Saturday 6 June 2020

NORMANDY LANDINGS , D-DAY 1944 JUNE 6



NORMANDY LANDINGS , D-DAY  1944 JUNE 6


நார்மாண்டி படையிறக்கம் அல்லது நார்மாண்டி தரையிறக்கம் (Normandy landings) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த படையிறக்க நடவடிக்கையைக் குறிக்கிறது. நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல் வழி படையெடுப்பு ஜூன் 6, 1944ம் தேதி துவங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. இப்படையெடுப்பின் முதல் நடவடிக்கையான பிரான்சு கடற்கரையில் படைகளைக் கரையிறக்கும் நடவடிக்கைக்கு நெப்டியூன் நடவடிக்கை (Operation Neptune) என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. இதுவே நார்மாண்டிப் படையிறக்கம் என அழைக்கப்படுகிறது.



இந்தக் குறியீடு நார்மாண்டி படையெடுப்பு மற்றும் ஓவர்லார்ட் நடவடிக்கை, டி-டே போன்ற நிகழ்வுகளில் இருந்து வேறுபட்டது. பிரான்சு மீதான ஒட்டு மொத்த படையெடுப்பு நிகழ்வு ஓவர்லார்ட் நடவடிக்கை எனப்படுகிறது. இது ஜூன் 6 முதல்-ஆகஸ்ட் 25ல் பாரிசு வீழ்ந்தது வரை நடந்த மொத்த நடவடிக்கைகளைக் குறிக்கிறது. இதன் ஆரம்பக கட்ட தரையிறக்கம் ”நார்மாண்டி படையிறக்கம்”/”நெப்டியூன் நடவடிக்கை”, இது நிகழ்ந்த ஜூன் 6, 1944 டி-டே என்றழைக்கப்படுகிறது. நார்மாண்டி படையெடுப்பு என்பது இந்த படையிறக்கமும் அதன் பின்னர் நார்மாண்டிப் பகுதியினைக் கைப்பற்ற ஜூலை மாத பாதி வரை நடந்த சண்டைகளையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.



நார்மாண்டியில் படையிறக்கம் இரு கட்டங்களாக நடைபெற்றது. வான்வழியாக 24,000 பிரிட்டானிய மற்றும் அமெரிக்கப் படையினர் ஜுன் 5 பின்னிரவிலும், ஜூன் 6 அதிகாலையிலும் தரையிறங்கினர். பின் ஜூன் 6 காலை 6.30 மணியளவில் தரைப்படைகள் கடல்வழியாகத் தரையிறங்கத் தொடங்கின. தரையிறக்கம் நிகழ்ந்த 80 கிமீ நீளமுள்ள நார்மாண்டி கடற்கரை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை யூட்டா, ஒமாகா, கோல்ட், ஜூனோ மற்றும் சுவார்ட். இவ்வைந்து கடற்கரைகளிலும் ஜூன் 6 இரவுக்குள் 1,60,000 படையினர் தரையிறங்கினர். இந்த நடவடிக்கையில் 5000 கப்பல்களும் 1,75,000 மாலுமிகளும் ஈடுபட்டிருந்தனர். இதுவே போர் வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரும் நீர்நிலப் படையெடுப்பாகும்.


யூட்டா கடற்கரை (Utah Beach) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஓவர்லார்ட் நடவடிக்கையில் நார்மாண்டி கடற்கரையின் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட குறிப்பெயர். (யூட்டா அமெரிக்க மாநிலங்களில் ஒன்று).

நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல் வழி படையெடுப்பு ஜூன் 6, 1944ம் தேதி துவங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. படையெடுப்பு நிகழ்ந்த கடற்கரை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது - யூட்டா, ஒமாகா, கோல்ட், ஜூனோ மற்றும் சுவார்ட். இந்த ஐந்தனுள் மேற்கு முனையில் இருந்ததெ யூட்டா கடற்கரை. போப்வில் நகரத்துக்கும் லா மடிலைன் கிராமத்துக்கும் இடையே அமைந்திருந்த 5 கிமீ நீளமுள்ள கடற்கரையே யூட்டா கடற்கரை என்றழைக்கப்பட்டது. ஜெர்மானியர்கள் இதற்கு டபிள்யூ 5 என்று குறிப்பெயரிட்டிருந்தனர்.

