Tuesday 30 June 2020

PUDUMAI PITHAN ,LIFE HISTORY 1906 ,APRIL 25 - 1948 JUNE 30



PUDUMAI PITHAN ,LIFE HISTORY 
     1906 ,APRIL 25 - 1948 JUNE 30




புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார்.[2] கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. 2002ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது.[3][4][5][6]


வாழ்க்கைக் குறிப்பு

மணிக்கொடி இதழ்
புதுமைப்பித்தன் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். தொடக்கக் கல்வியைச் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் பயின்றார். தாசில்தாராகப் பணி புரிந்த அவர் தந்தை ஓய்வு பெற்றமையால், 1918-இல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். அங்குள்ள ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்பு நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலைப் (பி. ஏ) பட்டம்பெற்றார். 1932 ஜூலையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கமலாவை மணந்தார்.[7][8][9]

இவரது முதல் படைப்பான குலோப்ஜான் காதல் காந்தி இதழில் 1933-இல் வெளிவந்தது. 1934-இலிருந்து மணிக்கொடியில் இவரது படைப்புகள் பிரசுரமாகத் துவங்கின. மணிக்கொடியில் வெளிவந்த இவரின் முதல் சிறுகதை ஆத்தங்கரைப் பிள்ளையார். இந்தக் காலகட்டத்தில் அவர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இவர் வாழ்ந்த இடங்களான திருநெல்வேலியையும் சென்னையையும் மையமாகக் கொண்டே இவரது படைப்புகள் அமைந்தன. இவரது சிறுகதைகள் கலைமகள், ஜோதி, சுதந்திரச் சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளிலும் பிரசுரமாயின. 1940ல் புதுமைப்பித்தனின் கதைகள் என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு வெளியானது. சென்னையிலிருந்த காலத்தில் இவர் ஊழியன், தினமணி, மற்றும் தினசரியிலும் பணிபுரிந்தார்.[8]

இவர் திரைப்படத் துறையிலும் ஆர்வம் செலுத்தினார். ஜெமினி நிறுவனத்தின் அவ்வை மற்றும் காமவல்லி படங்களில் பணிபுரிந்தார். பின்பு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான "பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்" -ஐத் துவங்கி வசந்தவல்லி என்ற படத்தைத் தயாரிக்க முயன்று தோல்வியுற்றார். எம். கே. தியாகராஜ பாகவதரின் ராஜமுக்தி திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதற்காகப் புனேவில் சில மாதங்கள் வாழ்ந்தார். அங்கு அவர் கடுமையான காச நோய்க்கு ஆளாகி ஜுன் 30, 1948-இல் காலமானார்.[8][10]

திருநெல்வேலியில் இவர் வாழ்ந்த்த வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தெருவுக்கு திருநெல்வேலி மாநகராட்சி புதுமைப்பித்தன் வீதி என்ற பெயரை 2016 செப்டம்பர் 15 அன்று சூட்டியது.[11]

படைப்புகளும் சிந்தனைகளும்
புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் தான். அக்குறுகிய கால அளவிலேயே அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையுள்ள கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், புத்தக விமரிசனங்கள் என எழுதிக் குவித்தார். அவரது எழுத்துக்கள் அவரைப் புரட்சி எழுத்தாளராக அடையாளம் காட்டின. அவர் கையாண்ட விஷயங்களும் கதாபாத்திரங்களும் தமிழ்ப் புனைவு உலகுக்குப் புதியதாய் அமைந்தன. தமிழ் இலக்கிய உலகம் சில எழுதப்படாத விதிகளால் முடக்கப்பட்டிருப்பதாக அவர் கருதினார்.[9][12] தன் கட்டுரை ஒன்றில் இவ்வாறு கூறுகிறார்:

இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல; சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர் நோக்கிக் பாக்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டு கட்டுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக்களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடம் இருக்குமேயானால், ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போய் விடப்போகிறது? இற்றுப்போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப்போகிறதா?
மேலும் இலக்கியம் என்பது மன அவசத்தின் எழுச்சிதானே? நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், ஸினிமா நடிகை சீத்தம்மாள், பேரம் பேசும் பிரமநாயகம் - இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக்கொண்டிருந்து விட்டு, இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல், காதல் கத்தரிக்காய் பண்ணிக்கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை[13]

தனது சமகால எழுத்தாளர்களின் எதிர்விமர்சனங்களைப் புறந்தள்ளி பின்வருமாறு கூறுகிறார்:

வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்துவிட்டவைகளும். அவை உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொறுப்பாளியல்ல, நான் பிறப்பித்து விளையாடவிட்ட ஜீவராசிகளும் பொறுப்பாளிகளல்ல; உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக்கொள்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன்.[14]

புதுமைப்பித்தன் கதைகள் பல்வேறு பதிப்புகளில் வெளிவந்துள்ளன
சிறுகதைகள்
புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவரது சிறுகதைகள் மணிக்கொடி, கலைமகள், ஜோதி, சுதந்திர சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளில் பிரசுரமாயின. மற்றவை அவர் மறைவுக்குப் பின்னர் வெவ்வேறு காலங்களில் பிரசுரமாயின. கடைசித் தொகுப்பு 2000ல் வெளியானது. புதுமைப்பித்தன் 1930களில் உருவாகிய மணிக்கொடி இயக்கத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக விளங்கினார். கு. ப. ராஜகோபாலன், பி. எஸ்.ராமையா, வ. ராமசாமி ஆகியோர் மணிக்கொடி இயக்கத்தின் மற்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களாவர்.[15][16]

மொழிபெயர்ப்புகள்
புதுமைப்பித்தன் 50க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்த்துள்ளார். அவர் மொழிபெயர்த்த எழுத்தாளர்களில் சிலர்: மொலியர், கே பாயில், மேக்சிம் கார்க்கி, சின்கிளெயயர் லூயிஸ், எர்னஸ்ட் டோலர், வில்லியம் ஷேக்ஸ்பியர், இ. எம். டேலாஃப்ல்டு, வில்லியம் சரோயன், இ. வி. லூகாஸ், மோஷே ஸ்மிலான்ஸ்கி, ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்ஸன், பிரட் கார்ட், ஜான் கால்ஸ்வொர்த்தி, அலெக்ஸாண்டர் குப்ரின், ஆன்டன் செக்கோவ், பிராண்ஸ் காஃப்கா, இல்யா எக்ரன்பர்க், கை டி மாப்பாசான், வலெரி பிர்யுசொவ், அனாடோல் பிரான்ஸ், லியோனிட் ஆண்டிரியேவ், ஹென்ரிக் இப்சன், நாத்தேனியல் ஹாத்தோர்ன், எட்கர் ஆலன் போ, ராபர்ட் முரே கில்கிரிஸ்ட், பிரான்ஸிஸ் பெல்லர்பி, லியோனார்ட் ஸ்ட்ராங், ஜேக் லண்டன், பீட்டர் எக்கி, மிக்கெயில் அலெக்ஸாண்ட்ரோவிச் ஷோலோகோவ், தாமஸ் வுல்ஃப் மற்றும் ஜேம்ஸ் ஹேன்லி ஆவர்.[17] அவருக்கு மொழிபெயர்ப்புகள், தழுவல்கள் குறித்து தெளிவான கருத்து இருந்தது. தழுவல்கள் இலக்கியத் திருட்டுக்குச் சமம் என்றும் பிறமொழி படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவர மொழிபெயர்ப்பே சிறந்த வழியெனவும் கருதினார். 1937ல் மொழிபெயர்ப்பா, தழுவலா என்ற பிரச்சனையில் அவருக்கும் கல்கி கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே காட்டமான இலக்கியச் சண்டையொன்று நிகழ்ந்தது.[12][18][19]

கவிதைகள்
புதுமைப்பித்தன் 15 கவிதைகள் எழுதியுள்ளார். அவரது முதல் கவிதையான திரு ஆங்கில அரசாங்க தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவம், 1934ல் வெளிவந்தது. அவரது கவிதைகள் பெரும்பாலும் அவரது நண்பர் தொ. மு. சிதம்பர ரகுநாதனுக்கு வெண்பா வடிவில் எழுதப்பட்ட கடிதங்களாக அமைந்திருந்தன. அவரது 15 கவிதைகளும் அவர் இறந்த பின்பு தான் பிரசுரமாயின. அவரது சிறுகதைகளைப்போலவே அவரது கவிதைகளும் நையாண்டியும், நக்கலுமாக இருந்ததன. மூனாவருணாசலமே மூடா, அவரது கவிதைகளுள் புகழ் பெற்றது. அது மணிக்கொடி இயக்கத்தைப் பற்றிக் குறிப்பிடாமல் விட்டுவிட்ட ஒரு தமிழ் புத்தகத்தினைச் (மு. அருணாசலத்தின் இன்றைய தமிழ் வசன நடை) சாடும் விமரிசனமாக எழுதப்பட்டிருந்தது.[9]

அரசியல் புத்தகங்கள்
புதுமைப்பித்தன் அடிப்படையில் சோஷியலிச கருத்துகளைக் கொண்டவர். அவரது அரசியல் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களில் குறிப்பிடத்தக்கவை நான்கு. அவை ஃபாசிஸ்ட் ஜடாமுனி, (முசோலினியின் வாழ்க்கை வரலாறு) கப்சிப் தர்பார், (ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு) ஸ்டாலினுக்குத் தெரியும் மற்றும் அதிகாரம் யாருக்கு (இரண்டும் கம்னியூசத்தையும் ஸ்டாலினின் கொள்கைகளையும் விவரிப்பவை). நான்கு புத்தகங்களுமே ஃபாசிசத்தை எதிர்த்தும் ஸ்டாலினிய கொள்கைகளுக்கு ஆதரவாகவும் எழுதப்பட்டன.[8][9]

எழுத்துநடை
சென்னை, தஞ்சாவூர்த் தமிழ் அல்லாது பிற வட்டார வழக்குத் தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் புதுமைப்பித்தன். பெரும்பாலும் இவரது கதாபாத்திரங்கள் நெல்லைத் தமிழில் பேசினர். அவரது கதைகள் அவர் வாழ்ந்த இடங்களான சென்னை மற்றும் திருநெல்வேலியைக் களமாகக் கொண்டிருந்தன. அவரது நடையில் பேச்சுத்தமிழ் மற்றும் செந்தமிழ் இரண்டும் கலந்திருந்தன. சிக்கலான விஷயங்களைக் கையாளும்போது கூட அவரது எழுத்துக்களில் நையாண்டி இழைந்தோடுவது அவரது சிறப்பு. கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்ற இலக்கிய எதிராளிகளுடன் விவாதம் செய்தபோது கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினார். நூல் விமரிசனங்களில் வசைபாடல்களையும் எழுதியுள்ளார்.[7][8][9]

பிரபலமான எடுத்துக்காட்டுகள்
புதுமைப்பித்தனின் தனித்துவ நடைக்கு அவரது கதைலிருந்து சில எடுத்துக்காட்டுகள்:


பொன்னகரம்
பட்டி0:00
பொன்னகரம் - சிறுகதை
இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும்.
சென்னையிலே தர்ம சிந்தனை ஒரு போக வஸ்து.

– நம்பிக்கை

இருவரும் இருளில் மறைகிறார்கள், அம்மாளு முக்கால் ரூபாய் சம்பாதித்துவிட்டாள். ஆம் புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான். என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறார்களே! இதுதான், ஐயா, பொன்னகரம்!

– பொன்னகரம்

அந்த சிங்கிகுளத்துப் பெண் மூவாயிரம் ரூபாயைப் பணயமாக வைத்து, அவனுடன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ள சம்மதிக்கும் பொழுது, ஐந்து ரூபாய்க்கு இரண்டு மணிநேரம் சரி தானே?

– ஒப்பந்தம்


பால்வண்ணம் பிள்ளை
பட்டி0:00
பால்வண்ணம் பிள்ளை - சிறுகதை
இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும்.
என் புள்ளேகள் நீத்தண்ணி குடிச்சு வளந்துக்கிடும்

– பால்வண்ணம் பிள்ளை

புனைப்பெயர்கள்
புதுமைப்பித்தனின் பிற புனைப்பெயர்கள்: சொ.வி, ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், ஊழியன், கபாலி, சுக்ராச்சாரி மற்றும் இரவல் விசிறிமடிப்பு. புதுமைப்பித்தன் என்ற பெயரே அவருக்குப் பிடித்தமானதாக இருந்தது. அவரது கதைகளின் கவர்ச்சிக்கு அப்பெயர் தான் ஓரளவு காரணம் என்று அவர் கருதினார். தனது கவிதைகளை வேலூர் வே. கந்தசாமிப் பிள்ளை என்ற புனைப்பெயரில் எழுதினார். அவரது படைப்புகளில் தழுவல்கள் உள்ளன என எழுந்த குற்றச்சாட்டால் அவரது புனைப்பெயர்கள் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. தொ. மு. சிதம்பர ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாறான புதுமைப்பித்தன் கதைகள்: சில விமரிசனங்களும் சில விஷமங்களும் என்ற புத்தகத்தில் நந்தன் என்ற புனைப்பெயரில் எழுதப்பட்டவை யாவும் தழுவல் படைப்புகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[15][16]

சர்ச்சைகள்
தழுவல் கதைகள்
மாப்பாசான் என்ற பிரெஞ்சு கதாசிரியரின் படைப்புகளின் தழுவல்களாகப் புதுமைப்பித்தனின் சில கதைகள் அமைந்துள்ளன என்று அவரது சம காலத்து எழுத்தாளர்களான பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி) மற்றும் சோ. சிவபாதசுந்தரம் குற்றம் சாட்டியுள்ளனர். இலக்கிய ஆய்வாளர் காரை கிருஷ்ணமூர்த்தியும் பின்னர் இதே கருத்தினைக் கூறினார். புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தொ. மு. சிதம்பர ரகுநாதன் சமாதி, நொண்டி, பயம், கொலைகாரன் கதை, நல்ல வேலைக்காரன், அந்த முட்டாள் வேணு ஆகிய கதைகள் மாப்பாசான் கதைகளின் தழுவல்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். பித்துக்குள்ளி என்ற கதை ராபர்ட் பிரௌனிங் கவிதையொன்றின் தழுவல் எனவும் கூறியுள்ளார். டாக்டர் சம்பத், நானே கொன்றேன், யார் குற்றவாளி, தேக்கங்கன்றுகள் போன்ற கதைகளும் தழுவல்களாக இருக்கலாம் எனக் கருத்துகள் உள்ளன. தமிழ் படித்த பொண்டாட்டி என்ற கதையைப் புதுமைப்பித்தன் தானே வெளியிட்டுள்ளார். அதன் முன்னுரையில் அது மாப்பாசான் கதையின் தழுவல் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். தழுவல்கள் எனக் குற்றச்சாட்டிற்கு உள்ளான பிற கதைகள் அவர் இறந்தபின் பிறரால் வெளியிடப்பட்டுள்ளன. அவரது ஆதரவாளர்கள், அவர் வெளியிட்டிருந்தால் கண்டிப்பாகத் தழுவல் என்பதைக் குறிப்பிட்டிருப்பார் எனக் கூறுகின்றனர். மேலும் அவர் உயிரோடு இருந்த காலகட்டத்தில் மாப்பாசானின் கதைகள் பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. அவருக்கோ பிரெஞ்சு மொழி தெரியாது. எனவே அக்கதைகள் எவ்வாறு தழுவல்களாக இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்புகின்றனர். அவரது தழுவல் கதைகள் அனைத்தும் 1937க்கு முன்னதாக எழுதப்பட்டவை. அவ்வாண்டுதான் அவர் கல்கி கிருஷ்ணமூர்த்தியுடன் பிறமொழி படைப்புகளிலிருந்து தழுவி எழுதுவது குறித்து கடுமையான இலக்கியச் சண்டை நடத்தினார். தழுவல்கள் இலக்கியத் திருட்டுக்குச் சமம் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.[7][8][12][16][18][20][21]

