Wednesday 17 June 2020

CONFLICT AMONG INDIAN LEADERS





           CONFLICT AMONG INDIAN LEADERS






1921இல் சென்னையில் பின்னி ஆலை வேலை நிறுத்தம் நடந்தது. இந்தியத் தொழிற்சங்க வரலாற்றிலேயே முக்கியமான போராட்டம் இது. திரு. வி.க. இந்தப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார். தொழிற்சங்க முன்னோடியான வாடியாவின் பங்களிப்பு இதில் இருந்தது.
எம்.சி.ராஜா

இந்தியாவில் தொழிற்சங்கப் போராட்டங்கள் அப்போதுதான் ஆரம்பித்திருந்தன. தொழிற்சங்க இயக்கமே குழந்தை நிலையில்தான் இருந்தது. மும்பை, கல்கத்தா, சென்னை போன்ற ஊர்களில் உள்ள ஆலை ஊழியர் நடுவேதான் அது அரும்பியிருந்தது.

இந்தியத் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆரம்பத்தில் அதற்கே உரிய பல பிரச்சினைகள் இருந்தன. இந்தியத் தொழிலாளர்கள் இந்தியாவின் நகரங்களில் கடுமையான நில அடிமை முறையில் இருந்து தப்பி வந்தவர்கள். அவர்களுக்கு தொழிற்சாலை உழைப்பு எளிதானதாக இருந்தது. மேலும் அவர்களுக்கு கிடைத்த பொருளியல் சுதந்திரத்தை அவர்கள் உற்சாகமாகக் கொண்டாடினார்கள். ஆனால் தொழிற்சாலை உழைப்பு அவர்களின் ஆரோக்கியத்தை அழிக்கிறது என்றும் கடுமையான சுரண்டலுக்கு அவர்கள் ஆளாகிறார்கள் என்றும் அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. 

அத்துடன் அந்த ஊழியர்கள் நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அந்த காலகட்டத்தின் சாதி மத நம்பிக்கைகள் அனைத்தையும் அவர்கள் கொண்டிருந்தார்கள். தொழிலாளர் என்ற அடையாளத்துடன் ஒருங்கிணைவது அவர்களுக்கு அனேகமாக சாத்தியப்படவில்லை.

 

மூன்றாவதாக, அந்தத் தொழிலாளர்கள் தங்களுக்குக் கிடைத்த சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று அறியாதவர்களாக இருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் குடிப்பழக்கம் கொண்டு அழிந்தனர். அடிதடிகள், கள்ள உறவுகள், விபச்சாரம் போன்றவற்றில் மூழ்கியிருந்தனர். 

கிட்டத்தட்ட ஒரு மதத்தைப் பரப்புவது போல உக்கிரமான அறப்பிரச்சாரம் வழியாகவே இந்தியாவில் தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்க முடிந்தது. அந்த இயக்கத்தின் ஆரம்பகாலத் தலைவர்கள் திரு.வி.க.போல துறவு மனப்பான்மை கொண்டவர்களாக இருந்தார்கள்.

1921 பின்னி மில் வேலை நிறுத்தம் இந்திய அரசியல் சூழலில் உள்ள முக்கியமான முரண்பாட்டை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. இந்திய தலித்துக்களில் ஒரு சாரார் நிலப்பிரபுத்துவ அடிமை வாழ்வில் இருந்து வெளியே வரமுடிந்தது, பிரிட்டிஷார் ராணுவத்திலும் ஆலைகளிலும் அவர்களைச் சேர்த்துக் கொண்டதன் விளைவாகவே. ஆகவே பிரிட்டிஷார் மீது விசுவாசத்துடன் அவர்கள் இருந்தார்கள். 

அத்துடன் இந்தியத் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் சாதிய உணர்வுடன் இருந்தார்கள். அவர்கள் தலித் ஊழியர்களை ஒதுக்கியே வைத்திருந்தார்கள். ஆரம்ப கால தொழிற்சங்க முன்னோடிகள் தலித்துக்களை தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. 

பின்னி ஆலை வேலை நிறுத்தத்தில் தலித்துக்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும் வெள்ளையர் ஆட்சிக்கு ஆதரவாகவும் நிலைப்பாடு எடுத்தார்கள். இது கருங்காலித்தனம் என்று தொழிலாளர்கள் கொதித்தார்கள். தலித் தொழிலாளர்களுக்கும் பிறருக்கும் கடுமையான மோதல்கள் நடைபெற்றன. 

இந்த நிகழ்வுகளை திரு.வி.க. அவரது வாழ்க்கை வரலாற்றில் விரிவாகவே பதிவு செய்திருக்கிறார். திரு.வி.க. தொழிற்சங்கத் தலைவராக இருந்தார். மிக எளிமையான காந்தியவாதி. கால்நடையாகச் செல்பவர். அவரைத் தாக்கவும் பழியை தலித்துக்கள் மீது போடவும் பிரிட்டிஷ் அரசு சதி செய்தது. 

இந்த நிலையில்தான் புளியந்தோப்பு கலவரம் என்று புகழ்பெற்ற நிகழ்ச்சி நடந்தது. தலித்துக்களுக்கும் பிற தொழிலாளர்களுக்கும் பெரிய மோதல் வெடித்தது. துணிச்சலுடன் கலவரப்பகுதிகளுக்குப் போன திரு.வி.க. தாக்குபவர்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு அவர்களை நோக்கிப் பேசினார். அந்தக் கலவரத்தை பரவலாக்கி அதன்மூலம் போராட்டத்தை ஒடுக்க ஆங்கில அரசு செய்த எல்லா முயற்சிகளையும் முறியடித்தார்.

