Wednesday, 13 May 2020

TANJORE BALASARASWATHI CLASSICAL DANCER NOTABLY SHARP IN ABHINAYA BORN 1918 MAY 13 - 1984 FEBRUARY 9



TANJORE BALASARASWATHI CLASSICAL 
DANCER NOTABLY SHARP IN ABHINAYA BORN 1918 MAY 13 - 1984 FEBRUARY 9


தஞ்சாவூர் பாலசரஸ்வதி (T. Balasaraswati, மே 13, 1918 - பெப்ரவரி 9, 1984) தமிழ் நாட்டில் வாழ்ந்த குறிப்பிடத்தக்க பரதநாட்டியக் கலைஞர் மற்றும் நாட்டிய ஆசிரியரும் ஆவார். இவரைப்போல கலைநுணுக்கம் சிறந்த நாட்டியம் யாருமே ஆடவில்லை என்னும் அளவுக்கு கலைநுணுக்க ஆர்வலர்கள் மிகப்பலராலும் போற்றப்பட்டவர்

வாழ்க்கைக் குறிப்பு
பாலசரசுவதியின் முன்னோர் தஞ்சை மராட்டியர்களுடைய அரசவைக் கலைஞர்களாக இருந்தவர்கள். இவரது மூதாதையர்களில் ஒருவரான பாப்பம்மாள் என்பவர் தஞ்சை அரசவையின் இசைக் கலைஞரும், நடனக் கலைஞருமாக இருந்தவர். புகழ் பெற்ற வீணை தனம்மாள் இவரது பாட்டியின் சகோதரியாவார். தாயார் ஐயம்மாள் ஒரு சிறந்த பாடகி. தந்தை கோவிந்தராஜுலுவும் ஓர் இசைக் கலைஞர் ஆவார்.[1]


பாலசரஸ்வதி, தனது மூன்று வயதிலேயே இவர்களது குடும்ப நண்பரும், பிரபலமான பரதநாட்டியக் கலைஞருமான மயிலாப்பூர் கௌரி அம்மாளிடம் நடனம் கற்க ஆரம்பித்தார். பின்னர் கந்தப்பா நட்டுவனாரிடம் நடனம் கற்க ஒழுங்கு செய்தவர் பிரபலமான வாய்ப்பாட்டுக் கலைஞர் அரியக்குடி இராமானுச ஐயங்கார் ஆவார். கந்தப்பா நட்டுவனாரின் தந்தை நெல்லையப்பா நட்டுவனார் பந்தனைநல்லூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை போன்று தஞ்சை நாட்டிய சகோதரர் நால்வரின் மருகர் ஆவார்.கந்தப்பா நட்டுவனாரும் அவர்கள் பேணிவந்த நடனக்கலை மரபிலேயே அக்கலையை பாலசரசுவதிக்குப் புகட்டினார்.[1]

ஏழாம் வயதில் பாலசரஸ்வதியின் நடன அரங்கேற்றம் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் நடைபெற்றது.[1] சிறு வயதிலேயே நடனத்தில் அவருக்கு இருந்த திறமை விமர்சகர்களாலும் ஏனையோராலும் போற்றப்பட்டதாகத் தெரிகிறது. ஐரோப்பார, கிழக்காசியா, வட அமேரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் பரத நாட்டியத்தை அரங்கேற்றினார். வெஸ்லின் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக் கழகக் கல்லூரி, வாசிங்டன் பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஒரே இந்தியப் பெண் இவர்தான். அன்னா கிசல் காஃப் என்னும் நடன விமர்சகர் இவரை உலகின் மிகச் சிறந்த நடனக் கலைஞர் என பாராட்டியுள்ளார்.[2] அமெரிக்காவின் ஈடிணையற்ற நடன பொக்கிஷங்கள்: முதல் நூறு பேர்’ என்ற புகழ்பெற்ற பட்டியலில் சேர்க்கப்பட்ட மேற்குலகைச் சேராத ஒரே கலைஞர் பாலசரஸ்வதிதான்.

