Sunday 14 June 2020

HUMPI ARTIFACTS VIJAYANAGARA DYNASTY REMAINS ...AFTER DEMOLISH OF BAHMINI SULTANS

ஹம்பி: விஜயநகரப் பேரரசின் சிற்பக் கலைமாட்சியைப் பறைசாற்றும் சிதைந்த நகரம் |

விஜயநகரப் பேரரசுக்கு கர்நாட அரசு என்றும் ஒரு பெயர் இருந்தது என்பது அப்போது எழுதப்பட்ட நூல்களில் இருந்து தெரிகிறது. போர்ச்சுகீசியர் பிஸ் நெகர் (Bisnegar) அரசு என்று இதைக் குறிப்பிட்டுள்ளனர். பொயு 1336ல் இன்றைய வடக்கு கர்நாடக மாநிலத்தில் துங்கபத்திரா நதியின் தெற்குப் பகுதியில் விஜயநகர அரசு தோற்றம் கண்டது. ஹக்கராயர் (ஹரிஹர ராயர் ஹக்கா) புக்கராயர் (புக்கா) என்னும் இரு சகோதரர்கள் ஸ்ரீங்கேரி சாரதாபீடத்தின் 12வது ஜகத் குருவாகப் பின்னர் விளங்கிய
ஸ்ரீவித்யாரண்யரால் வழிகாட்டப்பட்டு இந்த அரசைத் தோற்றுவித்தனர். அதை அவருக்கே காணிக்கையாகவும் அளித்தனர். எனவே அவர்தான் மன்னர். அவர் சார்பாகவே மன்னர்கள் ஆட்சி செய்தனர். அரசு முத்திரைகளும், அரசாணைகளும் ‘ஸ்ரீ விரூபாக்ஷர்’ என்றே கையொப்பமிடப்பட்டன. (வித்யாரண்யர் ஸ்ரீங்கேரி சாரதாபீடத்தின் 12வது ஜகத் குருவாக விளங்கிய காலம் பொயு 1380-1386). இந்த வழக்கம் தொடர்ந்து வந்ததால் இன்றளவும் சாரதா பீட சங்கராச்சார்யாருக்கு அரியணை, வெண் கொற்றக் குடை, செங்கோல் கிரீடம் ஆகியவை உண்டு. அவற்றைத் தரித்து அவர் அடியாருக்கு தரிசனம் தருவார்.

ஹக்கராயர் புக்கராயர் இருவரும் தட்சிண சுல்தான்களின் படையெடுப்புகளைத் தடுத்து நிறுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஹொய்சாள அரசின் கன்னடநாட்டு தளபதிகள் என்றும், ஹொய்சாள அரசின் வலிமை குன்றியபோது காகதீய அரசால் கைபற்றப்பட்ட துங்கபத்திரா நிலப்பகுதியை நிர்வகித்த தெலுங்கர் என்றும் இருவிதக் கருத்துகள் வரலாற்று வல்லுனரிடையே நிலவுகிறது. ஆனால், அவ்விருவரும் தமது குருவாக வரித்துக் கொண்ட ஸ்ரீங்கேரி மடத்துப் பீடாதிபதி வித்யாரண்ய ஆசாரியருடைய வழிகாட்டுதலால்தான் இந்த அரசைத் தோற்றுவித்தனர் என்பதில் ஒத்த கருத்து உடையவராகவே உள்ளனர். இந்த அரசின் தோற்றமே சுல்தானிய அரசுகளின் விரிவாக்கத்தையும் இஸ்லாம் மதம் பரவுதைத் தடுக்கவும், நலிந்துவிட்ட ஹிந்துமத்தை மீட்டெடுக்கவும்தான்.

தண்டக ஆரண்யம் என்று குறிப்பிடப்படும் பாறைகள் நிறைந்த மலைப் பகுதியை அரவணைத்துச் செல்லும் துங்கபத்திரா ஆற்றின் தெற்குநிலப் பகுதியின் முந்தையப் பெயர் பம்பா. அங்கு உள்ள ஏரி பம்பா சரோவர். என்றும், நிலப்பகுதி பம்பாக்ஷேத்ரம் என்றும் அழைக்கப்பட்டன. பம்பாபதி என்பது சிவனுக்குப் பெயர். இப்பகுதியில் மலயவந்தா, மாதங்கா, ஹேமகூட என்னும் மூன்று மலைகள் உள்ளன. கிஷ்கிந்தாபுரி என்றும் மக்களிடையே ஒரு பெயர் புழங்குகிறது. பம்பா என்னும் வடமொழிச்சொல் கன்னட மொழியில் ஹம்பா என்றாகிப் பின்னர் ஹம்பி எனத்திரிந்து நிலைத்தது.

விஜயநகர மன்னர்கள் ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் இந்தியாவின் தென் பகுதி முழுவதையும் தங்கள் ஆட்சியின் கீழ் வைத்திருந்தனர். சங்கம (பொயு 1336-1485), சாலுவ (1485-1505), துளுவ (1491-1570), அரவீடு (1542-1646) என்று நான்கு வெவ்வேறு வம்சங்களின் ஆட்சி நடந்தது. இவை
ஒன்றுக்கு ஒன்று இரத்த உறவில்லாதவை. ஆளும் அரசனின் வலிமை குன்றும்போது தலைமைப் படைதளபதி அல்லது அமைச்சரால் ராணுவப் புரட்சி மூலம் அரியணை கைபற்றப்பட்டு ஆட்சி தொடர்ந்தது. ஆனால் அவர்களின் ஆட்சிக் கொள்கை, கலாசார சிந்தனை இரண்டும் ஒன்றாகவே இருந்தன. இதனால் ஆண்ட அரசர் வம்சம் மாறியபோதும் அரசின் பெயர் விஜயநகர அரசு என்றே விளங்கியது. இவர்களில் ஒரே ஒரு ஆண்டு ஆட்சி செய்த மன்னரும் உண்டு; இருபத்து எட்டு ஆண்டுகள் அரியணையில் இருந்த மன்னரும் உண்டு. விஜயநகரம் என்னும் பெயரைக் கொண்ட தலைநகரமே அரசின் அடையாளப் பெயராகத் திகழ்ந்தது.

