VOLTAIRE -PHILLIP STORY
அந்த பழுப்பு நிற தந்தியின் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளின் செறிவில் அது யார் அனுப்பியிருக்க கூடும் என்பதை எளிதாக யூகித்திருந்தான் பிலிப்.
வோல்ட்டயர், பிலிப்பிடம் அடிக்கடி சொல்வது இது ஒன்றைதான் 'ஒரு வசந்த காலம் உன்னை தேடி வரும்,அது ஒரு மழைக்கால சூரியனின் அதிகாலை வெளிச்சம் போல ஒரு நாள் உன் வீட்டின் சிதிலமடைந்த கதவுகளை தட்டும் அப்போது கதவுகளுக்கு அப்பால் நீ அதன் வருகையை எதிர்பார்த்திருக்க வேண்டும்”
வோல்ட்டயர், எப்போதும் திரும்ப திரும்ப இந்த வார்த்தைகளை சொல்லி கொண்டிருப்பான் அவனுக்கு பிலிப்பின் கனவுகளில், சித்தாந்தங்களில் ஒரு ஈர்ப்பு உண்டு.ஒடுக்கபட்டவர்களின் உரிமைக்கான அத்தனை கனவுகளையும் அங்கீகரிப்பவனாக வோல்ட்டயர் இருந்தான்.
"பிலிப் வசந்த காலம் வந்தேவிட்டது, பைசெட் மருத்துவமனைக்கு உன்னை கண்காணிப்பாளாராக நியமிக்கிறேன் ஏனென்றால் அதற்கு நீ உன்னை முழுமையாக தயார்படுத்தி கொண்டிருக்கிறாய்,இருள் நிறைந்த அந்த மருத்துவமனையின் அறைகளுக்கு இன்றைய அதிகாலை சூரிய வெளிச்சத்தை நீ உன்னோடு சுமந்து செல்”
ஜெனரல் வோல்ட்டயர்
பாரிஸ்
ஆகஸ்ட் 1793
பட்டு நூல் சுற்றபட்ட அந்த தந்தியில் இருந்த ஒவ்வொரு தடித்த வார்த்தையும், ஒவ்வொரு எழுத்தும் பிலிப்பின் உள்ளே விவரிக்க முடியாத ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது,பிலிப் இதைதான் எதிர்பார்த்தான் அவன் வாழ்நாள் முழுமைக்கும், குறைந்த பட்சம் கடந்த பத்தாண்டுகளில் இதை மட்டும் தான் எதிர்பார்த்திருந்தான்.
பிலிப்,கடைசியாக வோல்ட்டயரை பாரிஸின் பிரமாண்டமான பழமைவாய்ந்த அந்த ரோமன் கத்தாலிக்க திருசபையில் தான் பார்த்தான்,பத்து வருடங்கள் இருக்கும்,பார்வையாளரின் மர பெஞ்ச்சில் இருந்து பாதிரியாரை நோக்கி வோல்ட்டயர் எழுப்பிய கேள்விகள் பத்து வருடம் கழித்து இன்னமும் பிலிப்புக்கு நினைவில் இருக்கிறது,கடவுளின் இருப்பில் எழுப்பபட்ட எத்தனை உக்கிரமான கேள்விகள்,வோல்ட்டயரின் கேள்விகளுக்கு அங்கு யாரிடமும் பதில் இல்லை. பதில் இருந்தாலும் இறைவனின் பெயரால் நடத்தப்படும் அந்த திருச்சபையில் கடவுள் மட்டுமே அத்தனை கேள்விகளுக்கும் பதில் என்று விட்டு விட்டார்கள்.
நம்பிக்கைகள் கடவுளின் பெயரால் ஏற்படுத்தும்போது கடவுளை அழிக்காமல் எந்த உண்மையையும் நிறுவ முடியாது, அந்த வேலையை தான் வோல்ட்டயர் செய்து கொண்டிருந்தான்,வோல்ட்டயர் மட்டுமே செய்து கொண்டிருந்தான்.
பிலிப், அந்த திருச்சபையின் நடவடிக்கைகளில் கொஞ்சமும் இணைப்பின்றி தன்னை துண்டித்து கொண்டிருந்தான். அவன், இரும்பு சட்டத்தில் கைகள் பிணைக்கப்பட்ட தனது தோழன் பெய்லியின் மங்கி போன கண்களையே பார்த்து கொண்டிருந்தான்,பெரிய பெரிய புத்தகங்கள் வைத்து தான் படித்த மருத்துவம் எந்த வகையிலும் பெய்லிக்கு உதவபோவதில்லை என்பது அவனுக்கு வெறுப்பாக இருந்தது,அறிவியலின் நிழல் கூட ஒதுங்க முடியாத கட்டிடம் இது,அறிவியல் ஒரு சாத்தானாக அங்குள்ள தூண்கள் முழுக்க சித்தரிக்கபட்டிருந்தது.
“பெய்லிக்கு வந்திருப்பது நோய்,மனநோய். நோய்கள் குணமாக கூடியன,கருணையும்,அளவற்ற அன்பும்,மருத்துவமும் நோயை முற்றிலுமாக செயலிழக்க வைக்கும்,தேவை நம்பிக்கை மட்டுமே” பிலிப் தனது மெல்லிய குரலில் பாதிரியாரிடம் வேண்டிக் கொண்டிருந்தான்.
“ஒருவன் தன்னிலையை மறப்பது நோயல்ல,சாபம்,இறைவனின் சாபம்,பிறவியின் சாபம்,சாத்தானின் எச்சம்,சாத்தானுக்கு தேவை கருணையோ அன்போ அல்ல தண்டணை.பெய்லி என்னும் உன் நண்பன் இப்போது பெய்லி அல்ல, ஒரு சாத்தான்,இந்த இறைவனின் திருச்சபை சாத்தானை இருப்பை சகித்து கொள்ளாது”
"பெய்லிக்கு டிரப்பினேசன் செய்யுமாறு ஆண்டவன் பெயரால் இந்த கத்தோலிக்க திருச்சபை ஆனையிடுகிறது,டிரப்பினேசன் என்னும் கபாலத்தில் இடப்படும் துளையின் வழியாக இந்த பெய்லியின் சுயத்தில் நிரம்பியிருக்கும் சாத்தான்கள் வெளிக்கொணரப்பட்ட பின் இறைவனின் எல்லையற்ற கரங்கள் இந்த பெய்லி என்னும் மனிதனை இரட்ச்சிக்கும்” என்று சொல்லிவிட்டு அந்த பாதிரியார் வோல்ட்டயரை பார்த்தார்.
