Saturday 13 June 2020

HISTORY OF PUNITHA ANTHONIYAAR BORN AUGUST 15,1195 -1231 JUNE 13




HISTORY OF PUNITHA ANTHONIYAAR BORN AUGUST 15,1195 -1231 JUNE 13




திருச்சபை வரலாற்றில் நாம் காணும் புனிதர்களில் மிகவும் புகழ்பெற்று விளங்குபவர் புனித அந்தோனியார். அதற்குக் காரணம் அவர் புரிந்த கோடி அற்புதங்கள் மட்டுமல்ல ஒரு சிறந்த மறை போதகராகவும் மறை வல்லுனராகவும் அவர் விளங்குவதேயாகும்.
போர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் பிறந்த இவரை பாதுவா நகரின் புனிதர் என்றுதான் அழைக்கின்றோம். 1195 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 15 ஆம் திகதி அன்னைமரியின் விண்ணேற்பு தினத்தன்று புனித அந்தோனியார் பிறந்தார். அங்கிருந்த பேராலயத்தில் பேர்டினன்ட் எனும் பெயர் சூட்டி திருமுழுக்கு அளிக்கப்பட்டது.

இன்றைய பாதுவா:

இத்தாலியின் வடகிழக்கு மாநகரமான பாதுவா வெனிசியா என்றழைக்கப்படும் பிராந்தியத்தின் முக்கியமானதொரு நகரமாகும். புக்சிகிக்லியோன் நதியோரத்தில் பிரபல வர்த்தக நகரமாகிய வெனிசிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. இதன் தெருக்கள் மிக அழகாக திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. மிகப் பெரிய கட்டிடங்கள் காணப்பட்டாலும் அவை சீராக அமைக்கப்பட்டுள்ளன.

கட்டிடங்கள் தளமட்டத்தில் தெருவோரமாய் பெரும் விறாந்தைகள் உள்ளவையாக இருக்கின்ற நகரில் நடுவிலேயே ஒரு நதி செல்வதால் அதனைக் கடக்கும் பாலங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன.
ஒரு காலத்தில் இந்நகர் ஒரு பெரும் கோட்டை மதிற்சுவருக்கு மத்தியில் இருக்க பகைவர் அதனை நெருங்காதிருக்க சுற்றிலும் நீர் நிலைகளும் அகழிகளும் இருந்துள்ளன. வடஇத்தாலிய நகர்களிலேயே பாதுவாதான் மிகத் தொன்மையானது என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறுவர்.

விர்ஜிலின் ஏனிட் எனப்படும் வரலாற்றுப் புகழ் பெற்றவரால் இந்நகர் உருவாக்கப்பட்டது. தற்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இவரது கல்லறையை கண்டு பிடித்துள்ளனர். உரோமையின் பண்டைய வரலாற்றுக் காலத்திலேயே இந்நகர் குதிரைகளுக்கும் செம்மறிமயிருக்கும் பெயர் பெற்றது. பாதுவா தன் மக்களின் அநேகரை உரோமைப் படைக்கு கொடுத்துள்ளது.

பேர்த்துக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் உள்ள பேராலயத்தின் அருகில் அந்தோனியார் வாழ்ந்த வீடு இருந்தது. சிறு வயதிலிருந்தே ஏழைகள் மீது பரிவிரக்கம் கொண்டிருந்தார். தன் அன்னையிடம் மன்றாடி ஏராளமான ரொட்டிகளைப் பெற்று தினமும் ஏழைகளுக்கு உணவளித்து மகிழ்வார். திருத்தலத்தின் அருகில் உள்ள பள்ளியில் ஆரம்ப கல்வியைக் கற்றார். தனது 15வது வயதில் புனித வின்சென்ட் மடத்தில் அகஸ்டினியர் துறவியானார். அடிக்கடி வருகை தந்த நண்பர்களைத் தவிர்க்க விரும்பி இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கோயிம்பிரா மடத்தில் சேர்ந்து 8 ஆண்டுகள் செபதபம் செய்து வேதம் கற்றார். இறைவார்த்தையை கற்றறிவதிலும் மறைநூல் வல்லுனர்கள் எழுதிய நூல்களையும் ஆழமாக கற்றுத் தேர்ந்து இறையியல் ஞானத்தின் களஞ்சியமானார். இக் காலத்தில் ஆபிரிக்காவின் மொரோக்கோ தேசத்தில் நற்செய்தியாளர்கள் சிலர் மறைசாட்சிகளாக மரித்தார்கள் எனக் கேள்வியுற்று தாமும் அவ்விடத்திற்கு செல்ல வேண்டும் என விரும்பி பயணத்தை மேற்கொண்டார். ஆனால் இறைச் சித்தம் வேறாக இருந்தது. தாம் சுகவீனமுறவே அவர் மீண்டும் போர்த்துக்கலுக்கே வரப்புறப்பட்டார். ஆனால் கப்பலோ அவரை இத்தாலிக்கு கொண்டு வந்து விட்டது. அங்கே தென் இத்தாலியின் மெசினா நகரில் இருக்கும் போது அசிசி நகரில் துறவிகளின் ஒன்று கூடல் ஒன்று நடக்க இருப்பதை அறிந்து அங்கே புறப்பட்டார். அங்கே அவர் பலருடன் பழகினாலும் தன் கல்வி மற்றும் பாண்டியத்தைப் பற்றி எவருடனும் கூறவில்லை. இயேசு வைப்பின் சென்று தானும் சிலுவையில் அறையப்பட வேண்டும் என்பதே அவரது அவாவாக இருந்ததே அல்லாமல் தன்னைப் பிரபல்யப்படுத்திக் கொள்வதாக இருக்கவில்லை.

