HUMOUROUS ACTRESS OF TAMIL CINEMA
.தமிழ்த் திரையின் பெண் நகைச்சுவை நடிகைகள் பா.ஜீவசுந்தரி வாசகசாலை
.பொதுவாக இங்கு பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்ற தவறான கன்ணோட்டம் இருக்கிறது. பெண்களுக்கு நன்றாக நகைச்சுவை வரும். பெண்களைப் போல நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் கிடையாது. பெண் இயக்குநர் உஷா, ‘ராஜா மந்திரி’ என்ற நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். அது அவருடைய முதல் படம். இயல்பான நகைச்சுவையை வெளிப்படுத்திய ஒரு படம். பெண்களுக்கு இயல்பாகவே நகைச்சுவை வரும் என்பதற்கு இயக்குநர் உஷா ஒரு உதாரணம்.
நகைச்சுவை என்பது ஒரு உணர்வு தானே. அது ஆணுக்கு வரும் ஆனால் பெண்ணுக்கு வராது என்று சொல்வதற்கெல்லாம் எந்த முகாந்திரமும் இல்லை. நகைச்சுவை உணர்வு எல்லோருக்கும் வரும்.
என் மனைவி- சாரங்கபாணி கிராமப்புறங்களின் பக்கம் சென்று பார்க்க வேண்டும். அங்கிருக்கும் கிழவிகளிடம் பேச்சு கொடுத்துவிட்டு மீண்டு வந்துவிட முடியாது. அந்த அளவுக்குத் தங்கள் நகைச்சுவையால் கிழித்துத் தொங்கவிட்டு விடுவார்கள். அந்த அளவிற்கு நகைச்சுவை உணர்வு அவர்களிடம் மேலோங்கி இருக்கும். பெரும்பாலான பெண்களுக்குத் துயரமான வாழ்க்கைbதான். ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு தான். வாய் விட்டு அதிகம் சிரிக்கக்கூடாது:. சத்தமாகப் பேசக்கூடாது என எல்லாக் கட்டுப்பாடுகளும் இருந்தாலும் அதையும் மீறி அவர்கள் சிரிப்பார்கள்; சிரிக்க வைப்பார்கள். ஏனெனில் அவர்கள் துயரமான வாழ்க்கையிலிருந்து மீள்வதற்கான ஒரே வடிகால் இந்த நகைச்சுவை உணர்வு தான். அது இருப்பதனால் தான் அவர்கள் வாழ்க்கைப்பாடு சீரான தளத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. காலங்காலமாகவே, அதிலும் தமிழ் சினிமா பேச ஆரம்பித்த காலத்திலிருந்தே நகைச்சுவை கொடிகட்டிப் பறந்திருக்கிறது. யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள் நகைச்சுவை நடிகர்கள் என ஆரம்பகால தமிழ் சினிமாவில் எடுத்துக் கொண்டால் என்.எஸ் கிருஷ்ணனும் காளி N ரத்தினமும் நினைவுக்கு வருவார்கள்.
ஆனால், அந்த இரண்டு நகைச்சுவையாளர்களின் பக்கத்தில் இரண்டு நகைச்சுவை நடிகைகள் இருந்திருக்கிறார்கள். காளி.என்.ரத்தினத்துடன் சி.டி ராஜகாந்தமும், N.S..கிருஷ்ணனுடன் டி.எ.மதுரமும் இருந்திருக்கிறார்கள். என்.எஸ்.கிருஷ்ணன் என்று சொல்லும்போதே டி.ஏ மதுரத்தை ஒதுக்கவே முடியாது. அவர்கள் இருவரது நகைச்சுவை என்பது சமூக அக்கறை சார்ந்த நகைச்சுவையாகவே பல படங்களிலும் இருந்தது. ‘ராஜா ராணி” படத்தில் இடம் பெற்ற ’சிரிப்பு அதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு! என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல் முடியும் போது சிரிக்காத ஒரு நபரைக் கூட பார்க்க முடியாது. அந்தப் பாடல் முடியும்போது டி.ஏ.மதுரம் சிரிக்க ஆரம்பிப்பார். அவரைத் தொடர்ந்து என்.எஸ்.கிருஷ்ணனும் ’குலதெய்வம்’ ராஜகோபாலும் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். பாடல் முடிவில் அவர்களின் சிரிப்பைக் கேட்கும் எந்த ஒரு ரசிகரும் சிரிக்காமல் இருக்கவே முடியாது. நம்மையும் அது தொற்று வியாதி போல தொற்றிக் கொள்ளும். அது மட்டுமல்ல பல படங்களில் மதுரம், கிருஷ்ணனுக்கு இணையாக நகைச்சுவைக் காட்சிகளில் நடித்திருக்கிறார். அந்த நகைச்சுவைக் காட்சிகளின் உருவாக்கத்தில் காளி. என் ரத்தினமோ என்.எஸ்.கிருஷ்ணனோ இருந்தாலும், நடிப்பு என வரும்போது ராஜகாந்தமும் மதுரமும் இணைந்து தான் நகைச்சுவை செய்திருக்கிறார்கள்.
