Tuesday 26 May 2020

JEYALAKSHMI ( RADHA ) LEGEND SINGER BORN/ DIED MAY 26, 2014




JEYALAKSHMI ( RADHA ) LEGEND SINGER 
BORN/ DIED MAY 26, 2014



ஜெயலக்ஷ்மி [ராதா-ஜெயலக்ஷ்மி] பின்னணிப் பாடகி
மேடைக்கச்சேரிகளிலும், திரையிசைப் பாடல்களிலும் பிரபலமாக விளங்கியவர்கள் ராதா-ஜெயலக்ஷ்மி இருவரும். ஆண்கள் மட்டுமே மேடைகளில் கச்சேரிகள் செய்துவந்த 1930-களில் கர்நாடக சங்கீத கச்சேரிகளில் ஒரு புரட்சி நடக்கத் தொடங்கியது. மேடைகளில் பெண் பாடகிகள் தோன்றி இசை ரசிகர்களை ஈர்க்கத் தொடங்கினார்கள். அந்த வரிசையில் ராதா ஜெயலட்சுமி சகோதரிகள் பிரபலமான பாடும் இணையாக பவனி வந்தார்கள்.

மிக இளவயதிலேயே தங்கள் இனிய குரல் வளத்தாலும், விறுவிறுப்பான இசையினாலும் இசை ரசிகர்களைக் கவர்ந்தார்கள். ராதா-ஜெயலக்ஷ்மி சகோதரிகளில் ஜெயலக்ஷ்மிக்கு சினிமாவுக்குப் பொருத்தமான குரல் அமைந்திருப்பதை அறிந்து 1950-இல் கே.ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த ”ஏழை படும்பாடு” திரைப்படத்தில் விதியின் விளைவால் அனாதையானேன் என்ற சோகப் பாடலை பாடியபடியே திரையிசையில் காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் 1951-இல் வீணை எஸ்.பாலசந்தர் ‘கைதி’ என்ற ஒரு படத்தை எடுத்தார். இதில் பாலசந்தரே கதாநாயகன் விஜயனாக நடித்தார். இந்தப் படத்தில் ஜெயலக்ஷ்மிக்கு ஒரு பாடல் அமைந்தது. கதாநாயகன் விஜயனை
சந்தோஷப்படுத்துவதற்காக பாடும் ஒரு பாடல் We happy we cheerful we jolly. ஆங்கிலம் கலந்த பாடல். மேற்கத்திய இசையிலான பாடல். கீர்த்தனை, ஸ்வரம், என்று பழக்கப்பட்ட ஜெயலக்ஷ்மிக்குப் புதிய அனுபவம் இது. ஆனாலும் மிக நன்றாகவே பாடினார். இந்தப் பாடலில் இடையிடையே வரும் வசனங்களையும் அவரே பேசி பாடலை வெகு சிறப்பாகவே பாடியிருந்தார்.


1952-இல் ”தாய் உள்ளம்” படத்தில் ஜெயலக்ஷ்மியின் மற்றொரு வெற்றிப் பாடல் அமைந்தது. ‘போக்கிரிப்பயலே உன்னைத் தூக்கவே மாட்டேன்’ குறும்பு செய்யும் குழந்தையை நோக்கித் தாய் பாடும் பாடல். தாயின் பாசத்தோடு இயற்கையாக அமைந்த ஒரு பாடல். 1953-இல் வெளிவந்த ‘கூண்டுக்கிளி’ படத்தில் கே.வி.மகாதேவனின் இசையில் ’பாரு மகளே பாரு’ என்ற பாடலைப் பாடினார். ‘மனோகரா’ படத்தில் கலைஞர் கருணாநிதியின் பாடல் ‘சிங்காரப் பைங்கிளியே பேசு’ இதை
ஏ.எம்.ராஜாவுடன் இணைந்து பாடினார். கே.வி.மகாதேவனின் இனிய இசையில் ‘மாங்கல்யம்’ என்ற படத்தில் ’ஒட்டும் இரு உள்ளங்களை வெட்டுவது ஞாயமல்ல’ என்ற பாடலும் ஜெயலக்ஷ்மியைத் திரையிசையுலகில் வெற்றி பெறச் செய்த பாடல்களுள் ஒன்றாகும். 1954-இல் ‘எதிர்பாராதது’ என்ற படத்தில் ‘ஜெகமே நீயே அம்மா’ என்ற பாடல் சிறப்பாக அமைந்தது.
1955-இல் டவுன் பஸ், மேனகா, முல்லை வனம், காஞ்சனா போன்ற படங்களிலும் பாடியிருக்கிறார். 1950-களில் எஸ்.எம்.சுப்பையா, கே.வி.மகாதேவன், ஜி.ராமனாதன் போன்ற இசையமைப்பாளர்கள் ஜெயலக்ஷ்மிக்குத் தொடர்ந்து பாடுவதற்கு சந்தர்ப்பங்கள் கொடுத்து வந்தார்கள்.

