Saturday 23 May 2020

#WorldTurtleDay








#WorldTurtleDay


ஆமைகளுக்காக தம் கிராமத்தையே தந்த ஒடிசா மக்கள்... ஒரே வாரத்தில் குவிந்த 4,07,914 முட்டைகள்! #WorldTurtleDay


.மனிதர்களைவிட ஆமைகளுக்கே கடற்கரையின்மீது அதிக உரிமை உண்டு. அந்த உரிமையை அங்கீகரித்து, புர்ணப்ந்தா கிராமத்தில் வாழும் மக்கள் தங்கள் நிலத்தைப் பங்குனி ஆமைகளோடு பங்கு போட்டு வாழ்கின்றனர்.

இன்று (மே 23-ம் தேதி) உலக ஆமைகள் தினம். 2000-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் உலகளவில் வாழ்கின்ற நீர்வாழ் மற்றும் நிலவாழ் ஆமை வகைகளைப் பாதுகாக்க வேண்டுமென்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த இந்த உலக ஆமைகள் தினம் ஒவ்வோர் ஆண்டும் மே 23-ம் தேதியன்று கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில், உலகம் முழுவதும் செயல்படுகின்ற சூழலியல் ஆர்வலர்களும் ஆமை ஆய்வாளர்களும் அதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் வகுப்புகளையும் நடத்தி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் ஆமைகளின் முக்கியத்துவத்தை புரியவைக்க முயற்சி எடுக்கின்றனர். அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டு ஒரு கிராமத்தோடு இணைந்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர்தான் ஆமை மனிதர் என்றழைக்கப்படும் ஒடிசாவைச் சேர்ந்த ரமீந்திரநாத் சாஹூ.

முட்டையிடுகின்ற பங்குனி ஆமை
முட்டையிடுகின்ற பங்குனி ஆமை

ஒடிசா மாவட்டத்திலுள்ள கஞ்சம் என்ற மாவட்டத்தில் அமைந்துள்ளது புர்ணப்ந்தா என்ற கடலோர கிராமம். அங்கு வாழும் ரபீந்திரநாத் சாஹூ என்ற மனிதருடைய வாழ்வில் ஒரு முக்கியமான லட்சியம் உண்டு. அந்தப்பகுதி கடற்கரைக்கு முட்டையிட வருகின்ற பங்குனி ஆமைகளைப் (Olive ridley) பாதுகாக்க வேண்டுமென்பதே அவருடைய அந்த லட்சியம். அவருடைய கிராமம் அமைந்துள்ள ருஷிகுல்யா கடற்கரைக்கு ஒவ்வொரு வருடமும் முட்டையிட வரும் பங்குனி ஆமைகள் நம்முடைய சென்னைக் கடற்கரையில் சந்திப்பதைப் போலவே பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றன. அவற்றுடைய முட்டைகள் களவாடப்படுகின்றன. முட்டையிலிருந்து வெளிவரும் ஆமைக்குஞ்சுகள் இரவு நேரத்திலுள்ள அதீத விளக்கொளிகளால் குழம்பி கடலை நோக்கிச் செல்லாமல் நிலப்பகுதியை நோக்கி வந்து சாலையில் அடிபட்டு இறப்பதும் காக்கை, நாய் ஆகியவை தூக்கிச் செல்வதும் அங்கு வாடிக்கையாக இருந்தது.


இத்தகைய பிரச்னைகளிலிருந்து பங்குனி ஆமைக்குஞ்சுகளைப் பாதுகாப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் ரபீந்திரநாத் சாஜூ. முதன்முதலில் 1994-ம் ஆண்டில் அவர் இந்த வேலையில் களமிறங்கினார். இந்தியக் காட்டுயிர் ஆய்வு மையத்தில் கடல் ஆமை பாதுகாப்புத் திட்டத்தை முன்னெடுத்தபோது அதில் தன்னையும் ஒரு பகுதியாக ரபீந்திரநாத் இணைத்துக்கொண்டார். இந்திய காட்டுயிர் ஆய்வு மையத்தின் ஆமை ஆய்வாளர் பிவாஷ் பாண்டவ் அவரை இதில் இணைத்துள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும், பங்குனி ஆமைகள் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை முட்டையிட கரைக்கு வருகின்றன. அவை சென்னை கடற்கரையிலிருந்து ஒடிசா கடற்கரை வரை பரவலாக வந்து முட்டையிட்டுச் செல்கின்றன. அப்படி வருகின்ற ஆமைகள் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் முட்டையிட்டுச் செல்கின்றன. ஒரு பங்குனி ஆமை, கரைக்கு வந்து கடற்கரை மணலில் குழி தோண்டி, சுமார் 50 முதல் 200 முட்டைகள் வரை இடுகின்றது. 2 முதல் 2.5 அடியே வளரக்கூடிய இவை, கடல் ஆமை வகைகளிலேயே சிறிய ஆமை வகையாக அறியப்படுகின்றன. அதன் ஓடு இதய வடிவில் இருப்பதாலும் ஆலிவ் பச்சை நிறத்தைக் கொண்டிருப்பதாலும் அவை ஆங்கிலத்தில் `ஆலிவ் ரிட்லி’ (olive ridley turtle) என்றழைக்கப்படுகின்றன.

