JHANSI KI RANI BRAVE DEATH BORN
1828 NOVEMBER 19 - JUNE 18,1858
ஜான்சியின் ராணி லக்ஷ்மிபாய் களத்தில் இருந்து போரிட்டதை நேரில் பார்த்த முதல் ஆங்கிலேயத் தளபதி கேப்டன் ராட்ரிக் பிரிக்ஸ் என்பவர்தான்.
குதிரையின் கடிவாளத்தை பற்களால் கடித்து இழுத்தவாறு, இரு கரங்களிலும் வாளேந்தி அவர் போரிடும் வேகத்தை பார்த்து திகைத்து நின்றார் ராட்ரிக்.
ராட்ரிக்குக்கு முன்னதாக ராணி லக்ஷ்மிபாயை நெருக்கமாக பார்க்கும் வாய்ப்பு ஜான் லெளங் என்ற ஆங்கிலேயருக்கு கிடைத்தாலும், அந்த சந்திப்பு போர்க்களத்தில் அல்ல, ராணியின் அரண்மனையில் நிகழ்ந்தது.
ஜான்சியின் அரசர் கங்காதர் ராவ் நெவல்கரின் மனைவியான ராணி லக்ஷ்மிபாய்க்கு பிறந்த ஆண் குழந்தை நான்கு மாதங்களிலேயே இறந்துபோக, தம்பதிகள் வாரிசு வேண்டும் என்பதற்காக தத்து எடுத்து, அந்த குழந்தைக்கு தாமோதரன் என்று பெயர் சூட்டினார்கள்.
சில காலத்திலேயே அரசர் கங்காதர் ராவ் இறக்க, அரசராக மகனை அரியணையில் அமர்த்த ராணி லக்ஷ்மிபாய் முடிவெடுத்தார். ஆனால், கிழக்கிந்திய நிறுவனம், தனது அவகாசியிலிக் கொள்கையின்படி, தத்துப் புத்திரனை அங்கீகரிக்க மறுத்தது. மேலும் ஜான்சியின் கோட்டையில் இருந்து ராணி வெளியேறி, நகரில் உள்ள அரண்மனையில் தங்க அறிவுறுத்தப்பட்டார். இதுபோன்ற இக்கட்டான சந்தர்ப்பத்தில் தான் ஜான் லெளங், ராணியை சந்தித்தார்.
கோட்டையில் வசித்து வந்த ராணி லக்ஷ்மிபாய், 'ராணி மஹல்' என்ற மூன்று மாடி கொண்ட சாதாரண அரண்மனைக்கு இடம்பெயர்ந்திருந்தார்.
பிரிட்டன் அரசுக்கு எதிரான வழக்கு ஒன்றில் சமீபத்தில் வெற்றி பெற்றிருந்த வழக்கறிஞரான ஜான் லெளங்கை தனது வழக்கில் வாதாட நியமிப்பது தொடர்பாக பேசுவதற்கு ராணி விரும்பியதால்தான், ஜான் லெளங் அவரை சந்திக்க வந்திருந்தார்.அந்த சந்திப்பு நிகழ்ந்த பந்தலில் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த திரைக்கு பின் ராணி அமர்ந்திருந்தார். அந்த சமயத்தில் ராணியின் தத்துப் புத்திரன் தாமோதர் அந்த திரையை விளையாட்டுத்தனமாய் விலக்கிவிட்டான்.
ஜான் லெளங், ராணி லக்ஷ்மிபாயை நேரடியாகப் பார்த்துவிட்டார். அந்நிய ஆண்கள் நேரடியாக பெண்களை பார்க்க முடியாத காலம் அது.பின்னர், ரெனர் ஜெரொஷ் தாம் எழுதிய 'The Queen of Jhansi, Rebel Against Will' என்ற புத்தகத்தில், இந்த சம்பவம் பற்றியும், ராணியின் தோற்றத்தைப் பற்றியும் ஜான் லெளங் கூறியதை குறிப்பிட்டுள்ளார்.