பிற விமர்சனங்கள்
புதுமைப்பித்தன் சிந்தனை செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி எழுதியுள்ளார், ஆனால் அவற்றுக்கான தீர்வைப் பற்றிக் கூற முயற்சிக்கவே இல்லை என விமர்சிக்கப் படுகிறார். அவரது படைப்புகளில் பிரச்சனைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன; தீர்வுகளை வாசகர்களின் வசம் விட்டுவிடுகிறார்.[7] சில சமயங்களில் அவர் கதை நடைபெறும் களத்தையும் கதாபாத்திரங்களின் தன்மையையும் விவரிக்கும் அளவு மையக்கருத்துக்கு முக்கியத்துவம் தருவதில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறார். சமீபத்தில் தமிழ் விமர்சகர் அ. மார்க்ஸ் தலித்துகள், மறவர்கள், கிருத்துவர்கள் மற்றும் புலால் உண்பவர்களை புதுமைப்பித்தன் இழிவு படுத்தியுள்ளார் என விமரிசனம் செய்துள்ளார்.[14][22] 2014ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் புதுமைப்பித்தனின் துன்பக்கேணி, பொன்னகரம் ஆகிய இரு சிறுகதைகளை தனது பாடத்திட்டத்திலிருந்து நீக்கியது. பல்கலைக்கழக ஆட்சிக்குழு இக்கதைகள் தலித்துகளை இழிவுபடுத்துகின்றன என்று கருதியதால் அவற்றை நீக்கியது.[23][24]

படைப்புகளின் பட்டியல்
Search Wikisource விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:
ஆசிரியர்:புதுமைப்பித்தன்
(முழுமையானதல்ல)

கவிதைகள்
திரு ஆங்கில அரசாங்க தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவம்
மூனாவருணாசலமே மூடா
இணையற்ற இந்தியா
செல்லும் வழி இருட்டு
அரசியல் நூல்கள்
ஃபாசிஸ்ட் ஜடாமுனி
கப்சிப் தர்பார்
ஸ்டாலினுக்குத் தெரியும்
அதிகாரம் யாருக்கு
சிறுகதைகள்
சாபவிமோசனம்
செல்லம்மாள்
கோபாலய்யங்காரின் மனைவி
இது மிஷின் யுகம்
கடவுளின் பிரதிநிதி
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
படபடப்பு
ஒரு நாள் கழிந்தது
தெரு விளக்கு
காலனும் கிழவியும்
பொன்னகரம்
இரண்டு உலகங்கள்
மனித யந்திரம்
ஆண்மை
ஆற்றங்கரைப் பிள்ளையார்
அபிநவ ஸ்நாப்
அன்று இரவு
அந்த முட்டாள் வேணு
அவதாரம்
பிரம்ம ராக்ஷஸ்
பயம்
டாக்டர் சம்பத்
எப்போதும் முடிவிலே இன்பம்
ஞானக் குகை
கோபாலபுரம்
இலக்கிய மம்ம நாயனார் புராணம்
'இந்தப் பாவி'
காளி கோவில்
கபாடபுரம்
கடிதம்
கலியாணி
கனவுப் பெண்
காஞ்சனை
கண்ணன் குழல்
கருச்சிதைவு
கட்டிலை விட்டிறங்காக் கதை
கட்டில் பேசுகிறது
கவந்தனும் காமனும்
கயிற்றரவு
கேள்விக்குறி
கொடுக்காப்புளி மரம்
கொலைகாரன் கை
கொன்ற சிரிப்பு
குப்பனின் கனவு
குற்றவாளி யார்?
மாயவலை
மகாமசானம்
மனக்குகை ஓவியங்கள்
மன நிழல்
மோட்சம்
'நானே கொன்றேன்!'
நல்ல வேலைக்காரன்
நம்பிக்கை
நன்மை பயக்குமெனின்
நாசகாரக் கும்பல்
நிகும்பலை
நினைவுப் பாதை
நிர்விகற்ப சமாதி
நிசமும் நினைப்பும்
நியாயம்
நியாயந்தான்
நொண்டி
ஒப்பந்தம்
ஒரு கொலை அனுபவம்
பால்வண்ணம் பிள்ளை
பறிமுதல்
பாட்டியின் தீபாவளி
பித்துக்குளி
பொய்க் குதிரை
'பூசனிக்காய்' அம்பி
புரட்சி மனப்பான்மை
புதிய கூண்டு
புதிய கந்த புராணம்
புதிய நந்தன்
புதிய ஒளி
ராமனாதனின் கடிதம்
சாப விமோசனம்
சாளரம்
சாமாவின் தவறு
சாயங்கால மயக்கம்
சமாதி
சாமியாரும் குழந்தையும் சீடையும்
சணப்பன் கோழி
சங்குத் தேவனின் தர்மம்
செல்வம்
செவ்வாய் தோஷம்
சிற்பியின் நரகம்
சித்தம் போக்கு
சித்தி
சிவசிதம்பர சேவுகம்
சொன்ன சொல்
சுப்பையா பிள்ளையின் காதல்கள்
தனி ஒருவனுக்கு
தேக்கங் கன்றுகள்
திறந்த ஜன்னல்
திருக்குறள் குமரேச பிள்ளை
திருக்குறள் செய்த திருக்கூத்து
தியாகமூர்த்தி
துன்பக் கேணி
உணர்ச்சியின் அடிமைகள்
உபதேசம்
வாடாமல்லிகை
வாழ்க்கை
வழி
வெளிப்பூச்சு
வேதாளம் சொன்ன கதை
விபரீத ஆசை
விநாயக சதுர்த்தி
மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
ஆஷாட பூதி
ஆட்டுக் குட்டிதான்
அம்மா
அந்தப் பையன்
அஷ்டமாசித்தி
ஆசிரியர் ஆராய்ச்சி
அதிகாலை
பலி
சித்திரவதை
டைமன் கண்ட உண்மை
இனி
இந்தப் பல் விவகாரம்
இஷ்ட சித்தி
காதல் கதை
கலப்பு மணம்
கனவு
காரையில் கண்ட முகம்
கிழவி
லதீபா
மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்
மணிமந்திரத் தீவு
மணியோசை
மார்க்ஹீம்
மிளிஸ்
முதலும் முடிவும்
நாடகக்காரி
நட்சத்திர இளவரசி
ஓம் சாந்தி! சாந்தி!
ஒரு கட்டுக்கதை
ஒருவனும் ஒருத்தியும்
பைத்தியக்காரி
பளிங்குச் சிலை
பால்தஸார்
பொய்
பூச்சாண்டியின் மகள்
ராஜ்ய உபாதை
ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு
சாராயப் பீப்பாய்





சகோதரர்கள்
சமத்துவம்
ஷெஹர்ஜாதி - கதை சொல்லி
சிரித்த முகக்காரன்
சூனியக்காரி
சுவரில் வழி
தாயில்லாக் குழந்தைகள்
தையல் மிஷின்
தந்தை மகற்காற்றும் உதவி
தெய்வம் கொடுத்த வரம்
தேசிய கீதம்
துன்பத்திற்கு மாற்று
துறவி
உயிர் ஆசை
வீடு திரும்பல்
ஏ படகுக்காரா!
யாத்திரை
எமனை ஏமாற்ற
யுத்த தேவதையின் திருமுக மண்டலம்
திரைப்படத்துறையில்
காமவல்லி (கதை, உரையாடல்)
ராஜ முக்தி (உரையாடல்)






l கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலி யூரில் (1906) பிறந்தார். இயற் பெயர் சொ.விருத்தாசலம். தந்தை தாசில்தார். அவர் ஓய்வு பெற்றதும் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு குடும்பம் குடியேறியது.

l தொடக்கக் கல்வியை செஞ்சி, கள்ளக்குறிச்சி, திண்டிவனத்தில் பயின்றார். நெல்லை இந்துக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். உலக இலக்கியங்களை தேடித் தேடி வாசித்தார். இவரது முதல் படைப்பான ‘குலாப்ஜான் காதல்’ 1933-ல் வெளிவந்தது.

l இவரை பத்திரிகை உலகுக்கு அழைத்து வந்தவர் வ.ராமசாமி. சென்னையில் 1934-ல் குடியேறினார். ‘ஊழியன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். ‘மணிக்கொடி’ இதழில் இவரது படைப்புகள் பிரசுரமாகின. அதில் வெளியான இவரது முதல் சிறுகதை ‘ஆத்தங்கரைப் பிள்ளையார்.’

l ‘மணிக்கொடி’, ‘கலைமகள்’, ‘ஜோதி, ‘சுதந்திரச் சங்கு’, ‘ஊழியன்’, ‘தமிழ்மணி’ உள்ளிட்ட பல இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளிவந்தன. ‘புதுமைப்பித்தனின் கதைகள்’ என்ற தொகுப்பு 1940-ல் வெளியானது. ‘கிராம ஊழியன்’, ‘சிவாஜி’ போன்ற சிற்றிதழ்களில் பணம் பெற்றுக்கொள்ளாமல் எழுதினார். ‘தினமணி’, ‘தினசரி’ பத்திரிகைகளிலும் பணிபுரிந்தார்.

l எழுத்துப் பணியில் 15 ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஈடுபட்டார். அதற்குள் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், எண்ணற்ற மொழிபெயர்ப்புகள், புத்தக விமர்சனங்கள் எழுதினார்.

l சென்னை, தஞ்சாவூர் அல்லாத பிற வட்டார வழக்கு தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் இவர். இவரது கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நெல்லைத் தமிழ் பேசின. மாக்சிம் கார்க்கி, எர்னஸ்ட் டோலர், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளின் 50-க்கும் மேற்பட்ட படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்தார்.

l இவர் சிறந்த இலக்கிய விமர்சகரும்கூட. சொ.வி., ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், கபாலி, சுக்ராச்சாரி, இரவல் விசிறிமடிப்பு ஆகிய புனைபெயர்களில் எழுதினார். இலக்கியத்தின் பல துறைகளிலும் எழுதினாலும், சிறுகதைகள்தான் இவருக்கு தனியிடம் பெற்றுத் தந்தன. ‘காஞ்சனை’, ‘நாசகாரக் கும்பல்’, ‘மனித யந்திரம்’, ‘பொன்ன கரம்’, ‘இது மிஷின் யுகம்’, ‘சாபவிமோசனம்’, ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’, ‘ஒருநாள் கழிந்தது’, ‘சிற்பியின் நரகம்’, ‘செல்லம் மாள்’ முதலான அற்புதமான படைப்புகள் சாகாவரம் பெற்றவை.

l திரைப்படத் துறையிலும் ஆர்வம் செலுத்தினார். ‘அவ்வை’, ‘காமவல்லி’ ஆகிய படங்களில் பணிபுரிந்தார். சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, திரைப்படம் தயாரிக்க முயன்றார். அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.

l கூர்மையான சமூக விமர்சனம், அபாரமான அங்கதம், கதை வடிவங்களில் பரிசோதனை, வேகமான நடை, ஆழம், துல்லியமான சித்தரிப்புகள், வலுவான பாத்திரப் படைப்புகள் ஆகியவை இவரது தனி முத்திரைகள்.

l ‘ராஜமுக்தி’ படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுத 1947-ல் புனே சென்றிருந்தபோது, காசநோயால் பாதிக்கப்பட்டார். ஊர் திரும்பிய பிறகும் உடல்நிலை தேறவில்லை. மிகக் குறுகிய காலமே படைப்புலகில் இருந்தாலும் தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த புதுமைப்பித்தன் 42-வது வயதில் (1948) மறைந்தார். இவரது படைப்புகள் 2002-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

'கண்ணாள் கமலாவுக்கு சொ.வி எழுதுவது!' - தீராக்காதலைச் சுமந்த புதுமைப்பித்தன்

”புதுமைப்பித்தன் அவர்களின் வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம்: உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை” என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய ரகுநாதன் அந்நூலின் முகவுரையின் முதல் வரிகளாக எழுதினார். அவருடைய சொந்த வாழ்க்கை அத்தனை துயர் ததும்பும் ஓர் சோக காவியம்தான்.1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் நாள் கடலூர்-திரிப்பாதிரிப்புலியூரில் பிறந்த அவருக்கு அவரது தாத்தாவின் பெயரையே விருத்தாச்சலம் என்று சூட்டினார்கள். அவரது தந்தை சொக்கலிங்கம்பிள்ளை. ஆகவே அவர் சொ.வி. என்றழைக்கப்பட்டார். தாய் பர்வதத்தம்மாள் சொ.வி.க்கு எட்டு வயதாக இருக்கையில் காலமானார். தாயன்பு கிடைக்காமல் வளர்ந்த பையனுக்குத் தந்தை மறுமணம் செய்துகொண்ட, சிற்றன்னையின் புறக்கணிப்பு தாராளமாகக் கிடைத்தது.

12 வயதில் சொக்கலிங்கம்பிள்ளை தாசில்தார் பணியிலிருந்து ஓய்வு பெற்று, பிறந்த ஊரான திருநெல்வேலி சென்று தாமிரபரணி நதிக்கரையில் அமைந்த வண்ணார்பேட்டையில் குடியேறினார். பள்ளிப்படிப்பில் நாட்டமில்லாத புதுமைப்பித்தன் ‘ஒவ்வொரு வகுப்பிலும் ஆற அமர இருந்துதான் அடுத்த வகுப்புக்கு பாஸ் வாங்கினார்’. கல்லூரிக்குச் சென்ற காலை அவருக்குத் துப்பறியும் நாவல்கள் வாசிக்கும் ‘பித்து’ப் பிடித்தது. இரவெல்லாம் கண் விழித்து நாவல்களை வாசிப்பார். பாடப்புத்தகம்தான் படிக்கிறார் என்று சொக்கலிங்கம்பிள்ளை அக மகிழ்ந்திருப்பார். ரிசல்ட் வரும்போதுதான் உண்மை தெரியும். கல்லூரியில் ஒரு இனக்குழுத்தலைவர் போல புதுமைப்பித்தன் இருந்தார். அவருடைய குழுவுக்கே படிப்புக் கசந்ததால், கல்லூரிக்குப் பின்னால் இருந்த தென்னந்தோப்பில் இளநீர் திருடிக்குடிப்பது, தாமிரபரணி ஆற்று மணல் வெளியில் ராவெல்லாம் சுகநித்திரை செய்வது, ஆற்றுமணல் வெளிக்குப் போகாத நாள்களில் ஆற்றங்கரையிலுள்ள மாந்தோப்புச் சுடுகாட்டுக்குச் சென்று அங்கேயே திருப்பள்ளி கொள்வது என்று தங்கள் வாழ்முறையை அமைத்துக்கொண்டனர். இந்தப் பித்தனைச் சுற்றி, பூத கணங்கள் போல அவருடைய நண்பர்கள் குழாம் சுடலைக்குச் சென்றதாக ரகுநாதன் எழுதுகிறார்.

