Thursday 4 June 2020

VAJPAYEE VS SUBRAMANIAN SWAMY WHY ?




VAJPAYEE VS SUBRAMANIAN SWAMY WHY ?


வாஜ்பாய் - சுப்ரமணியன் சுவாமிக்கு இடையே என்ன பகை?
ரெஹான் ஃபஜல்
பிபிசி

ஒருவர் தனது சுயசரிதை எழுவதற்கு பிபிசி காரணமாவது என்பது அரிதான நிகழ்வே. ஆனால் புகழ்பெற்ற வழக்கறிஞரும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான சுப்ரமணியன் சுவாமியின் மனைவி ரோக்ஷ்னா சுவாமி தனது சுயசரிதை எழுதியதற்கு பிபிசியே காரணம் என்கிறார்.
மனைவி ரேக்‌ஷனா உடன் , சுப்பிரமணியன் சுவாமி

"எவால்விங் வித் சுப்ரமணியன் சுவாமி: எ ரோலர் கோஸ்டர் ரைடு" (Evolving with Subramanian Swamy - A roller coaster ride) என்ற தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் ரோக்ஷ்னா சுவாமி, அண்மையில் பிபிசி ஸ்டுடியோவுக்கு வருகை தந்திருந்தபோதும் அதை குறிப்பிட்டுச் சொன்னார்.

"நாட்டில் எமர்ஜென்சி அமலில் இருந்த காலகட்டத்தில் என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பற்றி பேட்டி எடுக்கவேண்டும் என்று பி.பி.சி செய்தியாளர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொலைபேசியில் கேட்டார். அப்போது, ஆரம்பத்தில் மறுத்த நான், மீண்டும் கோரியபோது ஒரு நிபந்தனையின்கீழ் நேர்காணல் வழங்க தயார் என்று ஒப்புக்கொண்டேன். அடல் பிஹாரி வாஜ்பாயை எமர்ஜென்சி காலகட்டத்தில் நான் சந்தித்தது பற்றிய தகவலை வெளியிடவேண்டும் என்பதே நான் முன்வைத்த நிபந்தனை" என்றார் ரோக்ஷ்னா சுவாமி,
இந்திராகாந்தியுடன் சுப்ரமணியன் சுவாமி


"ஆனால் அந்த வாக்குறுதியை பிபிசி நிறைவேற்றவில்லை, தனது நேயர்களின்முன் முன்னாள் பிரதமரின் சிறப்பான பகுதியையே காட்ட விரும்பியதால் பிபிசி எனது நிபந்தனையை நிறைவேற்றாமல் இருந்திருக்கலாம். எனவே, பொதுவெளியில் எனது கருத்தை வெளியிடுவதற்காக ஏன் சுயசரிதை எழுதக்கூடாது என்று தோன்றியது. கேள்விக்கான பதிலே இந்தப் புத்தகம்" என்கிறார் ரோக்ஷ்னா சுவாமி.
பிபிசி தரப்பில் அன்று ரோக்ஷ்னா சுவாமியை தொடர்பு கொண்டது நான்தான். வாக்குறுதியை நான் ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்கிறீகளா?


எமர்ஜென்சி அமலில் இருந்த காலகட்டத்தில் சுப்பிரமணியன் சுவாமி தலைமறைவாக இருந்தார் என்ற சிறிய பகுதி அடங்கிய நேர்காணல் அது. அந்த விஷயத்தை முக்கியமாக குறிப்பிடவேண்டும் என்பது ரோக்ஷ்னாவின் விருப்பம். அதைத்தவிர, நேரக்குறைவும் ஒருகாரணம் என்று சொல்லலாம்.