'நடுத்தர உயரம் கொண்ட வலுவான பெண் ராணி லக்ஷ்மிபாய். இளம் வயதில் அவரது முகம் அழகாக இருந்திருக்கலாம், ஆனால் இப்போது பார்த்தால் அவரை அழகி என்று சொல்லமுடியாது. ஆனால் அவரது முகத்தில் ஒருவிதமான ஈர்ப்பு இருந்தது. அவரது முகம் தேவைக்கு அதிகமாக வட்டமாக இருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அவரது கண்கள் மிகவும் அழகாகவும், மூக்கு கூர்மையாகவும் இருந்தது. சிவந்த நிறம் என்று சொல்ல முடியாது. அழகாக இல்லை. அவர் எந்த நகைகளையும் அணிந்திருக்கவில்லை. அவர் உடுத்தியிருந்த வெண்ணிற மல் சேலையில் அவரது உடல்வாகு தெளிவாகத் தெரிந்தது. ராணியின் ஆளுமையை சற்று குறைத்தது அவரது உடைந்த குரல் மட்டுமே' என்பது தான் ராணி லக்ஷ்மிபாய் பற்றிய ஜான் லெளங்கின் வர்ணனை.ராணியின் குதிரை சவாரி
போர்க் களத்தில் ராணி லக்ஷ்மிபாயை நேரில் பார்த்த முதல் ஆங்கிலேயத் தளபதி கேப்டன் ராட்ரிக் பிரிக்ஸ், ராணி மீது தானே நேரடியாக தாக்குதல் நடத்த முடிவு செய்தார்..
ராணியை சுற்றியிருந்த குதிரைப் படையினர் எதிராளிகள் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.
அவர்களில் சிலர் காயமடைய, பலர் இறக்க, இப்போது ராணியின் அருகில் செல்ல முற்பட்டார் ராட்ரிக்.
அந்த சமயத்தில் ராட்ரிக்கின் பின்புறத்தில் ஜெனரல் ரோஸின் ஒட்டகப்படை நுழைந்தது.
எதிர்த் தாக்குதலுக்காக ஒட்டகப்படையை பயன்படுத்தும் திட்டம் இருந்தது. ஆனால் தற்போது ஆங்கிலேயப் படைக்கு ஊக்கமளிப்பதற்காக அவை திடீரென போரில் ஈடுபடுத்தப்பட்டன. இதைக் கண்ட ராணி திகைத்துப்போனார்.
ராணியின் படையினர் களத்தில் இருந்து பின்வாங்கவில்லை என்றாலும், அவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையத் தொடங்கியது.பிரிட்டன் சிப்பாய்கள்
போர்க்களத்தில் முன்னணியில் இருந்த ஜான் ஹெனரி சில்வெஸ்டர் 'ரீகலெக்ஷன் ஆஃப் மால்வா அண்டு செண்ட்ரல் இந்தியா' என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார்: "என் பின்னே வாருங்கள் என்று திடீரென்று ராணி கத்தினார். அவரது பின்னே 15 குதிரைகள் கொண்ட குழு சென்றது. அவர்கள் வெளியேறிய வேகத்தில் என்ன நடக்கிறது என்பதே ஆங்கிலேய சிப்பாய்களுக்கு புரியவில்லை. சட்டென்று சுதாரித்துக் கொண்ட ராட்ரிக் தனது சகாக்களுடன் சேர்ந்து ராணியை துரத்தினார்."
ராணியும் அவரது சிப்பாய்களும் ஒரு மைல் தொலைவில் இருந்த கோட்டா கி சராய் என்ற இடத்திற்கு சென்றடைந்த சமயத்தில் கேப்டன் பிரிக்ஸ்ஸின் குதிரைப் படையினர் அவர்களை நெருங்கிவிட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் சண்டை துவங்கியது. ராணியின் தரப்பில் இருந்த சிப்பாய் ஒருவர், இரண்டு ஆங்கிலேயர்களை சமாளிக்கும் திறன் பெற்றவர்களாக இருந்தனர். ராணியின் பின்புறம் இருந்து ஒரு ஆங்கிலேய சிப்பாய் ராணியின் இடது பக்கவாட்டில் இருந்து அவரது மார்பில் வாளை செருகினார். ஆனால், அது ஆழமான காயத்தை ஏற்படுத்தவில்லை. உடனே திரும்பிய ராணி, தன்னை தாக்கியவர் மீது முழு பலத்துடன் வாளை சுழற்றினார்.