கூட்டுக்குள் தட்பவெப்பநிலை அதிகமாக இருந்தால் ஆண் ஆமைகளும் சற்றுக் குறைவாக, குளிர்ச்சியாக இருந்தால் பெண் ஆமைகளும் பிறக்கின்றன.
உலகளவில் 80 நாடுகளின் கடல் பகுதியில் இவை வாழ்கின்றன. மெக்ஸிகோ, இந்தியா, நிகாராகுவா, கோஸ்டாரிகா என்று பல்வேறு நாடுகளில் அவை முட்டையிடக் கரை சேர்கின்றன. இந்தியக் கடற்கரைகளில் மட்டுமே சராசரியாக ஆண்டுக்கு 5,21,000 கூடுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அவற்றில் லட்சக்கணக்கான முட்டைகளை இட்டுச்செல்லும் பங்குனி ஆமைகள் ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட கடற்கரைக்கே திரும்பிவந்து முட்டையிடுவதாகவும் கூறப்படுகின்றது. இதுகுறித்து இன்னும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுவரும் நிலையில், ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட கடற்கரைக்கு வருவது முன்பு வந்த அதே பங்குனி ஆமைதானா என்ற சந்தேகமும் ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பங்குனி ஆமைகள் பெருங்கடலில் இனப்பெருக்கம் செய்கின்றன. பெண் ஆமைகள் இனப்பெருக்கக் காலம் முழுக்கவே ஆண் ஆமையின் விந்தணுக்களைத் தன்னுடைய கர்ப்பப்பையில் சேமித்து வைத்திருக்கும். சீரான இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக முட்டைகளை உற்பத்தி செய்து முடித்தபிறகு, கடற்கரைக்கு வந்து முட்டையிடுகின்றன.


பொதுவாக, எந்தக் கடற்கரையில் பிறந்ததோ அதே கடற்கரைக்கு வந்து முட்டைகளை இட்டுச் செல்வதாகக் கருத்துகள் நிலவுகின்றன. நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான மாலை நேரங்களிலும் இரவு வேளைகளிலும் நூற்றுக்கணக்கான பங்குனி ஆமைகள் கடற்கரைக்கு முட்டையிட வருவதைப் பார்க்கமுடியும். அப்படிக் கரைக்கு வந்து குழிதோண்டி முட்டையிட்ட உடனேயே அவை மீண்டும் கடலுக்குத் திரும்பிச் சென்றுவிடும். முட்டைகள் அடுத்த 50 முதல் 60 நாள்களில் பொறிந்து ஆமைக் குஞ்சுகள் வெளியேறித் தாமாகக் கடலுக்குள் திரும்பும்.