தட்சிண நிலப்பரப்பில் ஆட்சிசெய்த அஹமத்நகர், பேரார், பீடார், கோல் கொண்டா, பிஜாபூர் சுல்தான்கள்தான் ஒன்றுகூடி இந்தப் பேரரசை வீழ்த்தி அழித்தவர்கள். ரெய்ச்சூர், தலைக்கோட்டை என்னும் இடங்களில் நிகழ்ந்த இருபெரும் போர்கள் இந்த வீழ்ச்சியை முடிவுசெய்தன. அரவீடு வம்சத்து ஆட்சிக் காலத்தில்தான் பேரரசின் வீழ்ச்சி தொடங்கியது. அரவீடு அலியராம ராயருக்கும் (1542-1565) தட்சிண சுல்தான்களின் கூட்டமைப்புக்கும் இடையே தலைக்கோட்டையில் நிகழ்ந்த போரில் அலியராமவர்மர் தனது முலீம் படைத்தளபதி இருவரால் வஞ்சிக்கப்பட்டு போர்க்களத்திலேயே சிறைப்பிடிக்கப்பட்டு அங்கேயே தலை சீவிக் கொல்லப்பட்டார். சுல்தான்களின் படை ஹம்பியை (விஜய நகரத்தின் இன்னொரு பெயர்) அடைந்து முற்றிலுமாக நகரை அழித்துவிட்டது. ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது கைவிடப்பட்ட அந்த நகரம் இன்றளவும் விஜயநகரப் பேரரசின் கலை மாட்சியை பறைசாற்றியபடி அதேவிதமாகவே உள்ளது.

தலைகோட்டை போரில் விஜயநகரப் படை தோல்வியுற்ற செய்தி தெரிந்தவுடன் மன்னர் அலியராமராயரின் தம்பி திருமலை தேவராயர் (1565-72) அரசு கஜானா, குடை, வாள் கிரீடம் போன்ற அரசு அடையாளங்கள், அரசு உடைமைகள், அரசு விசுவாசிகள், அரச குடும்பத்துப் பெண்கள் ஆகியோருடன் ஹம்பியிலிருந்து வெளியேறி பேணுகொண்டாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சியை மீட்டெடுத்துக் கட்டமைக்க முயற்சி செய்தார். (பேணுகொண்டா என்னும் இந்த நகரம் அனந்தப்பூர் மாவட்டத்தில் மேற்கு கோதாவரி நதிப் பகுதியில் உள்ளது. ஹம்பிகும் இந்த நகருக்கும் இடையே 233 கி.மீட்டர் இடைவெளி.) ஆனால், தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் அதுவரை
விஜயநகரப்பேரரசின் கீழ் ஆண்டுவந்த நாயக்கர் எனப்படும் தலைவர்கள் தம்மை சுதந்திர அரசுகளாக அறிவித்துக் கொண்டு விட்டனர். போரின்போது உதவிக்கும் வரவில்லை. அவருக்குப்பின் உண்டான அரியணைக்கான சண்டைகளினாலும் தக்காண சுல்தன்களின் தொடர் படையெடுப்புகளினாலும் விஜய நகரப்பேரரசு உருக்குலைந்து 1614ல் முற்றுமாக அழிந்துபோனது.

முதலாம் புக்கராயர் (1374) காலத்திலேயே தென்னாடு முழுவதும் விஜயநகரப் பேரரசின் ஆட்சி வளையத்துக்குள் வந்துவிட்டது. இரண்டாம் தேவராயர் (1424-1446) சங்கம அரசர்களில் புகழின் உச்சம் தொட்டவராக அறியப்படுகிறார். இது மேலைநாடுகளிலிருந்து வந்த யாத்திரிகர்களின் குறிப்புகளிலிருந்து தெரிகிறது. அண்மையில் ஹம்பியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியால் இந்த அரசின் அறுபடாத வரலாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. விஜயநகரப்பேரரசின் இலக்கு ஹிந்துமதத்தை மீட்டெடுப்பது என்பதாக இருந்தபோதும், இஸ்லாமிய மக்களுக்கு அரசு எந்தவித இடையூறும் செய்யவில்லை. திறமைமிக்க இஸ்லாமியர் அரசின் போர்ப் படையில் தளபதிகளாகவும் விளங்கினர்.

விஜயநகரப்பேரரசின் மிகவும் புகழ்பெற்ற பேரரசர் துளுவ வம்சத்து கிருஷ்ண தேவராயர் (1509-1529) கன்னடம், தெலுங்கு, வடமொழி ஆகியவற்றில் பெரும் புலமை பெற்றிருந்தார். இலக்கியம், கலை ஆகியவற்றில் அளவற்ற ஈடுபாடும் கொண்டிருந்தார். தெலுங்கு மொழியில் இவரால் இயற்றப்பட்ட ‘ஆமுக்த மால்யதா’ (ஆண்டாள் சரித்திரம்) வடமொழியில் இயற்றப்பட்ட ‘ஜம்பாவதி கல்யாண’ இரண்டும் புகழ்பெற்றவை. கிருஷ்ணதேவராயரின் அரசவையில் அஷ்டதிக்கஜங்கள் என்னும் எட்டு கல்விமான்கள் இடம் பெற்றிருந்தனர். அலசானி பெத்தன்னா, முத்து திம்மன்னா, தெனாலி ராமகிருஷ்ணா போன்றவர் இதில் புகழ்பெற்றவர். புக்கராயரின் மருமகள் கங்காவதி இயற்றிய ‘மதுர விஜயம்’ என்னும் காவியம் விஜயநகர மன்னர் மதுரை சுல்தானை வெற்றி கொண்ட சிறப்பைக் கூறுகிறது.

