WOMAN VOTING RIGHTS REVOLUTION IN WORLD
பெண்கள் வாக்குரிமை (women's suffrage[1]) என்பது தேர்தல்களில் பெண்கள் வாக்கு அளிக்கவும், பொதுப்பணிப் பதவிகளில் பங்கேற்க வாக்கெடுப்புகள் வழியாக பெண்கள் தேர்ந்தெடுக்கப்படவும் கொண்டுள்ள உரிமையைக் குறிக்கிறது. பெண்கள் வாக்குரிமையைப் பரவலாக்குவதற்காக எழுந்த பொருளாதார மற்றும் அரசியல் இயக்கங்களும் இதில் அடங்கும்[2]. சொத்து இருக்கவேண்டும், வரி செலுத்த வேண்டும், திருமணம் ஆகியிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு உட்படாமலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்னும் கருத்தும் இதில் அடங்கும்.
நவீன காலத்தில், பெண்கள் வாக்குரிமை இயக்கம் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சு நாட்டில் தொடங்கியது. அந்நாட்டின் முழுமையிலும், கனடாவின் பிரெஞ்சு மொழி புழங்கிய கியூபெக் மாநிலத்திலும் பெண்களுக்கான முழு உரிமை கிடைக்க மேலும் காலம் பிடித்தது. 1860களில் சில பெண்கள் சுவீடன், பிரித்தானியா, மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடு களின் சில மேற்கு மாநிலங்களில் வாக்களிக்க உரிமை பெற்றனர். பிரித்தானிய குடியேற்றப் பகுதியாக இருந்த நியூசிலாந்து, வளர்ந்த எல்லாப் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கிய முதல் நாடாக 1893 இல் சிறப்புற்றது. அருகிலிருந்த ஆசுத்திரேலியா குடியேற்றப் பகுதியில் பெண்கள் 1895 இல் வாக்களிக்க உரிமை பெற்றார்கள்; மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் நின்று தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் உரிமை பெற்றார்கள். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான உரிமை பெண்களுக்கு நியூசிலாந்தில் 1919 இல் தான் வழங்கப்பட்டது[3][4].
பெண்கள் வாக்குரிமை இயக்கத் தலைமையிடம். கிளீவ்லாந்து, ஐக்கிய அமெரிக்கா. ஆண்டு: 1913
ஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்கு முதன்முதலில் வாக்களிக்கும், தேர்ந்தெடுக்கப்படும் உரிமை வழங்கப்பட்டது பின்லாந்து நாட்டில் ஆகும். அவ்வாறு உரிமை வழங்கப்பட்ட 1907 இல் பின்லாந்து உருசியப் பேரரசில் தனித்தியங்கிய நாட்டுப்பகுதியாக இருந்தது. அங்கு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உறுப்பினராக உலகிலேயே முதன்முதலாக ஒரு பெண் தெரிந்தெடுக்கப்பட்டார்.
வாக்குரிமை பெறுவதற்கு, பெண்கள் பல நாடுகளில் போராட வேண்டியிருந்தது. நாடு முழுவதற்கும் பொது வாக்குரிமை வழங்கப்படுவதற்கு முன்னர் இவ்வாறு போராடித்தான் பல நாடுகளில் வாக்குரிமை பெற்றார்கள். 1979இல் ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்ட "பெண்களுக்கு எதிரான அனைத்து வேறுபாட்டு ஒதுக்கல்களையும் ஒழித்தல் பற்றிய அறிக்கை"யின்படி, பெண் வாக்குரிமை ஒரு மனித உரிமையாகும்.
வரலாறு
நடுக்கால பிரான்சு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெருநகரம், நகரம் ஆகியவற்றின் ஆட்சிமன்றங்களில் கலந்து வாக்களிக்கும் உரிமை வீட்டுத்தலைவருக்கு இருந்தது. சுவீடன் நாட்டில், தொழில் குழுக்களில் தகுதி உறுப்பினராகச் சேர்ந்து, வரிகொடுத்த பெண்களுக்கு வாக்குரிமை "சுதந்திர காலம்" என்று அழைக்கப்பட்ட 1718-1771 காலகட்டத்தில் வழங்கப்பட்டது.[5]
கோர்சிக்கா குடியரசில், 1755இல் வாக்களிப்பில் கலந்துகொண்டு நாடாளுமன்றம் உருவாக்குவதில் 25 வயதுக்கு மேற்பட்ட எல்லாக் குடிமக்களும், ஆண்கள் பெண்கள் உட்பட, உரிமைபெற்றனர்.[சான்று தேவை] ஆனால் பிரான்சு கோர்சிக்காவை 1769இல் கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது.