துப்பாக்கி குண்டு
ராணிக்கு ஆழமான காயமில்லை என்றாலும், ரத்தம் அதிகமாக வெளியேறத் தொடங்கியது. அங்கிருந்து குதிரையேறி தப்பிக்க முயன்றார் ராணி. குதிரை நீரோடை ஒன்றின் அருகில் வந்து நின்றுவிட்டது.
அந்த சிற்றோடையை கடந்து சென்றுவிட்டால் யாருமே பிடிக்க முடியாது என்று ராணி நினைத்தார்.
குதிரையை முன் நோக்கி செலுத்தினார், ஆனால் காயமடைந்து, களைப்படைந்திருந்த குதிரை நகராமல் நின்றுவிட்டது.
எவ்வளவு விரட்டியபோதும் குதிரை ஓர் அடி கூட எடுத்து வைக்கவில்லை. அப்போது ராணியின் இடுப்பில் வேகமாக துப்பாக்கி குண்டு ஒன்று பாய்ந்தது. ராணியின் இடதுகையில் இருந்த வாள் மீதான பிடி தளர்ந்து, ராணி குதிரையில் இருந்து கீழே வீழ்ந்தார்.
இடுப்பில் ஏற்பட்ட காயத்தில் இருந்து வழியும் ரத்தத்தை தனது ஒரு கையை வைத்து நிறுத்த ராணி முயற்சி செய்தார்.ராணியின் மீது கொலைவெறி தாக்குதல்
ஆண்டோனியா ஃப்ரேஜர் எழுதிய 'த வாரியர் குவின்' என்ற புத்தகத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்: "இதற்குள் ஓர் ஆங்கிலேயர் ராணியின் குதிரையின் அருகில் நெருங்கிவிட்டார். ராணியை வெட்ட அவர் தனது வாளை உயர்த்தினார். அதைத் தடுக்க ராணியின் வாளிருந்த வலது கரம் தானாகவே உயர்ந்தது. ஆனால் நொடிப்பொழுதில் ஆங்கிலேயரின் வாள் ராணியின் தலையை பதம் பார்த்தது. தலை பிளந்து கொட்டிய ரத்தம் கண்களில் வழிய, அவரது கண்கள் செருகின".
"அந்த நிலையிலும், தன்னைத் தாக்கிய ஆங்கிலேய சிப்பாயி மீது பதில் தாக்குதல் நடத்தினார். ஆனால் அது எதிரியின் இடுப்பில்தான் காயம் ஏற்படுத்தியது".
இவை அனைத்தும் துரித கதியில் நடந்து முடிய, ராணியின் சிப்பாய் ஒருவர் குதிரையில் இருந்து குதித்து, ராணியை தனது கையில் ஏந்திக் கொண்டு அருகில் இருந்த ஆலயத்திற்குள் நுழைந்துவிட்டார். அது வரை ராணியின் உடலில் உயிர் இருந்தது.
ஆலயத்தில் இருந்த பூசாரி, ராணியின் காய்ந்துப்போன உதடுகளில், கங்கை நீரை விட்டார். ராணி மயக்க நிலைக்கு சென்றுவிட்டார்.
ஆலய வளாகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சண்டை தொடர்ந்தது. ராணியின் தரப்பில் இருந்து போரிட்ட கடைசி சிப்பாயும் இறந்தபிறகு தங்கள் வேலை முடிந்துவிட்டது என்று ஆங்கிலேய சிப்பாய்கள் நினைத்தனர்.தாமோதருக்காக...
அப்போது, "அவர்கள் கோயிலுக்குள் இருக்கிறார்கள், தாக்குங்கள், இன்னும் ராணி இறக்கவில்லை" என்று ராட்ரிக் உரத்தக் குரலில் கத்தினார்.
ஆலயத்திற்குள் இருந்த ராணியின் காதிலும் இந்த வார்த்தைகள் விழுந்தன. பலமான காயத்தால் மூடிக் கிடந்த அவர், சிரமத்துடன் கண்களை திறந்தார். ஆனால், எதுவுமே தெளிவாகத் தெரியவில்லை.