ஜூன் 6ம் தேதி அதிகாலை அமெரிக்க 7வது கோரின் ஒரு பகுதியான 4வது தரைப்படை டிவிசன் யூட்டா கடற்கரையில் தரையிறங்கத் துவங்கியது. இப்படையிறக்கம் நான்கு அலைகளாக நடைபெற்றது. பல படைப்பிரிவுகள் தங்கள் இலக்குகளிலிருந்து விலகி தெற்கே தரையிறங்கின. எனினும் விரைவில் சுதாரித்துக் கொண்டன. ஒமாகா கடற்கரையைப் போல இக்கடற்கரையில் ஜெர்மானிய பாதுகாவல் படைகள் எதுவும் இல்லாததால், எதிர்த்தாக்குதல்கள் நிகழவில்லை. மேலும் ஏற்கனவே வான்வழியாக தரையிறங்கியிருந்த அமெரிக்க 101வது மற்றும் 82வது வான்குடை டிவிசன்கள் நிலப்பரப்பில் ஜெர்மானியப் பாதுகாவல் படைகளுடன் கடும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதனால் ஜெர்மானியப் படைகளால் யூட்டா படையிறக்கத்தைத் தடுக்க முடியவில்லை. ஜூன் 6 இரவுக்குள் சுமார் 23,250 வீரர்களும் 1700 வண்டிகளும் யூட்டாவில் தரையிறங்கி விட்டன. யூட்டா கடற்கரை முழுவதும் நேச நாட்டு கட்டுப்பாட்டில் வந்த பின்னர் 4வது டிவிசன் டூவ் ஆற்று முகத்துவாரத்தருகே அதன் மேற்குக் கரையில் நடந்த நேச நாட்டுத் தாக்குதலில் வலங்கை (right flank) யாக செயல்பட்டது.

ஒமாஃகா கடற்கரை (ஒமாஹா கடற்கரை; Omaha Beach) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஓவர்லார்ட் நடவடிக்கையில் நார்மாண்டி கடற்கரையின் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட குறிப்பெயர். (ஒமாஃகா அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான் நெப்ராஸ்காவிலுள்ள நகரம்).

நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல் வழிப் படையெடுப்பு ஜூன் 6, 1944ம் தேதி துவங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. படையெடுப்பு நிகழ்ந்த கடற்கரை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது - யூட்டா, ஒமாகா, கோல்ட், ஜூனோ மற்றும் சுவார்ட். 8 கிமீ நீளமுள்ள ஒமாகா கடற்கரை யூட்டா மற்றும் கோல்ட் கடற்கரைகளுக்கு இடையில் அமைந்திருந்தது. சென்-ஹொனோர்-டெ-பெர்டே கம்யூனிலிருந்து டூவ் ஆற்றின் முகத்துவாரத்தின் வடகரையிலுள்ள வியர்வில் கம்யூன் வரையான கடற்கரை ஒமாகா என்று பெயரிடப்பட்டிருந்தது.

ஒமாகா கடற்கரை இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதன் மேற்குப் பகுதியைக் கைப்பற்றும் பொறுப்பு அமெரிக்க 29வது காலாட்படை டிவிசன் மற்றும் அமெரிக்கத் தரைப்படை ரேஞ்சர் படைப்பிரிவின் ஒன்பது கம்பனிகளுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிழக்குப் பகுதியினைக் கைப்பற்றும் பொறுப்பு 1வது அமெரிக்கக் காலாட்படை டிவிசனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இவற்றுள் 29வது டிவிசன் போர் அனுபவமற்ற படைப்பிரிவு, 1வது டிவிசன் அனுபவம் வாய்ந்தது. இவர்களை எதிர்க்க ஜெர்மானிய 352வது காலாட்படை டிவிசன் ஒமாகா கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தது. கிழக்குப் போர்முனையிலிருந்து நார்மாண்டிக்கு மாற்றப்பட்டிருந்த இப்படைப்பிரிவில் ஒரு பகுதியினர் மட்டுமே போர் அனுபவம் உடையவர்கள்.

