Friday 5 June 2020

THANJAI RAMAIYA DASS LYRICS WRITER BORN 1914 JUNE 5 - 1965 JANUARY 15



THANJAI RAMAIYA DASS LYRICS /DIALOGUE WRITER  BORN 1914 JUNE 5 - 1965 JANUARY 15




..தஞ்சை இராமையாதாஸ் (சூன் 5, 1914 - சனவரி 15, 1965) தமிழகக் கவிஞரும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் திரைப்பட வசனகர்த்தாவும் ஆவார். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். பாமரர்களும் இரசிக்குமாறு எளிமையான பாடல்கள் மூலம் சமுதாயத் தத்துவக் கருத்துகள் கொண்ட பாடல்களை இயற்றியிருக்கிறார்

வாழ்க்கைக் குறிப்பு
இராமையாதாஸ் தமிழ்நாடு தஞ்சாவூர், மானம்பூச்சாவடியில் நாராயணசாமி - பாப்பு ஆகியோருக்குப் பிறந்தார். தஞ்சை புனித பீட்டர் பள்ளியில் படித்து பின்னர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டமும் பெற்றார். தஞ்சாவூரிலேயே கீழவாசல் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவருக்கு தாயராம்மாள், அரங்கநாயகி என்ற இரண்டு மனைவியர். மூத்தவருக்கு விஜயராணி என்ற மகளும், மற்றவருக்கு இரவீந்திரன் என்ற மகனும் உள்ளனர்.

திரைப்படத்துறையில் ஈடுபாடு
ஜெகந்நாத நாயுடு என்பவரின் "சுதர்சன கான சபா" என்ற நாடக நிறுவனத்தில் நாடக வாத்தியாராகச் சேர்ந்தார். பின்னர் தானே "ஜெயலட்சுமி கான சபா" என்ற நாடகக் குழுவை ஏற்படுத்தி தானே நாடகங்களை எழுதி நாடெங்கும் மேடையேற்றினார். அப்போது டி. ஆர். சுந்தரத்தின் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" (1947) என்ற திரைப்படத்தில் பாடல்கள் எழுத இவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. இவரது முதல் திரைப்படப் பாடல் "வச்சேன்னா வச்சது தான் புள்ளி என்பதாகும்.

இதனை அடுத்து, திகம்பர சாமியார் (1950), சிங்காரி (1951) ஆகிய படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். இராமையாதாசின் மச்சரேகை என்ற நாடகம் 200 நாட்களைக் கடந்து மேடைகளில் நடிக்கப்பட்டு வந்தது. நடிகர் டி. ஆர். மகாலிங்கம் அதனை அதே பெயரில் திரைப்படமாகத் தயாரிக்க எண்ணி அவரை 1950-இல் சென்னைக்கு அழைத்தார்.

இதனை அடுத்து நாகி ரெட்டியின் "பாதாள பைரவி" படத்துக்குத் திரைக்கதை, வசனம், பாடல் எழுதினார். இதனைத் தொடர்ந்து நகி ரெட்டியின் மாயா பஜார், மிஸ்ஸியம்மா, கடன் வாங்கி கல்யாணம், மனிதன் மாறவில்லை ஆகிய படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதினார்.

இவரது பகடை பன்னிரண்டு என்ற நாடகக் கதை எம்.ஜி.ஆர். நடித்த "குலேபகாவலி" என்ற திரைப்படமாகியது. இப்படத்தில் இவர் எழுதிய சொக்கா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு, மயக்கும் மாலை பொழுதே நீ போ போ... என்ற பாடல்கள் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தந்தன. மொத்தம் 83 படங்களில் 532 பாடல்கள் வரை இவர் எழுதியிருக்கிறார். அத்துடன் 25 படங்களுக்குக் கதை வசனமும், 10 படங்களுக்குத் திரைக்கதையும் எழுதியுள்ளார்.