“உங்களின்,உங்கள் திருசபையின் எதேச்சதிகாரத்திற்கு விரைவில் முடிவு வரும் அது என்னால் வரும் என் நண்பன் பெய்லியின் பெயரால் வரும்” என்று சொல்லி விட்டு பெய்லியை ஒருமுறை தனது கருணை நிரம்பிய கண்களால் பார்த்துவிட்டு அந்த திருச்சபையை விட்டு வேக வேகமாக வெளியேறினான் வோல்ட்டயர்.
வோல்ட்டயரின் அந்த வன்மம் நிறைந்த கண்களை அப்போதுதான் பிலிப் கடைசியாக பார்த்தான்,புதிய கனவுகளை காணும் கண்கள்,எல்லா மாற்றமும் அந்த கண்களின் வழியேதான் தொடங்குவதாக பிலிப் நினைத்தான்.
மேடேம் ஹெல்விட்டியஸ் என்னும் பிரஞ்சு புரட்சியை முன்னெடுக்கும் அமைப்பில் பிலிப்,பெய்லியுடன் இணைந்த போது பெய்லிதான் பிலிப்பிற்கு வோல்ட்டாயரை அறிமுகபடுத்தினான்,பெய்லியும் வோல்ட்டாயரும் புரட்சி பற்றி இரவு முழுதும் பேசி கொள்வார்கள்,பாதிரியார்களுக்கும்,நில பிரபுக்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள அளவற்ற அதிகாரம் அதன் நீட்சியாக எளிய மக்கள் சுரண்டப்படுவதை பற்றி மணிக்கணக்கில் பேசிக்கொள்வார்கள்.
திடீரன பெய்லியின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றத்தை பிலிப் தான் முதலில் கணித்தான்,மெலன்கோலி வகை மனநோயால் பெய்லி பாதிக்கபட்டிருக்கிறான் என்பதனை அவன் வோல்ட்டாயருக்கு தான் முதலில் சொன்னான்.ஹிப்போகிரேட்ஸ் அதை மூளையில் ஏற்படும் நோய் என்று சொன்னதாக சொன்னான் ஆனால் பாரிஸின் அந்த பழமை வாய்ந்த திருச்சபை இதை நோயென்று ஒத்து கொள்ளாது,கடவுளின் பெயரால் பெய்லி தண்டிக்க படுவான் என்பதை இருவருமே எதிர்பார்த்திருந்தனர்.அதை எப்படி தவிர்ப்பது என்று தீவிரமாக சிந்தித்திருந்தனர்,ஆனால் பெய்லி தண்டிக்க பட்டான் அதுவும் டிரப்பினேசன் என்கின்ற மிக மோசமான முறையில்.
சில நாட்கள் கழித்து பெய்லி என்கின்ற ஒரு மாபெரும் புரட்சியாளன் ஒரு பனிக்காலத்தின் பின்னிரவில் தற்கொலை செய்துகொண்டான்.
பெய்லியின் தற்கொலை பிலிப்பின் உள் எண்ணற்ற கேள்விகளை எழுப்பியது,மருத்துவராக தனது இயலாமையின் துக்கம் நாளுக்கு நாள் பிலிப்பை வாட்டியது,இனி முழு நேர மருத்துவனாக தன்னை மாற்றி கொள்ள வேண்டும் மருத்துவ துறையில் புறக்கணிக்கப்பட்ட நோய்களுக்கு அதுவும் குறிப்பாக மனநோயளிகளுக்கு தன்னை முழுதாக அர்ப்பணிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டான்,பாரிஸில் ஒரு தனியார் மனநல காப்பகத்தில் இணைந்து கொண்டான்.
வோல்ட்டாயரை அதன் பிறகு பிலிப் பார்க்கவே இல்லை,ஆனால் புரட்சி தீவிரமடையும் ஒவ்வொரு கால கட்டத்திலும் வோல்ட்டாயர் அதன் பிண்ணனியில் இருப்பான் என பிலிப்பிற்கு தெரியும்,நெக்கருடன் வோல்ட்டாயரை பார்த்ததாக நண்பன் ஒருவன் சொல்லி கேள்விபட்டான்,நெக்கர் பாதிரியார்கள் மற்றும் பிரபுக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வரி விலக்கை நீக்கி ஆணை பிறப்பித்துள்ளான் என்ற செய்தி அதை உறுதி செய்தது,நெக்கரின் நிதி மேலாண்மை பதவி போன பிறகு அதை எதிர்த்து நடந்த பாஸ்டில் சிறை உடைப்பில் வோல்ட்டாயர் கைது செய்யப்பட்டதாக செய்திதாளில் படித்து தெரிந்து கொண்டான்.
பாரிஸின் பிரமாண்ட தெருக்களில் வோல்ட்டாயரின் பாதிப்புகள் தெரிய தொடங்கின,மக்கள் சிந்திக்க தொடங்கினர்,திருச்சபை தனது அதிகாரங்களை மக்களது குடியாட்சியின் கரங்களில் இழந்து கொண்டிருந்தது.
வோல்ட்டாயர் பிலிப்பிற்கு அனுப்பிய அந்த பழுப்பு நிற தந்தி இரண்டு விசயங்களை தெளிவாக உணர்த்தியது. ஒன்று, ஒடுக்கபட்டவர்களை பற்றி வோல்ட்டாயர் எப்போதும் சிந்தித்து கொண்டிருக்கிறான் மற்றொன்று பெய்லியை அவன் இன்னும் மறக்கவில்லை.
பாரிஸின் தென்கிழக்கே உள்ள ஒரு புறநகரத்தில் நகரத்தின் படிமங்களிலிருந்து முற்றிலுமாக தன்னை விடுவித்துகொண்டு பழமையின் பிரமாண்ட உருவாக அமைந்திருந்தது பைசெட் மருத்துவமனை,அது கண்டிப்பாக ஒரு மருத்துவமனைதான்,சமூகத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனை ஆனால் அது சிறை போன்றது,சிறையின் நோக்கம் கைதிகளின் நலன் அல்ல பொது சமூகத்தை கைதிகளிடம் இருந்து காப்பாற்றுவதான், இந்த பைசெட் மருத்துவமனையும் அந்த நோக்கத்திற்காக
தொடங்கப்பட்டதுதான்,தொடக்கத்தில் ஒரு அனாதை ஆசிரமமாக இருந்து பிறகு படிப்படியாக தொழு நோயாளிகள்,பாலியல் நோயாளிகள்,விலைமாதர்கள் மற்றும் மன நோயாளிகள் என சமூகத்தில் எல்லா விதத்திலும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான இயல்பான புகலிடமாக மாறிவிட்டது. ஒரு காலகட்டத்தில் இங்குள்ள விலைமாதர்களை வைத்து ஆண் மன நோயாளிகளை வன்புணர்வு செய்து அந்த குழந்தைகளை பிரெஞ்ச்சின் காலனி நாடுகளில் குடியமர்த்தியதாய் வரலாறுகள் உண்டு.