“ எனது சொந்த ஊரிலிருந்து வந்து வெகு நாள்களாகி விட்டது.


ஊர் ஆசை என்பது கட்குடி மாதிரி ஒரு போதை வஸ்து. அந்த ஆசை வந்து விட்டால் அதற்கு மாற்றுக்கிடையாது. போய்த்தான் தீர வேண்டும். இந்த ஊர்ப்பித்தம் காதலைப்பார்க்கிலும்,தேச பக்தி,கடவுள் பக்திகளைப் பார்க்கினும் மிகக் கொடூரமானது. அதன் ஏகச் சக்ராதிபத்தியம் மனத்தில் என்னென்ன கனவுகளையெல்லாம் எழுப்பும், தெரியுமா?”

என்று தொடங்கும் புதுமைப்பித்தனின் ‘சாயங்காலத்து மயக்கம்’ சிறுகதையில் இந்த அனுபவத்தின் சாயையைக் காணலாம்.


ஆகவே எந்த அவசரமும் இல்லாமல் படித்து, தன்னுடைய 25 ஆவது வயதில் பி.ஏ.படிப்பை முடித்தார். அன்றைக்கு 25 வயதாகிவிட்டால் சர்க்கார் வேலை கிடைக்காது. மகனை தாசில்தார் ஆக்கிப்பார்க்க ஆசைப்பட்ட சொக்கலிங்கம்பிள்ளை ஏமாந்தார். சரி,ஒரு வக்கீலாகவாச்சும் ஆக்கிப்பார்க்கலாம் எனத் திட்டமிட்டார். திருவனந்தபுரத்தில் சட்டக்கல்லூரி இருந்ததால்,அங்கேயே ஒரு பொண்ணைப் பார்த்துக் கல்யாணங் கட்டிக்கொடுத்து படிக்க வைக்கலாம் என நினைத்தார்.

“திருவனந்தபுரத்தில் மராமத்து இலாகா சூபர்வைசராக இருந்த பி.டி.சுப்பிரமணிய பிள்ளையின் குமாரத்தி கமலாம்பாளைப் புதுமைப்பித்தனுக்கு மணம் பேசி முடித்தார் சொக்கலிங்கம்பிள்ளை…..இந்தக் கல்யாணத்தைப் பற்றிப் புதுமைப்பித்தன் ஒருமுறை என்னிடம் ரசமாகச் சொன்னார்.”அந்த வயசிலே நான் ஆற்றுக்குப் போகும்போது( கழிப்பறை செல்வது) சுருட்டுப் பிடிப்பது வழக்கம்.அன்றைக்கு அவசரம். சுருட்டை எடுத்து மடியில் கட்டிக்கொண்டு மாடியை விட்டிறங்கி ஆற்றுக்குக் கிளம்பினேன். அப்பா இடைமறித்து, கல்யாண விஷயத்தைச் சொன்னார். எனக்கு நின்று பேச நேரமில்லை. சரி, ஆகட்டும் என்று சொல்லிவிட்டுப் போனேன். கல்யாணம் நிச்சயமாகிவிட்டது. பெண்ணைப்பார்த்ததும் அவள் கண்கள் எனக்குப் பிடித்துப்போய்விட்டன. அந்தக் கண்களுக்காகவே அவளைக் கல்யாணம் பண்ணிக்கொண்டது சரி என்று பட்டது. கமலாவை நான் கண்ணா என்றுதான் அழைப்பேன்: கண்ணாள் என்றுதான் கடிதம் எழுதுவேன்” (புதுமைப்பித்தன் வரலாறு-ரகுநாதன்)

இன்று ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்ததும் உன் கடிதம் எனக்குக் கிடைத்தது. நான் இந்தக் கடிதத்தை இரண்டு மூன்று தினங்களாகவே எதிர்பார்த்து, எதிர்பார்த்து வந்ததினால் அதில் வாசிக்க ரொம்ப ஆவல். உன் மனச்சுமையையும், சங்கடத்தையும் கண்டு மனம் கலங்கி விட்டது………உனக்கு அங்கு இருக்கும் நிலைமையும்,சுற்றியுள்ளோர் பிடுங்கித் தின்பது போலப் பேசுவதும் எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொரு நிமிஷமும் நினைத்துக்கொண்டுதான் வருகிறேன்……நீ எதற்கும் கோபப்பட்டுக்கொண்டு (அங்கே) தனி வீடு பார்த்து இருக்க வேண்டியதில்லை.கண்ணா இந்த வார்த்தைகளை எழுதும்போது உனக்கு நேர்ந்த அவமானம் எனக்கும் என்றுதான் நினைத்து எழுதுகிறேன். மனசைச் சஞ்சலப்படுத்திகொள்ளாதே. இதுவரை சுற்றுப்புறக் கடன்கள் இருந்ததைத் தீர்த்து வந்தேன். இங்கு வந்த பிற்பாடாவது கவலை இல்லாமல் நீ இருக்க வேண்டாமா? அதுதான் என் ஆசை, கனவு எல்லாம். உனக்குத் தூக்கம் வராததைப் போலத்தான் எனக்கும். இவ்வளவு வேலைக்கப்புறமும் மனசு உனது கஷ்டத்தில் சுற்றிச் சுற்றி விழுந்து கொண்டே கிடக்கிறது……ஐந்நூறு மைலுக்கு அப்பால் இருந்தாலும் எனது கைத்தாங்குதலில் இருக்கிறோம் என்ற தெம்பு ஏற்பட்டால், உனக்கு இந்த மனச் சங்கடங்கள் ஜாஸ்தியாகாமல் குறைத்துக்கொள்ள முடியும். மறுபடியும் நாளைக்குக் கடிதம் எழுதுகிறேன்.

ஆயிரம் முத்தங்கள்.


இப்படிக்கு,

உனதே உனது


சொ.வி..

(கண்மணி கமலாவுக்கு-புதுமைப்பித்தன் கடிதங்கள் தொகுப்பு-சாந்தி பிரசுரம் –தொகுப்பு-இளையபாரதி)


புதுமைப்பித்தனின் பொருளாதார நிலையையும்,காசில்லாத காரணத்தால் இருவரும் சேர்ந்து வாழ முடியாமல் அவர் நெல்லையில் உறவினர் வீட்டிலும் இவர் சென்னையிலும் வாழ்ந்த கொடுமையையும்,இதையெல்லாம் மீறிய அவர்களுக்கிடையிலான அளவற்ற காதலையும் சொல்ல இந்த ஒரு கடிதம் போதும்.

1931 ஜூலையில் திருமணம்.1948 ஜூன் 30 இல் புதுமைப்பித்தன் மறைந்தார்.17 ஆண்டுகால மண வாழ்க்கையில் அவர்கள் இருவரும் சேர்ந்திருந்த காலத்தை விட பொருளாதாரக் காரணத்தால் (மட்டுமே) அவர்கள் பிரிந்திருந்த காலமே அதிகம்.தொலைபேசியும் அதிவேக போக்குவரத்தும் இல்லாத அந்த நாள்களில் கடிதங்களே தூரங்களை இணைக்கும் ஒரே வழியாக இருந்தன. கஷ்டம் கஷ்டம் எனக் கஷ்டத்தைத்தவிர வேறெதையும் அனுபவித்திருக்காவிட்டாலும் புதுமைப்பித்தன் மீது அவரது துணைவியாருக்கு எந்தப் புகாரும் இருந்ததில்லை.


ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் எழுத்தாளர் சங்க மாநாடு சென்னையில் நடைபெற்றபோது புதுமைப்பித்தன் வீட்டுக்குப் போயிருந்தோம். நடமாட்டம் குறைந்து அடுத்த அறையில் படுத்த படுக்கையாக இருந்த கமலா அவர்கள் ”எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள்” என்று அவர்களின் மகள் தினகரி சொன்னதும் தன்னை எழுப்பி நல்ல சேலை உடுத்திவிடச்சொல்லிக் கைத்தாங்கலாக மகள் தோளைப்பிடித்தபடி எங்களைச் சந்திக்க கூடத்துக்கு வந்தார். எங்களை எல்லாம் சந்தித்ததில் அவருக்கு அத்தனை மகிழ்ச்சி. அவங்க இருந்தப்போ எழுத்தாளர் மாநாட்டுக்கு என்னை அழைத்துப்போயிருக்கிறார் என்று பெருமையுடன் கூறினார். அப்போது அவருக்குப் புதுமைப்பித்தன் எழுதிய கடிதங்கள் எதுவும் அச்சில் வெளியாகியிருக்கவில்லை. 1994இல்தான் கடிதத்தொகுப்பு வந்தது.

ஆனாலும், புதுமைப்பித்தனைப் பற்றிய பேச்சு அவரது முகத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை நாங்கள் கவனிக்க முடிந்தது. கனிவும் ஏக்கமும் சற்றே நாணமும் பெருமிதமும் பேரானந்தமுமாக மாறி மாறி ஒளிர்ந்த அம்முகம் இன்றைக்கு நினைத்தாலும் மன நடுக்கத்தை ஏற்படுத்துவதாயிருக்கிறது எனக்கு.


புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் உச்சமான கதைகள் என்று ஒரு பத்துக்கதையை எடுத்தால் அதில் நிச்சயம் இடம் பெறும் கதையாக ’செல்லம்மாள்’ இருக்கும்.

”செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது. நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலேயே, உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள்” எனத்துவங்கும் செல்லம்மாள் கதை ஒரு காதல் காவியம். தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்த இடம் பெற்ற ஒரு காதல் காவியம்தான். வாசிக்கும் எவரையும் உருக்கி விடும் கதை அது. செல்லம்மாளுக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்று சொல்லி விடலாம். ஆனால் அதை விடவும் மனதை உருக்கும் காதல் காவியமாக புதுமைப்பித்தன் அவருடைய இணையர் கமலாவுக்கு எழுதிய கடிதங்கள் இருக்கின்றன.

தகப்பன் பேச்சைக் கேட்காத பிள்ளையாகத்தான் புதுமைப்பித்தன் வளர்ந்தார். தகப்பனும் சாமானியப்பட்டவரல்ல. சல்லிக்காசு தர முடியாதென்று நள்ளிரவில் புதுமைப்பித்தனையும் கமலாவையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டவர். உண்மையில் நடுத்தெருவில் நின்றார்கள் இருவரும்.

அதன்பிறகுதான் புதுமைப்பித்தன் தன் மனதுக்குப் பிடித்த பத்திரிகை/எழுத்துப்பணி தேடி சென்னைக்குக் கிளம்பியது.மணிக்கொடி, தினமணி இதழ்களில் முதலில் பணியாற்றினார். பாரதியின் சரித்திரத்தை எழுதிய வ.ரா அவர்களும் டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களும் கை கொடுத்து உதவினர். போதாத வருமானத்தில் நிறைவான எழுத்து வாழ்க்கையை நடத்தினார் புதுமைப்பித்தன்.

ஒருநாள் கழிந்தது   "நேரமாகிறது, மவுண்டில் ஒரு நண்பரைப் பார்க்க வேண்டும்!" என்று எழுந்தார் சுந்தரம். "அதற்குள்ளாகவா! வெற்றிலை போட்டுக் கொண்டு போகலாம்!" என்றார் முருகதாசர்.

     "கையில் எடுத்துக் கொண்டேன். நேரமாகிறது! அப்புறம் பார்க்கிறேன்!" என்று சொல்லிக் கொண்டு வெளியேறினார் சுந்தரம். கையில் இருந்த புகையிலையை வாயிற் ஒதுக்கிவிட்டு, சிறிது சிரமத்துடன் தமக்கு நேரமாவதைத் தெரிவித்துக் கொண்டார் சுப்பிரமணிய பிள்ளை.

     தொண்டையைச் சிறிது கனைத்துக் கொண்டு, "சுப்ரமண்யம், உங்களிடம் ஏதாவது சேஞ்ஜ் இருக்கிறதா? ஒரு மூன்று ரூபாய் வேண்டும்!" என்றார் முருகதாசர்."ஏது அவசரம்!"

     "சம்பளம் போடலே: இங்கு கொஞ்சம் அவசியமாக வேண்டியிருக்கிறது…திங்கட்கிழமை கொடுத்துவிடுகிறேன்!"
"அதற்கென்ன!" பர்ஸை எடுத்துப் பார்த்துவிட்டு "இப்போ என் கையில் இதுதான் இருக்கிறது!" என்று ஓர் எட்டணாவைக் கொடுத்தார் சுப்பிரமணியம்.

     "இது போதாதே!" என்று சொல்லி, அதையும் வாங்கி வைத்துக் கொண்டார் முருகதாசர்.


     "அப்பொ…" என்று மீண்டும் ஏதோ ஆரம்பித்தார்.

     "பார்ப்போம்! எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது" என்று சுப்பிரமணியமும் விடை பெற்றுச் சென்றார்.


     முருகதாசர் தமது ஆஸ்தான அறையின் சிம்மாசனமான பழைய கோரைப் பாயில் உட்கார்ந்து கொண்டு, அந்த எட்டணாவைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டு, நீண்ட யோசனையில் ஆழ்ந்திருந்தார்.

     "அங்கே என்ன செய்யறீங்க?" என்று மனைவியின் குரல்!


     "நீதான் இங்கே வாயேன்!"

     கமலம் உள்ளே வந்து, "அப்பாடா!" என்று உட்கார்ந்தாள். அவர் கையில் இருக்கும் சில்லறையைப் பார்த்துவிட்டு, "இதேது?" என்றாள்.


     "சுப்பிரமணியத்திடம் வாங்கினேன்!"

     "உங்களுக்கும்… வேலையில்லையா?" என்று முகத்தைச் சிணுங்கினாள் கமலம். பிறகு திடீரென்று எதையோ எண்ணிக்கொண்டு "ஆமாம், இப்பத்தான் நினைப்பு வந்தது. நாளைக்குக் காப்பிப் பொடியில்லை. அதெ வச்சு வாங்கி வாருங்களேன்!" என்றாள்.


     "அந்தக் கடைக்காரனுக்காக அல்லவா வாங்கினேன்! அதைக் கொடுத்துவிட்டால்?"

     "திங்கட்கிழமை கொடுப்பதாகத்தானே சொன்னீர்களாம்!"


     "அதற்கென்ன இப்பொழுது!"

     "போய்ச் சீக்கிரம் வாங்கி வாருங்கள்!"


     "திங்கட்கிழமைக்கு?"

     "திங்கட்கிழமை பார்த்துக் கொள்ளுகிறது!"

புதுமைப்பித்தன் தன் கதையைத்தான் ’ஒரு நாள் கழிந்தது’ என்று எழுதியிருப்பார் போலும். நாளை மற்றொரு நாளே என்று ஜி.நாகராஜன் எழுதியதைப்போல அன்றன்றையப் பொழுதைக் கழிப்பதே போராட்டமாக இருந்த வாழ்வே அவருக்கு லபித்தது.