வழிவழியாகக் கையளிக்கப்பட்ட பரதக் கலையை சாஸ்திரத்துக்கு உள்ளே அடைக்கும் முயற்சியை தொடர்ந்து பாலசரஸ்தி எதிர்த்தார், மேலும் இந்தக் கலையை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்கு மட்டுமே உரியதாக ஆக்கிய பிராமணிய ஆக்கிரமிப்பை எதிர்த்ததால், அவர் வாழ்ந்த காலத்திலேயே அவருக்கான அங்கீகாரங்கள் பெரிதாக இந்தியாவில் அளிக்கப்படவில்லை அவர் மறைவுக்குப் பிறகு இந்தப் புறக்கணிப்பானது தொடர்கிறது. என்று பாலசரஸ்தியின் மருமகனும் மிருதங்கக் கலைஞருமான டக்ளஸ் எம். நைட் குறிப்பிட்டுள்ளார்.[3]

பாலசரஸ்வதி வரலாற்றை ‘பாலசரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும்’ என்ற நூலை டக்ளஸ் எம். நைட் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார், இது தமிழிலும் வெளிவந்துள்ளது.


l நான்கு வயதாக இருந்தபோது, பிரபல நாட்டியக் கலைஞர் தஞ்சாவூர் கே.கந்தப்ப பிள்ளையிடம் தீவிர நடனப் பயிற்சி தொடங்கியது. இவரது கலைப் பயிற்சிக்கு தாய் உறுதுணையாக இருந்தார். நடன அரங்கேற்றம் 7 வயதில் காஞ்சிபுரம் கோயிலில் நடந்தது. வயதுக்கு மீறிய முகபாவனைகள், மிகவும் கடினமான நடன அசைவுகளை அனாயாசமாக செய்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினார். ‘குழந்தை மேதை’ என்று புகழப்பட்டார்.

l அந்தக் காலத்தில் நடனம் ஆடுபவர்கள் பல இன்னல்களுக்கு ஆளானதால் பரதநாட்டியம் நசியும் கலையாக மாறியிருந்தது. ருக்மணி தேவி போன்றோரின் முயற்சியால் திரும்பவும் உயிர்பெற்ற பரத நாட்டியத்தின் முதல் தூணாக இவர் கருதப்பட்டார்.

l நடனக் கலைஞர்களுக்கு சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தார். கோயில்களில் மட்டுமே நடைபெற்றுவந்த நடனக் கலையை வெளி இடங்களிலும் பரவச் செய்தார்.

l இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பாரநாட்டியத்தின் புகழைப் பரவச் செய்தார். பாரம்பரிய நடனம், இசை ஆகிய இரண்டையும் கற்றுத் தேர்ந்து இரண்டிலும் புரட்சியை ஏற்படுத்தினார். இவரது நடனத்தால் கவரப்பட்ட பிரபல நடன இயக்குநர் உதய் ஷங்கர் இவரது நடனக் கலையை நாடு முழுவதும் பரவச் செய்வதார்.

l தனது குடும்பத்திலேயே தென்னிந்தியாவுக்கு வெளியே முதன்முதலாக கலை நிகழ்ச்சி நடத்தியவர் இவர்தான். முதலில் 1934-ல் கல்கத்தாவில் இவரது நிகழ்ச்சி நடைபெற்றது.

l ஷம்பு மஹராஜ், டேம் மார்கட் ஃபான்டெய்ன், மார்தா கிரஹாம் உள்ளிட்ட புகழ்பெற்ற சர்வதேச விமர்சகர்களின் கவனத்தையும் மரியாதையையும் பெற்றார். ‘உலகின் தலைசிறந்த நடனக் கலைஞர்’ என்று போற்றப்பட்டார்.

l 1960-களில் சர்வதேச அங்கீகாரம் பெறத் தொடங்கினார். ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா என உலகம் முழுவதும் இவரது நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு கலைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நடன ஆசிரியராகப் பணியாற்றவும், நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தவும் 1980களில் அமெரிக்கா சென்றார். சென்னை மியூசிக் அகாடமி தந்த ஊக்கத்தால் அந்த அமைப்புடன் இணைந்து நாட்டியப் பள்ளியை நிறுவினார்.

l இவரது நடனக் கலையால் ஈர்க்கப்பட்ட சத்யஜித் ரே இவரை வைத்து ‘பாலா’ என்ற குறும்படம் தயாரித்தார். நாட்டின் 2-வது உயரிய விருதான ‘பத்ம விபூஷண்’ இவருக்குக் கிடைத்தது. சென்னையில் உள்ள இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி இவருக்கு சங்கீத கலாசிகாமணி விருதை வழங்கியது. சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள், பட்டங்களைப் பெற்றுள்ளார். உலக அளவில் பல கவுரவங்களைப் பெற்றார்.

l இந்தியாவில் பரத நாட்டியக் கலைக்கு புத்துயிர் அளித்து, பரதநாட்டியத்தில் தனி முத்திரை பதித்த பாலசரஸ்வதி 66 வயதில் (1984) மறைந்தார்.