ஜூன் 6ம் தேதி காலையில் அலை அலையாகத் தரையிறங்கி ஜெர்மானிய அரண்நிலைகளை அழிப்பது, அதன்பின்னர் எட்டு கிமீ நீளமுள்ள ஒரு பாலமுகப்பை ஏற்படுத்தி யூட்டா கடற்கரைப் படைப்பிரிவுகளுடன் கைகோர்ப்பது ஒமாகா படைப்பிரிவுகளின் முதல் இலக்கு. அமெரிக்கப் படைகளைத் தரையிறங்க விடாமல் கடலும் கரையும் இணையும் நீர்க்கோட்டில் (waterline) வைத்தே அவர்களை அழிப்பது ஜெர்மானியத் திட்டம். படையெடுப்புக்கு முன் ஜெர்மானிய அரண் நிலைகளை அழிக்க மேற்கொள்ளப்பட்ட நேசநாட்டு வான்வழி குண்டுவீச்சு, மேக மூட்டம் காரணமாக வெற்றி பெறவில்லை. சேதமடையாத ஜெர்மானிய பீரங்கி நிலைகளும், துப்பாக்கி நிலைகளும் அமெரிக்கப் படைகள் தரையை அணுகும் போதே குண்டுமழை பொழிய ஆரம்பித்தன.

தரையிறங்கும் படகுகளில் பெரும்பாலானவை தங்கள் இலக்குகளிலிருந்து தவறி வேறு இடங்களில் கரை சேர்ந்தன. இதனால் அமெரிக்கப் படைகளிடையே பெரும் குழப்பம் நிலவியது. ஜெர்மானிய குண்டுமழையால் முதல் படை அலைகளுக்குப் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. எதிர்பாராத பலத்த எதிர்த்தாக்குதல், கடற்கரையில் பீரங்கி எதிர்ப்புத் தடைகள் போன்ற காரணங்களால முதல் அமெரிக்கப் படை அலைகள் கடற்கரையில் சிக்கிக் கொண்டன. அவற்றால் கடற்கரையிலிருந்து உள்நாட்டுக்கு செல்லும் சாலைகளைக் கைப்பற்ற முடியவில்லை. இதனால் திட்டமிட்டபடி பின்வரும் அலைகளால் தரையிறங்க முடியவில்லை. முதல் நாள் இறுதியில் சுமார் 3000 அமெரிக்கப் படைகள் ஒமாகா கடற்கரையில் உயிரிழந்திருந்தனர். ஆனால் இரு இடங்களில் கடற்கரையில் பாலமுகப்புகள் கைப்பற்றப்பட்டிருந்தன. அவற்றைப் பயன்படுத்தி அடுத்த சில நாட்களில் தங்கள் இலக்குகளை ஒவ்வொன்றாக அமெரிக்கப் படைகள் கைப்பற்றின. ஜெர்மானியப் பாதுகாவலர்களுக்குத் துணையாக புதிய இருப்புப் படைப்பிரிவுகள் அனுப்பபடாதது அவர்களுக்கு சாதகமாக இருந்தது. ஜூன் 7ம் தேதி ஒமாகா கடற்கரையில் சரக்குகள் இறங்கத் தொடங்கின, 9ம் தேதி ஒமாகா படைப்பிரிவுகள் யூட்டா மற்றும் கோல்ட் பிரிவுகளுடன் இணைந்து விட்டன. நார்மாண்டியின் ஐந்து கடற்கரைகளுள் நேசநாட்டுப் படைகளுக்கு மிகப்பெரும் இழப்புகள் ஏற்பட்ட கடற்கரையாக ஒமாகா அமைந்தது.