கன்னடமும், தெலுங்கும், வடமொழியும், தமிழும் இவர்களால் ஒரேவிதமாகப் பேணப்பட்டன. இவர்களில் சில மன்னர்கள் சைவத்தையும், சிலர் வைணவத்தையும் அரவணைத்துக் கொண்டனர். வைணவபக்தி வழியை முன்னெடுத்துச் சென்ற பக்திமான்கள் ஹரிதாசர் என்றும், சைவ பக்தி வழியைப் பின்பற்றினோர் வீரசைவர் (லிங்காயதுகள்) என்றும் சிறப்பிக்கப்பட்டனர். இவர்களில் அந்தணர், அந்தணர் அல்லாதார் இருவரும் அடங்குவர். ஹரிதாசர் எனப்படுவோர் இயற்றிய பாடல்கள் ‘தேவர்நாமா’ என்று குறிப்பிடப்பட்டன. வியாசராயர், புரந்தரதாசர், கனகதாசர் போன்றவர் மத்வாசாரியாரின் பக்தி வழியைப் பின்பற்றினார்கள். குமாரவியாசர் என்னும் அந்தணர் மஹா பாரதத்தைக் கன்னட மொழியில் காவியமாகப் படைத்தார். இவருக்குப் பின்னால்தான், கன்னடமொழி புதிய வடிவம் பெற்றது. வீரசைவரான சமரதாசர் ‘பிரபுலிங்கலீலா’ என்னும் காவியத்தை வடமொழியில் இயற்றினார். பின்னர் அது தெலுங்கு தமிழ் இரண்டிலும் மொழிபெயர்க்கப்பட்டது.

மதம் சாராதவை என்று வகைப்படும் படைப்புகளில் சில: ‘சங்கீதசார’ வித்யாரண்யர் (இசைநூல்), ‘ரதிரத்ன ப்ரதீபிகா’ புரந்தரதாசர் (இசைநூல்), ‘ஆயுர்வேத சுதாநிதி’ ஸயனர் (மருத்துவநூல்). ‘வைத்யராஜவல்லபம்’ லக்ஷ்மண பண்டிதர் (மருத்துவநூல்).

தமிழைப் பொருத்தவரை பெரும்பாலும் அது மதுரை மன்னர்களால் (சிற்றரசு நிலை) வளர்க்கப்பட்டது. என்றாலும், ‘சிவப்பிரகாசப் பெருந்திரட்டு’ என்னும் அத்வைத்த நூலை ஸ்வரூபாநந்த தேசிகர் எழுதினார். இவர் கிருஷ்ணதேவ ராயரின் அரசவையில் இடம் பெற்றிருந்தார். அவரது சீடர் தாட்டுவராயர் (துறவி) அதன் குறுகிய வடிவத்தை ‘குறுந்திரட்டு’ என்று எழுதினார். ‘இருசமய விளக்கம்’ என்னும் சைவ-வைணவ பக்திவழி பற்றின நூலை ஹரிதாசர் என்பவர் எழுதினார். அவர் வைணவத்தை பேணியமையால் அதை உயர்த்தியே தமது கருத்துகளை வெளியிட்டார்.

விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்கால ஆலயக் கட்டடக்கலை, சாளுக்கிய-ஹொய்சாள-பாண்டிய-சோழர் காலத்துப் படைப்புவழி, அவர்கள் பின்பற்றிய உத்தி ஆகியவற்றின் கூட்டுக் கலவையைக் கொண்டிருந்தது. உத்தியும் செயற்பாடும் முன்னர் இருந்த வழக்கிலிருந்தே எடுத்தாளப்பட்டன. ஆயினும் இவை ஹம்பி நகரத்தில் மட்டுமே மையம் கொண்டிருந்தன. தமது ஆட்சிக் காலத்தில் தென்னாடு முழுவதும் கவனிப்பாரற்றுக் கிடந்த பல ஆலயங்களை விஜயநகர மன்னர்கள் மேம்படுத்தியும், விரிவாக்கம் செய்தும் அவற்றுக்குப் புதிய முகம் கொடுத்தனர். ஹொய்சாள சிற்பிகள் சிலைவடிக்கப் பயன்படுத்திய மாக்கல் இப்போது கைவிடப்பட்டது. கிரானைட் வகை (அடர்த்தியும் கனமும் கொண்டது) கற்கள் கொண்டு சிலைகள் உருவாயின; ஆலயங்களும் எழுப்பப்பட்டன. சாளுக்கிய சிற்ப பாணியிலேயே சிலைகள் உருவாயின. 14ம் நூற்றாண்டில் தட்சிண, வேசர பாணி ஆலயங்களை உருவாக்கிய அவர்கள் பின்னர் திராவிடபாணி ஆலயங்களையும் கட்டுவித்தார்கள். நிலத்தில் உள்ள பிரசன்ன விரூபாட்சி ஆலயம், (புக்கர் காலம்) ஹசாரா ராமர் ஆலயம் (கிருஷ்ணதேவராயர் காலம்) இரண்டும் இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளன. ஒருபுறம் சுல்தான்களின் அரசுகளுடன் தொடர் போர் நிகழ்ந்தவண்ணம் இருந்தபோதும் அது ஆட்சி சார்ந்ததாகவே இருந்தது. கட்டடக் கலைப் படைப்பில் இந்திய முஸ்லீம் பாணி இரண்டும் விரவியவிதமாக மாளிகைகள் ஹம்பியில் எழுப்பப்பட்டன.

விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்காலத்தில்தான் ஆலயங்கள் நுழைவாயிலில் பெரும் கோபுரமும், உட்புறம் கூரையும், தூண்வரிசையும் தாழ்வாரமும் கொண்டதாகவும் அமைக்கப்பட்டன. ஆலயவளாகத்தைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்புவதும் தொடங்கியது. அது ராய (ராஜ) கோபுரம் என்று சிறப்பிக்கப்பட்டது. கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்தில் இது அதிகரிக்கத் தொடங்கியது. பேலூர் சென்னகேசவர் ஆலயம், ஸ்ரீசைலம் ஆலயம், திருவரங்கம் அரங்கன் ஆலயம், மதுரை மீனாக்ஷிஅம்மன் ஆலயம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆலயம், குடந்தை ராமசாமி ஆலயம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. கோபுரங்கள் செங்கல், சுண்ணாம்பு கொண்டு எழுப்பப்பட்டன.