எனினும், இப்போது வாய்ப்பும் கால நேரமும் கூடி வந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரோக்ஷ்னா சொல்லாத, முக்கியமான பல தகவல்களை தற்போது அவர் கூறுகிறார். ஆனால் அதற்கு முன்பு...பேராசிரியர் சாமுவேல்சனின் கணக்கை சரி செய்த சுப்ரமணியன் சுவாமி
இவால்விங் வித் சுப்ரமணியன் சுவாமி:
எ ரோலர் கோஸ்டர் ரைடு


ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியர் பால் சாமுவேல்சன் கரும்பலகையில் போட்ட ஒரு கணக்கை தவறு என்று சுட்டிக்காட்டியபோது, சுப்ரமணியன் சுவாமியின் மேல் அனைவரின் கவனமும் குவிந்தது.
ரோக்ஷ்னா சுவாமி சொல்கிறார், 'இந்தியாவில் நாம் கணிதம் கற்றுக் கொள்ளும்போது சூத்திரங்கள் முதலியவற்றை மிகவும் ஆழமாக கற்றுக்கொள்கிறோம். நாம் கணித சூத்திரங்களை பிரத்யேக முறையில் மனப்பாடம் செய்வோம். அமெரிக்கர்கள் அதிக பகுப்பாய்வு செய்கிறார்கள் மற்றும் சூத்திரங்களை நினைவில் வைத்துக்கொள்வது அவசியம் என்று கருதுவதில்லை என்று சுவாமி என்னிடம் சொல்வார்.'.

சாமுவெல்சன் கரும்பலகையில் கணக்கை போடும்போது அதில் இருந்த தவறை சுட்டிக்காட்டினார் சுவாமி. சாமுவெல்சன் எழுதியிருப்பதுபோல் கணக்கை போட்டால், விடை வேறாக வரும் என்பதை எடுத்துக்கூறினார் சுவாமி.

முதலாம் ஆண்டு மாணவன் ஒருவன், புகழ்பெற்ற பேராசிரியரின் கணக்கில் தவறு கண்டறிந்ததை கண்டதும் வகுப்பறையில் சங்கடமான சூழ்நிலை நிலவியது.

ஆனால் தன்னுடைய தவறை புரிந்துகொண்டு அதை சரிசெய்த சாமுவேல்சன், சுவாமிக்கு நன்றி தெரிவித்தார். பிறகு ஆசிரியருக்கும் மாணவருக்கும் உருவான நட்பு, சாமுவேல்சன் 2009இல் இறக்கும்வரை தொடர்ந்தது."

சந்திப்புக்கு காரணமான ரவிஷங்கர்

அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த ரோக்ஷ்னாவும், சுப்ரமணியன் சுவாமியும் அங்குதான் முதன்முதலில் சந்தித்துக் கொண்டனர். அதைப் பற்றி தனது புத்தகத்தில் குறிப்பிடாவிட்டாலும், பிபிசியுடனான நேர்காணலில் அதைப் பற்றி ரோக்‌ஷனா கூறினார்.

" கிரேட்டர் பாஸ்டன் இந்திய சங்கத்தின் உறுப்பினராக இருந்த டாக்டர் சுப்ரமணியன் சுவாமி, பண்டிட் ரவிஷங்கரின் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார். காண்டீனில் அமர்ந்து நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை விற்பனை செய்து கொண்டிருந்தார்" என ரோக்ஷ்னா நினைவுகூர்ந்தார்,"சேலை கட்டியிருந்த நான் காண்டீனுக்குள் வந்ததைப் பார்த்த அவர் என்னை நிறுத்தி டிக்கெட் வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இந்திய பாரம்பரிய இசை பற்றி எதுவுமே தெரியாது, மேற்கத்திய இசை பற்றி கொஞ்சம் தெரியும் என்று அவரிடம் கூறிவிட்டு, இதுவே மேற்கத்திய இசைக் கச்சேரியாக
இருந்தால், கண்டிப்பாக டிக்கெட் வாங்குவேன் என்று சொல்லி மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்" என்று சொல்கிறார் ரோக்ஷ்னா.
"பிறகு ரவிஷங்கரின் கச்சேரிக்கான டிக்கெட் மட்டுமல்ல, போஸ்டன் சிம்பொனி இசைக்குழுவின் கச்சேரிக்கான டிக்கெட்டையும் தன்னுடைய பணத்திலேயே எனக்கு வாங்கிக்கொடுத்தார். டிக்கெட் விலை மிகவும் அதிகம் என்பதையும் சொல்லவேண்டும். சுவாமியுடனான என்னுடைய முதல் உரையாடலுக்கான காரணமாக இருந்தது ரவிஷங்கரின் இசைக் கச்சேரிதான்" என்று முதல் சந்திப்பை நினைவுகூர்கிறார் ரோக்ஷ்னா.