அந்தப் போராட்டத்தில் திரு.வி.க.வுக்கு எதிர்த்தரப்பில் தலைமை ஏற்றிருந்தவர் எம்.சி.ராஜா. தலித் தலைவரான எம்.சி.ராஜா உறுதியான பிரிட்டிஷ் ஆதரவாளர். பிரிட்டிஷார் அதன் பொருட்டு அவருக்கு இராவ் பகதூர் உள்ளிட்ட பட்டங்களைக் கொடுத்து கௌரவித்தார்கள். திரு.வி.க.வும் எம்.சி.ராஜாவும் இராயப்பேட்டையிலேயே வாழ்ந்தவர்கள். வெஸ்லி கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள். இருவருமே வெஸ்லி கல்லூரியில் வேலை பார்த்தார்கள். அங்கே ராஜா முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை உள்ள பகுதியின் மேற்பார்வையாளர் ஆனார். திரு.வி.க. தமிழ்ப் பேராசிரியர். 

பின்னர் ராஜா 1916 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆதரவுக்காக உருவான ஜஸ்டிஸ் கட்சியில் இணைந்தார். அரசியலில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார். திரு.வி.க.வின் மனம் காங்கிரஸ் பால் சென்றது. ‘தேசபக்தன்’ என்ற இதழை நடத்துவதற்காக அவர் கல்லூரிப் பணியை உதறியபோது, எம்.சி.ராஜா வேலையை விட்டுவிட வேண்டாம் என்று திரு.வி.க.வை விலக்கினார். திரு.வி.க. அதைப் பொருட்படுத்தவில்லை. 

நண்பர்கள் இருவரும் போரிடும் இருதரப்பையும் வழிநடத்தும் நாடகீயமான வரலாற்றுத் தருணம். ஆனால் இருவரிடையே நட்பு மட்டும் வலுவாகவே நீடித்தது. போராட்டத்தின் தொடக்கத்தில் திரு.வி.கவை எம்.சி.ராஜா வந்து பலமுறை சந்தித்து நட்புடன் விலக்கினார். பிரிட்டிஷ் ஆட்சி உங்களையும் குடும்பத்தையும் கடுமையாகத் துன்புறுத்தும். ஆகவே  வீண் சாகசங்கள் வேண்டாம் என்றார். 

ஒருநாள் இதைப்பற்றி திரு.வி.கவும் ராஜாவும் பூசலிட்டுக் கொண்டார்கள். ‘என்னை அரசாங்கம் சார்பில் நிற்கச் செய்திருப்பது எனது சமுகம். எனது சமூகம் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறது. அதை முன்னேற்ற அரசின் துணை தேவையாக இருக்கிறது’ என்றார் ராஜா. ‘தொழிலில் சாதி பேதம் கொண்டு வரப்படக்கூடாது. ஆதிதிராவிடர் தங்கள் உரிமைகளை போராடித்தான் பெறமுடியும்’ என்றார் திரு.வி.க.

‘நீங்கள் எங்கள் இனத்தாரைக் கொண்டு புரட்சி செய்வித்தால் அதன் பலனை உயர்சாதியினர் மட்டுமே அனுபவிப்பார்கள். ஆகவே நீங்கள் மூட்டும் தீயை அணைப்பது எனது கடமை’ என்றார் எம்.சி.ராஜா. ‘தொழிலாளர் இயக்கம் வளரும்தோறும் சாதி பேதங்கள் மறையும். அது மட்டுமே நம்முன் உள்ள வழி’ என்றார் திரு.வி.க. 

சிரித்தபடி ராஜா சொன்னார், “நீங்கள் இலக்கியம் படித்தவர். ஊடல் இருந்தால்தான் கூடல் சிறக்கும் என்பார்கள். இது நமக்குள் கூடலுக்கான ஊடலாக இருக்கட்டும்’ அதன்பின் அவர்கள் பிரிந்தார்கள். 

கலவரம் உச்சத்தை அடைந்து திரு.வி.க தாக்கப்படக்கூடும் என்ற நிலை நிலவியபோது எம்.சி.ராஜா திரு.வி.கவைப் பார்க்க வந்தார். ”எனக்கு போலீஸ் துணை, இராணுவத் துணை, கார் துணை இருக்கிறது. கையில் துப்பாக்கியும் உண்டு. உங்களுக்கு ஒரு துணையும் இல்லை. குழப்பத்திற்கு இடையே நடமாடுகிறீர்களே” என்று வருந்தினார். “நேற்று இரவு இந்த எண்ணம் ஏற்பட்டபோது என்னால் தூங்கவே முடியவில்லை” என்றார்.‘எனக்கு தொழிலாளர் துணை உண்டு. உங்கள் பக்கத்தில் உள்ள தலித் தொழிலாளர்களின் மனசாட்சியும் எனக்குத் துணையே’ என்றார் திரு.வி.க. பிரச்சினை முற்றியபோது எம்.சி.ராஜா பாதுகாப்புக்காக ராயப்பேட்டையில் இருந்து ஆலந்தூருக்கு சென்றுவிட்டார். அதனால் திரு.வி.க அவரைப் பார்ப்பது குறைந்தது. ஒருநாள் காலை திரு.வி.கவின் வீட்டு முற்றத்தில் எம்.சி.ராஜாவின் கார் வந்து நின்றது. ‘உங்களுக்குத் தொல்லை நெருங்கி வருகிறதே’ என்று சொன்னபோது சட்டென்று ராஜா கண்கலங்கி விட்டார். 