"தாமோதர்... நான் உன்னை... விட்டுச் செல்கிறேன்... அவனை முகாமுக்கு அழைத்துச் செல்லுங்கள்... ஓடுங்கள்... அவனை விரைவாக கொண்டு செல்லுங்கள்..." என்று தடுமாறியபடியே வார்த்தைகளை உச்சரித்தார்.
மிகுந்த சிரமத்துடன் தன் கழுத்தில் கிடந்த முத்துமாலையை கழற்ற முயன்றார். ஆனால் அதற்குள் மீண்டும் மயங்கிவிட்டார்.
ராணியின் கழுத்தில் இருந்த முத்துமாலையை கழற்றிய கோயில் பூசாரி, அதை அவரது மெய்காப்பாளரிடம் கொடுத்து, "இதை வைத்துக்கொள்... தாமோதருக்காக" என்று சொன்னார்.ராணியின் சடலம்
ராணியின் சுவாசம் திடீரென்று வேகமானது. திடீரென்று ராணி மீண்டும் பேசத் தொடங்கினார்.
"என்னுடைய சடலம் ஆங்கிலேயர்களின் கைகளில் சிக்கக்கூடாது" என்று சொல்லியவாறே வீரமங்கை ஜான்சி ராணி லக்ஷ்மிபாயின் தலை சாய்ந்துவிட்டது. மூச்சு நின்றுவிட்டது. வீரமங்கை ஒருவரின் இறுதி அத்தியாயம் அந்த ஆலயத்திற்குள் எழுதப்பட்டது.
ராணியின் சிப்பாய்கள், துரிதமாக செயல்பட்டு மரத்துண்டுகளையும் பொருட்களையும் சேகரித்தனர். அவற்றை ஓரிடத்தில் குவித்து அதன்மேல் ராணியின் சடலத்தை வைத்து தீமூட்டினார்கள்.
ஆலயத்தின் நாலாபுறமும் துப்பாக்கி குண்டுகள் முழங்கிக் கொண்டிருந்தன. நூற்றுக்கணக்கான ஆங்கிலேய சிப்பாய்கள் ஆலயத்தை சுற்றி வளைத்தனர்.
ஆலயத்தின் உட்புறமிருந்து மூன்று துப்பாக்கிகள் ஆங்கிலேயர்கள் மீது தாக்குதல் நடத்தின. நூற்றுக்கணக்கான துப்பாக்கிகளின் முன் மூன்று எம்மாத்திரம். ஒவ்வொன்றாய் அடங்க, ஆலயத்தில் மயான அமைதி நிலவியது.தீப்பிழம்புகள்
ஆங்கிலேயர்கள் ஆலயத்திற்குள் நுழைந்தபோது அங்கு நிசப்தம் நிலவியது. முதலில் உள்ளே நுழைந்தார் ராட்ரிக் பிரிக்ஸ்.
ராணியின் சிப்பாய்களும், பூசாரியும் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். ஒருவர்கூட உயிர் தப்பவில்லை. ஆங்கிலேயர்கள் தேடியது ஒரேயொரு சடலத்தைத்தான்.
அங்கு எரிந்துக் கொண்டிருந்த நெருப்பின் மீது ஆங்கிலேயர்களின் கவனம் சென்றது. அதன் அருகில் சென்று தங்களின் ஷூ அணிந்த காலால் நெருப்பை அணைக்க முயன்றனர்.
மனித உடல் ஒன்று எரியூட்டப்பட்டதை ஆங்கிலேய சிப்பாய்கள் உணர்ந்தனர். ராணியின் உடலின் எலும்புகள் எரிந்து கிட்டத்தட்ட சாம்பல் ஆகியிருந்தது.
இந்த சண்டையில் கலந்துக் கொண்ட கேப்டன் க்லேமெண்ட் வாக்கர் பிறகு ஜான்சி ராணி லக்ஷ்மிபாயின் இறுதி கணங்களைப் பற்றி எழுதினார். "எங்கள் சண்டை முடிந்துவிட்டது. சொற்ப வீரர்களுடன் இருந்த ஒரு பெண் கையில் ஆயுதங்களை வைத்திருந்தார். அவர், தனது சிப்பாய்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார். சைகைகளாலும், உரத்த குரல் கொடுத்தும் வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். ஆனால் அதனால் பெரிய அளவு பயன் எதுவும் ஏற்படவில்லை.