பிரபல முற்போக்கு எழுத்தாளர் திரு. சாரு நிவேதிதாவின் விமரிசனத்தைத் தொடர்ந்து மீள் பதிவு.

ஐரோப்பாக் கண்டத்தில், காலக்கோட்டில், Renaissance period என்று சொல்லுவாரகள்; அக்காலகட்டத்தில் ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் பிறந்த பீதொவன், மொசார்ட், பாஷ்ச் போன்ற இசை மேதைகள் வாழ்ந்தார்கள். இத்தாலி போன்ற நாடுகளில் மைக்கேல் ஏஞ்சலோவும், ராஃபேய்ல் என்ற சிற்ப ஒவியக்கலைஞர்களும் வாழ்ந்தார்கள். இந்த மேதைகளின் ஊர்களின் எண்ணிக்கையையும், மேதைகளின் எண்ணிக்கையையும் விரல்விட்டு எண்ணலாம்.
ஆனால், தஞ்சை மண்ணில் கலைகளை வளர்த்த கிராமங்களின் எண்ணிக்கையையும் மேதைகளின் எண்ணிக்கையையும் கணக்கிட இயலாது. ஐயாயிரம் ஆண்டுகளாக இம்மண்ணில் வாழ்ந்த இசைக்கலைஞர்களின் பெயர்கள் எழுதிவைக்கப்படவில்லை. சிற்பிகளின், ஒவியக்கலைஞர்களின் பெயர்கள் எழுதிவைக்கப்படவில்லை. நூற்றைம்பது, இருநூறு ஆண்டுகளில் வாழ்ந்தவர்களின் பெயர்களை எழுதினால் அது நூற்றுக்கணக்கில் வரும். அதாவது குறைந்தபட்சம் ஒரு ஊருக்கு ஒரு இசைக்கலைஞன், ஒரு தவில் வித்துவான், ஒரு நாதஸ்வர வித்துவான், ஒரு நட்டுவனார், ஒரு நடனமணி கிடைப்பார்கள்.

ஒரு மணித்துளி சிந்தனையில் எனக்கு ஞாபகம் வந்த பெயர்கள், சீர்காழி முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை,அருனாசலக் கவிராயர்,தியாகராஜ பாகவதர்( மாயவரம்) குமாரி கமலா, தஞ்சாவூர் பாலசரஸ்வதி, ஊத்துக்காடு வேங்கட சுப்பையர், திருகோடிகாவல் கிருஷ்னையர், வேங்கடராமையர், மகாராஜபுரம் விஸ்வனாதையர், கோனேரிராஜபுரம், தஞ்சை மூர்த்தி, கிடப்பா பிள்ளை, பொன்னையா பிள்ளை, தஞ்சை நால்வர், மன்னார்குடி சின்னபக்கிரி, நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம், குளிக்கரை பிச்சையப்பா, திருவிடைமருதூர் வீருசாமி பிள்ளை, திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, குடந்தை சுந்தரேசன், திருமருகல் நடேசப் பிள்ளை, திருப்பாம்புறம் சாமினாத பிள்ளை, வழுவூர் ராமையா பிள்ளை. பந்தனல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தஞ்சை ஹேரம்பனாதன், திருவாரூர் ஞானம், கலியானசுந்தரம் பிள்ளை, திருச்சேறை, ஆண்டாங்கோயில், கும்பகோனம் பிடில் ராஜமானிக்கம் பிள்ளை. ஒரு நிமிட ஞாபகத்தில், ஒரு பொறியாளன் ஞாபகத்தில் இத்தனை பெயர்கள்.


