Tuesday 26 May 2020

K.V.MAHADAVAN - SOFT HEARTED MUSIC DIRECTOR



K.V.MAHADAVAN  - 
SOFT HEARTED MUSIC DIRECTOR


.‘நல்ல காலம்’ பொறக்குது!

கே.வி. மகாதேவனின் இசை யமைப்பு தொடர்ந்து வளர்ந்துகொண்டுவந்ததற்கு சில காரணங்கள் இருந்தன. இசையில் அவர் தனது மேதாவிலாசத்தைக் காட்ட நினைக்காமல், மக்களுக்கு இசை போய் சேர வேண்டும் என்று நினைக்கக் கற்றுக்கொண்டது ஒரு முக்கிய காரணம்.

ஆனால் மக்களுக்கு இந்த வகையில் போய் சேரும் இசை, பாமரத்தனமாக இல்லாமல் அதில் சில செறிவான அம்சங்கள் இருக்கும்படியும் அவர் பார்த்துக்கொண்டார்.

மகாதேவனின் எளிமையும், அன்பும், அமைதியும், இசையின்  மெருகும், தயாரிப்பாளர்களை அவரிடம் ஈர்த்தன. இவற்றுடன், பணம் இவ்வளவு தந்தே ஆகவேண்டும் என்று அவர் என்றும் கண்டிஷன் போட்டதிலை. ‘மதனமோகினி’ எடுத்த எம்.எல்.பதி வெறும்கையில் முழம்போடுவதில் வல்லவர்! ‘மதனமோகினி’யை அடுத்து, ‘நல்ல காலம்’ என்ற படத்துடன் அவர் மீண்டும் மகாதேவனை நாடினார்.

தன்னுடைய ஆரம்ப காலத்திலும் சரி, பிரபலமான பின்பும் சரி, இத்தகைய தயாரிப்பாளர்களுக்கும் இசையமைத்துக் கொடுக்க மகாதேவன் தயங்கியதில்லை. அவருடைய இசையின் பிரவாகம் ஜீவநதியாக ஓடத்தொடங்கிவிட்டது. சிலர்  சரியான மரியாதை செலுத்தி தங்களுக்கான இசையைப் பெற்றுச் சென்றார்கள். சிலர் எந்தத் தடையும் இல்லாமல் இசையின் சீர்களை அள்ளிச் சென்றார்கள்!

‘நல்ல காலம்’ எடுத்த ஜெயசக்தி பிக்சர்ஸ் நிறுவனத்தில் எம்.எல். பதியுடன் டி.எஸ். பாலையாவும் இணைந்திருந்தார். ‘நல்ல காலம்’ படத்தில் அது வெளிப்படையாகக் கூறப்படவில்லை. ஜெயசக்தி பிக்சர்ஸின் அடுத்தத் தயாரிப்பான ‘நல்ல வீடு’ படத்தில் பதியும் பாலையாவும் இணைத் தயாரிப்பாளர்களாகக் குறிக்கப்பட்டார்கள் (ஆனால் ‘நல்லவீ’ட்டிற்கு மகாதேவன் இசையமைக்கவில்லை). எப்படியும், பதியும் பாலையாவும் ‘நல்ல காலம்’ படத்தில் இணைந்து நடித்தார்கள்.

ஜமீந்தார்களை சூழ்ந்திருப்பவர்கள் செய்யும் சூழ்ச்சிகளை மையப்படுத்தியது ‘நல்ல காலம்’. அப்படி பாதிக்கப்படுவர், ஜமீன்தார் குலசேகரன் (எம்.எல்.பதி). அவரை ஆட்டிப் படைப்பவன், மூர்த்தி (டி.எஸ். பாலையா). ஜமீந்தாரின் ஆஸ்திக்கு சொந்தக்காரர்களான ஜமீந்தாரின் மகனும் மருமகளும் (எம்.கே.ராதா, பண்டரி பாய்), இதனால் சென்னை நகரில் படாத பாடு படவேண்டிவருகிறது. அவர்களுக்கு உதவியாக இருக்கிறார், விசுவாசமுள்ள வேலைக்காரரான ரங்கண்ணா (என்.எஸ். கிருஷ்ணன்). ‘சும்மா இருக்காதுங்க’ என்று பாடலையும் அவர் பாடுகிறார்.

ஜே. சின்ஹாவும் கே. வேம்புவும் இணைந்து இயக்கிய ‘நல்ல காலம்’ படத்தின் ஒரு கட்டத்தில், தன்னுடைய குழந்தையின் உதட்டை தன்னுடைய நெற்றியிலிருந்து வழியும் ரத்தத்தைக் கொண்டு தாய் நினைக்கவேண்டிய நிலை வருகிறது. ஏழ்மையின் எல்லை,  படத்தில் இப்படிச் சித்தரிக்கப்பட்டது. சிலருக்கு இது சித்ரவதையாகத் தோன்றியது. பண்டரிபாய் முதலில் காணும் மகிழ்ச்சியும், பின்பு அனுபவிக்கும் சோகமும் படத்தில் அழகாக வெளிப்படும்படி, கே.வி. மகாதேவன் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்தார்.