ஆலயத்தை வலமாகச் சுற்றிவர திறந்தவெளிப்பாதை, நாற்புறமும் திறந்த தூண்கள் கூடிய மஹா மண்டபம், கல்யாண மண்டபம், ஆலயத் திருக்குளம் ஆகியவை ஆலயத்துடன் இணைக்கப்பட்டு ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது. மண்டபத் தூண்களில் பெரும்பாலும் பின்கால்களை நிலத்தில் ஊன்றி, உடலை உயர்த்திப்பாயும் யாளிகள், புரவிகள் போன்ற விலங்குகள் தூணின் முன்புறம் அல்லது பக்கங்களில் இடம்பெற்றன. புரவியில் அமர்ந்தவிதமாகவும், அவற்றின் கால்களுக்கு இடையில் வாளுடன் நின்றவிதமாகவும் போர்வீரர்கள் காணப்பெற்றனர், நூறு, ஆயிரம் என்னும் எண்ணிக்கைகளில் மண்டபத்தைத் தூண்கள் தாங்கின. தூண்களின் நடுப்பகுதியில் புராண, இதிஹாச காட்சிகள் அல்லது தனித்த நடனமங்கையரின் தோற்றங்களைக் கொண்டிருந்தன. தூண்கள் ஒரேகல்லில் உருவானவை. தூண்கள் அமைந்தவிதம் விஜயநகர சிற்ப வழியில் ஒரு எழில் கூடிய விரிவாக்கம்.

புஷ்கரணி என்று விளிக்கப்படும் ஆலயத் திருக்குளங்கள் சதுரவடிவமானவை. நாற்புறமும் மடிப்புகளுடன்கூடிய படிகளைக் கொண்டவை. அவை மிகுந்த சிற்பக் கலை சிறப்புக்கூடியவை. ஆனால், இந்த அமைப்புமுறை இவர்களால் உருவானது அல்ல, இவர்களுக்கு முன்னரே சாளுக்கியர், பின்னர் ஹொய்சாளர் தமது ஆட்சிக்காலத்தில் தோற்றுவித்ததின் தொடர்ச்சிதான்.

முன் நாட்களில் அரசர், அவரது குடும்பத்தினர் போன்றோர் வசித்த கட்டடங்கள், மாளிகைகள் ஆகியவை செங்கல், காரை, சுண்ணாம்பு, மரம் இவற்றால் உருவாயின. எனவே அவை அழிந்தும் போயின. இதனால் அவற்றின் கட்டடக் கலைச் சிறப்புபற்றி நமக்குத் தெரிய வாய்ப்பில்லை, ஆனால், ஹம்பியில் உள்ள மாளிகைகள் நமக்குப் பல அரிய செய்திகளைக் கொடுக்கின்றன. விஜயநகர ஆட்சி காலத்து மாளிகைகள் பொதுவாக கிழக்கு அல்லது வடக்கு திசைநோக்கி நுழைவாயிலுடன் கட்டப்பட்டன. அளவில் பெரிய மாளிகையின் முன்புறம் இருபக்க
நுழைவாயில்கள் கூடியதாக இருந்தது. மேலும் அவை ஆலயங்கள்போல நிலத்திலிருந்து ஆறு அல்லது எட்டு அடிகள் பாறை கொண்டு உயர்த்திய தளத்தில் எழுப்பப்பட்டன. எனவே நிலத்திலிருந்து மாளிகை வாயிலை அடைய பலபடிகள் ஏறவேண்டும். இந்த மேடையும் அடுக்கு தளங்களை கொண்டிருந்தது. அவற்றில் பல்வேறு விலங்குகள், மலர்க் கொடிகள், design என்று கூறப்படும் வடிவங்கள், அச்சுறுத்தும் மானுட-விலங்கு முகங்கள் போன்ற தொடர் சிற்பங்கள் இடம்பெற்றிருந்தன. மாளிகையைத் தாங்கிய தூண்களும் கூரையின் உத்திரங்களும் மரத்தினாலான சிற்பவேலைப் பாட்டுடன் உருவாயின. மாளிகைகளின் நுழைவாயில்கள் மிகுந்த சிற்பவேலைப் பாடுகளுடன் விளங்கின. மாளிகையின் முன்புறவெளியில் பல கலைவடிவங்கள் கொண்ட சுற்றுக் கைப்பிடிச் சுவர் அமைந்த நீர் தேக்கங்களின் நடுவில் பலவடிவங்கள் கொண்ட நீரூற்று நாற்புறமும் நீரை பீச்சி அடித்தது.. மாளிகையின் உட்புறம் சிறு நுழைவாயில்களுடன் மடித்தவழி கொண்டதாக இருந்தது. இந்த நுழைவாயில்களின் அமைப்பு இஸ்லாமியக் கட்டடப்பாணியில் இருந்தது. எண்ணிக்கை கூடிய தடாகங்களையும், பழத்தோட்டங்களையும், நீர்வழித்தடப் புதுமையையும் கொண்டிருந்தது இந்நகரம். மாளிகைகளிலும் மண்டபங்களிலும் தந்தத்தால் வடிவமைக்கப்பட்ட மலர்க் கூட்டங்களால் உட்கூரைகள் அழகுபடுத்தப்பட்டிருந்தன. நகரச்சுற்றி பெருஞ் சுவர் எழுப்பப்பட்டிருந்தது.

“இதுவரை வேறெங்கும் கண்டிராததும் கேட்டிறாததுமான பேரழகைக்கொண்ட கம்பீரமான நகரம் இது” என்கிறார் ஆசியாவின் மையப்பகுதியிலிருந்து பயணித்த அப்துர் ரசாக். “பெருவணிக வளாகம் இருபுறமும் தூண்கள் தாங்கிய மூடிய கூரைகூடிய நீண்ட பாதையும் காட்சிக் கூடங்களையும் கொண்டிருந்தது. உயர்ந்தெழுந்த அரச மாளிகை பகலிலும் இரவிலும் ஒளிர்ந்தது. அதைச்சுற்றி கல்லால் உண்டாக்கப்பட்ட நீர்வழிகளில் துங்கபத்திரா நதியிலிருந்து நீர் கொணரப்பட்டது. அது தூண்களால் நிலத்திலிருந்து உயர்த்தப்பட்டிருந்தது. இது முன்னர் கண்டிராத நீர்வழித்தட உத்தி. நகர் முழுவதும் பூங்காக்களும், மரங்களும் நிறைந்திருந்தன. நகரத்தின் சுற்றளவு 60 மையில்கள் இருந்தது” என்கிறார் இத்தாலிய நாட்டுப் பயணி நிகொலாகோட்டி (Nicolo Conti 1420). இத்தாலிய நகரங்களைப் பார்த்திருந்த பியஸ் (Paes 1522) என்னும் போர்ச்சுகல் நாட்டுப்பயணி “விஜயநகரம் இத்தாலிய ரோம் நகரம் போலப் பொலிவுடன் திகழ்கிறது” என்கிறார்.

