LOCUST SWARM INVASION
வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன ?
வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இவ்வுலகத்துக்குப் புதியதல்ல. இஸ்ரயேலர்களிடமிருந்த எகிப்தியர்களைக் காக்க எகிப்தியர்களின் நிலத்தின்மீது கடவுள் வெட்டுக்கிளிகளை ஏவியதான குறிப்புகள் பைபிளில் காணக்கிடக்கின்றன.
.
கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில் locust swarm எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களின் விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருவது அதிர்ச்சியளிக்கிறது.
வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை
இப்போது விளைநிலங்களை ஆக்கிரமித்திருக்கும் வெட்டுக்கிளிகள் நாம் சாதாரணமாக நம் பகுதிகளில் காணும் வெட்டுக்கிளிகளுக்கு நெருங்கிய உறவினர்கள். ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை மிகவும் விசித்திரமானது.
பொதுவாகத் தனித்தனியாகக் (Solitary Phase) குறைந்த எண்ணிக்கையில் ஆங்காங்கு நிலத்தில் காணப்படும் இந்த வெட்டுக்கிளிகள் எப்போதும் ஆபத்தானவை அல்ல. வறட்சி ஏற்படும் காலகட்டங்களில் ஆங்காங்கே உதிரிகளாய் இருக்கும் இவை பசுமையான சிறிய நிலப்பரப்புகளுக்கு வந்து சேர்கின்றன. அவ்வாறு பல வெட்டுக்கிளிகள் ஒரே இடத்தில் நெருங்கி உணவுதேட நேரும்போது அவற்றின் நரம்புமண்டலம் தூண்டப்பட்டு செரட்டோனின் (serotonin) என்னும் வேதிப்பொருள் அதிக அளவில் அதன் உடலில் உற்பத்தி செய்யப்படுகிறது. அப்போதுதான் அவை ஆபத்தான அச்சுறுத்தும் உயிரினங்களாக மாற்றம் பெறுகின்றன.
வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தும் படிநிலை
இந்த செரட்டோனின் உடலில் சுரந்த சில மணி நேரங்களில் அவற்றின் குணநலங்களில் பெரும் மாறுதல் ஏற்படுத்துகிறது. தனித்து வாழும் வெட்டுக்கிளிகள் அப்போதுதான் சமூகமாய் ஓத்துழைத்து வாழும் கூட்டு வாழ்வுக்குத் (Gregarious phase) தூண்டப்படுகின்றன. அவற்றின் உணவு உண்ணும் பழக்கம், நடத்தை, வேகம் என அத்தனையும் மாற்றமடைகின்றன. இந்நிலையில் சரியான ஈரப்பதமும் ஈரமண்ணும் வாய்க்கப்பெற்றால் அவற்றின் முட்டைகளிலிருந்து வெளிவரும் அடுத்த தலைமுறை வெட்டுக்கிளிகள் உருவ அமைப்பிலும் நிறத்திலும் ஏன் மூளை அளவிலும்கூட மாறுதல் பெறுகின்றன. இந்த மாற்றங்கள் முட்டைகள் பொரித்தபின் அவற்றின் வளரிளம் பருவத்தில் (Nymph) நடைபெறுகின்றது. பெற்றோரிடமிருந்து முற்றிலும் தோற்றத்திலும் நடத்தையிலும் வேறுபட்ட இந்தத் தலைமுறை பெரிய மூளை, குட்டையான கால்களுடன் அதிக தூரம் பயணிக்கும் தகவமைப்பைப் பெறுவதோடு பெரும் அழிவு சக்தியாக உருவெடுக்கின்றது.
.