பிரான்சிஸ் குவின் பாதையிலே...

இக்காலத்தில் இத்தாலி நாட்டின் அசிசி நகரைச் சார்ந்த புனித பிரான்சிஸ் துறவற சபை ஒன்றை ஆரம்பித்திருந்தார். இது துறவற வாழ்க்கையில் ஓர் பெரிய திருப்பத்தையே ஏற்படுத்தியிருந்தது. கத்தோலிக்க திருச்சபைக்கு மறு வாழ்வைக் கொடுத்த இச்சபையின் செயற்பாடுகள் பேர்னன்ட் அடிகளாரின் மனதைத் தொட்டது. இதன்படி அகுஸ்தீனார் சபையின் தலைவர்களின் அனுமதியுடன் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். கி. பி. 1221ன் முதல் பகுதியிலேயே பிரான்சிஸ்கன் சபைக்குரிய உடையை கொயிம்றோ நகருக்கருகாமையிலிருந்த ஒலிவாறேஸ் எனும் ஊரிலிருந்த மடத்தில் பெற்றுக்கொண்டார். அப்போது 26 வயதை அடைந்திருந்த அவர் அந்தோனி எனும் பெயரையும் சூட்டிக்கொண்டார். அருகில் உள்ள போர்லி நகரில் ஒரு குருத்துவ அருட்பொழிவு வைபவத்திற்கு அவர் செல்ல நேர்ந்தது. அங்கே சிறப்புரை ஆற்றுவதற்கு ஒருவர் தேவைப்பட்டார் அந்த வாய்ப்பு அந்தோனியாரை தேடி வந்தது.

அங்கே அவர் ஆற்றிய உரை அவர் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது. இறை வார்த்தையில் புதைந்து கிடந்த அற்புத கருத்துக்களை அவர் எடுத்து விபரிக்க விபரிக்க அதிபர்களும் கூடியிருந்தோரும் இத்தகைய சிறப்பு இவருக்கு எங்கிருந்து வந்தது என வியந்து போயினர். இதனைக் கேள்வியுற்ற பிரான்சிஸ் அசிசியார் துறவற மடத்தில் இறையியல் கற்பிக்க 1224இல் இவரை அழைத்தார்.

அந்தோனியார் ஒரு சிறந்த பேராசிரியராக இருந்தாலும் அவரது சிறப்பு அவர் கற்பித்த கல்லூரி வகுப்புகளில் இருந்ததை விட மக்களுக்கு வழங்கிய போதனையில் தான் இருந்தது. சிறந்த போதகராக இருக்க வேண்டிய அத்தனை தகைமைகளும் அவரிடம் தாராளமாகவே இருந்தது. அவருடைய நல்ல குரல் வளம் அவருக்கு மிக உதவியாக இருந்தது.

அவர் ஆலயத்தில் ஒரு மூலையில் நின்று பேசினால் அது மற்ற மூலைக்கு கேட்கும் அளவுக்கு உரத்த குரலாய் இருக்கும் அதில் தெளிவு இருக்கும். எப்போதுமே அவர் முகத்தில் பெரும் மலர்ச்சி காணப்பட்டது. அபாரமான ஞாபக சக்தியும் தீர்க்கதரிசன வரமும் புதுமைகள் செய்யும் ஆற்றலும் அவரிடம் காணப்பட்டன.
ஒரு அப்போஸ்தலருக்கே உரிய தீவிர மறைபரப்பு ஆர்வம் சமுதாயத்தை மாற்றியே ஆகவேண்டும் என்ற அவா அவரை ரிழி நடத்திக் கொண்டிருந்தன. குறிப்பாக அன்றைய மக்கள் மத்தியில் வெகுவாக பரவியிருந்த ஆடம்பர சொகுசு வாழ்வு பேராசையினால் பொருள் தேடிக் குவித்தல் வலுவிழந்தோரை ஆட்டிப் படைக்கும் ஆட்சியாளரின் செருக்கு முதலியவற்றை அவர் உற்று நோக்கி சம்பந்தப்பட்டவர்களை கடுமையாக சாடுவதற்கு பின்னிற்கவில்லை. இதையொட்டி அவரது மறை உரைகள் மிகக் கடுமையாக இருந்தன.