பி.ஆர்.பந்துலு தயாரித்த படம் ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’. இந்தப் படத்தில் பாரதிதாசன் இயற்றிய பாடலான ’வெண்ணிலாவும் வானும் போலே’ என்ற பாடலை ஜெயலக்ஷ்மி மெருகூட்டிப் பாடினார். சி.என்.பாண்டுரங்கம் 1958-இல் பூலோக ரம்பை’ என்ற படத்தில் 4 பாடல்கள் பாடுவதற்கு சந்தர்ப்பம் அளித்தார். இதில் ஆசை நெஞ்சமே என்ற பாடலை ஏ.எம்.ராஜாவோடு இணைந்து பாடினார். வேதாவுக்கு இசைத்திறமையை வெளிப்படுத்த வாய்ப்புத் தந்த படம் ‘அன்பு எங்கே’. இது 1958-இல் வெளிவந்தது. இதில் இந்துஸ்தானி இசையில் அமைந்த ஒரு நடனப்பாடல் தான் “காயா பழமா சொல்லு ராஜா”.
மிகப் பெரிய பட நிறுவனமான ஜெமினியில் இரும்புத்திரை படத்தில் பக்தி மணம் கமழும் விதத்தில் ஒரு இனிமையான பாடலைப் பாடியிருக்கிறார். என்ன செய்தாலும் துணை நீயே என்ற கரஹரப்ரியாவில் அமைந்த பாடல் எஸ்.வி.வெங்கட்ராமனின் இசையில் பாபநாசம் சிவனின் பாடல். 1959-இல் மரகதம் என்ற படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையில் ’மாலை மயங்குகின்ற நேரம் பச்சை அருவிகள்’ என்ற பாடல் ரசிகர்களை மயக்கியது. இந்தியிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட ‘அக்பர்’ திரைப்படத்தில் எஸ்.வி.வெங்கட்ராமனின் இசையமைப்பில் ஒரு இனிமையான பாடலைப் பாடியிருக்கிறார்.

அம்மன் அருள், தெய்வம், நத்தையில் முத்து போன்ற படங்களில் ஜெயலக்ஷ்மி பாடிய பாடல்கள் நெஞ்சம் நிறைந்த பாடல்களாக அமைந்துவிட்டன. ஜெயலக்ஷ்மி பாடல்களைப் பாடினாலும் இசைத்தட்டுக்களில் ராதா-ஜெயலக்ஷ்மி என்றே வெளியிடப்பட்டு வந்தது. ஆதி பராசக்தி என்ற படத்தில் கே.வி.மகாதேவனின் இசையில் கவியரசு கண்ணதாசன் இயற்றிய ஒரு பாடல் ஜெயலக்ஷிமியின் திறமையை வெளிப்படுத்திய ஒரு பாடலாக அமைந்தது. ‘கொக்கு பறக்கும் அந்த குளக்கரையில்’ என்பதே அந்தப் பாடல்.
ராதா-ஜெயலட்சுமி இரட்டையர்களில் ஜெயலட்சுமி அவர்கள் 2014 மே 26 -அன்று தனது 82-ஆவது வயதில் சென்னையில் காலமானார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், வர்த்தக சேவையில் ஒலிபரப்பாகும் “இன்னிசைச் சுவடிகள்” என்ற நிகழ்ச்சியில் சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி. விசாலாக்ஷி ஹமீது அவர்கள் தொகுத்தளித்த நிகழ்ச்சியிலிருந்து; மேற்படி விவரங்கள் திரட்டப்பட்டன.

No comments:

Post a Comment