SURYA SEN ,FREEDOM FIGHTER ,BRITIS H ARMOUR ATTACKED/SEIZED ON 1930 APRIL18 BORN MARCH 22, 1894
ஒருநாள் எனது சுதந்திர இந்தியா ஒளிரும் – சூரியா சென் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
September 30, 2018 magaram.in தமிழகம், தேசிய செய்திகள் 0
Surya Sen
வெள்ளையர்கள் இவரைத் தூக்கில் போடுவதற்கு முன்பு இவரது பற்களை சுத்தியால் அடித்து உடைத்தார்கள்; நகங்களை பிடுங்கினார்கள் ; எலும்புகளை உடைத்து நோகடித்தனர். நினைவிழந்த நிலையில் இவரை தூக்கு மேடையில் ஏற்றினர்.
அவ்வளவு வெறி – குரூரம்;வன்மம். கேட்டால் அவர்களது கடவுள் அன்பே வடிவானவர்!
இவர் கடைசியாக சொன்ன வார்த்தைகள் – “ஒருநாள் எனது சுதந்திர இந்தியா ஒளிரும்”.
பாட புத்தகங்களில் இவர் இல்லை. காரணம் இவர் பெயரில் காந்தி இல்லை. பத்திரிகைகள் இவரை எழுதாது. ஏனெனில் அவற்றின் உண்மை எஜமானர்களான வெள்ளையனை உண்மையாக உறுதியாக எதிர்த்தவர்.
மாஸ்டர் தா என்று அன்போடு அழைக்கப்பட்ட சூர்யா சென் தான் இவர். சுதந்திரப் போராளி.
மார்ச் 22 இவருடைய பிறந்த நாள் நூற்றாண்டுகள் கடந்தும் சத்தம் இல்லாமல் கடந்து போனது.
சூர்யா சென் தூக்கு கயிற்று முன்பு கூறிய வார்த்தைகள்
“மரணம் என் வாழ்க்கையின் வாசற் கதவைத் தட்டுவது என் காதில் கேட்கிறது. என் மனம் எல்லையற்ற பெருவெளியை நோக்கி மெல்லப் பறக்கத் தொடங்கிவிட்டது.
விழி மூடும் இந்த மரணப் பொழுதில் என் நண்பர்களிடம் நான் ஒன்றை மட்டும் என் நினைவாக விட்டுச் செல்கிறேன்.
அதுதான் ‘சுதந்திர இந்தியா’ என்ற என் பொற்கனவு.
தோழர்களே! இந்தக் கனவை நனவாக்க நம் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள். எந்த நிலையிலும் ஓரடிகூடப் பின்வாங்க முயல வேண்டாம்.
நம் தேசத்தின் அடிமைப் பொழுது முடிந்துவிடும். சுதந்திரத்தின் ஒளிக்கதிர்கள் பொன்னொளி வீசுவதைக் காணுங்கள். எல்லோரும் எழுங்கள், அவநம்பிக்கை அடையாதீர்கள். வெற்றி விரைவில் வந்து சேரும்” – இது தூக்கில் தொங்விடப்படுவதற்கு முன்பு சூர்யா சென் எழுதிய கடிதத்தில் இடம் பெற்றிருந்த அறைகூவல்.
………………………………………………
சூர்யா சென் வாழ்க்கை வரலாறு:
இந்திய விடுதலைப் போரின் புரட்சித் தலைவர்களில் முதன்மையானவர், தேசபக்தி உணர்வு கொண்ட இளைஞர்களைத் திரட்டி புரட்சி படை அமைத்து, பிரிட்டிஷ் இராணுவத்துடன் நேருக்கு நேர் போரிட்டவர், தாய் நாட்டின் விடுதலைக்கு தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர். அவர் தான் புரட்சிப் போராளி சூர்யாசென்.
சூர்யா சென் சிட்டகாங் மாவட்டத்தில் ராசூன் அருகில் உள்ள நோப்பரா கிராமத்தில் 1894-ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 22ஆம் நாள் பிறந்தார். தமது மாமாவின் ஆதரவில் வளர்ந்தார்.
பெர்ஹாம்பூர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். கல்லூரியில் பயிலும் போது ‘யுகாந்தர்’ என்ற புரட்சிகர இளைர் இயக்கத்தினை 1918ஆம் ஆண்டு ஏற்படுத்தினார். தமது வாழ்க்கையை தாய் நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணிக்க உறுதிபூண்டார். பிரிட்டிஷ் ஆட்சியை அகற்றுவதற்கு ஆயுதம் தாங்கிய கொரில்லாப் போர் முறையே உகந்தது என்ற முடிவுக்கு வந்தார்.