ஒரு காலத்தில் மொனட்பெய்யர் மற்றும் ரூலுஸ் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தாலும். சபையின் பல்வேறு நிலைகளில் இருந்தாலும், இறுதியில் பாப்பரசர் 9 ஆம் கிறகரி ஆண்டகையின் அனுமதியைப் பெற்று திருமறைப் போதகத்தில் ஈடுபட்டார். இத்தாலியின் பாதுவா நகரத்தை மையமாகக் கொண்டு சேவை செய்த புனிதர் பிரசித்தி பெற்றிருந்ததன் காரணமாக, அவருடைய மறையுரையைக் கேட்க இலட்சக் கணக்கில் விசுவாசிகள் வந்து குவிந்தனர். நெருக்கடியைக் குறைக்கும் நோக்கத்தில் மறையுரை இடம்பெற்ற தினங்களில் அரச நீதிமன்றத்தையும் மூடி விடுவார்கள். இவை எல்லாமே 5 வருடங்களுக்கு மாத்திரமே இடம்பெற்றது.

புதுமையின் நாயகன்:

பேராசிரியராக அல்லாமல் நாவண்மை படைத்த மறைபோதகராகத் தான் புனிதர் ஏராளமான ஆன்மாக்களை அறுவடை செய்ய முடிந்தது. மரியன்னையிடம் மிக அதிக பக்தி, பற்று தொடர்பு கொண்டிருந்த புனிதர் தாழ்ச்சியோடு சேர்ந்து அனைத்து நற்குணங்களையும் கொண்டிருந்தார்.
இவர் செய்த புதுமைகள் நாத்திகரையும் விசுவாசம் குன்றியவர்களையும் மனந்திருப்பியது. புனிதர் கரங்களில் ஏந்தியிருந்த தூய நற்கருணையை மண்டியிட்டு ஆராதிக்கும் வரை ஒரு கழுதை அதன்முன் வைத்திருந்த புல்லரிசி கூல வகை உணவை 3 நாட்களாக உண்ணவில்லை. புனிதரை சோதித்துப் பார்க்க நஞ்சு கலந்த உணவை அவருக்கு அளித்தனர். தீர்க்கதரிசனமாகத் தெரிந்து கொண்ட புனிதர் சிலுவை வரைந்து உணவை உட்கொண்டார் ஒன்றும் ஆகவில்லை.
பதுவையிள் அருகில் ப்ரென்டா ஆற்றங்கரையில் மறையுரை ஆன்றிய புனிதரின் அருகில் உரையைக் கேட்க ஏராளமான மீன்கள் உற்சாகத்துடன் துள்ளி எழுந்தன. மறையுரை கேட்க மனமற்ற மக்கள் வெட்கடையுமாறு புனிதர் இப்புதுமையை ஆற்றினார். இன்னும் ஒரே நேரத்தில் இரண்டு நிகழ்வுகளில் கலந்து கொண்ட புதுமை, தாயை உதைத்த காலை வெட்டிய மகனின் காலை ஒட்ட வைத்த புதுமை ‘’உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் இதயமும் இருக்கிறது’’ (மத்.6:21) என்ற இறைவார்த்தையை மையமாக கொண்டு நிகழ்ந்த புதுமை.
புனிதர் மிகுந்த களைப்புடன் வெகுதூரம் நடந்து கொண்டிருந்த போது கரத்தைக் காரண் சொன்ன பொய் மெய்யான புதுமை இவ் வாறு அடுக்கிக் கொண்டே போகலாம். புதுமைகளின் இருப் பிடமாக விளங்கிய இவரை கோடியற்புதர் என்றும் அழைக்கின்றோம். ஒருமுறை திருத்தந்தை 9ஆம் கிரசோரியார் உரோமையில் புனிதரின் மறையுரையைக் கேட்க நேர்ந்தது. புனிதரின் மறைநூல் ஞானத்தைக் கண்டு பெரும் வியப்படைந்து அந்தோனியாரை ‘வேதாகமப் பேழை’ என்று அழைத்தார்.

இறுதி நாட்கள்:
அந்தோணியார் பதுவா நகருக்கு போதித்து வந்த போது உடல் நிலை மிகவும் மோசமானது. எனவே அவர் தனது இறுதி நாட்கள் அருகில் இருப்பதை உணர்ந்தார். தன்னை பதுவா நகருக்கு கொண்டு செல்ல கேட்டு கொண்டார்.
ஆனால் அவர் பதுவா வருவதற்கு முன்பே Arcella என்னும் ஊரிலே தனது 36 வயதில் இறந்தார். அவர் இறந்த ஒரு வருடத்தில் அவருக்கு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

------------------------------------------------------------------------

No comments:

Post a Comment