ற பாடல் அது. தொடர்ந்து 'அபிமன்யு' படத்தில் யூ.ஆர்.ஜீவரத்தினத்துடன் சேர்ந்து, 'இனி வசந்தமாமே வாழ்விலே...' என்ற பாடலைப் பாடினார். இசை எஸ்.எம்.சுப்பையா நாயுடு என்றாலும், இந்தப்பாட்டுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்று சொல்லப்படுகிறது.
இவருக்கு பெரும்புகழ் வாங்கித்தந்த பாடல் 'வாராய் நீ வாராய்...'. அந்தப்பாடல் படத்தில் இடம்பெறுமா என்ற குழப்பம் ஆரம்பத்தில் வந்திருக்கிறது. 'மந்திரிகுமாரி' படத்தை தயாரித்த டி.ஆர்.சுந்தரம், 'உச்சக்கட்ட காட்சியில் இந்தப்பாடல் வருவது ரசிகர்களுக்கு போரடிக்கும். எனவே இதை வெட்டிவிடலாம்' என்று சொல்லியிருக்கிறார்.
'இந்தப்பாடல் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பாடலை நீக்கிவிடாமல் வெளியிடுவோம். ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், தூக்கிவிடலாம்' என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார் இசையமைத்த ஜி.ராமநாதன். பாடலுடன் படம் வெளியானது. ரசிகர்களின் பெருத்த வரவேற்பு கிடைத்ததில், பாடல் வென்றது. லோகநாதன் மீது வெற்றியின் வெளிச்சம் விழுந்தது. அதே படத்தில் ஜிக்கியுடன் இணைந்து பாடிய 'உலவும் தென்றல் காற்றினிலே...' பாடலும் இவரது பெயரை ரசிகர்களின் காதுகளிலெல்லாம் உலவவிட்டது.
லோகநாதனின் பாட்டுத் தலையில் தங்கத் தலைப்பாகை கட்டிவிட்ட பாடல், 'கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்...'. 'மாயா பஜார்' தெலுங்கு வடிவில், இந்தப் பாடலை இசையமைப்பாளர் கண்டசாலாவே பாடியிருந்தார். தமிழ்ப்பதிப்பிலும் அவரே பாடுவதாக ஏற்பாடு. பாடினார்.
உச்சரிப்புத் திருத்தத்துக்காக லோகநாதனின் உதவியை நாடியிருக்கிறார்கள். இவர் பாடிய விதம், ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வந்திருந்த இந்திப்பாடகர் முகேஷ் உள்பட அத்தனை பேருக்கும் பிடித்துப்போனது. அந்த ராட்சஸ பசிப்பாடல் லோகநாதனின் புகழுக்கு விருந்து படைத்து விலாசம் கொடுத்தது. 'தூக்குத்தூக்கி' படத்தில் பாடுவதற்காக முதலில் இவரிடம்தான் பேசினார்கள். Êசம்பளப் பேரம் சரிப்பட்டு வராததால் இவர் சம்மதிக்கவில்லை. 'மதுரையிலிருந்து ஒரு பையன் வந்திருக்கிறான்.
அவனைப் பாடவையுங்கள்' என்று டி.எம்.சௌந்தரராஜனை அடையாளம் காட்டினார். பாடினார் டி.எம்.எஸ். பணமும் கிடைத்தது, பேரும் கிடைத்தது. 'பானை பிடித்தவள் பாக்கியசாலி' படத்தில் டி.எஸ்.துரைராஜுக்கு இவர் பாடிய 'புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே...' தமிழரின் கல்யாண வீடுகளின் தவிர்க்கமுடியாத பாடலாகி இவருக்கு புகழ் சேர்த்துவருகிறது.
'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் 'என்று தணியுமிந்த சுதந்திர தாகம்...', 'வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம்' என்ற இவரது பாடல்களைக் கேட்ட பெருந்தலைவர் காமராஜர், 'இசைத்தென்றல்' என்ற பட்டத்தை வழங்கிப் பாராட்டியிருக்கிறார். மதுரை சோமுவின் கச்சேரியில் மெய்மறந்து, தனது வெள்ளி வெற்றிலைப் பெட்டியை பரிசளித்ததில் லோகநாதனுக்குள் இருக்கும் இசை ரசிகனைக் காணலாம். வாழ்க்கை நடத்த சிரமப்பட்ட ஒரு நடிகருக்கு தங்க மோதிரத்தை தானமாகக் கொடுத்ததில் இவரது ஈகைக் குணத்தை அறியலாம்.
முதிர்ந்த பாடகர்களின் இசைநிகழ்ச்சி 1981ல் சென்னைப்பல்கலைக்கழக மண்டபத்தில் நடந்தது. 67 வயதில் குரல் குன்றாமல் பாடி, கைதட்டல்களைப் பரிசாகப் பெற்றார் லோகநாதன். 'வண்ணக்கிளி'யில் பி.சுசீலாவுடன் இணைந்து பாடிய 'அடிக்கிற கைதான் அணைக்கும்...', 'தைபிறந்தால் வழிபிறக்கும்' படத்தில் கே.வி.மகாதேவன் இசையில், கண்ணதாசனின் 'ஆசையே அலைபோலே...', 'ஆரவல்லி' படத்தில் பட்டுக்கோட்டையாரின் 'சின்னக்குட்டி நாத்தனா..' ஆகிய எண்ணிக்கையில் குறைவான பாடல்கள் என்றாலும், ரசிகர்களின் காதுகளையும், மனதையும் நிறைத்தவர் லோகநாதன்.
நெல்லைபாரதி
No comments:
Post a Comment