பிலிப் அந்த மருத்துவமனையின் இயக்குனர் அலுவலகத்தில் அமர்ந்திருந்தான்,தடித்த பருமனான திரைசீலைகள் அந்த கண்ணாடி சன்னல்களிருந்து வந்த பனிக்கால குளிரை தனக்குள் வாங்கிகொண்டு அந்த விசாலமான அறைக்கு ஒரு செயற்கையான அமைதியை கொடுத்து கொண்டிருந்தது.சவரம் செய்யபட்ட முன் வழுக்கையுடன் திரண்டு வந்த மீசையடனும் ஒரு நீண்ட பைப்பின் வழியாக புகைபிடித்து கொண்டு தீவிரமாக பிலிப் கொடுத்த அந்த தந்தியை படித்து கொண்டிருந்தார் அதன் இயக்குனர் புசின்.
“வோல்ட்டாயர்,புரட்சிகாரன் தானே இவன்?”
“இப்போது அரசாங்கத்தின் பிரதிநிதி” என்றான் பிலிப் மிக நிதானமாக
"இன்னும் எத்தனை நாட்கள் இந்த அரசாங்கம் இருக்கும் என்று பார்ப்போம்”
"வோல்ட்டாயரோ இல்லை இந்த அரசாங்கமோ தற்காலிகமானது தான்,ஆனால் பிரான்ஸின் வீதிகளில் மக்களால் நிகழும் இந்த புரட்சியும் அது ஏற்படுத்த போகும் மாற்றமும் உலக சரித்திரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தவிர்க்க முடியாமல் நிறைந்திருக்கும்"
புசின் இதற்கு மேல் பிலிப்பிடம் பேச விரும்பவில்லை,பிலிப்பும் தான்.
“ஓ.கே,டாக்டர். பிலிப் பினல்,இந்த மருத்துவமனையின் சக ஊழியனாக உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்,நாளை காலை பொழுதில் உங்களுக்காக நான் ரொட்டியுடன் காத்திருப்பேன்"
“நன்றி திரு.ஜீன் பாப்டிஸ் புசின் அவர்களே,நாளை காலை சந்திப்போம்”
பிலிப்பிற்கு இந்த இடம் மிகவும் பரிச்சயபட்டது போல இருந்தது எந்த ஒரு அந்நிய தன்மையையும் அவனால் உணர முடியவில்லை தான் ஏற்கனவே பழகிய மனிதர்கள் போலவும் தான் ஏற்கனவே நடந்த பரப்புகள் போலவும் அவனுக்கு ஒரு நுண்ணுர்வு இருந்து கொண்டே இருந்தது,ஒரு எழுத்தாளனாக ஒரு புரட்சியாளனாக, ஒரு மருத்துவனாக ஒரு மனோதத்துவ நிபுணனாக தான் கடந்து வந்த பாதையில் ஏற்று கொண்ட அடையாளங்களில் இருந்து கற்று கொண்டது எல்லாம் இதற்காக தான் என்று நினைத்தான். பின்னிரவின் பெரும் பனியால் போர்த்தபட்ட அந்த பைசட் மருத்துவமனை அவனது வரவில் தன்னை கொஞ்சம் பிரகாசமாய் காட்டிக்கொண்டிருந்தது.
“ஏழாவது வார்டு உங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது டாக்டர் பினல், 200 பைத்தியங்கள் உங்கள் வரவை எதிர்பார்த்திருக்கிறார்கள்,மன்னிக்கவும் மனநோயாளிகள் என்று சொல்லியிருக்க வேண்டுமோ” என்றார் புசின் வெண்ணைய் தடவப்பட்ட அந்த ரொட்டியை சுவைத்துக்கொண்டே”
"மருத்துவமனையின் இயல்பு நோயாளிகளை உள்ளடக்கியது,இந்த பழம்பெரும் பைசட் எனப்படும் கட்டிடங்கள் ஒரு மருத்துவமனை என்றுதான் நினைத்திருந்தேன் டாக்டர் புசின்”
"நாம் நோயாளிகள் இல்லையே,மன்னிக்கவும் ஒரு நகைச்சுவைக்காக சொன்னேன்”
"ரொட்டிக்கு நன்றி டாக்டர் புசின், நான் எனது பணியை இன்றிலிருந்து துவங்குகிறேன்”
புசினின் வார்த்தைகளும் கேலிகளும் பிலிப்பிற்கு ஒன்றும் புதிதல்ல சொல்லப்போனால் மனநல துறையில் ஒருவர் பக்குவத்திற்கு வருவதற்கு இதை போன்ற கேலி பேச்சுகள் அவசியமானது என்று கருதினான் பிலிப்.
ஏழாவது வார்டு அந்த மருத்துவமனையின் ஒருங்கிணைப்பில் இருந்து சற்றே விலகியிருப்பது போல் இருந்தது,ஓரின சேர்க்கையாளர்களின் வார்டுக்கும் தொழு நோயாளிகளின் வார்டுக்கும் வெளியே ஒரு நூறடிக்கு அப்பால் மருத்துவமனையின் வெளிப்புற சுவரை நோக்கியவாறு அமைந்திதிருந்தது.
தரைதளத்தில் பத்து முதல் இருபது அறைகளும் மேல்தளத்தில் அதே எண்ணிக்கையில் அறைகளும் இருக்கலாம்,இருநூறு மன நோயாளிகள் இருக்கும் அளவுக்கு அது விசாலமானதாக இருக்கவில்லை, வெளிச்சத்தின் எந்த ஒரு வாடையும் அந்த அறைகள் அறிந்திருக்க முடியாது, சன்னல்கள் ஏதுமற்ற அறைகள், ஒவ்வொரு அறையின் மத்தியிலும் இரும்பு சட்டத்தினாலான ஒரு கடினமான தூண் அந்த தூணில் நல்ல மொத்தமான இரும்பு சங்கிலிகள் கட்டபட்டிருந்தன அதன் அடுத்த முனை நோயாளிகளின் காலோடு பிணைக்கப் பட்டிருந்தது. அந்த அறையின் மத்தியிலிருந்து அதன் வெளி சாளரம் வரை அந்த சங்கிலியின் நீளம் இருந்தது அது வரை அந்த நோயாளி நகரலாம், அவனுக்கு கொடுக்கப்பட்ட ஒட்டு மொத்த சுதந்திரம் அந்த பத்தடிதான்.