பலநூறு முட்டைகளையிடும் ஒரு வெட்டுக்கிளி தன் வாழ்நாளில் மூன்று முறைகள் வரை முட்டையிடுகிறது. இவை இலைகளில் மட்டுமின்றி மண்ணிற்கு அடியிலும் முட்டையிடுகின்றன. பெரும் கூட்டமாக மிகக்குறைந்த கால அவகாசத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையில் பெருகும் இந்த வெட்டுக்கிளிகள் தம் கண்ணில் படும் பசுமை அத்தனையையும் அழித்து உண்டபடி பெரும்பசியுடன் கூட்டமாய் அடுத்தடுத்த பசுமை நிலங்களை நோக்கி நகர்கின்றன. இவற்றின் கண்ணில்படும் எந்தத் தாவரமும் தப்ப முடியாது. இவை ஒரு நாளைக்கு நூறு கிலோமீட்டர்களுக்கும் மேல்கூட பயணிக்க வல்லவை. தொடர்ந்து பசுமையை நோக்கி பயணித்துக்கொண்டே இருக்கும் இவை செங்கடலையே தரையிறங்காது தாண்டக் கூடியவை. சில ஆண்டுகள்கூட தொடர்ந்து அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டே தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கும் திறன் கொண்டவை. பாலைவன லோகஸ்ட் என்ற வெட்டுக்கிளி இரண்டரை மாதங்கள் முதல் ஐந்து மாதங்கள்வரை வாழக்கூடியது.
ஆச்சரியகரமாக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பின் அவை தாமாகவே தமது முந்தைய solitary phase ஐ அடைந்து மீண்டும் ஆபத்தற்ற ஒன்றாக மாறிவிடுகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெட்டுக்கிளி இனங்களில் வெறும் 22 இனங்களே இந்த Locust swarm எனப்படும் அழிவு சக்தியாக மாற்றம் பெறும் திறனுள்ளவை.
உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை அழித்து பத்தில் ஒரு பங்கு உலக மக்கட்தொகையை பட்டினிக்குத் தள்ளும் அளவுக்கு அவை திறன் பெற்றவை என்று National Geographic இவற்றைப்பற்றி பெரும் கவலைதரும் தகவலைப் பதிவு செய்கிறது.
இந்த ஆபத்தை உலகம் எப்படிக் கையாளுகிறது?
அடுத்ததாக இந்த ஆபத்தை எப்படி உலகம் எதிர்கொள்கிறது என்று பார்க்கும்போது ஏறக்குறைய கொரோனா போன்ற கையறு நிலையே காணப்படுகிறது. இந்த வெட்டுக்கிளிகளின் விரைவான இனப்பெருக்கம், தொடர்ந்த வலசை (migration), பெரும் பரவல் மற்றும் எண்ணிக்கையால் இவற்றைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலான ஒன்றாக இருக்கிறது. தற்போதைய சூழலில் வானிலிருந்து தெளிக்கப்படும் வேதிப் பூச்சிக்கொல்லிகளே உலகம் முழுதும் இதற்கு தீர்வாகக் கருதப்படுகிறது. இந்திய அரசும் மாலத்தியான் எனப்படும் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் (!) தாக்கி அழிக்கும் நச்சை இந்த வெட்டுக்கிளிகளுக்கு எதிராகப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இது அதிகம் நீர்க்கப்பட்டுதான் (Ultra Low Volume) பயன்படுத்தப்பட வேண்டும் என்றாலும் இதன் நச்சுத்தன்மை விவசாயத்துக்கு நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்தே அழிக்கும் என்பதோடு அதன் நச்சு எச்சம் நீரிலும் நிலத்திலும் கலக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்த வெட்டுக்கிளிகள் விரைவில் தொடர்ந்து இடப்பெயற்சி அடைந்து விடுவதாலும் பல சதுரகிலோமீட்டர் தொலைவுகளுக்கு இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் காணப்படுவதாலும் இந்த பூச்சிக்கொல்லித் தெளிப்பு பெரிய அளவில் பயனளிப்பதில்லை. இந்நேரத்தில் இயற்கையிலேயே பூச்சிகளை கட்டுப்படுத்தும் பறவைகள் மற்றும் விலங்குகளை நாம் பெருமளவில் ஒழித்து விட்டதையும் வருத்தத்துடன் நினைவுகூர வேண்டியிருக்கிறது.
விழிப்புடன் இருக்கிறதா தமிழகம்?
ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு அரேபியாவைக் கடந்து ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பயணிக்கும் இந்த வெட்டுக்கிளிகள் சாதாரணமாக தம் வலசையை இராஜஸ்தானின் மேற்கு எல்லையோடு முடித்துவிடுவது வழக்கம். ஆனால் 27 ஆண்டுகளுக்குப்பிறகு இவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பதை நாம் நம்முடைய உணவுப் பாதுகாப்பின் மீதான பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இவை தமிழகத்துக்கு வராது என்று அரசு கூறினாலும் இவற்றின் இடப்பெயற்சியை சரியாக யாராலும் கணிக்கமுடியாது என்பதே அறிவியல் உண்மை. இவை தமிழகத்துக்கு வராது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது என்று பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் சொல்வதைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் இதுகுறித்த பேட்டி ஒன்றில் பேராசிரியர் அவர்கள் தமிழக அரசும் விவசாயிகளும் தகுந்த முன்னேற்பாடுகளுடன் இருக்கவேண்டும் என்று குறிப்பிடுவதோடு வேதிப் பூச்சிக்கொல்லிக்கு மாற்றாகச் சில பாதுகாப்பான மாற்றுகளையும் முன்வைக்கிறார்.
.
கொரோனா விஷயத்தில் முதலில் அரசு மெத்தனமாக இருந்துகொண்டு பின்னர் கைவிரித்தது போன்றில்லாது இப்போதே நம்மிடமிருக்கும் மக்களையும் மண்ணையும் நேசிக்கும் நிபுணர்களிடம் கலந்தாலோசித்து உரிய தயாரிப்புடன் இருப்பதே விவேகமானது. ஆபத்து நெருங்க வாய்ப்புகள் இருக்கும் நேரத்தில் எவ்வித தாமதமும் இன்றி சில சோதனை முயற்சிகளைச் செய்து முடித்துவிடுவதே விவேகமானது.
தொடரும் அச்சுறுத்தல்களும் காலநிலை மாற்றமும்
வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இவ்வுலகத்துக்குப் புதியதல்ல. இஸ்ரயேலர்களிடமிருந்த எகிப்தியர்களைக் காக்க எகிப்தியர்களின் நிலத்தின்மீது கடவுள் வெட்டுக்கிளிகளை ஏவியதான குறிப்புகள் பைபிளில் காணக் கிடக்கின்றன. அக்காலத்திலேயே வெட்டுக்கிளிகள் ஒரு அச்சுறுத்தும் சக்தியாகவே இருந்திருக்கின்றன. எனினும் இன்றைய அதிகரிக்கும் புவி வெப்பமும் காலநிலை மாற்றமும் இந்த அழிவு சக்திக்கு இன்னும் அதிக சாதகமாக இருப்பதை அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆபத்தற்ற solitary phase இல் வாழும் வெட்டுக்கிளிகளை ஆபத்தான Gregarious phase க்கு மாற்றுவது அவற்றின் சுற்றுச்சூழலும் காலநிலையுமே. அதிகரிக்கும் கடல்களின் வெப்பநிலை அதிக ஈரப்பதத்தையும் அபூர்வமான புயல்களையும் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய தீபகற்பத்தில் ஏற்படுத்தி இந்த வெட்டுக்கிளிகளின் Gregarious phase க்கு மேலும் மேலும் தூண்டக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.
கொரோனா உட்பட உலகெங்கும் நடக்கும் விசித்திரமான தொடர் நிகழ்வுகள் நமக்குச் சுட்டிக்காட்டுவது ஒன்றே ஒன்றுதான். காலநிலை மாற்றம். உலக வெப்பமயமாதலின் விளைவுகளை நம் தலைமுறை ஏற்கெனவே சந்திக்கத் தொடங்கிவிட்டது. உலக வெப்பமயமாதல் பூச்சிகளின் பெருக்கத்திலும் நடத்தியிலும் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் ஏற்கனெவே எச்சரித்திருக்கின்றார்கள்.
வரலாறு காணாத மழை, வரலாறு காணாத வெள்ளம், வரலாறு காணாத வெப்பம், வரலாறு காணாத வறட்சி, என புதிய புதிய மொழியில் இந்த பூமி மனிதனிடம் ஏதேதோ பேச முயல்கிறது. கூர்மதியுள்ள மனித சமூகமும் அதை ஆளும் வல்லரசுகளும் எப்போது பூவுலகின் குரலுக்குச் செவிசாய்க்கப் போகிறார்கள்?
– பூவுலகின் நண்பர்கள்
ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பிய படைவெட்டுக்கிளிகள் 300 கிலோமீட்டர் நீளமுடைய செங்கடலை ஒரே வீச்சில் கடந்து வந்துள்ளன.