கப்பலோட்டிய தமிழன் டி.எஸ். துரைராஜ் – முத்துலட்சுமி
ஆனால், காலங்காலமாக இங்கு என் எஸ் கிருஷ்ணன் காமெடி, நாகேஷ் காமெடி, செந்தில் காமெடி, வடிவேலு காமெடி, கவுண்டமணி காமெடி, விவேக் காமெடி என்று நடிகர்களை முன்னிறுத்தி தான் சொல்லப்படுகிறது. டி.பி முத்துலட்சுமி காமெடி, மனோரமா காமெடி, கோவை சரளா காமெடி. என்றெல்லாம் நடிகைகளை முன்னிறுத்திச் சொல்லப்படுவதில்லை. ஏனென்றால் இங்கு பெண் எப்படி இரண்டாம் படிநிலையில் நிறுத்தப்படுகிறாளோ அதே போல் தான் திரைப்படங்களிலும் பெண்கள் இரண்டாம் படிநிலைகளில் நிறுத்தப்படுகிறார்கள். அது இயல்பாக நமது ரத்தத்தில் ஊறிப்போன விஷயமாக இருக்கிறது. இது எல்லா காலகட்டத்திலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நடிக்க வரும் போதே நகைச்சுவை நடிகையாகத்தான் வர வேண்டும் என்று யாரும் இங்கு வரவில்லை. ஆனால் அப்படி அமைந்துவிட்டது. உடல் சார்ந்த குறைபாடுகள் இங்கே நகைச்சுவையாக இருக்கிறது. திரைப்படங்களில் மட்டும் என்று இல்லை நடைமுறை வாழ்க்கையிலும் கூட. ஒருவர் கீழே விழுந்து விட்டால் உடனே நமக்கு சிரிக்கத் தோன்றும். ஓடிப்போய் தூக்குவதைக் கூட நாம் சிரித்த பிறகு தான் செய்வோம். அடுத்தவரின் துன்பத்தைக் கூட ரசித்து சிரிப்பது நமக்குள் படிந்து போயிருக்கிறது.
சபாபதி – சி.டி. ராஜகாந்தம் அழகாக இருப்பவர்களை அவலட்சணமாக்கி அவர்களை நகைச்சுவையாளர்களாக காண்பிப்பது. ஒன்று அவர்கள் மிக மெலிந்த உருவத்தில் இருப்பார்கள், உதாரணமாக தயிர் வடை தேசிகன், ஃபிரண்ட் ராமசாமி, சாய்ராம், வடிவேலு வரும் போது கூட நடிக்க வந்த புதிதில் மெலிவாகத் தான் இருந்தார். அதேபோல உடல் பருமனாக இருக்கும் நகைச்சுவை நடிகர்களும் உண்டு உதாரணமாக புளிமூட்டை ராமசாமி, பயில்வான் ரங்கநாதன் இப்படி பலர் இருந்திருக்கிறார்கள் அதேபோல பெண்களில் நடிகை பிந்துகோஷ், அவரை நகைச்சுவை நடிகையாக எண்பதுகளில் கங்கை அமரன் ’கோழி கூவுது’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால்,’களத்தூர் கண்ணம்மா’ படத்த்தில் கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது போல் அப்படத்தில் பிந்துகோஷும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ’அம்மாவும் நீயே அப்பாவும் நீயே’ பாடல் காட்சியில் கமல் பாடும்பொழுது அவருக்குப் பின் வரிசையில் பிந்துகோஷ் நின்றிருப்பார். பெயரில்லாமல் வரும் பல குழந்தைகளில் அவரும் ஒருவர். அதற்குப் பிறகு அவர் ஒரு குழு நடனக்கலைஞராக மாறி பல படங்களில் பாடல் காட்சிகளில் ஆடியிருக்கிறார். நடனக் கலைஞர்களுக்கு உடலைக் கச்சிதமாகப் பேணுவது மிக அவசியம். ஆனால் துரதிருஷ்டவசமாக பிந்துகோஷிற்கு உடல் பெருத்துப் போகிறது. அதனால் அவருக்கு நடன வாய்ப்புகள் தட்டிப் போகின்றன. வேறு வழியே இல்லை என்கிற தருணத்தில், பல்லாண்டுகளாக சினிமாவில் இயங்கிக்கொண்டிருந்த ஒரு பெண் எண்பதுகளில் மீண்டும் புதுமுகம் என நகைச்சுவை நடிகையாக அறிமுகப்படுத்தப்படுகிறார். உடல் பருத்துப் போனதால் நடன வாய்ப்புகளை இழந்த ஒருவருக்கு, அதே உடல் பருமன் நகைச்சுவைக்கான முதலீடாக மாறுகிறது; முதன்மைப் படுத்தபடுகிறது. என்னே நகை முரண்..