விரூபாக்ஷர் ஆலயம்

இந்த ஆலயத்தில் வழிபாடு என்பது 9ம் நூற்றாண்டிலேயே – விஜயநரப் பேரரசுக்கு முன்பே – இருந்துள்ளது. அது தடையற்று தொடர்ந்து இன்றும் உள்ளது. தொடக்கத்தில் அளவில் சிறிய சிவாலயமாக இருந்த அது காலம் செல்லச்செல்ல விஜயநகரப் பேரசின் ஆட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்டது. முன்பு சாளுக்கிய, ஹொய்சாளர் ஆண்டகாலத்திலும் ஆலயம் மேம்படுத்தப்பட்டது, அதற்கான தடயங்கள் இன்றும் உள்ளன. ஆலயத்தின் நுழைவாயில் ராய கோபுரம் இரண்டாம் தேவராயர் (1424-1465) ஆட்சிக் காலத்தில் லக்கண தேனேச என்னும் சிற்பியின் தலைமையில் எழுப்பப்பட்டது. 50 மீட்டர் உயரமும் ஒன்பது அடுக்குகளும் கொண்ட கிழக்கு நுழைவாயில் கோபுரம், ஆலயத்தின் மைய மண்டபம் இரண்டையும் மன்னர் கிருஷ்ண தேவராயர் தாம் அரசுக் கட்டிலில் அமர்ந்த ஆண்டில் தமது காணிக்கையாக எழுப்பியதற்கான கல்வெட்டுச் சான்று (1510) உள்ளது, வடக்கு வாயில் கோபுரம் கனககிரி கோபுரம் என்று குறிப்பிடப்படுகிறது. அதன் வழி துங்கபத்திரா நதியைச் சென்றடைகிறது. வடிவியலைப் பின்பற்றி முக்கோணவடிவில் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது, ஆலயத்தின் சிறப்புகளில் இது முதன்மையானதாகும். 1565ல் இந்த நகரம் முற்றிலும் அழிக்கப்பட்டபோதும் இந்த ஆலயவழிபாடு நிற்காமல் தொடர்ந்தது. 19ம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆலயச் சீரமைப்பு, கிழக்கு, வடக்கு கோபுரங்கள், உட்கூரை ஓவியங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.

ரங்க மண்டப ஓவியங்கள்

16ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இந்த மண்டபத்துக் கூரையிலும் அதைத் தாங்கும் உத்திரங்களிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டன. இந்து மதம் சார்ந்ததும், அப்போது வாழ்ந்தவருடையதுமான காட்சிகள் அவற்றில் இடம்பெற்றன. பின்னாளில் விஜயநகர ஓவியப்பாணி என்று அழைக்கப்பட்ட அது, சாளுக்கிய, சோழ, பாண்டிய பாணிகளை ஒருங்கிணைத்ததுதான்.

ரங்க மண்டபத்து விதானம் சதுரப்பரப்புகளாகப் பிரிக்கப்பட்டு ஓவியங்கள் தீட்டப்பட்டன. புராணங்களிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட கதைக் காட்சிகளின் இடையே ஸ்ரீவித்யாரண்யரை ஊர்வலமாகப் பல்லக்கில் சுமந்து செல்லும் காட்சியும் உள்ளது. திண்டுடன் கூடிய அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அவர் அமர்ந்துள்ளார். பல்லக்கை நால்வர் சுமக்கின்றனர். சவரிகொண்டு விசிறிய படியும் கையில் கோலுடனும் பல்லக்கை பின்தொடரும் பணியாட்கள், பல்லக்கின் முன்னும் பின்னும் யானைகளின் வரிசை என்று ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இதேபோன்ற இன்னொரு ஓவியத்தில் ஸ்ரீவித்யாரண்யருடன் மன்னரும் காணப்படுகிறார்.

சுவர்ப்பரப்பை ஓவியத்துக்கு ஏற்றவிதமாகப் பூசி, அது நன்கு காய்ந்தபின் ஓவியங்கள் தீட்டும் சிக்கோ முறை (Seeco) தான் மேற்கொள்ளப்பட்டது. இது அஜந்தா ஓவிய வழியிலிருந்து வேறுபட்டது. காவிநிறத்தில் உருவங்கள் வரைந்து கொள்ளப்பட்டன. மூன்று அல்லது நான்கு வண்ணங்களே பயன்படுத்தப்பட்டன. சுவரிலிருந்து ஓவியம் உரியாமல் இருக்க வச்சிரம் போன்ற பசைகலந்த வண்ணங்களால் ஓவியம் தீட்டப்பட்டது. ஓவியத்தின் பின்புலம் சிவப்பு நிறத்திலும், உருவங்கள் வெளிரிய நீலத்திலும் காணப்படுகின்றன. ஆனால் பெரும்பகுதி ஓவியங்கள் பொலிவிழந்தும், உதிர்ந்தும், மூடர்களால் சிதைக்கப்பட்டும் பரிதாபமான நிலையில் உள்ளன. மண்டபத்தின் மையப்பகுதி ஓவியங்கள்தான் அவற்றின் அடையாளங்களாக இன்று நம்மிடையே உள்ளன.

விஜய விட்டல ஆலயம்

சங்கம மன்னர் 2ம் தேவராயர் (1422-1446) தமது ஆட்சிக்காலத்தில் இந்த ஆலயத்தைக் கட்டுவித்தார். இதில் பல்வேறு மேம்படுத்துதல்களும், விரிவாக்கங்களும் மன்னர் கிருஷ்ணதேவ ராயர்காலத்தில் (1509-1529) மேற்கொள்ளப்பட்டன. ஹம்பியில் உள்ள ஆலயங்களிலேயே இதுதான் அளவில் பெரியது. ஆலயக் கட்டட உன்னதமும், முதிர்ந்த கலைநயமும் கொண்ட சிற்பங்களும், அதன் கலைச்சிறப்புக்குப் பேசப்படுவது. ஆலய வளாகம் உயர்த்திய கல்சுவர் கொண்டது. முப்புற நுழைவாயில்களும் அவற்றின் மேல் உயர்ந்த கோபுரங்களும் கல்லால் உருவான பல மண்டபங்களும், கருவறைகளும் கொண்டது. அவற்றில், மஹா மண்டபம், சபா மண்டபம், ரங்க மண்டபம், உற்சவ மண்டபம், கல்தேர் ஆகியவை பார்வையாளரைப் பெரிதும் கவர்பவை.