சில நிமிடங்களிலேயே அந்த பெண்ணை நாங்கள் கட்டுப்படுத்திவிட்டோம். எங்களுடைய ஒரு வீரரின் வாள் அவரது தலையை தாக்கியதுமே எல்லாமே முடிந்துவிட்டது. ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகுதான், அந்த பெண் வேறு யாருமல்ல, ஜான்சி ராணி லக்ஷ்மிபாய் என்று தெரிந்தது."
தாந்த்யா தோபே
ராணி லக்ஷ்மிபாயின் மகன் தாமோதர் போர்க்களத்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். ஜான்சி ராணி, தனது முதுகில் எப்போதுமே சுமந்த அன்பு மகன் தாமோதர் பற்றி 'ஹிரோயின்ஸ்' என்ற தனது புத்தகத்தில் இரா முகோடி இவ்வாறு குறிப்பிடுகிறார்:
"ராணி இறந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, அவரது மகன் தாமோதர் ஆங்கிலேயரிடம் சரணடைந்தார். அவருக்கு பிரிட்டன் அரசு ஓய்வூதியம் வழங்கியது. 58 வயதில் தாமோதர் இறந்தபோது, அவரிடம் ஒன்றுமே இருக்கவில்லை. அவரது பரம்பரையினர் தற்போதும் இந்தூரில் வசிக்கிறார்கள். தங்களை 'ஜான்சிவாலே' என்று கூறிக் கொள்கின்றனர்" என்று சரித்திரத்தை பதிவு செய்கிறார் இரா முகோடி.இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக ஜயாஜீராவ் சிந்தியா, ஜெனரல் ரோஜ் மற்றும் சர் ராபர்ட் ஹைமில்டனுக்கு குவாலியரில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்.
ஜான்சி ராணி லக்ஷ்மிபாயின் மரணம் கிளர்ச்சியாளர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் ஊக்கமிழந்த அவர்களை இரண்டே நாட்களில் வீழ்த்திய ஆங்கிலேயர்கள் குவாலியரை கைப்பற்றினார்கள்.
அங்கிருந்து நானா சாஹப் தப்பித்துவிட்டார். ஆனால் தாந்த்யா தோபேவையும் அவரது ஆதரவாளர்களையும், அவர்களது நண்பரான நவாடின் அரசர் ஏமாற்றிவிட்டார்.
ஆங்கிலேயர்களிடம் பிடிபட்ட தாந்த்யா தோபே. குவாலியருக்கு அருகில் உள்ள சிவ்புரி என்ற இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
ஜான்சி ராணி லக்ஷ்மிபாயின் பெயர் அமரத்துவம் பெற்ற வீராங்கனையாக இந்திய சரித்திரத்தில் இடம் பெற்றுவிட்டது.
ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மதிப்பார்ந்த மாநிலமான ‘ஜான்சியின்’ ராணியாக இருந்தவர். இவர் 1857 ல் தொடங்கிய இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் போரில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராவார். வீரம் மற்றும் தைரியத்தின் மறுவடிவமாக இருந்த ராணி லட்சுமிபாய் அவர்களின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் மற்றும் வீரச்செயல்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு: 19 நவம்பர் 1828
பிறந்த இடம்: வாரணாசி, இந்தியா
இறப்பு: 18 ஜூன் 1858
தொழில்: ஜான்சியின் ராணி, விடுதலைப் போராட்ட வீரர்
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், 19 நவம்பர் 1828 ஆம் ஆண்டு காசியில் (இப்போதைய வாரணாசி) ஒரு மராத்தியர் குடும்பத்தில் பிறந்தார். அவரது குழந்தை பருவத்தில், அவரை ‘மணிகர்ணிகா’ என்ற பெயரில் அழைக்கப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரை அன்போடு ‘மனு’ என்று அழைத்தனர்.
ஆரம்ப வாழ்க்கை
தனது நான்காவது வயதிலேயே அவரது தாயை இழந்ததால், குடும்பப் பொறுப்புகளனைத்தும் அவரின் தந்தை மீது விழுந்தது. பள்ளிப்பாடம் படித்து கொண்டிருந்த சமயத்தில், லக்ஷ்மிபை அவர்கள் அவர் குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் மற்றும் கத்தி சண்டை போன்ற தற்காப்புக் கலைகளை முறையாக பயிற்சி மேற்கொண்டு கற்றார்.