சர்வர் சுந்தரம் படத்தில் எஸ்.என். லட்சுமி .நாகேஷ் இது பிந்துகோஷுக்கு மட்டுமில்லை, நடிகை அங்கமுத்து காலத்திலேயே தொடங்கிவிட்டது. அங்கமுத்துவைத் திரையில் பார்த்தவுடனே சிரிப்பார்கள். அவரிடம் அசாத்தியமான நகைச்சுவை நடிப்புத் திறன் இருந்தது. அவர் நடித்த படங்களை எல்லாம் பார்த்தால் அது தெரியும். அங்கமுத்து நாடகத் துறையிலிருந்து நடிக்க வந்து, சினிமா பேசாத காலத்திலேயே மௌனப் படங்களில் நடிகையாக அறிமுகமாகி, பின்னர் பேசும் படங்களிலும் தொடர்ந்து நடித்து, கதாநாயகியாகவும் நடித்தவர். மிக நீண்ட காலம் திரைத்துறையில் இயங்கியவர். ’சர்வாதிகாரி’ திரைப்படத்தில் ஏறக்குறைய வில்லி கதாபாத்திரம். அஞ்சலி தேவிக்குத் தோழியாக நடித்திருப்பார். அஞ்சலிதேவியை கண்காணிப்பதற்காக அமர்த்தப்பட்ட ஒற்றர் கதாபாத்திரம். அதிலும் கூட நகைச்சுவை இழையோட நடித்திருப்பார். பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் சில மணித்துளிகளில் வந்து போவார். அந்த நேரத்தில் கூட அவருடைய உடல்மொழியும் நடக்கும் நடை அழகும் என பிரமாதப்படுத்தி விடுவார். ’ஓர் இரவு’ படத்தில் பார்க்கலாம் சில நிமிடக் காட்சியில் கூட, ஒயிலாக ஒரு நடை நடப்பார். இடுப்பில் கை வைத்துக்கொண்டு கையை வீசி வீசி நடப்பார். இதே நடை காந்திமதிக்கும் அப்படியே பொருந்தி வந்தது. அங்கமுத்துவின் மேனரிசத்தை அப்படியே பின்பற்றினார் என்று கூட சொல்லலாம்.
நாதஸ்வர வித்வான் காலந்தோறும் நகைச்சுவை நடிகைகள் தங்கள் நடிப்பால் தமிழ் சினிமாவை சிறப்பித்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். பி.ஆர்.மங்களம் என்று ஒரு நடிகை. அவருக்கும் கூட சற்று பருமனான உடல் தான். ஆனால் அவர் பேசும் பேச்சு மிக இயல்பாக இருக்கும். கதாநாயகிகள் நாடகத்தன்மையுடன் இலக்கணம் மாறாமல், அட்சரம் பிசகாமல் பேசுவார்கள். ஆனால், நகைச்சுவை நடிகர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி மிக இயல்பான தமிழில், வட்டார வழக்கில் பேசுவார்கள். திரைக்கதை ஆசிரியர்களும் இயக்குநர்களும் இதை ஊக்குவித்திருக்கிறார்கள். ஏனெனில் இயல்பாக இருந்தால்தான் அது நகைச்சுவை. செந்தமிழில் இலக்கணமாகப் பேசுவது நகைச்சுவையாகாது என்கிற முடிவிற்கு அவர்கள் ஏற்கனவே வந்துவிட்டார்கள். அதை அடியொற்றிதான் இன்று வரை எல்லாப் படங்களிலும் இயல்பாகப் பேசுவது தொடர்கிறது, பி.ஆர். மங்களம் 1930களில் வெளியான ’அம்பிகாபதி படத்தில் என்.எஸ்.கிருஷ்ணனுடன் நகைச்சுவை நடிகையாக நடித்திருக்கிறார். ஜோடியாக அல்ல. இப்படத்தில் டி.ஏ. மதுரமும் உண்டு என்றபோதும், இருவரும் இணைந்து நடிக்காத திரைப்படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் சற்றே முகம் சுளிக்க வைக்கக் கூடிய ரகம் தான். இன்றைக்கு செய்தித்தாள்களுக்கும் ஊடகங்களுக்கும் தீனி போட்டுக் கொண்டிருக்கிற கள்ளக்காதல் (காதலில் என்ன கள்ளக்காதல்? எல்லாமே நல்ல காதல்தான் அவரவர்களுக்கும்). பற்றிப் பேசுகிற நகைச்சுவை காட்சிகள். இப்போது இதை ஊதிப் பெருக்கிப் பெரிதாகப் பேசுகிறோம் நாம். ஆனால் 1937ல் எப்படி இயல்பாக ஏற்றுக் கொண்டார்கள் அன்றைய ரசிகர்கள். அந்த படமும் நன்றாகவே ஓடி இருக்கிறது. இது குறித்து யாரும் பெரிதாக எந்த விமர்சனமும் வைத்தது போல் தெரியவில்லை. அப்படியெல்லாம் இருந்தது அந்தக் காலகட்டத்தில். ஏனென்றால் வாழ்க்கையில் இருப்பது தான் திரைப்படங்களிலும் வந்திருக்கிறது. ’பிறர் மனை நோக்காப் பேராண்மை’ என திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதியிருக்கிறார் என்றால், எல்லாமும் இருந்திருக்கிறது என்பதால் தானே எழுதுகிறார். அதேபோல சமூகத்தில் நிகழாதவை எதையும் அப்போதைய திரைப்படங்களில் காட்சிப்படுத்தவில்லை என்பதையும் உணர முடிகிறது. அப்போதைய சமூகத்தில் அது இயல்பாகவும் கடந்து செல்லப்பட்டிருக்கலாம்.