நூலாசிரியர்

இராமையாதாஸ் 1962 ஆம் ஆண்டில் "திருக்குறள் இசை அமுதம்" என்ற நூலை எழுதினார். இந்த நூலுக்கு முனைவர் மு. வரதராசன், எம். எம். தண்டபாணி தேசிகர் ஆகியோர் அணிந்துரை தந்திருந்தனர். அப்போதைய தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். நூலை வெளியிட்டார்.
நாட்டுடமை
தஞ்சை இராமையாதாசின் கலைப்படைப்புகள் 2010 ஆம் ஆண்டு சூலை 16 இல் தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்டு அவரது வாரிசுகளுக்கு ரூபாய் ஆறு இலட்சம் பணமும் வழங்கப்பட்டது.

புகழ்பெற்ற பாடல்கள்
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ (மிஸ்ஸியம்மா)
சொக்கா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு (குலேபகாவலி)
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ... (குலேபகாவலி)
கல்யாண சமையல் சாதம் (மாயா பஜார்)
அழைக்காதே! நினைக்காதே! அவை தனிலே என்னை நீ ராஜா (மணாளனே மங்கையின் பாக்கியம்)
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே (மலைக்கள்ளன்)
புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சி கண்ணே (பானை பிடித்தவள் பாக்கியசாலி)
வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க (மதுரை வீரன்)