ஆனால் தமிழ்ச் சிறுகதைக்கு உருவமும் உள்ளடக்கமும் கொடுத்து மூச்சுக்காற்றை வாய் வைத்து ஊதி உயிர் கொடுத்தவர் புதுமைப்பித்தன் தான் என்பதை எத்தரப்புச் சிந்தனைப்பள்ளிகளைச் சேர்ந்தவர்களும் மறுக்கவில்லை. புதுமைப்பித்தன் தீவிரமாக சிறுகதையில் இயங்கிய 1930-40 கால கட்டத்தில் தமிழ் இலக்கியச் சூழலில் எது இலக்கியம்? எது கதை?எது கலை- எது பிரசாரம்? என்கிற அனல் பறக்கும் விவாதங்களில் உற்சாகமாகப் பங்கேற்றவர் புதுமைப்பித்தன். இலக்கியத்தின் நோக்கம் சமூகத்தைச் சீர்திருத்துவது அல்லது உய்விப்பது அல்ல என்கிற அணியில் நின்றவர் அவர். மணிக்கொடி இலக்கியவாதிகளின் பொதுவான சார்பு இதுவாகத்தான் அன்று இருந்தது . ”அவனவனுடைய ஆத்ம திருப்திக்காக எழுதிக்கொள்வதை விட விவேகமான காரியம் வேறு எதுவும் கிடையாது” என்று ஒரு கடிதத்தில் புதுமைப்பித்தன் குறிப்பிட்டுள்ளதாக ஆய்வாளர் ராஜ்கவுதமன் எழுதுகிறார்.மற்றவகை எழுத்துக்களைப்போல இலக்கியத்தை ஒரு தர்க்கத்துக்குள் அடக்க முடியாது என்கிற பார்வையும் அவருக்குண்டு.


“கலை, தர்ம சாஸ்திரம் கற்பிக்க வரவில்லை….பத்துத்தலை ராவணனும், ஆறுதலை சுப்பிரமணியனும் உடற்கூறு நூலுக்குப் புறம்பான அபத்தமாக இருக்கலாம்: ஆனால் ஒரு கொள்கையை, இலட்சியத்தை உணர்த்தக்கூடியது. அதுதான் கலையின் லட்சியம்” என்றார் அவர்.

எந்த இஸத்திற்குள்ளும் தன் மனதைப் பதியனிடாமல் சுத்தமான இலக்கியவாதியாகத்தான் அவர் இருக்க விரும்பினார்.

“கொள்கை என்பது உயரத் தூரத்தில் தூக்கிப்பிடித்த தீபந்தம் போல் எட்ட இருப்பதாலேயே வெளிச்சம் விழுகிறது.அது எட்ட இருப்பது அவசியம்” என்று தெளிவான பார்வை கொண்டிருந்தார்.ஆனாலும் தன் சமகாலத்து நிகழ்வுப்போக்குகளுக்குத் தன் படைப்புகளில் முகம் கொடுக்க அவர் தயங்கியதில்லை.

அவர் இயங்கிய 1930-40 காலம் என்பது உலக அளவில் முதலாளித்துவம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருந்த காலகட்டம். உலகப் பொருளாதாரப் பெரு மந்தம் எனப்பட்ட The Great Depression காலகட்டம் அது. ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் சுமையை மூன்றாம் உலக நாடுகளின் மீது இறக்கி வைக்க, அது எளிய மக்களை மேலும் வறியவராக்கி மூச்சுத்திணற வைத்துக்கொண்டிருந்த காலம். நகரங்கள் எனும் பெரும் சந்தைகள் எழுந்துகொண்டிருந்த காலம். முதலாளித்துவத்துக்கு மாற்றாக சோவியத் நாடு ’திட்டமிட்ட பொருளாதாரம், இயற்கை வளங்கள் பொதுவுடைமையில்’ என்கிற நடப்பை முன்வைத்து முன்னேறிக்கொண்டிருந்த காலமாகவும் இருந்தது.


” பட்டணத்திலே மாவிலைகூட காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும்.”என்ன,மாவிலைக்குமா விலை?”என்று பிரமித்துப்போகாதீர்கள்! மாவிலைக்கு விலையில்லை என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால்,மரத்தில் ஏறிப்பறித்து,வீடு தேடிக் கொணர்ந்து கொடுப்பதற்குக் கூலி கொடுக்க வேண்டுமா இல்லையா? நாங்கள் படித்த பொருளாதார சாஸ்திரப்படி இந்த ‘உழைப்பின் மதிப்பை’ அந்த இலையின் மீது ஏற்றி வைத்துப் பார்க்க வேண்டும்.இதுதான் விலை என்பது”

என்று புதுமைப்பித்தன் தன்னுடைய விநாயக சதுர்த்தி என்கிற சிறுகதையில் எழுதுகிறார். கூலி, விலை, லாபம் போன்றவற்றின் அடிப்படைகளை விளக்கும் மார்க்ஸியப் பார்வையை உள் வாங்கியவராகத்தான் அவர் இருந்திருக்கிறார்.


குறைந்த எண்ணிக்கையில் தொழிலாளிகளை வைத்து அதிக நேரம் வேலை வாங்கி அந்த உபரி உழைப்பில் உருவாகும் சொத்தைத் தனக்கான லாபமாக முதலாளி எடுத்துச் செல்லும் முதலாளித்துவப் பொருளாதார அடிப்படைகளைப்பற்றிக்கூட வெளிப்படையாகத் தன் கதைகளில் எழுதினார். ’தியாக மூர்த்தி’ சிறுகதைக்கு உள்ளேயே அதை வைத்து எழுதுகிறார்:

“ பொருளாதார மந்தம் என்று நீட்டி முழக்கிச் சாய்மான நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அடித்து விளாசுகிறார்களே, அதுவும் வந்தது. அதைப்பற்றிய தத்துவங்கள், காரணங்கள் எல்லாம் உமக்கும் எனக்கும் பத்திப் பத்தியாக நுணுக்கமாக எழுதத்தெரியும்:பேசவும் தெரியும்.ராமனுஜலு நாயுடுவுக்குத் தெரிந்தது போல் நமக்கு ஸ்பஷ்டமாகத் தெரியாது…..அவருடைய சிக்கனக்கத்தி விழுந்தது. பத்துப்பேர் வெளியே போக வேண்டியிருந்தது. அதில் ராமசாமிப்பத்தரும் ஒருவர். கெஞ்சினார்கள்: கூத்தாடினார்கள். பத்துரூபாய்-பாதிச் சம்பளம்-கொடுத்தால்கூடப் போதும் என்றார்கள். ராமானுஜுலு நாயுடு சத்திரம் கட்ட வரவில்லையே!” என்று எழுதும் புதுமைப்பித்தன் நல்ல பால் கறக்கும் மாட்டை கண்ணும் கருத்துமாகக் கவனிப்பதும் மாடு கிழடாகி, வறண்டு போய்விட்டால் தோல் விலைக்கு வந்தால் சரிதான் என்று தள்ளி விடுவதையும்போலத்தான் முதலாளி தொழிலாளியை நடத்துவான் என அக்கதையில் விளக்குவார். வேலையிழந்த தொழிலாளியான ராமசாமி பத்தர் கதையின் முடிவில் முதலாளி தனியாக இருக்கும்போது பணத்தைப் பறிக்க முயன்று கைதாகிச் சிறை செல்கிறார். அதைப்பற்றி எழுதும்போது தொழிற்சங்கத்தையும் ஒரு இடி இடிக்கிறார் புதுமைப்பித்தன்.

“பலவந்தத் திருட்டுக் கேஸாகியது. ஆறு மாசக் கடுங்காவல். பத்தர் பாடு கவலையற்ற சாப்பாடு. எந்தத் தொழிலாளர் சங்கம் திருட்டுத் தொழிலாளியின் குடும்பத்துக்கு இந்த மாதிரி உதவி செய்ய முடியும்?நியாயமான உலகமல்லவா?”

பொருளாதாரப்பார்வை போல சாதியம்,பெண்ணடிமைத்தனம் குறித்தும் புதுமைப்பித்தனின் கதைகள் மிகக்கூர்மையான மொழியில் பேசுகின்றன. அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளை, வாழ்வின் முரண்பாடுகளை, சமூகத்தின் கையாலாகத்தனத்தை, தமிழ்ச்சமூகத்தின் பொறுப்பற்ற தன்மையை புதுமைப்பித்தன் அளவுக்குச் சிறுகதைகளில் உரித்துத் தொங்கப்போட்டவர்கள் யாருமில்லை.
”கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே இதுதானய்யா பொன்னகரம் ” என்று பொன்னகரம் கதையை முடிக்கிற தொனி.

” அதோ மூலையில் சுவரின் அருகில் பார்த்தீர்களா? சிருஷ்டித்தொழில் நடக்கிறது. மனிதர்களா, மிருகங்களா? நீங்கள் போட்டிருக்கிறீர்களே பாப்லின் ஷர்ட்டு,உங்கள் ஷெல் பிரேம் கண்ணாடி! எல்லாம் அவர்கள் வயிற்றில் இருக்க வேண்டியதைத் திருடியதுதான். ரொம்ப ஜம்பமாக, நாஸூக்காகக் கண்ணை மூட வேண்டாம். எல்லாம் அந்த வயிற்றுக்காகத்தான்” என்று வாசகரின் மூஞ்சியிலறையும் தொனி.(கவுந்தனும் காமனும் –சிறுகதை) இதுதான் புதுமைப்பித்தனின் தனித்த முத்திரை.


புராணக்கதைகளை மறுவாசிப்புச் செய்து மறு படைப்பாக்குவதில் ஆர்வம் காட்டிய புதுமைப்பித்தன் பல கதைகளில் காவியப்பாத்திரங்களைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்திக் கேள்வி கேட்கும்போதும் இதே தொனியில்தான் சவட்டி அடிப்பார்..கௌதம முனிவரின் மனைவி அகல்யையை ஏமாற்றிப் பாலியல் வன்முறை செய்யும் இந்திரன் கதையை அகல்யை என்கிற சிறுகதையில் சொல்லும்போது பக்கத்தில் கிடந்த தடியால் இந்திரன் மண்டையை அடித்து அகல்யை அவனை உதறித்தள்ளுவதாக எழுதுகிறார்.கௌதமர் வந்து எல்லாம் கை மீறி விட்டதைப் பார்த்து ”அப்பா இந்திரா! உலகத்துப்பெண்களைச் சற்று சகோதரிகளாக நினைக்கக் கூடாதா?” என்று நேருக்கு நேர் கேட்கிறார்.

சாப விமோசனம் என்கிற கதையில் சீதையை ராமன் தீக்குளிக்கச் சொன்ன கதையை அகலிகையிடம் சீதை சொல்லிக்கொண்டிருக்கும்போது அகலிகை,


“அவர் கேட்டாரா?நீ ஏன் செய்தாய்? என்று கேட்டாள்.

அவர் கேட்டார்.நான் செய்தேன்” என்றாள் சீதை,அமைதியாக.


“அவன் கேட்டானா?என்று கத்தினாள் அகலிகை.அவள் மனசில் கண்ணகி வெறி தாண்டவமாடியது.

அகலிகைக்கு ஒரு நீதி. அவனுக்கு ஒரு நீதியா?”

ராமனை அவர் என விளித்த அகலிகை அவன் என விளிக்கும் அளவுக்குப் படைத்துக்காட்டுகிறார் புதுமைப்பித்தன்.

சுந்தரராமசாமி குறிப்பிடுவது போல,” தனக்கு அதிர்ச்சியும் ஏமாற்றமும் தந்த அனுபவங்களைப் படைப்புக்குள் கொண்டுபோகும்போது மொழியில் ஓலமிடுபவர் அல்ல புதுமைப்பித்தன்.தான் நன்கு அறிந்திருக்கும் விஷயங்களை வாசகர், தம் சுரணை கெட்ட தனத்தால், இன்னும் புரிந்து கொள்ளாதிருக்கும் நிலை தன் பொறுமையைச் சோதிப்பது போன்ற பாவனையை அவர் பல கதைகளிலும் மேற்கொண்டிருக்கிறார். குத்தலும் கிண்டலும்தான் அவரது சொல்முறைகள்…அனைத்து விமர்சன அதிர்வுகளையும் வாசகனின் தார்மிக ரோஷத்தைத் தூண்டும் வகையில் செலுத்திக்கொண்டிருப்பதே படைப்பாளியின் பணி”

புதிய நந்தன் சிறுகதையில் நந்தன் பிறந்த ஊரான ஆதனூரின் பறைச்சேரி பற்றி அவர் விவரிக்கும் தொனி வாசகனை தொந்தரவுக்குள்ளாக்கும் :

“நந்தா சாம்பானை நந்த நாயனாராக்க, சிதம்பரத்தில் அக்கினிப் புடம் போட்ட பின்னர்வெகு காலம் சென்றது. அந்தப் பெருமையிலேயே ஆதனூர் சந்தோஷ அல்லது துக்க சாகரத்தில் மூழ்கி அப்படியே மெய்மறந்தது. இங்கிலீஷ் சாம்ராஜ்யம் வந்த சங்கதி கூடத் தெரியாது. அப்படிப்பட்ட நெடுந்தூக்கம். இப்பொழுது ஆதனூரிலே ரயில்வே ஸ்டேஷன்,வெற்றிலை பாக்குக் கட என்ர ஷப்பு.காப்பி ஹோட்டல் என்ற இத்யாதி சின்னங்கள் வந்துவிட்டன.எப்படி வந்தன என்ர சமாசாரம் யாருக்கும் தெரியாது.

ஆனால் நந்தன் பறைச்சேரியில் விடைபெற்றுக் கொண்ட பிறகு பறைச்சேரிக்கு என்னமோ கதிமோட்சம் கிடையாது. பழைய பறைச்சேரிதான். பழைய கள்ளுக்கடைதான்….சேரிப்பறையர்கள் ஆண்டையின் அடிமைகள், அத்துடன் அவர்களுக்குத் தெரியாத வெள்ளைத்துரையின் அடிமைகள்”

முதலாளித்துவமும் ,அதன் நுகர்வுக்கலாச்சாரமும்,நகரங்களின் எழுச்சியும் காந்தியமும்,தேசியமும் பகுத்தறிவும் வேகமாகப் பரவிக்கொண்டிருந்த அந்தக் காலத்தில் புதுமைப்பித்தன் தனித்து நின்று தம் படைப்புகள் வழியாக அவற்றை விமர்சிக்கின்ற திராணி பெற்றிருந்தார் எனத் தமிழின் மிக முக்கியமான ஆய்வாளரான ராஜ்கவுதமன் கணிக்கிறார்.

புதுமைப்பித்தனின் ஒவ்வொரு கதையும் அவரது மேதமையின் வெளிச்சம் பெற்ற கதைதான். ஆனாலும் தமிழராகப் பிறந்த ஒவ்வொரு மனிதரும் மனுஷியும் அவசியம் வாசித்தே ஆக வேண்டிய கதைகள் என செல்லம்மாள், துன்பக்கேணி, சிற்பியின் நரகம், கோபாலய்யங்காரின் மனைவி, பால்வண்ணம் பிள்ளை, கலியாணி, ஒருநாள் கழிந்தது, காலனும் கிழவியும், மகாமசானம், காஞ்சனை, கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், கயிற்றரவு போன்ற கதைகளைக் குறிப்பிடுவேன்.

புதுமைப்பித்தனின் வாழ்க்கையில் பொருளாதார கஷ்டம் இல்லாமல் வசந்தம் வீசியது 1946 என்கிற ஒரே ஒரு ஆண்டில் மட்டும்தான்.அந்த ஆண்டில் அவர் சினிமாவுக்கு வசனம் எழுதப்போனார். அவ்வையார் படத்தில் தொடங்கி பாகவதரின் ராக முக்தி வரை அது தொடர்ந்தது.ஆனால் அது ஒரு பேயைப்போல அவரை ஆட்டுவித்து அலைக்கழித்தது.சொந்தச் சினிமாக்கம்பெனி ஆரம்பிக்கும் பித்துப் பிடித்து கையில் சேர்ந்த பணத்தையும் அதில் இழந்து மீண்டும் ஓட்டாண்டி ஆனதோடு காசநோயின் கரங்களில் நிரந்தரமாகச் சிக்கிக்கொண்டார்.புனே நகரத்தில் வியாதியோடு தனிமையில் சீரழிந்து நம்பியவர்களால் ஏமாற்றப்பட்டு சாவதற்காகவே மனைவியும் மகளும் வாழ்ந்துகொண்டிருந்த திருவனந்தபுரம் திரும்பினார்.

