KARUNANIDHI Vs JEYALAITHA
.உண்மையைச் சொல்லப் போனால் கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வளர்ந்தவர் தான் கருணாநிதி, அவர் கூட்டங்களில் பேச ஆரம்பித்த போது அவருக்குக் கிடைத்த சம்பளம் ஒரு சிங்கிள் டீயும், இரண்டு வடையும் தான் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கருணாநிதியிடம் கணக்கு கேட்டு அதைத் தராததன் காரணமாக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக. அதை மறந்து, 'கணக்கு காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண' என்ற தலைப்பிலே கருணாநிதி தன்னுடைய கணக்கைக் காட்டியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது. இதை கடந்த நூற்றாண்டு மற்றும் இந்த நூற்றாண்டின் இணையற்ற ஜோக் என்று சொல்லலாம். இப்படிப்பட்ட சிறந்த நகைச்சுவைக்காக மாநில அளவிலோ, தேசிய அளவிலோ, ஏன் உலக அளவிலோ கூட கருணாநிதிக்கு விருது கிடைத்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் மூலம் சென்னைக்கு வந்ததாக கருணாநிதியே பல முறை பேசி இருக்கிறார். இது குறித்து 'வனவாசம்' புத்தகத்தின் முதல் பதிப்பில் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக இருந்த கவியரசர் கண்ணதாசன் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். உண்மையைச் சொல்லப் போனால் கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வளர்ந்தவர் கருணாநிதி. இவர் கூட்டங்களில் பேச ஆரம்பித்த போது இவருக்குக் கிடைத்த சம்பளம் ஒரு சிங்கிள் டீயும், இரண்டு வடையும் தான். இப்படிப்பட்ட கருணாநிதி இப்பொழுது திடீரென்று 'கணக்கு காட்டுகிறேன்' என்ற தலைப்பில், தன்னுடைய குடும்பம் ஓரளவு வசதியுள்ள குடும்பம் என்று ஒரு புதிய தகவலை தற்போது வெளியிட்டு இருக்கிறார். 16.1.1946 அன்று கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில் பங்காளியாக சேர விண்ணப்பித்த போது, அந்த விண்ணப்பப் படிவத்தில் தனக்கு நஞ்சை, புஞ்சை நிலங்கள் ஏதுமில்லை என்றும், வீட்டு மனை ஏதுமில்லை என்றும் தெரிவித்து, தன் வசம் 'நகை, பாத்திரம் வகையறா சுமார் ரூ. 1,000' இருக்கிறது என்று கருணாநிதியே கைப்பட எழுதியிருக்கிறார். கருணாநிதியின் தந்தை முத்துவேலர் வசம் என்ன இருந்தது என்பதெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த கூட்டுறவு மாத இதழில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கருணாநிதியும், கவியரசர் கண்ணதாசனும் சென்னையில் இருந்து சேலத்திற்கு ரயிலில் பயணம் செய்த போது, உணவு வாங்கி சாப்பிட பணமில்லாத நிலை இருந்த போது, 'தனக்கு பசி தாங்கவில்லை' என்று கவியரசர் கண்ணதாசன் கருணாநிதியிடம் சொன்னதாகவும், அதற்கு பதில் அளித்த கருணாநிதி, அருகில் இருந்த பழக் கூடையை காட்டி 'திருடலாமா?' என்று கேட்டதாகவும், கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய 'வனவாசம்' புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் 1949ம் ஆண்டே மாத ஊதியமாக 500 ரூபாய் சம்பாதித்ததாக கூறியிருக்கிறார். 'மணமகள்' திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதி 10,000 ரூபாய் பெற்றதாகவும், 'இருவர் உள்ளம்' திரைப்படத்திற்காக 20,000 ரூபாயை பெற்றதாகவும் கருணாநிதி கூறி இருக்கிறார். அப்படி என்றால் கருணாநிதி எந்த ஆண்டிலிருந்து வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து கொண்டு வருகிறார்? முதன் முதலில் வருமான வரி தாக்கல் செய்த போது அவருடைய ஆண்டு வருமானம் என்ன? அப்போது எவ்வளவு வருமான வரி கட்டினார்? ஆண்டுதோறும் செலுத்திய வருமான வரி எவ்வளவு? என்பதை முதலில் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுடைய வீடுகளை விட வசதி குறைவான வீட்டில் எளிமையாக வாழ்ந்து வருவதாகவும், அரசு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றும் கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார். கருணாநிதிக்கு கோபாலபுரத்திலே ஒரு வீடு, சி.ஐ.டி. காலனியில் ஒரு பங்களா; கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலினுக்கு வேளச்சேரியில் ஒரு பங்களா; சென்னை போட் கிளப்பில் ஒரு மாளிகை; பேரன் கலாநிதி மாறனுக்கு சென்னை போட் கிளப்பில் பிரம்மாண்டமான மாளிகை, பேரன் தயாநிதி மாறனுக்கு போட் கிளப்பில் மிகப் பெரிய பங்களா, மகள் செல்விக்கு பெங்களூரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் மாளிகைகள், பண்ணை வீடுகள்; தென் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 25க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள், நாளிதழ்கள், வார இதழ்கள், பேரன் பெயரில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம், சன் ஏர்லைன்ஸ், மு.