நவீன காலத்தில், 1780-90களில் பெண்கள் வாக்குரிமை இயக்கம் பிரான்சு நாட்டில் தோன்றிற்று. அந்துவான் கொண்டோர்சே (Antoine Condorcet), ஒலிம்ப் தெ கூஸ் (Olympe de Gouges) ஆகியோர் அதில் முக்கிய பங்கு வகித்து, நாட்டுத் தேர்தல்களில் பங்கேற்கும் உரிமை பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர்.
1756இல் ஐக்கிய அமெரிக்காவில், லிதியா சாப்பின் டாஃப்ட் (Lydia Chapin Taft) என்பவர் குடியேற்றக் கால அமெரிக்காவில் சட்டமுறைப்படி வாக்களித்த முதல் பெண்மணி ஆனார். பிரித்தானிய ஆட்சியின் கீழ் மாசசூசெட்சு குடியேற்றத்தில் இது நிகழ்ந்தது.[6]
அங்கு, நியூ இங்கிலாந்து பகுதியில் அக்சுபிரிட்சு (Uxbridge) நகர் மன்றக் கூட்டத்தில் அவர் மூன்றுமுறைகளாவது வாக்குகள் போட்டார்.[7]
நியூ செர்சி மாநிலத்தில், 1776ஆம் ஆண்டு நாட்டுச்சட்டப்படி பெண்கள் வாக்குரிமை பெற்றனர். எனினும், திருமணமான பெண்களுக்குத் தம் சொந்தப் பெயரில் சொத்துரிமை இல்லாததால், திருமணமாகாமல் அல்லது கைம்பெண்களாக இருந்து சொத்துரிமை கொண்டிருந்தோர் பிற ஆண்களைப்போல் வாக்குரிமை கொண்டிருந்தனர். "எல்லாக் குடிமக்களும்", பால் மற்றும் இன வேறுபாடின்றி வாக்குரிமை பெற்றனர். ஆனால், 1807இல் நிலைமை மாறியது. வாக்களிப்பதில் முறைகேடு நடந்தது என்பதைச் சுட்டிக்காட்டி, வாக்குரிமை வெள்ளை இன ஆண்களுக்கு மட்டுமே உண்டு என்று சட்டம் இயற்றப்பட்டது. இதனால் "அந்நியர், நிறமுடைய மக்கள், நீக்ரோக்கள், பெண்கள்" ஆகியோருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது.
ஆப்பிரிக்காவில், சியேரா லியோனி நாட்டில் நடந்த 1972ஆம் ஆண்டுத் தேர்தலின்போது, வீட்டுத் தலைவர்கள் எல்லாரும் வாக்களிக்க உரிமை பெற்றனர். அவர்களுள் மூவரில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.[8]
பிரித்தானிய குடியேற்றக் காலத்தில், பசிபிக் பெருங்கடலில், ஆசுத்திரேலியாவை அடுத்த பிட்கேய்ண் தீவுகளில் குடியேறிய மாலுமியரின் வழிவந்த பெண்களுக்கு வாக்குரிமை 1838லிருந்து கிடைத்தது. பின்னர் 1856இல் அவர்கள் குடியேறிய நோர்ஃபோக் தீவிலும் அவர்களுக்கு இவ்வுரிமை இருந்தது[9].[4]
1861இல் தென் ஆசுத்திரேலியா பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது. அதைத் தொடர்ந்து 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல நாடுகள், குடியேற்றப் பகுதிகள், மாகாணங்கள் பெண்களுக்கு ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாக்குரிமை வழங்கின.