சுப்ரமணியன் சுவாமியை ரோக்ஷ்னா அமெரிக்காவில் திருமணம் செய்துகொண்டார். பார்சி இனத்தை சேர்ந்த ரோக்ஷ்னாவின் திருமணம் இந்து முறைப்படி நடப்பதை அவரது தாயார் விரும்பவில்லை என்பதால் அமெரிக்காவில் சிவில் திருமணம் செய்துகொண்டார்கள்.

படிப்பு முடிந்த பிறகு தம்பதிகள் இந்தியா திரும்பினார்கள். டெல்லி ஐஐடி கல்வி நிறுவனத்தில் பொருளாதார ஆசிரியராக பணியைத் தொடங்கிய சுவாமி பிறகு அரசியலிலும் நுழைந்தார். பாரதிய ஜனசங்கம் சார்பில் உத்தரப் பிரதேசத்திலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1975ஆம் ஆண்டில் நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது, சுப்பிரமணியன் சுவாமி தலைமறைவானார்.

தலைமறைவாக இருந்த சுவாமி, அப்போதைய அரசுக்கு எதிராக நானாஜி தேஷ்முக் உடன் இணைந்து பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

"நானாஜி டிரைவர் வைத்துக்கொள்ளவில்லை, அவர்கள் மூலம் அரசுக்கு தகவல்கள் செல்லலாம் என்று அவர் எச்சரிக்கையாக இருந்தார். எனவே நான் அவருக்கு வாகன ஓட்டியாகவும் செயல்பட்டேன். ஒருநாள் எனக்கு சில வேலைகளை கொடுத்து அனுப்பினார் நானாஜி, ஆனால் இதற்கிடையில் அவரே பிடிபட்டுவிட்டார்".
சீக்கியராக மாறுவேடம் பூண்ட சுப்ரமணியம் சுவாமி

தலைமறைவாக இருந்த சுவாமிக்கு உதவிய நரேந்திர மோதி








தலைமறைவாக இருந்த காலகட்டத்தில் போலிசிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக, தலைப்பாகையும், தாடியும் வைத்து சீக்கியராக மாறுவேடம் பூண்டிருந்த சுவாமி பெரும்பாலும் குஜராத் மற்றும் தமிழ்நாட்டிலேயே சுற்றிக்கொண்டிருந்தார். இந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெறவில்லை.

குடும்பத்தினருடன் சுப்பிரமணியம் சுவாமி
"மணிநகர் ரயில்நிலையத்தில் இறங்குமாறும், அங்கு என்னை அழைத்துச் செல்வதற்கு ஆர்.எஸ்.எஸ் இயக்க உறுப்பினர் ஒருவர் வருவார் என்றும் என்னிடம் கூறப்பட்டது. அவர் வந்து என்னை மாநில அமைச்சர் மக்ரந்த் தேசாயியின் வீட்டிற்கு அழைத்துச்சென்றார்."

மூவரும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து அகமதாபாதில் இருக்கும் பிரபல ஃப்ரூட் ஐஸ்க்ரீம் கடைக்கு சென்று ஐஸ்க்ரீம் சாப்பிடுவோம். நாற்பது ஆண்டுகள் கழித்து அந்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் இந்திய பிரதமரானார். அவர்தான் நரேந்திர மோதி.சில நாட்களுக்குப் பின்னர், எமெர்ஜென்சி பற்றிய நிலவரத்தை உலக அளவில் எடுத்துச் சொல்வதற்காக சுப்பிரமணியம் சுவாமி அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார்.

அரசு அனுமதியின்றி ஆறு மாதங்களுக்கும் மேலாக வெளிநாட்டில் தங்கியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் என்பது அன்றுமட்டுமல்ல இன்றும் அமலில் இருக்கும் சட்டம். எனவே இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல முடிவு செய்தார் சுப்பிரமணியன் சுவாமி.