'நீங்கள் எவ்வளவு சிறியவராக இருந்தாலும், மொத்தமாகக் கூட்டு சேர்ந்து ஒற்றுமையாகச் செயல்பட்டால் உங்கள் பலம்தான் அதிகமாக இருக்குமெ'ன்று பலரும் சொல்வதுண்டு. அது இப்போது சின்னஞ்சிறு வெட்டுக்கிளி விஷயத்தில் உண்மையாகிக்கொண்டிருக்கிறது. இரண்டு கிராம் எடையேயுடைய சிறு வெட்டுக்கிளி, லட்சக்கணக்கில் ஒன்று சேர்ந்ததால், ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வரை பெருஞ்சேதங்கள் விளைந்துகொண்டிருக்கின்றன.
'காலநிலையும் சுற்றுச்சூழலும் இந்த வெட்டுக்கிளிப் படைக்குச் சாதகமாக இருந்தால், அடுத்த சில மாதங்களில் இவற்றின் படை, ஒரு நகரத்தின் அளவுக்கு அதிகரித்துவிடும்' என்று உணவு மற்றும் விவசாயப் பாதுகாப்புக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு சொல்கின்றது. பாலைவனப் படைவெட்டுக்கிளிகளாக அறியப்படும் இவை, ஆப்பிரிக்காவின் ஏழை நாடுகளான சோமாலியா, எத்தியோப்பியா போன்ற நாடுகளின் உணவுப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி உள்ளன.
இந்தப் படைவெட்டுக்கிளிகளால் குறைந்தபட்சம் 150 கிலோமீட்டர் பயணிக்க முடியும். ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அவை 300 கிலோமீட்டர் நீளமுடைய செங்கடலை ஒரே வீச்சில் கடந்து வந்துள்ளன.
லோகஸ்ட் வகையைச் சேர்ந்த இந்தப் பாலைவனப் படைவெட்டுக்கிளிகள், தம் திறன், குணாதிசயங்கள் ஆகியவற்றைச் சூழலுக்குத் தகுந்தவகையில் மாற்றிக்கொள்ளக் கூடியவை. அதோடு மிக நீண்ட தூரத்திற்கு இடம் பெயரவும் இவற்றால் முடியும். இவை பெரும்பாலும் தனித்தனியாகவே வாழக்கூடியவை. ஆனால், அவற்றின் இருப்புக்கும் உணவுக்கும் ஆபத்து நேரும் சூழல் ஏற்பட்டால் கூட்டாகச் சேர்ந்து செயல்படும் திறன் இவற்றுக்கு உண்டு. உதாரணத்திற்கு, வறட்சி, உணவுப் பற்றாக்குறை போன்றவை ஏற்பட்டால், அவை தம் சந்ததியைப் பாதுகாத்துக்கொள்ள கூட்டுச் சேர்ந்து இடம் பெயர்வதும், உணவு தேடுவதுமாய்ச் செயல்படத் தொடங்கும். அப்படிச் செயல்படும்போது, உணவு மற்றும் இனப்பெருக்கத்திற்கான பசி அவற்றிடம் வழக்கத்தைவிட தீவிரமாகவே இருக்கும். செல்லும் வழியெல்லாம், மிகத் தீவிரமாகச் சாப்பிட்டுவிட்டு, இனப்பெருக்கம் செய்து முட்டையிட்டுவிட்டுச் சென்றுகொண்டேயிருக்கும். எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க ஒரு சமூகமாகக் கூடி வாழ வேண்டுமென்ற வேட்கையும் அவற்றிடம் அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.
இந்தப் பாலைவன வெட்டுக்கிளிகளின் கால்கள் மற்றவற்றின் கால்களோடு ஒன்றோடு ஒன்று உரசினால், செரோடோனின் என்ற ஒரு திரவம் சுரக்கும். மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்ற இந்தத் திரவம் அவற்றை மேன்மேலும் கூடி வாழத் தூண்டுகின்றது. அவற்றைப் பொறுத்தவரை சமூகமாகச் செயல்படுவதெனில், அனைவரும் இணைந்து உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்வதாகும். அதற்காக இந்தப் படைவெட்டுக்கிளிகளால் குறைந்தபட்சம் 150 கிலோமீட்டர் பயணிக்க முடியும். ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அவை 300 கிலோமீட்டர் நீளமுடைய செங்கடலை ஒரே வீச்சில் கடந்து வந்துள்ளன. அப்படிக் கடந்து வந்த கூட்டத்தில், ஒரு சதுர கிலோமீட்டர் நீளத்துக்கு, நான்கு கோடி முதல் 8 கோடி வெட்டுக்கிளிகள் வரை இருக்குமென்றும் கணித்துள்ளனர்.