கோல்ட் கடற்கரை (Gold Beach) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஓவர்லார்ட் நடவடிக்கையில் நார்மாண்டி கடற்கரையின் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட குறிப்பெயர். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல் வழி படையெடுப்பு ஜூன் 6, 1944ம் தேதி துவங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. படையெடுப்பு நிகழ்ந்த கடற்கரை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது - யூட்டா, ஒமாகா, கோல்ட், ஜூனோ மற்றும் சுவார்ட்.

கோல்ட் கடற்கரை ஜூனோ மற்றும் ஒமாகா கடற்கரைகளுக்கு இடையே அமைந்திருந்தது. ஜூன் 6ம் தேதி பிரிட்டானிய 2வது ஆர்மியின் ஒரு உட்பிரிவான 50வது பிரிட்டானியக் காலாட்படை டிவிசன் மற்றும் 8வது கவச பிரிகேட் இங்கு தரையிறங்கின. கோல்ட் கடற்கரை ஐட்டம், ஜிக், கிங் என்று மேலும் மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஜெர்மானியத் தரப்பில் 716வது நகராத காலாட்படை டிவிசனும், 352வது காலாட்படை டிவிசனின் சில பிரிவுகளும் இக்கடற்கரையைப் பாதுகாத்து வந்தன. ஜூன் 6 அதிகாலை வான்வழி குண்டுவீச்சுடன் கோல்ட் கடற்கரை மீதான தாக்குதல் தொடங்கியது. காலை 7.25 மணியளவில் முதல் பிரிட்டானியப் படைப்பிரிவுகள் கோல்டில் தரையிறங்கின. சற்றே பலத்த எதிர்ப்பு இருந்தாலும் பிரிட்டானியப் படைகள் எளிதில் கோல்ட் கடற்கரையைக் கைப்பற்றி முன்னேறத் தொடங்கின. இரவுக்குள் 25,000 வீரர்கள் தரையிறங்கி விட்டனர். ஒமாகா மற்றும் ஜூனோ கடற்கரையில் தரையிறங்கிய படைகளோடு கோல்ட் கடற்கரைப் படைகள் கைகோர்த்து விட்டன. மறுநாள் பெர்ச் நடவடிக்கை தொடங்கியது.

சூனோ கடற்கரை (ஜூனோ கடற்கரை, Juno Beach) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஓவர்லார்ட் நடவடிக்கையில் நார்மாண்டி கடற்கரையின் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட குறிப்பெயர். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல் வழி படையெடுப்பு ஜூன் 6, 1944ம் தேதி துவங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. படையெடுப்பு நிகழ்ந்த கடற்கரை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது - யூட்டா, ஒமாகா, கோல்ட், ஜூனோ மற்றும் சுவார்ட்.

கோல்ட் மற்றும் சுவார்ட் கடற்கரைகளுக்கு இடையே அமைந்திருந்த ஜூனோ கடற்கரைக்குக் “கனடியக் கடற்கரை” என்றும் பெயரிடப்பட்டிருந்தது (இங்கு கனடியப் படைகள் தரையிறங்கின). கிழக்கில் சென் ஆபின் முதல் மேற்கில் கோர்செல் வரை நீண்டிருந்த இந்தக் கடற்கரையில் கனடிய 3வது காலாட்படைடிவிசன் தரையிறங்கியது. ஜெர்மானியத் தரப்பில் 716வது நகரா காலாட்படை டிவிசன் இக்கடற்கரையைப் பாதுகாத்து வந்தது. ஜூன் 6ம் தேதி காலை ஒன்றரை மணி நேர கப்பல் பீரங்கித் தாக்குதலுக்குப் பின்னர் 7.30 மணியளவில் ஜூனோ கடற்கரையில் கனடியப் படையிறக்கம் தொடங்கியது. மைக் மற்றும் நான் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்த ஜூனோ கடற்கரைப் பகுதியில் ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்கள் மெதுவாகவே துவங்கின. இதனால் எளிதில் கனடியப் படைகள் ஜூனோவில் தரையிறங்கி விட்டன. ஜெர்மானிய நகரும் இருப்புப் படைகள் மறுநாளே ஜூனோவுக்கு அனுப்பப்பட்டன. ஜூன் 6ம் தேதி மாலை 6 மணியளவில் சென் ஆபின் நகரம் கனடியப் படைகளால் கைப்பற்றப்பட்டது. அன்று இரவுக்குள் கடற்கரையிலிருந்து 10 கிமீ வரை கனடியப் படைகள் முன்னேறி விட்டன. இத்தரையிறக்கத்தில் சுமார் 1000 கனடிய வீரர்கள் மாண்டனர் / காயமடைந்தனர். 7ம் தேதி சுவார்ட கடற்கரையில் தரையிறங்கிய பிரிட்டனியப் படைகளுடன் ஜூனோ படைகள் கைகோர்த்து விட்டன.