அந்தக் காலத் திரைப்பட பாடலாசிரியர், நாடக ஆசிரியர் தஞ்சை ராமையாதாஸ் பற்றிய கட்டுரையொன்றை என் வலைப்பூவில் வெளியிடவேண்டுமென்று விரும்பினேன். அதற்கு இப்போதுதான் காலம் கைகூடி வந்திருக்கிறது. தஞ்சையில் இருந்துகொண்டு தஞ்சைக் கவிஞரைப் பற்றி எழுதாமல் இருந்தால் எப்படி என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். இதோ அந்தக் கவிஞர் பற்றிய கட்டுரை. தஞ்சை ரயில் நிலையத்துக்கு எதிரில் மூப்பனார் சாலை என்று ஒன்று உண்டு. அது வழியாகச் சென்றால் தலைமை தபால் நிலையம், புதாறு தாண்டி "தினத் தந்தி" அலுவலகம் தொடங்கி தொடர்ந்த பகுதிகளுக்கு மகர்நோம்புச் சாவடி என்று பெயர். அங்கு பெரும்பாலும் தறி நெய்யும் செளராஷ்டிர மக்கள் வசிக்கிறார்கள். பிரபலமான ஜவுளி நிறுவனங்களும், பஜனை மடம், வேங்கடேஸ்வர பெருமாள் ஆலயம் போன்றவைகளும் அங்கே உண்டு. பெரும்பாலும் இந்த மக்கள் தேசிய வாதிகள். இப்படிப்பட்ட மகர்நோம்புச் சாவடியில் நாராயணசாமி நாயனார் என்பவருக்கும் பாப்பு அம்மாளுக்கும் மகவாகப் பிறந்தவர் ராமையாதாஸ். பிறந்த நாள் 1914 ஜூன் 5ஆம் தேதி. தமிழின் மீதிருந்த பற்று காரணமாகத் தமிழ் பயிலும்பொருட்டு கரந்தை தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து படித்து "வித்வான்" பட்டம் பெற்றார். தஞ்சையில் நடந்த கவி இயற்றும் போட்டியொன்றில் கலந்து கொண்டு அதில் தங்கப் பதக்கமும் வென்றார். இவர் காலத்தில் சுதந்திரக் கனல் வீசிக் கொண்டிருந்த காரணத்தாலும், இவருடைய நாட்டமும் தேசிய சிந்தனையில் ஈடுபட்டிருந்ததாலும் இவர் ஒரு தேசியவாதியாகத் திகழ்ந்தார். அப்போது நடந்து கொண்டிருந்த சுதந்திர இயக்கத்திலும் இவர் தன்னை இணைத்துக் கொண்டார். ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு நாடகத் துறையிலும் இவருக்கு நாட்டம் ஏற்பட்டதால் அதிலும் இவர் பங்கு கொள்ளலானார். நாடகத்தில் கதை, வசனம், நடிப்புச் சொல்லித் தருதல், நாடகத்துக்குப் பாடல்கள் எழுதுதல் போன்ற வேலைகளைச் செய்து வந்ததால் இவரை "வாத்தியார்" என்றுதான் அழைப்பார்கள். நாடகத் துறையில் "வாத்தியார்" என்பவர் அதி முக்கியமானவர். முதலில் வெளி நாடகக் கம்பெனியில் பணியாற்றிவிட்டுப் பின்னர் தானே சொந்தமாக ஒரு நாடகக் கம்பெனியை இவர் துவக்கினார், அந்த கம்பெனியிக்கு "ஜெயலக்ஷ்மி கானசபா" என்று பெயரிட்டார். இந்த நாடகக் கம்பெனி மூலமாக இவர் பல நாடகங்களை எழுதி அரங்கேற்றினார். அன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் புராண நாடகங்கள்தான் நடைபெறும் இவரும் அதற்கு விதிவிலக்கல்ல. இடையிடையே ஏதாவது ஒரு சமூக நாடகமும் நடைபெறுவதுண்டு. இவருடைய நாடக சபாவின் பெருமைக்கு ஒரு எடுத்துக் காட்டு சொல்லலாமா? பின்னாளில் பிரபலமான டைரக்டராக விளங்கியவரும், அரிய பல புராணக் கதை திரைப்படங்களைக் கொடுத்தவருமான ஏ.பி.நாகராஜன் இவரது நாடகக் கம்பெனியில் நடிகராக இருந்திருக்கிறார். இப்படி இவர் நாடகத் துறையில் சிறந்து விளங்கிய தருணம், கதை, வசனம், பாடல்கள் என்று இவரே எழுதி மேடையேற்றியதைக் கண்டு இவருக்குச் சில திரைப்படங்களில் பாடல்கள் எழுத வாய்ப்பு கிடைத்தது. இவர் சேலம் நகரில் நாடகம் போட்டுக் கொண்டிருந்த போது சேலத்தில் இயங்கி வந்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் இவரைத் தங்கள் படத்துக்குப் பாடல் எழுத அழைத்தனர். இவரும் எழுதிக் கொடுத்தார். சில பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமானதோடு அனைவருமே முணுமுணுக்கத் தொடங்கக்கூடிய பாடல்களும் இருந்தன. 