"பான்-எம் விமானத்தில் லண்டன்-பாங்காக் பயணம் செய்வதற்காக பயணச்சீட்டை வாங்கினேன். எனவே டெல்லியில் இறங்கியவர்களின் பட்டியலில் என் பெயர் இல்லை, விமானம் காலை மூன்று மணியளவில் டெல்லி வந்தடைந்தது. கைப்பையை மட்டும் வைத்திருந்த நான் பாதுகாப்பு சோதனை செய்பவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அடையாள அட்டையை காட்டியதும் அவர் எனக்கு சல்யூட் வைத்தார். அங்கிருந்து டாக்ஸி மூலம் ராஜ்தூத் ஹோட்டல் சென்றேன்", என்று சுவாமி தெரிவித்தார்.
மெக்கானிக் வேடத்தில் சுவாமி

சுவாமி மேலும் கூறுகிறார்: "ஹோட்டலில் இருந்து என் மனைவியை தொலைபேசியி்ல் தொடர்புகொண்டு, உங்கள் அத்தை இங்கிலாந்தில் இருந்து ஒரு பரிசை அனுப்பியிருக்கிறார், அதை வாங்கிச் செல்ல ஒரு பெரிய பையை எடுத்துவாருங்கள் என்று சொன்னேன். 'சர்தார் வேடத்திற்கு தேவையான தலைப்பாகை, தாடி சட்டை பேண்ட் கொண்டு வரவேண்டும்' என்பதற்கான ரகசிய சங்கேத குறியீடு இது".

"ரோக்ஷ்னா தனது பங்கை சரியாக செய்தார். டி.வி மெக்கானிக்காக வேடம்பூண்டு மாலையில் வீட்டிற்கு வருவதாக மனைவியிடம் சொன்னேன். அதேபோல் டி.வி மெக்கானிக்காக வீட்டிற்கு சென்ற நான் ஐந்து நாட்கள் வீட்டிற்கு வெளியே செல்லவில்லை. நான் வீட்டிற்குள் இருந்தது வெளியே இருந்த போலிசாருக்கு தெரியவேயில்லை" என்கிறார் சுவாமி.

மொரார்ஜி தேசாய் உடன் சுப்பிரமணியன் சுவாமி
1976 ஆகஸ்ட் பத்தாம் தேதியன்று மாநிலங்களவைக்கு சென்று அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட முடிவு செய்த சுப்ரமணியன் சுவாமியை தனது பியட் காரில் அழைத்துச் சென்றார் மனைவி ரோக்ஷ்னா.

சுவாமியை நாடாளுமன்றத்தின் நான்காம் எண் வாயிலில் விட்ட அவர், அருகில் இருந்த புகழ்பெற்ற தேவாலயத்துக்கு அருகில் காத்திருந்தார்.

எந்தவித இடையூறுமின்றி நாடாளுமன்ற வளாகத்திற்குள் சென்ற சுப்ரமணியன் சுவாமி வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.

அப்போது கம்யூனிஸ்ட் உறுப்பினர் இந்திரஜித் குப்தா, சுவாமியை பார்த்துவிட்டார்.

`நீ எப்படி இங்கே? என்று கேட்ட அவரைப் பார்த்து நகைத்த சுவாமி, அவருடன் கைகோர்த்தவாறு மாநிலங்களவைக்குள் நுழைந்தார்.

'நாடாளுமன்றத்தில் இன்று ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி நடைபெறப்போகிறது என்று பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் ஆஸ்திரேலியாவின் செய்தித் தொடர்பாளரிடம் ஏற்கனவே ரோக்ஷ்னா கூறியிருந்தார்.

சுவாமி சரியான நேரத்தில் நாடாளுமன்றத்திற்கு சென்றுவிட்டார். காலம் சென்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர்களின் பெயர்கள் அப்போது வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.அவைத் தலைவரும், குடியரசுத் துணைத்தலைவருமான பாசப்ப தானப்பா ஜத்தி இறுதி பெயரை வாசித்தவுடன், உரத்த குரலில் பேசிய சுவாமி, "ஐயா, சில பெயர்களை விட்டுவிட்டீர்கள், ஜனநாயகத்தின் பெயர் விட்டுப்போய்விட்டது" என்று சொன்னதும், அவையில் அமைதி ஆட்கொண்டது.

உள்துறை அமைச்சர் அச்சத்துடன் மேஜைக்கு கீழே ஒளிந்துக்கொள்ள முயற்சித்தார். சுப்ரமணியன் சுவாமியின் கையில் எதாவது குண்டு இருக்கிறதோ என்று அவர் அச்சப்பட்டாராம். சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய உத்தரவிடாத பாசப்ப தானப்பா ஜத்தி, மறைந்த உறுப்பினர்களுக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அறிவித்தார்.