சுவார்ட் கடற்கரை (ஸ்வார்ட் கடற்கரை, Sword Beach) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஓவர்லார்ட் நடவடிக்கையில் நார்மாண்டி கடற்கரையின் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட குறிப்பெயர்.

நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல் வழி படையெடுப்பு ஜூன் 6, 1944ம் தேதி துவங்கியது. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. படையெடுப்பு நிகழ்ந்த கடற்கரை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது - யூட்டா, ஒமாகா, கோல்ட், ஜூனோ மற்றும் சுவார்ட்.

8 கிமீ நீளமுள்ள சுவார்ட் கடற்கரை படையிறக்கப் பகுதியின் கிழக்கு எல்லையில் அமைந்திருந்தது. ஓர்ன் ஆற்று முகத்துவாரம் முதல் சென்-ஆபின் கம்யூன் வரை அமைந்திருந்த இக்கடற்கரையில் பிரிட்டானியப் படைகள் தரையிறங்கின. 3வது பிரிட்டானிய காலாட்படை டிவிசன், 27வது தனிக் கவச பிரிகேட், 1வது சிறப்பு சேவை பிரிகேட், சுதந்திர பிரெஞ்சு கமாண்டோ, 41வது ராயல் மரீன் கமாண்டோ ஆகியவை சுவார்டில் தரையிறங்கிய படைப்பிரிவுகளாகும். இவற்றை எதிர்க்க ஜெர்மானிய 716வது காலாட்படை டிவிசனும், 352வது டிவிசனின் சில பிரிவுகளும் சுவார்ட் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. பிரிட்டானியப் படைகள் ஜூன் 6ம் தேதி பெரும் எதிர்ப்பு எதுவுமின்றி சுவார்ட் கடற்கரையில் தரையிறங்கி அதனைக் கைப்பற்றின. மாலை நான்கு மணியளவில் தான் ஜெர்மானிய எதிர்த் தாக்குதல்கள் தொடங்கின. ஆனால் அவை எளிதில் முறியடிக்கப்பட்டன. இரவு 8 மணியளவில் ஜெர்மானிய 21வது பான்சர் (கவச) டிவிசன் சுவார்ட் கடற்கரையை மீண்டும் தாக்கியது. ஆனால் இத்தாக்குதலும் முறியடிக்கப்பட்டது. நார்மாண்டியின் ஐந்து கடற்கரைகளுள் பான்சர் (கவச) படைப்பிரிவுகளால் தாக்கப்பட்ட ஒரே கடற்கரை சுவார்ட் மட்டுமே.

ஜூன் 6ம் தேதி இரவுக்குள், சுவார்டில் 28,853 பிரிட்டானிய வீரர்கள் தரையிறங்கியிருந்தனர். 683 வீரர்கள் இத்தரையிறக்கத் தாக்குதலில் மரணமடைந்தனர். மறுநாள் ஜூனோ கடற்கரையில் தரையிறங்கியிருந்த கனடிய படைப்பிரிவுகளுடன் பிரிட்டானியப் படைப்பிரிவுகள் கைகோர்த்தன. நார்மாண்டியின் உட்பகுதியிலிருந்த கான் நகரை நோக்கி முன்னேறத் தொடங்கின.



.

No comments:

Post a Comment