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அவர் பணிபுரிய விரும்பவில்லை. ஆங்கிலக் கல்வி முறைக்கு மாற்றாகத் தேசப்பற்றை அடிப்படையாகக் கொண்ட தேசியக் கல்வி அளிக்கும் பள்ளியை உருவாக்கி, அவரே ஆசிரியராகவும் பணியாற்றினார். மக்கள் அவரை அன்புடன் ‘மாஸ்டர்தா’ (ஆசிரிய சகோதரர்) என்று அழைத்தனர்.
காங்கிரஸ் கட்சியின் அகிம்சா வழி முறையை சூர்யாசென் ஏற்கவில்லை. காந்தியடிகளின் திட்டம் தோல்வியைத் தழுவியது என்று சூர்யாசென் அறிவித்தார். சிட்டகாங்கை தளமாகக் கொண்டு செயல்பட்ட சூர்யாசென்னின் புரட்சிப் படையில் கணேஷ் கோஷ், சுபோத் சௌத்ரி, லோக்நாத் பால், ஆனந்த் குப்தா, பணீந்திர நந்தி, ஆனந்த் சிங், சகாய்ராம் தாஸ், பக்கீர் சென், லால்மோகன் சென், சுகேந்து தஸ்தகீர், ரணதீர் தாஸ் குப்தா, அணில் பந்து தாஸ், நந்திசின்ஹா, சுபோத்ராய், தாரகேஸ்வர் தஸ்தகீர், பிரசன்ன தாலுக்தார், சுபேந்திர தாஸ் முதலிய படித்த இளைஞர்களும், பிரிதிலதா வடகேர், கல்பனா தத் முதலிய வீராங்கனைகளும் சேர்ந்தனர். அந்த இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சியும், துப்பாக்கிச் சுடும் பயிற்சியும், வெடிகுண்டு தயாரித்தல் மற்றும் உபயோகப்படுத்துவதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டது. சூர்யாசென் அமைத்த புரட்சிப் படையில் பயிற்சி பெற்ற நூற்று ஐம்பது இளைஞர்கள் இணைந்து செயல்பட்டனர்.
அஸ்ஸாம்-பெங்கால் ரயில்வே’யின் கருவூலத்தை பட்டப்பகலால், சுட்டெரிக்கும் சூரிய வெளிச்சத்தில் 1923ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் நாள் தமது புரட்சிப்படை தோழர்களுடன் தாக்கிச் சூரையாடினார். சூர்யா சென் போலீசியிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டார். ஆனால் சூர்யா சென் 1926ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, விசாரணையின்றி சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் 1928ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.
சிட்டகாங் நகரம் இன்றைய வங்காள தேசத்தின் கீழக்கரை துறைமுக நகரங்களில் முக்கியமானது ஆகும். ஒரு பக்கம் கடல், மறுபக்கம் ஏற்ற இறக்கங்களும் அடர்த்தியான காடுகளும் கொண்ட ஜலாலாபாத் மலைத் தொடர் மற்றும் மலைச் சரிவுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள அந்த நகரம் கொரில்லாப் போர் முறைக்கு மிகவும் உகந்த இடம்.
சிட்டகாங் துறைமுகப் பட்டிணத்தில் பிரிட்டிஷ் அரசு ஆயுதக் கிடங்கு ஒன்றை அமைத்திருந்தது. வங்கப் புரட்சியாளர்களை ஒடுக்குவதற்கு அங்கிருந்துதான் பிரிட்டிஷ் போலீசாருக்கும், இராணுவத்தினருக்கும் ஆயுதங்கள் வழங்கப்பட்டு வந்தது.
அந்த ஆயுதக் கிடங்கை கைப்பற்றி சிட்டகாங் நகரை சுதந்திர நகராகப் பிரகடனப்படுத்த வேண்டுமென்று, ‘இந்துஸ்தான் குடியரசு இராணுவம்’என்ற புரட்சிப் படையின் தளபதியை சூர்யாசென்னும் அவரது தோழர்களும் திட்டமிட்டனர்.
சிட்டகாங்க ஆயுதக் கிடங்கை கைப்பற்றும் திட்டம் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி செயல்படுத்தப்பட்டது. புரட்சித் தளபதி சூர்யா சென் தலைமையில் 125 புரட்சி வீரர்கள் ஆயுதக் கிடங்கை முற்றுகையிட்டனர்.