பலநூறு ஆண்டுகளில் வாழ்ந்த மேதைகளின் பெயர்கள் பதியப்பட்டிருந்தால் அது எத்தனை ஆயிரங்கள் இருக்கும்.
இந்த எண்ணிக்கையை வைத்து ஒரு ஹெக்டேருக்கு எத்தனை மேதைகள் என்று கணக்கிடலாம். அதாவது ஒரு ஏக்கருக்கு எத்தனை கலம் என்பது போல்.
தஞ்சை மண்ணில் ஏர் பூட்டி கலப்பை கொண்டு உழுதால், பொன்னி அரிசி மாத்திரமா கிடைக்கிறது. கலப்பை மண்ணைக் கிளரும்போது, மண்ணுள்ளிருந்து, குமிண் சிரிப்பும் கொவ்வைச் செவ்வாயுங்கொண்ட ஆடவல்லான் வெளியே வருகிறான், நீலமேணி நெடியோன் வருகிறான், பங்கயச் செல்வி வருகிறாள், கால சம்ஹாரரும், கலியாணசுந்தரரும் வருகிறார்கள். இன்னும் சற்று ஆழமாக உழுதால் நாதஸ்வரம் வரும், குழல் வரும் யாழ் வரும் முழவு வரும். உழுது உழுது இசையை வளர்த்தவர்கள் தஞ்சாவூர்க்காரர்கள்.

மண்ணிலிருந்து நாதச்வரம் வருமென்பது வெறும் கற்பனையன்று. திருவையாறு அரசர் கல்லூரி, ஓய்வு பெற்ற தலைவர் முனைவர் செல்வ கணபதி அவர்களின் மாமா குஞ்சிதபாதம் பிள்ளை, திருவீழிமிழலையில் வாழ்கிறார். அவர் செய்யும் சீவாளி (Reed) யைத்தான் நாதஸ்வரத்தில் பொருத்தி ஊதி நாதமெழுப்ப பயண்படுத்துகிறார்கள். இந்த சீவாளி காவேரிப் படுகையில் விளையும் நாணலில் இருந்து செய்யப்படுவது. அவர் சொல்லுகிறார், “ திருக்காட்டுப்பள்ளிக்கு மேற்கே இருக்கும் படுகையில் வளரும் நாணலில் செய்யும் சீவாளி நாதத்தைத் தருவதில்லை; வெறும் சத்த்த்தைத்தான் தரும். கிழக்கே இருக்கும் படுகை நாணலில்தான் நல்ல சீவாளி செய்ய இயலும்”. அதாவது நல்ல சீவாளிக்கு தஞ்சை மண்ணும் காவேரி தண்ணீரும் வேண்டும்.
அதுபோலவே, நாதச்வர குழல் செய்ய உதவும் ஆச்சாள் மரம் கொள்ளிடம் தென்கரையிலுள்ள ஆச்சாள்புரத்தில் அதிகமாகக் கிடைக்கிறது. இன்னும் ஒருசில குடும்பங்கள்தான் இந்த தொழிலில் இருக்கிறார்கள்.
இப்போது தெரிகிறதா, காவேரி நீரும் தஞ்சை மண்ணும் கொண்ட பூமியிலிருந்துதான் நாதஸ்வரம் //வருகிறது// என்று.
அதுபோலவே உலகம் முழுமைக்கும் வீணை தஞ்சாவூரிலிருந்துதான் (பலாமரம்) அனுப்பப்படுகிறது.

மேற்கண்ட உண்மைகளிலிருந்து பெறப்படுவது, (1) கலைஞர்கள் வாழுமிடங்களின் செறிவு உலகிலேயே தஞ்சையில்தான் அதிகம்; (2) அக்கலைஞர்களுக்கான கருவிகளின் உற்பத்திச் செறிவும் தஞ்சையில்தான் அதிகம். அது இயற்கையின் கொடையாக அமைந்திருக்கிறது.
எனவே, அகில உலகிற்கும் கலைகளின் தலைநகரம் தஞ்சாவூர்.