பெண்கள் உரிமைகளுக்கான பேரவை
1840இல் இலண்டன் நகரில் "உலக அடிமை முறை எதிர்ப்பு பேரவை" நிகழந்தது. அப்பேரவையில் கலந்துகொள்ள அமெரிக்க பெண்ணுரிமைப் போராளி எலிசபெத் கேடி ஸ்டாண்டன் (Elizabeth Cady Stanton)[10] சென்றிருந்தார். அவர் அங்கு லுக்ரேசியா மோட் (Lucretia Mott) என்னும் மற்றொரு முக்கிய பெண்ணுரிமை ஆதரவாளரைச் சந்தித்தார். அப்பெண்களுக்கும் அமெரிக்காவிலிருந்து பேரவையில் கலந்துகொள்ளச் சென்ற வேறு பெண்களுக்கும், அவர்கள் ஆண்களல்ல என்னும் காரணத்திற்காக பேரவையில் கலந்துகொள்ளும் உரிமை மறுக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சி "பெண்கள் உரிமைகளுக்கான பேரவை" (Women's Rights Convention)[11] உருவாக்கப்படுவதற்கு வித்தாயிற்று. 1851இல் ஸ்டாண்டன் மதுவிலக்கு இயக்கத்தை ஆதரித்த சூசன் பி. ஆண்டனி என்னும் பெண்மணியைச் சந்தித்தார். அவர்கள் இருவரும் இணைந்து பெண்கள் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று, பெண்கள் உரிமைக்காகக் குரல்கொடுத்தனர். 1868இல் சூசன் ஆண்டனி, அச்சு மற்றும் தையல் தொழிலில் ஈடுபட்ட, ஆனால் ஆண்களுக்கு மட்டுமே என்றிருந்த தொழிற்சங்கங்களில் இடம் மறுக்கப்பட்ட பெண்கள் "உழைக்கும் பெண்கள் சங்கங்களை" உருவாக்க ஊக்கமளித்தார். பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும், ஆணாலும் பெண்ணானாலும் சம உழைப்புக்கு சம ஊதியம் வேண்டும் என்று அவர் 1868இல் தேசிய தொழில் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தினார். பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்று அவர் எழுப்பிய கோரிக்கையை, அப்பேரவையில் கலந்துகொண்ட ஆண்கள் இருட்டடிப்புச் செய்தனர்.[12]
பெண்கள் வாக்குரிமை பல பகுதிகளில் ஏற்கப்படல்
அமெரிக்காவில் வயோமிங் பகுதியில் பெண்கள் 1869இலிருந்து வாக்கு அளிக்க உரிமை பெற்றார்கள். கோர்சிக்காவிலும், மேன் தீவிலும் (Isle of Man), பிட்கேய்ண் தீவுகளிலும், பிரான்சுவில் என்னும் குடியேற்றப் பகுதியிலும் பெண்கள் வாக்குரிமை பெற்றார்கள் என்பது உண்மை என்றாலும், இப்பகுதிகள் தனி நாடுகளாகச் செயல்படவில்லை.
பிரான்சில் 1871ஆம் ஆண்டில், பாரிசு நகராட்சி பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது. அந்த ஆட்சி கவிழ்ந்ததும் பெண்களுக்கு வாக்குரிமை பறிக்கப்பட்டது. அதன்பிறகு, 1914ஆம் ஆண்டு சூலை மாதத்தில் தான் மீண்டும் பெண்கள் வாக்குரிமை ஏற்கப்பட்டது. அச்சமயம் பிரான்சின் பெரும்பகுதியும் நாசி ஆளுகையின்கீழ் இருந்தது. 1914 ஆகத்தில்தான் விடுதலை செய்யப்பட்டது. பசிபிக் பெருங்கடலில் இருந்த குடியேற்றப்பகுதியாகிய பிரான்சுவில் 1889இல் தன் சுதந்திரத்தை அறிவித்தது. உடனேயே, பால் மற்றும் இன வேறுபாடின்றி அனைவருக்கும் வாக்குரிமை உண்டென அறிவித்தது.[13] ஆனால், பிரான்சும் ஐக்கிய இராச்சியமும் மீண்டும் பிரான்சுவில் பகுதியைத் தம் குடியேற்ற ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்ததோடு, அப்பகுதியின் சுதந்திர நிலை முடிவுக்குவந்தது.