பிரிட்டிஷ் இராணுவ வீரர்கள் மீது வெடிகுண்டுகளை வீசினார்கள். எதிர்த்துப் போரிட்ட பிரிட்டிஷ் இராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டுப் பொசுக்கினார்கள். வாள் வீச்சால் பலரை பலி கொண்டனர். புரட்சிப் படையின் ஒரு பிரிவு ஆயுதக் கிடங்கை சுற்றி வளைத்தது. மற்றொரு பிரிவு தொலைபேசி நிலையத்தை தகர்த்தெறிந்து தகவல் தொடர்பை துண்டித்தது. இன்னொரு பிரிவு இரயில் தண்டவாளங்களைத் தகர்த்து போக்குவரத்தைத் தடுத்தது. நான்காவது பிரிவு துறைமுகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ஆயுதக் கிடங்கில் குவித்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் மூட்டைகளாக் கட்டி எடுத்துக் கொண்டு, ஆயுதக் கிடங்கை தீ வைத்து கொளுத்தினர். ஆயுதக் கிடங்கின் பிரிட்டிஷ் தளபதி மேஜர் பெர்ரோல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆயுதக் கிடங்கு சூரையாடப்படுவதை கேள்வியுற்ற பிரிட்டிஷ் அரசு, கூர்க்கா படைப் பிரிவின் தளபதி ஜான்சன் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவம் விரைந்த வந்தது. தாக்குதல் தீவிரமடைந்தது. பிரிட்டிஷ் இராணுவத்தினர் 75 பேர் கொல்லப்பட்டனர். புரட்சியாளர்கள் 42 பேர் வீரமரணமடைந்தனர். சூர்யசென் தலைமையிலான புரட்சிப்படை ஆயுத மூட்டைகளுடன் சிட்டகாங் நகரைக் கடந்து, ஜலாலாபாத் மலைப் பகுதிக்கு தப்பிச் சென்றது. 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 முதல் 22 ஆம் தேதிவரை நடைபெற்ற போரில் தேவி குப்தா, மனோரஞ்சன் தாஸ், ரஜத்சென், சுதேஷ்ராய், அமரேந்திர நந்தி முதலிய புரட்சிப் படையின் வீரர்களும் களப்பலியானார்கள். புரட்சிப் படையின் வீரர்கள் சிலரை பிரிட்டிஷ் படையினர் கைது செய்தனர்.
சூர்யா சென் தலைமையில் தப்பிச் சென்ற புரட்சிப் படையினர் ‘காலகட்டம்’ என்ற கிராமத்தில் சாவித்திரியம்மாள் என்ற விதவைத்தாயின் குடிசையில் தங்கி தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். சூர்யாசென் தலைமறைவு வாழ்க்கையில் விவசாயக் கூலியாகவும், பால்காரராகவும், புரோகிதராகவும், வீட்டு வேலைக்காரராகவும் வேடமிட்டு பல பணிகளைச் செய்தார்.
சூர்யா சென் தலைக்கு பிரிட்டிஷ் அரசு பத்தாயிரம் ரூபாய் விலை வைத்தது. ஆனால், பணத்துக்கு ஆசைப்பட்டு கிராம மக்கள் யாரும் காட்டி கொடுக்க முன்வரவில்லை. மாறாக பாதுகாப்பு அளித்தனர்.
பிரிட்டிஷ் அரசின் காவல்துறை எப்படியோ மோப்பம் பிடித்து, புரட்சித் தளபதி சூர்யா சென்னும் அவரது தோழர்களும் ‘காலகட்டம்’ கிராமத்தில் தலைமறைவாகத் தங்கியுள்ளனர் என்பதை தெரிந்து கொண்டனர்.
பிரிட்டிஷ் இராணுவ கேப்டன் கெம்சன் என்பவனின் தலைமையில் இராணுவம் புறப்பட்டு, மறைந்திருந்த புரட்சியாளர்களை சுற்றி வளைத்தது. சூர்யா சென்னும் அவரது புரட்சித் தோழர்களும் வீரமுடன் போரிட்டனர். புரட்சியாளர்கள் வீசிய வெடிகுண்டுக்கு கேப்டன் கெம்சன் பலியானான். சூர்யா சென்னும், அவரது புரட்சித் தோழர்களும் தப்பிச் சென்றனர்.