'அந்தமான் கைதி' எனும் படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார், அதில் ஒரு பாடல் "ஒரு ஜாண் வயிறே இல்லாட்டா, இந்த உலகத்திலே ஏது கலாட்டா" என்பது அது. எம்.என்.நம்பியார் கதாநாயகனாக நடித்த "திகம்பர சாமியார்" எனும் துப்பறியும் படத்தில் ஒரு பாட்டு, அது "ஊசிப் பட்டாசே, வேடிக்கையாக தீ வச்சாலே வெட் டமார், டமார்". ஏழுமலை எனும் நடிகரும் ஒரு சிறு பெண்ணும் சேர்ந்து பாடுவதாக அமைந்த பாடல் இது. "ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி" என்றொரு படம், எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி நடித்தது. அதில் ஒரு பாட்டு "வெச்சேன்னா வெச்சதுதான், புள்ளி வெச்சேன்னா வெச்சதுதான்" என்று. அதுவும் தஞ்சையார் பாடல்தான். அப்போது பிரபல கதாநாயகனாக இருந்த டி.ஆர்.மகாலிங்கம் இவர் நாடகமாகப் போட்டுக் கொண்டிருந்த "மச்சரேகை" எனும் கதையை சினிமாவாக எடுக்க முனைந்தார். தஞ்சையாரும் திரைப்படத் துறைக்காக சென்னைக்குக் குடியேறினார். சென்னைக்குச் சென்றவருக்கு விஜயா, வாஹினி கம்பெனியில் தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்தன. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் 1951 முதல் 1960 வரையான காலகட்டத்தில் அந்தக் கம்பெனி தயாரித்த வெற்றிப் படங்களான, என்.டி.ராமாராவ், முக்காமலா நடித்த "பாதாள பைரவி", ஜெமினி கணேசன், சாவித்ரி ஜோடி சேர்ந்து நடித்த "மிஸ்ஸியம்மா", சாவித்ரி, எஸ்.வி.ரங்காராவ் நடித்த "மாயா பஜார்" ஆகிய படங்களில் வந்த பாடல்கள் அனைத்தும் தஞ்சையாருடையதுதான். "வாராயோ வெண்ணிலாவே", "கல்யாண சமையல் சாதம்" போன்ற பாடல்கள் இன்றும்கூட சக்கை போடு போடுகின்றன. பிரபல இயக்குனர் ஸ்ரீதர் 'அமரதீபம்' படம் எடுத்தார். அதில் பாட்டு எழுத தஞ்சையாரை அழைத்தார். அதில்தான் பலருடைய விமர்சனங்களுக்கு ஆளான "ஜாலிலோ ஜிம்கானா" பாடல் வந்தது. அது முதல் இவரை டம்பாங்குத்து பாடல் எழுதுபவர் என்று முத்திரை குத்திவிட்டனர். நல்லதொரு கவிஞர், வித்வான் பட்டம் பெற்ற தமிழறிஞர், பாவம் ஒரு திரைப்படப்பாடலால் இப்படி ஆகிவிட்டது. இவர் ஒரு தேசியவாதி என்பதைப் பார்த்தோம். பெருந்தலைவர் காமராஜர், பி.கக்கன் போன்றோருடன் இவர் நெருங்கி பழகினார். காங்கிரஸ்காரராக இருந்த போதும் திராவிட இயக்கத்தார் எடுத்த திரைப் படங்களுக்கும் இவர் பாடல்கள் எழுதியிருக்கிறார். "குறவஞ்சி" "தங்கரத்தினம்" போன்ற படங்களில் இவர் பாடல்கள் வந்தன. கவிஞர்களுக்குள் இவர் ஒரு தனி ரகம். இடம், காலம் பார்க்காமல் இருந்த இடத்தில் உட்கார்ந்து பாடல்களை எழுதிவிடுவார். வெற்றிலை பாக்கைக் குதப்பிக் கொண்டு உட்கார்ந்தாரானால் பாடல் கதைக்கு ஏற்ப வந்து விழும். பிற மொழிகளிலிருந்து மொழியாக்கம் செய்த பல படங்களுக்கு இவர் வசனம் பாடல்கள் எழுதியிருக்கிறார். பிரபல நடிகை டி.ஆர்.