இல்லற வாழ்க்கை
1842 ஆம் ஆண்டு, ஜான்சியின் மகாராஜாவாக இருந்த ‘ராஜா கங்காதர் ராவ் நிவால்கர்’ என்பவரை மணமுடித்தார். திருமணத்திற்கு பின், அவருக்கு ‘லட்சுமி பாய்’ என்ற பெயர் வழங்கப்பட்டது. அவரது திருமண விழா, பழைய ஜான்சி நகரில் அமைந்துள்ள, விநாயகர் கோவிலில் நடைபெற்றது. 1851ல், அவர்கள் இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான். துரதிருஷ்டவசமாக, அந்த குழந்தையால் நான்கு மாதங்களுக்கு மேல் உயிர்வாழ முடியவில்லை.
1853 ல், மகாராஜா கங்காதர் ராவின் உடல்நிலை பலவீனமானதால், அவர்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்தனர். இந்தத் தத்தெடுப்பின் மீது ஆங்கிலேயர்கள் பிரச்சனை எழுப்பக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்த லட்சுமிபாய் அவர்கள், உள்ளூர் ஆங்கிலேய பிரதிநிதிகளை சாட்சியாக வைத்து இந்த தத்தெடுப்பை நடத்தினார். நவம்பர் 21 ஆம் தேதி, 1853 ஆம் ஆண்டு மகாராஜா கங்காதர் ராவ் மரணமடைந்தார். அந்த காலகட்டத்தில், பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ‘லார்ட் தல்ஹௌசீ’ என்பவர் ஆட்சியில் இருந்தார்.
படையெடுப்பு
ராணி லட்சுமிபாய் அவர்கள், தத்தெடுத்த குழந்தைக்கு ‘தாமோதர் ராவ்’ என்று பெயரிட்டார். இந்துமத மரபின் படி, அக்குழந்தையே லட்சுமிபாய் அவர்களின் சட்ட வாரிசாக இருந்தது. இருப்பினும், ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அந்த குழந்தையை சட்ட வாரிசாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். மறுப்பு கோட்பாட்டின் (Doctrine of Lapse) படி, லார்ட் தல்ஹௌசீ அவர்கள் ஜான்சி அரசைப் பறிமுதல் செய்ய முடிவுசெய்தார். ராணி லட்சுமிபாய் அவர்கள், ஒரு ஆங்கிலேய வழக்கறிஞரிடம் சென்று ஆலோசனைக் கோரினார். அதன்பிறகு, அவர் லண்டனில் அவரது வழக்கிற்கான ஒரு முறையீட்டை மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஆங்கிலேய அதிகாரிகள், லட்சுமிபாய் அவர்களின் அரசு நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், ராணி லட்சுமிபாய் அவர்களை ஜான்சி கோட்டையை விட்டு செல்லுமாறு ஒரு ஆணை நிறைவேற்றப்பட்டதால், ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், ஜான்சியிலுள்ள ‘ராணி மஹாலுக்கு’ சென்றார். அந்நேரத்திலும், லட்சுமிபாய் அவர்கள், ஜான்சி அரசைப் பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.
போர்
ராணி லக்ஷ்மி பாய் அவர்களை ஜான்சியை விட்டு வெளியேறி சொல்லி பிறப்பித்த ஆணை, ஜான்சியை எழுச்சியின் இடமாக மாற்றியது. ஜான்சி ராணி அவர்கள் தனது நிலையை வலுப்படுத்த தொடங்கினார். பிறரது ஆதரவை நாடிய அவர், அவரது ஆதரவாளர்களைக் கொண்டு ஒரு தொண்டர் படையை உருவாக்கினார். அவர் உருவாக்கிய இராணுவத்தில் ஆண்கள் மட்டும் முக்கிய பங்கு வகிக்கவில்லை, அதில் பெண்களும் கூட தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது நடந்த கிளர்ச்சியில், ராணி லட்சுமிபாய், அவரது தளபதிகளுடன் இணைந்து போர் புரிந்தார்.
