ஜூன் 3 - உலக சைக்கிள் தினம்
உலகின், 'டாப் 5' மகிழ்ச்சிகரமான நாடுகளில் ஒன்று, நெதர்லாந்து. இந்த நாட்டில், மக்கள் தொகையை விட அதிகம் இருப்பது, சைக்கிள் தான். அந்தளவுக்கு, அவர்கள் சைக்கிள் பிரியர்கள்.
தங்களது மகிழ்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் காரணமாக அவர்கள் கூறுவது, சைக்கிள் சவாரியை தான். அவர்களின், 70 சதவீத போக்குவரத்து, சைக்கிளில் தான்
* பிரிட்டன் நாட்டில், தற்போது, நோய்கள் குறைந்து, மக்கள் ஆரோக்கியமாக வாழ, தினமும், 30 நிமிடங்கள், குறைந்தது ஆறு மாதங்களுக்கு சைக்கிள் ஓட்டும் பயிற்சியை பரிந்துரைக்கின்றனர், மருத்துவர்கள்
'சைக்கிள் ஓட்டும் பயிற்சியால், மருந்துகளால் வரும் பக்க விளைவுகள் குறைகிறது; உடல் ஆரோக்கியத்திற்கென செய்யும் செலவுகளும் குறைகிறது...' என்கின்றனர்
* 'உடல் எடையை குறைக்க, வாரத்தில், ஐந்து நாட்கள், 'ஜிம்' சென்று உடற்பயிற்சி செய்வதை விட, தினமும், நீங்கள் வேலை செய்யும் இடத்திற்கு சைக்கிளில் சென்று வந்தாலே போதும்...' என்கின்றனர், டென்மார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
'சைக்கிள் சவாரி, உடலிலிருந்து கெட்ட நீரை வெளியேற்றுவதுடன், கெட்ட கொழுப்பையும் கரைத்து, உங்கள் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது...' என்று கூறுகின்றனர்
* 'உடல் ஆரோக்கியத்திற்கும், சைக்கிள் சவாரிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சைக்கிள் ஓட்டுபவர்களின் ஆயுள், சைக்கிள் ஓட்டாதவர்களின் ஆயுளை விட, 30 சதவீதம் அதிகரிக்கிறது...' என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்
* உடல், மனம் இரண்டையும் புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது, சைக்கிள் பயிற்சி. சைக்கிள் சவாரி, சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், ஓட்டுகிறவர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
* தினமும் வேலைக்கு, பஸ், கார், டூ வீலர் ஆகியவற்றில் செல்பவர்களை விட, சைக்கிளில் போவோர் தான், நாள் முழுவதும் வேலை சுமை, மனச்சுமை குறைவாக இருப்பதாக உணர்கின்றனர். மேலும், அவர்களின் வேலை திறனும் அதிகரிப்பதாக, கனடா பல்கலைக் கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்
* கால் பாதம் முதல் மூளை வரை உடலின் அனைத்து பாகங்களையும் இயக்க வைத்து, இதய துடிப்பையும், ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது, சைக்கிள் சவாரி
* சைக்கிளை, 'பெடல்' செய்வதால், கால் மூட்டு, பலம் அடைகிறது. மற்ற எலும்புகள் வலிமை அடைகின்றன. இதனால், எலும்பு தொடர்பான நோய்கள் தவிர்க்கப்படுகின்றன
* தொடர்ந்து சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய் ஆபத்துகள் குறைவாகவே இருப்பதை, பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின், 15 ஆண்டு கால ஆய்வில் கண்டறிந்துள்ளனர்
* 'இன்சோம்னியா' எனும் துாக்கமின்மை நோயை விரட்ட, சைக்கிள் பயிற்சி உதவும் என்கின்றனர்
* சைக்கிள் சவாரி சுற்றுச்சூழலுக்கும், தேக ஆரோக்கியத்திற்கும் உதவுவதால், நெதர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரியா மக்கள், சைக்கிளை பயன்படுத்த சம்பளத்தில் கூடுதல், 'அலவன்ஸ்' கொடுத்து ஊக்குவிக்கின்றனர்.
No comments:
Post a Comment