ரமா பிரபா பி.ஆர். மங்களத்தின் இயல்பான பேச்சு, வசனம் பற்றி சொல்ல வேண்டுமெனில் ’சபாபதி’ படத்தைச் சொல்லலாம். தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பப்படுகிற ஒரு படம். டி.ஆர். ராமச்சந்திரன் அப்படத்தின் கதாநாயகன். பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் மாணவர். அவருடைய அம்மாவாக பி.ஆர். மங்களம் நடித்திருப்பார். மகனுக்குப் பெண் பார்க்க செங்கல்பட்டுக்குப் போவதாகட்டும், அவருடைய கணவரிடம் பேசுவதாகட்டும் அனைத்துமே வெகு இயல்பு. “நான் பொண்ணு பார்க்க போறேன், காரை எடுத்துட்டுப் போறேன். நீங்க ரிக்ஃசா இஸ்துகினு போங்க” என்று பேசுவார். கணவர் உடனே அதிர்ச்சியாகி “என்ன நா ரிக்ஸ்சா இஸ்துகினு போறதா?” என்பார். உடனே “இல்ல ரிக்ஸ்சா வெச்சுக்கினு போங்க!” என்பார். மற்றொரு படத்தில் கூட அந்த அம்மையார் நடித்திருப்பார் (படத்தின் பெயர் நினைவில் இல்லை). ஆனால் காட்சி மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. காளி N ரத்தினமும் மங்களமும் சேர்ந்து ஒரு லாவணிப் பாட்டு பாடுவார்கள். அவ்வளவு பெரிய உடலை வைத்துக் கொண்டு குதித்துக் குதித்து கும்மியடித்து ஆடுவார் மங்களம். பார்ப்பதற்கு அவ்வளவு கலை நேர்த்தியோடு ஆடும் நாட்டுப்புறக் கலை வடிவமாகவும் அது இருக்கும். சி.டி. ராஜகாந்தமும் காளி N ரத்தினமும் பகல் வேஷக்காரர்களாக வேடமிட்டுக் கொண்டு வருவார்கள். பகல்வேஷம் என்பது பகல் நேரத்தில் வீடு வீடாகப் போய் ஆடிப் பாடுவது. வசதி படைத்த வீடுகளில் ஆடிப் பாடும்போது அதற்குப் பணம் தருவார்கள். அதற்காகவே பகலில் வேஷம் கட்டி வருவார்கள். ராத்திரியில்; வேஷம் கட்டினால் அதற்குப் பெயர் கூத்து. பகலில் ஆடிப்பாடி வந்தார்கள் என்றால் அது பகல் வேஷம். அந்தப் பகல் வேஷத்தில் அவர்கள் இருவரும் ஆடிப்பாடும் விதமும் நடிப்பும் மிகச் சிறப்பாக இருக்கும். பத்தாண்டுகள் இடைவெளியில் நகைச்சுவையாளர்கள் மாறிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். 1950களில் டி.பி.முத்துலட்சுமியும், எம்.சரோஜாவும் அப்படி வந்தவர்கள் தான். முத்துலட்சுமியும் உடல் பருத்த பெண்மணி தான். மற்ற நடிகைகளின் நடையிலாவது ஒரு நளினம் இருக்கும். டி.பி. முத்துலெட்சுமியிடம் அநத நளினம் எல்லாம் கிடையவே கிடையாது. மிக அலட்சியமாக உருண்டு போவது போல் தான் நடப்பார். ஆனால் அவருடைய நகைச்சுவைத் திறன் எந்தப் படத்திலும் சோடை போனதேயில்லை. “அதான் தெரியுமே” நகைச்சுவையை மறந்துவிட முடியுமா? தங்கவேலு பூரி சுடுவது பற்றி கேட்க, ’அதான் தெரியுமே’ என்பதும், அடுத்து என்ன எனக் கேட்க ‘அதாங்க எனக்குத் தெரியாது’ என்பதும், அவர் சொல்லிக் கொடுக்க முயலும் போது, ‘அதான் தெரியுமே’ என்று நம்மை வயிறு நோகச் சிரிக்க வைத்து விடுவார். இப்போது வரையிலும் அது ஒரு அற்புதமான நகைச்சுவைக் காட்சி. ஏ. கருணாநிதியுடன் ஏராளமான படங்களில் இருவரும் நடித்திருக்கிறார்கள். எம்.