Friday, 15 May 2020

COMPARISON BETWEEN ACTORS AND ACTRESS






COMPARISON BETWEEN ACTORS AND ACTRESS



நடிகராக இருந்தாலும், பெரும் செல்வந்தராக இருந்தாலும், எந்தச் சூழ்நிலையிலும் வள்ளலாகவே வாழ்வதும், புயல், வெள்ளம் போன்ற பேரிடர்களின் போது, தாரளமாக நிதி அளிப்பதும், அவரவர் மன இயல்பைப் பொறுத்த விஷயங்களாகும். ‘பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டதால், கொடைத்தன்மையை வெளிப்படுத்தியே ஆகவேண்டும்’ என்று யாரையும் நிர்ப்பந்தப்படுத்திவிட முடியாது. ‘அந்தச் சிறிய நடிகர் எவ்வளவு கொடுத்திருக்கிறார்? இவ்வளவு பெரிய நடிகராக இருந்தும் ஏன் அவரளவுக்கு கொடுக்கவில்லை?’ என்று ஒப்பிடுவதும் சரியல்ல. ஆனாலும், ஒப்பீட்டையும் விமர்சனத்தையும் யாராலும் தடுத்துவிட முடியாது.


தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்தே இந்த ஒப்பீடு இருக்கிறது. நடிகர்களோ, ரசிகர்களோ ஏன் இப்படி நடந்துகொண்டார்கள் என்ற கேள்விகளுக்கும் பஞ்சமில்லை. பாகவதருக்கு அடுத்த இடத்தில் இருந்த பி.யு.சின்னப்பாவும் பெரிய நட்சத்திரம்தான். பாகவதரைப் போலவே பாடி நடித்தவர். இன்னும் சொல்லப்போனால், குஸ்தி, குத்துச்சண்டை, கம்பு சுற்றுதல் போன்றவற்றில் தியாகராஜ பாகவதரைக் காட்டிலும் திரையில் வெளுத்துக் கட்டியவர். கலைத்துறையில், பலவித ஆற்றல் கொண்ட, முழுமையான முதல் கதாநாயகன் என்று இவரைச் சொன்னால் மிகையாகாது. ஆனாலும், தியாகராஜ பாகவதர் அளவுக்குப் பெண் ரசிகைகள் இவருக்கு இல்லை.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் காலத்திய சிரிப்பு நடிகர்தான் புளிமூட்டை ராமசாமி. இவர் எங்கே? அவர் எங்கே? என்றுதான் சொல்ல முடியும். அதே நேரத்தில், அன்றைய ஹீரோவான எம்.ஜி.ஆருக்கே வள்ளலாக வாழ வழிகாட்டியவர் என்.எஸ்.கிருஷ்ணன்தான். நடிப்பில் சிவாஜி அளவுக்கு வாரி வழங்கியவராக எம்.ஜி.ஆர். இல்லை. ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையிலும் கொடை வள்ளலாகத் திகழ்ந்தார் எம்.ஜி.ஆர். அரசியலில் சிவாஜியும்தான் கால் பதித்தார். அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடவும் செய்தார். எம்.ஜி.ஆரோடு ஒப்பிடும்போது, அரசியலில் சிவாஜிக்கு இருந்த மக்கள் செல்வாக்கானது, மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருந்தது. சிவாஜி சிவாஜிதான்! நடிப்பில் இணையற்ற அவரை ஏன் எம்.ஜி.ஆரோடு ஒப்பிட வேண்டும்? ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அம்சம் உள்ளது. இதைப் புரிந்துகொண்டால் போதும். சொந்த விஷயத்திலும்கூட யாரையும் யாரோடும் ஒப்பிட மாட்டோம். 


ஜெயலலிதா – சரோஜாதேவி எப்படி? எம்.ஜி.ஆரோடு ஜெயலலிதா 28 திரைப்படங்களிலும், சரோஜாதேவி 26 திரைப்படங்களிலும் ஜோடியாக நடித்தனர். நிறத்தில் ஜெயலலிதா மினுமினுப்பு என்றால், சரோஜாதேவி கறுப்போ கறுப்பு. ஆனாலும், எம்.ஜி.ஆரோடு ‘கெமிஸ்ட்ரி’ ஒத்துப்போனது. கொஞ்சிப் பேசும் ஸ்டைலிலும், ஒயிலான நடையிலும், சோகத்தைப் பிழிந்து நடிப்பதிலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் சரோஜாதேவி. ஆனாலும், ஜெயலலிதாவால் தமிழகத்தின் முதலமைச்சர் ஆக முடிந்தது.  சரோஜாதேவி ஏன் முதலமைச்சர் ஆகவில்லை என்று யாராவது கேட்டால், சிரிக்கத்தான் முடியும்.  