.
பயிர்கள்மீது வெட்டுக்கிளிகளின் தாக்குதல்
இப்படிப்பட்ட தீவிர வெட்டுக்கிளித் தாக்குதல், இதற்கு முன்பும் வரலாற்றில் நடந்துள்ளன. ஆப்பிரிக்காவில் 1988-ம் ஆண்டு இதேபோல் படையெடுத்து வந்த வெட்டுக்கிளிகள், மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கரீபியனைச் சென்றடைய பத்தே நாள்களில் 5,000 கிலோமீட்டர் பயணித்துள்ளன.
1962-ம் ஆண்டு, இந்தியாவில் இதேபோன்ற தீவிர படைவெட்டுக்கிளி தாக்குதல் நடைபெற்றது. அதன்பிறகு, 1978, 1993 ஆகிய ஆண்டுகளில் இதேபோன்ற பாலைவனப் படைவெட்டுக்கிளித் தாக்குதல் நடைபெற்றது. படை வெட்டுக்கிளிகள் குறித்த குறிப்புகள் வரலாறு நெடுக இருக்கின்றது. கி.மு.2,500-க்கும் முந்தைய பழங்கால எகிப்திய சித்திரிப்புகளில்கூட படைவெட்டுக்கிளிகள் குறித்தும் அவை ஏற்படுத்துகின்ற சேதங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளன. கி.மு.1450 காலகட்டங்களின் வெட்டுக்கிளித் தாக்குதல் குறித்து பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குரான் போன்ற நூல்களிலும் இவைகுறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளன.
சீனா, கிரேக்கம், ரோம், சிரியா போன்ற உலகின் பல்வேறு பகுதிகளின் பழங்கால வரலாற்றில் படைவெட்டுக்கிளிகள் ஏற்படுத்தும் சேதங்கள் பற்றிப் பெரும் அச்சத்தோடு பதிவு செய்துள்ளனர். வரலாற்றில் உள்ள சமீபத்திய உதாரணமாக ராக்கி மலைப் படைவெட்டுக்கிளிகளைக் கூறலாம். 19-ம் நூற்றாண்டின்போது, அமெரிக்காவிலுள்ள ராக்கி மலைத்தொடர்ப் பகுதியில் ஒரு வகை வெட்டுக்கிளிக் கூட்டம் வாழ்ந்தது. அந்த இனம் தற்போது அழிந்துவிட்டது. இருப்பினும், அந்தக் காலகட்டத்தில் அவை அமெரிக்கக் கிராமப்புறங்களில் ஏற்படுத்திய சேதங்கள் கணக்கிலடங்காதவை. 1875-ம் ஆண்டு, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவை உள்ளடக்கிய பரப்பளவுக்குச் சமமான 5.1 சதுர கி.மீ பரப்பளவில், சுமார் 12 டிரில்லியன் வெட்டுக்கிளிகளைக் கொண்ட ஒரு பெரிய படை கொலராடோ, நிப்ராஸ்கா ஆகிய மாகாணங்களைச் சுற்றி வளைத்தது.
ராணுவப் படைத்தளத்தில் நடந்த வெட்டுக்கிளி தாக்குதலைத் தடுக்க முயலும் படைவீரர்கள்
.
Henry Marriot Paget (1857-1936)
வெட்டுக்கிளி படையெடுப்பு... அழிவுக்கான ஆதாரமா? மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults
.
பச்சையாக இருந்த அனைத்தையுமே அவை சாப்பிட்டுவிட்டன. அதோடு நிற்கவில்லை, செம்மறி ஆடுகளின் முதுகில் இருந்த கம்பளியை, குதிரைகளின் முதுகில் இருந்த சேணங்களை, மனிதர்கள் உடுத்தியிருந்த பருத்தி ஆடைகள் என்று எதையுமே விட்டு வைக்கவில்லை அவற்றின் அகோரப் பசி. உயிரின வரலாற்றிலேயே இவ்வளவு கூட்டமாக வேறு எந்த உயிரினமும் சேர்ந்ததில்லை. இதிலிருந்து மீண்டுவர, வெட்டுக்கிளிகளைப் பிடித்து வருபவர்களுக்குப் பணம் தருவதாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்தது. எத்தனை வெட்டுக்கிளிகளைப் பிடித்து வருகிறார்களோ அதற்கு ஏற்றாற்போல் பணம் கொடுக்கப்பட்டது. விவசாயிகள் விவசாய நிலங்களைச் சுற்றி அகழி தோண்டி வைத்தனர். தீப்பந்தங்களை விசிறிக்கொண்டேயிருந்தனர்.