சரோஜா தங்கவேலுவுடன் பல படங்களில் இணைந்து வயிறு நோக சிரிக்க வைத்திருக்கிறார். ‘கல்யாணப் பரிசு’ படத்தின் ‘எழுத்தாளர் பைரவன்’, ‘மன்னார் & கம்பெனி’ நகைச்சுவை கிளாசிக் ரகம் என்றே சொல்லலாம் ——————————————– நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் எல்லா நடிகைகளும் நகைச்சுவை நடிகைகள் எனச் சொல்ல முடியுமா? எல்லா நகைச்சுவையாளர்களுடனும் கதாநாயகிகளும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். தங்கவேலுவுடன் நடிக்காத கதாநாயகிகள் கிடையாது. ராஜசுலோச்சனா, ராகினி, சௌகார் ஜானகி, அஞ்சலிதேவி, ஈவி.சரோஜா என எத்தனையோ நாயகிகள் அவருக்கு இணையாக நடித்திருக்கிறார்கள். அதற்காக அவர்களை நாம் நகைச்சுவை நடிகைகள் பட்டியலில் சேர்க்க முடியுமா? நகைச்சுவை அவர்களுக்கும் நன்றாக வருகிறது. இன்றைக்கும் ஊர்வசி, ரேவதி வரை அல்லது அவரைக் கடந்தும் பல நாயகிகள் நகைச்சுவை செய்துவிட்டார்கள். திரையில் சவுகார் ஜானகி தோன்றினாலே “ஐயோ வந்துட்டா அழுமூஞ்சி” என்பார்கள் பெண்கள். ஏனென்றால் சௌகார் ஜானகி நடித்த ஆரம்பகாலப் படங்கள் பெரும்பாலும் அழுகை அழுகை என துயரம் தோய்ந்த முகத்துடன் நடிக்கக் கூடிய ஒரு நடிகையாக இருந்தார். ’எதிர்நீச்சல்’ படத்தில் வெடுக் வெடுக்கென்று பேசும் பட்டு மாமி கதாபாத்திரம், ’தில்லுமுல்லு’ வயதுக்கு மீறிய சாகசங்கள் செய்யும் குறும்புத்தனம் மிக்க அம்மா கதாபாத்திரம் என பல நகைச்சுவை கதாபாத்திரங்களைச் செய்திருக்கிறார். அதேபோல பானுமதி கதாநாயகியாகத் தான் அறிமுகமானார். ஆனால் ’அறிவாளி’, ’மணமகன் தேவை’ போன்ற படங்களில் எல்லாம் அவரை பார்த்து ரசித்து சிரிக்கலாம். அது மட்டுமல்ல, பல படங்களில் அவருடைய வசனம் பேசும் பாணியே ஒருவித எள்ளல் தன்மையுடன் நடிப்பும் நகைச்சுவை கலந்ததாகவே இருக்கும். ஒவ்வொரு காலகட்டத்திலும் பல கதாநாயகி நடிகைகள் நகைச்சுவை நடிகைகளாகவும் தங்கள் பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார்கள். மனோரமா ஐம்பதுகளின் இறுதியில் தான் வருகிறார். யாருமே தொட முடியாத ஒரு உச்ச நட்சத்திரமாக அவர் நகைச்சுவையில் திகழ்ந்தார். நம் சமகால நடிகையாகவும் இருந்தவர். உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு முன்பு வரை அவர் நடித்துக் கொண்டிருந்திருக்கிறார். ’மாலையிட்ட மங்கை’ திரைப்படத்தில் முதன்முதலாக காக்கா ராதாகிருஷ்ணன் ஜோடியாக நடித்தார். அதன்பிறகு எல்லா நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். சம காலத்தில் விவேக், வடிவேலு உடன் கூட நடித்திருக்கிறார். மனோரமா உச்ச நடிகையாக திகழ்ந்த காலத்தில் 70களில் சச்சு, ரமா பிரபா போன்ற நடிகைகளும் இருந்தார்கள்.