சந்தோஷத்தில் பாடப்படும், ‘வாழ்வு மலர்ந்து மணம் வீசிடுதே’ என்பதில் இந்திப் பாடலின் சாயல் தெரிந்தாலும், குதித்தோடும் ஒரு தெளிவான, அழகான நடையில் பாடலை அமைத்தார் மகாதேவன். தட்டில் இனிமையாக செய்துவைக்கிற லட்டுக்களைப் போல், சொற்கள் குதித்தோடிவரும்படி செய்துவிடுவார் மகாதேவன். அவருடைய தொடர் வெற்றிகளுக்கு இந்த ‘லாலித்யம்’ இன்னொரு முக்கிய காரணம். இந்த விஷயத்தில் அவருக்கு அமைந்த முத்திரை இந்தப் பாடலிலும் தெரிந்தது. சோகப்பாடலான, ‘மனமே, உன் வாழ்வில் நீ இன்பமே எந்நாளில் காண்பாயோ’, அப்படியொன்றும் கவ்விக்கொள்ளும் பல்லவியைக் கொண்டதாக இல்லை. ஆனால் இந்தப் பாடலுக்கும் மகாதேவன் தன்னுடைய தொடுப்பில் ஒரு நடைவிசேஷத்தைக் கொடுக்கிறார். சுபபந்துவராளி ராகமும், வாத்திய இசை சேர்ப்பில் சோகத்திற்கு செறிவூட்டும் ஹவாயன் கிட்டாரின் இணைவும், வருத்தத்தைக் காட்ட மிகவும் பொருத்தமாக அமைகின்றன.

பண்டரிபாயைப் போன்ற மென்மையான நாயகிக்கு, பாலசரஸ்வதியின் வெல்வெட்டினும் மிருதுவான பின்னணிக்குரல் மிகவும் பொருத்தமாக அமைந்தது. ஐம்பதுகளில் இப்படியெல்லாம் கண்ணீர் நாயகியாக நடித்த பண்டரிபாய், பிறகு எம்.ஜி.ஆர்., சிவாஜி,  ரஜினிகாந்த் முதலியோர் உச்சியில் வைத்துக் கொண்டாடும் லட்சியத்தாயாகத் தமிழ் சினிமாவில் பல காலம் வலம் வந்தார்.

சொத்துக்கு உரிமையுள்ள ஜமீந்தாரின் மகன் அதை இழந்து தவிப்பதை, ராமபிரான் ஆட்சியைத் துறந்து காட்டுக்குப்போகும் சம்பவத்துடன், ‘நல்ல காலம்’ ஒப்பிட்டது. இதற்கு, ‘கோலாகலமாகக் கொண்டாடுவோம்’ என்ற ராமாயண நாடகப் பாடல் பயன்பட்டது. பின்னாளில் வரப்போகும், ‘லவகுசா’வின் ஈடு இணையற்ற ‘ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே’ பாடலுக்கான முன்னோட்டமாக இது அமைந்தது.

இந்தப் பாடலும், ‘நல்ல காலம்’ படத்தில் மறக்கமுடியாத இன்னொரு பாடலாகிய, ‘வாழ்வின் கடமையை மறந்து நீ வாழாதே’ என்பதும், ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த ஆண்டாள் என்ற பாடகியால் பாடப்பட்டவை. என்.சி. வசந்தகோகிலத்தை அடியொற்றி வந்த இந்தப் பாடகியைப் பல இசையமைப்பாளர்கள் புறக்கணித்தார்கள். ஆண்டாளின் குரல்நயம் வெளிப்படும்படியான வாய்ப்பைக் கொடுத்தார் மகாதேவன். ‘வாழ்வின் கடமையை’ப் பாடலில் ஆண்டாளுடன் தனித்தனியாக இணையும் ஆண்குரல்களில் மகாதேவனும் இருந்தார்.

சில வருடங்களுக்கு முன் மறைந்த ஆண்டாள், கே.வி.மகாதேவனைக் குறித்து எனக்குத் தந்த பேட்டியில், ‘‘நல்ல குரல் வளமும் இசை ஞானமும் நிறைந்த மியூசிக் டைரக்டராக மகாதேவன் இருந்தார். மிக அன்பாகவும் மரியாதையாகவும் பழகினார். அவருடைய இசையமைப்பில், வார்த்தைக்கு ஏற்ற ஸ்வரம் இருந்தது. ராகத்திற்கு ஏற்ற ஜீவன் இருந்தது,’’ என்று கூறினார்.

அறுபதுகளில், பெண் குரலில் அமைந்த பாடல் என்றால்  எல்லாம் பி.சுசீலாதான் என்ற நிலை வந்தது. மகாதேவனும் இந்தப் போக்கிற்கு அடிபணியவேண்டி வந்தது. ஆனால் ஐம்பதுகளில் பல பெண் பின்னணிப்பாடகிகள் வலம் வந்தார்கள். ‘நல்ல கால’த்திலும் இது தெரிந்தது. பாலசரஸ்வதி, ஆண்டாள் ஆகியோரைத்தவிர, கே. ராணி (‘காந்தம் போல்’ என்ற சிருங்கார நடனப் பாடல்), என்.எல். கானசரஸ்வதி (நல்ல புத்தி கூறும், ‘கண்ணாலே காண்பதும் பொய்யே’ என்ற தத்துவப் பாடல்) ஆகியோரும் பாடினார்கள்.

படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் நடித்ததால், டி.ஏ.மதுரமும் அவருடன் நடித்ததோடு, சுதந்திர பாரதத்தில் பெண்கள் ஏற்கும் பற்பல புதிய கடமைகளை, ‘பாரத நாட்டின் கண்கள்’ என்ற பாடலில் இசைத்தார். இப்படி மகாதேவன் முன்னேறிக் கொண்டிருந்தபோது, எம்.ஏ. வேணுவிடமிருந்து அடுத்த படத்திற்கான வாய்ப்பு வந்தது.

No comments:

Post a Comment