மைய மண்டபம்

ஆலயவளாத்தின் திறந்தவெளிப் பகுதியில் சிற்பவேலைப்பாடுகள் கொண்ட, நிலத்திலிருந்து உயர்த்தப்பட்ட கல்மேடையின் மீது இம்மண்டபம் அமைந்துள்ளது. அம்மேடை பல அடுக்குகள் கொண்டது. அவற்றில் ஹொய்சாள பாணியில் வரிசை வரிசையாகப் பறவைகளும் விலங்குகளும் மலர்களும் போர்வீரர்களின் தோற்றங்களும் சிற்பமாகியுள்ளன. மண்டபத்தை அடைய உள்ள கிழக்குப் பகுதிப் படிகளில் யானைகளின் சிற்பங்களும், நுழைவாயிலின் இருபுறமும் மிக நேர்த்தியான சிற்பங்களுடன் பத்து அடிகள் உயரம் கொண்ட நாற்பது கல்தூண்களும் காணப்படுகின்றன. மண்டபம் நான்காகவும் மையப்பகுதி என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் மையப் பகுதியில் ஒரு பக்கத்துக்கு நான்கு என்னும் விதத்தில் பதினாறு தூண்கள் சிற்பங்களால் நிரம்பி வழிகின்றன. சதுர வடிவமான இப்பகுதி மண்டபத்துக்குப் பேரழகைக் கொடுக்கின்றது. உட்கூரையும் பல்வேறு வடிவங்களால் எழிலூட்டப் பட்டுள்ளது.

ரங்க மண்டபமும் இசைத்தூண்களும்

ஐம்பத்தாறு கல்தூண்களை உள்ளடக்கியது ரங்க மண்டபம். அவை அளவில் மிகப் பெரியவை. அவற்றுடன் இணைந்த ஏழு சிறிய தூண்களும் ‘சரிகம’ இசைத்தூண் என்று பெரும் புகழ் பெற்றவை. கைகொண்டு இத்தூண்களை மெல்லத் தட்டினால் ஏழு தூண்களிலிருந்தும் ஏழு வகையான ஒலிகள் உண்டாகின்றன. அதுதான் இவற்றின் சிறப்பு, புதிர். இது காண்போரை வியக்க வைப்பது. ஆங்கிலேய ஆட்சியின்போது இந்த ஒலி பற்றிய மர்மத்தைக் கண்டுபிடிக்க விரும்பி இரண்டு இசைத் தூண்களை வெட்டி எடுத்து ஆராய்ச்சி செய்தனர். எனினும் அதில் எந்த மர்மமும் இல்லையென உணர்ந்தனர். இந்த இரண்டு தூண்களும் இன்றும் மண்டபதின் ஒருபுறம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கல்தேர்

ஒவ்வொரு சுற்றுலாத் தலத்திலும் அனைவரையும் ஈர்க்கும் ஒன்று இருக்கும். அதுவே அதன் அடையாளமாகவும் அமையும். ஹம்பிக்கு அடையாளமாகத் திகழ்வது. கல்தேர். கர்நாடக அரசின் சுற்றுலாத்துறையின் குறியீடும் (logo) இதுதான். இந்தத் தேர் மன்னர் கிருஷ்ணதேவராயரால் கட்டுவிக்கப்பட்டது. கோனார்க் சூரியனார் ஆலயத்தைக் கண்டு மோகித்த அவர் அதுபோன்ற ஒன்றை இங்கும் தோற்றுவித்தார் என்கிறது வராற்றுக் குறிப்பு.

உண்மையில் இது தேர்மட்டுமில்லை. தேரின் உருவம் கொண்ட ஆலயம். முன்னர் அதன் மேற்புறதில் உள்ள கருவறையில் ஒரு பெரிய கருடனின் சிலை கம்பீரமாகக் காட்சியளித்தது. நகரம் அழிக்கப்பட்டபோது அது இடித்து உடைக்கப்பட்டது. முதல்பார்வைக்கு இது ஒரே கல்லில் செதுக்கிய சிற்பம் போல் தோன்றினாலும், ஊன்றி கவனித்தால் அது பாறைத் துண்டுகளைக் கொண்டு உண்டானது என்பது விளங்கும். இணைப்புகள் தெரியாதபடி உருவாக்கியிருப்பதில் இருந்து சிற்பியின் சிற்பநுணுக்க முதிர்ச்சி புலப்படுகிறது. இது அவர்களின் படைப்பு மேதைமையை பறைசாற்றும் அடையாளம். தேரின் அமைப்பு திராவிட ஆலய பாணியைக் கொண்டுள்ளது. தேரை இழுப்பதுபோல இப்போது உள்ள யானைகள் இருக்கும் இடத்தில் முன்பு புரவிகள் இருந்தன. அதற்கு அடையாளமாக புரவிகளின் பின்னங்கால் குளம்பு நிலத்தில் ஒட்டிக்கொண்டு உள்ளதைக்கொண்டு புரிந்துகொள்ளலாம். இரண்டு யானைகளுக்கும் இடையில் உடைந்த கல் ஏணி காணப்படுகிறது. அந்தப் படிகளின்மீது ஏறி கருடர் சிலைக்கு வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டன. உயர்த்திய மேடையின் மீது எழுப்பப்பட்ட தேரின் இருபுறமும் இரண்டு சக்கரங்கள் உள்ளன. அவற்றை சுழற்றும் விதமாக சிற்பி உண்டாக்கினான். இப்போது பாதுகாப்புக் கருதி அவை அசையாதபடி சிமெண்ட் கலவை பூசப்பட்டுள்ளது. விட்டலர் ஆலயத்தின் திறந்த வெளியில் உள்ள இதன் முன் புகைப்படம் எடுத்துக்கொள்ளாதவரே இரார், என்னையும் சேர்த்து.