அவரே எழுதிய மகா மசானம் கதையில் வருவதுபோல ,

    ” அப்பொழுது அவன் ரஸ்தாவின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் படுத்துச் சாவகாசமாகச் செத்துக் கொண்டிருந்தான்.

     சாவதற்கு நல்ல இடம். சுகமான மர நிழல். வெக்கை தணிந்து அஸ்தமனமாகிவரும் சூரியன். "ஜே ஜே" என்ற ஜன இயக்கம். ராஜ கோலாகலம் என்று தான் சொல்ல வேண்டும்.

     அப்பொழுது அவன் செத்துக் கொண்டிருந்தான்; சாவகாசமாகச் செத்துக் கொண்டிருந்தான்.

     ஜனங்கள் அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்தார்கள்; வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தெரியாது; சிலர் தெரிந்துகொள்ள விரும்பவில்லை”

தன்னைக் காப்பாற்றப் பொருளுதவி செய்யும்படி தமிழ்ச் சமூகத்தை நோக்கி கரம் உயர்த்திய புதுமைப்பித்தனை அன்று தமிழ்ச்சமூகம் கண்டுகொள்ளவில்லை.அவன் குரலைச் செவிமடுக்கவில்லை.

பரங்கிப்புண்ணைப் பரிசாகப் பெற்றுத் ”துன்பகேணி”யில் சிதைந்துபோன மருதியைப்போலப் புதுமைப்பித்தன் மனம் சிதைந்து மடிந்தார்.

பிரேதமாகக் கிடந்த புதுமைப்பித்தனின் நெற்றியை வாஞ்சையுடன் வருடிக்கொடுத்தார் கமலா. எழுதி எழுதி வீங்கிப்போன புதுமைப்பித்தனின் வலது கையைத் தன் நெஞ்சோடு அணைத்து மாறி மாறி முத்தமிட்டார்.காலமெல்லாம் கடிதங்களிலேயே வாழ்ந்து முடித்த தன் அருமைக் கண்ணாளின் ஆசை முத்தத்துடன் நம்மிடமிருந்து விடைபெற்றார் புதுமைப்பித்தன்.




இருபதாம் நூற்றாண்டில் தமிழ்க் கவிதைக்குப் புதுமையும் புத்துயிரும் தந்தவர் பாரதியார்; தமிழ் உரைநடைக்குப் புதுமையும் புத்துயிரும் கொடுத்தவர் புதுமைப்பித்தன்! "புதுமைப்பித்தன் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய உலகிலே ஒரு தனி ஜாதி; தனி ஜோதி' என்பார் "புதுமைப்பித்தன் வரலாறு' படைத்த ரகுநாதன். சிறுகதை ஆசிரியர், உரைநடை ஆசிரியர், கவிஞர், பத்திரிகை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் புதுமைப்பித்தனுக்குப் பல பரிமாணங்கள் உண்டு. இக்கட்டுரை புதுமைப்பித்தனை ஒரு நகைச்சுவையாளராக அடையாளம் காட்ட முற்படுகின்றது.

நகைச்சுவை உணர்வு (SENSE OF HUMOUR) என்பது புதுமைப்பித்தனுக்கு  கூடப் பிறந்த ஒன்று; அவரது இரத்தத்திலேயே ஊறிக் கிடந்த பண்பு. கல்லூரி நாட்களில் புதுமைப்பித்தன் ஒரு குறும்புக்கார இளைஞர்; பாரதியாரின் மொழியில் சுட்ட வேண்டும் என்றால், "தீராத விளையாட்டுப் பிள்ளை!' 

ஒருமுறை அவர் தமது ஆசிரியர் ஒருவரைப் பற்றிக் கல்லூரிக் கரும்பலகையில் கிண்டலாக எழுதி வைத்து விட்டார். அந்த ஆசிரியர் பல்லாண்டு  காலமாக திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பணியாற்றி வந்த வி.பொன்னுசாமிப் பிள்ளை; கல்லூரியின் துணைமுதல்வர்; வரலாற்றுப் பேராசிரியர். புதுமைப்பித்தன் எழுதி வைத்த குறிப்பு இதுதான்:
MUSSOLINI IS THE DICTATOR OF ITALY;
OUR V.P. IS THE DICTATOR OF NOTES
பேராசிரியர் பொன்னுசாமிப் பிள்ளையிடம் வரலாற்று மாணவர்களாகப் பாடம் பயின்றவர்களுக்கு இந்த நகைச்சுவையில் புதைந்து கிடக்கும் உண்மைக் குறிப்பு மிகவும் சுவைக்கத் தக்கதாக இருக்கும்! முஸோலினி இத்தாலியின் சர்வாதிகாரி;பேராசிரியர் வி.பி.யோ வகுப்பறையில் "நோட்ஸ்' ஒப்புவிப்பவர் "டிக்டேட்டர்' என்ற ஆங்கிலச் சொல்லை இங்கே சிலேடையாகக் கையாண்டு அருமையான நகைச்சுவையைத் தோற்றுவித்துள்ளார் புதுமைப்பித்தன்.  "வி.பி.' என்பது அப்படியே; வி.பொன்னுசாமிப் பிள்ளை என்பதற்கும், "வைஸ் - பிரின்ஸிபால்' என்பதற்கும் பொருந்தும்.

ஒரு நல்ல நகைச்சுவை என்பது முன்னரே திட்டமிட்டு, சொல்லி வைத்தாற் போன்று வருவதன்று;அது உரிய நேரத்தில், இயல்பாக வெளிப்படுவது. இதற்குப் புதுமைப்பித்தனின் தனிவாழ்வில் இருந்து பற்பல உதாரணங்களைக் காட்டலாம். பதச்சோறாக ஒன்று:

புதுமைப்பித்தனும் அவரது நண்பர் எழுத்தாளர் கு.அழகிரிசாமியும் 14-ஆம் நம்பர் பஸ்ஸுக்காக ஒரு ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார்கள். பஸ் வர நீண்ட நேரமாகிவிட்டது; சுமார் அரை மணி நேரம் கழித்து வந்தது.

"இது ஏன் இவ்வளவு நேரம் கழித்து வருகிறது?'' என்று கேட்டார் அழகிரிசாமி.

"அதுவா? இந்த பஸ்தான் இராமனைக் காட்டுக்குக் கொண்டு போய்விட்டு விட்டுத் திரும்பி வருகிற பஸ். நேரமாகத் தானே செய்யும்?'' என்றார் புதுமைப்பித்தன்.
கைகேயி வாங்கிய வரம் காரணமாக இராமன் 14 ஆண்டுகள் கானகம் செல்ல நேர்ந்த இராமாயணக் கதை தெரிந்தவர்களுக்கே இந்த நகைச்சுவையின் பொருள் விளங்கும்; நகைச்சுவையைப் புதுமைப்பித்தன் எந்த அளவிற்குப் பொருள் பொதியக் கையாள்கின்றார் என்பதும் புரியும்.

அங்கதம், எள்ளல், கடி, கிண்டல், குத்தல், கேலி, பகடி, நகைச்சுவை, நையாண்டி, வஞ்சப் புகழ்ச்சி என நகைச்சுவைக்குப் பல பரிமாணங்கள் உண்டு.

ஆங்கிலத்திலும் JOKE, HUMOUR, FUN, PUN, PARODY, SATIRE, WIT  எனப் பல வகைகள் உண்டு. இவற்றுள் புதுமைப்பித்தனின் நகைச்சுவை அறிவார்ந்த ஒன்று (WIT) ஆகும். பெரும்பாலும் அவரது நகைச்சுவைகள் உடனடியாகச் சிரிப்பை வரவழைப்பவை அல்ல; கூர்மையாகப் புரிந்து கொள்ளும் திறம் பெற்றவர்களே அவற்றைச் சுவைக்க முடியும்; அவை வெறும் சிரிப்பை மட்டுமன்றி, ஆழ்ந்த சிந்தனையையும் தூண்டுவதை உணர்ந்து கொள்ள இயலும்.

இவ்வகையில் குறிப்பிடத்தக்க ஒரு வாழ்க்கை நிகழ்ச்சிக் குறிப்பு இதோ:
ஒரு நாள் புதுமைப்பித்தனும் சில நண்பர்களும் ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றார்கள்.
"என்னப்பா சூடாக இருக்கிறது?'' என்று சர்வரைக் கேட்டார் புதுமைப்பித்தன்.
"இட்லி''
"சரி, கொண்டு வா''
சர்வர் இட்லியைக் கொண்டு வந்து வைத்தான்; ஆவி வந்து கொண்டிருக்கும் சூடான சாம்பார் தட்டு நிறைய நிரம்பியிருந்தது. புதுமைப்பித்தன் இட்லியைப் பிட்டார். அது ஆறிப்போன இட்லி. கொதிக்கிற சாம்பாரை அதன் மீது ஊற்றி அதற்குச் சூடேற்றும் வியாபார தந்திரத்தைக் கண்டுகொண்டார் புதுமைப்பித்தன்.

உடனே சர்வரைக் கூப்பிட்டார்.

"என்னப்பா, ஆத்மா குளிர்ந்து விட்டதே!'' என்றார்.

சர்வர் விழித்தான். "இல்லை, சாம்பார் தான் சுடுகிறது. இட்லி செத்துப் போச்சே!'' என்று தமக்கே உரிய பாணியில் அதற்கு விளக்கம் கூறினார் புதுமைப்பித்தன்.
ஒரு தேர்ந்த நகைச்சுவையாளர் வாழ்வின் எந்த நெருக்கடியான சூழ்நிலையையும் இலாகவமாக எதிர்கொண்டு விடுவார்; சாதுரியமாகச் செயல்பட்டுச் சமாளித்து விடுவார். இத்தகைய கடுமையான தருணங்கள் புதுமைப்பித்தனின் வாழ்வில் நிறையவே ஏற்பட்டன;
அவற்றை எல்லாம் அவர் தம் நகைச்சுவை உணர்வால் எளிதாக வெற்றி கொண்டார்.

புதுமைப்பித்தன் பத்திரிகையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலம். அப்போது அவருக்கு அச்சாக வேண்டிய புரூஃபுகள் எல்லாம் பார்வைக்கு வரும். புரூஃபை எவ்வளவுதான் கவனமாகப் பார்த்துக் கொடுத்தாலும், சமயங்களில் கம்பாஸிட்டர்கள் பிழைகளைத் திருத்தாமல் விட்டுவிடுவார்கள். இதைக் கண்டு எரிச்சலுற்ற புதுமைப்பித்தன் சமயங்களில் புரூஃபைப் பார்த்து முடித்து விட்டு, கடைசியில் "கடவுள் துணை!' என்று எழுதி விடுவார். கம்பாஸிட்டர் வந்து, "இதென்ன ஸôர்? கடவுள் துணையைக் கம்போஸ் செய்யவா?''  என்று கேட்டால், "இல்லையப்பா, நான் என்னால் ஆன மட்டும் பார்த்து விட்டேன். இனிமேலும் தவறு நேர்ந்தால், "கடவுள்தான் எனக்குத் துணை, நீ அல்ல' என்பதற்குத் தான் அப்படிப் போட்டேன்'' என்பார் புதுமைப்பித்தன்.

புதுமைப்பித்தனின் "நாசகாரக் கும்பல்' என்னும் கதையில் ஓர் இடம். அதன் தொடக்கத்தில் அவர், "மருதப்ப மருத்துவனாருடைய மனைவி இசக்கியம்மாள் காலமாகி வெகு காலமாகி விட்டது'' என்று எழுதியிருந்தார். கதையின் பிற்பகுதியில் மருதப்பன் அடிபடும் போது அவரது மனைவி அலறுவதாகவும்,

மனைவியின் கைத்தாங்கலில் மருதப்பன் சென்றதாகவும், பின்னர் மனைவியும் அவருமாக மதம் மாறியதாகவும் எழுதியிருந்தார். இங்கே புதுமைப்பித்தனின் ஞாபக மறதி காரணமாகக் கதையின் ஆரம்பத்தில் காலமாகிப் போன மனைவி, பிற்பகுதியில் உயிர் பெற்று எழுந்து வந்து விட்டாள்!

இதைப் பற்றிப் புதுமைப்பித்தனிடம் ஒருவர் கேட்டார்: "என்னய்யா இது? உங்கள் கதையில் செத்தவர்கள் கூடப் பிழைத்து விடுவார்களோ?''
புதுமைப்பித்தன் அதற்குச் சாதுரியமாகப் பதில் அளித்தார்: "வீணாக என்னால் ஒரு பெண் ஏன் சாக வேண்டும்? எனவே தான் அவளுக்கு உயிர் கொடுத்து விட்டேன்!''

வாழ்நாள் முழுதும் புதுமைப்பித்தனுடன் வறுமை ஓடி விளையாடிக் கொண்டிருந்தது; புதுமைப்பித்தனும் சலிக்காமல்- சளைக்காமல் - வறுமையுடன் மல்லுக்கட்டி வந்தார். ஆனால், வாழ்வின் எந்தக் கட்டத்திலும் புதுமைப்பித்தனை விட்டு நகைச்சுவை உணர்வு நீங்கவே இல்லை; நிழல் போல் அவருடன் கூடவே இருந்து வந்தது. சாவை எதிர்நோக்கி இருந்த அந்தக் கொடிய காலகட்டத்தைக் கூடப் புதுமைப்பித்தன் தமக்கே உரிய பாணியில் இப்படிக் குறிப்பிட்டார்:

"மணியார்டர் வந்தா, எவ்வளவு சந்தோஷமாயிருக்கும்? நான் இப்போ எனக்கு வரப்போகிற மணியார்டரைத் தான் எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன். புரியவில்லையா? சாவைத் தானப்பா நான் மணியார்டரை எதிர்பார்ப்பது போல எதிர்பார்த்திருக்கேன்'' "காலா என்னருகே வாடா! சற்றே உனைக் காலால் மிதிக்கிறேன்' என அஞ்சாமல் காலனுக்கே எச்சரிக்கை விடுத்தார் பாரதியார்; மூச்சுத் தொடரின் முற்றுப்புள்ளியான சாவையே மணியார்டரை எதிர்பார்ப்பது போல் மகிழ்வோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார் புதுமைப்பித்தன்! உண்மையில், "இடுக்கண் வருங்கால் நகுக!' என்னும் வள்ளுவர் வாக்கினை வாழ்வின் இறுதி மூச்சு வரை கடைப் பிடித்து வந்தவர் புதுமைப்பித்தன் என்பதை நிறுவுவதற்கு இக்கூற்று ஒன்றே போதும்! 

( புதுமைப்பித்தன் நினைவு நாள் 30.6.17 )













மனிதன்! என்ன கம்பீரமான வார்த்தை!'' என்றார் இலக்கிய மேதை மாக்சிம் கார்க்கி.

 ""வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா!'' என்றார் கம்பர்.