காய்ந்து போன ரொட்டி துண்டுகள் அந்த சாளரத்தில் சிதறி கிடந்தது அதன் மீது எறும்புகளின் கூட்டம் மொய்த்து கொண்டிருந்தது மிச்சமிருந்த எறும்புகள் சங்கிலி மாட்டபட்ட நோயாளிகளின் கால்களில் இருந்த சீல் பிடித்த புண்களில் ஊறிக்கொண்டிருந்தது.
பிலிப் வாடிப்போயிருந்த அவர்களது கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்,வாழ்க்கையின் மீதான எந்த நம்பிக்கையும் அற்ற கண்கள் உலர்ந்து போன கண்கள் அந்த கண்களின் வழியே அவர்களும் இதே உலகத்தை தான் பார்த்து கொண்டிருக்கிறார்கள் இதே பகல், இதே வெளிச்சம், இதே மனிதர்கள் ஆனால் எதுவும் இங்கே அவர்களுக்காக இல்லை,இருண்டு போன அவர்களின் வாழ்க்கையின் வெளிச்சத்தை எந்த பகலும் இனி திருப்பி தர போவதில்லை.எல்லைகளற்று விரிந்திருந்த அந்த அறையின் இருளில் அவர்கள் இன்னும் தன்னை தானே தேடிக்கொண்டிருக்கிறார்கள்,முடிவில்லாத தேடல்.
பிலிப் தனக்கான வேலை இங்கிருந்து தொடங்கபட்டதாக நினைத்தான். பனிக்காலத்தின் கடுங்குளிரில் இருந்து வசந்த காலத்திற்கான பாதையை தேடிப்போகும் வலிமை வாய்ந்த கால்கள் தன்னிடம் இருக்கிறது என்பதை பிலிப் தீவிரமாக நம்ப தொடங்கினான். தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தொலைந்து போன நம்பிக்கைகளையும் கனவுகளையும் மீட்டெடுப்பதாக இருக்க வேண்டும் என நினைத்து கொண்டான்.
திருடர்களும்,பிச்சைக்காரர்களும் பாலியல் தொழிலாளிகளுமான அசாதரண மனிதர்கள் நிரம்பியிருக்கும் இந்த வளாகத்தில் வெறும் நோயினால் பாதிக்கப்பட்ட சாதாரண மனிதர்கள் ஏன் இவ்வளவு கொடூரமாக நடத்த படுகின்றனர்? ஆரோக்கியமாய் இருப்பதாய் நாம் நினைத்து கொண்டிருக்கும் நமது மனநிலை ஏன் இவ்வளவு வன்மத்துடன் நடந்து கொள்கிறது? மன நோயாளிகளை பார்த்து நாம் உண்மையில் பயப்படுகிறோமா? ஒரு திருடனிடமும் கொலைகாரனிடமும் வராத பயம் ஏன் எந்த வித குற்றமும் செய்யாத, செய்ய துணியாத இவர்களின் மேல் வருகிறது? ஒரு மனிதனின் குறைந்தபட்ச உரிமைகள் கூட மறுக்கபடுவது என்ன மாதிரியான மருத்துவம்? இதுதான் இவர்களுக்கான வைத்திய முறையென்றால் உண்மையில் இதனால் அனுகூலம் அடைவது நாம்தானே தவிர அவர்கள் இல்லை.
மறுநாள் காலை பிலிப் புசினின் அறையில் சென்று பார்த்தான், அதிகாலை பனி அந்த விலையுயர்ந்த திரைசீலைகளின் வழியே அந்த அறை முழுதும் கசிந்து கொண்டிருந்தது,நுண்ணிய வேலைபாடுகள் நிறைந்த மர சட்டங்கள் மற்றும் ஓவியங்கள் அந்த அறை முழுதும் நிரம்பியிருந்தது,புசின் இயல்பிலேயே நிறைய ரசனை உடையவனாக இருக்க வேண்டும்,விசாலமான அந்த அறையை புசின் தனது பிரமாண்டமான இருப்பினால் மறைத்து கொண்டிருந்தான்.
"காலை வணக்கம் டாக்டர்.பினல்”
பிலிப் எந்த பதில் வணக்கமும் இன்றி நேரடியாக தான் பார்க்க வந்த விசயத்தை சொன்னான் “ நோயாளிகள் சங்கிலிகளால் கட்டபடுவது பிரான்ஸின் புதிய கொள்கைகளுக்கு முரணானது,புதிய கொள்கைகளின் பயன் அதனால் ஏற்படுத்தபட்ட மாற்றம் எல்லா இடத்திற்கும் எல்லா மனிதர்களிடத்திலும் சீராக பரவ வேண்டும் இந்த பைசட் உட்பட இங்கிருக்கும் மன நோயாளிகள் உட்பட”
“மாற்றங்களுக்கு நான் எதிரானவன் கிடையாது டாக்டர்.பினல், ஆரோக்கியமான மாற்றங்களை கண்மூடிக்கொண்டு எதிர்க்கும் மதவாத அடிப்படைவாதி நான் இல்லை என்பதை நீ கூடிய விரைவில் புரிந்து கொள்வாய் என நம்புகிறேன், ஆனால் சங்கிலிகள் அகற்றப்படுவதை இப்போது அனுமதிக்க முடியாது ஏனென்றால் அதனால் ஏற்பட போகும் விளைவுகள் சூழ்நிலையை இன்னும் கடினமானதாக தான் மாற்றும், மாறாக உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்,வோல்ட்டாயர் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை உண்மையாக இருந்தால் உங்களுடைய புதிய வைத்திய முறையில் தீர்வு இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் இரு நூறு நோயாளிகளில் ஒரே ஒரு நோயாளியை முடிந்தால் குறிப்பாக அந்த டான் டான் என்னும் பெண் நோயாளியை உங்கள் வைத்திய முறையால் குணமாக்கி விட்டு வாருங்கள் இருவரும் சேர்ந்து சங்கிலிகளை உடைப்போம் இங்கு மட்டுமல்ல பிரான்ஸின் எல்லா மூலைகளிலும்” புசின் கவனமாகவும், கச்சிதமாகவும் அதே நேரத்தில் பிலிப்பின் எந்த ஒரு நம்பிக்கையையும் சிதைக்காமலும் சொன்னான்.