1857 ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து அக்டோபர் வரை இருந்து, ராணி லக்ஷ்மி பாய் அவர்கள் அவரது அண்டை நாடுகளான ஓர்ச்சா மற்றும் டாடியாவை படையெடுத்து, அந்நாட்டுப் படைகளின் மூலமாக ஜான்சியைப் பாதுகாத்தார். இதுவே, ஜனவரி 1858ல், பிரிட்டிஷ் இராணுவம், ஜான்சியை நோக்கி படையெடுத்தற்கான காரணமாகும். ஜான்சிக்கும், பிரிட்டிஷ் ராணுவத்திற்குமான மோதல் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தது. இறுதியாக, இரண்டே வாரங்களில் ஆங்கிலேய அரசு ஜான்சி நகரத்தைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. எனினும், அவர் ஒரு ஆண்மகன் வேடம் பூண்டிருந்ததால், அவரை யாரும் அடையாளம் காணவில்லை. தனது வளர்ப்பு மகனை மடியில் ஏந்தியபடியே தப்பித்தார்.
இறப்பு
ஆங்கிலேயர் பிடியிலிருந்து தப்பித்த ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், கல்பியில் தஞ்சம் அடைந்தார். அங்கு அவர், 1857ல் நடந்த கிளர்ச்சியில் பங்கேற்ற ஒரு மாவீரரான ‘தந்தியா டோப்’ என்பவரை சந்தித்தார். ஆங்கிலேயர்களின் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. ஆங்கிலேயப் படையை எதிர்த்து, கோட்டாகி சேராய் என்ற இடத்தில் ஜான்சிராணி போரிட்டார். ஆனால், ஆங்கிலேயர்களின் நவீன போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல், 18 ஜூன் 1858 ஆம் ஆண்டு ஜான்சி ராணி அவர்கள் இறந்தார். போர்க்களத்தில் அவர் மயக்கமாக இருந்த போது, ஒரு பிராமணர் அவரை அவரது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கே அவர் மரணமடைந்தார் என்றும் சிலர் கூறுகின்றனர். அவரது மரணத்திற்குப் பின், மூன்று நாட்களில், குவாலியரை ஆங்கிலேய அரசு கைப்பற்றியது.
ராணி லட்சுமிபாய் அவர்களின் வீரமும், மகத்தான முயற்சியும், அவரை ‘இந்திய தேசிய இயக்கத்தின் உருவம்’ என்று குறிப்பிட வைத்தது. தனது வளர்ப்பு மகனான தாமோதரைப் பாதுகாப்பதே ராணி லட்சுமிபாய் அவர்களின் நோக்கமாக இருந்தது. அவரது கதை எதிர்வரும் சுதந்திர போராட்ட வீரத் தலைமுறைகளுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக ஆனது என்றால் அது மிகையாகாது.
காலவரிசை
1828: ராணி லட்சுமிபாய் அவர்கள், 19 நவம்பர் 1828 ஆம் ஆண்டு காசியில் ஒரு மராத்தியர் குடும்பத்தில் பிறந்தார்.
1842: ஜான்சியின் மகாராஜா ‘ராஜா கங்காதர் ராவ் நிவால்கர்’ என்பவரை மணமுடித்தார்.
1851: அவரது மகன் பிறந்து, பின்பு நான்கு மாதங்களிலேயே காலமானான்.
1853: ஒரு குழந்தையைத் தத்தெடுத்தார்.
1853: நவம்பர் 21 ஆம் தேதி, 1853 ஆம் ஆண்டு மகாராஜா கங்காதர் ராவ் மரணமடைந்தார்.
1857: ஜான்சி ராணி அவர்கள், அவரது அண்டை நாடுகளைப் படையெடுத்தார்.
1858: ஜனவரி 1858ல், பிரிட்டிஷ் இராணுவம் ஜான்சியை நோக்கி படையெடுத்தது.
1858: ஆங்கிலேயர்களின் போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல், 18 ஜூன் 1858 ஆம் ஆண்டு ஜான்சி ராணி அவர்கள் போர்க்களத்திலேயே இறந்தார்.
No comments:
Post a Comment