உலக ஆமைகள் தினம்
உலக ஆமைகள் தினம்
Pixabay
தட்பவெப்ப நிலை ஆமைகளின் குரோமோசோம்களைப் பாதிக்கிறது. கூட்டுக்குள் தட்பவெப்பநிலை அதிகமாக இருந்தால் ஆண் ஆமைகளும் சற்றுக் குறைவாக, குளிர்ச்சியாக இருந்தால் பெண் ஆமைகளும் பிறக்கின்றன. வெப்பமயமாதல் காரணமாக, கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளின் தட்பவெப்பநிலை அதிகமாகிக் கொண்டிருப்பதால் சமீபகாலமாக ஆண் ஆமைகளே பிறந்துகொண்டிருக்கின்றன என்று சில ஆய்வுமுடிவுகள் கூறுகின்றன. இது அவற்றின் இனப்பெருக்க விகிதத்தைப் பாதிப்பதோடு, எதிர்காலத்தில் அவை பிழைத்திருப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைக்கின்றது. அப்படிப் பிறக்கும் ஆமைக்குஞ்சுகளும்கூட பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றன. அவை பொதுவாகப் பிறந்ததும் கடலுக்குள் சரியாகச் செல்லக் காரணம் நட்சத்திர ஒளி. அதாவது, இரவு நேரத்தில் நட்சத்திரங்கள் மற்றும் நிலவின் ஒளி கடல்நீரில் பட்டுப் பிரதிபலிப்பதால் அவை, நிலப்பகுதியைவிடக் கொஞ்சம் வெளிச்சமாகத் தெரியும். இந்த வெளிச்சம்தான் பங்குனி ஆமைக் குஞ்சுகளுக்கு வழிகாட்டி. ஆனால், கடந்த சில பத்து ஆண்டுகளில் கடலோரப் பகுதிகளில் பெரிய பெரிய பங்களாக்களும் சொகுசு விடுதிகளும் வந்துவிட்டதால், கடல்பகுதியைவிட அதிக வெளிச்சத்தோடும் அதிக ஓசையோடும் நிலப்பகுதி இருக்கின்றது. இதனால், நிலத்தைக் கடலோடு குழப்பிக் கொள்ளும் அவை, எதிர்த் திசையில் வந்துவிடுவதால் சாலையில் அடிபட்டோ அல்லது காக்கை, நாய் ஆகியவற்றின் இரையாகியோ இறந்துவிடுகின்றன.


ஜெல்லி மீன்கள், இறால், நண்டு, பூஞ்சை ஆகியவற்றைச் சாப்பிடும் ஆமைகள், இனப்பெருக்க வயதை எட்டுவதற்கு 13 ஆண்டுகள் ஆகின்றன. இவற்றின் முட்டைகளைத் திருடி விற்கவும் இவற்றை வேட்டையாடவும் பலரும் முயல்கின்றனர். அந்தக் காரணங்களால் 1998 முதல் 2008-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், அவற்றின் எண்ணிக்கை 32 சதவிகிதம் குறைந்தது. இந்த ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கவே, இந்திய காட்டுயிர் ஆய்வு மையம் பங்குனி ஆமைப் பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டுவந்தது. சென்னையில் எப்படி பல்வேறு ஆர்வலர்கள் இணைந்து பங்குனி ஆமை முட்டைகளைச் சேகரித்து அவற்றைப் பாதுகாக்கப்பட்ட அடைப்பிடத்தில் அதே தட்பவெப்பநிலையில் பராமரித்து பொறிக்க வைத்து கடலில் விடுகின்றனரோ அதேபோன்ற பாதுகாப்பு முயற்சிகளை ஒடிசாவிலும் மேற்கொள்ளத் தொடங்கினார்கள்.

கடல் ஆமைகள் பாதுகாப்பு என்பது வெறுமனே ஒரு பொழுதுபோக்கு கிடையாது. அது ஓர் இலக்கு.
ரமீந்திரநாத் சாஹூ
ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான பங்குனி ஆமை முட்டைகளை ருஷுகுல்யா கடல் ஆமைப் பாதுகாப்புக் கமிட்டியினர் பாதுகாக்கின்றனர். அந்தக் கமிட்டியின் தலைவராகத் தற்போதுள்ள ரமீந்திரநாத், ``கடல் ஆமைகள் பாதுகாப்பு என்பது வெறுமனே ஒரு பொழுதுபோக்கு கிடையாது. அது ஓர் இலக்கு. ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆமைகள் இங்கு கரைசேர்கின்றன. அதில் பலவும் மீன் பிடிக்கும் டிராலர் வலைகளில் சிக்கி உயிரிழக்கின்றன. அவற்றிலிருந்து தப்பித்துக் கரை சேரும் ஆமைகளைப் பாதுகாக்க நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம்" என்றார். இந்த ஆமைகள் பல நூற்றாண்டுகளாகக் கடற்கரைக்கு முட்டையிட வருகின்றன. அந்த முட்டைகளிலிருந்து பிறந்து கடலுக்குச் செல்லும் ஆமைகள் வளர்ந்தவுடன், மீண்டும் அதே கரைக்கு அவை தம் சந்ததிகளை விதைக்க வருகின்றன. இது பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையான செயல்பாடு.