பிலிப்பிற்கு புசின் சொன்னது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.பிலிப்பின் யோசனையை அவன் முற்றாக நிராகரிக்கவும் இல்லை ஆனால் ஆதரிக்கவும் இல்லை. அவன் இடத்தில் இருந்து அவனால் பிலிப்பிற்கு கொடுக்க முடிந்த சுதந்திரம் இதுதான் இந்த பரப்பில் தான் பிலிப் பயணிக்க முடியும் பயணிக்க வேண்டும்.
அறை எண் 707,அந்த ஏழாம் வார்டின் நிசப்தமான முதல் தளம்,எல்லா அறைகளும் போல கதவுகள் ஏதுமற்ற தனித்துவிடப்பட்ட அறை,இருள் மட்டுமே அங்கு நிரந்தரம் பகலின் எந்த அடையாளமும் அந்த அறையின் மிக கடினமான சுவரை தாண்டி செல்ல முடியாது. டான் டான் கால்கள் சங்கிலியால் கட்டபட்ட நிலையில் ஒருக்கலித்து படுத்து கிடந்தாள். அரவமற்ற அந்த அறையின் நெடு நாளைய அமைதி கலைக்கபட்டதில் கூட அவளுக்கு எந்த ஈடுபாடும் இல்லாதது கிடந்தாள்.நைந்து போயிருந்த கம்பளியாலான அவளது உடை அவளது உடலில் இருந்து முக்கால் பாகம் தன்னை விடுவித்து கொண்டிருந்தது, முகத்தை மட்டும் போர்வைக்குள் முழுமையாக நுழைத்து கொண்டிருந்தாள்,அவளது தலை மயிர் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு ஒரு முறம் ஏறிய சணல் போல இருந்தது, பிலிப் அவளது முகத்தை பார்க்க முயன்றான் அவள் கம்பளியை இன்னும் கொஞ்சம் இழுத்து கழுத்து வரை மூடிக் கொண்டாள்.
பிலிப் “ போலா,போலா” என்றான்,பிலிப்பிற்கு அவளது இயற்பெயர் தெரிந்திருந்தது,இன்னும் சில விசயங்களை கூட தெரிந்து கொண்டு வந்திருந்தான்,போலாவிற்கு நாற்பத்தைந்து வயது இருக்கலாம்,இங்கு வரும்போது அவளுக்கு இருபதியிரண்டு வயது,அதுவரை நன்றாக பேசிக் கொண்டு இருந்தவளுக்கு திடீரென ஒரு நாள் கடுமையான ஜுரம்,அதனை தொடர்ந்து கொஞ்ச நாள் குழப்பமாக பேசியிருக்கிறாள் யாரையும் அடையாளம் தெரியவில்லை பிறகு சுத்தமாக பேசுவதையே நிறுத்தி விட்டாள், அருகில் இருந்த தேவாலயம் உத்திரவுபடி இங்கு வந்து விட்டு விட்டார்கள்.
போலா இங்கு வந்த புதிதில் மிகவும் பயந்து போய் இருந்திருக்கிறாள் சில நாட்கள் கழித்து அவளே தனியாக “டான்,டான்” என்று சொல்ல தொடங்கியிருக்கிறாள் அதன் பிறகு யார் என்ன கேட்டாலும் “டான்,டான்” என்று மட்டும் சொல்லுவாள்,ஒரு கட்டத்தில் போலா இங்கு இருந்த ஆண் ஊழியர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்த பட்டிருக்கிறாள் அதன் பிறகுதான் அவளோடு முரட்டுதனம் சேர்ந்து கொண்டது, முரட்டு தனம் என்றால் சாதரணமாக அல்ல ஒரு ஆண் ஊழியரை தனது சங்கிலியாலே கழுத்தை நெறித்தே கொன்றிருக்கிறாள் அதிலுருந்து யாரும் அவளது அறைக்கு செல்வதில்லை.
ஒரு அரைமணி நேரம் பிலிப்பின் தொடர்ச்சியான அழைப்பிற்கு பிறகு போலா போர்த்தியிருந்த கம்பளி மெலிதாக விலகியது, போலா மெதுவாக தலையை கம்பளிக்குள் இருந்து வெளியே எடுத்தாள்,பிலிப் அழைப்பதை நிறுத்திவிட்டு அவளையே பார்த்து கொண்டிருந்தான்,அவனுக்கு கொஞ்சம் படபடப்பாக இருந்தது,போலா கண்களை மெதுவாக திறந்தாள்.அவள் காலில் பூட்டபட்டிருந்த சங்கிலிகள் அசையும் சத்தம் அந்த அறையின் ஒட்டு மொத்த அமைதியையும் கிழித்து கொண்டு அவ்வளவு சத்தமாக பிலிப்பிற்கு கேட்டது,போலா நிதானமாக கண்களை திறந்து பிலிப்பை பார்த்தாள், தனது கைகளை தரையில் ஊன்றி தவழ்ந்து தவழ்ந்து பிலிப்பின் அருகில் வந்தாள், பிலிப் அசையாமல் இருந்தான், பிலிப்பின் கண்களை சற்று நேரம் பார்த்து கொண்டிருந்தவள் சடாரென வறண்டு போயிருந்த தனது வாயிலிருந்த ஒட்டு மொத்த எச்சிலையும் காரி எடுத்து பிலிப்பின் முகத்தின் மீது துப்பினாள், பிறகு தனது மிக கடினமான குரலில் “டான்,டான்” என அந்த அறையே அதிருமாறு கத்திவிட்டு திரும்பவும் பழையபடி போய் அந்த போர்வைக்குள் தன்னை நுழைத்து கொண்டாள்.
பிலிப் எச்சிலும் நோய் தொற்றிய சளியும் சேர்ந்து தனது முகத்தில் நுரை நுரையாய் பொங்கிய அந்த வழவழப்பான சளியை முகதிலிருந்து வழித்து எடுத்தான் பின் வெளியே சென்று முகத்தை கழுவிக் கொண்டான்,அங்கு உள்ள எல்லா நோயாளிகளும் இவனையே பார்த்து சிரிப்பது போலிருந்தது எல்லோரும் தங்கள் கால்களை வேக வேகமாக அசைத்து சங்கிலிகளை தரையினில் உராய செய்து பெரும் சத்ததினை எழுப்பி கொண்டிருந்தனர். சங்கிலிகளின் சத்தத்தினை வைத்து அவர்கள் எல்லோரும் அவர்களுக்கு மட்டும் புரியும் வகையில் ஒரு ஒற்றை மொழியை உருவாக்கி வைத்திருப்பதாய் பிலிப் நினைத்தான்,கட்டப்பட்ட சங்கிலிகள் அவர்கள் காலோடு மட்டுமல்ல மனதோடும் பிணைந்திருப்பதாய் அவனுக்கு பட்டது.