சச்சு ஒரு கவர்ச்சிகரமான நகைச்சுவை நடிகையாகவே அறியப்படுகிறார். ஏனெனில் தமிழ்த் திரையுலகம் அவரை அப்படித்தான் பயன்படுத்திக் கொண்டிருந்திருக்கிறது. அவர் ஒரு கதாநாயகியாக நடிக்க வந்தவர். துரதிர்ஷ்டவசமாக அவர் கதாநாயகியாக நடித்த இரண்டு மூன்று படங்களும் தோல்வியடைந்ததால் நகைச்சுவை நடிப்பைத் தேர்வு செய்கிறார். அது ஒரு நல்ல விஷயமும் கூட. ஆனால், அவரைப் போல கவர்ச்சிகரமாக வேறெந்த நகைச்சுவை நடிகையும் நடிக்கவில்லை. இன்றைக்கு வரை ’காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் தவிர சச்சுவின் நகைச்சுவையைக் குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒரு படம் கூட இல்லை என்பதை மிக வருத்தத்திற்குரிய ஒரு விஷயமாகப் பதிவு செய்கிறேன். எதிர்நீச்சல் அதே காலகட்டத்தில் ரமா பிரபா மிகப்பெரிய நகைச்சுவை நடிகையாக அறியப்பட்டவர். அவர் நகைச்சுவை நடிப்பிற்கு சான்றாக எத்தனையோ திரைப்படங்களைச் சொல்லலாம். ’உத்தரவின்றி உள்ளே வா’ திரைப்படத்தில் அவர் ஏற்ற கதாபாத்திரத்திற்கு விபத்தில் பழைய விஷயங்கள் எல்லாம் மறந்து போய் போன நூற்றாண்டுப் பெண்ணாக மன்னர் காலத்துக்குச் சென்று விடுவார். ’தேனாற்றங்கரையினிலே தேன் பிறையின் நிலவினிலே.. மோகினி போல் வந்தேன் நாதா’ என பாடுவார். ’கண்ணே பாப்பா’, ‘அவசரக் கல்யாணம்’ என பல படங்கள். நேசமணி பொன்னய்யா என்கிற பேரை ’நாசமா நீ போனியா?’ என்று உச்சரிப்பதை ’அண்ணாமலை’ திரைப்படத்தில் கேட்டிருப்போம். ஆனால் இந்த நகைச்சுவையை உருவாக்கியவர் கோமல் சுவாமிநாதன். 70களில் வெளியான ’நவாப் நாற்காலி’ திரைப்படத்தில் ரமா பிரபா ஆங்கிலோ – இந்திய நர்ஸாக நடித்திருப்பார். அவருக்குத் தமிழ் சரியாக வராது. படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் நேசமணி பொன்னையா. அந்தப் பெயரைத் தான் அவர் ’நாசமா நீ போனியா’ என்று உச்சரிப்பார். இந்த நகைச்சுவையைத் தான் மீண்டும் ‘அண்ணாமலை’ படத்தில் பயன்படுத்தி இருப்பார்கள். ’இருளும் ஒளியும்’ என்றொரு படம் அதிலும் ஒரு அரைக்கிறுக்குப் பெண்ணாக அதிலும் மனித நேயமிக்க அரைக்கிறுக்காக, எல்லோரிடமும் அன்பு செலுத்தக் கூடிய பெண்ணாக நடித்திருப்பார். இது போல பல திரைப்படங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
60 – 70களில் மாதவி என்றொரு நடிகை இருந்தார். அவர் அதிகப் படங்களில் நடிக்கவில்லை; ஆனால் நாகேஷுடன் மட்டும் ’எங்க வீட்டுப் பிள்ளை’, ’அதே கண்கள்’, ’ஆயிரத்தில் ஒருவன்’ உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் பின்னர் வெளிநாட்டில் குடியேறிவிட்டார். இங்கே நகைச்சுவை நடிகைகள் பஞ்சம் இருந்ததோ என்று நமக்குத் தோன்றும் அளவு மனோரமா மட்டுமே உச்ச நடிகையாக இருந்தவர். கே.ஆர் செல்லம் என்றொரு நடிகை, 1930களில் நடிக்க வந்தவர். ’என் மனைவி’, ’வேதாள உலகம்’ படங்களில் கே.சாரங்கபாணியுடன் இணைந்து நடித்திருப்பார். கிராமங்களில் கிழவிகள் செய்யக்கூடிய நகைச்சுவைக்கு வடிவம் கொடுத்தது போன்றது தான் ’மண்வாசனை’ படத்தில் காந்திமதி ஏற்ற ஒச்சாயி கிழவி வேடம். வாயைத் திறந்தாலே ஏதாவது பழமொழியைச் சொல்லிக் கொண்டு அசல் கிராமத்துப் பென்ணைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுவார். “அந்தக் கன்னுக் குட்டிய அவுத்து வுடு; அது போய் மொற செஞ்சிட்டு வரும்” என்று இளக்காரமாகப் பேசுவார். கிராமங்களில் வயதான பெண்களிடம் இருக்கக் கூடிய நகைச்சுவைப் பேச்சின் பிரதி பிம்பம் தான் காந்திமதியின் நடிப்பு எனலாம். ’பதினாறு