மனிதர்களைவிட அவற்றுக்கே கடற்கரையின்மீது அதிக உரிமை உண்டு. அந்த உரிமையை அங்கீகரித்து, ஒடிசாவின் ருஷுகுல்யா கடற்கரை கிராமங்களில் வாழும் மக்கள் தங்கள் நிலத்தைப் பங்குனி ஆமைகளோடு பங்கு போட்டு வாழ்கின்றனர். அந்த மக்களையும் ஆமைகள் பாதுகாப்பில் ஈடுபடுத்தி அவற்றைப் பாதுகாப்பதில் முன் நிற்கிறார் ரபீந்திரநாத் சாஹூ.

Olive Ridley Turtle
.
அந்த மக்களே, ஆமைகள் முட்டையிட்டுச் சென்றவுடன் இரவு பகலாக சுற்றி முட்டைகளைச் சேகரித்து கடற்கரையிலேயே அடைப்பிடம் தயார் செய்து அதில் பாதுகாப்பான முறையில் அதே தட்பவெப்பநிலையில், தாய் ஆமை வைத்துச் சென்ற அதே பதத்தில் பராமரிக்கின்றனர். அப்படி வைத்தவற்றை முட்டைகள் பொறிக்கும் வரை பாதுகாக்கவும் செய்கின்றனர். 45 முதல் 50 நாள்கள் கழித்து ஆமைக் குஞ்சுகள் வெளிவந்தவுடன், அவற்றைப் பத்திரமாகக் கடலில் விடுகின்றனர்.

வரலாற்று ரீதியாகவும் சரி, சூழலியல்ரீதியாகவும் சரி, கலாசாரரீதியிலும் சரி கடல் ஆமைகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. கடல் ஆமைகள் மட்டுமன்றி, ஆறு, ஏரி, குளம், கண்மாய் ஆகியவற்றில் வாழ்கின்ற நன்னீர் ஆமைகளும் சூழலியல் ரீதியாகப் பெரும் பங்காற்றுகின்றன.

ஆசிய பிரவுன் ஆமை என்ற ஆமை வகை, விதைப் பரவலில் பங்கு வகிக்கின்றது. நன்னீர் ஆமைகள் நீர்வாழ் தாவர வகைகளைச் செழுமையாக்குவதில் பங்கு வகிக்கின்றன. பல வேட்டையாடி உயிரினங்களுக்கு உணவாக இருக்கின்றன. நீர்நிலைகளில் அதிகரிக்கும் நீர்வாழ் தாவரங்கள், பூச்சிகள், மீன்கள் ஆகியவற்றை ஆமைகள் சாப்பிடுகின்றன. கடலிலும் சரி, மற்ற நன்னீர் நீர்நிலைகளிலும் சரி நீர்வாழ் ஆமைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்வது அந்தச் சூழலியல் ஆரோக்கியமாக இருப்பதற்கான ஓர் அறிகுறியாகச் சூழலியல் துறையில் சொல்லப்படுகின்றது.

நன்னீர் ஆமைகள்
நன்னீர் ஆமைகள்
Pixabay
உலக ஆமைகள் தினமான இன்று, இந்த ஆமைகள் குறித்து விழிப்புணர்வு பெறுவதும் அவற்றைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள, ரபீந்திரநாத் சாஹூ போன்ற சூழலியல் ஆர்வலர்களைப் பாராட்டுவதுமே அளப்பரிய சூழலியல் சேவையைச் செய்யும் ஆமைகளுக்கும் அவற்றைக் காக்கும் பாதுகாவலர்களுக்கும் நாம் செய்யும் மரியாதை. இந்த ஆண்டில் மட்டுமே, ருஷிகுல்யாவில் சுமார் 800,000 முட்டைகளைப் பங்குனி ஆமைகள் இட்டுச் சென்றுள்ளன. மார்ச் 14 முதல் 21-ம் தேதி வரை மட்டுமே, 4,07,914 முட்டைகள் கிடைத்துள்ளன. முந்தைய ஆண்டுகளைவிட இந்த ஆண்டு முட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது உண்மைதான். இதேநிலை எதிர்காலத்திலும் அதிகரிக்க வேண்டும் என்பதே, சூழலியலாளர்கள் மற்றும் காட்டுயிர் ஆர்வலர்களின் நோக்கமாக உள்ளது. உலக ஆமைகள் தினமான இன்று அதற்குத் தேவைப்படுகின்ற சிறு சிறு செயல்பாடுகளை நம்மால் முடிந்தவரை மேற்கொள்வோம் என்று நமக்கு நாமே உறுதிமொழி ஏற்போம்.

விகடன் பரிந்துரைக்கும் மற்ற கட்டுரைகள்...

No comments:

Post a Comment