இவையெல்லாவற்றையும் கடந்து, மக்கள் அவற்றைப் பிடித்து வறுத்துச் சாப்பிடவும் தொடங்கினர். வெட்டுக்கிளிகளே பூச்சியினங்களில் அதிக ஊட்டச்சத்து உடைய வகையாக அறியப்படுகின்றன. அது தெரிந்ததும் மக்கள் அவற்றைப் பிடித்துச் சாப்பிடவும் தொடங்கினர். ஆனாலும் அவற்றின் தாக்குதல் குறைந்தபாடில்லை. வெட்டுக்கிளிகளைக் கொல்ல புதுப்புது தொழில்நுட்பங்களை அமெரிக்க நிறுவனங்கள் உற்பத்தி செய்யத் தொடங்கின. தேவாலயங்களில் வெட்டுக்கிளிகளைச் சாத்தான்களின் தூதர்களாகக் கருதி பிரார்த்தனைகள் நடைபெற்றன. இவ்வளவு பெரிய அச்சுறுத்தலை அவர்களிடம் ஏற்படுத்திய ராக்கி மலை படைவெட்டுக்கிளிகள், ஒருகட்டத்திற்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கையில் குறையத் தொடங்கின. உழுதல், நீர்ப்பாசன முறை என்று விவசாயத்தில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் ஆயிரக்கணக்கில் அவற்றின் முட்டைகளை அழித்துவிட்டன. அதனால் எண்ணிக்கையில் குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், 19-ம் நூற்றாண்டில் ராக்கி மலைப் படைவெட்டுக்கிளிகள் இனமே முற்றிலுமாக அழிந்ததற்கான காரணம் இன்றுவரை முழுமையாகத் தெரியாத மர்மமாகவே இருக்கின்றது. 19-ம் நூற்றாண்டின் கடைசி 20 ஆண்டுகளில் இந்த இனமே அழிந்து 1902-ம் ஆண்டு முற்றிலும் அழிந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் அழிவு, சூழலியல் மர்மங்களில் ஒன்றாக இன்றும் இருப்பதாகப் பூச்சியியல் ஆய்வாளர் ஜெஃப்ரி லாக்வுட் எழுதிய 'Locust: The Devastating Rise and Mysterious Disappearance of the Insect that Shaped the American Frontier' என்று குறிப்பிட்டுள்ளார். இன்று படைவெட்டுக்கிளிகள் இல்லாத கண்டங்களாக அண்டார்டிகாவோடு வட அமெரிக்காவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
.
படைவெட்டுக்கிளிகளை விரட்ட முயலும் விவசாயிகள்
படைவெட்டுக்கிளிகள் குறித்த நூலில் ஜெஃப்ரி லாக்வுட், வெட்டுக்கிளிகளின் முட்டைகளை அழிக்க எவ்வளவு பிரயத்தனப்பட்டார்கள் என்பதைத் தெளிவாக விவரித்துள்ளார். அதேநேரம், ஒரு மணிநேரத்தில் சுமார் 1,800 கிலோ உணவைச் சாப்பிட்டுத் தீர்த்துவிடும் திறனுடைய வெட்டுக்கிளிக்கூட்டம் அப்படி மொத்தமாக அழியும் என்ற கேள்விக்கும் விடைதேட முயன்றுள்ளார். ஆனால், அது மட்டும் இன்னும் மர்மமாகவே உள்ளது.