அவர் கண்களில் இருந்த நீரைக் கண்டு கலங்கிய திரு.வி.க சொன்னார், ‘நாடு கடத்தும் விஷயம்தானே, இந்நிலையில் என்ன செய்வது. நடப்பது நடக்கட்டும்’. பிரச்சினை பிற்பாடு மெல்ல சமரசமாகியது. பின்னர் இரட்டைமலை சீனிவாசனின் மணிவிழா நடைபெற்றபோது தலைமை தாங்கி பேசினார் திரு.வி.க. அப்போது ஒரு பேச்சாளர் ராஜாவும் திரு.வி.கவும் முரண்பட்டதைச் சுட்டிக்காட்டினார். அதற்கு எம்.சி.ராஜா பதில் கூறினார். ‘இப்போது இன்னும் ஒரு தொழிலாளர் போராட்டம் நடந்ததே, அதில் நான் தலித் தொழிலாளர்கள் தனித்து முரண்பட்டு நிறகும்படிச் சொன்னேனா என்ன? இல்லை. ஏனென்றால் இப்போது இயல்பாகவே தொழிலாளர் ஒற்றுமை உருவாகியிருக்கிறது. தீண்டாமை குறைந்திருக்கிறது. எங்கள் இனத்து மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்றன. 1921இல் நிலைமை அப்படி இருக்கவில்லை. அன்றைய சூழலுக்காகவே நான் எதிர்வினையாற்றினேன். எந்தத் தவறும் நான் செய்யவில்லை.’ 

திரு.வி.க.வுடன் தன்னுடைய நட்பு அப்போதும் இப்போதும் அப்படியேதான் இருக்கிறது எனுறு உணர்ச்சிகரமாகக் கூறிய எம்.சி.ராஜா ‘தொழிலாளர்களின் ஒற்றுமைக்காக நான் பிணங்கிய முறையில் உழைத்தேன். திரு.வி.க இணங்கிய முறையில் உழைத்தார். அப்பிணக்கம் இப்போது என்னாலும் எவராலும் பிரிக்கமுடியாத இணக்கமாக பரிணாமம் கொண்டுள்ளது’ என்றார். 

இரு பெரும் தலைவர்களின் மன விரிவை காட்டும் சந்தர்ப்பம் இது. வரலாறு உருவாக்கும் சவால்களை மிகவும் சிக்கலானவை. அவற்றை சந்திக்கையில் தலைமைப் பண்பும் சிந்தனை வீச்சும் கொண்ட பெருமனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு போக்கில் எதிர்வினையாற்றுகின்றன. ஒருவர் கண்டதை ஒருவர் காணாமல் போகலாம். ஒருவர் போகும் வழியை ஒருவர் எதிர்க்கலாம். அவர்களிடையே முரண்பாடுகள் உருவாகலாம். மோதல்களும் நிகழலாம். அத்துடன் இயல்பாகவே தலைமைப்பண்பு கொண்டவர்கள் நடுவே அகங்கார மோதலும் இருக்கும். அதை தவிர்க்க முடியாது. 

ஆனாலும் அவையெல்லாம் வரலாற்று நாடகத்தின் சில தருணங்களே என்று அவர்கள் அறிந்திருப்பார்கள். எது சரி எது தவறு என்பதை காலமே தீர்மானிக்கும் என்று உணர்ந்திருப்பார்கள். முற்றிலும் சரியான வழி என்றும் முற்றிலும் தவறான வழி என்றும் ஏதும் இல்லை என்றும் அவர்கள் உள்ளுர அறிந்திருப்பார்கள்.

இதே முரணியக்கத்தினை நாம் அம்பேத்கார்-காந்தி உறவிலும் காணலாம். அவர்கள் முரண்படுவதன் மூலம் ஒருவரை ஒருவர் சரிசெய்து கொண்டார்கள். ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டார்கள். அம்பேத்கார் காந்தியப் போராட்டங்களை நெருங்கி வந்தார். காந்தி சாதி ஒழிப்பை நோக்கி வந்தார். 

ஆனால் வரலாற்றை எளிமைப்படுத்தி வெறும் ‘சண்டை’ களாகவும் ‘சதி’களாகவும் பார்க்கும் எளிய மனங்களுக்கு இது புரிவதில்லை. அவர்கள் கறுப்பு வெள்ளைகளை உருவாக்குகிறார்கள். வில்லன்களையும் கதாநாயகர்களையும் உருவாக்குகிறார்கள். அந்த எளிமைப்படுத்தல் எப்போதும் வரலாற்றுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே இருக்கிறது.

இரட்டைமலை சீனிவாசன்

அப்படிப்பட்ட அநீதி இழைக்கப்ட்ட மனிதர் எம்.சி.ராஜா.  இந்திய அரசியலில் அறுபதுகளுக்குப் பின்னர் அம்பேத்கார் ஒரு மாபெரும் கதாநாயகனாக ஆக்கப்பட்டார். அம்பேத்காருடன் முரண்பட்ட அத்தனை பேரையும் எதிர்நாயகர்களாக சித்தரித்தனர் அம்பேத்கார் பக்தர்கள். அம்பேத்காரிடம் எப்போதுமே உரையாடிய, அவரை இந்திய அரசியல் சாசனத்தை எழுதும் இடத்தில் அமர்த்திய காந்தி அம்பேத்காரை ஒழிக்கப் போராடுபவராக,  ஒற்றைக் கண்ணும் கன்னத்தில் மருவும் புஸ்தி மீசையும் கடகட சிரிப்பும் கொண்ட வில்லன் ஆக, மாறினார். அம்பேத்காரை கடைசிவரை தன் சகாவாக நினைத்த, அவருக்குப் பின்புலமாக நின்ற நேரு அம்பேத்காரின் எதிரியானார். 

அந்த வரிசையில எம்.சி.ராஜா சேர்க்கப்பட்டார். அவர் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு கதாநாயகனை காட்டிக் கொடுத்த துரோகியாகச் சித்தரிக்கப்பட்டார். அவரை ஒரு விபீஷனனாக எண்ணும் தலித் தலைவர்கள் பலர் இன்றும் உண்டு. அந்த எண்ணத்தை வலுப்பெறச் செய்யும் அம்சமாக இருந்தது கடைசிவரை இந்துவாக இந்து மதத்திற்குள்ளேயே இருககவேண்டும் என்று ராஜா கூறியது. இதற்காகவே இந்து வெறுப்பாளர்களால் அவர் தூஷிக்கப்பட்டார். முத்திரை குத்தப்பட்டு வரலாற்றின் இருளுக்குத் தள்ளப்பட்டார். 

இன்று எம்.சி.ராஜாவை எந்த மக்களுக்காக அவர் தன் மொத்த வாழ்நாளை செலவிட்டாரோ அந்த மக்களில் கணிசமானோர் வெறுக்கிறார்கள். அவரைப்பற்றி பேசுவது குறைவு. அவரது நல்ல வாழ்க்கை வரலாற்று நூல் கூட இன்று கிடைப்பதில்லை. ‘பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள்’ என்ற தலைப்பில் வே.அலெக்ஸ் தொகுத்து வெளிவந்துள்ள நூல் எம்.சி.ராஜா அவாகளைப் பற்றிய குறிப்பிடத்தக்க அறிமுகத்தை அளிக்கக்கூடியது. 

இந்த நூல் 1930 இல் கே.சிவசண்முகம் பிள்ளை அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள ‘எம்.சி.ராஜாவின் வாழ்க்கையும் தெரிவு செய்யப்பட்ட எழுத்தோவியங்களும் உரைகளும்’ என்ற நூலின் தமிழாக்கம். 1927இல் வெளிவந்த ‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள்’ என்ற நூலுக்கு 1968இல் வெளிவந்த தமிழாக்கம் ஆகியவற்றை முதல் பிரிவாகக் கொண்டது. ராஜாவின் சட்டமன்ற உரைகள், அவரைப் பற்றிய நாளிதழ் குறிப்புகள், அவரைப்பற்றி பலர் கூறிய கருத்துக்கள் ஆகியவை அடுத்த மூன்று பகுதிகளாக உள்ளன. உண்மையில் ஒரு நல்ல வாழ்க்கை வரலாறுக்கான கச்சாப்பொருள் இந்த நூலில் உள்ளது. அத்தகையதோர் நூல் எழுதப்பட்டால் நல்லது. 

இந்நூலுக்கான சிறப்புரையாக காலஞ்சென்ற தலித் சிந்தனையாளரான அன்பு பொன்னோவியம் அவர்களின் ஒரு நீளமான கடிதம் உள்ளது. அறவுரை என்ற இதழில் ‘மூத்தவர் மூவர்’ என்ற பேரில் அன்பு பொன்னோவியம் அவர்கள் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக பள்ளி கொண்டா திரு.கி.கிருஷ்ணகுமார் எழுதிய கடிதத்துக்கு அந்த இதழின் ஆசிரியராக இருந்த அன்பு பொன்னோவியம் அவர்கள் எழுதிய பதில் கடிதம் இது. 10.7.1992இல் எழுதப்பட்டுள்ளது.

அயோத்திதாச பண்டிதர்

தன் கடிதத்தில் கிருஷ்ணகுமார் எம்.சி.ராஜா குறித்து அன்றும் (இன்றும்கூட) அவரது சமூகத்தினரிடம் இருக்கும் ஐயங்களைப் பட்டியலிட்டு விவாதிக்கிறார். அதில் அம்பேத்கார் மைய அணுகுமுறை தெளிவாகவே தெரிகிறது, ”ஒரு மனிதரை அதிலும் பொதுவாழ்வில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட மனிதரைப்பற்றி பாராட்டுவதோ புகழ்வதோ எழுதும் முன் அவரது வாழ்வு முழுவதையும் கணக்கில் எடுத்துக் கொள்வதே அவரைப்பற்றி சரியான கணிப்பினை வெளியிட உதவும் என்று எண்ணுகிறேன்.

அந்த அளவுகோலின்படி பார்ப்போமென்றால் திரு.எம்.சி.ராஜா அவர்களின் முற்பகுதி வாழ்வு போற்றுதலுக்குரியதே. ஐயமில்லை. ஆனால் வட்டமேஜை மாநாடுகளில் தாம் பங்குகொள்ள இயலாமல் போனதற்குக் காரணம் நமது இரட்சகர் பாபாசாகிப் அம்பேத்கார் அவர்கள்தான் எனத் தவறாக ஒரு கருத்தினை தனது மனதிற் கொண்டு நம் சமுதாய நலன் கருதி அணணல் எடுத்த ஒவ்வொரு முடிவினையும் எதிர்ப்பதையே தன் வாழ்வின் நோக்கமாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த திருமிகு ராஜா அவர்களின் வாழ்வை எப்படி போற்றமுடியும், புகழமுடியும்?

 

நான் இந்துவாகவே பிறந்தேன்-நான்இந்துவாகவே இறப்பேன் என அண்ணலின் மதமாற்ற உரைக்கு எதிர்த்து மறுப்பு அறிக்கை கொடுத்த தோடல்லாமல் மாற்று அரசியல் இயக்கத் தலைவர்களைக் காட்டிலும் மாற்று சமுதாயத்தினரைக் காட்டிலும் அதிகமாக அண்ணலுக்கு சிரமம் கொடுத்த பெருமை இவரையே சாரும்’‘ என்று சாடுகிறார் கிருஷ்ணகுமார்..
என்னுடைய பார்வையில் கிருஷ்ணகுமாரின் பிரச்சினை மிக எளிமையானது. அம்பேத்காரை விமரிசனத்திற்கு அப்பாற்பட்ட ஆளுமையாகக் காண்கிறார். மாற்றுத் தரப்பினர்கூட அவரை எதிர்க்ககூடாது என்று நினைக்கிறார். அம்பேத்காரில் பிழையோ, புரிதல் போதாமையோ நிகழமுடியும் என்பதை அவர் நம்பப்போவதில்லை. அம்பேத்கார் கூறியவற்றை வேறு ஒரு கோணத்தில் பேறு ஒருவர் அணுகமுடியும் என்றே நினைக்கவில்லை.

அம்பேத்காரை கேள்விக்கு அப்பாற்பட்ட இடத்தில் கிட்டத்தட்ட ஒரு நபி போல அமர்த்தியபிறகு பிறரைப் பார்க்கும்போது அவருடைய பார்வையில் அவர்களெல்லாம் மிகச் சாதாரணமாக ஆகிவிடுகிறார்கள். அம்பேத்காரின் மறுதரப்பாக ஒலிக்கும் தகுதியே அவர்களிடம் இல்லை என்ற முடிவுக்கு வருகிறார் கிருஷ்ணகுமார். அவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களை எல்லாம் குறைத்தும் தீர்த்தும் மதிப்பிட்டு விடுகிறார். அதாவது அம்பேத்காரை எம்.சி.ராஜா எதிர்த்தமைக்கு பதவியாசை தவிர வேறு காரணங்களே இருக்கமுடியாது என்ற இடத்திற்கு வந்து சேர்கிறார். 

வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட தருணத்தை அணுகும் இரண்டு தலைமைப் பண்புள்ள மனங்கள் ஒரே வகையான அணுகுமுறையைக் கொண்டிருக்கமுடியாது. அவர்களின் மனம் செயல்படும்முறை அவர்கள் தங்கள் கல்வி, அனுபவம் மூலம் தாங்களே அடைந்த ஒன்றாக, தனித்துவம் மிக்கதாகவே இருக்கும். ஆகவே அவர்களுக்குள் முரண்பாடுகள் இருக்கும். உலகம் முழுக்க அத்தனை அரசியல், சமூக, மத இயக்கங்களிலும் இதுவே நிகழ்கிறது. நபியால் நிறுவப்பட்டதும் அவர்கூற்றுக்கு மறு கூற்று இல்லாததுமான இஸ்லாம் மதத்தில்கூட அவருக்குப்பின் முரண்பாடுகளே எழுந்துவந்தன.

anbu-ponnovium01

அன்பு பொன்னோவியம்

முரண்பாடுகளை இயல்பான அறிவியக்கமாகக் கருதுவதே முறை. முரண்பட்டு விவாதிக்கும் இரு தலைவர்கள் ஒருவரை ஒருவர் நிரப்பிக் கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் வளர்த்துக் கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்தவில்லை, பலப்படுத்துகிறார்கள். முரண்பாடும் விவாதமும் இல்லாமல் ஒற்றைப்படையான முறையில் தலைமை வழிபாட்டுடன் இயங்கும் இயக்கம் அமைப்பை மட்டுமே உருவாக்கும். கருத்தியலியக்கமாக வலுப்பெறாது. இதுவே வரலாறு காட்டும் பாதையாகும்.

எம்.சி.ராஜாவின் ஆளுமை அம்பேத்காருக்கு இணையானது என்று நம்பினாலே இந்த வினாக்களுக்கு விடை எளிதில் கிடைத்துவிடும். அம்பேத்கார் அவர் பிறந்து வளர்ந்த வட இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்தார். எம்.சி.ராஜா தெற்கை. அவர்கள் இருவர் நடுவே பார்வைகளில் தூரம் வருவதற்கு இதுவே போதிய காரணமாகும்.

இன்னும் பல விஷயங்களை நாம் யோசிக்கலாம். இந்தியாவின் தலித் தலைவர்களில் ஏறத்தாழ அனைவருமே நகர்ப்புறம் சார்ந்தவர்கள். நகர்ப்புறத்து தலித்துக்களுக்கே படிக்க வாய்ப்பு கிடைத்தது, அவர்களே தலைமைக்கு வரமுடிந்தது. ஆனால் முற்றிலும் கிராமம் சார்ந்தவரான, கல்வியே கற்காதவரான அய்யன்காளி (கேரள புலையர் மகாசபை தலைவர்) போன்ற ஒரு தலைவர் தமிழகத்தில் எழுந்து வந்திருந்தார் என்றால் அவருக்கும் பிறருக்கும் இடையே இன்றும் வலுவான முரணபாடுகள் உருவாகியிருக்கும். அய்யன் காளி தேசிய அளவில் செயல்பட்டிருந்தால் அம்பேத்காருக்கு முற்றிலும் எதிரான தரப்பில் இருந்திருப்பார். அப்போது அம்பேத்காரை முன்வைத்து பிற அத்தனை தலித் தலைவர்களையும் துரோகிகள் என்று வரலாறு எழுதப்பட்டிருக்கும்.

இன்னும் ஒன்று, இந்த கட்டுரையில் அன்பு பொன்னோவியம் அவர்களால் மூன்று தலித் முன்னோடிகளாகக் குறிப்பிடப்படும் மூன்று தலைவர்கள்-இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், எம்.சி.ராஜா ஆகியோர்- பறையர் சாதியைச் சேர்ந்தவர்கள். அவர்களை ஒட்டுமொத்த தலித்துக்களின் தலைவர்களாக ஏற்க பிற தலித்சாதியினர் ஒத்துக்கொள்வார்களா என்ன? மகாராஷ்ட்டிரத்திலேயே அம்பேத்காரை மஹர்கள் அன்றி பிற சாதியினர் ஏற்றுக்கொள்ளவில்ல. அவரது தேர்தல் தோல்விகளுக்கு அதுவே காரணம். 

ஆகவே ஒற்றைப்படையாக்குவது, அதிகார மையங்களை உருவாக்குவது, தலைமை வழிபாடு மூலம் இன்றைய ஜனநாயக யுகத்தில் அரசியலே சாத்தியமல்ல. தொடர்ச்சியாக விரிவடையக் கூடிய, அனைவருக்கும் இடமளிக்கக்கூடிய, முரண்பாடுகளை ஏற்கக்கூடிய, ஒரு ஜனநாயக அரசியலே அதற்குத்தேவை. தலித் தலைமை என்பது எந்நிலையிலும் கூட்டுத் தலைமையாகவே இருக்கமுடியும். அதன் வரலாறு கூட்டுவரலாறாக, விவாதங்களின் கதையாக மட்டுமே இருக்க முடியும்.

தன் பதிலில் கிட்டத்தட்ட அதைத்தான் அன்பு பொன்னோவியம் அவர்கள் கூறுகிறார். ‘நிகழ்காலச் சூழ்நிலையை எதிர்கால விளைவுகளோடு இருவர் வெவ்வேறு கோணங்களில் நோக்கினார்கள். அவர்கள் கண்ட முடிவு ஒன்றாக இருக்கவேண்டிய அவசியமில்லை. மாறுபடலாம் மாறுபட்டது. தவறு அவர்களுடையது அல்ல. அதை வைத்துக்கொண்டு கணக்குபோடும் நம்முடையது ஆகவும் இருக்குமல்லவா?’

 

வரலாற்றுச் சந்தர்பபங்களை மதிப்பிடவும். சாராம்சப்படுத்தவும் ஒரேவழிதான் என்றில்லை. எத்தனையோ வழிகள் இருக்கலாம். அதில் எது சரி எது தவறு என்று காலம்தான் தீர்மானிக்கமுடியும். ராஜா எடுத்த முடிவுகள் தேசிய இயக்கம் தன் உச்சத்தை அடைந்தபோது அந்த வேகத்துடன் ஒத்துப்போவதன் வழியாக தனது சமூகத்தின் நலனைக்காக்கும் நோக்கம் கொண்டவை மட்டுமே. அதையே பின்னர் அம்பேத்காரும் செய்தார், காஙகிரஸ் அரசில் அவர் அமைச்சரானார்.

இதே போன்ற முரண்பாடும் மோதலும் எம்.சி.ராஜாவுக்கும் இரட்டைமலை சீனிவாசனுக்கும் இடையேயும் இருந்தது. அத்தகைய முரண்பாடுகள் எந்த இயக்கத்திலும் தவிர்க்க முடியாதவை. காங்கிரஸ் இயக்கத்திலும் கம்யூனிச இயக்கத்திலும்கூட அவை இருந்தன. ராஜா அதன்பேரில் முத்திரை குத்தி ஒதுக்கப்பட்டு இன்று மீட்கப்பட்டிருக்கிறார்.

ஜே.சிவசண்முகம் பிள்ளை பி.ஏ. அவர்கள் எழுதி பித்தாபுரம் மகாராஜாவின் அணிந்துரையுடன் வெளிவந்த எம்.சி.ராஜாவின் வரலாற்றுக் குறிப்பின்படி ராஜாவின் வாழ்க்கையின் வரைகோட்டுச் சித்திரத்தை அறியமுடிகிறது. ராஜாவின் தாத்தா முன்னாள் இந்திய ராணுவ வீரர். அவரது அப்பா திரு.சின்னத்தம்பிப் பிள்ளை சென்னை லாரனஸ் அஸைலம் அச்சகத்தின் துணை மேலாளராகவும் கணக்கராகவும் உயர்பதவி வகித்தார். சென்னை ஆதிதிராவிட மகாஜன சபாவின் கவுரவச் செயலாளராகவும் அவர் பணிபுரிந்திருக்கிறார்.

1883 ஜுன் 17ஆம் நாள் ராஜா பிறந்தார். வெஸ்லி கல்லூரியிலும் கிறித்தவக் கல்லூரியிலும் படிக்கும் நாட்களில் ராஜா மிகச் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காராக கல்லூரியால் போற்றப்பட்டவராக இருந்தார். கிறித்தவக் கல்லூரி முதல்வர் முனைவர் மில்லரின் அன்புக்குரிய மாணவராக இருந்தார். படிப்பு முடித்து ஆசிரியரானார். அக்காலத்தில் சென்னை ராஜதானியில் இளங்கலை வகுப்புகளுக்குப் பாடமாக அமைந்த பல நூல்கள் ராஜாவால் எழுதப்பட்டவை. 1917இல் ஆளுநர் பென்ட்லான்ட் பிரபுவால் ஆரம்பப் பள்ளிக் கல்விக்குழுவுக்கு நியமனம் செய்ப்பட்ட எம்.சி.ராஜா 1919இல் ஆரம்பக் கல்வி மசோதாவிற்கான பொதுக்குழுவிலும் பணியாற்றினார். உயர்நிலைப்பள்ளி கல்வி மறுசீரமைப்புக்குழுவிலும் செயல்பட்டார். சாரணர் இயக்கத்திலும் ஈடுபட்டார். 

1916 முதல் சென்னையை மையமாக்கி இயங்கிய ஆதிதிராவிட மகாஜன சபாவை மறுசீரமைப்புச் செய்து துடிப்பான இயக்கமாக ஆக்கினார். பிரிட்டிஷ் இந்திய அரசு சமூக சீர்திருத்தத்திற்காக அமைத்த குழுக்களில் உறுப்பினராக இருந்து தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடினார். 1917இல் மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தக் குழுவினரை சந்தித்த ஆதிதிராவிடர் தூதுக்குழுவை வழிநடத்தினார். 1923இல் சென்னை ஆளுநர் விலிங்டன் பிரபுவை சநதித்த தூதுக்குழுவிலும் இருந்தார். 1929இல் இர்வின் பிரபுவைச் சந்தித்த தூதுக்குழுவிலும் பங்கெடுத்தார். இந்தியா முழுக்க நடந்த ஏராளமான சமூக சீர்திருத்த மாநாடுகளில் பங்கெடுத்து ஆதிராவிட மக்களின் நிலைமையைப் பற்றி எடுத்துரைத்தார். 

எம்.சி.ராஜா இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் மாநில கவுன்சிலுக்கு நியமிக்கப்பட்ட முதல் உறுப்பினர். விலிங்டன் பிரபு அவரை 1919இல் மாநில சட்டமன்றத்திற்கு உறுப்பினராக நியமனம் செய்தார். 1921, 1925, 1926 ஆம் ஆண்டுகளிலும் சட்டமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். 1922இல் பிரிட்டிஷ் அரசு அவருக்கு இராவ் பகதூர் பட்டத்தை அளித்தது. 

எம்.சி.ராஜா சட்டமன்ற உறுப்பினராக ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகக் குரல் கொடுப்பவராக இருந்தாலும் பொதுவாக சென்னை மக்களின் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு அனைவருக்குமாகப் போராடுபவராகவே இருந்திருக்கிறார். அக்காலகட்டத்து செய்திகளைப் பார்க்கையில் அவர் பொதுவான மக்கள் தலைவராக மதிக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.  

ஜஸ்டிஸ் கட்சியின் தொடக்க காலம் முதலே தன் உறுப்பினராகவும் தலைவராகவும் பணியாற்றிய் எம்.சி.ராஜா  கடுமையான காங்கிரஸ் எதிர்ப்புப்போக்கு கொண்டிருந்தார். காங்கிரஸின் போராட்டங்களக்கு எதிராக ஹிந்துமகாசபை போன்ற இயக்கங்களுடனும் ஒத்துழைத்தார். பிரிட்டிஷ் ஆட்சியே இந்தியாவில் ஒடுக்கப்பட்டோரின் நலன்களை காக்கக்கூடியது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அவரது அரசியல் வாழ்வின் பெரும்பகுதி இந்நம்பிக்கையிலேயே சென்றது. 

எம்.சி.ராஜாவைப் பற்றிய  இந்த நூலின் வழியாக நாம் காணும் ஆளுமை கல்வியிலும் இயல்பான அறிவுத்திறமையிலும் தலைமைப் பண்பிலும் முன்னிலையில் இருந்த ஒரு மனிதருடையது. வரலாற்றுப் பெருக்கு அவருக்கு அளித்த சந்தர்ப்பங்களில் தன்னுடைய கொள்கைகள் மற்றும் நம்பிக்கைளில் அவர் உறுதியாகவே இருந்திருக்கிறார். அதன் மூலம் தன்னுடைய மக்களுக்கு முடிந்தவரை பங்களிப்பாற்றியிருக்கிறார். அவரது ஆளுமை எந்த அளவுக்கு பெரியதோ அந்த அளவுக்கு அவரது அரசியல் வாழ்க்கை சிறப்புக்குரியதாக அமையவில்லை. அவருக்குத் தகுதியான இடங்களை அவர் பெறவில்லை. அதற்கு வரலாற்றின் தன்னிச்சையான ஊடுபாவுகளையே காரணம் கூறவேண்டும். 

இந்நூலின் பின்னிணைப்பாக அம்பேத்காரின் வரலாற்றை எழுதிய தனஞ்சய்கீர் ராஜாவைப் பற்றிக் கூறும் பகுதிகள் வருகின்றன. அம்பேத்கார் இரட்டை வாக்குரிமைக் கோரிக்கையை காந்திக்கு எதிராக முன்னெடுத்தபோது ராஜா தனித்தொகுதி முறையே போதுமானது என்று முடிவெடுத்தார். இதில் என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் அதற்கு முன்னர் அம்பேத்கார் தனித்தொகுதி போதும் என்றும் ராஜா இரட்டை வாக்குரிமைதேவை என்றும் கோரி வந்தார்கள். இந்த நிலை மாற்றத்தை ராஜா எடுப்பதற்கான காரணம் என்று அவரது நடைமுறை சார்ந்த அரசியல் அணுகுமுறையையே கூறவேண்டும். எப்போதுமே மிதமிஞ்சிய இலட்சியவாதம் பேசுபவராக அவர் இருக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் எது அதிகபட்சம் சாத்தியமோ அதை தன் மக்களுக்காக ஈட்ட முனைபவராகவே இருந்திருக்கிறார்.

ராஜாவின் நிலைமாற்றம் அம்பேத்காரை கடும் சினத்திற்கு உள்ளாக்கியது. இராஜாவை கண்டித்தும் அம்பேத்காரை ஆதரித்தும் இந்தியாவெங்கும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தீண்டத்தகாத மக்களின் சங்கங்கள் அறிக்கைவிட்டனர். போராட்டங்களில் ஈடுபட்டார்கள். 1932இல் அம்பேத்கார் வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொள்ள லண்டனுக்கு கிளம்பினார். எம்.சி.ராஜாவும், இந்து மகாசபையின் டாக்டர் முஞ்சேயும் லண்டனுக்குக் கிளம்புகிறார்கள் என்று கூறப்பட்டது.