ராஜகுமாரி அவர்கள் நடித்த காலத்தில் கனவுக் கன்னியாகத் திகழ்ந்திருக்கிறார். அவருடைய மயக்கும் விழிகளும், ஹரிதாஸ் படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" பாடலுக்கு அவரது அபினயம் இன்றும் கூட பேசப்படுகிறது. அவருடைய இளைய சகோதரர்தான் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா. அவர் ராமையாதாஸிடம் தான் ஒரு படம் எடுக்கப்போவதாகத் தெரிவிக்க அதற்கு பாடல் எழுத வேண்டினார். அந்தப் படம்தான் "குலேபகாவலி". அதில் வந்த ஒரு குத்துப்பாட்டு "குல்லா போட்ட நவாபு, செல்லாது உந்தன் ஜவாபு". இந்தப் படத்துக்குக் கதை, வசனம், பாடல்கள் அனைத்துமே தஞ்சையார்தான். இந்தப் படமும், பாடல்களும் தஞ்சையாரை வெகுஜன திரைப்படப் பாடலாசிரியராக பறை சாற்றியது. இவரது பாடல்கள் கொச்சையாகவும், பொருளற்றதாகவும் இருக்கிறது, ஏதேதோ வார்த்தை ஜாலங்களைச் செய்து பாடல்கள் எழுதிவிடுகிறார் என்றெல்லாம் பேச்சு அப்போது இருந்தது, அதை அப்படியே சில பத்திரிகைகளும் வெளியிட்டன. அவற்றைக் கண்டு கோபப்படாமல் தஞ்சையார் சில பத்திரிகையாளர்களை அழைத்துப் பேசினார். அவர்களுக்கு ஒரு விருந்து கொடுத்துவிட்டு அவர்களிடம், சினிமா பார்க்கிறவர்கள் பாமர மக்கள் அதிகம். அவர்களுக்குப் போய் இலக்கியத் தமிழில் பாட்டெழுதினால் அவர்களுக்கு எப்படிப் புரியும். அவர்கள் ரசிக்கக்கூடிய விதத்தில் பாடல் எழுதுவது எப்படித் தவறாகும் என்றெல்லாம் பேசியதும் அவர்கள் ஒப்புக் கொண்டு கலைந்து சென்றார்கள். சினிமாவில் ஓரளவு பெயரும் புகழும் கிடைத்துவிட்டால் சொந்தப் பட ஆசை வந்துவிடுகிறது அல்லவா. அந்த வகையில் தஞ்சையாருக்கும் ஆசை வந்தது. முதலில் ஒரு படத்தை டப்பிங் செய்து வெளியிட்டார், அது "ஆளைக் கண்டு மயங்காதே" எனும் படம். அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். பானுமதி நடித்த "லலிதாங்கி" என்றொரு படம் இவர் சொந்தமாகத் தயாரித்தார். அது முடிவடையாமல் நின்று போனது, உடனே அவர் சிவாஜியை வைத்து "ராணி லலிதாங்கி" எனும் பெயரில் படமெடுத்து வெளியிட்டார். அதில் அவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிலர் மீண்டும் தலையெடுத்து விடுவர், சிலர் அதோடு முடிந்தது என்று விட்டும் விடுவர். இவருக்கு ஏற்பட்டது இரண்டாவது நிலை. இவரது ஆரோக்கியமும் கெட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்டார். அந்தச் சூழ்நிலையிலும் திருமதி அஞ்சலி தேவிக்காக 'பக்க இண்டி அம்மாயி" என்று தெலுங்கில் வந்த படத்துக்கு தமிழில் "அடுத்த வீட்டுப் பெண்" எனும் பெயரில் ஒரு படம், அதற்கு இவர் வசனம், பாடல்கள் எழுதிக் கொடுத்தார். 1948 தொடங்கி கிட்டத்தட்ட 1960கள் வரையிலும் இவர் பல படங்களிலும் பங்கு கொண்டிருந்தார். சுமார் 100 படங்கள் வரை வசனம் பாடல்கள் எழுதினார். 600 பாடல்கள் வரை இவர் எழுதியது திரையில் ஒலித்தன. ஓரளவு திரைத்துறையிலிருந்து விடுபட்டுத் தன்னுடைய தமிழ்ப் புலமையை வெளிக்காட்டும் விதத்தில் திருக்குறள் வரிகளை வைத்து, "திருக்குறள் இசை அமுதம்" என்று பாடல்களை எழுதி வெளியிட்டார். அதை எம்.ஜி.ஆர். வெளியிட்டு வாழ்த்தினார். இவர் உடல் நலம் மிகவும் கெட்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் 1965 ஜனவரி மாதம் பொங்கலுக்கு அடுத்த நாள் 15ஆம் தேதி காலமானார். அப்போது அவர் அரசு மரியாதைகளுடன் இறுதி யாத்திரை நடந்தது. உள்துறை அமைச்சராக இருந்த திரு பி.கக்கன் அவர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மறைந்த கவிஞருக்கு மரியாதை செலுத்தினார். தஞ்சை தந்த கவிஞர், திரையுலகில் செய்த சாதனைகள், இயற்றிய பாடல்கள், எழுதிய வசனங்கள் அனைத்துமே மக்கள் அதிகம் ரசித்துப் பாராட்டினர். அந்த மாபெரும் கலைஞருக்கு செலுத்தும் அஞ்சலியாக இந்தக் கட்டுரையை வெளியிடுகிறோம். வாழ்க தஞ்சை ராமையாதாஸ் புகழ்!


.
.

No comments:

Post a Comment