தலைமறைவான சூர்யா சென், கைராலா என்ற கிராமத்தில் தமது உறவினராக நேத்ரா சென் என்பவர் வீட்டில் தங்கியிருந்தார். பிரிட்டிஷ் அரசு அறிவித்த பத்தாயிரம் ரூபாய் பணத்துக்கு ஆசைப்பட்டு நேத்ரா சென் பிரிட்டிஷ் அரசின் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து விட்டான். துரோகி கேப்டன் கேமரான் தலைமையில் பிரிட்டிஷ் போலீஸ் படை கணப்பொழுதில் வீட்டைச் சுற்றி வளைத்து சூர்யா சென்னை கைது செய்தது. ஒரு துரோகி காட்டிக் கொடுத்ததால் பிரிட்டிஷ் அரசு சூர்யா சென்னை கைது செய்து சிறையிலடைத்தது,
நேத்ரா சென்னின் துரோகத்தை அவனுடைய மனைவி சாவித்திரி தேவியால் ஏற்க முடியவில்லை. ஒருநாள் மாலைப் பொழுதில் தனது கணவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். அப்போது சூர்யா சென்னின் புரட்சிப் படையின் வீரன் ஒருவன் வீட்டிற்கு வந்து காட்டிக் கொடுத்த துரோகி நேத்ரா சென்னின் தலையை வெட்டி வீசினான். சாவித்திரி தேவி அதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிரிட்டிஷ் அரசின் போலீஸ் சாவித்திரி தேவியிடம், நேத்ரா சென்னை வெட்டிக் கொன்றது யார் என விசாரணை மேற்கொண்டது. அப்போது அவள், “கொலையாளியைத் தெரியும், ஆனால் கூற முடியாது”, என்றாள் துணிச்சலுடன்.
நேத்ரா சென் என்ற ஒரு தேசச் துரோகிக்கு மனைவியாக வாழ்க்கைப்பட்டதற்காக நான் வருந்துகிறேன். என் கணவன் இந்த சிட்டகாங் கண்டெடுத்த நாயகனைக் காட்டிக் கொடுத்த கயவன். அதன் மூலம் இந்தியத் தாயின் முகத்தில் மாறாத வடுவை உருவாக்கிவிட்டான். அதனால், அந்த நீசனைக் கொன்றவனின் பெயரை நான் கூற விரும்பவில்லை. எங்கள் ‘மாஸ்டர்தா’ சூர்ய சென்னை நீங்கள் தூக்கிலிடுவீர்கள் என்பதை நான் அறிவேன். நாங்கள் அவரை நேசிக்கிறோம். அன்பு ததும்ப எங்கள் நெஞ்சத்தில் வைத்து வணங்குகிறோம். “சூர்யா’ என்றால் சூரியன். ஆம், எங்கள் சூரியனின் புகழ் என்றும் மறையாது. இந்திய வரலாற்றில் சூர்யா சென் பெயர் என்றும் நீங்காது, சுடர் ஒளியாக பரவும்”- என்று அறிவித்தாள் சாவித்திரி தேவி.
சிட்டகாங் சதி வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் 1930 ஆம் ஆண்டு ஜீலை மாதம் தொடங்கியது. 29 மாதங்கள் தொடர்ச்சியாக வழக்கு விசாரணை நடைபெற்றது.
இந்த சதி வழக்கில் கைது செய்யப்பட்ட சிலர் பிரிட்டிஷ் போலீசாரின் சித்ரவதைத் தாளாமல் புரட்சி இயக்கத்தைப் பற்றிய தகவல்களை கூறி விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்ட போது, தளபதி சூர்யா சென் கட்டளைப்படி, ஆனந்த்சிங் என்ற புரட்சி வீரர் போலீசாரிடம் தாமாகவே சரணடைந்து, சிறைக்குள் சென்று பிடிபட்ட புரட்சி வீரர்களைச் சந்தித்து எந்தவிதத் தகவலையும் பிரிட்டிஷாரிடம் கூறாமல் தடுத்துவிட்டார். புரட்சிக்காரர்கள் தமக்காக வாதாட வழக்கறிஞர்களை அமர்த்தவில்லை. குற்றத்தை மறுக்கவில்லை. முhறாக அதை நியாயப்படுத்தி வாதாடினார்கள்.
சூர்யா சென் கட்டளைப்படி, 1932 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று, பிரிதிலதா வடேகர் சில புரட்சித் தோழர்களை அழைத்துக் கொண்டு பஹார்தலி என்ற இடத்தில் உள்ள ‘அய்ரோப்பியர் கிளப்’பை தாக்கினார்.
ஆங்கிலேய உயர் அதிகாரிகள் கிளப்பில் மாலை நேரத்தில் மது அருந்தி, சீட்டாடி, நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அங்கே ஒரே இடத்தில் கூடியுள்ள ஆங்கிலேய அதிகார வெறிபிடித்தவர்கள் அனைவரையும் வெடிகுண்டு வீசிக் கூண்டோடு கொன்றழிக்க வேண்டும் என்று பிரிதிலதாவிற்கு கட்டளையிட்டார் சூர்யாசென்.