கமல் – ரஜினி விஷயத்தைப் பார்ப்போம். ரஜினியைக் காட்டிலும் சினிமாவில் சீனியர் கமல்ஹாசன். சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருபவர். எம்.ஜி.ஆர்., ஜெமினி, சாவித்திரி, ஜெயலலிதா போன்ற பிரபல நட்சத்திரங்களோடு நடித்தவர். ஏ.வி.எம். போன்ற சினிமா நிறுவனங்களின் ஆதரவும், பாலசந்தர் போன்ற ஜீனியஸ் இயக்குநர்களின் அரவணைப்பும் கமலுக்கு தாராளமாகவே கிடைத்து வந்தது. நிறத்திலும், நடிப்பு மற்றும் நடனத் திறமையிலும் தனித்தன்மையோடு விளங்கியவர். ரஜினிக்கு இப்படி எந்த ஒரு வலுவான பின்னணியும் கிடையாது. கர்நாடகத்திலிருந்து சினிமா வாய்ப்புத் தேடி சென்னைக்கு வந்தவர். நிறமோ கறுப்பு. நடனத் திறமை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. ஆனாலும், ரஜினியைத்தான் சூப்பர் ஸ்டாராக இன்று வரையிலும் கொண்டாடி வருகிறது தமிழகம். 


அடுத்து, அஜித் – விஜய் பெயர்கள் அடிபடுகின்றன. விளம்பரம் இல்லாமல், எத்தனையோ இடங்களில், தொடர்ந்து மனிதநேயத்தை வெளிப்படுத்தி வருபவர் அஜித்.  தற்போது, கேரள வெள்ள நிவாரண நிதியாக விஜய் ரூ.70 லட்சம் தந்திருக்கிறார். நிதியளித்தவர்களின் பட்டியலில் அஜித் பெயர் இதுவரையிலும் இடம்பெறவில்லை. அதனால், ‘இதுவா மனிதநேயம்?’ என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம். அதனால்தான், இவ்வளவு பெரிய தொகையை நிவாரண நிதியாகக் கொடுத்து முதலிடம் பிடித்திருக்கிறார் என்று நிதி அளித்ததற்கான காரணத்தைச் சொல்லி விமர்சிப்போரும் உண்டு.  




பரந்த உள்ளம் கொண்ட நடிகையைத் துயரம் சூழ்ந்ததே!
‘அட, போங்கப்பா.. அள்ளிக்கொடுத்து மனிதநேயப் பட்டம் வாங்கிய ஒரு பழம்பெரும் நடிகை குறித்து இங்கே குறிப்பிட வேண்டியதிருக்கிறது.’ என்று சினிமா புள்ளி ஒருவர் தந்த தகவல் இது...இந்தியா பாகிஸ்தான் போர் நடந்தது. யுத்த நிதி திரட்டினார் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி. 1965, நவம்பர் 21-ல் பிரதமரிடம் தனிப்பட்ட முறையில் சினிமா நடிகர்கள் நிதி தருவதற்கு, சிவாஜி கணேசனும், ஏ.எல்.ஸ்ரீனிவாசனும் சென்னை ராஜ்பவனில் ஏற்பாடு செய்திருந்தார்கள். வீட்டிலிருந்து கிளம்பியபோது, தன் மகள் சாமுண்டீஸ்வரிக்கு நிறைய நகைகளை அணிவித்து, தானும் அதுபோல் நகைகளை அணிந்துகொண்டார். பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் தாங்கள் அணிந்திருந்த 100 சவரன் நகைகளையும் அப்படியே கழற்றிக்கொடுத்தார். எத்தனை பரந்த உள்ளம் கொண்டவர் சாவித்திரி! ஆனால், அவருடைய இறுதிக்காலம் வறுமையும் துயரமும் நிறைந்ததாக அல்லவா மாறிப்போனது. மரணத்தின்போது உருக்குலைய வைத்தது. 



ஒவ்வொருவருக்கும் தனித்தனி முகம். தனித்தனி குணம். வாழ்க்கை அனுபவமும் அப்படியே! ‘அவர் இப்படி வாழ வேண்டும். அப்படி நடக்க வேண்டும். அள்ளிக்கொடுக்க வேண்டும்.’ என்று விமர்சிப்பது சரியா? என்ற கேள்வி எழும்போது,  ‘ஓ.. அப்படி வருகின்றீர்களா? நாங்கள் சினிமா ரசிகர்கள். எங்கள் பணத்தில்தான் அவர்கள் வசதியோடு வாழ்கிறார்கள். உரிய நேரத்தில், அவர்களை இடித்துரைப்பதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது.’ என்று பதிலடி தருகிறார்கள். 



நிதியளிக்கும் விஷயத்தில், நடிகர்கள் மீதான வலைத்தள விமர்சனங்கள் சிலநேரங்களில் எல்லை மீறிப்போனாலும், அது மக்களுக்கு நன்மை பயப்பதாகவே உள்ளது. 

No comments:

Post a Comment