பிர்லா ஆலயம்
'புத்தகம் வெளியிடப்பட்டது'

இந்த குழப்பத்தை சாதகமாக்கிக் கொண்ட சுப்பிரமணியம் சுவாமி, அவையை விட்டு வெளியேறுவதாக முழக்கமிட்டுக் கொண்டே விரைவாக நடந்து சென்று நாடாளுமன்றத்திலிருந்து வெளியே வந்து, ரோக்ஷ்னா காரை நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தார்.

அங்கிருந்து காரில் பிர்லா மந்திர் என்ற ஆலயத்திற்கு சென்ற அவர், அங்கு வெண்ணிற ஆடையை அணிந்து கொண்டு தலையில் காந்தி குல்லாவை அணிந்துக் கொண்டார்.

பிர்லா மந்திரில் இருந்து ஆட்டோவில் ரயில்நிலையத்தை அடைந்து ஆக்ரா செல்லும் ரயிலில் ஏறிய சுவாமி மதுராவில் இறங்கி அருகிலுள்ள தந்தி அலுவலகத்திற்கு சென்று 'Book released' (புத்தகம் வெளியிடப்பட்டது) என்று மனைவிக்கு தந்தி அனுப்பினார்.

ரோக்‌ஷ்னாவுக்கு ஏமாற்றம் அளித்த அடல் பிஹாரி வாய்பாயி
டெல்லியில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிவிட்டதற்கான ரகசிய சங்கேத குறியீடு அது.சுவாமி தப்பிவிட்ட செய்தி அரசுக்கு தெரிந்ததும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிட்டது. ரோக்ஷ்னா சுவாமியும் பல சிக்கல்களை எதிர்கொண்டார். வீடு சோதனையிடப்பட்டது, அவரின் இரண்டு கார்களும், பொருட்கள் அனைத்தையும் அரசு கைப்பற்றியது.

சட்டப்படிப்பு படித்து வந்த அவர், டெல்லி பல்கலைக்கழகத்திற்கு பேருந்தில் செல்லும்போது, டெல்லி போலிசாரின் வாகனமும் பேருந்தை தொடர்ந்து வரும்.

பாரதிய ஜன சங்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அடல் பிஹாரி வாஜ்பாயை சந்தித்து உதவி கேட்ட ரோக்ஷ்னா, வெறும் கையுடனே திரும்ப நேர்ந்தது.

"மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து சுப்பிரமணியன் சுவாமி நீக்கப்பட்டது நியாயமற்றது என்று நாங்கள் நினைத்தோம். எனவே நாங்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய விரும்பினோம். ஜன சங்கத்தின் சட்ட விவகாரங்களை கவனித்துக் கொண்டிருந்த அப்பா கடாடேயிடம் சென்று பேசினேன். இந்த விவகாரத்தில் தலையிடவேண்டாம் என்று கூறிய வாஜ்பாய், டாக்டர் சுவாமிக்கும் நமது கட்சிக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று சொன்னதாக அவர் கூறிவிட்டார்."
"ஃபெரோஸ் ஷா சாலை இல்லத்தில் வசித்துவந்த வாஜ்பாயை சென்று பார்த்தேன். அப்பா கடாடேயிடம் வழங்கிய அறிவுறுத்தலுக்கான காரணத்தை நான் வாஜ்பாயிடம் கேட்டபோது, சுவாமி செய்த தவறுகளால் ஜன சங்கத்திற்கு பெருத்த அவமானம் நேரிட்டதாக அவர் சொன்னார்".

"நான் அவரிடம் விளக்கம் கேட்டதற்கு, சுவாமி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் கூறினார். நாடாளுமன்றத்திற்கு வராத நேரத்திற்கான தொகையை கோரி தவறான கணக்கு அளித்ததாக வாஜ்பாய் கூறினார், ஜூன் மாதம் 25ஆம் தேதிக்கு பிறகு சுவாமி நாடாளுமன்றத்துக்கு செல்லவில்லை" என்றார் ரோஷ்னா.