அந்த நிகழுவுக்கு பிறகு பிலிப் பெரும்பாலான பொழுதுகளை அந்த வார்டில் தான் கழித்தான்,யாராவது ஒரு நோயாளியுடன் பேசிக் கொண்டிருப்பான் தனது ரொட்டியை அன்று அந்த நோயாளியுடன் பகிந்து கொள்வான். நிறைய பேருக்கு பிலிப் மீதிருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக விலக தொடங்கியிருந்தது பிலிப் அவர்களுடன் நிறையவே நெருங்கியிருந்தான்.
சிதைந்து போன அவர்களின் மனங்களிலிருந்து அப்பழுக்கற்ற முழு நம்பிக்கையை மட்டும் மீட்டெடுக்க வேண்டும் அது மட்டும் தான் பிலிப்பிற்கு தேவையானதாக இருந்தது. ஒருவருடைய நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டுமென்றால் முதலில் நாம் அவர்களை நம்ப வேண்டும், அவர்களை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்,அவர்களின் உணர்வுகளை அங்கீகரிக்க வேண்டும்.ஒருவருடைய தேவைகள் எப்போதும் மாறக்கூடியது, தேவைகள் தற்காலிகமானது,தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வது எப்போதும் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது.அன்பும் கருணையும் தோழமையும் மட்டுமே எப்போதும் எல்லோருக்கும் மாறாத தேவைகள்,வற்றாத தேவைகள்,சலிக்காத தேவைகள்.பிலிப் அதை நன்றாக புரிந்து வைத்திருந்தான் அதனால்தான் புறக்கணிக்கப்பட்ட அவர்களின் வாழ்க்கையின் இருள் சூழ்ந்த தனிமைக்குள் அவனால் எளிதாக செல்ல முடிந்தது.
பிலிப்,புசினிடம் பேசி எல்லோருடைய அறைக்குள்ளும் விசாலமான பிரெஞ்ச் சன்னல்களை ஏற்படுத்தியிருந்தான்,சூரியனின் அளவற்ற அதிகாலையின் வெளிச்சம் எல்லோருடைய அறையிலும் நிரம்பியிருந்தது.சங்கிலிகளை விலக்கி காயத்திற்கு மருந்திட்டான் எல்லோருடைய கால்களிலும் இருந்த சீல் பிடித்த புண்கள் ஆறத்தொடங்கியது, நோயாளிகள் தங்களுக்குள் உறவாடுவதை பிலிப் எப்போது உற்சாகப்படுதுபவனாய் இருந்தான்,பிலிப்பின் காதுகள் ஓயாமல் கேட்டு கொண்டேயிருந்தன புரிந்த, புரியாத, வகை வகையான கதைகள் ஏதோ ஒரு வகையில் பிலிப்பிடம் சொல்ல எல்லோருக்கும் அங்கே நிறைய கதை இருந்தது,பிலிப் புரிந்து கொண்டானா இல்லையா என்று தெரியாது ஆனால் கேட்டான்,அவர்களுக்கு தேவை சொல்ல முடியாத அல்லது சொல்ல தோணாத தங்களின் கதைகளுக்கெல்லாம் ஒரு வடிகால்,பிலிப்பின் காதுகள் அத்தனை பெரிய வடிகாலாக இருந்தது அதைதான் எல்லோரும் விரும்பினார்கள் பிலிப் உட்பட.
போலாவின் அறையிலும் சில மாற்றங்களை செய்திருந்தான் அறையின் பின்புறமாக ஒரு மர சன்னல் மற்றும் பக்கவாட்டு சுவற்றில் போலா படுத்திருக்கும் இடத்திற்கு நேரெதிராக ஒரு ஆளுயர கண்ணாடியும் பொறுத்தியிருந்தான்,கண்ணாடியை மட்டும் போலா உடைத்து போட்டிருந்தாள் உடைந்து போன கண்ணாடியின் சில்கள் அந்த அறை முழுதும் தெறித்து கிடந்தது,தனது முகத்தை அவள் கண்ணாடியில் பார்த்திருக்க கூடும் சிதைந்து போயிருந்த முகமும் காய்ந்து போய் ஒருவித சாம்பல் நிறத்திலிருந்த அவளது முடிக்கற்றையையும் அவள் பார்த்திருக்க கூடும் பல வருடங்களுக்கு முன்பிருந்த அழகான போலாவோடு அவள் ஒப்பிட்டிருக்க வேண்டும்,அவள் நினைத்து பார்க்க முடியாத அல்லது அப்படி தோணாத தனது வாழ்க்கையை ஒரு கண்ணாடி பிரதிபலிப்பதை அவளால் ஏற்று கொள்ள முடியாமல் போயிருக்கலாம்,பிலிப் விரும்பியது அதுதான்,நிகழ்காலத்தின் மறுக்க முடியாத உண்மையை அவள் தெரிந்து கொள்ள வேண்டும் ஏற்று கொள்ள வேண்டும் எந்த வித தயக்கமும் சமாளிப்பும் இன்றி அவள் நம்ப வேண்டும்,வாழ்க்கையின் பாதையை நம்மால் எப்போதும் நிர்மாணிக்க முடியாது,பாதையின் தன்மையை பொறுத்து அதில் பயணம் செய்ய நம்மை நாம் பக்குவபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதை போலாவுக்கு உணர்த்துவதுதான் அவனது முதல் திட்டமாகயிருந்தது.அதை அந்த கண்ணாடியின் வழியே ஓரளவு செய்தும் முடித்தான்.