 ""மனிதன், அவன் ஒரு புழு!'' என்றார் புதுமைப்பித்தன். அதுதான் அவர் வாழ்க்கையில் கண்ட விரக்தி, வேதனை, சகிப்புத்தன்மை எல்லாம் அவரை அப்படிப் பேசவைத்தது.

 ÷கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் 1906-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி சொக்கலிங்கம்-பர்வதம்மாள் தம்பதிக்குப் பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் விருத்தாசலம்.

 ÷தொடக்கக் கல்வியை செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் பயின்றார். தாசில்தாராகப் பணிபுரிந்த அவருடைய தந்தை ஓய்வு பெற்றதால், 1918-இல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்ப நேர்ந்தது. அங்குள்ள ஆர்ச் யோவான் பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்தார். 6 வயதிலேயே தாயை இழந்தார்.

 ÷÷பின்னர், நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலை (பி.ஏ.,) பட்டம் பெற்று, பாரதி அன்பர் வ.ரா.வின் உதவியுடன் பத்திரிகை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். 1933 முதல் ஊழியன், சுதந்திரச் சங்கு, தினமணி, தினசரி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். புதுமைப்பித்தன் தன் பெயருக்கு ஏற்ப, பலர் நடந்து - நைந்துபோன பாதையில் போகாமல், புதிய பாதையில் புதிய சிந்தனையில் சோதனை முயற்சியில் கதைகளைப் படைத்தார்.

 ÷உலக இலக்கியங்களைத் தேடிப்பிடித்துப் படிப்பதில் வல்லவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரைகள், விமர்சனம், ஓரங்க நாடகம், மொழிபெயர்ப்பு நூல்கள் எனப் பல படைப்புகளை வழங்கியுள்ளார். புதுமைப்பித்தனின் தனித்தன்மை என்றவுடன் படிப்பவர் மனதில் பளிச்செனத் தோன்றுவது அவரது நடைச்சிறப்புதான். அவருடைய கதைகளைத் திரும்பத் திரும்பப் படித்தாலும் சலிப்பு ஏற்படாததற்குக் காரணம் அவருடைய நடை ஆளுமைதான்.

 ÷நடை வேறுபாடுகளில் பல்வேறு சோதனைகளைச் செய்து பார்த்தவர் புதுமைப்பித்தன். ""கருத்தின் வேகத்தையே பிரதானமாக்கிக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு, தாவித்தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக்கொண்ட ஒரு பாதை. அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது'' என்று புதுமைப்பித்தன் கூறியுள்ளார்.÷

 ÷""எடுத்துக்கொண்ட ஒரு விஷயத்தை உயிரோடு, உணர்ச்சியோடு பிரதிபலிக்கும் ஆற்றல் வாய்ந்த நடை, கையாளும் நடையின் பெருமிதத்துக்கு ஏற்ப மிக ஆழ்ந்த விஷயம்; கதையின் உருவமும் பூரணத்துவம் பெற்றது. உருவமும் கதைப்போக்கும் தனித்தன்மை பெற்றவை'' என்று புதுமைப்பித்தன் கதைகளைப் பற்றி கு.அழகிரிசாமி குறிப்பிட்டுள்ளார்.

 ÷1933-இல் இவருடைய முதல் படைப்பான "குலோப்ஜான் காதல்' காந்தி இதழில் வெளிவந்தது. 1934-இல் இருந்து மணிக்கொடியில் இவரது படைப்புகள் பிரசுரமாகத் தொடங்கின. மணிக்கொடியில் வெளிவந்த முதல் சிறுகதை "ஆற்றங்கரைப் பிள்ளையார்'.

 ÷இவரது நூல்கள், புதுமைப்பித்தன் சிறுகதைகள், புதிய ஒளி, காஞ்சனா, அன்று இரவு, ஆண்மை, விபரீத ஆசை, சித்தி முதலிய ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவரது அனைத்து சிறுகதைகளும் ஒரே தொகுப்பாக வெளிவந்துள்ளது. புதுமைப்பித்தன் பிறமொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த பல கதைகள் தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளன. "உலகத்துச் சிறுகதைகள்' என்ற நூலில், ரஷ்யா, நார்வே, ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹாலந்து, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய பல்வேறு நாடுகளின், மொழிகளின் சிறந்த படைப்பாளிகளின் சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.

 பதினைந்து ஆண்டுகளே எழுத்துலகில் இருந்த புதுமைப்பித்தன், தமிழில் தரமான சிறுகதைகளைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார். தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் புதுமைப்பித்தன் சிறுகதை இலக்கியத் தகுதி பெற்றுத்தந்த கதைகள் பலவற்றை எழுதியுள்ளார். புதுப்புது உத்திகளும் தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் நடைநயமும் அவரது சிறுகதைகளில் கலந்துள்ளன. தமிழ் நடைக்குப் புது வேகமும் புது அழகும் சேர்த்தவர். கிண்டலும் நையாண்டியும் நிறைந்த இவரது சிறுகதைகள் சோகத்தை அடிநாதமாகக் கொண்டு வாழ்க்கையின் உண்மைகளை உள்ளது உள்ளபடி காட்டின. அந்த அளவுக்குத் தரமான கதைகளைத் தந்தவர். குறிப்பாக, துன்பக்கேணி, நாசக்காரக் கும்பல், மனித இயந்திரம், பொன்னகரம், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் போன்ற கதைகளைச் சொல்லலாம்.

 ÷"பொன்னகரம்' கதையில் வரும் அம்மாளு கணவனுக்கு கஞ்சி காய்ச்சிக் கொடுக்க, தன் கற்பை விலைபேசினாள் என்பது கதையின் கருத்து. இப்படிக் கருத்து மோதல் கதைகளையும், பிரச்னைகளை எழுப்பும் கதைகளையும் எழுதியது போலவே, "தினமணி'யில் "ரசமட்டம்' என்கிற பெயரில் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை எழுதி சிலரது மனதைப் புண்படுத்தியும், சிலரது மனதைப் பண்படுத்தியும் இருக்கிறார்.

 ÷ஒரு காலகட்டத்தில் புதுமைப்பித்தனின் பேனா, கூர்மைமிக்க போர்வாளாக இலக்கிய உலகில் சுழன்று சுழன்று வீசியிருக்கிறது. புதுமைப்பித்தன் ஒரு சமூக சிந்தனையாளர். ஏழை எளியவர்கள் படும் துன்ப துயரங்களைக் கண்டு கண்ணீர் வடித்தவர். அதற்கு சாட்சி "நாசக்காரக் கும்பல்' என்ற கதை. இக்கதையில் சோஷலிசம், எதார்த்தவாதம், காந்தியம், சாதியம் அனைத்தும் ஒன்றாகச் சங்கமித்து நிலப்பிரபுத்துவத்தின் ஆணவத்தை அடக்க முஷ்டியை உயர்த்துகிறது. 1936-ஆம் ஆண்டு எழுதப்பட்டது இக்கதை. அக்காலகட்டத்தில் தமிழ் நாட்டில் ஜமீன்களும், நிலப்பிரபுத்துவமும் சரிந்துகொண்டிருந்த காலம். இந்த எதார்த்த நிலையை எழுச்சியுடன் எடுத்துக்காட்டியுள்ளார் புதுமைப்பித்தன்.

 ""வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

 சொல்லேர் உழவர் பகை'' (குறள்-872)

 என்னும் குறளின் கருத்துக்கு ஏற்ப, புதுமைப்பித்தன் புரட்சிப் பித்தனாக மாறி சமூகத்தில் நடைபெறும் அக்கிரமங்களை, அநியாயங்களைக் கண்டு இலக்கிய நயத்துடன் எதார்த்தமாக எழுதிக்காட்டினார். 1933-இல் திருவனந்தபுரம் சுப்பிரமணியம் மகள் கமலாவை மணந்தார். இவர்களுக்கு தினகரி என்கிற ஒரே ஒரு பெண் வாரிசு. அந்த அம்மையார் இன்று நம்மிடையே வாழ்ந்து வருகிறார்.

 ÷புதுமைப்பித்தன் திரையுலகிலும் கால்பதித்தார். மூன்று
÷புதுமைப்பித்தன் திரையுலகிலும் கால்பதித்தார். மூன்று ஆண்டுகள் வசனகர்த்தாவாக இருந்தார். எம்.கே.தியாகராஜ பாகவதர் தயாரித்த "ராஜமுக்தி' திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் புதுமைப்பித்தன்தான். 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி காந்தியடிகள் சுடப்பட்டு, இந்திய மக்கள் சோகத்தில் இருந்த நேரத்தில் புதுமைப்பித்தன் பூனாவில் இருந்தார். அந்தச் சமயத்தில் அவரின் நோய் உச்சத்தில் இருந்தது. உடனே மனைவியின் ஊரான திருவனந்தபுரம் வந்து சேர்ந்தார். அங்கு சிதம்பரம் என்பவர் புதுமைப்பித்தனுக்கு உதவிகள் பல செய்தும் பலனில்லாமல் போனது. 1948-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

 ÷2002-ஆம் ஆண்டு இவருடைய படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. அண்மையில் நடந்த தமிழ்ச் சிறுகதை கருத்தரங்கம் ஒன்றில், "தமிழ்ச் சிறுகதையின் தந்தை யார்?' என்கிற விவாதம் நடந்தது. ஆனால், முன்பே சொல்லிவிட்டார் தமிழறிஞரும் இலக்கியவாதியுமான டாக்டர் மு.வரதராசனார், "தமிழ்ச் சிறுகதையின் தந்தை புதுமைப்பித்தன்' என்று!




புதுமைப்பித்தனின் எக்ஸ்ரே
மாலனின் சிறுகதைத் தொகுப்பை மறுபடி படித்துக் கொண்டிருந்தேன், நுட்பமாகவும், தனித்துவமிக்கதாகவும் உள்ள இவரது சிறுகதைகள் மறுவாசிப்பில் மிகவும் நெருக்கமாக இருந்தன,

மாலனின் கதைகளில் வரும் மனிதர்கள் பெரும்பகுதி நடுத்தர வர்க்கம்,  அவர்களின் அக,புற பிரச்சனைகளும் அது உருவாகி வெளிப்படும் விதமும் விசித்திரமாக இருக்கின்றன,

அசோகமித்ரன் காட்டிய மத்தியதர உலகம் ஒரு பக்கம், ஆதவன் காட்டிய உலகம் இன்னொரு பக்கம் என்றால் இரண்டின் சாயலுமின்றி நடுத்தர வர்க்க உலகின் திண்டாட்டங்களை, சின்னஞசிறு சந்தோஷங்களை. வெளிப்படுத்த முடியாத துக்கங்களை தனது எழுத்தில் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் மாலன்,

ஒரு பத்திரிக்கையாளர் என்பதால் தன்னைச் சுற்றிய சமகாலப் பிரச்சனைகளின் மீதான எதிர்வினையும், அது தனிநபர்கள் மீது  உருவாக்கும் பாதிப்புகளும் அவரது கதைகளில் இடைவெட்டாக வந்து போகின்றன, அது கதைகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்குகின்றன.

வண்ணநிலவன், வண்ணதாசன், ஆதவன், மாலன் என எழுபதுகளில் உருவான சிறுகதை ஆசிரியர்கள் எல்லோரிடமும் கவித்துவமான கதை சொல்லும் முறை இருக்கிறது,  சிறுகதையின் வடிவத்தைப் புத்துருவாக்கம் செய்வதிலும், மொழியின் வீச்சிலும் ஒவ்வொருவரும் ஒரு ரகம்,

வண்ணநிலவனின் கதைகளை வாசிக்கையில் அவர் எவ்வளவு கச்சிதமாகச் சிறுகதையைக் கையாண்டு இருக்கிறார் என வியப்பாகவே உள்ளது, மாலனிடம் புதுமைப்பித்தனின் கதை சொல்லும் முறையும் பகடியும் ஒன்று கலந்திருப்பதை மறுவாசிப்பில் உணர முடிகிறது,

சின்னஞ்சிறிய வாக்கியங்கள், கூர்மையான உரையாடல்கள், நினைவோட்டத்தை எடுத்துச் செல்லும் தேர்ந்த விவரிப்புகள், சட்டென ஒரு இடத்தில் கதை வாசகனைத் தனக்குள் முழுமையாக இழுத்துக் கொணடு விடுகிறது,  வாசகனுடன் தோழமையான கதை சொல்லும் முறையை கைக்கொள்வதே இவரது தனிபலம் என்பேன்

குறிப்பாக புதுமைபித்தனின் எக்ஸ்ரே என்ற இந்தச் சிறுகதையை வாசித்த போது ஆதவன் புதுமைபித்தனின் துரோகம் என்றொரு சிறுகதை எழுதியிருப்பது நினைவில் வந்து போனது,  அது வேறுவகை,

மாலனின் கதையில் புதுமைபித்தன் ஒரு கதாபாத்திரமாக வருகிறார், கடவுளும் கந்தசாமி பிள்ளையும் கதையில் எந்த ஹோட்டலில் காபி குடித்தார்களோ அதே ஹோட்டலில் காபி குடிக்கிறார்கள், புதுமைபித்தனை தனது வீட்டிற்கு அழைத்துப் போகிறார், டிவி பார்க்க வைக்கிறார்,   இயந்திர உலகை புதுமைபித்தன் எப்படி எதிர்கொள்கிறார்  என்பது புதுமைப்பித்தனின் பாணியிலே வெளிப்படுத்தபடுகிறது,

இக்கதையில் புதுமைபித்தன்  ஹோட்டலில் காபி குடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென  வீதியில் ஒரு கலவரம்  நடந்து சிலர் உள்ளே புகுந்து பெரியவரே உனக்கு காபி கேட்குதா என அவரை மிரட்டுகிறார்கள், கண்முன்னே உலகம் வன்முறையின் களமாகிப் போய்விட்டதை புதுமைப்பித்தன் பார்க்கிறார், எதற்காக இந்த கலவரம், யார் இவர்கள் எதுவும்  அவருக்குப் புரியவில்லை, இந்த பத்தியை படித்தபோது நமது அன்றாட வாழ்வு எந்த அளவு சீர்கெட்டுப்போயிருக்கிறது என்பது துல்லியமாக பதிவு செய்யப்பட்டிருப்பதை உணர முடிந்தது,

கதையில் புதுமைப்பிதத்ன் ஒரு  எழுத்தாளர்  என்பதாக மட்டுமின்றி காலத்தின் குறியீடு போல மாறியிருக்கிறார், கதையின் முடிவில் உள்ள புதுமைபித்தனின் ஆதங்கம் மிக இயல்பாக வெளிப்படுகிறது,

இக்கதை வெளியாகி குறைந்தது இருபது வருஷங்கள் இருக்க கூடும், இன்று நவீன தொழில்நுட்பம் இன்னும் அதிகமாக வளர்ந்திருக்கிறது, ஆனால் கதையின் கடைசி வரியில் உள்ள புதுமைப்பித்தனின் ஆதங்கம் இன்றைக்குமிருக்கிறது

எனக்கு கதையில் மிகவும் பிடித்த வரி புதுமைப்பித்தனின் எக்ஸரே தன்னிடமிருப்பதாக கதை சொல்லி முடிப்பது,  புதுமைப்பித்தனின் எக்ஸ்ரே இலக்கியத்திற்காகவே வாழ்ந்து அழிந்த ஒரு கலைஞனின் குறியீடு,

தமிழின் மகத்தான காதல் கதை என புதுமைபித்தனின் செல்லம்மாள் சிறுகதையை எப்போதும் குறிப்பிடுவேன், எண்ணிக்கையற்ற சிறந்த சிறுகதைகளை எழுதி தன் எழுத்தின் வழியே என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் புதுமைபித்தனுக்கு மாலனின் சிறுகதை ஒரு புத்துயிர்ப்பை தருகிறது, அதற்காக மாலன் மிகுந்த பாராட்டிற்குரியவர்,

***

புதுமைப்பித்தனின் எக்ஸ்ரே  - மாலன்


சிறுகதை

**

“மெட்றாஸ் ரொம்பத்தான் மாறிப் போச்சு”என்றார் புதுமைப்பித்தன்.