1875-ம் ஆண்டில் சுமார் 3.5 டிரில்லியன் படைவெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்த நிகழ்விலிருந்து நிலைமையைப் புரிய வைத்தவாறு கொண்டு சென்ற ஆசிரியர், அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த பூச்சியியல் ஆய்வாளர்கள் இவை குறித்துச் செய்த ஆய்வுப் பதிவுகளையும் மீட்டெடுத்து கொடுத்துள்ளார். அமெரிக்கா உள்நாட்டுப் போரிலிருந்து மீண்டெழுந்து கொண்டிருந்த காலகட்டம் அது. அந்தநேரத்தில் ஏற்பட்ட இந்தப் பெருஞ்சேதங்கள் அவர்களை நிலைகுலைய வைத்துவிட்டன.
.
முட்டையிடும் வெட்டுக்கிளி
Retro Lenses
சுற்றுச்சூழல், மக்களின் வாழ்க்கைமுறை என்று பலவற்றோடு படை வெட்டுக்கிளிகளால் ஏற்பட்ட சேதங்களையும் தொடர்புபடுத்திப் பேசியுள்ள லாக்வுட், இறுதியில் உயிரின வரலாற்றில் மதிப்புமிக்க ஒரு பாடத்தை ராக்கி மலைப் படைவெட்டுக்கிளிகளின் அழிவு எடுத்துரைப்பதையும் நமக்கு உணர்த்துகிறார். அந்தப் பாடம்,
"ஒரு நேரத்தில் மிகவும் சக்தி வாய்ந்ததாக, ஆபத்தானதாக இருக்கும் உயிரினம், எதிர்பார்க்காத நேரத்தில் இருந்த தடயமேகூட இல்லாமல் அழிந்துவிடக்கூடும்."
1874-ம் ஆண்டு, ஜூலை மாதத்தின் ஒரு காலைப்பொழுதில் லில்லி மார்க்ஸ் என்ற 12 வயதுப் பெண் வீட்டிற்கு வெளியே வந்து வானத்தைப் பார்க்கிறார். அப்போது சூரியனை மறைத்துக்கொண்டு வானமே சாம்பல் நிறத்தில் மாறியதைப் போன்று தோற்றமளித்தது. ஆம், அவை முழுக்கவே ராக்கிமலைப் படைவெட்டுக்கிளிகள்தாம்.
இன்று கொரோனா காலகட்டத்தில், ஆப்பிரிக்க நாடுகளிலும் ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் பேரிழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன பாலைவனப் படைவெட்டுகிளி வகை. இவற்றின் தாக்குதலுக்கும் ராக்கி மலை வெட்டுக்கிளிகளின் தாக்குதலுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டுமே கோரப் பசியோடு உணவுகளை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன. மத்தியப் பிரதேசம் வரை வந்துவிட்ட படைவெட்டுக்கிளிகள் தென்னிந்தியாவுக்குள்ளும் நுழைந்துவிடும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடப்படுகின்றது. இந்நிலையில், அவ்வளவு எளிதில் இந்தப் பிரச்னையைச் சரிசெய்துவிட முடியாது என்றே வரலாறு கூறுகின்றது.
.
மடகாஸ்கரில் வெட்டுக்கிளித் தாக்குதல்
Iwoelbern
இதைக் கட்டுப்படுத்த, ரசாயனப் பூச்சிக்கொல்லிகளை மட்டுமே நம்பியிருக்காமல் மரபுவழி நடைமுறைகளையும் பின்பற்றினால் ஓரளவுக்குச் சேதங்களைக் குறைக்கலாம் என்று விவசாயிகள் நம்புகின்றனர். இந்த 2020-ம் ஆண்டு, நமக்குப் பல்வேறு இழப்புகளைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டேயிருக்கிறது. இவையனைத்துமே கடந்த சில ஆண்டுகளில் எச்சரிக்கப்பட்டன. காலநிலை மாற்றமும் புவி வெப்பமயமாதலும் பல்வேறு சொல்லவொண்ணா ஆபத்துகளை 2020-ம் ஆண்டுக்குள் ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்தனர். இதுவரை நடந்தவை, இப்போது நடந்துகொண்டிருப்பவை அனைத்துமே அதன் தொடக்கமாகத்தான் சொல்லப்படுகிறது. அரசுகள் இனியும் ரசாயன விவசாயத்தையும் காடழிப்பையும் ஊக்குவித்துக் கொண்டிருந்தால் அதன் விளைவுகளை மேன்மேலும் அனுபவிக்கப் போவது அடித்தட்டு மக்களே என்று இதுவரையிலான அனுபவப் பாடங்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment