ROBERT CLIVE 1 ST BARON CLIVE OF PLASSEY AND1 ST GOVERNOR GENERAL OF BENGAL BORN1725 SEPTEMBER 25 - 1774 NOVEMBER 22
ராபர்ட் க்ளைவ்
உலகத்தில் அத்தனைபேர் எண்ணமும் ஒரே போல இருப்பதில்லை. சிலருக்கு ஒரு விசயம் பிடித்தால் பலருக்கு அது பிடிக்காது. வில்லத்தனமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு சாரருக்கு வில்லனாகப் படும் ஒரு ஆள் இன்னொரு சாரருக்கு நாயகனாகத் தென்படுவார். ஒரு நாட்டையே கொள்ளையடித்துக் கைப்பற்றியவரை, அவரது நாட்டுக்காரர்கள் தேசத்தொண்டனாகப் பார்ப்பதும், கைப்பற்றப்பட்ட நாட்டுக்காரர்கள் பக்கா வில்லனாகப் பார்ப்பதும் சகஜம். இந்தியாவையே எடுத்துக் கொண்டால் இங்கு படையெடுத்து வந்து நமது வரலாற்றுப் புத்தகங்களில் கொள்ளைக்காரர்களாகவும் கொடுங்கோலர்களாகவும் நாம் படித்துக் கொண்டிருக்கும் பலர், அவரவர் நாடுகளில் தேசநாயகன்களாக போற்றப்படுகின்றனர். இவ்வரிசையில் நடுநாயகமாக வீற்றிருப்பவர் ராபர்ட் கிளைவ். இந்தியத் துணைக்கண்டம் ஆங்கிலேயர் வசமாவதற்கு முக்கிய காரணகர்த்தாவாகக் கருதப்படுபவர். அவரே இந்த வாரம் (நமக்கு) வில்லன்.
பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒளரங்கசீப்பின் மரணத்துக்குப் பின்னால் முகலாயர் ஆட்சி வலுவிழக்கத் தோன்றியது. முகலாய அரசின் சிற்றரசர்களும் பிராந்திய ஆளுனர்களும், ஆளுக்கொரு மாநிலத்தை பிரித்தெடுத்துக் கொண்டு அங்கு ஆதிக்கம் செலுத்தலாயினர். முகலாயர்களின் இந்த வீழ்ச்சியால் இந்தியாவில் ஒரு அதிகார வெற்றிடச்சூழல் உருவாகியது. இக்காலத்தில் தலைதூக்கிய மராத்தியப் பேரரசும் இதை நீக்க முயன்று தோற்றது. யார் அடுத்து இந்தியாவை ஆளப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்த இக்காலகட்டத்தில் ஐரோப்பியர்கள் இந்தியாவை வணிக நோக்குடன் பார்த்துவந்தனர். வர்த்தகமும் லாபமுமே பல்வேறு ஐரோப்பிய கிழக்கிந்தியக் கம்பனிகளின் குறிக்கோள்களாக இருந்து வந்தன. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்று முதலில் அவர்கள் நினைக்கவில்லை. ஆனால் முகலாயர்களுக்குப் பின்னால் இந்தியாவில் பலமான ஒரு அரசு அமையாதது ஆட்சியைக் கைப்பற்ற அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. அப்போது கூட பேரரசை அமைப்பது அவர்களது குறிக்கோளாக இல்லை, அதிகாரத்தால் அதிகமாக சம்பாதிப்பதே அவர்களது ஒரே நோக்கமாக இருந்தது. பிரெஞ்சு, டச்சு, போர்த்துகீசிய, டானிய என பல கிழக்கிந்தியக் கம்பனிகள் அப்போது இந்தியாவில் இருந்தாலும், இந்தச் சூழலை நன்கு பயன்படுத்திக் கொண்டு இந்தியாவை வளைத்துப் போடும் ரேசில் ஜெயித்தது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி தான். இதற்கு முதற் காரணம் ராபர்ட் கிளைவ்.
கிளைவ் பெரிய குடும்பத்தில் பிறந்தவர் கிடையாது. சாதாரண நடுத்தர குடும்பம் தான். இங்கிலாந்து நடுத்தர இளைஞர்கள் பணம் சம்பாதித்து செட்டில் ஆக வேண்டுமென்றால் கிழக்கிந்தியக் கம்பனியில் சேர்ந்து இந்தியாவில் சில காலம் பணிபுரிவது வழக்கமாக இருந்தது. இவ்வழக்கப்படி கிளைவும் தனது பதினெட்டாவது வயதில் கம்பனியில் ஒரு எழுத்தராகச் சேர்ந்து இந்தியாவுக்குக் கிளம்பினார். அவர் இந்தியா வந்த காலத்தில், பிரெஞ்சுக்காரர்களுக்கும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனிக்கும் தென்னிந்தியாவில் யார் தாதா ஆவதென்று பலப்பரீட்சை நடந்து கொண்டிருந்தது. இந்த காலத்தில் தான் ஐரோப்பாவில் இரு நாடுகளுக்குமிடையே அடிக்கடி சண்டை நடந்து கொண்டிருந்தது. அங்கு போர் மூளும்போதெல்லாம், அதைக் காரணம் காட்டி இந்தியாவிலும் இரு தரப்பினரும் மோதிக் கொண்டிருந்தனர். அப்போது தென்னிந்தியாவில் சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டை தான் பிரிட்டிஷாரின் தலைமையிடமாக இருந்தது. கிளைவ் சென்னைக்கு வந்து எழுத்தராக வேலை பார்க்கத் தொடங்கி சில நாட்களுக்கெல்லாம் பிரெஞ்சுக்காரர்கள் சென்னையைத் தாக்கினர். பாண்டிச்சேரி ஆளுனர் டூப்ளே தலைமையிலான பிரெஞ்சுப் படை சென்னையைக் கைப்பற்றி கிளைவ் உட்பட பல கம்பனி ஊழியர்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்துக் கொண்டது. சென்னையை மீட்க கம்பனிகாரர்களோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போதே கிளைவ் தன் சக ஊழியர்களோடு சென்னையிலிருந்து தப்பினார். சாதாராண குமாஸ்தாவான இளைஞன் ஒருவன் தந்திரமாக பிரெஞ்சுப் பிடியிலிருந்து தப்பியது கம்பனி அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர்கள் கம்பனி படையில் அதிகாரியாக கிளைவை நியமித்தார்கள்.
ஆனால் வெகு சீக்கிரம் பிரெஞ்சுக்காரர்களோடு அமைதி உடன்பாடு கையெழுத்தானதால், கிளைவ் மீண்டும் பழைய எழுத்தர் வேலைக்கே போக நேரிட்டது. ஆனால் சென்னையிலிருந்து தப்பியபோது கிடைத்த சந்தோஷத்தை கிளைவ் மறக்கவே இல்லை. அவருக்கு எழுத்தர் வாழ்க்கை சலித்துப் போனது. பிரெஞ்சுக்காரர்களோடு நிகழ்ந்த அடுத்த கட்ட மோதலில் தானாக முன்வந்து படைகளில் மீண்டும் சேர்ந்தார். டூப்ளேவும், கம்பனியும் கர்னாடகப் பகுதியை (தற்கால ஆந்திரா, தமிழகம்) யார் கட்டுப்படுத்துவது என்று பலப்பரீட்சை நடத்திக் கொண்டிருந்தனர். கம்பனி முகமது வாலாஜாவையும், டூப்ளே சந்தா சாகிபையும் ஆதரித்தனர். 1751ல் சந்தா சாகிபின் பெரும்படையொன்று பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்த ஆற்காட்டை முற்றுகையிட்ட போது, ஆற்காட்டுப் படைகளுக்குத் தலைமையேற்ற கிளைவ் திறமையாகச் செயல்பட்டு முற்றுகையைத் தோற்கடித்தார். இதனால் அவரது புகழ் கம்பனி வட்டாரங்களில் பரவத்தொடங்கியது. சிறிது காலம் இங்கிலாந்தில் இருந்துவிட்டு மீண்டும் இந்தியாவுக்கு வந்த கிளைவ், இம்முறை வங்காளத்துக்கு அனுப்பப்பட்டார்.
தென்னாட்டைப் போலவே வங்காளத்திலும் கடும் அதிகாரப் போட்டி நடந்து கொண்டிருந்தது. அங்கும் உள்ளூர் அரசியலில் கம்பனிக்காரர்கள் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர். இது பிடிக்காத வங்காளத்தின் நவாப் சிராஜ் உத்-தாலா கம்பனித் தலைமையிடமான கல்கத்தா மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினார். கல்கத்தாவை சிராஜ் உத்-தாலாவிடமிருந்து மீட்க ஒரு திறமையான ஆள் கம்பனிக்குத் தேவைப்பட்டது. ஆற்காடு முற்றுகையை திறம்பட சமாளித்த கிளைவின் தலைமையில் ஒரு சிறுபடையை கல்கத்தாவுக்கு அனுப்பினர். நவாபின் பலமோ அளப்பரியது, படைபலமும் பணபலமும் பெரியது. கிளைவிடம் இருந்ததோ சிறு படை. நேரடியாக நவாபுடன் மோதினால் அழிவு நிச்சயம் என்பதை உணர்ந்த கிளைவ் அதிரடித் தாக்குதல் உத்திகளைக் கையாண்டார். விரைவில் கல்கத்தாவை நவாபிடமிருந்து மீட்டார். அடுத்து நவாபை ஒழித்துக் கட்ட திட்டம் தீட்டினார். நவாபின் ஆட்களுள் அவர் மீது அதிருப்தியடைந்த சிலர் நவாப் ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டி வந்தனர். இந்த செய்தி கிளைவின் காதுகளை எட்டியவுடன் உடனடியாக சதிகாரர்களை சந்தித்தார். நவாபின் படைத்தளபதி மீர் ஜாஃபர் தான் இந்த சதிகாரர்களின் தலைவர். மீர் ஜாஃபரின் பதவி ஆசையைப் பயன்படுத்திக் கொண்ட கிளைவ், சிராஜ் உத்-தாலாவைக் காட்டிக் கொடுத்தால் ஜாஃபரை அடுத்த நவாபாக்கி விடுவதாக ஆசைகாட்டி தன் கைக்குள் போட்டுக் கொண்டார்.
ஜாஃபருக்கும் கிளைவுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட முக்கிய காரணமாக இருந்தவர் உமிச்சந்த் என்ற வங்காள வர்த்தகர். சதிகார கும்பலுக்கும் கம்பனிக்குமிடையே தூதராக செயல்பட்டு வந்தார். தனது சேவைகளுக்கு பதிலாக அதிக பணம் வேண்டுமென்று கிளைவை நச்சரித்து வந்தார். நவாபுக்கு துரோகமிழைக்க ஜாஃபரைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்த அதே சமயம் உமிச்சந்துக்கு ஒரு துரோகத்தைச் செய்தார் கிளைவ். சிராஜ் உத்-தாலாவைக் காட்டிக் கொடுக்க உதவினால் மூன்று லடசம் பவுண்டுகள் தருவதாக ஒப்புக்கொண்டு அதற்கேற்றார் போல ஒரு போலிப் பத்திரத்தைத் தயார் செய்து உமிச்சந்திடம் காட்டினார். அதனை நம்பி ஏமாந்த உமிச்சந்தும் மீர் ஜாஃபர்-கிளைவிடையே தூது போய் வந்தார். ஜாஃபரைக் கைக்குள் போட்டுக் கொண்டவுடன் சிராஜ் உத்-தாலாவை சண்டைக்கு இழுத்தார். 1757ல் வங்காளத்தில் பலாஷி என்ற இடத்தில் (ஆங்கிலத்தில் பிளாசி என்றானது) இரு தரப்பும் மோதிக்கொண்டன. பிளாசி சண்டை (Battle of Plassey) என்று தற்போது வரலாற்றாளர்களால் அறியப்படும் இந்த சண்டை தான் இந்தியாவின் வரலாற்றை மாற்றி அமைத்தது. சிராஜ் உத்-தாலாவின் படைகள் கம்பனிப் படைகளை விட எண்ணிக்கையில் பல மடங்கு அதிகம். ஆனால் அவற்றில் ஒரு பகுதி மீர் ஜாஃபரின் கட்டுப்பாட்டில் இருந்தது. சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே மீர் ஜாஃபாரின் படைப்பிரிவு போரிலிருந்து விலகிக் கொண்டது. ஜாஃபரின் துரோகம் தந்த அதிர்ச்சியிலிருந்து சிராஜ் உத்-தாலா மீள்வதற்குள் கிளைவின் படைகள் அவரது படைகளைத் தோற்கடித்துவிட்டன. சிராஜ் உத்-தாலா உயிர் பிழைக்க போர்க்களத்திலிருந்து தப்பி ஓடினார். ஆனால் ஜாஃபரின் சக சதிகாரர்கள் அவரைக் கைதுசெய்து கொலை செய்துவிட்டனர். ஜாஃபர் வங்காளத்தின் புதிய நவாப் ஆனார், இந்தியாவில் பிரிட்டிஷ ஆதிக்க காலம் தொடங்கியது. (கிளைவ் ஆரம்பித்து வைத்த துரோக சூழ்ச்சி உத்திகளை சில ஆண்டுகளில் ஜாஃபர் மீதே பிரயோகித்தனர் பிரிடிஷ்காரர்கள் – அவரை நவாப் பதவியில் இருந்து தூக்கி விட்டு அவரது மருமகன் மீர் காசிமை நவாப் ஆக்கிவிட்டனர்.)
தன்னை நவாப் ஆக்கியதற்கு நன்றிக்கடனாக கிளைவுக்கு பணத்தை அள்ளி வீசினார் மீர் ஜாஃபர். கம்பனி கணக்கிலும், படை வீரர்கள் கணக்கிலும் எழுதியது போக லட்சக்கணக்கில் சொந்த செலவுக்காகவும் வங்காள அரசிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டார் கிளைவ். இப்படி உள்ளூர் ஆட்சியாளர்களிடமிருந்து நேரடியாக கையூட்டு வாங்கும் பழக்கத்தைக் கிழக்கிந்திய கம்பனிக்கு பெரிய அளவில் அறிமுகப்படுத்திய பெருமை கிளைவையே சேரும். சம்பாதிக்க நினைத்ததை விட பல மடங்கு ஈட்டியபின்னர் இங்கிலாந்து திரும்பி அங்கு சில ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர் மூன்றாவது முறையாக 1765ல் மீண்டும் இந்தியா திரும்பினார். இம்முறை சூழ்ச்சிகளில் ஈடுபடாமல் நேரடியாக முகலாயப் பேரரசரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இந்தியாவின் பல பகுதிகளை கம்பனியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். இதன் மூலம் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவில் ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆட்சியாளராகிவிட்டது. அடுத்த அரை நூற்றாண்டில் இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகள் கம்பனியின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன.
நன்றாக சம்பாதித்து செட்டில் ஆன பின்னால் கிளைவ் கம்பனியின் நிருவாகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முயன்றார். ஆனால் அவர் ஆரம்பித்து வைத்த லஞ்சக் கலாசாரம் கம்பனியின் கீழ்மட்டம் வரை பரவியதால் அவரது சீர்திருத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. கம்பனி பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பிய கிளைவ் சில வருடங்களுக்குப் பின் தற்கொலை செய்து கொண்டார். அவர் இந்தியாவில் செய்த காரியங்களால் மனம் வருந்தி தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரு கருத்தும், தீராத நோயினால் அவதிப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார் என்று இன்னொரு கருத்தும் நிலவுகின்றன. இந்தியாவில் சம்பாதித்த பணத்தை அவரால் அனுபவிக்க முடியவில்லையென்றாலும், பிரிட்டிஷ் பேரரசின் வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றுவிட்டார். அவர் ஆரம்பித்து வைத்த வேலையை, வாரன் ஹாஸ்டிங்க்ஸ், ஆர்தர் வெல்லஸ்லி, தல்ஹாய்சி ஆகியோர் முடித்து வைத்தனர். இந்தியத் துணைக்கணடம் முழுவதும் அடுத்த நூற்றைம்பதாண்டுகளுக்கு பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது இந்தியர்களால் நாட்டைக் கொள்ளையடித்த வில்லனாகவும், பிரிட்டிஷ்காரர்களால் சிலைவைத்துப் போற்றப்படும் நாயகனாகவும் விளங்குகிறார் கிளைவ்.
.
No comments:
Post a Comment