1881இல் பிரித்தானிய ஆட்சியின் கீழ் உள்ளாட்சிச் சுதந்திரத்தோடு செயல்பட்ட மேன் தீவு, சொத்துக்களை உடைமையாகக் கொண்ட பெண்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று சட்டம் இயற்றியது.[4]
நியூசீலந்து நாட்டின் சிறப்பு
இன்று தன்னாட்சியோடு விளங்கும் நாடுகளில் முதலாவதாகப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாடு நியூசீலந்து ஆகும். 1893இல் அவ்வுரிமை வழங்கப்பட்டபோது நியூசீலந்து பிரித்தானிய ஆளுகையின் கீழ் தன்னாட்சிகொண்ட பகுதியாகத் திகழ்ந்தது.[14]
தொடக்கத்தில் நியூசீலந்து பெண்கள் வாக்களிக்க உரிமை உண்டு என்று அறிவித்ததே தவிர, அவர்கள் வேட்பாளர்களாகத் தேர்தலில் நிற்க உரிமை கொடுக்கவில்லை. நிபந்தனையற்ற விதத்தில் பெண்களுக்கு வாக்குரிமை நியூசீலந்தில் 1893இல் வழங்கப்பட்டது. கேட் ஷெப்பாட் என்னும் பெண்மணி தலைமைதாங்கி நடத்திய பெண்ணுரிமை இயக்கத்தின் உந்துதலால் பொதுத்தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் வாக்குரிமை பெண்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, பிரித்தானியக் காப்புப் பகுதியாக இருந்த கூக் தீவுகளும் பெண்கள் வாக்குரிமையை ஏற்றது.[15]
ஆசுத்திரேலியா
பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்டு, உள்நிலைத் தன்னாட்சியோடு விளங்கிய தெற்கு ஆசுத்திரேலியா பெண்கள் வாக்குரிமையை ஏற்று, அவர்கள் தேர்தலில் வாக்கு அளிக்கும் உரிமை கொண்டுள்ளதோடு, வேட்பார்களாகத் தேர்தலில் நிற்கவும் உரிமை பெற்றுள்ளனர் என்று 1895இல் சட்டம் இயற்றியது.[16] ஆசுத்திரேலியா கூட்டுநாடாக 1901இல் மாறியதும், பெண்கள் வாக்குரிமையைச் சில மாநிலங்களில் ஏற்றது. தேசிய தேர்தல்களில் பெண்கள் வாக்களிக்கவும் வேட்பாளர்களாக நிற்கவும் உரிமை கொண்டுள்ளார்கள் என்று ஆசுத்திரேலிய மைய நாடாளுமன்றம் 1901இல் சட்டம் இயற்றியது (சில மாநிலங்களில் ஆசுத்திரேலிய ஆதி குடிப் பெண்களுக்கு அவ்வுரிமை மறுக்கப்பட்டது).[17]
ஐரோப்பாவில் முதல் நாடு பின்லாந்து
ஐரோப்பாவைப் பொறுத்தமட்டில், முதல் நாடாக பின்லாந்து பெண்கள் வாக்குரிமையை ஏற்று சட்டம் இயற்றியது. 1905இல் நிகழ்ந்த கலகத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி சீர்திருத்தத்தின்போது, தேர்தலில் வாக்கு அளிக்கவும் வேட்பாளராக நிற்கவும் உரிமை வேண்டும் என்று பெண்கள் எழுப்பிய கோரிக்கை 1906இல் ஏற்கப்பட்டது. 1907ஆம் ஆண்டில் நிகழ்ந்த பின்லாந்து நாடாளுமன்றத் தேர்தலின் பயனாக, அந்நாட்டில் 19 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்றனர். அவர்களே உலகத்தில் முதன்முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களான பெண்கள் என்னும் சிறப்புப் பெற்றார்கள்.
இரண்டாம் உலகப்போருக்கு முந்திய ஆண்டுகளில் நோர்வே 1913இலும், டென்மார்க் மற்றும் ஆசுத்திரேலிய பிற மாநிலங்கள் 1915இலும் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கின. இரண்டாம் உலகப்போர் முடிவுறும் தறுவாயில், கானடா, சோவியத் உருசியா, செருமனி, போலந்து ஆகிய நாடுகள் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிச் சட்டங்கள் இயற்றின.
