WORLD FIRST CHRISTIAN KING
CONSTANTINE 280 -337 A.D
கிறிஸ்தவ வரலாறு : 6 – உலகின் முதல் கிறிஸ்தவ மன்னன் 280-337 A.D.
முதல் கிறிஸ்தவ மன்னன் என்னும் பெருமை கான்ஸ்டண்டைன் மன்னனுக்குக் கிடைத்தது. அவனுடைய ஆட்சி, கிறிஸ்தவர்களுக்கு எதிராக வெறிகொண்ட வேங்கைக் கூட்டம் போல பாய்ந்து கொண்டிருந்த வெறுப்பு அலையை அடக்கியது. கிறிஸ்தவர்களுக்குக் குறைந்த பட்சப் பாதுகாப்பு உத்தரவாதம் கிடைத்தது. கான்ஸ்டாண்டியஸ் என்னும் ராணுவ தளபதிக்கும், ஹெலீனா என்பவளுக்கும் முறைகேடாகப் பிறந்தவன் இந்த மன்னன் என்கிறது வரலாறு. டயோக்லீஷியன் மன்னனின் மறைவுக்குப் பின் அரியணையை யார் கைப்பற்றுவது என்னும் போரில் கான்ஸ்டண்டைன் வெற்றி பெற்றான். இவன் போருக்குச் செல்லும் முன் ஒரு சிலுவையைக் காட்சி கண்டான். சிலுவை அருகே அவனுக்கு வெற்றி உறுதி என்று குறிப்பிட்டிருந்தது. அதைக் கண்ட கான்ஸ்டண்டைன் புதிய உத்வேகத்துடன் எழுந்து அரியணைப் போட்டியாளர்களை அழித்து ஆட்சியைக் கைப்பற்றினான்.
இவனுடைய ஆட்சிக் காலம் கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு என்னும் எல்லையோடு நின்று விடாமல், கிறிஸ்தவம் அல்லாதவர்களுக்கு எதிராக சட்டங்கள் முளைவிட்டன. பிற மதங்கள் பல தடை செய்யப்பட்டன. அரசினால் செய்யப்பட்டு வந்த பலிகள், வழிபாடுகள் போன்றவை நிறுத்தப்பட்டன. கிறிஸ்தவர்கள் தங்கள் போதனைகளை வெளிப்படையாகப் பேசும் நிலை உருவானது.
டயோக்லீஷியஸ் மன்னன் காலத்தில் கிறிஸ்தவர்களின் வழிபாட்டு நிலையங்கள் பல இடிக்கப்பட்டன. பல ஆக்கிரமிக்குக்கு உள்ளாயின. கான்ஸ்டண்டைன் மன்னனின் காலத்தில் அவை கிறிஸ்தவர்களால் மீட்கப்பட்டன. இந்த காலத்தில் தான் கிறிஸ்தவ ஆலயங்கள் அழகுடனும் அழகிய வேலைப்பாடுகளுடனும் கட்டப்பட்டன. மன்னன் கிறிஸ்தவன் ஆகையால் ஆலயம் கட்டுவதற்கான அனுமதி தடையின்றிக் கிடைத்தது. காண்டாண்டிநோபிள் போன்ற இடங்களில் மிகப்பெரிய ஆலயங்கள் கட்டப்பட்டன.
கிறிஸ்தவ மதத்தைப் பரப்புபவர்களுக்கும், கிறிஸ்தவ ஆலயங்களில் பணி புரிபவர்களுக்கும் அரசாங்கமே ஊதியம் வழங்கியது ! எனவே கிறிஸ்தவப் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசுப் பணிகளைப் போலாயின. மற்ற மதங்களுக்காய் செலவிடப்பட்டு வந்த பணம் குறைக்கப்பட்டது, அல்லது நிறுத்தப்பட்டது. கிறிஸ்தவப் போதகர்கள் மிகவும் மரியாதையுடன் நடத்தப் பட்டார்கள். அவர்களுக்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டது. இதனால் பொது மக்கள் பலர் கிறிஸ்தவ மதத்துக்குள் நுழைந்தனர். கிறிஸ்துவை நம்பாதவர்களும், கிறிஸ்தவ மதத்தின் மேல் ஆழமான ஈடுபாடு இல்லாதவர்களும் அரசு சலுகைகளுக்காகவும், மரியாதைக்காகவும் கிறிஸ்தவ மதத்துக்குள் ஏராளமாய் நுழையும் நிலையும் இந்த காலத்தில் நிகழ்ந்தது. இப்படி பலர் கிறிஸ்தவ மதத்துக்குள் நுழைந்ததால் அவர்களுடைய கலாச்சாரங்களும், சிந்தனைகளும் கிறிஸ்தவ மதத்துக்குள் பரவின. இது கிறிஸ்தவ மதத்தின் தனித்தன்மைக்கு பங்கம் விளைவிப்பதாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாக புனிதர்கள், அன்னை மரி போன்றவர்களுக்கு சிலைகள் நிறுவும் பழக்கம் மெல்ல மெல்ல கிறிஸ்தவத்தில் நுழைந்தது.
ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாகவும். கிறிஸ்தவ ஆராதனைகள் நடைபெறும் நாளாகவும் அறிவிக்கப்பட்டதும் கான்ஸ்டண்டைன் மன்னனின் காலத்தில் தான். அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் போன்றவை ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை பெற்றன.
ஞாயிற்றுக் கிழமை சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது !
மன்னன் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்டதால், சிலுவை அவனுக்குப் புனிதச் சின்னம் ஆனது. எனவே சிலுவை கொலைக் கருவி என்னும் நிலையிலிருந்து விலக வேண்டும் என்று அவன் நினைத்தான். சிலுவை மரணத்தைத் தடை செய்தான் ! சிலுவை இகழ்ச்சிக்குரியது என்னும் நிலையிலிருந்து விலகி வணக்கத்துக்கு உரியதாக பிரபலப்படுத்தப் பட்டது. சிலுவை கிறிஸ்தவர்களின் புனிதச் சின்னமானது !
தேவையற்ற குழந்தைகளைக் கொல்வதும், அவர்களை அடிமைகளாக விற்பதும் அந்நாட்களில் நடைபெற்று வந்தது. அதை மன்னன் தடை செய்தான். மனிதாபிமானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலையும், சமுதாய மனித உறவுகள் மேம்படும் நிலையும் இந்த தடையினால் உருவானது.
எல்லோரிலும் இறைவன் இருக்கிறான் என்னும் சிந்தனை வலுப்பெற்றது. அடிமைகளுக்குப் பல சலுகைகள் வழங்கப்பட்டன. அடிமைகள் விரும்பினால் அவர்கள் விடுதலை பெறவும் பல வழிகள் உருவாக்கப்பட்டன. அடிமைகள் என்பவர்கள் முதலாளிகள் வெட்டி வீழ்த்தி விளையாடும் பகடைக் காய்களாக இருக்கும் நிலை மாறியதில் அடிமைகள் ஆனந்தமடைந்தார்கள். அதுவரை அடிமைகள் இறந்தாலும், வாழ்ந்தாலும் யாரும் கவலைப்படவில்லை. ஆனால் இப்போது அவர்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் சட்ட ரீதியான பாதுகாப்பு தோன்றியது.
கி.பி 379ல் கிறிஸ்தவ மதத்துக்குள் ஞானஸ்நானத்துக்காய் தண்ணீரில் மூழ்கி எழத் தேவையில்லை. தலையில் தண்ணீர் ஊற்றினால் போதும் என்னும் சிந்தனை எழுந்தது. முழுக்கு ஞானஸ்நானமே சிறந்தது என்று இயேசுவே சொல்லவில்லை என்றும், சிறையில் இருப்பவர்களுக்கும், மூழ்கி எழும் நிலையில் தண்ணீர் இல்லாத இடங்களில் இருப்பவர்களுக்கும், ஞானஸ்நானம் வழங்க இதுவே சிறந்தது என்றும், ஞானஸ்நானம் என்பது ஒரு அடையாளமே, ஒருவன் கிறிஸ்துவுக்குள் மறுபடி பிறப்பதே உண்மையான கிறிஸ்தவனாகும் நிலை என்றும் சாமாதான விவாதங்கள் நிகழ்ந்தன. இந்த காலகட்டத்தில் தான் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் வழங்கும் வழக்கமும் ஆரம்பமானது.