ஆனால், விஜய விட்டல ஆலயம் இன்று இடிபாடுகளுடன் உருக்குலைந்து காணப்படுகிறது. கருவறையில் முன்னர் விட்டலரின் சிலை வழிபாட்டுகளுடன் விளங்கியது. இப்போது கருவறையில் சிலை இல்லை. மைய மண்டபத்தின் மேற்குப்புறம் சிதைந்த நிலையில் உள்ளது. முன்பு, அங்காடிகளுடன் பரபரப்பாக இருந்த ஆலயத்தை அடையும் நீண்ட சாலையும் பராமரிப்பின்றிப் பாழ்பட்டுக் காட்சியளிக்கிறது. அன்று புரவிகள் பெரும் அளவில் வியாபாரம் செய்யப்பட்டது இங்குதான். இப்போது ஆலய வளாகம் இரவில் ஒளிவிளக்குகளுடன் கூடியதாக, சுற்றுலாப் பயணிகளுக்கு அதன் அழகைச் சொல்கிறது. ஆண்டுதோறும் புரந்தரதாசர் இசைவிழா கோலாகலமாக நிகழ்த்தப்படுகிறது.

ஹசாரா ராமர் ஆலயம்

மன்னர் கிருஷ்ணதேவ ராயரால் 1513ல் இந்த ஆலயம் கட்டப்படத் தொடங்கி அவரது ஆட்சி முடியும் முன்னர் நிறைவு பெற்றது. இந்த ஆலயம் பொது மக்களக்கானது அல்ல. மன்னரும் அவரது குடும்பத்தினரும் மட்டும் வழிபடுவதற்கு என்றே உருவாயிற்று. கிழக்கு திசையில் ஆலயத்தின் நுழைவாயில் தூண்களுடன் கூடிய மண்டபத்துடன் தொடங்குகிறது. உள்ளே கருங்கல் தூண்கள் தாங்கும் ரங்க மண்டபத்தை அடைவோம். உயரம் கூடிய அத்தூண்கள் கண்ணைக் கவரும் அரிய சிற்பங்களைக் கொண்டுள்ளன. விநாயகர், மஹிஷாசுரமர்த்தனி, ஹனுமான் விஷ்ணுவின் பலதோற்றங்கள் ஆகியவை இவற்றுள் சிலவாகும். நாற்கரங்களிலும் ஆயுதம் ஏந்தியவாறு புரவியில் வீற்றிருக்கும் கல்கி அவதார சிற்பம் மிகச்சிறப்பானது.

ரங்க மண்டபத்து மேற்கு, தெற்கு, வடக்கு நுழைவாயில்கள் கருவறை செல்லும் பாதையில் இணைகின்றன. ஆலயத்தின் வெளிச்சுற்று வழியை ஒட்டி மதில்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது வெளிப்புறத்தில் நீளவாட்டில் ஐந்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கீழிருந்து வேழம், புரவிகளின் வரிசை, கிருஷ்ணரின் இளம்பருவ விளையாட்டுகள், முருகன், விநாயகர் உருவங்கள் தொடர் புடைப்புச் சிலைகளாக உள்ளன. ருஷ்யசிங்கர் கதை, புத்ரகாமேஷ்டி வேள்வி, சீதா சுயம்வரம் ஆகிய சிற்பத் தொகுப்புகள் கலை ஆர்வலரைக் கிறங்கவைக்கின்றன.

கருவறையின் வடக்கில் உள்ள தாயாரின் ஆலயம் அளவில் சிறியது. ஆனால் மிகுந்த சிற்பவேலைப்பாடுகள் கொண்டது. இதன் சிறு மண்டபத்தின் கிழக்குச் சுவரில் நரசிம்மரின் உருவம் பெரிய அளவில் காணப்படுகிறது. நடைவழியில் மன்னருக்கு வைணவ ஆச்சாரியார் பொருள் ஒன்றை அளிப்பது போன்ற சிற்பம் உள்ளது. அது கிருஷ்ணதேவ ராயரும் அவரது குரு வியாச ராயரும் என்போர் உண்டு. வடக்கு எல்லையில் உள்ள கல்யாண மண்டபம் 1521ல் எழுப்பப்பட்டது. விஷ்ணுவுக்கான இந்த ஆலய வெளிச்சுவர் மூன்று அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு இராமாயணக் காவியம் தொடர் சிற்பங்களாகியுள்ளது. அவ்விதமே தாயாரின் ஆலய வெளிச்சுவரில் குசன் – லவன் கதையும் சிற்பமாகியுள்ளது.

அச்சுதராயர் ஆலயம்

கிருஷ்ணதேவராயரின் மரணத்துக்குப் பிறகு அவரது தம்பி அச்சுததேவராயர் அரசுக்கட்டிலில் அமர்ந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டது. (1534). திருவேங்கடவனுக்கானது இந்த ஆலயம். மதங்க மலைக்கும் கந்தமதன மலைக்கும் இடையில் உள்ள இது விஜயநகர ஆலயக் கட்டட அமைப்பின் முதிர்ச்சியைக் கொண்டதாக உள்ளது என்று கலை வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். விஜயநகரப் பேரரசின் கடைசி ஆலயமும் இதுதான்.

இரண்டு சதுரமான அரவணைப்புகளுடன் கூடிய மையப்பகுதியில் ஆலயம் உள்ளது. தூண்களுடன் கூடிய தாழ்வாரம் இரண்டு காணப்படுகிறது. மற்ற பகுதிகள் இடிபாடுகளாகக் காணப்படுகின்றன. கருவறையில் முன்னர் கருட சிற்பம் வழிபடப்பட்டு வந்தது. மண்டபத்துத் தூன்களில் கஜேந்திர மோக்ஷம், பசுக்களின் கூட்டத்தில் குழலூதும் கண்ணன், காளிங்கன் மீது நடமாடும் கிருஷ்ணன் போன்ற அரிய சிற்பங்கள் இவற்றில் உள்ளன. திருக்கல்யாண மண்டபம் ஒன்றும் காணப்படுகிறது. இவ்வாலயம் ஹம்பியிலிருந்து சிறிது தள்ளி இருக்கிறது. இன்று இவ்வாலயம் இடிபாடுகளுடன் பரிதாபமாகக் காட்சியளிக்கிறது. வருவோரின் எண்ணிக்கையும் குறைவுதான்.