பிரித்தானியப் பெண்கள் வாக்குரிமை
30 வயதுக்கு மேற்பட்ட பிரித்தானியப் பெண்கள் 1918இல் வாக்குரிமை பெற்றார்கள். நெதர்லாந்து பெண்களுக்கு அவ்வுரிமை 1919இல் வழங்கப்பட்டது. அமெரிக்கப் பெண்களுக்கு வாக்குரிமை 1920இல் கிடைத்தது. துருக்கி நாட்டுப் பெண்கள் 1926இல் வாக்குரிமை பெற்றார்கள்.
21 வயது நிறைந்த, அதற்கு மேல் வயது கொண்ட ஆண்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்பட்டது போல, தங்களுக்கும் வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று பிரித்தானியப் பெண்கள் போராடியதைத் தொடர்ந்து, 1928இல் அந்நாட்டுப் பெண்களுக்கு அவ்வுரிமை கிடைத்தது.
இறுதியாக, பூட்டான்
மிக அண்மைக்காலத்தில் பெண்களுக்கு முழு வாக்குரிமை வழங்கிய நாடு பூட்டான் ஆகும். அங்கு 2008இல் நடந்த முதல் தேசிய தேர்தலில் பெண்கள் வாக்கு அளிக்கவும் வேட்பாளர்களாக நிற்கவும் உரிமை பெற்றார்கள்.[18]
ஐக்கிய நாடுகள் அவை பெண்கள் வாக்குரிமை அறிவித்தல்
பெண்கள் வாக்குரிமையை உலகளவில் விரிவுபடுத்தும் முயற்சியாக, பன்னாட்டுச் சட்ட அடிப்படையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழு விவாதத்துக்கு எடுத்தது. அக்குழுவின் தலைவராக எலெனோர் ரூசவெல்ட் செயல்பட்டார். அக்குழுவின் பரிந்துரையை 1948இல் ஐக்கிய நாடுகள் அவை ஏற்று வெளியிட்டது. இவ்வாறு பெண்கள் வாக்குரிமை உலக மனித உரிமைகள் சாற்றுரையின்[19] பகுதியாக மாறியது.
உலக மனித உரிமைகள் சாற்றுரையின் உறுப்புரை 21 கீழ்வருமாறு கூறுகிறது:
“ (1) ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டின் ஆட்சியில் நேரடியாகவோ அல்லது சுதந்திரமான முறையில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ பங்குபெறுவதற்கு உரிமையுண்டு. (2) ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு. (3) மக்களின் விருப்பே அரசாங்கத்தின் அடிப்படையாக அமைதல் வேண்டும். இவ்விருப்பமானது, காலாகாலம், உண்மையாக நடைபெறும் தேர்தல்கள் மூலம் வெளிப்படுத்தப்படல் வேண்டும். இத்தேர்தல் பொதுவானதும், சமமானதுமான வாக்களிப்புரிமை மூலமே இருத்தல் வேண்டுமென்பதுடன், இரகசிய வாக்குமூலம் அல்லது அதற்குச் சமமான, சுதந்திர வாக்களிப்பு நடைமுறைகள் நடைபெறுதல் வேண்டும். ”
பெண்கள் வாக்குரிமை இயக்கங்கள்
தன் வீட்டை விற்றுவிட்டு, பிரித்தானிய போராளி எம்மெலின் பான்குர்ஸ்ட், பிரிட்டனிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் பயணம் சென்று உரைகள் நிகழ்த்தினார். "சுதந்திரம் அல்லது சாவு" என்னும் அவரது புகழ்பெற்ற உரை அமெரிக்காவில், கனெடிக்கட்டில் 1913ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்டது.
உலக நாடுகளில் பெண்கள் வாக்குரிமை விவரப் பட்டியல்
பட்டியலில் "ஆண்டு" என்பது முதன்முறையாக பெண்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்ற காலத்தைக் குறிக்கிறதே ஒழிய, அனைவருக்கும் கட்டுப்பாடினின்றி வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டைக் குறிக்கவில்லை.
No comments:
Post a Comment