கான்ஸ்டைன் மன்னன் கிறிஸ்தவத்தைத் தன்னுடைய மதமாகத் தேர்ந்தெடுத்தபின் ரோமப்பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட மதமாக கிறிஸ்தவம் மாறியது. ஆனால் ரோம் நகரம் பிற மதத்தினரின் கலாச்சார அடையாளங்களையே எங்கும் சுமந்திருந்தது. எதிரிகளின் பார்வையும் ரோமின் மீதிருந்து எப்போதும் அகலவில்லை, அடிக்கடி பிரச்சனைகள், போர்கள் என்று ரோம் ஒரு பாதுகாப்பற்ற நகராகவே இருந்தது. எனவே கான்ஸ்டண்டைன் மன்னன் ஒரு புதிய தலைநகரைத் தோற்றுவிக்க வேண்டும் என்று விரும்பினான். அதற்காக அவன் கிரேக்க நகரான பைசாண்டியைத் தேர்ந்தெடுத்து கான்ஸ்டாண்டிநோபிள் என்னும் அழகிய நகரை நிர்மாணித்தான். இந்த பைசாண்டி , ஆசியாவுக்கு ஐரோப்பாவுக்கும் இடைப்பட்ட இடத்தில் அமைந்திருந்தது. போர்களைப் பல ஆண்டு காலமாக சந்திக்காத இடமாகவும் இருந்தது பைசாண்டி.
இந்த காண்டாண்டிநோபிள் தான் தற்போதைய இஸ்தான்புல்.
இஸ்தான்புல்-லில் இப்போது இருக்கும் மிகப் பிரம்மாண்டமான மசூதி 1453ம் ஆண்டு துருக்கியர்கள் படையெடுக்கும் வரை கிறிஸ்தவ ஆலயமாக இருந்தது. கி.பி 537ல் ஐன்ஸ்டீனியன் என்னும் மன்னனால் புதுப்பிக்கப்பட்ட இந்த கிறிஸ்தவ ஆலயம் கான்ஸ்டண்டைன் மன்னனால் கட்டப்பட்டு ‘சான்சா சோபியா’ என்று அழைக்கப்பட்டதாகும்.
நகர் நிர்மாணிக்கப்பட்டபின் ரோமப் பேரரசு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கிரேக்க மொழிபேசிய மக்கள் வாழ்ந்த கிழக்குப் பகுதி கிரேக்கம் என்றும், லத்தீன் மொழி பேசப்பட்ட மேற்குப் பகுதி லத்தீன் என்றும் அழைக்கப்பட, ரோம் இரண்டாய் பிரிந்தது.
கான்ஸ்டண்டைன் மன்னன் காலத்தில் கிறிஸ்தவம் வளர்ந்தது. அதற்குப் பிறகு வந்த அரசர்கள் வன்முறையினால் கிறிஸ்தவத்தை வளர்க்க முற்பட்டார்கள். பிற மதத்தினரின் வழிபாட்டு இடங்களை அபகரித்தும், அவர்களை கிறிஸ்தவத்துக்குள் நுழைய கட்டாயப்படுத்தியும், அவர்களுக்கு எதிராக சட்டங்களை இயற்றியும் கொடுமைப்படுத்தினார்கள்.
கான்ஸ்டாண்டிநோபிள் கிறிஸ்தவத்தின் தலைமை இடம் என்று கான்ஸ்டண்டைன் மன்னன் தீர்மானித்திருந்தாலும், ரோமிலும் கிறிஸ்தவம் இருந்தது. அங்கே இருந்த கிறிஸ்தவத் தலைவர் மூத்தவராக இருந்ததாலும், பேதுரு முதலில் பணியாற்றிய இடம் என்பதாலும் ரோம் நகரின் கிறிஸ்தவ அமைப்பைப் போன்றே மற்ற அமைப்புகளும் இருக்க வேண்டும் என்னும் கருத்து நிலவியது. பேதுருவை இயேசு பாறை என்றழைத்து இந்தப் பாறையின் மீது எனது திருச்சபையைக் கட்டுவேன் என்றும். என் ஆடுகளை மேய்ப்பவனும், கண்காணிப்பவனும், பராமரிப்பவனும் நீ தான் என்றும் திருச்சபைக்கான முழு பொறுப்பையும் கொடுத்திருந்தார். எனவே அவர் இடத்தில் அவருக்குப் பின் வருபவரே அதிகாரத்தில் முதன்மையானவராய் இருக்க வேண்டும் என்று கருத்துக்கள் பரவலாயின.