பத்ம மஹால்

இந்த மாளிகையின் கட்டட வடிவ அமைப்பைச் சார்ந்து இது பத்ம மஹால் என்று குறிப்பிடப்படுகிறது. அந்த நாளையக் கட்டடக் கலையின் உன்னதத்துக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இந்திய இஸ்லாமியக் கட்டட வழிகளை இணைத்துக் கட்டப்பட்ட இரு தளங்களைக் கொண்ட இம்மஹால், நாற்புறமும் எழுப்பிய சுவரும், மலரும் தாமரையின் வடிவம் கொண்ட உப்பரிகைகளுடன் கூடியது. கட்டடத்தை 24 தூண்கள் தாங்குகின்றன. நுழைவாயிலின் மேற்புறம் கவிழ்த்த வில்போல் வளைந்து வடிவாகியுள்ளன. இந்த மஹால் அரசுப் பெண்டிருக்கானது. அவர்களின் உல்லாசத்துக்காகவே கட்டப்பட்டது. எனவே ‘சித்ராங்கி மஹால்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒன்றுதான் போர் அழிவிலிருந்து தப்பிப் பிழைத்து இடிபாடுகள் இல்லாத முழுகட்டடமாக உள்ளது.

ஹேமகூடமலை ஆலயத் தொகுப்பு

ஹம்பி நகரத்தின் தெற்குப்புறத்தில் உள்ள ஹேமகூடமலை எனப்படும் இந்த மலையின் மேற்புறம் நீண்ட தட்டையான அமைப்பைக் உடையது. 9ம் நூற்றாண்டு முதல் 14ம் நூற்றாண்டு வரை அவ்வப்போது கல்லால் எழுப்பப்பட்ட ஆலயங்களைக் கொண்டது. முன்னர் இப்பகுதி முழுவதும் மதிற்சுவரால் சூழப்பட்டிருந்தது. இதற்கான தடையங்கள் இன்றும் உள்ளன. பெரும்பாலும் இந்த ஆலயங்கள் சிவனுக்கானவை.

இந்த மலையின்மேல் ஏறத்தாழ 35 ஆலயங்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் இப்போது வெறும் நினைவுச் சின்னங்கள்தான். பல ஆலயங்கள் முற்றிலுமாக இடிந்து காணப்படுகின்றன. ஆலயங்கள் சிலவற்றில் சிலபகுதிகள் இன்றும் திடமாக உள்ளன. இவற்றின் கட்டடப்பாணி விஜயநகர கட்டடப் பாணியிலிருந்து வேறுபட்டது. அவற்றின் அமைப்பு வடிவம் காரணமாக ஜைனர் ஆலயம் என்று தவறாகப் பேசப்படுகிறது. மலையின் தெற்குப்புறத்தில் பழைய விரூப்பாக்ஷர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய வளாகத்தில் ஒரு சிறிய குளம் உள்ளது. இன்றும் அங்கு வழிபாடு நிகழ்கிறது. கிருஷ்ணர் ஆலயம், படவிலங்கர் ஆலயம், லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம் போன்றவை விஜயநகர ஆட்சி காலத்தில் உருவானவை.

லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம்

ஹேமகூடமலையில் உள்ள இந்த ஆலயமும் இதில் உள்ள லக்ஷ்மி நரசிம்மர் சிலையும் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக் காலத்தில் (1528) கட்டப்பட்டன. ஹம்பியில் உள்ள சிலைகளிலேயே லக்ஷ்மி நரசிம்மர் சிலைதான் அளவில் பெரியது. ஒற்றைக் கல்லில் உருவானது. விட்டலர் ஆலயத்தில் உள்ள கல்தேரைப்போல இதுவும் ஹம்பியின் புகழை ஓங்கி ஒலிக்கும் சிலை.

அமர்ந்த நிலையில் உள்ள இதன் உயரம் அதன் மேடையையும் சேர்த்து 6.7 மீட்டர்களாகும். மண்டலமிட்ட ஆதிசேஷன் மேல் சம்மணமிடும் விதமாக அமர்ந்த நிலையில் சிலை உருவாக்கப் பட்டுள்ளது. சம்மணமிட்டு அமரும் நிலைக்கு ஆயத்தமாவது போன்ற கால்கள். இரு தொடைகளும் நிலத்தில் படியாது உள்ளன. ஏழுதலை ஆதிசேஷன் படத்தை விரித்து அவரது தலைக்கு மேல் குடையாகக் காட்சியளிக்கிறார். பெரிய கிரீடம் சூடிய சிலையின் இருபுறமும் மகரதோரணம் ஒன்று அலங்காரமாக அமைந்துள்ளது. நரசிம்மரின் முகத்தில் உருண்டு பிதுங்கி விழிக்கும் கண்களும், பற்களும், விரியும் வாயும் காண்போரை உறையச் செய்யும். ஆதிசேஷனின் தலைக்கு மேல் சிங்க முகம் ஒன்றும் உள்ளது. ‘மாலோல நரசிம்மர்’ என்றும், ‘உக்கிர நரசிம்மர்’ என்றும் இதற்கு சிறப்புப் பெயர்கள் உண்டு. முன்னர் அவரது மடியில் இலக்குமியின் சிலை அமர்ந்த நிலையில் இருந்துள்ளது. 1565ல் நிகழ்ந்த போருக்குப்பின் இச்சிலையின் கைகளும் இலக்குமி சிலையும் உடைக்கப்பட்டன. இலக்குமி சிலை இப்போது அருங்காட்சிக்கூடத்தில் பாதுகாப்பாக உள்ளது.

இந்தத்தொகுப்பில் விநாயகரின் சிலைகள் இரண்டு உள்ளன. ஒன்று சசிவேகலு கணேசர் (கடுகு கணேசர்) மற்றது கடலகலு கணேசர் (நிலக்கடலை கணேசர்).

சிதைந்த நிலையில் இருந்தாலும், விஜயநகரப் பேரரசின் கட்டடக் கலையின் சிறப்பை இன்றும் பறைசாற்றி நிற்கிறது ஹம்பி.
.

No comments:

Post a Comment