வயதினிலே’ படத்தில் கூட ஒரு வாயாடிப் பெண்மணியாக ’தஞ்சாவூர் தவிலாக’ உருவகப்படுத்தப்பட்டாலும் கூட அது ஒரு நகைச்சுவைப் கதாபாத்திரம் தான். ஆனால் தனது வாழ்க்கைப்பாட்டினால் பல துன்பங்களை அனுபவித்து உயிரை விடுவது போலான காட்சிகள் அமைக்கப் பட்டிருந்தாலும் காந்திமதி ஏற்ற அந்தப் பாத்திரமும் நகைச்சுவை கதாபாத்திரம் தான். கோவை சரளா 1980களில் நடிக்க வந்த நடிகை. ஆனால், அவர் நகைச்சுவை நடிகையாக அறிமுகமாகவில்லை. ஆனால், அவர் தான் ஒரு நகைச்சுவை நடிகைதான் என்று நிரூபிக்கப் பல ஆண்டுகாலம் ஆயிற்று. நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடிப்பதால் மட்டுமே நகைச்சுவை நடிகையாக அறியப்படுவதில்லை என்பதற்கு கோவை சரளா ஒரு உதாரணம். அவர் பல நகைச்சுவை நடிகர்களோடு நடித்தும் கூட அவருடைய காமெடி அவ்வளவாக எடுபடவில்லை. அவரை நகைச்சுவை நடிகை என நாம் ஒப்புக்கொள்ள நீண்டகாலம் ஆயிற்று. எத்தனையோ திரைப்படங்களில் சின்னச் சின்னக் கதாபாத்திரங்கள் செய்திருக்கிறார். ’முந்தானை முடிச்சு’, ’நூறாவது நாள்’, ’சட்டம் ஒரு இருட்டறை’, என எத்தனையோ திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருக்கிறார். அவையெல்லாம் நகைச்சுவை எனும் வட்டத்துக்குள்ளேயே வராது. இப்படி ஒருவர் தன்னை நகைச்சுவை நடிகையாக நிரூபிக்கவே நீண்ட காலம் ஆகிறது. ஆனால், கதாநாயகன் கமலஹாசனுடன் இணைந்து நடித்த ‘சதி லீலாவதி’ அவரை வேறு ஒரு உயரத்துக்குக் கொண்டு சென்றது. காதலிக்க நேரமில்லை –
சச்சு ’பசி’ படத்தில் நடித்த ’பசி’ சத்யா, அந்தப் படத்தில் அவர் செய்தது நகைச்சுவை கதாபாத்திரம். அதற்குப் பிறகு சொல்லிக் கொள்ளும்படி ஒரு திரைப்படமும் அமையவில்லை அவருக்கு. இன்னமும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இப்படி நகைச்சுவை திறன் உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய கதாபாத்திரங்கள் எப்படி அமைகிறதோ அதைப் பொறுத்தே அவர்கள் நீடித்து நிற்க முடிகிறது. இதன் காரணமாக அவர்கள் பெயர் சொன்னால் அறிந்து கொள்ளும்படியான நடிகைகளாக மட்டுமே இருக்கிறார்கள். எஸ்.என் லட்சுமி ’சந்திரலேகா’ திரைப்படத்திலிருந்து நடித்துக் கொண்டிருக்கிறார். கதாநாயகி டி.ஆர் ராஜகுமாரிக்குப் பின்னால் முரசு நடனமாடிய நூறுபேர் யார் யார் என்கிற ஆராய்ச்சியில் நான் இறங்கியதில், நான்கு பேரைத்தான் என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடிந்தது. அந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் வரும் முரசு ஆட்டத்தில் நூறு நடனக் கலைஞர்கள் ஆடியிருப்பார்கள்
அதில் ஒருவர் எஸ். என்.லட்சுமி. அந்தப் படத்தில் கதாநாயகி டி.ஆர். ராஜகுமாரிக்கு முரசு நடனத்தில் டூப் ஆக நடித்தவர் நடிகை டி.பி முத்துலட்சுமி. இதெல்லாம் எவ்வளவோ காலத்திற்குப் பிறகு தான் தெரிய வருகிறது. சின்னச் சின்ன வேஷங்களில் வெறும் ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் சம்பளத்திற்காகத் திரைத் துறைக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் நடிப்புத் திறனை நிரூபிக்க எவ்வளவு ஆண்டுகளாகிறது? எஸ்.