போலாவிடம் கொஞ்சமாக கொஞ்சமாக மாற்றம் வர தொடங்கியது,எப்போதும் எல்லோரிடமும் ஏதாவது ஒன்றை பேசி கொண்டும் கேட்டு கொண்டும் இருக்கும் பிலிப்பை அவள் அவன் அறியாதபோதெல்லாம் கவனிக்க தொடங்கினாள்,தாதி தன்னை குளிப்பாட்டவும் தனது கூந்தலை செம்மைபடுத்தவும் அனுமதி கொடுத்தாள் முன்பு போல ஆர்பாட்டம் செய்வதில்லை, உடைந்த அந்த கண்ணாடி வழியாக தனது பொழிவடைந்து வரும் முகத்தினை அடிக்கடி பார்க்க தொடங்கினாள்,காலில் கட்டபட்ட சங்கிலியை அவ்வபோது ஆசையாய் தடவி கொடுத்தாள்,போலாவின் அறையின் முன் ஒரு மணல் சட்டியில் ரோஜா செடியினை பிலிப் வளர்த்து வந்தான் அதற்கு போலா அடிக்கடி தண்ணீர் ஊற்ற தொடங்கினாள்,பெரும்பாலான நேரங்களில் சாளரத்தில் அமர்ந்து கொண்டு எல்லோரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்,முக்கியமாக போலா இப்போதெல்லாம் டான்,டான் என்று சொல்வதில்லை.
போலாவிடம் ஏற்பட்ட மாற்றத்தை எல்லோரும் அவள் அறியாமல் கவனிக்க தொடங்கினர்,எல்லோருக்கும் போலா மீது ஏதோ ஒரு பரிவு இருந்தது,பிலிப் அவர்களுக்கு இடையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த பரிபூரண அன்பை, பிரியத்தை, கருணையை அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தான்.
ஒரு மத்தியான நேரத்தில் புசினிடம் இருந்து பிலிப்பிற்கு அழைப்பு வந்தது.
"வாருங்கள் டாக்டர்.பினல்,நீங்கள் விரும்பிய காலம் வந்தேவிட்டது” புசின், பிலிப்பை அத்தனை அன்போடு வரவேற்றான்.
“நன்றி டாக்டர்.ஜீன் பாப்டிஸ் புசின்,நீங்கள் இல்லாமல் இங்கு எதுவும் சாத்தியம் கிடையாது,உங்களை போல ஒரு இயக்குனர் பிரான்சின் அத்தனை மருத்துவமனைகளுக்கும் அமைய வேண்டும்”
“நன்றி,இன்னும் ஒரு மாதத்தில் ஏழாவது வார்டின் அத்தனை நோயாளிகளை பற்றியும் ஒரு ரிப்போர்ட் தயார் செய்து விடுங்கள்,மாகாணத்தின் கவர்னர் முன்னிலையில் உங்களது ரிப்போர்டை தாக்கல் செய்ய வேண்டும் அதுவும் உங்களது கனிவான குரலில்,அன்றே நீங்கள் விரும்பியபடி கவர்னர் முன்னிலையில் அவரின் அனுமதியோடு அனைத்து நோயாளிகளின் சங்கிலிகளும் அகற்றப்படும்,வாழ்த்துக்கள் டாக்டர்.பினல்”
“நன்றி, ஆனால் சங்கிலிகள் அகற்றப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை,உடைக்கப்பட வேண்டும் வலிமையான கோடாரி போன்ற இரும்பு ஆயுதத்தை கொண்டு உடைக்கப்பட வேண்டும், ஏனென்றால் உடைபட போவது சங்கிலிகள் மட்டுமல்ல அதிகாரம் எளிய மனிதர்கள் மீது காலம் காலமாக மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் நிறுவப்பட்ட அதிகாரம் அது உடைபடுவதுதான் பொறுத்தமாக இருக்கும் டாக்டர்.புசின்” பிலிப் தனது இயல்புக்கு மாறாக மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு பேசினான்.
"நிச்சயமாக பிலிப், இருவரும் சேர்ந்தே உடைப்போம்”
சங்கிலிகள் உடைக்கப்பட போவது அந்த ஏழாவது வார்டில் உள்ள அத்தனை நோயாளிகளுக்கும் தெரிந்திருந்தது அவர்கள் தங்களது மகிழ்ச்சியை ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்தி கொண்டிருந்தனர் சிலர் சத்தமாக தங்களுக்கு தெரிந்த பாட்டை பாடிக்கொண்டிருந்தனர்,சிலர் சுவர்களில் ஏதேதோ கிறுக்கி கொண்டிருந்தனர் மற்றும் சிலர் சங்கிலிகளை வேக வேகமாக இரும்பு தூணின் மீது மோதவிட்டு சத்தத்தை ஏற்படுத்தி கொண்டிருந்தனர்,போலா முடிந்த வரை தனது உணர்ச்சிகள் யாருக்கும் தெரியாமல் மறைத்து கொண்டிருந்தாள்,தன்னை உணர்ச்சியற்றவளாய் காட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தாள் ஆனால் எப்போதாவது பிலிப்பை பார்க்கும்போது அவளால் அப்படி இருக்க முடிவதில்லை அந்த நேரத்தில் தனக்கு உள்ளேயே யாருக்கும் கேட்காதபடி “டான்,டான்” என சொல்லிக் கொள்வாள்,அவளால் அதிக பட்சமாக வெளிப்படுத்த முடிந்த உணர்ச்சி அது மட்டும் தான்.
பைசட் மருத்துவமனை வழக்கத்திற்கு மாறாக அன்று காலையிலிருந்தே பரபரப்பாக இருந்தது,அங்கிருந்தா மரங்களில் பூத்திருந்த போகன்வில்லா பூக்களும் அதன் மீது தூவப் பட்டிருந்த அதிகாலை பனியும் அந்த மருத்துவமனைக்கு ஒரு வித ரம்மியத்தை கொடுத்து கொண்டிருந்தது,பிலிப் தனது இறுதி கட்ட அறிக்கையை சரிபார்த்து கொண்டிருந்தான்,புசின் கவர்னரின் வருகையை எதிர்பார்த்து தனது அறையில் அமர்ந்திருந்தான்.பிலிப் கேட்ட அந்த கடினமான கோடாரி போன்ற இரும்பிலான ஆயுதம் புசினின் மேசையில் கிடத்தபட்டிருந்தது.அதை பார்த்து புசின் தனக்குள்ளாக சிரித்து கொண்டான்.
“குட் மார்னிங் சார்,கவர்னர் வந்து விட்டார்,உங்களது அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்” புசினின் பணியாள் அத்தனை பனிவுடன் புசினிடம் சொன்னான்.