திட்டமிட்டபடி, இரண்டு புரட்சித் தோழர்கள் கோச் வண்டியில் கிளப்புக்குள் முன்புற வழியாக நுழைந்தனர். மற்ற தோழர்கள் பின்புற வழியாக நுழைந்தனர். பிரிதிலதா கரம் உயர்த்தி ஆணையிட்டதும், கிளப்புக்குள் வெடிகுண்டுகளை சரமாறியாக வீசினார்கள். வெடிகுண்டு வீச்சில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மது மயக்கத்தில் தள்ளாடிக் கொண்டு, பயந்து பீதியில் மூலைக்கொருவராய் ஓடி ஒளிந்தனர். ‘ஒருவனைக் கூட உயிர் தப்பவிடாமல் சுட்டுத் தள்ளுங்கள்’ என்று பிரிதிலதா உத்தரவிட்டார். தானும் தம்மிடம் இருந்த துப்பாக்கியால் பிரிட்டிஷ் அதிகாரிகளை சுட்டுத் தள்ளினார். பிரிட்டிஷ் அதிகாரிகள் பலர் துப்பாக்கிச் சூட்டில் மாண்டனர்.
பிரிதிலதாவை பிரிட்டிஷ் காவலர்கள் சுற்றி வளைத்தனர். இனிமேல் தப்ப முடியாது என்ற நிலையில் தமது இடுப்பில் செருகியிருந்த ‘பொட்டாசியம் சயனைட்’ டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிரிதிலதா தற்கொலை செய்து கொள்ளும் முன்பு “இதோ என் துப்பாக்கி. இதை எடுத்துச் சென்று நம் தலைவரிடம் கொடுங்கள். போகும் வரை முடிந்த மட்டும் வெள்ளை நாய்களை சுட்டுப் பொசுக்குங்கள், இதுதான் என் கடைசி விருப்பம். அனைவரும் தப்பி விடுங்கள். தலைவருக்கு என் இறுதி வணக்கம்” என்று முழங்கினார்.
பிரிட்டிஷ் காவல்படையினர் பிரிதிலதாவின் பிணத்தைத்தான் கைப்பற்ற முடிந்தது. இறுதிவரை அந்த புரட்சி வீராங்கனையின் நிழலைக் கூடத் தொடமுடியவில்லை.
சிட்டகாங் ஆயுதக் கிடங்கு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமது தீர்ப்பை வெளியிட்டது. அத்தீர்ப்பில் அனந்த சிங் மற்றும் 12 புரட்சியாளர்கள் ஆயுள் முழுவதும் நாடு கடத்தப்பட வேண்டும் எனவும், மற்ற புரட்சியாளர்களுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது. சூர்யா சென் மற்றும் தாரகேஸ்வர் தஸ்தகீர் இருவருக்கும் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டது.
சிட்டகாங் மத்திய சிறையில் 1934 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 ஆம் நாள் சூர்யா சென்னும், தாரகேஸ்வர் தஸ்தகீரும் தூக்கிலிடப்பட்டனர். தூக்குத் தண்டனை அளிக்கப்பட்ட சூர்யாசென், தாரகேஸ்வர் ஆகிய இருவரும் சிட்டகாங் சிறைச் சாலையில் சித்ரவதை செய்யப்பட்டு அடித்தே கொல்லப்பட்டனர் என்றும், அவர்கள் பிணத்தைத்தான் ஆங்கிலேய ஆட்சியினர் தூக்கிலிட்டனர் என்பது பின்னர் நிரூபிக்கப்பட்டது. பின்னர் அவர்களின் சடலங்களை பிரிட்டிஷ் போர்க்கப்பலில் எடுத்துச் சென்று நடுக்கடலில் வீசியெறிந்து தங்களது வெறியைத் தீர்த்துக் கொண்டனர்.
இந்திய விடுதலைக்காக புரட்சிப்படை அமைத்து பிரிட்டிஷ் அரசின் இராணுவத்துடன் நேருக்கு நேர் நின்று போரிட்ட வீர வரலாறு சூர்யா சென்னுக்கு மட்டுமே உண்டு. ஆண்களோடு, பெண்களும் புரட்சிப் படையில் இணைந்து போராடிய வரலாறு சூர்யா சென்னின் புரட்சிப் படைக்கே உண்டு
No comments:
Post a Comment