டக்ளஸ் எம்.நைட் ஜூனியர்

இன்று (பிப்ரவரி 9) பாலசரஸ்வதி நினைவு தினம்

இருபதாம் நூற்றாண்டின் மகத்தான நிகழ்த்துக் கலைஞர்கள், இசைக் கலைஞர்களில் ஒருவர் தஞ்சாவூர் பாலசரஸ்வதி (1918-1984). அவர் தேர்ச்சி பெற்றிருந்த பரதநாட்டியம் எனப்படும் நடனக் கலையின் தென்னிந்தியாவில் உருவான மரபுசார் கலை. இசை, நடனம், பிரத்யேகமான / தனித்துவமிக்க நாடகீய உத்திகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்ட கலை / ஒருங்கிணைக்கும் கலை இது. பாலசரஸ்வதியின் கலையும் வாழ்வும் மரபின் இதயத்தை / ஆதாரத்தை வரையறுத்தன. இன்று இந்தியாவின் செவ்வியல் நடன வகைகளில் ஒன்று எனச் சொல்லப்படும் பரதநாட்டியத்தை மறுஉருவாக்கம் செய்வதற்கான அடிப்படையாக இவரது வாழ்வும் கலையும் விளங்கின.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் மரபுசார் கலைஞருக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது. குறைந்தபட்சம், கலையின் புதிய மையங்களாக மாறிவந்த சென்னைபோன்ற நகரங்களில் இது நிகழ்ந்தது. நவீனமயமாக்கப்பட்ட பண்பாடும் தேசியப் பண்பும் பாலசரஸ்வதியின் உலகின் யதார்த்தத்தைப் புறக்கணித்தன. யதார்த்தம் புராணக் கதை வடிவில் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மாறியது.



பாலசரஸ்வதியின் முக்கியத்துவத்தை இன்று புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நமது கண்ணோட்டத்தின் தளைகளிலிருந்து நாம் வெளியே வர வேண்டும். மேலும் பெரிய, வியப்புக்கு ஆட்படக்கூடிய கண்களின் வழியாக, மரபுசார் பரதநாட்டியத்தின் பாரம்பரியத்தைத் தழுவிக்கொண்ட உலகை நாம் காண வேண்டும்.

அண்மைக் காலத்தோடு ஒப்பிட்டால்கூட இந்தியாவின் சமகால யதார்த்தம் மாறுபட்டது. 1918இல், பாலசரஸ்வதி பிறந்தபோது இருந்த பண்பாட்டு, சமூக யதார்த்தங்கள் பெருமளவில் மாறுபட்டவை. எனவே அவற்றைத் துல்லியமாகப் புரிந்துகொள்வது கடினம். காலனியாதிக்கத்துக்கு ஆட்பட்ட, மிகவும் நைந்துபோயிருந்த, ஒன்றுக்கொன்று உறவாட முடியாதவை என்று தோற்றமளித்துக்கொண்டிருந்த பன்மைத்தன்மையைக் கொண்டிருந்த தேசமான இந்தியா தன்னைத் தானே மறுகண்டுபிடிப்பு செய்துகொள்ள வேண்டிய சூழலை எதிர்கொண்டது. ஒடுக்குமுறையையும் குழப்ப நிலையையும், தவறான கண்ணோட்டங்களையும் பொய்மையையும் புரட்டையும் வெற்றிகொண்டு, அதன் மூலம் சுய-அங்கீகரிப்பையும் பெருமிதத்தையும் அடையுமளவுக்கு முதிர்ச்சி அடைந்து இந்த மறுகண்டுபிடிப்பை இந்தியா எதிர்கொண்டது.



பாலசரஸ்வதியின் குடும்பம், கலையைப் பேணிவந்த, கலையையே தமது தொழிலாகக் கொண்ட நூற்றுக்கணக்கான குடும்பங்களில் மிகவும் புகழ்பெற்ற குடும்பம். 100 ஆண்டுகளுக்கு முன்பு நடன மரபை இந்தக் குடும்பங்கள் மட்டுமே பேணிவந்தன.

தங்களையும் தங்கள் பண்பாட்டையும் மறுவரையறை செய்துகொள்ள முயன்றவர்களில் ஒருவர் பாலசரஸ்வதி. ஆனால், அவர் தனது மரபுக்கு உண்மையாக இருந்தார். புராணிகத்தன்மை நிரம்பிய கடந்த காலத்தை மறுகட்டுமானம் செய்வதன் மூலம் இந்தியாவின் மகத்துவத்தை வரையறுக்கும் முயற்சியை அவர் ஏற்கவில்லை. கொடூரமான தாக்குதல்களையும் கலாச்சார ரீதியான ஒடுக்குமுறையையும் தாண்டித் தன் உயிரைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் கலையின் அமைப்பையும் அதன் நடைமுறையையும் தொடர்ந்து பேணிவருவதன் மூலம் அந்த மகத்துவத்தின் உருவமாகத் திகழ்ந்தார்.



பாலசரஸ்வதியின் கதை தாய்வழி மரபுக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒருங்கமைக்கப்பட்ட சமூக அமைப்பைப் பின்புலமாகக் கொண்டது. இந்த அமைப்பில் பெண்கள்தாம் குடும்பத் தலைவர்கள். இந்தியாவிலும் உலகின் பிற இடங்களிலும் உள்ள சில குடும்பங்களில் இந்த அமைப்பு இன்னமும் நடைமுறையில் உள்ளது. தேவதாசி என்று சில சமயம் அழைக்கப்பட்ட இந்தச் சமூகத்தினர், இன்று இந்தியாவில் பிரபலமாக இருக்கும் இசை, நடனம் முதலான பல்வேறு மரபுகளைத் தொன்றுதொட்டுப் பாதுகாத்துவருபவர்களாக அங்கீகாரம் பெற்றாலும், பொதுச் சமூகத்தில் முறையான விதத்தில் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்ததில்லை.



பல விதமான பெண்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் குறிப்பிடுவதற்கு தேவதாசி என்னும் சொல் பயன்பட்டுவந்தது. 1901இல் மெட்ராஸ் பிரஸிடென்ஸியின் பிரிட்டிஷ் நிர்வாகம் வெளியிட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தேவதாசி என்னும் சொல் ஏழு விதமான பொருள்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. நடனமாடுதல், பாடுதல் ஆகியவற்றை நிகழ்த்துக் கலைகளாகப் பயின்றுவரும் பெண்களைக் குறிப்பது அவற்றில் ஒன்று. இசை வேளாளர் உள்ளிட்ட வேறு பெயர்களிலும் அந்தச் சமூகம் அறியப்பட்டிருந்தது. அச்சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் பிள்ளை, முதலியார் ஆகிய குடும்ப / சாதிப் பெயர்களைத் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் வைத்துக்கொள்ளும் வழக்கமும் இருந்தது.



இன்று தேவதாசி என்னும் சொல் பொறுப்பற்ற / விவரமற்ற முறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சில சமயம் தவறான பொருளிலும் இழிவுபடுத்தும் வகையிலும் பயன்படுத்தப்படுகிறது. தேவதாசிக் குடும்பங்களில் பெரும்பாலானவை வேளாண் தொழிலின் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக்கொண்டன. குடும்பத்தின் சில உறுப்பினர்களே இசை, நடனக் கலைஞர்களாக விளங்கினார்கள். தேவதாசிகளின் வரலாறு மிகவும் சிக்கலானது. இந்திய வரலாற்றில் பல்வேறு சமூக, சமூக-சமயப் பிரச்சினைகளோடு தொடர்புகொண்டது.



18ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர் அரண்மனையில் இருந்த பாப்பம்மாள் என்னும் இசை, நடனக் கலைஞரின் ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர் பாலசரஸ்வதி. இசையும் நடனமும் பாப்பம்மாளின் காலத்திலிருந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இடையறாமல் பயணித்துவந்தது. 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாலசரஸ்வதியின் குடும்பத்தினர், பாப்பம்மாளின் எள்ளுப் பேத்தி வீணை தனம்மாளைத் தங்களது கலையின் ஊற்றுக்கண்ணாக அடையாளம் காண்கிறார்கள். 1867இல் பிறந்த தனம்மாளின் ரத்தத்திலேயே இசை ஊறியிருந்தது. அவர் குடும்பத்தின் தலைவராக இருந்தார்.