"நல்லது,நீ போய் பிலிப்பை எனது அறைக்கு அழைத்து வா”
புசின் வாசல் வரை சென்று கவர்னரை வரவேற்றான். “ வெல்கம் டூ பைசட் ஆஸ்பிட்டல் சார்”
“நன்றி டாக்டர்.ஜீன்.பாப்டிஸ்.புசின்,உங்களின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க பணியினில் கலந்து கொள்வது எனக்கு பெருமிதமான ஒன்று”
“நன்றி மேதகு கவர்னர் அவர்களே,எல்லா பாராட்டுகளுக்கும் உரியவன் உங்களை வரவேற்க வந்து கொண்டிருக்கிறான்,அவன் பெயர் டாக்டர்.பிலிப் பினல்.” புசின் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பிலிப் உள்ளே வந்தான்.
"இவர்தான் டாக்டர்.பிலிப் பினல், முடிந்து போனதாய் நினைத்த இருநூறு நோயாளிகளின் வாழ்க்கையை திருப்பி கொடுத்தவன்,கால்கள் கட்ப்பட்ட நிலையில் சக மனிதன் மீதான அத்தனை நம்பிக்கைகளையும் தொலைத்தவர்களுக்கு நம்பிக்கையின் தூய ஒளியை காட்டியவன்” புசினின் இந்த அறிமுகத்தில் பிலிப் கொஞ்சம் தடுமாறிப் போனான்.
“நல்லது டாக்டர்.பிலிப் பினல்,வோல்ட்டாயர் உங்களை பற்றி சொல்லியிருக்கிறான், உங்களது உளவியல் சித்தாந்தங்களில் வோல்ட்டயருக்கு எப்போதும் அளவிட முடியாத ஈடுபாடு உண்டு”
மூவரும் சிறிது நேரம் பிலிப்பின் மன நோயை பற்றிய பார்வையையும், மாற்ற வேண்டிய மருத்துவ முறைகளை பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள்,பிலிப் மனதில் ஏற்படும் அத்தனை சிக்கல்களுக்கும் உளவியல் ரீதியாக தீர்வு உண்டு,அதற்கு நாம் அளவற்ற கருணையோடும் பொறுமையோடும் அவர்களோடு உரையாட தயாராக இருக்க வேண்டும் என்று சொல்லி கொண்டிருந்தான்.
அதன் பிறகு பிலிப்பின் விருப்பபடியே சங்கிலிகள் உடைக்கப் பட்டது,முதலில் போலாவின் சங்கிலிதான் உடைக்கப்பட்டது,பிலிப் அத்தனை கவனமாய் அதே நேரத்தில் அத்தனை ஆர்வமாய் அவளது கால்களில் பிணைக்கப் பட்டிருந்த அந்த சங்கிலியெனும் அதிகாரத்தை உடைத்தான்,அதன் பிறகு தொடர்ச்சியாக அத்தனை நோயாளிகளின் சங்கிலிகளும் உடைக்கப்பட்டது,எல்லோரும் அவ்வளவு ஆசையாக சங்கிலிகள் அற்ற தங்களது கால்களை தடவி கொடுத்தனர், அந்த வெற்று மணற்பரப்பில் தங்களால் முடிந்த வரை ஒடி பார்த்தனர்,போலா அமைதியாக பிலிப்பையே பார்த்து கொண்டிருந்தாள்,அவளுக்கு பிலிப்பிற்கு நன்றி சொல்ல வேண்டும் போல இருந்தது தனது மனதுக்குளே டான்,டான் என சொல்லிக் கொண்டாள்,பிலிப்பிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் போல இருந்தது திரும்பவும் டான் டான் என சொல்லிக் கொண்டாள்.
கவர்னர் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வீழாவை முடித்த திருப்தியோடு புசினிடம் அரசாங்க முத்திரை பதித்த அந்த கடிதத்தை கொடுத்தார், “டாக்டர்.புசின்,உங்களையும் டாக்டர் பிலிப்பையும் Salpetriere Hospital க்கு மாற்றல் செய்து உத்தரவிடுகிறேன்.உங்களின் இந்த அளப்பறிய சேவை பிரான்ஸ் முழுவதும் பரவ வேண்டும் அதன் நீட்சியாக உலகம் முழுமைக்கும்”
புசின் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டான்,பிலிப்பிற்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் அவன் செய்ய வேண்டிய கடமைகளையும்,வோல்ட்டயார் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையயும் கருத்தில் கொண்டு மாற்றல் உத்தரவினை ஏற்றுக் கொண்டான்.
அடுத்த நாள் ஏழாவது வார்டில் உள்ள நோயாளிகள் அனைவருக்கும் பிலிப் மாற்றலாகி போகப் போவது தெரிந்திருந்தது,எல்லோரும் பிலிப்பின் கையை ஆசையோடு பிடித்து கொண்டனர்,சிலர் அவனை கட்டி அணைத்து கொண்டனர்,பிலிப் போலாவின் அறைக்கு சென்றான் அங்கு அவள் ரோஜா செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்,அவளுக்கும் விசயம் தெரிந்திருந்தது,பிலிப்பின் முகத்தை பார்ப்பதை தவிர்த்தாள்.
"நன்றி போலா,உன்னால் தான் இங்கு அத்தனையும் சாத்தியம் ஆயிற்று,என் மேல் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தாய்,எதிர் காலத்தில் என்னால் நிகழப்போகும் அத்தனை மாற்றங்களுக்கும் நீயே உந்துதலாய் இருப்பாய்,இந்த பிரான்ஸில் ஒவ்வொரு மனநோயாளியின் சங்கிலி என்னால் உடைக்கப்படும்போதும் என் கண் முன் நீ தான் வந்து நிற்பாய்,இப்போது நான் கிளம்புகிறேன் ஆனால் ஒரு நாள் திரும்பி வருவேன் இந்த பைசட்டை பார்க்க,பொழிவடைந்திருக்கும் உன் முகத்தை பார்க்க நான் கட்டாயம் வருவேன்” பிலிப் சொல்லி முடித்தான்.பிலிப்,அவள் அழுவதை கவனித்தான்,பிலிப்பை பொறுத்தவரை அது கண்ணீர் மட்டும் அல்ல, அவனால் மீட்டெடுக்கப் பட்ட அவளுடைய பேருணர்ச்சியின் சிறு வெளிப்பாடு.
போலாவினால் திரண்டு வரும் கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை மிக மென்மையான குரலின் அவன் முகத்தை பார்க்காமல் “டான்,டான்,டான்..” என்றாள்,
அவள் கண்களில் இருந்து திரண்டு வந்த ஒரு கண்ணீர் ஒரு சொட்டு பூக்க தொடங்கியிருந்த அந்த ரோஜா மொட்டின் மீது விழுந்து சிதறியது.
.
No comments:
Post a Comment