க. அழகிரிக்கு மதுரையில் பல ஏக்கர் நிலங்கள், பண்ணை வீடுகள்; வர்த்தக பலமாடி கட்டடங்கள்; பொறியியல் கல்லூரி; மு.க. தமிழரசு, மு.க. முத்து, கனிமொழி என அனைவரும் மாடமாளிகைகளில் வாழ்ந்து கொண்டு மக்கள் சொத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர். பேரன்கள், பேத்திகள் உட்பட, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனி ஆடம்பர மாளிகைகளும் ஏராளமான அசையா சொத்துக்களும் உள்ளன. கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து சினிமாத் துறையையே கபளீகரம் செய்துவிட்டனர். தன்னுடைய கோபாலபுரத்தின் பின் பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 700 சதுர அடி நிலத்தை கருணாநிதி ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். டாடா நிறுவனம் கருணாநிதியின் துணைவிக்கு ரூ. 300 கோடி மதிப்பில் மிகப் பெரிய மாளிகை கட்டித் தர இருப்பதாக நீரா ராடியா- ராசாத்தி உரையாடல்களில் இருந்து தெரிய வருகிறது. செல்வி மற்றும் ஸ்டாலின் மூலமாக ரூ. 600 கோடியை தயாளு பெற்றுக் கொண்டுதான் தயாநிதி மாறனுக்கு மந்திரி பதவியை கொடுத்ததாக அதே நீரா ராடியா உரையாடல்கள் தெரிவிக்கின்றன. உண்மை நிலை இவ்வாறிருக்க, கருணாநிதி தன்னை யோக்கியர் போல சித்தரித்துக் கொண்டிருப்பது எள்ளி நகையாடத்தக்கது. கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம், சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் ரூ. 100 கோடி தரப்பட்டதாகவும், அதில் ரூ. 22 கோடி அளவிற்கு வருமான வரி கட்டியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். பத்திரிகை எரிப்பு சம்பவத்திற்கு பிறகு, 200ம் ஆண்டு இறுதியில், 'முழு' தொகை கருணாநிதிக்கு தரப்பட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியானது. அதனையடுத்து 'கண்கள் பனித்தன, இதயம் இனித்தது' என்று கருணாநிதியும் அறிவித்தார். அதற்கு வருமான வரி கட்டியதாக கருணாநிதி அறிவிக்கவில்லையே?. இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி கருணாநிதியின் ஆட்சி. வீராணம் ஊழல், பூச்சிகொல்லி மருந்து ஊழல், மஸ்டர் ரோல் ஊழல், மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல், கள்ள லாட்டரி சீட்டு விற்பனை என அனைத்திற்கும் மூலக் காரணமானவர் கருணாநிதி. விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர் என்று சர்க்காரியா கமிஷனிடம் சான்றிதழ் பெற்றவர். இப்படி இருக்கும் கருணாநிதி, லஞ்சம், ஊழல் ஆகியவற்றைப் பொறுத்தவரை தான் ஒரு நெருப்பு என்று கூறியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. பஞ்சுப் பொதியிலே தீப்பொறி பட்டால் எப்படி தீப்பிடித்துக் கொள்ளுமோ அது போல, தன்னிடம் உள்ள ஊழலை உலகம் முழுவதும் பரப்புவதில் தான் ஒரு நெருப்பு என்ற அர்த்தத்தில் கூறி இருக்கிறார் போலும்!. பொருளாதாரம், விஞ்ஞானம், இலக்கியம், சமாதானம் போன்றவற்றிற்காக நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது. சிறந்த நகைச்சுவைக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டால், அந்தப் பரிசுக்குத் தகுதியானவர் கருணாநிதி தான். அந்த அளவுக்கு 'கணக்கு காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண' என்ற தலைப்பில் வெளி வந்துள்ள கருணாநிதியின் அறிக்கையை படித்து தமிழக மக்கள் விலா எலும்பு வலிக்க சிரித்து உடல் வலி வந்தது தான் மிச்சம்!. தனது 60 ஆண்டுகால பொது வாழ்வில், ஏழை மக்களை ஏமாற்றி, 'தன்' குடும்ப மக்களை ஏற்றிவிட்டிருக்கும் கருணாநிதி, ஆட்சி முடியும் தருவாயில் பொய்க் கணக்கை காட்டி மீண்டும் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். கருணாநிதியின் பொய்க் கணக்கிற்கு பலமான பதிலடி கொடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். இவ்வாறு தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார். Posted by செழியா at 1:26 PM , 2 comments Labels: கருணாநிதிக்கு கிடைத்த சம்பளம் மாவீரர் நாள் - 2010 - வைகோ பேச்சு வீடியோ
Mine coins - make money: http://bit.ly/money_crypto
No comments:
Post a Comment