‘தன்னை இடர்பாட்டுக்கு உள்ளாக்கிய இராஜாவை அம்பேத்கார் வெறுத்தார். ஆதலால் இராஜா பம்பாயிலிருந்து இலண்டனுக்குப் புறப்படுவாரானால் அவருக்குக் கறுப்புக் கொடி காட்டி வழியனுப்புமாறு பம்பாயில் இருந்த தன் தோழர்களுக்கு அம்பேத்கார் எழுதினார். பம்பாயில் இராஜா நடத்த முயன்ற மாநாட்டை தம் தொண்டர்கள் கட்டாயம் முறியடித்திருப்பார்கள் என்று உறுதியாக நம்புவதாக அம்பேத்கார் எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். 

பல தொல்லைகளுக்கிடையே  ராஜாவின் கட்சியர் பம்பாயில் கூடிய  அம்பேத்காரின் தொண்டர்கள் கலைந்தோடச் செய்தனர். அதில் அம்பேத்காரின் தொண்டர் ஒருவர் இறந்தார். ஐம்பது பேருக்கு அடிபட்டது. ராஜாவின் மீது கொண்டிருந்த கடும் வெறுப்பால் ‘நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அளவுக்கு ராஜா முக்கியமானவர் அல்ல’ என்று அம்பேத்கார் கூறினாலும் ராஜாவின் முயற்சிகளை எல்லா முனைகளிலும் முறியடிக்க வேண்டும் என்பதில் அவர் பதற்றமான முனைப்புடன் இருந்தார்’ என்று தனஞ்செய்கீர் பதிவு செய்கிறார். 

இன்றைய வாசிப்பில் எம்.சி.ராஜாவின் கோணத்தில் பார்ப்பவர்களுக்கு அம்பேத்காரின் செயல்பாடு ஜனநாயக விரோதானது என்று படக்கூடும். அம்பேத்காரின் சொற்களை மட்டும் வைத்து வரலாற்றை எழுதும் தமிழகத்திற்கு வெளியே உள்ள தலித்தியர்கள் ராஜாவை துரோகி என்று கூறக்கூடும். உண்மையில் ராஜா குறித்து அந்தக் கருத்தே வலுவாக உள்ளது. ஆனால் அக்காலகட்டத்தின் பதற்றங்கள், ஐயங்கள், உணர்வுநிலைகள் ஆகியவற்றை ஒட்டியே இவற்றை புரிந்து கொள்ள முடியும். இன்று அந்த வரலாற்றுத் தருணம் நமது ஊகங்களுக்கு முற்றிலும் அப்பாற்பட்டதாகையால் வரலாற்று மனிதர்களை அவர்களின் ஒட்டு மொத்தப் பங்களிப்பை ஒட்டியே மதிப்பிடமுடியும்.

எம்.சி.ராஜாவை அவர் மீதான வரலாற்றுப் புழுதியில் இருந்து அவதூறின் சருகளில் இருந்து மீட்பதற்கு அவரது சரியான வாழ்க்கை வரலாறு ஒன்று தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவர வேண்டியுள்ளது. அதற்கு அடித்தளமிடும் ஆவணத் தொகுப்பாக உள்ளது அலெக்ஸின் நூல்.

இந்நூல் தமிழுக்கு ஒரு முக்கியமான வரவு. இதனூடாக ஒரு பொதுவாசகன் அடையும் சித்திரங்களை மூன்று வகையாகப்பிரிக்கலாம்.1. எம்.சி.ராஜா என்ற தலைவரின் நாவன்மை, அர்ப்பணம்,சேவை ஆகியவற்றையும் அவரது சமூகப்பங்களிப்பையும்..தமிழ்கத்தில் நவீன ஜனநாயக அரசியல் எழுச்சி உருவகியபோதே தலித் எழுச்சி தோன்றிவிட்டிருந்தது என்ற வரலாற்று உண்மை. சொல்லப்போனால் தமிழ்கத்தின் மிக ஆரம்பகால அரசியல் இயக்கம் தலித் இயக்கமே என இப்போது படுகிறது. அவ்வியக்கத்தின் கோட்பாடுகளும் இலட்சியங்களும் அப்போதே தெளிவாக உருவாகி வந்திருப்பதை இந்நூல் காட்டுகிறது 

3. தலித் வரலாற்றை முற்றிலும் புதிய கோணத்தில், ஒரு மாபெரும் வீழ்ச்சி மற்றும் அடக்குமுறையின் கதையாக அணுகும் கோணம் இக்காலகட்டத்திலேயே உருவாகியிருந்தது. அதை அன்றைய அறிஞர்கள் ஏற்றும் கொன்டிருக்கிறார்கள். தலித்துக்கள் சரித்திரகாலம் முதலே அடிமைகளாக இருந்தார்கள் என்ற வரலாறு பிற்காலத்தையது. அதிகமும் மிஷனரிகளால் உருவாக்கப்பட்டது. எம்.சி.ராஜாவின் உரைகளில் மூலவரலாற்றை தெளிவாகவே காண்கிறோம்

இந்நூலை பதினைந்து வருடக்கால உழைப்பால் கொண்டு வந்திருக்கிறார் அலெக்ஸ். வரலாறுகள் அழிவதில்லை, அவை விதைகளில் இருந்து முளைக்கும் என்பது உண்மை. ஆனால் அவற்றுக்கு அர்ப்பணிப்புள்ள மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் கையில் வரலாறு இருந்துகொண்டிருக்கும், காலகட்டத்தின் தேவையைக் காத்து! திரு அன்பு பொன்னோவியம், கமலநாதன் போன்றவர்களுக்கும் அலெக்ஸ் அவர்களுக்கும் தமிழ் வாசக உலகம் கடமைப்பட்டிருக்கிறது

No comments:

Post a Comment