கான்ஸ்டாண்டிநோபிள், எருசலேம், அந்தியோக்கியா, அலக்சாண்டிரியா உள்ள தலைவர்கள், அல்லது பிஷப் களுக்குக் கீழும் சபைகள் ஏராளம் இருந்தன. ரோம் தலைவரான பிஷப்புக்குக் கீழும் சபைகள் இருந்தன. ரோமில் இருந்த பிஷப் தன்னை பப்பா என்றும், மற்றவர்கள் தங்களை பாட்டிரியார்க் என்றும் அழைத்துக் கொண்டார்கள். ஒரு வகையில் உலகில் அப்போது ஐந்து போப்பாண்டவர்கள் இருந்திருக்கிறார்கள் ! இந்த ஐந்து பேருக்குமிடையே யார் பெரியவன் யார் எல்லோருக்கும் தலைவராக இருப்பது என்று ஒரு போராட்டம். காலம் செல்லச் செல்ல ரோம் மற்றும் கான்ஸ்டாண்டிநோபிள் இரண்டுக்குமிடையே தான் தலைவர் யார் என்னும் போராட்டம்! அதில் பேதுருவின் வழி வந்த இடம் என்பதால் ரோம், தன்னுடைய அதிகாரத்தை, தலைமைத்துவத்தை பிடித்துக் கொண்டது !
ரோம் திருச்சபை வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றியது. விவிலியத்தை லத்தீன் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தது கூட ரோம் திருச்சபையே. ரோமாபுரித் திருச்சபையினரிடம் சிறப்பான நிர்வாகமும், திட்டமிடுதலும் இருந்தது. அவர்கள் ஆழமான விசுவாசத்துடன் மக்கள் பணிகளிலும் அதிகமாக ஈடுபட்டார்கள். ‘நான் பசியாய் இருந்தேன் எனக்கு உண்ணத் தந்தீர்கள்’ என்னும் கிறிஸ்துவின் போதனைக்கு ஏற்ப அவர்கள் மக்கள் தொண்டுகளில் ஆர்வம் காட்டியதால் மக்கள் அவர்களை மிகவும் உயர்வாக மதித்தார்கள். பஞ்சம், நோய்கள், போர் இழப்புகள் போன்றவை நிகழும் போதெல்லாம் திருச்சபை முன்வந்து அனைத்து உதவிகளையும் செய்தது. கிறிஸ்தவர்களுக்கு மட்டுமன்றி, தன் எல்லைக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமன்றி எல்லோருக்கும் உதவி செய்தது ரோம் திருச்சபை. எனவே அது முக்கியத்துவம் பெற்று தலைமை இடமானது !
ரோம் அக்காலத்தில் மிகவும் பரந்து விரிந்த பேரரசாய் இருந்தது. கி.பி 337ல் கிறிஸ்தவ மதம் பரவ முக்கிய காரணமாய் இருந்த மன்னன் கான்ஸ்டண்டைன் மரணமடைந்தான். அதன் பின் ஆட்சிக்கு யார் வருவது என்று எழுந்த சர்ச்சையில் உள்நாட்டுக் கலவரங்கள் எழத் துவங்கின. போரிட்டு, வன்முறையிலும் தான் அரச பீடத்தை கைப்பற்ற வேண்டும் என்னும் நிலை உருவானது. இது நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று.
மன்னனின் மரணத்துக்குப் பின் சுமார் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக மேற்கு ரோம் மீது பலர் படையெடுத்து ஆக்கிரமிப்புகளை ஆரம்பித்தார்கள். நாடு மிகவும் செல்வச் செழிப்புடன் காணப்பட்டதும், நாட்டில் பலர் பணக்காரர்களாக இருந்ததும் பிற நாட்டினரைக் கவர்ந்திழுத்தது. பலர் வன்முறையாய் வந்து பல இடங்களைக் கைப்பற்றினார்கள். மேற்கு ரோமில் இருந்தவர்கள் போருக்குத் தயாராகாத நிலையில் இருந்ததால் அவர்களால் எதிரிகளின் தாக்குதலை முறியடிக்க முடியவில்லை. இதனால் மேற்கு ரோம் கான்ஸ்டண்டைன் மன்னனின் மரணத்துக்குப் பின் சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளின் சின்னாபின்னமானது. விசிகோத்ஸ், வாண்டல்ஸ், பர்கண்டியர்கள், பிராங்க்ஸ், ஹியூன்ஸ் போன்றவர்கள் அடுத்தடுத்து தாக்கியதில் கி.பி 486ல் மேற்கு ரோம் சிதறுண்டது. சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் இருந்த ஒரு மிகப் பெரும் பேரரசு தன்னுடைய வலிமை இழந்து கவிழ்ந்தது.
.
No comments:
Post a Comment