புதுமைப்பித்தன்? ம். அவரேதான். கந்தசாமிப் பிள்ளையைப் பார்க்க கடவுள்  அவர் கதைக்குள் வரலாம் என்றால், என் கதைக்குள் புதுமைப்பித்தன் வரமுடியாதா? கதைக்குக் கால் கிடையாது அண்ணாச்சி.

இப்போதும், ‘சாடி மோதித் தள்ளிக் கொண்டு நடமாடும் ஜனக்கூட்டம்’ பரபரப்புடன் விரைந்தோடிக் கொண்டிருந்த, ‘பிராட்வேயும் எஸ்பிளனேடும்’ கூடுகிற சந்தியில்தான் நாங்கள் நின்று கொண்டிருந்தோம்.ஒரு நதி மாதிரி போக்குவரத்து நகர்ந்து கொண்டிருந்தது. நகரை நகர்த்திப் போகும் நதி. எளிதில் இறங்கிக் கடந்துவிட முடியாத நதி.

நதியின் வேகம் தணிந்த ஒரு விநாடிப் பிளவில் எதிர்கரை நோக்கி நடக்கத் தலைப்பட்டோம். ஏறத்தாழ நடுச்சாலைக்கு வந்த போது, பாம்பை மிதித்த்து போல புதுமைப் பித்த்ன் எகிறித் துள்ளினர். துள்ளிப் பின் வாங்கினார். அவரை உரசினாற்போல் ஒரு ஆட்டோ நெளிந்து விரைந்தது.

“ரொம்பத்தான் மாறிப்போச்சு!” என்றார் மறுபடியும்

“பின்னே, உங்கள் காலம் போல இப்போதும் டிராமும், மனிதனை வைத்து மனிதன் இழுக்கும் ‘நரவாகனமான’ கை ரிக் ஷாவும் ஓடிக் கொண்டிருக்கும் என்று நினைத்தீர்களா? இப்போது எல்லாம் இயந்திரம்தான்”

புதுமைப்பித்தன் புன்னகைத்தார்

“நிஜமாகத்தான். நீங்கள் தொலைபேசியில் அழைத்தால் பதில் சொல்ல ஒரு இயந்திரம்.வாங்கியில் காசு எடுக்க ஓர் இயந்திரம். பால் பொழிய ஒரு இயந்திரம். பாத்திரம் தேய்க்கக் கூட இயந்திரங்கள் இருக்கின்றன.ஓட்டுப் போடுவதும் கூட ஓர் இயந்திரத்தில்தான்”.

“பிரமாதம்!.இப்போது எல்லாம் இயந்திரம்தான்” என்று திருப்பிச் சொல்லி என்னை நிமிர்ந்து பார்த்து சிரித்தார் புதுமைப்பித்தன், அந்த வாக்கியத்திற்கு வேறேதோ புதிதாய்ப் பொருள் கண்டது போல.

கடவுளும் கந்தாசாமிப் பிள்ளையும் காபி அருந்திய ஓட்டலுக்குள் நுழைந்தோம். அதே இடம்.அதே சுகாதாரம். அதே ஈ.அல்லது அதன் வழித் தோன்றல். அதே சிக்கரிக் காபி. கடையின் பெயரும் காபியின் விலையும் மாறியிருந்தன. அவர் காலத்தை விட விலை கூடுதல் ஆனால் அளவு குறைவு. டபரா செட் பிளாஸ்டிக் குப்பியாக மாறியிருந்தது.

குவளையைப் புதுமைப்பித்தன் வாயருகே கொண்டு சென்ற போது தெருவில் திடுதிடுவென்று நான்கைந்து பேராய் ஓடி வந்தார்கள். எல்லோர் முகத்திலும் ஏதோ ஒரு பதற்றம். ஓரிருவர் கையில் உருட்டுக்கட்டை. மூடு மூடு என்று கடைகளை நோக்கிக் கூவினார்கள்.

தற்செயலாக நிகழ்ந்ததா, அல்லது வேண்டுமென்றேதான் நடந்ததோ, ஓடுகிற அவர்களது கால் பட்டு நடைபாதைக் கடைகளில் பரத்தியிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறந்தன. அலுமினிய தேக்சாவைக் கவிழ்த்து அதன் மீது கீரைக் கட்டுக்களை அடுக்கி நீர் தெளித்து விற்றுக் கொண்டிருந்த ஒரு நடுவயதுப் பெண்மணி வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தாள். சடாரெனெ எழுந்ததால் கால் மடங்கிச் சரிந்தாள்.நல்ல பாரியான தேகம். அவள் சுதாரித்துக் கொண்டு எழுவதற்குள் அவளைக் குறுக்காகத் தாண்டிக் கொண்டு இன்னொருவன் ஓடினான்.

நான்கைந்து பேராய் இருந்த உருட்டுக்கட்டை ஆட்கள் பத்துப் பனிரெண்டாகப் பெருகினார்கள். மூடு, மூடு என்ற ஆணைகள் உரத்தன. ஆணைகள் அவர்களை எட்டும் முன்பே வியாபாரிகள் சரசரவென்று ஷட்டர்களை இறக்கினார்கள்.

புதுமைப்பித்தன் அருகில் வந்த ஒருவன் “யோவ் பெருசு.  இந்த நேரத்தில் உனக்குக் காபி கேக்குதா?என்றதோடு என்று ஒரு கெட்டவார்த்தையையும் துப்பி அவர் கையிலிருந்த குவளையைத் தட்டி விட்டான். சட்டையிலும், தரையிலும் காபி விசிறி விழ குவளைத் தெருவிற்குப் பறந்தது. புதுமைப் பித்தன் மிரண்டு போனார். திகைத்து நின்ற அவரை நெட்டித்தள்ளிவிட்டு ஓடினான். புதுமைப்பித்தன் நிலைகுலைந்து போனார்.

இந்தக் காலித்தனத்தை அங்கு இருந்த யாரும் கவனிக்கவில்லை. கவனித்தவர்களும் பொருட்படுத்தவில்லை. எல்லோரும் அவசரமாக ஓட்டலில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர்.

“ஏய்!” என் எதிர்ப்பைக் கண்டு ஓடிக் கொண்டிருந்தவன் திரும்பிப்பார்த்தான்

“இன்னாம்மா எகிற்ற? ..பெரிசை பத்திரமா இட்டுக்குனு போ.பொட்னு பூடப்போறாரு!” அவன் எதிர்வினையில் எள்ளல் தெறித்தது.

நான் அவரை மெதுவாகப் படியிறக்கிக் கூட்டி வந்தேன்.

எதிர்சாரியில் இருந்த கல்லூரி வாசற் கதவருகே ஒரு மாணவனைப் போட்டு உருட்டுக்கட்டைப் படை துவைத்துக் கொண்டிருந்தது. அவன் அத்தனை அடிக்குப் பிறகும் எப்படியோ தப்பித்து எழுந்து நொண்டிக்கொண்டு ஓடினான். பார்த்துக் கொண்டிருக்கும் போதே தகதகவென்று எரிந்து கொண்டிருந்த ஒரு புட்டி பறந்து வந்து பஸ் அருகில் விழுந்து சிதறியது. அதிலிருந்த திரவம் தரையில் பரவ நெருப்பு பஸ்சைப் பிடிக்க விரைந்தது.

இனி இன்று பஸ் ஓடாது. நடக்க வேண்டியதுதான் எனப் புரிந்தது.  எனக்குத் திருவல்லிக்க்கேணிதான் வீடு.பிரசினை இல்லை. ஆனால் பெருமைக்குரிய என் விருந்தினரையும் நடத்தித்தான் கூட்டிச் செல்ல வேண்டும்.

விருந்தினர் வழியில் அதிகம் பேசவில்லை. காபிக் கடை அதிர்ச்சி, கல்லூரி வாசல் காட்சி, அவரை அதிகம் தாக்கியிருந்தன. கடற்கரையில் வீசிய குளிர்ந்த காற்று கூட இதமளித்ததாகத் தெரியவில்லை. ” ஏன்/ என் இப்படி? “என்று வழியில் ஒரு முறை கேட்டார்.

என்ன சொல்வது? நான் அவரைக் கூர்ந்து நோக்கினேன். மையிட்டதுபோல் ஒருவிதக் கவர்ச்சியோடு இருக்கும் அவர் கண்கள் சற்றே கலங்கினது போல் தோன்றியது. தனது வாழ்வில் அவர் இது போன்ற சம்பங்களை அதிகம் சந்திருக்கமாட்டார். அவரது எதிரிகள் கூட அவரிடம் இப்படி நடந்து கொண்டிருக்கமாட்டார்கள். அவரது சண்டையெல்லாம் அச்சுப் பரப்பில். அவரது எள்ளல்கள் எல்லாம் எழுத்தில். இது வெறும் எள்ளல் மட்டுமல்ல. வன்முறை. அங்கீகரிக்கப்பட்ட வன்முறை. மக்களின் மெளனத்தால் அங்கீகரிக்கப்பட்ட வன்முறை.

“இப்போதெல்லாம் இப்படித்தான் திடீர் திடீர் என்று எதாவது நடந்து விடுகிறது.” என்றேன் மன்னிப்புக் கேட்கும் குரலில்.

“என்ன நடந்தது? ஏன் இத்தனை கலாட்டா?”

தெரியவில்லை. வழியில் இரண்டொருவரை நிறுத்தி என்ன பிரசினை என்று விசாரித்தேன். யாருக்கும் நின்று பதில் சொல்ல பொறுமை இல்லை. வீட்டிற்குத்

திரும்பி டெலிவிஷன் பார்த்தால் விவரம் தெரிந்துவிடும்.

**

மூ

ன்று மாடி ஏற சற்று சிரமப்பட்டார்.லேசாக மூச்சு வாங்கியது. அதைப் பொருட்படுத்தாமல்  சன்னமான குரலில் கேட்டார்.” என்னவென்று சொல்லப்போகிறீர்? முன்னாலேயே என்னிடம் சொல்லிவிட்டால் நான் அதற்குத் தகுந்த மாதிரி சமாளித்துக் கொள்கிறேன்.”

“சமாளிக்க அவசியமில்லை. உங்கள் காலம் மாதிரி மாமா பெரியப்பா என்று கதை விட வேண்டியதில்லை.நீங்கள் எழுத்தாளர் என் சகா என்றுதான் சொல்லி அறிமுகப்படுத்தப் போகிறேன்”

“உம் மனைவி என்னைப் படித்திருக்கிறாளா?”

உதட்டைப் பிதுக்கினேன். ” தெரியாது. அவள் படித்ததெல்லாம் பாடப் புத்தகம் மட்டும்தான் என நினைக்கிறேன்”

வீட்டுக்குள் நுழைந்தபோது, படிக்கட்டு, தலைவாசல், முன் கூடம், சமையலறை எல்லா இடத்திலும் விளக்குள் எரிந்து கொண்டிருந்தன. மனைவி சமையலறையில் எதையோ உருட்டிக் கொண்டிருந்தாள்.நைட்டி நனைந்திருந்தது.

“என்ன இன்றைக்கு கார்த்திகையா?” என்றேன்.

“கேள்வியில் உள்ள உஷ்ணம் உறைக்காமல், “இல்லையே! இது ஆடி மாசம்னா?” என்றாள் மனைவி வெகுளித்தனமாய்.

“இல்லை, இத்தனை தீவட்டி எரிஞ்சிண்டிருக்கேனு கேட்டேன்”.

“சாயங்காலம் கொஞ்சம் லேட்டாதான் வந்தேன். வரும் போது பவர்கட். விடு இருளோனு கிடந்தது.சித்த நேரம் எரிஞ்சிண்டு இருக்கட்டுமேனு நாந்தான் போட்டு வைச்சேன். விளக்கு வைக்கிற நேரத்தில வாசல் இருட்டிக் கிடக்கணுமா?”

“உன் டிஜிட்டல் உலகம் இந்த நம்பிக்கைகளையெல்லாம் மாற்றவில்லை போலிருக்கே?” என்று முதுகுக்குப் பின்னிருந்து அடியெடுத்து வைத்தார் பு.பி.

புதிதாய் ஒரு மனிதனைப் பார்த்ததும் கோமதி. சற்றே மெலிதாக திடுக்கிட்டுப் போனாள் அனிச்சை செய்லாய் கை கூப்பி வணங்கினாள். மூன்றாம் மனிதர் முன் நைட்டியில் இருக்கக் கூச்சப்பட்டு, உடை மாற்றிக் கொண்டு வர உள்ளே நகரப் பரபரத்தாள்.

“புதுமைப்பித்தன், சக பத்திரிகையாளர், கோமதி, என் மனைவி” என் அறிமுகம் பு.பிக்குத் தேவைப்படவில்லை

” கையில் ஒரு வீணையைக் கொடுத்துவிட்டால் அப்படியே சரஸ்வதி” என்றபடியே பதிலுக்குக் கும்பிட்டார். அவர் கண்ணில் ஒரு கிண்டல் மின்னியதோ?

” ஆமாம் எம்.சி.ஏ படித்திருக்கிறாள்.”

” எம்.சி.ஏ?”

“கம்ப்யூட்டர்”

புரியலையே என்றன மறுபடியும் புதுமைப்பித்தன் கண்கள்.

கோமதி பரபரவென்று உடை மாற்றிக் கொண்டு காபி எடுத்து வந்தாள். சிக்கரி இல்லத நல்ல காபி. “உங்களுக்கு சர்க்கரை போடலாமா?” என்று என் விருந்தினரைக் கேட்டாள்.

“சர்க்கரை போட்டால்தான் காபி. இல்லையென்றால் அதற்குப் பெயர் கஷாயம்” என்று தன்னுடைய ஜோக்கிற்குத் தானே சிரித்துக் கொண்டார் பு.பி.

“இல்லை, இவர் சர்க்கரை போட்டுக் கொள்வதில்லை.சுகர்” என்றாள்

“இந்த வயதிலேயா?” என்று என்னைப் பார்த்தவர், “மிக இனிய மனிதர் என்று சொல்லுங்கள்” என்று இன்னொரு ஜோக்கைக் கொளுத்திப்போட்டார்.

*

“டெ

லிவிஷன்”

நான் சுட்டிக் காட்டிய  பெட்டியை ஒருமுறை அருகில் சென்று பார்த்தார். “இதனா அது?” அவர் வாழ்ந்த காலத்தில் டிரான்சிஸ்டர் கூட அறிமுகமாகியிருக்கவில்லை. அதனால் இது அவருக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும் என்று நினைத்த நான் “செய்திகளைக் காட்சிகளாகப் பார்க்கலாம்” என்று சுருக்கமாக விளக்க முற்பட்டேன்.