வாஜ்பாய்க்கு சுவாமியை பிடிக்காதது ஏன்?

"பெங்களூரில் இருந்து வந்த சுவாமி, நாடாளுமன்றத்திற்கு செல்வதாக இருந்ததால், டி.ஏ தொகைக்கான விண்ணப்பத்தை முதலிலேயே கொடுத்திருந்தார். நான் பூர்த்தி செய்த அந்த விண்ணப்பத்தில் கையெழுத்திட்டது மட்டும்தான் அவர். ஆனால் விண்ணப்பம் கொடுத்தபிறகு அவரவது திட்டம் மாறிவிட்டது. எனவே இந்த குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஏனெனில் சுவாமிக்கு உதவ வாஜ்பாய் விரும்பவில்லை, அவர் சொல்வது வெறும் சாக்குபோக்கு என்பதை புரிந்துக்கொண்டேன்"
வாய்பாய்க்கும் சுப்ரமணியம் சுவாமிக்கும் ஒத்துப்போகாததற்கான காரணம் என்ன என்று திருமதி சுவாமியிடம் கேட்டேன்.
எமர்ஜென்சி அமல்படுத்துவதற்கு முதல் நாள் டெல்லி
 ராம்லீலா மைதானத்தில் நடந்த கூட்டத்தில்
ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய்,
 நானாஜி தேஷ்முக், சுப்ரமணியன் சுவாமி


"வாஜ்பாய் ஆரம்பத்தில் இருந்தே பொறாமைக்காரராக இருந்தார், வேறு யாரையும் மேலே வர அவர் அனுமதிக்கவில்லை. சுவாமியை மட்டும் அல்ல, இன்னும் பலரை அவர் அழுத்தியே வைத்திருந்தார். பாரதிய ஜனதா கட்சி உருவான பிறகும், குறிப்பிட்ட சிலருக்கு கட்சியில் இடம் கொடுக்கக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ்ஸிடம் வாஜ்பாய் நிபந்தனையை முன்வைத்தார்"

"இதில் முக்கியமானவர் நானாஜி தேஷ்முக். நானாஜி ஜன சங்கத்திற்கு ஆற்றிய அளவு சேவைகளை வேறு யாருமே செய்ததில்லை. மிகவும் திறமையான அவர் வாஜ்பாயைவிட சீனியராக இருந்தாலும், அவருக்கு ஒத்து ஊதாதவர்.

வாய்பாய்க்கு பிடிக்காதவர்கள் பட்டியலில் அடுத்த இடத்தை பிடித்தவர் தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி. அவர் தனது திறமையால் பாரதிய தொழிலாளர் சங்கத்தை உருவாக்கி விரிவுபடுத்தினார். அவருக்கும் பாரதிய ஜனதா கட்சியில் இடம் இல்லை என்று வாய்பாய் கூறிவிட்டார். இதன் விளைவாக இவர்கள் இருவரும் டெல்லியில் இருந்து வெளியேறி சிறிய கிராமங்களில் பணியாற்ற நேரிட்டது.

வாஜ்பாய்க்கும், சுப்ரமணியம் சுவாமிக்கும் இடையிலான பகைமை எந்த அளவுக்கு போனது?

.1998 இல், வாஜ்பாய் அரசுக்கான ஆதரவைத் தொடர வேண்டுமானால் சுப்பிரமணியன் சுவாமிக்கு நிதியமைச்சர் பொறுப்பு வழங்கவேண்டும் என்ற நிபந்தனையை ஜெயலலிதா முன்வைத்தபோது, அதை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக, தனது அரசு பதவி இழப்பது பரவாயில்லை என்று வாஜ்பாய் கருதினார்.

ஒரு காலத்தில் சுவாமியுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்த ஜெயலலிதா பிறகு எதிரியானார். ஒருகாலத்தில் சுப்ரமணியன் சுவாமியை கைது செய்வதற்காக தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்திய இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தியுடன் நெருக்கமான நட்பு கொண்டார் சுவாமி.

சுப்ரமணியம் சுவாமியின் அரசியல் வாழ்க்கையில் அவருக்கு நிரந்தர நண்பர்களோ அல்லது நிரந்தர எதிரிகளோ இருந்ததில்லை.

No comments:

Post a Comment