என். லட்சுமியும் எத்தனை படங்களில் சின்னச் சின்னக் கதாபாத்திரங்கள் செய்திருக்கிறார்? அவரை யாரென்றே மக்களுக்கு பல வருடங்கள் வரை தெரியாது. சில காலத்திற்குப் பிறகு அம்மா வேடமேற்று நடிக்கத் துவங்கினார். அம்மா வேடம் போடுவதற்கென்றே பிறந்தவர்களா எல்லோரும்? வாய்ப்பு கிடைத்தால் தான் தங்கள் திறமையை நிரூபிக்க முடியும். ’சர்வர் சுந்தரம்’ படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் குணச்சித்திர வேடத்தோடு சிறந்த நகைச்சுவையையும் செய்திருக்கிறார். நாகேஷுடன் அவர் பேசும் வசனங்கள் எல்லாம் மிகவும் நகைச்சுவையாக இருக்கும். “ஏன் டா டேய், எப்போடா நீ கல்யாணம் பண்ணிக்கப் போற?’, ’இப்ப எதுக்கும்மா கல்யாணம்? சரி அப்ப விடுறா” என்று அவர் சொல்லி முடிக்கும்போது நாம் சிரிக்காமல் இருக்க முடியுமா? இன்றைக்கும் நாம் அந்தக் காட்சியை பார்த்தால் சிரிக்கிறோம். ஆனால், அதற்குப் பிறகு அவர் எந்தப் படத்தில் நகைச்சுவை ததும்ப நடித்திருக்கிறார் என யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏறக்குறைய ஐநூறு படங்களுக்கு மேல் சின்னச் சின்ன வேடங்கள் ஏற்று நடித்த எஸ்.என் லட்சுமி, மீண்டும் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில்தான் நகைச்சுவை நடிகையாக மிளிர்கிறார். அதுவரை ஏற்ற வேடங்கள் எல்லாம் அம்மா, அக்கா, அண்ணி, பாட்டி போன்ற வேடங்கள் தானே. மற்றொருவர் எஸ்.என் பார்வதி. பல திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். தமிழ்த் திரையுலகில் கதாநாயகிகளாக அறிமுகமாகி முதன்மை நாயகிகளாக இருந்தால் மட்டுமே அறியப்படுவார்கள். இல்லையெனில் அவர்கள் பத்தோடு பதினொன்றாகத்தான் ஆகிவிடுவார்கள். அப்படி எனில் அவர்களுடைய வாழ்க்கைப்பாடு, அதற்கான உழைப்பு, அதை நோக்கி செலுத்துகிற முயற்சி இவை எல்லாமே எங்கேயோ போய்விடுகிறது. அதற்காக நாம் அவர்களைப் புறக்கணித்து விட முடியுமா? ’கலாட்டா கல்யாணம்’ போல எத்தனையோ முழு நீள நகைச்சுவைத் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ரஜினி, கமல் என எல்லா கதாநாயகர்களும் முழு நீள நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அந்தப் படங்களில் அவர்களுடன் நடிக்கும் எல்லோருமே நகைச்சுவை நடிகர்கள் தான். குறிப்பாக பத்மினி, சாவித்திரி போன்ற கதாநாயகிகளும் தான். ஜெயந்தி எத்தனை படங்களில் நகைச்சுவை செய்திருக்கிறார். ஆரம்ப காலங்களில் தொடர்ச்சியாக இயக்குநர் பாலச்சந்தர் எல்லா படங்களிலும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ஜெயந்தி, நாகேஷுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். எல்லோரும் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இதில் கதாநாயகி களுக்கும் நகைச்சுவை சிறப்பாக வரும் என நாம் புரிந்து கொள்வதற்கு சௌகார் ஜானகியும் ஊர்வசியும், அவர் சகோதரி கல்பனாவையும் உதாரணமாகக் கொள்ளலாம். கல்பனா முதலில் நடித்த ’சின்ன வீடு’ பாக்கியராஜ் படத்தில் அவர் ஏற்றது நகைச்சுவை கதாபாத்திரம் அல்ல. பாக்கியராஜ் இயக்கிய பல படங்களில் நகைச்சுவை மிகுந்திருக்கும். அவருடன் நடித்த எல்லா நாயகிகளும் நகைச்சுவையாக நடித்திருக்கிறார்கள். அப்படியெனில் இங்கே எல்லோருக்குமே நகைச்சுவை வரும்.
ராஜா ராணி – என்.எஸ். கிருஷ்ணன் – டி.ஏ.மதுரம் ஆனால் தமிழ் சினிமாவில் இவர்கள் நகைச்சுவைக்குத் தான் லாயக்கு என ஒதுக்கி வைக்கப்பட்ட எத்தனையோ நடிகைகள் அவர்களுடைய பங்களிப்பை ஆற்றி தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இடத்தை பிடித்து இன்றைக்கு மதுமிதா வரை முன்னணியில் நிற்கிறார்கள். திரைத்துறை என்பது ஆண் சார்ந்த துறை என்பதால் இங்கு நகைச்சுவை நாயகர்களுடன் நடிக்கக் கூடிய நடிகைகள் எல்லோரும் நகைச்சுவை நடிகைகள். அதையும் தாண்டி நகைச்சுவை நடிகைகளாகக் கொடி கட்டிப் பறந்தவர்களே இங்கே ஜெயித்தவர்கள்.
.
No comments:
Post a Comment