Thursday 4 June 2020





WORLD BI-CYCLE DAY

# மிதிவண்டிகள் தினம் #

அப்பா வைத்திருந்த ராலே சைக்கிளின் கனம் இன்னும் நினைவிருக்கிறது. இருநூறு ரூபாய்க்கு அதை இரண்டாம் உரிமையாளராக வாங்கி ஒரு பொக்கிஷம் போல பாதுகாத்திருந்தார். அவர் வாங்கும்போதே அது நாற்பது வருடம் பழையது. ஒரு முறை திருடு போய் ஆறு மாதங்கள் கழித்துக் கிடைத்தது. உறவினர் ஒருவர் வேறு ஒரு ஊரில் அதைப் பார்த்ததும் அடையாளம் கண்டு மீட்டெடுத்து வந்துவிட்டார். சைக்கிள்களுக்கும் சாடை இருந்த காலம் அது. சைக்கிளைப் பார்த்தே அதன் உரிமாளர் குறித்துச் சொல்லிவிடலாம். நீளமான கேரியர் வைத்திருக்கும் சைக்கிள்கள் உழைப்பாளிகளுடையவை. அதில் ஒரு கயிறு சுற்றப்பட்டிருந்தால் அவை கடும் உழைப்பாளிகளுக்கானவை. முன்னால் ஒரு சிறிய கேரியர் இருப்பவை மாணவர்களுடையவை. பார் இல்லாத வண்ண சைக்கிள்கள் பெண்களுடையவை. அப்படியான சில சைக்கிள்கள் எங்கே நின்றாலும் கண்டுபிடிக்கும் ஒரு விசேட ஜிபிஎஸ் நம்மிடம் இருந்தது. சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டு சைக்கிள்களில் முன்புறம் ஒரு கூடை தொற்றியிருக்கும். 

சைக்கிள் ஓட்டுவது ஒரு காலேஜ் டிகிரி வாங்குவது மாதிரியான விஷயம். அவ்வளவு எளிதில் நடந்துவிடாது. குரங்கு பெடல், பார், சீட்டு என்று படி நிலைகள் உண்டு. ஒவ்வொரு நிலையையும் எட்டுவது பெருமையான சாதனையாகக் கருதப்படும். முதன் முதலாக அவற்றை நிகழ்த்தும்போது வானத்தில் பறப்பது போல இருக்கும். முழங்காலில் எப்போதும் ஏதாவது காயம் இருக்கும். வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் சைக்கிளைப் பூட்டாமல் நிறுத்திவிட்டால் எடுத்து ஒரு ரவுண்டு அடித்துவிடுவது வழக்கம். பிறகு அதற்கு தனியாகத் திட்டு வாங்கிக் கொள்ளலாம். சீட்டில் உட்கார்ந்து ஓட்டும்போது பெடலின் நுனிதான் எட்டும். வேகமாக உதைத்து  மறுபக்கப் பெடல் மறுபடி மேலே வரும் வரை காத்திருந்து மீண்டும் உதைத்து ஓட்டுவோம். ஒரு கையை விட்டு தலை கோதுவது ஸ்டைல். இரண்டு கைகளையும் விட்டால் எதிரில் யாரோ முக்கியமானவர்கள் வருவதாக வைத்துக் கொள்ளலாம். 

பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது எனக்கென்று ஒரு சைக்கிள் வந்தது. ஹீரோ என்று நினைக்கிறேன். அதைப் பூட்டி ஈரோட்டிலிருந்து இருபது கிலோமீட்டர் ஓட்டிக் கொண்டு வந்துவிட்டார் அப்பா. ஆயிரம் ரூபாய் விலை. அதன் பிறகு அது எத்தனை தெருக்களில் யார் பின்னாலெல்லாம் பயணித்தது என்பது அந்த சைக்கிளுக்கே வெளிச்சம். கால வெள்ளத்தில் அந்த சைக்கிள் என்ன ஆனதென்று தெரியவில்லை. எங்கோ யாரோ அதை இன்னும் ஓட்டிக் கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். அதன் பிறகு சைக்கிளுக்கும் எனக்குமான தொடர்பு அற்றுப் போனது. பைக், பிறகு கார் என்று வாழ்க்கை ஓடியது. ஐந்து ஆண்டுகள் முன்பாக  ஸ்காட் என்ற சைக்கிள் மூலம் மீண்டும் அந்தக் கிருமி தொற்றிக் கொண்டது. ஆனால் இந்த முறை நூறு, இருநூறு கிலோமீட்டர்கள் என்று தூரம் நீண்டது. 2018ம் ஆண்டில் என்னுடைய ட்ரெக் ரோடி சைக்கிளை வாங்கினேன். 8கிலோ எடையுள்ள அது என்னை 2019ம் ஆண்டில் மட்டும் 2000கிலோ மீட்டர்களுக்கு மேல் சுமந்து சென்றுள்ளது. தொடர்ச்சியாக ஒரே பயணத்தில் 600கிமீ வரை சென்றிருக்கிறேன். ஒவ்வொரு பயணமும் ஒரு பாடமாக இருந்திருக்கிறது. 

சென்னை போன்ற மாநகரங்களில் சைக்கிள்களை நேசிப்பார் யாருமில்லை. சாலைகளில் இடமுமில்லை. காரணமே இல்லாமல் இந்தியர்கள் கைவிட்ட சில விஷயங்களில் மிதிவண்டிகளும் ஒன்று. உடலுக்கு ஆரோக்கியம். பெட்ரோல் செலவு இல்லை. வங்கிக்கடன் இல்லை (லட்ச ரூபாய் சைக்கிள்களுக்கு இது பொருந்தாது). சுற்றுச் சூழலுக்கு நல்லது. மாநகரங்களில் நெரிசல் குறையும். ஒரு நாளில் 15கிலோமீட்டருக்குக் குறைவாக பயணிப்பவர்கள் சுலபமாக சைக்கிள்களுக்கு மாறலாம். கூடுதலாக கொரோனா ஆபத்தும் குறைவு. ஆனால் இங்கே சைக்கிள் என்பது சமுதாய அந்தஸ்த்துடன் தொடர்பள்ள ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. மோட்டார் வாகனங்கள் வாங்காத ஒருவர் வாழ்க்கையில் முன்னேறாத ஒருவராகக் கருதப்படுகிறார்.  எனது பெரியப்பா நடை தளர்ந்த காலங்களில் சைக்கிளைத் தள்ளியபடியே எங்கும் சென்று வருவார். ஓட்ட முடியாதென்றாலும் அதை ஒரு கைத்தடியைப் போல் பயன்படுத்தினார். அது அவர் கம்பீரம் குறையாமல் இறுதிவரை உடனிருந்து  பார்த்துக் கொண்டது.  சைக்கிள்கள் நம்மை எப்போதும் கைவிடுவதில்லை. நாம்தான் அவற்றைக் கைவிட்டுவிட்டோம். நாம் விட்டு வந்த இடத்திலேயே இன்னும் அவை நமக்காகக் காத்திருக்கின்றன. 

இன்று உலக மிதிவண்டிகள் தினம். 

- ஷான் கருப்பசாமி

No comments:

Post a Comment