பாலசரஸ்வதியோடு உணர்வுபூர்வமாக ஈடுபாடு கொண்டவர்கள் உலகம் முழுவதிலும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அதற்கான தனித்த காரணம் இருக்கிறது. பாலசரஸ்வதியின் இயல்பு அப்படிப்பட்டது. எண்ணற்றவர்களின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் அவரது மகத்துவத்துக்கு ஒரு சான்று. பாலசரஸ்வதியுடன் நட்பு கொண்ட அனைவரும் அதைத் தனிப்பட்ட முறையில் மிகவும் நெருக்கமான உறவாகவே கருதினார்கள். பிறருடன் உறவாடும்போது முன்னெச்சரிக்கையோடு நடந்துகொள்ள பாலசரஸ்வதிக்குத் தெரியாது. யாரையாவது நம்பிவிட்டால் அவரோடு முழுமையாக நட்புக் கொள்வதும் அவர் மிக எளிதில் தன்னை அணுக அனுமதிப்பதும் அவரது இயல்பு. பாலசரஸ்வதியின் இந்த பலவீனம் அவரைப் பாதித்துவிடாமல் காப்பாற்றுவதற்காக அவர் மகள் கடுமையாக முயற்சிசெய்தார். இந்த அளவுக்கு நெருக்கமாகப் பழகியதால் அவரை அறிந்தவர்கள் அனைவரும் பாலசரஸ்வதிக்கென்று உள்ள பார்வை, உள்ளுணர்வு ஆகியவற்றை அறிவார்கள்.



கற்றுத்தருவதிலும் பகிர்ந்துகொள்வதிலும் இந்தச் குடும்பத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கு இருந்த அபாரமான ஆற்றல் இவர்களுடைய சிறந்த பண்புகளில் ஒன்று. தங்கள் கலை, கலை சார்ந்த அறிவு ஆகியவற்றுக்கு வளமூட்டுவதிலும் இவற்றைக் கற்றுத்தருவதிலும் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பாலசரஸ்வதியும் அவரது குடும்பத்தினரும் அசாதாரண உழைப்பைச் செலுத்தினார்கள். இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பல கலைஞர்களிடத்தில் இந்தக் குடும்பத்தின் பாணி, அவர்கள் வசம் இருந்த கலைக் களஞ்சியம் / கலைத் தொகுப்பு ஆகியவற்றின் செல்வாக்கு / தாக்கம் இருக்கிறது.

பாலசரஸ்வதியின் தம்பி விஸ்வநாதன் முதல் முதலில் 1958இல் அமெரிக்காவுக்குச் சென்ற பிறகு அவரது குடும்பத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் வட அமெரிக்கா, ஐரோப்பா, கிழக்கு ஆசியா ஆகிய இடங்களுக்குச் சென்று கற்பித்திருக்கிறார்கள். இந்தியாவின் நிகழ்த்துக் கலைகளைக் குறித்த உலகின் புரிந்துணர்வுக்கு இந்தக் குடும்பம் செலுத்தியிருக்கும் பங்களிப்பு அசாதாரணமானது. பாலசரஸ்வதியின் குடும்பத்தினரிடமிருந்து கற்றுக்கொண்ட எண்ணற்றவர்களில் நானும் ஒருவன். ஆனால், இந்தக் குடும்பத்தினருக்கு மறுக்கப்பட்ட உரிமைகள், பொதுச் சமூகத்தில் இவர்களுடைய நிலை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள எனக்குப் பல ஆண்டுகள் ஆயின. சமுதாயத்தில் அவருக்கு இன்று இருக்கும் மகத்தான படிமத்தை வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட பெரும் சிரமங்களின் பின்னணியில் வைத்தே மதிப்பிட வேண்டும் என்பதற்கான தேவையை இந்த நூலை எழுதும்போது நான் உணர்ந்தேன்.



இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியிலும் தென்னிந்திய நடன வரலாற்றில் பாலசரஸ்வதி அலாதியானதொரு இடத்தைப் பெற்றிருக்கிறார். மரபுசார் கலை மற்றும் சமூகத்தின் பிரதிநிதியாக அறியப்பெற்றிருக்கிறார். அவரது பங்களிப்பு இல்லையேல் இந்தக் கலையும் சமூகமும் கிட்டத்தட்ட மறைந்துபோயிருக்கும். இது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு அவர் தீவிரமான கலகக்காரர் என்பதும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த, முழுமையான நவீனக் கலைஞர் என்பதும் உண்மை.







.

No comments:

Post a Comment