“ம். படித்திருக்கிறேன். ஜான் பெயிட் இதைக் கண்டுபிடித்தபோது பிபிசியில் சொன்னார்கள். அந்தச் செய்தியைக் கேட்டுவிட்டு தமிழ் எழுத்தாளர் ஒருவர் ‘டெலிவிஷன்’ என்ற பெயரிலேயே ஒரு கதை எழுதினார்,நவசக்தியில். அது 1926ல். அப்போது அவருக்கு அதில் பாரதமாதாவின் தரிசனம் தெரிந்தது. ம்.பிபிசியைப் போடுங்கள். இன்னிக்கு பாரதமாதா எப்படி இருக்கிறாள் என்று பார்க்கலாம்” என்றார் அவருக்கே உண்டான கிண்டலுடன்.

அதிர்ச்சியிலிருந்து மீண்டு விட்டார் என்பதே எனக்கு ஆறுதலாக இருந்தது. டெலிவிஷனைப் போட்டேன், நாங்கள் கல்லூரி வாசலில் பார்த்த காட்சிகளை அது மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. மாணவர்களிடையே ஜாதிக் கலவரம் என விளக்கமளித்துக் கொண்டிருந்தார்கள்.


றுநாள் அனந்தராமன் வீட்டிற்குப் புறப்பட்டோம் அனந்தராமன் ஓர் ஓய்வு பெற்ற பத்திரிகையாளர். ‘தி ஒப்பீனியன்’ பத்திரிகையில் நீண்டகாலமாக எழுதி வந்தார். எனக்கு ஒப்பீனியன் மீது பெரிய காதல் எதுவும் கிடையாது. ஆனால் அனந்தராமன் மீது பெரிய மரியாதை. என் கல்லூரி நாட்களில்  அவரைப் படித்துத்தான் உலக விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். வேலை கிடைத்து சென்னைக்கு வந்ததும் நான் தேடிப் போய் பார்த்த சிலரில்  அவரும் ஒருவர். நிறையப் பேசுவார். பேச்சுக்கு நடுவில் கேள்விகள் எழுப்புவார். அவரே பதிலும் சொல்வார். நம்மிடம்தான் பேசுகிறாரா அல்லது உரத்து சிந்திக்கிறாரா என்று நமக்கு பிரமிப்பாக இருக்கும்.

விடுமுறை நாட்களில் அல்லது அவரது வாயைக் கிளற வேண்டும் என்று நினைக்கிற தருணங்களில் அவரிடம் போய்ப் பேசிக் கொண்டிருப்பதுண்டு.

போகிற வழியில் நெடிதுயர்ந்த கண்ணாடிக் கோபுரங்கள் எதிர்ப்பட்டன. “அது என்ன இத்தனை தாஜ்மகால்கள்?” எனக் கேட்டார் பு.பி.

“இவை காதலின் சின்னங்கள் அல்ல. ஆசையின் மாளிகைகள்” என்றேன்.

புரியவில்லை என்பது போல் உதட்டைப் பிதுக்கினார்.

“இவையெல்லாம் எங்கள் நகரத்தின் துணிக்கடைகள், நகைக்கடைகள்”

“நாலு மாடியா?”

“ உண்பது நாழி, உடுப்பது இரண்டு  என்றாலும் ஆசைக்கு வானமே எல்லை” பஸ்ஸில் இருப்பவர்கள் திரும்பிப் பார்ப்பது போல அதிரச் சிரித்தார் பு.பி.

நல்லவேளை அனந்தராமன் வீட்டில் இருந்தார். “அனந்தராமன். ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்” என அறிமுகப்படுத்தி வைத்தேன்

“பத்திரிகையாளருக்கு ஏது ஓய்வு? நான் இப்போது சுயேச்சைப் பத்திரிகையாளர்” என்று அவர் என்னைத் திருத்தினார். விருந்தினர் வருகையை முன்னிட்டு ஒடிக் கொண்டிருந்த தொலைக்காடசியை நிறுத்த எழுந்தார்.

.”இருக்கட்டும். இது எனக்குப் புதிதுதானே?” என்றார் பு.பி. அவரிடம் ஒரு குழந்தைத் தனமான ஆவல் தெரிந்தது.

‘எதிர்க்கட்சித் தலைவர் கைது’, என ஒரு செய்தி திரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.

“கைதா?” என நான் ஆச்சரியத்தோடு அனந்தராமனைப் பார்த்தேன்

ஏழாண்டுகளுக்கு முன் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது மாற்று மதத்தினரின் வழிபாட்டுத் தலம் ஒன்றைத் தகர்க்கும் கிளர்ச்சியில் ஈடுபட்டவர் அவர். வழக்கு நடந்து கொண்டிருந்தது. இன்று தீர்ப்பு வெளியானதும் கைது செய்து விட்டார்கள்.

“பெரிய தலைவரா?” என்றார் புதுமைப்பித்தன். என்ன சொல்வது? தலைவர் என்பதற்கு அவர் காலத்து இலக்கணங்கள் வேறு. “சர்ச்சைகளைக் கிளப்பியதாலும் சர்ச்சைகளில் இறங்கியதாலும் ஊடகங்களைக் கவர்ந்த தலைவர். ஜனங்களின் செய்திப் பசிக்குத் தீனி போட்டவர்.”

“ஜனங்களுக்குச் செய்திப் பசி என்ற ஒன்று இருக்கிற்தா?”

“இருக்கிறது.இல்லை என்றால் ஏன் இத்தனை தொலைக்காட்சிகள்.? 24 மணி நேரமும் செய்தி சொல்லும் தொலைக்காட்சிகள்?” என்ற என் வாதத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த புதுமைப் பித்தனிடம், “உங்கள் காலத்தில் நீங்கள் செய்திக்குக் காத்திருக்க வேண்டும். எட்டு மணியோ ஒன்பது மணியோ ஏதோ ஒரு நேரத்திற்கு வானொலியில் செய்தி வாசிப்பார்கள். இருக்கிற வேலையைப் போட்டுவிட்டு  அதைக் காத்திருந்து கேட்க வேண்டும், தவறவிட்டால் போச்சு. இப்போது பாருங்கள் நீங்கள் செய்திக்காகக் காத்திருக்க வேண்டாம். செய்தி உங்களுக்காகக் காத்திருக்கிறது. இதுதான் ஜனநாயகம்” என்றேன்

“வெறும் வெள்ளைக் காகிதத்தைப் பெரிய அளவில் ஜனங்களிடம் விற்க முடியாது. ஆனால் அதில் செய்தி இலக்கியம் என்று கருப்பு மை பூசினால் ஆயிரக்கணக்கில் விற்கலாம் என திஜர ஒரு முறை எழுதியதாக எனக்கு ஞாபகம்” என்று இடைமறித்த அனந்தராமன், “அது போல வெறுமனே போய் விளம்பரம் பிடிக்க முடியாது. செய்தி பாட்டு என்று ரொப்பினால் விளம்பரம் வழி காசு கொட்டுமோ என்னவோ” என்றார்

“நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். டிவி என்ற ஒன்று வந்ததால்தான் பல திறமைகள் உலகின் கவனத்திற்கு வந்திருக்கின்றன” என்றேன் நான்

“அப்படியே இருக்கட்டும். ஆனால் புத்தகங்கள் கூட அதிகம் விற்கின்றனவே. டிவியோடு அதற்கு எந்த சம்பந்தமும் கிடையாதே. அது எப்படி?”

“அப்படியா? புத்தக விற்பனை சக்கைப் போடு போடுகிறதா? அப்படியானால் எழுத்தாளர்கள் காட்டில் மழை என்று சொல்லுங்கள்” என்றார் பு.பி.

“இணையத்திலிருந்து தகவல் இறக்கித் தமிழாக்கம் செய்து தலையணை தலையணையாப் புத்தகம் போடுவதற்கொன்றே ஒரு எழுத்தாளர் கூட்டம் கிளம்பியிருக்கிறது”

“பலே! பரவாயில்லையே! சினிமா கூட இலக்கிய ஆசிரியர்களை இழுத்துக் கொண்டிருக்கிறதாமே?”

“சொல்லுக்குச் சோர்வேது?

சோகக் கதை என்றால்

சோடி இரண்டு ரூபா

காதல் கதையென்றால்

கைநிறையத் தர வேணும்

ஆசாரக் கதையென்றால்

ஆளுக்கு ஏற்றது போல்

பேரம் குறையாது

பேச்சுக்கு மாறில்லை

ஆசை வைத்துப் பேசி எமை

ஆட்டி வைக்க முடியாது

காசை வையும் கீழே- பின்

கனவுதமை வாங்கும்”

அனந்தராமன் அச்சு மாறாமல் புதுமைப்பித்தன் கவிதை ஒன்றை அவரிடமே ஒப்பித்ததும் அரை நிமிடம் அசந்து போனார்.

“தாளிக்கிறீரே, கவிதை சமாசாரம் எப்படி?”

“ அண்ணாந்து கொட்டாவி விட்டதெல்லாம் கூறு தமிழ்ப் பாட்டாச்சே! முட்டாளே இன்னுமா பாட்டு?”

அன்று புதுமைப்பித்தன் சிரித்த சிரிப்பில் அந்தக் கட்டிடமே அதிர்ந்தது.


னால் எனக்குப் புகைந்தது. திரும்பி வரும்போது மனம் குமைந்து குமைந்து குமுறிக் கொண்டிருந்தது. நாட்டில் எத்தனை புதுமைகள்! எவ்வளவு முன்னேற்றம்! அப்படியிருந்தும் ஏன் இந்த எள்ளல்? எகத்தாளம்? புதுமைப்பித்தனிடமே நேரடியாகப் பொருமிவிட்டேன்:

“நீங்கள் வாழ்ந்த காலத்தில் டிரான்சிஸ்டர் கூட அறிமுகமாகியிருக்கவில்லை. இன்று வீட்டுக்கு வீடு டெலிவிஷன். கந்தசாமிப் பிள்ளை வீட்டுக்குப் பழைய பரமசிவம் வந்த போது அங்கு முன் கூடத்தில் ஒரு தகர விளக்குத்தான் எரிந்து கொண்டிருந்தது. இன்று அறைக்கு அறை மின் விளக்குகள். உங்கள் காலத்தில் மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்ஷா இருந்தது. இன்று அந்தக் கொடுமை கிடையாது. நீங்கள் உட்பட எழுத்தாளர்கள் வறுமையில் வாடினார்கள். இன்று வருமானவரி கட்டுகிறார்கள்.

திருநெல்வேலியில் இருந்த ரகுநாதனை விருதுநகருக்கு அல்வா வாங்கி வரச் சொல்லிக் கேட்க நீங்கள் அன்று ஒரு கடிதம் வழி வெண்பா எழுதி அனுப்ப வேண்டியிருந்தது. இன்று அயல்நாட்டிலிருக்கும் மகளுடன் கணினி வழி, காசு செலவில்லாமல் பேசுகிறோம். போதும் போதாதற்குக் .கைக்குழந்தை போல் ஒரு தொலைபேசியை செல்லுமிடமெல்லாம் தூக்கிக் கொண்டு திரிகிறோம். உங்களுக்குக் கிடைத்தது கந்தசாமிப் பிள்ளையின் கை மருத்துவம். இன்று எங்கள் ஆஸ்பத்திரிகள் ஐந்து நட்சத்திர விடுதிகள் போலிருக்கின்றன. எத்தனை முன்னேற்றம்! எங்கு திரும்பினாலும் வளர்ச்சி. .அப்படியிருக்க ஏன் இந்த எள்ளல்? கேலி? ஏளனம்?”

புதுமைப்பித்தன் ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தார். ஆனால் அதற்குள் பின்னால் வேகமாக வந்த மோட்டர் சைக்கிள் ஒன்று, சாலையில் தேங்கிக் கிடந்த மழை நீரைத் தவிர்க்கத் திடீரென இடது ஓரத்திற்கு வந்தது. மின்னல் வேகத்தில் உரசுவது போல நெருங்கி வந்த அது, நல்லவேளை, மோதிவிடவில்லை. ஆனல் பின்புறம் உடகார்ந்திருந்தவரின் பாதம் கெண்டைக்காலில் தட்ட புதுமைப்பித்தன் ஈரத்தில் கால் சறுக்கி விழுந்தார்.


ஸ்பத்ரியில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தார்கள். எலும்பு முறிவு ஏதும் இல்லை. ஆனால் கணுக்கால் அருகே சுளுக்கு. இரண்டு நாளில் சரியாகிவிடும் என்றார்கள்.

வீட்டிற்குத் திரும்பிப் படுக்கையில் சாய்ந்து கொண்டு, உயரத்திற்காக அடுக்கிய தலையணைகள் மீது கால்களைக் கிடத்தியபடி புதுமைப்பித்தன் பேச ஆரம்பித்தார்.

“எங்கே விட்டோம். ம் இப்போது உம் கேள்வியைக் கேளும்”

“இல்லை இப்போது வேண்டாம்”

“ அட சுளுக்குத்தான்யா, முறிவு இல்லை” என்றவர், “உமக்கும்தான்” என்று என்னைப் பார்த்துக் கண் சிமிட்டினார். பின் புன்னகை மாறாமல் பேசத் தொடங்கினார்:

“உண்மைதான். சந்திரனுக்குப் போய் கொடியை நாட்டிவிட்டீர்கள். ஆனால் சாலையைக் கடப்பதற்குள் உயிர் போய் திரும்பி வருகிறது. ஆஸ்பத்ரிகள் பெருகியிருக்கின்றன. ஆனால் நாட்டில் இருப்பவர்களில் பாதிப்பேருக்கு மேல் உடல்நலம் கெட்டிருக்கிறது.படிப்புக்கும் கல்விக்கும் உங்களுக்கு வேறுபாடு புரியவில்லை. படைப்புக்கும் எழுத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை.இலக்கிய வாசிப்பு அதிகரித்திருக்கிறது. ஆனால் ஒரு பாரதியை உங்களால் உருவாக்க முடியவில்லை”

.

அவர் புன்னகை என்னைச் சுட்டது.

“செய்திகள் இடைவிடாமல் பொழிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவை சிந்தனையில் தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரியவில்லை. அடுத்த நாட்டில் குண்டு விழுந்ததற்காகக் கூடி அழுகிறீர்கள். ஆனால்  கூடப்படிப்பவனைக் கொலைவெறி கொண்டு ஒரு கூட்டம் தாக்குகிறது. ஆனால் அதைக் குறித்து எங்கும் எந்தச் சலனமும் காணோம். அரசியல் எங்கள் காலத்தில் தேசத்தை ஒன்று சேர்த்தது. இன்று அரசியல் உங்களைப் பிளவுபடுத்துகிறது. வாகனம், தொடர்பு, மருத்துவம், இலக்கியம், சினிமா, எங்கும் தொழில்நுட்பம் செழித்திருக்கிறது.ஆனால் மனிதர்கள் வற்றி விட்டார்கள். வீட்டுக்கு வீடு மின்சாரம் வந்து விட்டது. ஆனால் வெளியே கனத்த இருள் சூழ்ந்திருக்கிறது”

நான் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்

அவர் படுக்கையில் இருந்தபடியே என்னை அருகில் அழைத்து முதுகில் தட்டினார்.

“நாம் மாறியிருக்கிறோம். ஆனால் வளர்ந்திருக்கிறோமா?”

புதுமைப்பித்தன் என்னுடன் ஒரூ வாரம் தங்கியிருந்தார். உடல்நிலை காரணமாக அவரோடு ஏதும் படமெடுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் அவரது எக்ஸ்ரே என்னிடம் பத்திரமாக இருக்கிறது.

*

.

No comments:

Post a Comment