MAYILAI M.C.RAJA ,THE PIONEER BEFORE AMBEDKAR BORN 1883 JUNE 17 - 1945 AUGUST 28
ராவ் பகதூர் மயிலை சின்னத்தம்பிப்பிள்ளை ராஜா எனப்படும் எம். சி. ராஜா (பி. ஜூன் 17, 1883 – இ. ஆகஸ்ட் 28, 1945) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பட்டியல் இன அரசியல்வாதி மற்றும் சமூகச் செயற்பாட்டாளர். பி. ஆர். அம்பேத்கருக்கு முன்பே அகில இந்திய அளவில் பட்டியல் பிரிவு(sc) மக்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர்
வாழ்க்கைக் குறிப்பு
ராஜா 1883ல்[1] சென்னையிலுள்ள செயிண்ட் தாமஸ் மவுண்டில்[2][3] ஒரு பறையர் சமூக குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை மயிலை சின்னத்தம்பிப்பிள்ளை லாரன்ஸ் காப்பகத்தில் மேலாளராக வேலை பார்த்தார்.[4] ராயப்பேட்டையிலுள்ள வெஸ்லி மிஷன் பள்ளியில் படித்தார்.[4] பின் வெஸ்லி கல்லுரியில் படித்தார்.[5] சென்னை கிருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.[2] ஒரு பள்ளி ஆசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.[6]
அரசியல் வாழ்க்கை
இளம் வயதிலேயே அரசியலுக்குள் நுழைந்த ராஜா செங்கல்பட்டு மாவட்ட வாரியத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] 1916ல் ஆதிதிராவிட மகாஜன சபையின் செயலாளரானார்.[8] தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பின் நிறுவனர்களில் இவரும் ஒருவர். அதன் உறுப்பினராகவும் இருந்தார். நவம்பர் 1920ல் நடந்த முதல் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி சார்பில் நின்று வெற்றி பெற்றார்.[5][9] சட்டசபைக்கு நீதிகட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10] சென்னை மாகாண சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பட்டியல் சமூக உறுப்பினர் ராஜாதான்[10]. 1922ல் பறையர், பஞ்சமர் என்ற வார்த்தைகளுக்குப் பதில் ஆதி திராவிடர் என்ற வார்த்தை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.[8]
1921ல் பனகல் அரசரின் நீதிக்கட்சியரசு அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டினை அமலுக்குக் கொண்டுவந்தது. அதில் பட்டியல் பிரிவு மக்களுக்கு எந்தவொரு சலுகையும் தரப்படவில்லை.[11] இதனால் அதிருப்தியடைந்த ராஜா பட்டியல் பிரிவு மக்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டுமென வலியுறுத்தி, பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை எதிர்த்த போராட்டக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். அந்தப் போராட்டங்களுக்கு நீதிக்கட்சி கொஞ்சங்கூட அசைந்து கொடுக்கவில்லை.[11] மாறாக அந்த ஆண்டு புளியந்தோப்பில் நடந்த கலவரத்துக்குக் காரணம் பரையர்களை சமாதனப்படுத்த பிரிட்டிஷ் அரசு எடுத்த முடிவுதான் என்று நீதிக்கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.[12] இதனால் வெகுண்ட ராஜா நீதிக்கட்சியிலிருந்து 1923ல் விலகினார்.[11][12] 1926 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1928ல் அனத்திந்திய தாழ்த்தப்பட்டோர் சங்கத்தினை ஏற்படுத்தி அதன் தலைவாரானார். 1926 முதல் 1937 வரை இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[13]
1932ல் இந்திய தேசிய காங்கிரசின் வலதுசாரிகளான டாக்டர் பி. எஸ். மூஞ்சே[14][15] மற்றும் ஜாதவுடன் ராஜா ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி ராஜா அவர்களுக்கு ஆதரவளிக்கவேண்டும் என்றும் அதற்குப் பதில் அவர்கள் பட்டியல் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஏற்பாடுதான் அனைத்திந்திய அளவில் தேர்தலில் பட்டியல் பிரிவு மக்களுக்கென்று தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென அம்பேத்கார் அதிகாரபூர்வமாகக் கோரத் தூண்டுதலாய் அமைந்தது.
1937ல் ஏப்ரல் முதல் ஜூலை வரை சென்னை மாகாணத்தில் சொற்பகாலமே ஆட்சியிலிருந்த கூர்ம வெங்கட ரெட்டி நாயுடுவின் தற்காலிக இடைக்கால அமைச்சரவையில் வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.[16]
ஆகஸ்ட் 28, 1945ல் ராஜா சென்னை, செயிண்ட் தாமஸ் மவுண்டில், ராஜா தெருவிலிருந்த தனது வீட்டில் காலமானார்.[7]
பாலர் பாடல்கள்
எம். சி. ராசா பல பள்ளிப் புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் ஆர். ரங்கநாயகி அம்மாள் என்பவருடன் இணைந்து Kindergarten Room என்ற தலைப்பில் மழலையர் பள்ளிப் பாடநூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இதன் மூன்றாம் பதிப்பு 1930 ஆம் ஆண்டில் வெளியானது. இந்நூலில் குறிப்பாக ‘கை வீசம்மா கைவீசு’, ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’, ‘அகத்திக்கீரைப் புண்ணாக்கு’, ‘நிலா நிலா ஓடிவா, காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா! போன்ற பல மழலைப் பாடல்களை இயற்றி வெளியிட்டுள்ளார்.[17]
No comments:
Post a Comment